தத்தன், லீலாவதி என இரு தெய்வீகத் தம்பதிகள் இருந்தனர். மிக்க பக்தியுடனும், இறைவனைப் போற்றித் துதிப்பதே தங்கள் கடமை என இருந்ததாலேயே "தெய்வீகத் தம்பதி" எனக் குறிப்பிடப் பட்டனர். அவர்கள் இருவருக்கும் தங்கள் பக்தியின் உயர்வைக்குறித்துச் சண்டை ஏற்பட இருவருமே ஒருவரை மற்றொருவர் சபித்தனர். அவர்களின் தவத்தின் பலத்தால் அந்தச் சாபம் பலித்தது. அப்படி என்ன சபித்தனர்? ஒருவர் மற்றொருவர் எருமையாகப் பிறக்க வேண்டும் என்றுதான். ஏனெனில் எருமை "மெளட்டீகம், மற்றும், பிடிவாதம்" இரண்டின் அடையாளம். ஒருவர் மற்றொருவரை மதிக்காமல் இவ்விதம் சபித்துக் கொள்ளவே தத்தன், சுந்தரமஹிஷமாகவும், லீலாவதி, கரந்தனின் மகள் மஹிஷியாகவும் பிறந்தனர். சுந்தரமஹிஷனையே இந்தப் பிறவியிலும் மணந்தாள் லீலாவதியான மஹிஷி. அவள் சாபவிமோசனம் எப்படி என்று ஏற்கெனவேயே தத்தன் கூறி இருந்தார். சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பிறக்கும் குழந்தையால் உன் தெய்வீக வடிவை அடைவாய் என்பதே அது. மஹிஷியும் அவ்வாறே தன் முன் ஜென்மத்தை மறந்து மஹிஷியாக எத்தனை, எத்தனை தொந்திரவு கொடுக்க முடியுமே அத்தனையும் கொடுத்து வந்தாள். அவளின் அட்டகாசம் அதிகம் ஆகிக் கொண்டே வந்தது.. சிவனும், விஷ்ணுவும் சேர்ந்து குழந்தை பெறுவதா? அந்தக் குழந்தை பூவுலகில் வளருவதா? அதுவும் பிரம்மச்சாரியாக? நடக்காத காரியமே என நிம்மதியுடனேயே தன் கொடுங்கோலாட்சியை நடத்தி வந்தாள் மஹிஷி!
இது இவ்வாறிருக்க மஹிஷியை சம்ஹாரம் செய்யும் தருணம் வந்துவிட்டது எனத் தேவாதி தேவர்கள், மும்மூர்த்திகளிடம் விண்ணப்பிக்க, அவர்களும் அவ்வாறே ஆகும் எனச் சொன்னார்கள். அந்தச் சமயத்தில் இங்கே பந்தளத்தில் மந்திரியின் துர்ப்போதனையால் மனம் மாறிய கோபெருந்தேவி, தனக்குத் தீராத தலைவலை வந்துவிட்டதாய் நடித்தாள். அரண்மனை வைத்தியரைக் கையில் போட்டுக் கொண்ட மந்திரி, ராணியின் தலைவலி தீரவேண்டுமென்றால், புலிப்பால் கொண்டுவரவேண்டும் எனச் சொல்லுமாறு வைத்தியனை நிர்ப்பந்திக்க, வைத்தியரும் அவ்வாறே கூறுகின்றார். புலிப்பாலை யார் கொண்டுவருவது? மணிகண்டன் தான் சிறந்த ஆள், அவன் தான் கொண்டு வரவேண்டும் எனச் சொல்லிவிடுங்கள் எனவும் சொல்லிக் கொடுக்கப் பட வைத்தியரும் மணிகண்டனே போய்த் தான் புலிப்பால் கொண்டு வர வேண்டும் எனச் சொல்லி விடுகிறார். மன்னன் மனம் கலங்கியது. இதில் ஏதோ சூது இருப்பதாய் உள்மனம் கூறுகிறது. ஆனால் ராணியோ தலைவலியில் துடிக்கிறாள். அவள் நடிப்பு அவ்வளவு தத்ரூபமாய் இருந்தது. ஆகவே மன்னன் இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவிக்கின்றான். மணிகண்டனோ நிலைமையைப் புரிந்து கொண்டு, ராணியின் சூழ்ச்சியையும் மந்திரியின் துர்ப்போதனையையும், தன் அறிவால் அறிந்து கொண்டு, விதியை மதியால் வெல்லலாம் என முடிவு செய்து கொண்டு காட்டுக்குச் சென்று புலிப்பால் கொண்டு வரச் சம்மதிக்கிறான். மன்னனையும் ஒத்துக் கொள்ள வைக்கிறான். அரை மனதாய்ச் சம்மதித்த மன்னன், மனம் கேளாமல் காட்டில் உணவு கிடைக்காமல் தவிப்பானே அருமைக் குமாரன், என ஒரு நீளமான பையில் அரிசி, தேங்காய், அவல் போன்ற பொருட்களைக் கட்டிக் கொடுத்து, வில்லும், அம்பும் கொடுத்து வழி அனுப்பி வைக்கிறான்.
அரண்மனையை விட்டுக் கிளம்பிய மணிகண்டன் காட்டை வந்தடைகிறான். அங்கே ஏற்கெனவே மும்மூர்த்திகள் கட்டளைப்படி வந்து கூடிய தேவர்கள் அனைவரும் மணிகண்டனைப் போற்றித் துதித்து உயர்ந்த சிம்மாசனத்தில் அமர வைக்கின்றார்கள். (தேவர்கள் மணிகண்டனை அவ்வாறு அமர வைத்த இடம் தான் "பொன்னம்பலமேடு" எனவும், "காந்தமலை" எனவும் அழைக்கப் படுவதாய்ச் சொல்லப் படுகிறது. இதை தக்ஷிண கைலாயம் எனவும், இங்கிருந்து உற்பத்தி ஆகும் "பம்பா" நதியை தக்ஷிண கங்கை எனவும் அழைக்கப் படுவதுண்டு.) பின்னர் மணிகண்டனிடம் மஹிஷியினால் ஏற்பட்ட துயரங்களை எல்லாம் எடுத்து உரைக்கின்றார்கள். மஹிஷியின் வரலாறும் தற்சமயம் மனிதனாய் வந்த மணிகண்டனுக்குச் சொல்லப் படுகின்றது. தன்னுடைய அவதார நோக்கம் புரிந்து கொண்ட ஐயன், மஹிஷியோடு போர் புரியச் செல்கின்றார். மஹிஷியோடு போர் புரிந்த ஐயன், அவளை அப்படியே தூக்கி எறிகிறார். அவர் எறிந்த வேகத்தில், மஹிஷி பந்தள நாட்டுக் காட்டில் அலசா நதியில் (தற்சமயம் அழுதா நதி எனச் சொல்லப் படுகிறது) வந்து விழுந்தாள். அவள் எழுந்தால் ஆபத்து என அவள் எழுவதற்குள் மணிகண்டன் அவள் உடலில் ஏறி நின்று நர்த்தனம் ஆடுகின்றார். அவளுடைய பலமும், அகங்காரமும் போய், அவளின் உயிரானது உள்ளும், புறமுமாகப் போய்ப் போய் வருகின்றது. மகேசன் புத்திரனின் திருவடி பட்டதுமே அவளுக்கு மெய்ஞ்ஞானமும் உதிக்கின்றது. தன்னுடைய முற்பிறவி, தான் செய்த தவறுகள், எல்லாம் நினைவுக்கு வருகின்றது. அவளின் உடலில் இருந்து உயிரானது ஒளிமயமான பெண்வடிவெடுத்து ஐயன் திருப்பாதங்களில் வீழ்ந்து தன்னை ஏற்று ரட்சிக்குமாறு வேண்டிக் கொள்கின்றது.
ஐயன் சொல்கின்றார்: என்னுடைய அவதார நோக்கமே உன்னுடைய சம்ஹாரம் தான். இந்தப் பிறவியில் என்னுடைய தலையாய கடமை இன்னொன்று இருக்கிறது. என் தாய்க்கு நான் கொடுத்த வாக்குறுதி, புலிப்பால் கொண்டு வருகிறேன் என. அதை நிறைவேற்ற வேண்டும், தவிர, இப்பிறவியில் எனக்குத் திருமணமும் இல்லை, என்னால் உயிர் பெற்ற நீ எனக்குச் சகோதரி முறையாவாய், நீ எப்போதும் "மஞ்சமாதா" என்னும் பெயரில் என்னருகிலேயே கோயில் கொண்டிருப்பாய். எந்த வருஷம் என்னைக் காண வரும் பக்தர்களில், புதியதாய் கன்னியாக வரும் பக்தர் இல்லையோ அப்போது நான் உன்னை மணந்து கொள்ளுவேன்!" என்று சொல்கின்றார். மஞ்சமாதா, மாளிகப்புரத்து அம்மன், என்ற பெயரில் மஹிஷி ஐயன் அருகிலேயே கோயில் கொள்ளத் தயாராகின்றாள். ஐயன் எப்படிக் கோயில் கொண்டார்? எங்கே? அதை யார் கட்டினார்கள் என்ற விவரங்கள் நாளை காணலாம்!!!!!
அட அதுக்குள்ள இன்னோரு பதிவா? :p
ReplyDelete//ஐயன் எப்படிக் கோயில் கொண்டார்? எங்கே? அதை யார் கட்டினார்கள் என்ற விவரங்கள் நாளை காணலாம்!!!!!
//
சரி நாளைக்கு வரேன். :)
உள்ளேனம்மா..
ReplyDeleteகீதா அக்கா.. சாமி பத்தின கிளாசுல கும்மியடிச்சா "தெய்வ குத்த"மாயிடுமில்ல.. அதனால "பிரசண்ட் சொல்லிபுடறேன்.ஹிஹி..
ReplyDeleteடீச்சர் என்னோட வருகை பதிவேட்டுல யாரோ அரசியல் பண்ணிப்புட்டாய்ங்க...
ReplyDeleteநாங்குடுத்த பிரசண்ட் வரவேயில்ல...