எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, November 27, 2007

ஐயப்பனைக் காண வாருங்கள் -3

சத்ய பூர்ணர் என்ற ஒரு மஹரிஷி இருந்தார். அவருக்கு இரு பெண்கள், இந்த இருவரும் தங்கள் திருமணம் ஆவதற்காகவும், ஹரியின் புதல்வனை மணக்கவேண்டும் என்பதற்காகவும் "கல்யாணம்" என்ற விரதம் இருந்தார்கள். இறைவன் அவர்களுக்கு அடுத்த பிறவியில் அவர்களின் ஆவல் பூர்த்தி அடையும் என வரம் அளிக்க ஒருத்தி நேபாள மன்னனின் மகள் ஆன புஷ்கலையாகப் பிறந்து, சாஸ்தாவை மணக்கிறாள். மற்றொருத்தியான பூரணையானவள், வஞ்சி மாநகரை ஆண்டு வந்த பிஞ்சகன் என்னும் மன்னனுக்கு மகளாய்ப் பிறந்து வளர்ந்து மணப்பருவம் எய்தி இருந்தாள். அப்போது ஒருமுறை வேட்டைக்குச் சென்ற மன்னன் தன்னிலை மறந்து, நேரம் மறந்து வேட்டையாடுதலில் மெய்ம்மறந்து தன்னுடன் வந்தவர்களைப் பிரிந்து தனித்து விடப்பட்டார். இரவாகிற்று. தான் தனித்து இருப்பதை அப்போதே உணர்ந்த மன்னர் தன்னந்தனியாகக் காட்டில் மாட்டிக் கொண்டிருப்பதையும் உணர்ந்தார். திடீரென அவரைச் சுற்றிலும் கூச்சல், குழப்பம், வெடிச்சிரிப்புக்கள், அழுகை ஓலம்!!!! திகைத்துப் போன மன்னர் சுற்றும், முற்றும் பார்த்தால், அங்கே அவர் கண்களுக்குத் தெரிந்தது ஒரு மயானம், அங்கே பேய்களும், பூதங்களும் இரவில் ஆட்டம் போட்டு, பாட்டுப் பாடிக் கொண்டு பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது. கதிகலங்கிய மன்னனுக்கு உடனேயே நினைவு வந்தது பூதநாதனாகிய சாஸ்தாதான். உடனேயே அவரை நினைத்துக் கூவினான் மன்னன். "பூதநாதனே சரணம்! செண்டாயுதத்தை ஏந்தியவனே சரணம்! மோகினி மைந்தனே சரணம்!" எனப் பலவாறு வேண்டித் துதித்தான். ஐயன் அங்கே வந்து தன் அருள் கண்களால் நோக்க பூதகணங்கள் தங்கள் தலைவனைக் கண்டதும் அடிபணிந்து விலகிச் சென்றன. "பயம் வேண்டாம்" என மன்னனுக்கு அபயம் அளித்த சாஸ்தா, தன் குதிரையில் அவரைப் பத்திரமாக ஏற்றி அரண்மனையில் கொண்டு சேர்க்கிறார்.

மனம் மகிழ்ந்த மன்னன், பூதநாதனைப் பார்த்து, "ஐயனே! அடியேனின் மகள் பூர்ணை திருமணப்பருவம் எய்தி இன்னும் திருமணம் ஆகவில்லை. தாங்கள் அவளை ஏற்று ரட்சிக்கவேண்டும்." என்று கேட்டுக் கொள்ள சாஸ்தாவும் அவளின் பிறப்பையும், தன்னை மணக்கவே அவள் பிறந்து காத்திருப்பதையும் உணர்ந்து அவளை ஏற்றுக் கொள்கிறார். பூர்ணையை ஐயன் ஏற்றுத் திருமணம் புரிந்து கொண்டதைக் கேள்விப் படுகிறான் பலிஞன். தன் மகளுக்கு சாஸ்தா துரோகம் செய்து விட்டதாய் நினைக்கிறான். மனம் வெதும்புகிறது. ஆத்திரத்தில் உள்ளம் கொதிக்கிறது. புஷ்கலையிடம் சென்று, நடந்ததைக் கூறுகிறார். அனைத்தும் இறை அருளே, தன் முற்பிறப்பின் தவமே என்பதை உணர்ந்த புஷ்கலையோ மெளனம் சாதிக்க பலிஞன் ஆத்திரம் அதிகம் ஆகிறது. சாஸ்தாவிடமே சென்று நீதி கேட்கிறார்.

"ஐயனே! என் மகள் இருக்க நீ பூர்ணாவையும் மணந்து அவளுக்கும் வாழ்வளித்தது நியாயமா? இப்படி ஒரு பெண்ணுக்குத் துரோகம் செய்து மற்றொரு பெண்ணை மணந்த நீ அடுத்த பிறவியில் பூவுலகில் திருமணம் ஆகாத பிரம்மச்சாரியாக வாழ்வாய்! நீ 12 வயது பாலகனாய், திருமணம் ஆகாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்துவிட்டு, 12-ம் வயதிலேயே மறைவாய்! உனக்கென உரிமையான ராஜ்யமும் உனக்குக் கிடைக்காது!" எனச் சாபம் கொடுக்கிறான். ஐயன் இதழ்களில் புன்முறுவல். "பலிஞனே! ஏற்கெனவே நான் பூவுலகில் மானிடனாக வாழவேண்டிய கட்டாயம் ஒன்று உள்ளது. அதற்காக நான் பூவுலகிற்குச் செல்ல வேண்டும். அங்கே நான் எடுத்த காரியத்தை முடிக்க பிரம்மசாரியாகவும் இருக்க வேண்டும். இப்போது உன் சாபம் அதை மிக எளிதாக்கி விட்டது. ஆனால் என்னுடைய பூவுலகின் வாசத்தின் போது நீயே எனக்குத் தந்தையாக வந்து என் மேல் பாசம் காட்டி வளர்ப்பாய்!! உனக்கு மகனாக நான் வந்து என்னுடைய அவதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளுவேன். நீ பூவுலகில் பந்தள நாட்டுக்கு அரசனாக ஆட்சி செய்யும் காலத்தில் நான் உன்னிடம் வந்து சேருவேன்!" எனக் கூறுகிறார். இப்போது பந்தளத்துக்குச் செல்லும் முன்னர், புஷ்கலையை ஐயன் திருமணம் செய்தது பற்றிய செவிவழிச் செய்தி ஒன்று.

மதுரையைச் சேர்ந்த செளராஷ்டிர குலத்தவர்கள் நெசவுத் தொழிலில் கைதேர்ந்தவர்கள். அவர்களால் நெய்யப்படும் பட்டுக்களைச் சேர மன்னன் விரும்பி வாங்குவது உண்டு,. அவ்விதம் வாங்கி வந்த போது ஒரு முறை செளராஷ்டிர நெசவு வணிகர் ஒருவர் மன்னனுக்குப் பட்டாடை தயாரித்து எடுத்துச் சென்ற சமயம் தன்னுடன் தன் மகளையும் உடன் அழைத்துச் செல்கின்றார். செல்லும் வழியில் "ஆரியங்காவு" என்னும் ஊர் வரும்போது இருட்டி விடுகிறது. அதனால் அந்தக் கால வழக்கப் படிக் கோயிலில் தங்குகின்றனர், தந்தையும், மகளும். அங்கே கோயிலில் ஐயப்பனின் உருவத் திருமேனியைக் கண்ட புஷ்கலை ஐயன் மேல் அளவற்ற காதலும், பக்தியும் கொள்கிறாள். மறுநாள் சேரமன்னனைக் காணத் தந்தை கிளம்பும் சமயம், தந்தையுடன் செல்ல மறுக்கிறாள். கோயிலிலேயே தான் தங்கப் போவதாய்ப் பிடிவாதமாய்ச் சொல்லுகிறாள். வணிகர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை மகள். நீங்கள் திரும்பும்போது உங்களுடன் வருகிறேன் என்றே திரும்பத் திரும்பச் சொல்லுகிறாள். என்ன செய்வதென்று புரியாத வணிகர், அந்தக் கோயிலின் மேல்சாந்தியின் வேண்டுகோளின்படி, மகளைக் கோயிலிலேயே மேல்சாந்தியின் பொறுப்பில் விட்டுவிட்டு அரை மனதாய்ச் செல்லுகிறார்.

ஏற்கெனவே குழப்பத்தில் ஆழ்ந்த மனது. மகளைத் தனியாய் விட்டு விட்டு வந்தோமே என்ற கவலை! வழியில் அடர்ந்த காடு. அதில் இருக்கும் மிருகங்கள். குழப்பத்துடன் சென்ற வணிகர் தனியாய் வந்த ஒரு ஒற்றை யானையிடம் மாட்டிக் கொள்ளுகிறார். கலக்கமுற்ற அவர் தான் ஆரியங்காவில் பார்த்த ஐயப்பனின் திருவுருவை நினைத்துக் கொண்டு, ஐயனே காப்பாற்று என வேண்டிக் கொள்ள, அங்கே ஒரு வாலிப வயது வேடன் வருகிறான். என்னவென அவன் விசாரிக்க, யானையைக் காட்டுகிறார் வணிகர். தன் ஒரு சைகையாலேயே அந்த யானையை அடக்குகிறான், அந்த வேடன். அவனுக்குப் பரிசாகத் தன்னிடம் இருந்த பட்டாடைகளில் ஒன்றைத் தருகிறார் வணிகர். மனம் மகிழ்ந்த வேடன் உடனேயே அதை அணிந்து, " நான் எப்படி உள்ளேன், இந்த ஆடையில்?" என வணிகரைக் கேட்கிறான். இளைஞனின் செளந்தரியத்தைப் பார்த்து வியந்த வணிகர்,"மாப்பிள்ளை போல் இருக்கிறாய்? வேறே என்ன வேண்டும் உனக்கு?" எனக் கேட்கிறார்."நான் கேட்பதைக் கொடுப்பீர்களா?" என வேடன் கேட்க, "என் உயிரைக் காத்த உனக்கு என்ன வேண்டுமானாலும் தருவேன்!" என வணிகர் சொல்கின்றார். "உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுங்கள்" என வேடன் கேட்க, தனக்கு மகள் இருப்பது இவனுக்கு எவ்வாறு தெரியும் என வணிகர் வியப்பில் ஆழ்ந்தார். அவனிடம் சரி எனச் சம்மதிக்க, வேடன் அவரை நீங்கள் திரும்பும்போது என்னை ஆரியங்காவு கோயிலில் சந்தியுங்கள் எனச் சொல்லிவிட்டுச் சென்று விடுகிறான்.

மன்னனைக் கண்டு திரும்பிய வணிகர் திரும்புங்கால், ஆரியங்காவுக் கோயிலை அடைகிறார். மகள அங்கே இல்லை. எங்கேயும் இல்லை. இரவு முழுதும் தேடுகிறார். மேல்சாந்தியும் தேடுகிறார். இரவாகிவிடுகிறது. மேல்சாந்திக்கு அசதி மேலிட்டுத் தூங்கிவிடுகிறார். தூக்கத்தில் கனவு. ஐயப்பன் தோன்றி, புஷ்கலை தன் மீது கொண்ட பக்தியினால் அவளைத் தன்னுடன் ஐக்கியப் படுத்திக் கொண்டதாய்ச் சொல்கின்றான் ஐயன். திடுக்கிட்டு எழுகிறார் மேல்சாந்தி. காலையில் கோயில் திறந்து ஐயன் சந்நிதியைக் கண்டால் காட்டில், வணிகர் கொடுத்த பட்டாடை ஐயன் இடுப்பில் உள்ளது. அதே மாப்பிள்ளைக் கோலம். வணிகர் தன் மகளின் தீராத பக்தியையும், அவளின் பக்திக்குக் கிடைத்த முக்தியையும் புரிந்து கொள்ளுகின்றார்.

டிஸ்கி: இது மதுரைப் பக்கத்தில் செளராஷ்டிர குலத்தவரிடம் வழங்கும் கதை. இதற்கான ஆதாரம் ஏதும் என்னிடம் இல்லை. ஆனால் ஒவ்வொரு வருஷமும் செளராஷ்டிர குலத்தைச் சேர்ந்த, ஆரியங்காவு தேவஸ்தானத்தைச் சேர்ந்த மகாஜனங்கள், மார்கழி மாதம் 9-ம் தேதிக்கு மேல், 15-ம் தேதிக்குள்,இந்த வைபவத்தை ஐயனின் திருமண உற்சவமாய்க் கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு வருஷமும் பெண்வீட்டாராக செளராஷ்டிர மகா ஜனங்கள் ஆரியங்காவு சென்று வரிசைகள் செய்து, "பாண்டியன் முடிப்பு" என்ற தாம்பூலத் தட்டுக் கொடுத்துத் திருமணம் நிச்சயித்து, சாஸ்திர, சம்பிரதாயங்களின் படி ஐயனுக்கும், அம்மைக்கும் திருமணம் செய்விக்கின்றனர். இதற்கான திருமணச் சடங்குகளைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் நடத்தி வைப்பதாகவும் சொல்லுகின்றனர். இப்போதும் மதுரையில் இது நடக்கிறதா இல்லையா எனக் "கூடல் குமரனோ" அல்லது "சிவமுருகனோ" தான் சொல்ல வேண்டும்.

11 comments:

  1. பல புதிய தகவல்கள்

    நன்றி

    ReplyDelete
  2. அப்பிடியே உம்மாச்சி படம் பாத்தா மாதிரியே இருந்துதுங்க. சூப்பர்!!!!

    ReplyDelete
  3. பல புதிய தகவல்கள் தெரிந்து கொண்டேன், நன்றி. :))


    //இது நடக்கிறதா இல்லையா எனக் "கூடல் குமரனோ" அல்லது "சிவமுருகனோ" தான் சொல்ல வேண்டும்.//

    எங்கள் கட்சியை சேர்ந்த மதுரையம்பதி அண்ணா கூட சொல்லுவார்னு நினைக்கிறேன். :p

    ReplyDelete
  4. @அம்பி, குமரனும், சிவமுருகனும் செளராஷ்டிர இனத்தைச் சேர்ந்தவர்கள்,. இந்தத் திருவிழா அவர்கள் இனத்தின் சார்பில் நடக்கும் ஒன்று, அதனால் அவர்கள் பேரைக் குறிப்பிட்டேன், மற்றபடி மதுரையம்பதி, உங்கள் கட்சியாகவே இருக்கட்டும் ஆட்சேபணை இல்லை, தகவல் தெரிந்தால் சொல்லட்டும், கேட்டுக்கறேன்!!!! :P

    ReplyDelete
  5. இன்னமும் சரியாக உடல்நிலை இல்லாதபடியால் யாருக்கும் தனியாகப் பதில் சொல்ல முடியலை, கணினியில் உட்காரும் நேரமே குறைச்சல். அதிலே பதிவு மட்டும் முடிஞ்சப்போ எழுதறேன். சில பதிவுகளுக்கு மட்டுமே விசிட்.!!!!!

    ReplyDelete
  6. //மதுரையம்பதி, உங்கள் கட்சியாகவே இருக்கட்டும் ஆட்சேபணை இல்லை, தகவல் தெரிந்தால் சொல்லட்டும், //

    அப்ப அவருக்கு தெரியாது!னு சவால் விடறீங்க, அப்படிதானே? :p

    இதோ போனை போடறேன் அவருக்கு. :))

    ReplyDelete
  7. ////மதுரையம்பதி, உங்கள் கட்சியாகவே இருக்கட்டும் ஆட்சேபணை இல்லை, தகவல் தெரிந்தால் சொல்லட்டும், //

    அப்ப அவருக்கு தெரியாது!னு சவால் விடறீங்க, அப்படிதானே? :p//

    அட ராமா, ஏம்பா இப்படி அடுச்சுக்கறீங்க?...

    எனக்கு தெரியாது, தெரியாது, தெரியாது....

    ReplyDelete
  8. அடடா. நீங்க இங்க எழுதியிருக்கீங்களா சௌராஷ்ட்ரர்களின் நம்பிக்கையைப் பற்றி. நான் போன இடுகைக்குப் போட்ட பின்னூட்டத்துல சொல்லிட்டேனே. அந்த பின்னூட்டத்தை இன்னொரு தடவை இங்கே எடுத்துப் போட்டுடறேன்.

    வருடாவருடம் ஆரியங்காவில் புஷ்கலா தேவிக்கும் சாஸ்தாவிற்கும் நடக்கும் திருமணத்தின் போது மதுரையிலிருந்து சௌராஷ்ட்ரர்கள் பெண்வீட்டுக்காரர்களாகச் சென்று திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள். புஷ்கலா தேவி சௌராஷ்ட்ரப் பெண் என்ற நம்பிக்கையும் உண்டு.

    http://www.sourashtra.com/ayyappan.htm

    இந்த வலைப்பக்கத்தில் வலப்பக்கத்தில் இருக்கும் சுட்டிகளைப் பாருங்கள். திருமண அழைப்பிதழ்களும் திருமண வைபவப் படங்களும் இருக்கின்றன.

    ReplyDelete
  9. நான் கொடுத்தச் சுட்டியில் இருக்கும் திருமண வைபவ அழைப்பிதழில் புஷ்கலா தேவி மார்கண்டேய கோத்திரத்தில் உதித்தவர் என்று சொல்லியிருக்கிறார்கள். அதனை இன்று தான் அறிந்தேன். அடியேனும் மார்கண்டேய கோத்திரத்தில் பிறந்தவன் தான்.

    ReplyDelete
  10. //இப்போதும் மதுரையில் இது நடக்கிறதா இல்லையா எனக் "கூடல் குமரனோ" அல்லது "சிவமுருகனோ" தான் சொல்ல வேண்டும்.//

    கீதா மேடம் இன்று தான் இதை படித்தேன். பல இன்னல்கள் சோதனைகள் வந்துள்ளன! அவற்றை எல்லாம் வல்ல திருவருளாளன் காத்து அரவணைத்து சென்றுள்ளன்.

    இக்கதை பற்றி இன்னும் விரிவாக எழுத உள்ளேன்! காலமும் நேரமும் வாய்க்க அந்த தர்மசாஸ்தவை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  11. //இப்போதும் மதுரையில் இது நடக்கிறதா இல்லையா எனக் "கூடல் குமரனோ" அல்லது "சிவமுருகனோ" தான் சொல்ல வேண்டும்.//
    சொல்லிவிட்டேன்

    ReplyDelete