தேவகியோ அக்ரூரரைக் கேட்டுத் தன் அருமை மகனின் லீலைகளை அறிந்து கொள்ள ஆரம்பித்தாள். அக்ரூரரும், அவளிடம், “தேவகி கிருஷ்ணன் அனைவரின் ஆவலையும் பூர்த்தி செய்யும் வண்ணமே வளர்ந்து வருகின்றான். உடல் ஆரோக்கியமாயும், சுறுசுறுப்பாயும், அதே சமயம் மிகுந்த புத்திசாலியாகவும் ஒரு தரம் கேட்டால் புரிந்து கொள்பவனாயும் இருக்கின்றான். அவன் ஏதோ தந்திரம் செய்வதைப் போல் தெரியும், ஆனால் அந்தத் தந்திரங்கள் அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளில் இன்றியமையாத ஒன்றாக ஆகிவிடுகின்றது. கேள் தேவகி, சரியாக ஒரு மாதம் முன்னால் தான் நான் சொன்னேனே, ஓநாய்களின் தொந்திரவு ஆரம்பித்தது. உடனேயே நந்தன் எனக்குத் தகவல் அனுப்பினான். நாங்கள் ஒன்று கூடி முடிவெடுத்தோம் அனைவரும் கோகுலத்தைக் காலி செய்து கொண்டு விருந்தாவனம் செல்ல வேண்டும் என. “
“ஆஹா, என் கிருஷ்ணன், அவனுக்கு ஒன்றும் ஏற்படவில்லையே? அவன் என்ன செய்தான் அப்போது?” தேவகி கேட்டாள்.
“ஆஹா, உன் மகன் அல்லவோ அவன் தேவகி? அவனைப் போல் புத்திசாலி யார்? அவனே தலைமை தாங்கி கோகுலத்துச் சிறுவர்களை எல்லாம் ஒன்று சேர்த்து விருந்தாவனத்துக்குக் கூட்டிச் சென்றான். அதே சமயம் தனக்கு மூத்தவன் ஆன பலராமனையும் ஒதுக்கவில்லை. எந்தக் காரியம் செய்தாலும் அருகில் பலராமன் இருக்குமாறு பார்த்துக் கொள்வான். “
நீங்கள் பார்த்தீர்களா அண்ணா என் மகனை? விருந்தாவனம் செல்லும்போது அவன் சந்தோஷமாய்ச் சென்றானா?
“தேவகி, விருந்தாவனம் போகும் வழியில் மதுரா அருகே உள்ள வெட்ட வெளியில் அவர்கள் தங்க நேர்ந்தது. அப்போது நான் சென்று பார்த்தேன். அவன் தான் தலைமை தாங்குகின்றான் அனைவருக்கும் என்றாலும், அவன் பலராமனையே முன்னிறுத்தி விடுகின்றான். வண்டியில் உட்கார்ந்து ஒரு சிறுவன் போல் அவன் செல்லவில்லை. கையில் ஒரு தடியைப் பாதுகாப்புக்கு வைத்துக் கொண்டு அனைத்துக் குழந்தைகளையும் பாதுகாத்த வண்ணம் நடந்தே அவன் சென்ற கோலம் இருக்கிறதே!”
அண்ணா, அண்ணா, அவன் எப்படி இருக்கின்றான்? நல்ல உயரமாய் இருக்கின்றானா? கண்கள் எப்படி உள்ளன? மூக்கு யார் மாதிரி இருக்கின்றது? சிரிக்கும்போது எப்படி இருக்கின்றான்? எவ்வாறு அலங்கரித்துக் கொள்கின்றான்? ஒரு அரசிளங்குமரனைப் போலவா? அல்லது ஒரு இடையனைப் போலவா?
“ஓஓஓ தேவகி, ஏது, ஏது, உன் கேள்விகளுக்கு முடிவே இல்லையா? உன் மகன் அனைவராலும் வியக்கத் தக்க பிரகாசம் பொருந்திய நிறத்தோடும், அழகான முகத்தோடும், உயரமாகவும், அதற்கேற்ற பருமனோடும் இருக்கின்றான். உடலில் தேவையான அளவே சதை இருக்கின்றது. கையில் ஒரு கைத்தடியை வைத்துக் கொண்டு தலையில் பொன்னிறத் துணியில் ஆன முண்டாசு கட்டிக் கொண்டு, அதில் மயிலிறகைச் சூடிக் கொண்டு, அவனின் அழகிய சிறு மூக்கில் குத்தப் பட்டிருக்கும் மூக்குத்தியானது லேசாக ஊஞ்சல் ஆடுவது போல் ஆடிக் கொண்டு, ஆஹா, இப்போது அவன் இடையன் போலத் தான் இருக்கின்றான். ஆனால் அவனை யாரும் அப்படிச் சொல்ல முடியாது. நந்தன் அவனைப் பார்த்துப் பார்த்துப் பூரித்து மகிழ்ந்து போகின்றான். யசோதையின் நிலையைச் சொல்லவே வேண்டாம்.”
ம்ம்ம்ம்ம்” பெருமூச்சு எழுந்தது தேவகிக்கு. “பலராமன்” அடுத்து அவள் கேள்வி. “ஓஓஓ அவன் நல்ல உயரம், கட்டுமஸ்தான உடல், பார்க்கவும் நன்றாயிருக்கின்றான். சகோதரர் இருவருக்கும் ஒருவர் மேல் மற்றவருக்கு எவ்வளவு பாசம் தெரியுமா தேவகி? ஆனால் கிருஷ்ணன் தான் அனைவரின் கண்ணின் கருமணி போல் விளங்குகின்றான். என்றாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் பலராமனை அவன் முன்னிறுத்தும் அழகு இருக்கின்றதே. அவன் அதை வெளிக்காட்டும் விதத்தில் யாருக்குமே கிருஷ்ணன் தான் கண்ணின் மணி என்ற எண்ணம் தோன்றாவண்ணம் மிக அழகாயும், நேர்த்தியாயும் பலராமனுக்கு மரியாதை செய்வான். ஆனால் அனைவருமே உணர்ந்துள்ளனர், பலராமனும் கூட, அனைவருக்கும் கிருஷ்ணன் தான் உயிர், ஆன்மா, ஜீவன் என. ஆனால் உன் மகன் கிருஷ்ணன் இருக்கின்றானே, தான் பெறும் இந்த அன்பைப் பலமடங்கு அதிகமாய்க் கோகுலத்து மக்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடுகின்றான். அது அவன் ஒருவனாலேயே முடியும்.”
தேவகியின் நெஞ்சம் விம்மித் தணிந்தது. “கடவுளே, கடவுளே, நான் எப்போது என் மகனைப் பார்ப்பேனோ? அவன் என்னை “அம்மா” என அழைக்கும் நாள் என்றோ” என ஒரு கணம் புலம்பினாள். பின்னர் மீண்டும் அக்ரூரரைப் பார்த்து யாதவர்கள் அனைவருக்கும் விருந்தாவனத்தில் இடம் இருக்கின்றதா, வசதியாய் உள்ளனரா என விசாரித்தாள். அக்ரூரரும் காட்டைக் கொஞ்சம் அழித்துவிட்டு வீடுகள் கட்டிக் கொள்கின்றனர் என்றும் விருஷ்ணிகள் உதவி செய்வதாயும் சொன்னார். அப்போது வசுதேவர், கம்சனைப் பற்றிக் கேட்க, அக்ரூரர் சொல்லுகின்றார்: கம்சனின் மாமனார் ஆன ஜராசந்தன் அஸ்வமேத யாகம் செய்யப் போவதாயும், யாகக் குதிரையை ஓட்டிக் கொண்டு கம்சன் கலிங்கம் சென்றிருக்கின்றான் எனவும் சொல்லுகின்றார்.
ம்ம்ம்ம்., நாமும் மதுரா செல்லும் நாள் நெருங்குகின்றது என்ற வசுதேவர் அதன் பின்னர் குந்தியுடன் ஹஸ்தினாபுரம் செல்லுகின்றார். அங்கே பீஷ்மரின் ஏற்பாடுகளால் பாண்டுவின் மகன்கள் அரசிளங்குமரர்களுக்கு உரிய மரியாதையுடன் வரவேற்கப் பட்டனர். பீஷ்மர் குழந்தைகளைக் கட்டி அணைத்துக் கொண்டு பாண்டுவை நினைத்துக் கண்ணீர் விட்டுக் குழந்தைகளை ஆசீர்வதித்தார். திருதராஷ்டிரனும், குழந்தைகளைக் கட்டி அணைத்துக் கண்ணீர் விட்டான். அவனுடைய குருட்டுக் கண்களில் இருந்து வந்த கண்ணீரைப் பார்த்த அனைவரும் ஆச்சரியப் பட்டனர். ஆனால் திருதராஷ்டிரன் மனதுக்குள்ளே தன் அருமைத் தம்பியான பாண்டுவிடம் கொஞ்சம் பாசம் இருந்தது. அதை நினைத்தே அவன் அழுதான். சத்தியவதி, தன் பேரப் பிள்ளைகளைப் பார்த்து மகிழ்ந்ததோடு அல்லாமல், ராஜா ஷாந்தனுவுக்கு வம்சம் குலையாமல் இருக்கத் தான் கொடுத்த சத்தியம் காப்பாற்றப் படும் என்றும் நிச்சயம் அடைந்தாள். அவள் மனதில் நிம்மதி பரவியது. குந்திக்கு நிம்மதி போயிற்று.
நான் தமிழ்மணம் சென்று சொடுக்கிய இன்றைய முதல் பதிவே உங்களுடையதுதான்.
ReplyDeleteஅதிகாலையில் ஆன்மீக சொற்பொழிவு வாசித்து மகிழ்ந்தேன்.நன்றி
முந்தைய தொடர்களையும் வாசித்து விட்டு வருகிறேன்.
ReplyDeleteசக்கரவர்த்தித் திருமகன் புத்தகம் போல் கண்ணன் கதை எளிமையான நடை.
வாங்க கோமா, உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. மெதுவாப் படிச்சுட்டு வாங்க.
ReplyDeleteஉங்க வர்ணனையை படிக்கும்போது குட்டிக் கிருஷ்ணனை பார்க்க எனக்கே ஆவல் பொங்குது; அப்ப தேவகிக்கு எப்படி இருக்கும்? ஏன் அம்மா... தேவகி அவள் வாழ்நாளில் எப்போதாவது கண்ணனை மறுபடி பார்த்தாளா, இல்லையா?
ReplyDelete