ராதை எப்படியாவது கண்ணனைக் கட்டிலிருந்து விடுவிக்க முயற்சி செய்ய நினைத்தாள். ராதையின் சிரிப்பு ஒரு அழகான பெரிய பூவொன்று கண்ணுக்கு நேரே மலர்வதைப் போல் இருந்தது கண்ணனுக்கு. அவள் சிரிப்பும், அதன் ஒலியும் இசையைப் பழிக்கும் வண்ணம் தோன்றியது. அம்மாவின் தாலாட்டை விட இனிமையாகத் தோன்றியது. பளீரென ஒளிவிட்ட வரிசையான முத்துப் போன்ற பற்களும், சிவந்த அதரங்களும் கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தான் கண்ணன். ராதை, கண்ணனிடம் சொல்கின்றாள்: “ ஓ, நான் பக்கத்து ஊர் தான். பர்சானாவைச் சேர்ந்தவள், என்னுடைய சகோதரன் இங்கே கோயில் கொண்டிருக்கும், கோபா மஹாதேவரிடம் எனக்கான ஒரு பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டி இங்கே அழைத்து வந்தான். நாங்கள் இங்கிருந்து விருந்தாவனம் செல்கின்றோம். செல்லும் வழியில் இங்கே வந்தோம். என் பெற்றோர் தற்சமயம் விருந்தாவனத்திலேஇருக்கின்றனர் . ஆஹா, இது என்ன, கானா?? உன் உடலில் இத்தனை காயங்கள்? புழுதி படிந்து வேறே உள்ளதே? இரு, இரு, நான் உன்னைச் சுத்தம் செய்து விடுகின்றேன்.” என்றாள் ராதை. கண்ணனுக்கு இந்தக் காயங்கள் ஒன்றும் பெரிதாய்த் தெரியவில்லை என்றாலும் ராதையின் கரங்களால் தனக்கு உதவி கிடைப்பதை எண்ணி ஆனந்தம் அடைந்தான். ராதை அவன் உடலில் இருந்த புழுதியைத் துடைத்து விடுகின்றாள். “கானா, அம்மா என் உன்னை உரலோடு சேர்த்துக் கட்டினாள்?” ராதை கண்ணனைக் கேட்டாள்.
“ம்ம்ம்ம்?? நான் வெண்ணையைப் பானையோடு உடைத்துவிட்டு நானும் தின்று, குரங்குகளுக்கும், மற்ற மிருகங்களுக்கும் கொடுத்தேன்.”
“ஓஹோ, அதான் உன்னை வெண்ணை திருடி என்கின்றார்களா அனைவரும்?” ராதை கலகலவெனச் சிரித்தாள். ‘உன்னைப் பார்த்து கோகுலத்துப் பெண்கள் அனைவரும் பயப்படுகின்றார்களாமே?”
“இல்லை, இல்லை, அதெல்லாம், இல்லை, ராதே, நீ இங்கேயே தங்குகிறாயா? நீ இங்கேயே தங்கினால் நான் உன்னைத் தொந்திரவு ஒன்றும் செய்ய மாட்டேன்.”
ராதை தன்னைத் தொட்டுப் புழுதியைத் தட்டிச் சுத்தம் செய்த போது இனம் புரியாத சந்தோஷம் தன் மனதில் வந்ததைக் கண்ணன் உணர்ந்தான். அவன் அதை இழக்க விரும்பவில்லை. ராதை சொல்கின்றாள்: “ ம்ம்ம் அப்படியா? ஆனால் நான் தங்கினால் நிச்சயமாய் உன்னை எந்தத் தவறும் செய்ய விடமாட்டேன்.” ராதை சொல்கின்றாள். “மாட்டேன், மாட்டேன், ராதை, நான் எந்தத் தவறும் செய்ய மாட்டேன், வெண்ணைப் பானையை உடைக்க மாட்டேன். “ திடீரெனக் குறும்பாய் ஒரு எண்ணம் கண்ணன் மனதில். மெதுவாய்ச் சொன்னான் ராதையிடம், “உன்னுடைய வெண்ணைப் பானையைத் தவிர” என்று சொல்லிக் கொண்டே தன்னை அடக்க முடியாமல் அவளைக் கிள்ளப் போனான். “ம்ம்ம்ம்ம், ஒழுங்காய் நடந்துக்கோ கானா, இல்லை எனில்……” என்று ராதை கூறிக் கொண்டே கண்ணனை அடிப்பது போல் கையை ஓங்கினாள். கண்ணனோ எதுக்கும் தயார் என்பது போல் நின்றான்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சிரித்து விட்டனர். அப்போது சற்றுத் தூரத்தில் சில பெண்கள் வரும் சப்தம் கேட்டது. ராதை உடனே அவர்களிடம் சென்று கண்ணனின் நிலைமையைச் சொல்லி அவன் உரலோடு அவன் தாயால் சேர்த்துக் கட்டப் பட்டிருப்பதையும் காட்டினாள். அந்தப் பெண்களோ அவனைக் கண்டதும் ஆச்சரியம் அடைந்ததோடு அல்லாமல், இரு மரங்கள் வேறே கீழே வீழ்ந்திருப்பதையும் கண்டனர். அந்த வழியே சென்ற ஒருவனைக் கூப்பிட்டு, கண்ணனின் நிலைமையைச் சொல்லச் சொன்னார்கள். கண்ணன் அம்மா வந்தால் ஒழிய உரலில் இருந்து விடுபட மாட்டேன் எனப் பிடிவாதமாய் இருப்பதையும் சொல்லி, யசோதையை உடனே அழைத்து வரும்படியும் சொன்னார்கள். அந்தப் பெண்கள் அனைவரும் அங்கேயே அமர்ந்து யசோதை இப்படியா கல் மனசோடு கண்ணனைக் கட்டுவாள் என ஒருவருக்கொருவர் விவாதிக்கத் தொடங்கினார்கள். யாருக்குமே கண்ணன் தங்கள் வீடுகளில் செய்த லூட்டி எதுவும் அப்போது நினைவில் இல்லை. யசோதையே கொடுமைக்காரியாகத் தெரிந்தாள்.
அதோ, யசோதை ஓட்டம் ஓட்டமாய் வருகின்றாளே, அவள் பின்னோடு யார்? வேறு யார் நந்தனே தான். யசோதை ஓட்டம் ஓட்டமாய் வந்தவள் கண்ணனை உரலில் இருந்து விடுவித்து, அவனக் கொஞ்சிக் கொண்டே பல்வேறு அர்த்தமற்ற கொஞ்சல்களைக் கூறிக் கொண்டே தன் கைகளில் எடுத்து அப்படியே நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். மாயக் கண்ணனோ யசோதையை விட ஒரு படி மேலே. அம்மாவைச் சேர்த்து இறுகக் கட்டிக் கொண்டான். இந்த உலகமே அவன் கைகளில் வந்துவிட்டது என உணர்ந்தான். அவனுக்கு நன்றாய்த் தெரியும், யசோதையின் கண்ணின் கருமணி தான் தான் என. ஆகவே அவனுக்கும் அம்மாவை விடப் பெரியதாய் ஏதும் இல்லை தான். அனைவரையும் விட அம்மாவே நல்லவள், மிக மிக நல்லவள். அம்மா, என் அம்மா, யசோதை அம்மா, எனக் கட்டிக் கொண்டான் கண்ணன்.
நந்தனோ அந்த விழுந்த மரங்களைத் திரும்பத் திரும்பச் சென்று பார்த்தான். பின் ஆகாயத்தைப் பார்த்தான். பின் கண்ணனைப் பார்த்தான். அவன் மனதில் கண்ணன் ஒரு தெய்வம் என்ற எண்ணமே எல்லாவற்றையும் காட்டிலும் மேலெழுந்தது. ராதை நடந்தது என்னவெனத் தன் இனிமையான குரலில் விவரித்தாள். அன்றிரவு கண்ணன் தூங்கவே இல்லை. ராதையையே நினைத்துக் கொண்டிருந்தான். காலை பொழுது புலர்ந்ததும், புலராததுமாகக் கண்ணன் எழுந்தான். மெல்ல மெல்ல வீட்டுக்கு வெளியே வந்தான் கண்ணன். ராதை தங்கி இருக்கும் வீட்டிற்குச் சென்றான். அங்கே ஒரு மாட்டு வண்டி பிரயாணத்திற்கான ஏற்பாடுகளுடன் தயாராக இருந்தது. ராதையின் சகோதரன் பிரயாண மூட்டையுடன் வெளியே வந்தான். ராதையும் வந்தாள். கண்ணனைக் கண்டதும், தன் சகோதரனுக்கு அறிமுகம் செய்தாள் ராதை. கண்ணனைக் கைகளில் தூக்கிக் கொண்டு அவனைத் தட்டிக் கொடுத்துக் கீழே இறக்கினான் அந்த சகோதரன். கண்ணனுக்கு என்னமோ அவனைக் கண்டால் பிடிக்கலை தான். ஆனால் வேறே வழி? என்ன இருந்தாலும் ராதைக்கு அண்ணனாச்சே? பொறுத்துக்கணும்.
இருவரும் வண்டியில் ஏறியதும் கண்ணனும் ஏறிக் கொண்டான். சற்றுத் தூரம் வரை தானும் வருவதாய்ச் சொன்னான். ராதையுடன் செய்த அந்தச் சிறு பிரயாணம் மிக இனிமையாக இருந்தது கண்ணனுக்கு. ஊர் எல்லை வந்தது. அரை மனதுடன் வண்டியை விட்டுக் கீழே இறங்கினான். “என்ன வயசு உனக்கு?” என்று ராதை கேட்டாள் கண்ணனிடம். ‘ஏழு” கண்ணன் மறுமொழி கொடுத்தான். “உனக்கு?” திரும்பக் கேட்டான் கண்ணன். “பனிரண்டு” என்று ராதை சொல்லிவிட்டு, ‘விருந்தாவனத்து வா” என அழைப்பும் கொடுத்தாள். “ ஆம் , நிச்சயமாய் வருவேன்.” என்றான் கண்ணன். எவ்வளவு நல்ல சிநேகிதி?என்று கண்ணன் எண்ணினான். வண்டி சென்றது. கண்ணன் மனம் ஒரு கணம் சூன்யம் ஆனது போல் இருந்தது.
//ஆனால் வேறே வழி? என்ன இருந்தாலும் ராதைக்கு அண்ணனாச்சே? பொறுத்துக்கணும்.//
ReplyDelete:-)))))))))))))))))
ரொம்ப ப்ராக்டிகல்!
\\ஒரு கணம் சூன்யம் ஆனது போல் இருந்தது.\\
ReplyDeleteஅய்யோ பாவம்....;(
@திவா, இந்தப் பசங்களுக்கு அப்போவே கண்ணன் வழிகாட்டி இருக்கான்! :))))))))
ReplyDelete@கோபி, ரொம்ப வருத்தப் படாதீங்க!
ReplyDelete