உடனேயே இருவரும் குந்தியைச் சென்று கண்டு ஆறுதல் சொல்ல எண்ணினார்கள். குந்தியின் நிலைமையை வர்ணிக்க முடியவில்லை. மாத்ரியின் இரு பாலகர்களும் சின்னஞ்சிறுவர்கள். குந்தியின் புதல்வர்கள் மூவரும் சிறுவர்களே எனினும், இவர்கள் இருவரையும் காட்டிலும் வயதில் மூத்தவர்கள். இந்தக் குழந்தைகளை வளர்க்கவேண்டி குந்தி உடன் கட்டை ஏறவில்லை என்றால் என்ன ஆச்சரியம்? மாத்ரி மட்டும் ஏன் தன் குழந்தைகளை விட்டு விட்டு உடன் கட்டை ஏறினாள்? குந்தி ஏன் உடன்கட்டை ஏறவில்லை? வசுதேவருக்கும், தேவகிக்கும் குழப்பம் மேலிட்டது. மெல்ல மெல்லக் குந்தி விளக்கினாள். முனிவர் ஒருவரின் சாபத்தினால் பாண்டுவிற்கு மனைவியைத் தொட முடியாது எனவும், அத்தகைய நிலையிலேயே அவர்கள் மூவரும் காட்டிற்கு வாழ வந்ததாகவும், இருவருக்கும் ஐந்து குழந்தைகள் பிறக்கும் வரை அனைத்தும் சரியாகவே இருந்ததாயும் சொன்னாள் குந்தி. இப்போது வசந்தம் வந்து எங்கேயும் பூத்துக் காய்த்துக் குலுங்கும் புஷ்பங்களையும், காட்டு மிருகங்களின் அந்யோந்யங்களையும் கண்ட மன்னன் பாண்டுவிற்கு ஒரு கணம் தன்னுடன் வந்த மாத்ரியிடம் ஆசை மூண்டு அவளைத் தொட நினைத்ததையும், அவன் எண்ணம் ஈடேறாமல் மாத்ரியின் கரங்களிலேயே அவன் மரணமடைந்ததையும் கூறினாள் குந்தி.
மன்னனுடன் இருவருமே உடன்கட்டை ஏறத் தயாராய் இருந்தார்கள். ஆனால் மாத்ரியோ குந்தியை உடன்கட்டை ஏறவிடவில்லை. தவறு தன்னால் ஏற்பட்டது என்பதால் குந்தி உடன்கட்டை ஏறவேண்டாம் எனவும், தான் மட்டும் மன்னனுடன் உடன்கட்டை ஏறுவதாயும், குந்தி தன் மூன்று குழந்தைகளுடன், மாத்ரியின் இரண்டு குழந்தைகளையும் சேர்த்து வளர்க்கவேண்டும் எனவும் உறுதிமொழி வாங்கிக் கொண்டு மாத்ரி உடன்கட்டையில் விழுந்துவிட்டாள். குழந்தைகளிடம் இயல்பாகவே அதிகம் பிரியம் வைத்திருக்கும் குந்தி இப்போது தன் மூன்று குழந்தைகளோடு மாத்ரியின் இரு குழந்தைகளும் சேர்ந்து ஐந்து பேருக்கும் தாயானாள். ஐவரையும் ஒரே வயிற்றில் பிறந்த தன் புதல்வர்களாகவே நினைக்கத் தலைப்பட்டாள். அங்கே இருக்கும் ரிஷி, முனிவர்கள் பாண்டு இறந்த செய்தியையும், மாத்ரி உடன்கட்டை ஏறின செய்தியையும் ஹஸ்தினாபுரத்துக்கு அனுப்பிவிட்டு, குந்தியையும், ஐந்து குழந்தைகளையும் தங்களில் பொறுப்பானவர்கள் அழைத்து வந்து ஹஸ்தினாபுரம் சேர்க்கப் போவதாயும் பீஷ்ம பிதாமஹருக்குச் செய்தி அனுப்பி விட்டார்கள். ஆகவே குந்தி தன் ஐந்து குழந்தைகளுடன் ஹஸ்தினாபுரம் பிரயாணத்துக்குத் தயார் செய்து கொண்டிருந்தாள்.
செய்தி கேட்ட வசுதேவரும், தேவகியும் தாங்களும் மதுரா திரும்பப் போவதாயும், செல்லும் வழியில் குருக்ஷேத்திரத்தில் இருக்கும் குலகுருவான வேத வியாசரைச் சென்று தரிசித்துவிட்டே செல்லப் போவதாயும் சொன்னார்கள். குந்தியும் வியாசரைத் தரிசிக்க விரும்பினாள். அதிலும் ஹஸ்தினாபுரம் செல்லும் முன்னர் வியாசரைத் தரிசித்துவிட்டே செல்லவேண்டும் என்று எண்ணினாள். ஆகவே அவளும் வசுதேவருடன் குருக்ஷேத்திரம் வருவதாய்ச் சொன்னாள். தேவகி குந்தியைக் கட்டி அணைத்து ஆறுதல் சொன்னாள். தன் கணவனோடு சேர்ந்த அனைத்து உறவினர்களும் இவ்வாறு துன்புறுவதைக் கண்ட தேவகி மனம் உடைந்தாள். ஆனால் குந்தியோ, “மாத்ரி அதிர்ஷ்டம் செய்து விட்டாள்.நான் துர்ப்பாக்கியசாலி.” என்று அழுதாள். தேவகி அவளைச் சமாதானம் செய்தாள். ஆனால் குந்தியோ ஹஸ்தினாபுரத்தில் என்ன நடக்குமோ? காந்தாரி என்ன சொல்லப் போகின்றாளோ என அஞ்சினாள். பீஷ்மபிதாமஹர் நம் பக்கம் பேசுவாரா தெரியவில்லையே என ஏங்கினாள். ஆனால் தேவகியின் நிலையோ வேறுவிதமாய் இருந்தது. அவள் குந்தியைப் பார்த்துப் பொறாமை கொண்டாள்.
ஆம், குழந்தைகள் ஐவரும் மிக மிக உரிமையுடனும், சந்தோஷத்துடனும் தாய் மடியில் போட்டி போட்டுக் கொண்டு அமர்ந்து விளையாடினார்கள். ஒரு குழந்தை மடியில் அமர்ந்தால் மற்றது அதைத் தள்ளிவிட்டுத் தான் அமர்ந்தது. மற்ற மூவரும் தாயின் பின்னால் சுற்றி நின்று கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்கினார்கள். குந்தியின் முகத்தில் விவரிக்க ஒண்ணாத சந்தோஷமும், ஆனந்தமும், திருப்தியும் மேலோங்கியது. தேவகி பெற்றது ஏழு அல்ல எட்டுக் குழந்தைகள். ஒன்றையாவது அவளால் கொஞ்ச முடிந்ததா? ஆறு குழந்தைகள் இறந்தே விட்டன. ஏழாவது குழந்தையோ நிர்ணயிக்கப் படும் நாள் முன்னாகவே பிறக்கவைக்கப் பட்டுக் கண்காணாமல் கொண்டு போகப் பட்டான். எட்டாவது குழந்தையையோ பார்த்தது சில கணங்களே. அவன் நிறம் மட்டுமே நினைவில் உள்ளது. என் கண்ணா, கண்ணா, மகனே, யார் மகனாய் வளர்கின்றாய் அப்பா நீ இப்போது? என்ன பாவம் செய்தேனடா நான்? தேவகியின் மனம் பொங்கித் தளும்பியது, கண்ணிலிருந்து மழையாக வர்ஷிக்க ஆரம்பித்தது.
குந்தியோ எனில் அவள் எண்ணம் வேறு விதமாய் இருந்தது. தேவகி தன் கணவனுடன் சேர்ந்து வந்திருப்பதையும் தீர்த்த யாத்திரைக்குக் கணவனோடு சென்று வந்திருப்பதையும் கண்டு மனம் நொந்து புழுங்கினாள். தன் கணவனோடு இவ்விதம் சென்றுவரத் தனக்குக் கொடுத்து வைக்கவில்லையே என எண்ணி ஏங்கினாள். தன் மகன்களைக் கண்டு தேவகி தன் இழந்த மகன்களின் நினைவினால் குமுறுவதையும் புரிந்து கொண்டாள். அவளுக்கு எவ்விதம் ஆறுதல் சொல்லுவது எனத் தெரியாமல் திகைத்தாள். இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டனர். ஒருத்தர் அணைப்பில் மற்றவர் ஆறுதல் காணவும் முனைந்தனர். துர்பாக்கியசாலிகளான இரு பெண்மணிகளும் இவ்வாறு மனம் ஆறுதல் காண முனைந்தனர். யுதிஷ்டிரரைக் கண்ட தேவகி இவன் நம் பலராமனைவிடக் கூடப் பெரியவன் அல்லவோ. இதோ இருக்கின்றானே, பலசாலியான இரண்டாம் பிள்ளை, பீமசேனன். பலராமனும் இவனுக்கு ஈடாக இருப்பான் அல்லவோ. இதோ மூன்றாம்பிள்ளை வெண்மை நிறத்தவன் ஆன அர்ஜுனன். இவனைவிட நம் கண்ணன் சற்றே பெரியவன் அன்றோ? எனினும் இருவரும் நல்ல தோழர்களாய் இருப்பார்கள் என்றே தோன்றுகின்றது. மாத்ரியின் புதல்வர்கள் இருவருமே குழந்தைகள். தேவகி ஒவ்வொருத்தரையும் பார்த்துவிட்டுத் தன் மக்களை தூரத்தில் இருந்தாவது காண ஏங்கினாள்.
குந்தியும் தேவகியும் ஒருவரையொருவர் பார்த்து ஏங்குவது உலகத்தாரின் (இக்கரைக்கு அக்கரைப் பச்சை) உணர்வுகளை பிரதிபலிக்கிறது.
ReplyDelete