எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, April 13, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், ராதைக்கேற்ற கண்ணனோ!

இப்போ நாம ரொம்ப நேரமாக் கண்ணனை உரல் மீதே உட்கார்த்திக் காக்க வச்சுட்டோம். ஏற்கெனவேயே கண்ணனுக்குக் கோபமாய் இருக்கிறது. நாம காக்க வைச்சதிலே வேறே அதிகக் கோபம் வந்திருக்கும். . நாம இதை எழுத ஆரம்பிச்ச விசேஷம் இப்போ ராஜ் தொலைக்காட்சியிலே ஸ்ரீகிருஷ்ணா தொடர் ஆரம்பிச்சிருக்காங்க. ஆனால் கொஞ்சம் விட்டலாசாரியா படம் போல இருக்கு. இதே போல நாம ராமாயணம் எழுத ஆரம்பிச்சதும் சன் தொலைக்காட்சியிலே ராமாயணம் தொடர் வர ஆரம்பிச்சது நினைவிருக்கும். எல்லாம் போட்டி போடறாங்கப்பா, நம்மளோட! என்னத்தைச் சொல்றது? இப்போ கண்ணன் என்ன பண்ணப் போறான்னு பார்க்கலாம்.
*************************************************************************************
உரல் மீது உட்கார்ந்திருந்த கண்ணன் விழுந்த மரங்களைப் பார்த்து அதிசயித்த வண்ணம் இருக்கையில் சற்று தூரத்தில் பெண்களின் பேச்சுக் குரல் கேட்டு உற்றுக் கவனித்தான். சற்று தூரத்தில் பெண்களில் சிலர் நதிக்குச் செல்லுவதையும் கவனித்தான். ஆஹா, இப்போ நாம அழக்கூடாது. ஏற்கெனவேயே நம்மிடம் கோபத்தோடு இருக்கும் இந்தப் பெண்கள் முன்னால் நாம் அழுதால் நம்மோட பலவீனத்தை அது காட்டிவிடுமே. நாமோ செயற்கரிய ஒரு பெருஞ்செயல் அன்றோ புரிந்திருக்கின்றோம். இரு மரங்களை வேரோடு சாய்த்தது, எல்லாராலும் செய்யக் கூடிய ஒன்றா? நாம் வீரனாகவே காட்டிக்கணும் நம்மை. உரலில் அம்மா நம்மைக்கட்டிப் போட்டிருக்க நாமோ உரலை இழுத்து வந்ததோடு இந்த மரங்களையும் சாய்த்திருக்கிறோமே!

இரு பெண்மணிகள் வருவது தெரிந்தது. இல்லை, இல்லை, பெண்மணிகள் இல்லை, இரு சிறு பெண்கள். சிறுமிகள். ஒரு பெண் கண்ணனுக்குத் தெரிந்த கோபி ஒருத்தியின் பெண்தான். கண்ணனோடு சம வயசுக்காரி. இன்னொருத்தி, இன்னொருத்தி, ம்ம்ம்ம்ம்?? கோகுலத்துக்குப் புதுசாய் இருக்காளே?? நம்மை விடக் கொஞ்சம் பெரியவளாயும் இருக்காள் போல? யாராயிருக்கும் இவள்? ஆஹா, அந்தப் பெண்ணின் கண்கள்? கடல் போலப்பெரியதாய் அல்லவோ உள்ளன? கண்ணின் கருவிழிகள்? அங்குமிங்கும் அலைவதைப் பார்த்தால் கடலில் மீன்கள் ஓயாமல் நீந்துவதை அல்லவோ நினைவூட்டுகின்றது? தலையில் ஒரு பித்தளைக் குடமும், இடுப்பில் ஒரு சிறிய குடமும் இரு பெண்களுமே வைத்துள்ளார்கள். ஆனால் அந்தப் பெரிய பெண்ணின் அலங்காரம்?? தலையை அலங்கரித்துப் புஷ்பங்களைச் சூடி இருக்கும் விதமே அலாதியாய் இருக்கிறதே! அவள் நடை? நடையா இல்லை நாட்டியம் ஆடுகின்றாளா? அவள் உடலே ரப்பர் போல வளைந்து கொடுக்கின்றதே. கொஞ்சம் கூடத் தப்பாமல் ஒரே சீரான தாளகதியில் நடக்கிறதைப் பார்த்தால் ஒரு அழகான நாட்டியத்தைப் பார்ப்பது போல் அல்லவா உள்ளது? அவள் ஆட்டத்துக்குத் தகுந்தாற்போல் அவள் தோள் வளையும், கை வளையும் ஜல் ஜல் என ஒலிக்கின்றதே!

அதற்குள் அந்தப் பெண்கள் கண்ணனைக் கண்டுவிட்டார்கள். பெரியவள், புதியவள் சொன்னாள்:”அதோ பார், யாரோ ஒரு பையன் அங்கே உட்கார்ந்திருக்கிறாப்போல் இருக்கே!” குரலா அது? இனிமையான கீதம் போலவே ஒலிக்கின்றது. சிறிய பெண் சொல்கின்றாள்.” ஆமாம், ஒரு ஐந்து வயதுப் பையன் போல் இருக்கிறானே! யாருனு பார்க்கலாம்.” கிட்டே சென்ற சிறிய பெண் உடனேயே பெருங்குரலெடுத்துக் கத்துகின்றாள்:” ராதே, அடி ராதே, இவன் வேறு யாருமில்லையடி, இவன் யசோதையின் கானா, கனையா தான்,” என்று தன் கிண்கிணிக் குரலில் கூறிவிட்டுச் சிரிக்கின்றாள். புதிய பெண்ணான ராதையோ அதிசயத்தோடு அவனைப் பார்க்கின்றாள்.” என்ன நந்தனின் மகனா இவன்? நம் தலைவர் நந்தனின் மகனா? என்ன ஆச்சரியம்?” என்று சொன்னாள். கண்ணன் புரிந்து கொண்டான் இப்போது. கோகுலத்துப் பெண் கண்ணனுக்கு ஏற்கெனவேயே அறிமுகம் ஆன கோபி ஒருத்தியின் மகள் லலிதா. மற்றொருத்தி புதிய பெண் அவள் பெயர் ராதை. ஆஹா, என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு நெஞ்சில் போய் நிறைகின்றதே. இவள் குரலைக் கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும்போல் இருக்கிறதே. ஏன் இப்படி?

பெண்கள் இருவரும் தங்கள் கைகளில் இருந்த பானைகளைக் கீழே வைத்துவிட்டுக் கண்ணனிடம் ஓடிச் சென்றனர். முதலில் லலிதா கேட்கின்றாள் கண்ணனிடம்:” என்ன ஆச்சு கண்ணா? ஏன் இப்படி உட்கார்ந்திருக்கிறாய்?” நம் கண்ணனா அசருபவன்? மிக மிக சாவதானமாய் ஏதோ தினமும் இதையே செய்பவன் போன்ற எண்ணம் வரும்படியான குரலில் சொல்கின்றான். “ஓ, லலிதா, ஒன்றுமில்லை, இந்த மரங்களைச் சாய்த்துக் கொண்டிருந்தேன்.” கண்ணன் சொன்ன தொனியைக் கேட்டால் ஏதோ தினந்தோறும் கண்ணனின் வேலையே அதுதான் என நினைக்குமாறு இருந்தது. “ஆனால் நீ என்ன உரலோடு சேர்த்தல்லவோ கட்டப் பட்டிருக்கின்றாய்?” விடலையே அந்தப் பெண்கள். அதிலும் ராதை அல்லவோ கேட்கின்றாள் இதை. கண்ணன் இப்போது இன்னும் எச்சரிக்கை அடைந்து, ஆஹா இந்த ராதைக்கு நமக்கு அம்மா தண்டனை கொடுத்த விஷயம் தெரியக் கூடாது என்று உணர்ந்தவனாய், “ஓஓ அதுவா? “ கண்ணன் சிரிக்கின்றான். எந்தத் துன்பமும் இல்லாதது போலவே. “வேறே யாரு கட்டுவாங்க? அம்மாதான்” இப்போவும் அதே தொனி. ஏதோ யசோதைக்கு தினமும் கண்ணனை உரலில் பிடித்துக் கட்டுவதே வேலை என்பதான தொனி. ராதையின் மனம் நெருப்பிலிட்ட மெழுகாய் உருகிக் கரைந்தது. “ஆஹா, உங்க அம்மா ரொம்ப மோசமோ?” என்று கேட்டாள் கண்ணனிடம். கண்ணன் இப்போது ராதையை மிகவும் கிட்டத்தில் பார்த்தான்.

இத்தனை அழகான ஒரு பெண்ணை இவ்வளவு நாட்கள் கண்டதே இல்லை. பார்த்தால் சிறு பெண்ணாய்த் தெரிகின்றாள். ஆனால் என்னைவிடவும் வயதில் மூத்தவளே. இன்றுதான் இவளைப் பார்க்கிறேன் என்றாலும் ஏதோ ஜென்ம ஜென்மாந்தரமாய் இவளைப் பார்த்துப் பேசிக் கொண்டே இருந்தாற்போல் அல்லவா இருக்கிறது? அது சரி, இவள் என்ன சொல்கின்றாள்? ஆஹா, அம்மாவைப் பத்தியா? இல்லை, இல்லை, இவள் அம்மாவைத் தப்பாய் நினைக்கப் போறாளே. அவசரம் அவசரமாய்க் கண்ணன் மறுத்தான். “இல்லை, இல்லை, அம்மா ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவ, தெரியுமா உனக்கு. என்னிடம் மிக்க ஆசையோடு தான் இருப்பாள். ம்ம்ம்ம்ம் ஆனால், ஆனால், ஆனால் இந்தப் பெண்கள் இருக்கின்றார்களே, உன்னையும் சேர்த்துத் தான் சொல்கின்றேன், ஏ, ராதே, திடீர் திடீர்னு அவங்களுக்குக் கோபம் ஒண்ணு வந்துடறது. எல்லாப் பெண்களுமே இப்படித் தான் இருக்கிறாங்கனு நினைக்கிறேன்.” கண்ணன் கண்களும், முகமும் சேர்ந்து சிரித்தன. விஷமம் தாண்டவம் ஆடியது கண்ணனின் முகத்தில்.

கோபமாய்ப் பதில் சொல்ல நினைத்த ராதையால் முடியவில்லை. கண்ணனைப் பார்த்துக் கொண்டே கலகலவெனச் சிரித்தாள் ராதை. சிரிக்கும்போது ராதையின் கன்னத்தில் விழும் அழகான இரு குழிகளைப் பார்த்து பிரமித்தான் கண்ணன். ராதையோ அவனிடம்,” உனக்கு என்ன தெரியும் பெண்களைப் பற்றி?” என்று கேட்கின்றாள். கண்ணன் சொன்னான்:” ஓ, எனக்கு அம்மாவைத் தெரியுமே, அவள் ஓர் பெண் தானே. இதோ இந்த லலிதா இவள் எனக்குத் தோழி, இவளைத் தெரியும், இன்னும் கோகுலத்துப் பெண்கள் பலரையும் தெரியும்,” என்று பதில் சொல்கின்றான். ‘சரி, சரி, லலிதா, வா, வா, இவனை அவிழ்த்துவிடுவோம்.” ராதை லலிதாவைக் கூப்பிட கண்ணனோ வேண்டாம் எனச் சொல்கின்றான். “ அம்மாவே வந்து அவிழ்த்துவிடட்டும். இல்லைனா அவளுக்குக் கோபம் தீராது.’ என்கின்றான் கண்ணன். அம்மா வரலைனா என்று ராதை கேட்க, அம்மா வந்தே விடுவாள் எனக் கண்ணன் உறுதியாய்ச் சொல்லுகின்றான். லலிதாவைப் பார்த்துத் தனக்குக் குடிக்கக் கொஞ்சம் நீர் கொண்டு வரும்படிச் சொல்ல, லலிதா சிறிய குடத்தை எடுத்துக் கொண்டு நதிக்குச் செல்கின்றாள் நீர் மொண்டு வர. ராதையோ கண்ணன் அருகிலே அமர்ந்து கொள்கின்றாள். அவள் உடலில் இருந்து வந்த சுகந்தங்களின் வாசமும், அவள் அழகான, மென்மையான, அமைதியான முகமும் கண்ணனையும் வேறு ஓர் உலகுக்கே இட்டுச் சென்றது. மனதில் நிம்மதியும், சந்தோஷமும் இதற்கு முன்னர் கண்டிராத வகையில் நிரம்பியது.

“நீ தான் நந்தனின் மகனா?? உன்னைப் பற்றித் தானே கிராமம் பூராவும் பேசிக் கொள்ளுகின்றனர்?” ராதை கேட்டாள். அவள் கண்ணன் பெயரை யசோதா அம்மா போல கனையா என்று சொல்லவில்லை. “கானா” என்று மட்டும் சொல்கின்றாள். கண்ணனுக்கோ அவள் திரும்பவும் தன்னைக் கானா என அழைக்க மாட்டாளா எனத் தோன்றுகிறது. கண்ணன் சொல்கின்றான்:” ஆமாம், நந்தன் மகன் கண்ணன் நான் தான். இந்த ஊர்க்காரங்களுக்கு வேறே வேலை என்ன? என்னைப் பத்தித் தான் பேசுவாங்க. போகட்டும், நீயும் கொஞ்ச நாட்கள் கழிச்சு என்னைப் பத்திப் பேச ஆரம்பிப்பே!” என்று கிண்டலாய்ச் சொல்கின்றான். “உனக்கு எப்படித் தெரியும்?” ராதை கேட்கின்றாள். அவள் கண்ணின் மணிகள் அவள் பேசுவதற்கேற்ப நாட்டியம் ஆடுகின்றன என்று தோன்றியது கண்ணனுக்கு. கண்ணன் எதிர்பாராமல் அவன் வாயிலிருந்து, “உன்னைப் பார்த்தால் ரொம்ப நல்லவளாய்த் தெரிகிறது ராதை, நீ மிகவும் அழகாயும் இருக்கின்றாய். “ என்ற வார்த்தைகள் வந்தன. ஒரு நிமிஷம் கண்ணனே எதிர்பார்க்கலை தான் இப்படிச் சொல்வோம் என. ஆனால் அவன் உள் மனதில் இருந்த எண்ணங்களே இப்படி வந்து விழுந்துவிட்டன என்பதைப் புரிந்து கொண்டனர் இருவருமே. திரும்பவும் ராதையிடம் கேட்கின்றான் கண்ணன்.”யார் நீ? எங்கே இருந்து வந்தாய்? கோகுலத்தில் உன்னை நான் இதுக்கு முன்னர் பார்த்ததே இல்லையே? மீண்டும் வருவாயா நீ? உன்னை மீண்டும் சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்குமா?” என்று கண்ணன் கேட்க, ராதையின் மனமும் எதிர்பாரா ஆனந்தத்தில் ஆழ்கின்றது

1 comment:

  1. ம்ம்ம்..மீட்டிங் போட்டாச்சா!! சூப்பரு ;)

    ReplyDelete