குந்தியும், “ஆம் ஐயா, மாத்ரி மிக மிகச் சிறியவள். அவள் இருக்கும்போதே இந்தக் குழந்தைகளை நான் தான் கவனித்து வந்தேன். ஆகையால் எனக்கு ஒன்றும் சிரமம் இல்லை. “ என்றாள். வியாசரும் “ஆம், அம்மா உன் மனப்பான்மையும், குழந்தைகளை அவர்கள் யார் குழந்தைகளாய் இருந்தாலும் அவர்களை வளர்ப்பதிலும், அவர்களைக் கண்டு ஆனந்திப்பதிலும் சிறு வயதில் இருந்தே உன் ஈடுபாடு என்னை அதிசயிக்க வைக்கின்றது. உன்னை மாதிரிப் பெண்கள் ஆயிரத்தில் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள்.” என்றார். உடனேயே நம் பீமன் பொறுக்க முடியாதவனாய், தன் உரத்த குரலில், “தாத்தா அவர்களே, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? அம்மாவுக்கு நகுலையும், சஹாதேவனையும் தான் ரொம்பப் பிடிக்கும்.” என்று சொல்லவே சுற்றி இருந்த அனைவரும் சிரிப்புக் கடலில் மூழ்கினர். இந்த வெகுளித்தனமான பீமனின் பேச்சால் மனம் கவரப் பட்ட வியாசர் அன்போடு பீமனை நோக்கி, “ குழந்தாய், உனக்கும் உன் சகோதரர்களைப் பிடிக்கும் அல்லவா? அவங்க ரொம்பச் சின்னவங்க இல்லையா? நீ பெரிய பையன் ஆகிவிட்டாயே? அதோடு அப்பா பீமா, நீ எவ்வளவு பலவானாய் இருக்கிறாய்? இனிமேல் நீ உன் குட்டித் தம்பிகளைப் பார்த்துக் கொள்ளவேண்டும், இல்லையா?” என்று சொல்ல, பீமன் மிகுந்த கர்வத்தோடும், பெருமையோடும், “ஆஹா, நான் நன்றாய்ப் பார்த்துக் கொள்ளுவேனே இவங்களை, “ என்றவன், கொஞ்சம் சிரிப்போடும், யோசனையோடும் மேலும் சொன்னான்:” ஆனால் நாங்க விளையாடும்போது அவங்களை நான் தூக்கிப் போட்டு விளையாடுவேன்.” பீமன் சிரிக்க சுற்றி இருந்த அனைவராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. யுதிஷ்டிரனோ, பெரியவன் என்ற பொறுப்போடும், நிதானத்தோடும், “குருவே, பீமனுக்குப் பெரியவர்களிடம் என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்று இன்னும் பழக்கம் ஆகவில்லை. பேசத் தெரியாமல் பேசிவிட்டான். பொறுத்துக் கொள்ளுங்கள், நாங்கள் ஐந்து பேரும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசிக்கின்றோம்.” என்றான். அர்ஜுனனும், வியாசரைப் பார்த்துத் தன் கண்களால் அதை ஆமோதிக்கக் குந்தியோ தன் பிள்ளைகளின் ஒற்றுமையால் மனம் நிறைந்து போய்க் கண்ணால் பொங்கிப் பிரவாஹித்தாள்.
அவ்வளவில் வியாசர், சற்றே திரும்பி வசுதேவரைப் பார்த்து, “நான் தனியே உன்னோடும் தேவகியோடும் பேச வேண்டியது நிறைய உள்ளன. அதற்கு முன்னால் வசுதேவா, ஹஸ்தினாபுரத்தில் என்ன நடக்கின்றது என்பதை அறிவாயா?” என்று கேட்டார். வசுதேவர் தெரியாது என்று சொல்ல,

வசுதேவர்:”ஆம் குருவே, அவனும் நாங்களும் ஒரே மரத்தடியில் தான் கூடாரங்கள் அமைத்து நேற்று இரவு தங்கி இருந்தோம்.”
வியாசர்:”ம்ம்ம்ம்ம் வசுதேவா, சகுனி காந்தாரியின் சார்பில் சொல்லுவதாய் ஒரு செய்தியை எனக்குக் கொடுத்திருக்கின்றான். காந்தாரியே அதைச் சொன்னாளா அல்லது ஷகுனியின் சேர்க்கையா என்று எனக்குப் புரியவில்லை. செய்தியின் சாராம்சம் இதுதான். பாண்டுவின் பிள்ளைகள் ஹஸ்தினாபுரம் வந்து வசிப்பதைக் காந்தாரி விரும்பவில்லை. அவள் பிள்ளைகளுக்குச் சமமாய்ப் பாண்டுவின் பிள்ளைகளும் ஹஸ்தினாபுரம் வருவது அவளுக்குப் பிடிக்கவில்லையாம். தகுதி அற்ற குழந்தைகளோடு அவள் பிள்ளைகளும் சமமாய்ப் பழகினால் பின்னால் சகோதரர்களுக்குள் சண்டை ஏற்படும் என்று அவள் பயப்படுகின்றாளாம். ஆகவே பாண்டுவின் புத்திரர்களை நான் என்னுடனேயே வைத்துக் கொள்ளவேண்டுமாம்."
வியாசர் புன்னகையோடு இத்தனையும் சொல்ல குந்தி தான் நினைத்தது சரியாய்ப் போயிற்றே என்று கலங்கினாள். அவள் மனக்கலக்கம் அவள் கண்களில் தெரிய மீண்டும் கண்கள் மழையாக வர்ஷித்தது.
“குருதேவா, குருதேவா, என் குழந்தைகளின் கதி என்ன?” என்று புலம்பினாள் குந்தி.(படம் பீஷ்மர் சபதம் போடும் கட்டத்தைக் குறிக்கிறது.)

வசுதேவர்:” சகுனி என்ன செய்வானோ குருதேவா?”
வியாசர்: “தன் அன்பு சகோதரியின் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளப்போகும் சாக்கில் அவனும் ஹஸ்தினாபுரத்தில் தங்கிவிடுவான்.

பீஷ்மனைப் பற்றிக் கவலை வேண்டாம். தர்மத்தின் வடிவே அவன் தான். அவனிடம் எந்தவிதமான வித்தியாசமான போக்கையும் காண முடியாது. காந்தாரியின் புதல்வர்களையும் சரி, பாண்டுவின் புத்திரர்களையும் சரி ஒழுங்கான முறையிலும், சமமான அன்புடனும் வளர்க்க பீஷ்மன் ஒருவனே சிறந்தவன். அவன் பார்த்துக் கொள்வான் எல்லாவற்றையும், வசுதேவா, நீ என்னுடன் ஹஸ்தினாபுரம் வரையிலும் வரவேண்டும்.”
ஹும்!
ReplyDeleteஎப்பவுமே இந்த குட்டிப்பயல் கதை ஆரம்பிச்சா மகாபாரதத்திலே கொண்டு விடுது!
மாயக்காரன்.
:-))
அன்பு கீதா,
ReplyDeleteகுந்தியை நினைத்து மனம் கஷ்டப்படுகிறது.
ஆதரவற்றவர்களுக்கு ஆண்டவன் தான் துணை.
யோசித்தால் எந்தக் காலத்தில்தான் இந்தப் போட்டியும் பொறாமையும் இல்லை என்று வேதனை வருகிறது. வெகு அருமையாக கதையை எடுத்துச் சொல்கிறீர்கள். மிகுந்த நன்றிம்மா.
தலைவி இந்த பகுதியில் எழுத்துநடை ரொம்ப நன்றாக அமைந்திருக்கு ;)
ReplyDeleteஅன்னையர் தின வாழ்த்துக்கள் ;)
//தலைவி இந்த பகுதியில் எழுத்துநடை ரொம்ப நன்றாக அமைந்திருக்கு ;)//
ReplyDeleteஅதேதான் நினைச்சுக்கிட்டே படிச்சேன் - அழகா கதை சொல்வதில் தேர்ந்தவராயிட்டீங்கன்னு :)