இப்போ ஸ்ரீமத் பாகவதத்தின் நோக்கில் கண்ணன் கட்டுண்டதைக் காண்போம். ஸ்லோகங்கள் ஸ்ரீமத் நாராயணீயத்தில் இருந்து எடுக்கப் பட்டவை.
வேதமார்க பரிமார்கிதம் ருஷா த்வாமவீக்ஷ்ய பரிமார்கயநத்யஸெள!
ஸந்ததர்ஸ ஸுக்ருதிந்யுலூகலே தீயமாந நவநீதம் ஓதவே:!!”
வேதங்கள் தேடிக் கூடக் கிடைக்காத அந்த மாயக் கண்ணனாகிய உம்மைக் காணாமல் (கீழே சிந்திக் கிடக்கும், தயிரையும், பாலையும், வெண்ணையையும், உடைந்து கிடக்கும் பானையையும் கண்ட) யசோதை கோபத்துடன் உம்மைத் தேடிக் கொண்டு வந்தபோது உரல்மீது அமர்ந்து கொண்டு நீ பூனைக்கு வெண்ணை கொடுத்துக் கொண்டிருந்ததைக் கண்டாள்.
த்வாம் ப்ரக்ருஹ்ய பத பீதிபாவநா பாஸுராநந ஸரோஜம் ஆஸு ஸா!
ரோஷ ரூஷித முகீ ஸகீபுரோ பந்தநாய ரஸநாம் உபாததே!!”
பயந்துவிட்டாற்போல் நடிக்கும் கண்ணனின் முகம் அந்த பாவனை பயத்திலும் மிக்க அழகுடனும், செளந்தரியத்துடனும் பிரகாசித்தது. எனினும் யசோதை தோழிகளின் முன்னிலையில் இந்தக் கண்ணனை அடக்கவேண்டும் என்பதற்காக விரைவாக உம்மைப் பிடித்துக் கோபத்தோடு உரலோடு சேர்த்துக் கண்ணனைக் கட்டுவதற்காகக் கயிற்றையும் எடுத்துக் கொண்டாள். ஆனால் கயிறோ பல கயிறுகளை ஒன்றாய் இணைத்தும், அவற்றால் கண்ணனைக் கட்ட முடியாமல் இரண்டு அங்குலம் குறையாகவே இருந்தது. தோழிகள் வியப்புடன் நகைக்க, யசோதை வியர்த்து விறுவிறுத்துப் போய் நிற்க, வேறு வழியில்லாமல் “கட்டுப் படுவோம்” என நீர் நினைத்தீர்.
கட்டுண்டு கிடந்த கண்ணனை நோக்கி, “அடே போக்கிரி, இந்த உரலோடு இங்கேயே இருக்கவேண்டும் நீ” எனக் கூறிவிட்டு யசோதை உள்ளே செல்ல, நீங்களோ ஏற்கெனவே எடுத்து உரலுக்குள் குழியில் ஒளித்து வைக்கப் பட்டிருந்த நெய்யை எடுத்துச் சாவகாசமாய்ச் சாப்பிட ஆரம்பித்தீர்கள்.
முதா ஸுரெளகைஸ்த்வமுதார ஸம்மதைருதீர்ய தாமோதர இத்யபிஷ்டுத:
ம்ருதூதர: ஸ்வைரமுலூகலே லகந்நதூரதோ த்வெள ககுபாவுதைக்ஷதா!”
எவராலும் கட்ட முடியாத அந்தப் பரம்பொருளாகிய நீர் பாசம் என்ற கயிற்றால் யசோதையால் கட்டப் பட்டீர் அன்றோ? அந்த அற்புதக் காட்சியைக் கண்ணாரக் கண்ட விண்ணவர்கள் அனைவரும், “ஹே, தாமோதரா!” என உம்மை அழைக்கத் துவங்கினார்கள். தாமோதரன்= கட்டுண்ட வயிற்றை உடையவன். உரலில் அமர்ந்திருந்த நீர் அருகே இருந்த இரு மருத மரங்களையும் நோக்கினீர்கள். அவை இரண்டும் குபேரனின் புதல்வர்கள் ஆன நள கூபரனும், மணிக்ரீவனும் ஆவார்கள்.
சாட்சாத் அந்தப் பரமேஸ்வரனை ஆராதித்ததால் கிடைத்த பெருஞ்செல்வத்தால் ஆணவம் மிகக் கொண்ட குபேரனின் புதல்வர்கள் இருவரும், கந்தர்வப் பெண்களோடு ஒரு தடாகத்தில் நீர் விளையாட்டு விளையாடச் சென்றனர். அப்போது ஆடைகளைக் களைந்துவிட்டு இருவரும் விளையாட அவ்வழியே நாரதமுனி தற்செயலாய்க் கடக்க நேர்ந்தது. பெண்கள் அனைவரும் தேவரிஷியைக் கண்டதும், நடுங்கிப் போய் தத்தம் ஆடைகளை அணிந்து கொண்டு அவரை வணங்கி நிற்க, குபேரனின் புதல்வர்கள் இருவர் மட்டும் மது அருந்தியதால் ஏற்பட்ட மயக்கத்தோடு ஆணவமும் சேர, நாரதர் வந்ததையே கவனிக்காமல் இருந்தனர். நாரதர் பொறுத்துப் பார்த்துவிட்டு இருவரும் மது மயக்கத்தில் இருந்து நீங்காமல் இருப்பது கண்டு, இருவரையும் “மருத மரமாகி நீண்ட காலம் பூமியில் வாசம் செய்யும்படிக் கட்டளை இட்டார்.” சாபம் கொடுத்ததும் தன் நிலை புரிந்து கொண்ட இருவரும் நாரத முனிவரிடம் சாபத்தைத் திரும்பப் பெறுமாறு வேண்ட, கொடுத்த சாபத்தைத் திரும்ப வாங்க முடியாது என்பதால், ஸ்ரீஹரி பூமியில் அவதாரம் செய்து வரும்போது அவனால் விமோசனம் அடைந்து உங்கள் இருப்பிடம் சேர்வீர்கள் எனச் சொல்லிச் சென்றார்.
அதன் படி குபேரனின் இரு புதல்வர்களும் அங்கே மருத மரங்களாகி நீண்ட காலமாய்த் தவத்தில் இருந்தனர். உரலில் கட்டுண்டிருந்த தாங்கள் அந்த இரட்டை மருத மரங்களுக்கிடையே மெதுவாய் நடந்தீர்கள். நெடுங்காலம் நின்றிந்த மரங்கள் இரண்டும் வேரறுந்து பலமில்லாமல் இருக்க, மரங்களுக்கிடையே உரல் சிக்க, கண்ணன் அதை இழுக்க இரு மருத மரங்களும் முறிந்து விழுந்தன.
அதந்த்ர மிந்த்ரத்ருயுகம் ததா விதம்
ஸமேயுஷா மந்தரகாமிநா த்வயா:
திராயிதோலூகல ரோத நிர்த்துதெள
சிராய ஜீர்ணெள பரிபாதிதெள தரூ!!
நள கூபுர, மணிக்ரீவர்கள் அந்த மரங்களினின்றும் தோன்றி உம்மைப் போற்றித் துதித்துவிட்டு தங்கள் இடம் சேர்ந்தார்கள். இனி நாம் அடுத்து ராதையின் வரவைப் பார்க்கப் போகின்றோம். ராதை கண்ணன் கதையின் இந்த நிகழ்ச்சியின் போதே வந்து சேர்வதாய் முன்ஷி எழுதி உள்ளார். அதற்கு முன்னர் ராதையைப் பற்றிய ஒரு குறிப்பு, மீள் பதிவு, அதிகம் யாராலும் கவனிக்கப் படவில்லை, முன்னர் போட்டபோது. இப்போப் படித்தால், தொடரும் போது புரிந்து கொள்ள சிரமம் இல்லாதிருக்கும்.
நாளையில் இருந்து முன்ஷியின் கண்ணன் வருவான்!
உரலில் வேறு நெய் வைத்திருந்தாரா இந்த கள்வக் கண்ணன்.!!!!
ReplyDeleteமிகவும் நன்றாக இருக்கும்மா கீதா.
பல கோடி புண்ணியம் உங்களுக்கு.
>>முன்னர் ராதையைப் பற்றிய ஒரு குறிப்பு, மீள் பதிவு, அதிகம் யாராலும் கவனிக்கப் படவில்லை, முன்னர் போட்டபோது. இப்போப் படித்தால், தொடரும் போது புரிந்து கொள்ள சிரமம் இல்லாதிருக்கும்.<<<
ReplyDeleteதமிழில் இதையெல்லாம் எழுத ஆளில்லையே என ஏங்கிக் கொண்டிருந்தேன். ஆறுதல் அளித்துள்ளீர்கள். ஆவல் அதிகமாகிறது.
திவாகர்