
கடைசியில் அந்த நாள் இனிய நாள் வந்தேவிட்டது. குழந்தையைப் போல் குதூகலித்துக் கொண்டிருந்த ராதை தன் தந்தை விருஷபானுவுடன் கோகுலத்து மக்கள் அனைவரையும் வரவேற்கச் சென்றாள். முதலில் கோகுலத்துச் சிறுவர்களையும், சிறுமிகளையும், ஒரு தலைவனைப் போல் அழைத்து வருவது யார்? ஆஹா, கானா, கானா கானாவே தான். இப்போது அவனைப் பார்த்தால் எவ்வளவு பொறுப்புள்ள தலைவனாய்த் தெரிகின்றான். கையில் சின்னத் தடியை வைத்துக் கொண்டு, இடுப்பில் புல்லாங்குழலைச் சொருகிக் கொண்டு, பொன்னிற நூலால் வேலைப்பாடு செய்யப் பட்ட துணியைத் தலைப்பாகையாய்க் கட்டிக் கொண்டு, அதில் மயில் இறகுகளைச் சொருகிக் கொண்டு, அந்தக் குழந்தைகளை அவன் வழிநடத்திய விதமும், அவன் சொல்லுக்கு மறுசொல் சொல்லாமல் அனைவரும் கீழ்ப்படிந்த விதமும். ராதைக்குப் பெருமையில் நெஞ்சம் பொங்கியது. மாடு, கன்றுகள், கோகுலத்துப் பெண்கள், அவர்கள் தலையில் சுமந்துவந்த பானைகள், பாத்திரங்கள், ஆண்கள் சுமந்து வந்த ஆயுதங்கள், வில், அம்புகள் என அனைத்தும் இருந்தாலும் ராதையின் மனமும், கண்களும் , உடலும் ஒன்றிசைந்து ஒரே ஒருவரைத் தான் பார்த்தன. மற்ற எவரும் அவள் மூளையில் பதிந்து மனதில் எட்டவில்லை.

அன்று யசோதையும், ரோகிணியும், விருஷபானுவின் வீட்டிலேயே படுத்துக் கொண்டனர். அவர்களுடன் கண்ணனும், பலராமனும் படுத்து உறங்கினர். அடுத்த அறையில் தன் மாற்றாந்தாய்களுடன் படுத்துக் கொண்ட ராதைக்குத் தூக்கமே வரவில்லை. பொழுது எப்போது விடியும் எனக் காத்திருந்தாள். விடிந்ததும் யசோதையும், ரோகிணியும் மாடுகளையும் கன்றுகளையும் காணச் சென்றனர். அவர்களோடு பலராமனும் சென்றுவிட்டான். ராதை கண்ணன் உறங்குமிடம் சென்று அவனை மெதுவாய் எழுப்பினாள். கண்ணன் ராதையைக் கண்டு சந்தோஷமடைந்தாலும் பலராமன் அவனை விட்டுச் சென்றது குறித்து வருந்தினான். சுதாமாவுடனும், உத்தவனுடனும் தான் யமுனைக்குச் சென்று குளிக்க உத்தேசித்திருந்ததாயும், அவர்கள் விட்டுச் சென்றுவிட்டனரே எனவும் கண்ணன் வருந்த ராதையின் முகம் சுண்டிப் போனது. உடனேயே கண்ணன் உணர்ந்தான், ராதையின் மனம் புண்பட்டதை. அவளைச் சமாதானம் செய்ய வேண்டி, “எனக்கு இந்த யமுனையில் எங்கே இருந்து குளிப்பது எனப் புரியவில்லை” என்று சொல்ல, ராதை மீண்டு வந்த உற்சாகத்துடன், தனக்குத் தெரிந்த ஒரு இடத்தைக் காட்டினாள். கோகுலத்துப் பெண்களைப் போல் இல்லாமல் ராதை சற்றே மாறுபட்டு இருப்பதையும் கண்ணன் உணர்ந்தான். ராதை பர்சானாவில் கிராமத்தின் கண்மணியாக வளர்ந்திருந்தாள். அவள் சொல்லே அங்கே வேதவாக்கு. அனைவரும் அவள் சொல்லுக்குக் கட்டுப்பட்டே நடந்தனர். மெல்ல மெல்ல இங்கே விருந்தாவனத்திலேயும் அதே மாதிரி அனைவரும் ராதையின் ஆளுகைக்கு உட்பட ஆரம்பித்தனர்.
யமுனைக்கரையில் அனைத்து நண்பர்களோடும் நீந்தியும், முழுகியும், நீர் விளையாட்டு விளையாடியும் குளித்து மகிழ்ந்த கண்ணன் அவ்வப்போது தன் புல்லாங்குழலை எடுத்து இனிய கீதங்களும் இசைப்பான்.
நாவலம்பெரியதீவினில்வாழும்
நங்கைமீர்காள். இதுஓரற்புதம்கேளீர்
தூவலம்புரியுடையதிருமால்
தூயவாயில்குழலோசைவழியே
கோவலர்சிறுமியர்இளங்கொங்கை
குதுகலிப்பஉடலுளவிழ்ந்து எங்கும்
காவலும்கடந்துகயிறுமாலையாகி
வந்துகவிழ்ந்துநின்றனரே. (2) 1.
276:
இடவணரைஇடத்தோளொடுசாய்த்து
இருகைகூடப்புருவம்நெரிந்தேற
குடவயிறுபடவாய்கடைகூடக்
கோவிந்தன்குழல்கொடுஊதினபோது
மடமயில்களொடுமான்பிணைபோலே
மங்கைமார்கள்மலர்க்கூந்தல்அவிழ
உடைநெகிழஓர்கையால்துகில்பற்றி
ஒல்கியோடரிக்கணோடநின்றனரே. 2.
கிருஷ்ணனையும், பலராமனையும் பிரிக்க முடியவில்லை. இருவரும் தங்களை அலங்கரித்துக் கொள்ளுவதும், காணவே ஓர் அற்புதமான அழகாய் இருந்தது. நீல நிறக் கிருஷ்ணன் பலராமனின் உடல் நிறக் கலரான மஞ்சள் பீதாம்பரத்தாலும், பலராமனோ கிருஷ்ணனின் உடல் நிறமான நீல நிறப் பீதாம்பரத்தாலும் தங்களை அலங்கரித்துக் கொண்டார்கள். கிருஷ்ணனே அனைவருக்கும் தலைமை வகித்தான் எனினும், பலராமனையே அவன் முன்னிறுத்தி வந்தான். அவர்களின் விளையாட்டில் முதலில் பெண்கள் ஒரு பார்வையாளர்களாகவே இருப்பார்கள். பின்னர் மெல்ல மெல்ல அனைவரும் பங்கெடுக்க ஆரம்பிப்பார்கள். கிருஷ்ணனின் புல்லாங்குழலின் கீதம் கேட்டதுமே எங்கிருந்தோ அனைவரும் வந்து கண்ணனைச் சூழ்ந்து கொள்வார்கள்.
சுற்றிநின்றுஆயர்தழைகளிடச்
சுருள்பங்கிநேத்திரத்தால்அணிந்து
பற்றிநின்றுஆயர்கடைத்தலையே
பாடவும்ஆடக்கண்டேன் அன்றிப்பின்
மற்றொருவர்க்குஎன்னைப்பேசலொட்டேன்
மாலிருஞ்சோலைஎம்மாயற்கல்லால்
கொற்றவனுக்குஇவளாமென்றெண்ணிக்
கொடுமின்கள்கொடீராகில்கோழம்பமே. 5.
ராதை எப்போதும் தான் கண்ணன் அருகேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுவாள்.

கண்ணன் இப்போது முன்னை மாதிரி வெண்ணெய் திருடவில்லை என்றாலும் அக்கம்பக்கத்து கோபிகளைக் காண அவன் சென்றால் கோபியர்கள் அவனுக்கு தாராளமாய் வெண்ணெயைக் கொடுத்து உபசரித்தனர். அவனுடைய சிறுவயதுக் குறும்புகளைச் சொல்லி நினைவு கூர்ந்தனர்.
அன்பு கீதா, கண்ணன் ராதை ஓவியம் கண்முன்னே விரிகிறது. இப்படி ஒரு பிரேமையா என வியப்பில் ஆழ்த்துகிறது.
ReplyDeleteகூடவே வரும் பாசுரங்களும் அற்புதம். சரியாகத் தேர்ந்தெடுத்துப் போடுகிறீர்கள். கண்ணனும் ராதையும் நம் இதயத்தில் எப்போதும் இருக்கட்டும். நன்றிமா.
அப்போ கண்ணன் எங்க மாதிரி இளைஞர் ஆகிட்டார் ;)) குட் குட்
ReplyDelete