எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, March 25, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்!

கடைசியாய்க்கண்ணன் வந்தது இங்கே அடுத்தடுத்து விருந்தினர் வருகை, வீட்டில் அதிகமான வேலை என்று இருந்ததால் எழுதி வைக்க முடியலை. அதோடு வேறே சில முக்கியமானவைகளும் முடிச்சுக் கொடுக்கவேண்டி இருந்தது. தாமதத்துக்கு மன்னிக்கவும்.
****************************************************************************************
வசுதேவரும், தேவகியும் தீர்த்த யாத்திரை சென்று விட்டார்கள். செல்லும் வழியிலேயோ அல்லது திரும்பும்போதோ ஹஸ்தினாபுரம் சென்று சில நாட்கள் தங்கவேண்டும் எனவும் திட்டம். அங்கே ஹஸ்தினாபுரத்தின் அரசன் பாண்டுவிற்கு வசுதேவரின் சகோதரி குந்தியைத் திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள். இது ஒரு புறமிருக்க இங்கே கோகுலத்தில் கண்ணன் வளர, வளர அவனின் விஷமங்களும் அதிகம் ஆகிக் கொண்டு வந்தது.

தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத்தவழ்ந்துபோய்
பொன்முகக்கிண்கிணியார்ப்பப் புழுதியளைகின்றான்
என்மகன்கோவிந்தன்கூத்தினை இளமாமதீ.
நின்முகம்கண்ணுளவாகில் நீஇங்கேநோக்கிப்போ. (2) 1.

கண்ணன் இப்போது தவழ ஆரம்பித்ததோடு அல்லாமல் நிலாவைப் பார்த்துக் கைகாட்டியும் அழைக்க ஆரம்பித்துவிட்டான். ஆஹா, தலைச்சுட்டி அவன் தவழும்போது அசைவதும் நிலவு விண்ணில் நகரும்போது கூடவே செல்லும் நட்சத்திரக் கூட்டம் போலக் கண்ணனோடு சேர்ந்து அசைகின்றனவே. (இது பாசுரத்தின் கருத்து அல்ல.) தன் சின்னஞ்சிறு கைகளால் கண்ணன் நிலவைக் கைகாட்டி அழைக்கின்றானே?

55:
என்சிறுக்குட்டன் எனக்கோரின்னமுதுஎம்பிரான்
தன்சிறுக்கைகளால் காட்டிக்காட்டியழைக்கின்றான்
அஞ்சனவண்ணனோடு ஆடலாடஉறுதியேல்
மஞ்சில்மறையாதே மாமதீ. மகிழ்ந்தோடிவா. 2.

நிலவு மேகங்களால் மறைக்கப்பட்டால் ஆஹா, கண்ணனின் முகமும் அழுகையில் பிதுங்கி, ஏமாற்றத்தில் ஆழ்கின்றதே. இதோ நிலவு வந்துவிட்டது, கண்ணனின் முகத்தில் மகிழ்ச்சி. நிலவைப் பார்த்து இருகைகளையும் கொட்டிச் சிரிக்கின்றான் கண்ணன்.
56:
சுற்றும்ஒளிவட்டம் சூழ்ந்துசோதிபரந்தெங்கும்
எத்தனைசெய்யினும் என்மகன்முகம்நேரொவ்வாய்
வித்தகன்வேங்கடவாணன் உன்னைவிளிக்கின்ற
கைத்தலம்நோவாமே அம்புலீ. கடிதோடிவா. 3.

57:
சக்கரக்கையன் தடங்கண்ணால்மலரவிழித்து
ஒக்கலைமேலிருந்து உன்னையேசுட்டிக்காட்டும்காண்
தக்கதறிதியேல் சந்திரா. சலம்செய்யாதே
மக்கட்பெறாத மலடனல்லையேல்வாகண்டாய். 4.

அழகியவாயில் அமுதவூறல்தெளிவுறா
மழலைமுற்றாதஇளஞ்சொல்லால் உன்னைக்கூவுகின்றான்
குழகன்சிரீதரன் கூவக்கூவநீபோதியேல்
புழையிலவாகாதே நின்செவிபுகர்மாமதீ. 5.

மழலை மாறாத தன் இளங்குரலாம் நிலவைக் கூவி அழைக்கின்றான் கண்ணன். நீலமேக வண்ணனுக்கு மஞ்சள் பட்டாடை உடுத்தி இருக்கின்றனர். கண்ணனைக் கண்டு கோபியர் அனைவருக்குமே எடுத்துக் கொஞ்ச ஆசை. ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொஞ்சுகின்றனர். எனினும் கோகுலத்தில் உள்ள அனைவர் வீட்டுக்கும் கண்ணன் சென்று தயிரையோ, பாலையோ குடித்து விடுவான். சில சமயம் தனியாய்ச் செல்வான். சில சமயங்களில் கோகுலத்து மழலைப் பட்டாளமே உடன் செல்கின்றன. என்னவென்று சொல்லுவது? பார்க்க ஒரு பெரிய கோபக்காரக் குழந்தையாக இருக்கும் பலராமன் கூட இந்தக் கண்ணனுக்கு முன்னால் வாய் திறக்காமல் அவன் இழுத்த இழுப்புக்குச் செல்கின்றானே? அதிலும் பலராமனுக்கு அவன் தாய் ரோஹிணியோடு மதுரா செல்வதை விட கோகுலத்தில் கண்ணன் அருகேயே இருப்பதே ஆனந்தமாய் இருக்கின்றது. பலராமன் தூங்கும்போது யார் எழுப்பினாலும் எழுப்பினவர்கள் பாடு அவ்வளவு தான். ஆனால், என்ன ஆச்சரியம்? இதோ கண்ணன் அவன் கண்களைத் தேய்த்துத் தேய்த்து எழுப்புகின்றானே? பலராமனைப் படுக்கையிலிருந்து இழுக்கின்றானே? ஆஹா, பலராமன் இதோ கண் விழித்துவிட்டான்.ஆனால் இது என்ன? கண்ணனைக் கட்டி அல்லவா அணைத்துக் கொள்கின்றான். என்ன மாயம் செய்தாயடா கண்ணா? கோபியர்களால் கண்ணனின் விஷமம் பொறுக்க முடியவில்லை. யசோதையிடம் வந்து குற்றம் சொல்கின்றனர்.

கோகுலத்துப் பையன்களைக் கூட அதட்டி விரட்ட முடிகின்றது. ஆனால் இந்தக் கண்ணனை எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. திரும்பப் போகிறவன் போலப் போய்விட்டுத் திருட்டுத் தனமாய் உள்ளே நுழைந்து விடுகின்றான். எப்படித் தான் கண்டு பிடிக்கிறானோ, தாழ் போடாத சாளரக் கதவையோ, வீட்டுப் பின்பக்கக் கதவையோ. சிலசமயம் கூரைகளில் கூட ஏறிக் குதிக்கின்றான். அடி, யசோதை, என்ன பிள்ளையடி பெற்றிருக்கின்றாய் நீ? வீட்டில் உள்ள பால், தயிரை எல்லாம் அவன் எடுத்துக் குடித்துவிடுகின்றானே? நீ உன் வீட்டில் அவனுக்குச் சோறோ, பாலோ, தயிரோ கொடுப்பதே இல்லையா? அவன் குடிக்கிறது பத்தாமல் கூட வருகின்ற பிள்ளைகளுக்கும் கதவைத் திறந்துவிட்டு எடுத்துச் சாப்பிட வைக்கின்றான். அன்றைக்குப் பார்த்தால் ஒரு பூனைக்குக் கண்ணன் பாலையும், வெண்ணெயையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றான். அடி யசோதை, இத்தனை வருஷம் கழித்துப் பிறந்த உன் பிள்ளைசெய்யும் அக்கிரமங்களைக் கண்டும் காணாது போல் இருக்கின்றாயோ?

தாயே யசோதா, உந்தன் ஆயர் குலத்தில் உதித்த
பாலன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி,
தாயே யசோதா!

கோபியர்களின் கண்ணனைப் பற்றிக்குற்றம் சொல்லுவது அதிகரிக்கின்றது. ஒருத்தி சொல்கின்றாள். மஹா சாதுவான அவள் பிள்ளையைக் கண்ணன் கெடுத்துவிட்டானாம். இன்னொருத்தி சொல்கின்றாள், கொட்டிலில் கட்டி இருந்த மாடுகள் குரல் கொடுப்பதைக் கேட்டுவிட்டுப் போய்ப் பார்த்துவிட்டு வருவதற்குள், இங்கே தயிர் கடைந்து கொண்டிருந்த பானையைக் காணோமாம். கடைசியில் பார்த்தால் இந்தத் தயிர்ப்பானையை எடுத்துச் செல்லவேண்டியே கண்ணன் கொட்டில் மாடுகளை அவிழ்த்து விட்டு விட்டானாம். என்னவென்று சொல்லுவது? யசோதைக்குக் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது. வீட்டிலும் கால் தரிக்கவில்லை இந்தப் பிள்ளைக்கு. வெளியே சென்றும் வம்பு வளர்த்துக் கொண்டு வருகின்றதே. "கனையா, கண்ணா, என் கண்மணியே! வாடா இங்கே!" யசோதை கூப்பிடக் கண்ணன் தயங்கிக் கொண்டே வருகின்றான். பலராமன் இருக்கும் திசையே தெரியவில்லை. அவன் தாய் ரோஹிணி வழக்கம்போல் மதுரா சென்றிருக்கின்றாள். கண்ணனை விட்டுப் பிரிய இஷ்டம் இல்லாமல் இந்தப் பிள்ளை இங்கேயே தங்கி விட்டது. அவனைத் தன் பிள்ளை போல் பார்த்துக் கொள்ளுவதாய் யசோதை ரோஹிணிக்கு வாக்களித்திருக்கின்றாள். ஆனால் அவன் எங்கே?

அதோ, பலராமன் அந்தத் தூணின் பின்னே ஒளிந்திருக்கின்றான். கடைக்கண்களால் பார்த்துக் கொண்டே தாயிடம் வருகின்றான் கண்ணன். யசோதை கேட்கின்றாள்" அப்பா, கண்ணா, இவர்கள் சொல்லுவதைக் கேட்டாயல்லவா? நீ அவர்கள் வீட்டில் போய் வெண்ணெய் தின்றாயா? பூனைக்கும், நாய்க்கும் கொடுத்தாயா? கொட்டில் மாடுகளை அவிழ்த்து விட்டாயா?" கண்ணன் சொல்லுகின்றான், "யசோதா அம்மா, நான் அப்படி எல்லாம் செய்வேனா? நான் காட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே நம் வீட்டு மாடுகள் மேய வந்திருந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன்." கோபியரில் ஒருத்தி சொல்கின்றாள்:"நல்ல பொய் சொல்கின்றான் யசோதை உன் குமாரன். என் பையன் காட்டில் இருந்து இப்போது தான் திரும்பினான். அங்கே உன்னோட கனையா வரவே இல்லையாம்." கண்ணன் சொல்கின்றான்:" நான் ஒண்ணும் பொய் சொல்லலை, உன் பையன் தான் பொய் சொல்கின்றான். காட்டில் நான் இருந்ததை அவன் பார்க்கலை." கண்ணனின் இதழ்களில் சிறு புன்னகை அரும்புகின்றது.

யசோதை செய்வதறியாது கண்ணனைத் தண்டிக்கவேண்டி,"கண்ணா, இங்கே வா," என்கின்றாள். கண்ணன் தாயை நெருங்குகின்றான்.


கண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள்

4 comments:

  1. ச்சோ ச்வீட் என்ன்ன்னோட குட்டிக் கண்ணன் :) (இப்படி சொன்னா நிறைய பேர் அடிக்க வருவாங்கன்னு தெரியும். ஆனாலும் ஆசை யாரை விட்டது? :)

    ரொம்ப அழகா ரசிச்சு ருசிச்சு எழுதறீங்க அம்மா. மிக்க நன்றி.

    ReplyDelete
  2. ஆகா..நன்றாக போகுது..அப்படியே அந்த 55,56..இதெல்லாம் வேற கலரில் கொடுத்த நல்லாயிருக்கும்...எழுத்துகூட்டி படிக்கிறதுகுள்ள கண்ணு கட்டுது ;)

    ReplyDelete
  3. அதெல்லாம் யாரும் அடிக்க மாட்டாங்க கவிநயா, தைரியமாச் சொல்லலாம்! :)))))))


    @கோபி, திருத்திட்டேன்,
    இப்போப் பாருங்க!

    ReplyDelete
  4. \\@கோபி, திருத்திட்டேன்,
    இப்போப் பாருங்க!\\

    பார்த்துட்டேன் தலைவி நன்றாக இருக்கு...தொண்டனின் கோரிக்கை ஏற்றமைக்கு நன்றி ;)

    ReplyDelete