குந்தியின் மூன்று மகன்களை விடச் சிறியவர்களாய் இருந்த மாத்ரியின் இரு மகன்களும் அவர்கள் வயதைக் காட்டிலும் அதிக புத்திசாலிகளாய் இருந்ததையும் தேவகி கண்டாள். ஐவரும் மிக மிக ஒற்றுமையாய் இருந்ததையும் பார்த்தால் ஆச்சரியமாகவும் இருந்தது. வெவ்வேறு தாயின் மக்கள் என்றே சொல்லமுடியவில்லை. அவர்கள் தங்களுக்குள் எந்தச் சண்டையும் போட்டுக் கொள்ளாமலும், குந்தியை எந்தவிதத்திலும் தொந்திரவு கொடுக்காமலும் இருப்பதையும் கண்டாள் தேவகி. அனைவரும் கொஞ்சம் நடந்து, கொஞ்சம் வண்டியில் எனப் பயணம் கிளம்பினார்கள். குருக்ஷேத்திரம் செல்லும் வழியில் ரிஷிகேசம் வந்தனர் அனைவரும். வழியில் எல்லாம் குந்திக்குக் காந்தாரியின் வரவேற்பை நினைத்துக் கவலை மூண்டது. ரிஷிகேசத்தில் வசுதேவரை எதிர்கொண்டு வந்த வீரர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். குந்தியின் பரிவாரங்களும், வசுதேவரின் பரிவாரங்களும் இரவுக்காக ஒரு பெரிய ஆலமரத்தினடியில் தங்க ஏற்பாடுகள் செய்தனர். அங்கே ஏற்கெனவேயே வேறொரு அரசிளங்குமரனின் பரிவாரங்களும் தங்கி இருப்பது தெரியவந்தது. வசுதேவர் வந்திருப்பது யார் என மெல்ல விசாரித்துத் தெரிந்து கொண்டார். வந்திருப்பது காந்தார நாட்டு இளவரசன் சகுனியாம். காந்தாரியின் சகோதரனாம். என்னவோ இனம் புரியாத கலக்கம் வசுதேவரிடமும். குந்தியிடம் விஷயத்தைச் சொன்னார்.
தனக்கு சகுனி வந்திருப்பது நல்லதுக்கு எனத் தோன்றவில்லை எனவும், மனதில் ஏதோ இனம் புரியாத வேதனை மூள்வதாயும் சொன்னார். குந்தியும் மனம் சஞ்சலம் அடைந்தாள். பாண்டு அவளிடம் இந்த சகுனியைப் பற்றி எப்போதுமே நல்ல அபிப்பிராயமாய்ச் சொல்லவே இல்லை என்றும், சூழ்ச்சிகள் நிறைந்தவன் என்றே சொல்லிக் கொண்டிருப்பார் எனவும் சொன்னாள். வசுதேவர் குந்தியிடம்:”இந்த சகுனியால் உனக்கு ஹஸ்தினாபுரத்தில் தொந்திரவு ஏதும் உண்டானால்?” என்று கவலையுடன் கேட்க, அப்படி நேர்ந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை எனக் குந்தி சொல்கின்றாள். மேலும் சொன்னாள்: “காந்தாரிக்கு என்னிடம் பொறாமை அதிகமாய் இருக்கிறது. அதை நான் உணர்ந்துள்ளேன். என்ன காரணம் என்றே புரியவில்லை. அவளுக்கு நூறு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். என்றாலும் என்னுடைய இந்த ஐந்து குழந்தைகளைக் கண்டு அவள் பொறாமை கொண்டுள்ளாள். தம்பி, வசுதேவா, அந்த மஹாதேவரே என்னையும், குழந்தைகளையும் காக்கவேண்டும். கடவுள்களுக்கெல்லாம் கடவுள் ஆனவரும், முனிவருக்கெல்லாம் முனிவராகவும், யோகிகளுக்கெல்லாம் யோகியாகவும் இருக்கும் அந்த முக்கண்ணனே என் குழந்தைகளுக்குக் காப்பு.” என்று குந்தி சொல்கின்றாள்.
மறுநாள் சகுனியின் ஆட்களும், சகுனியும் விரைவில் கிளம்ப சற்று தாமதித்தே வசுதேவரின் பரிவாரங்களும், குந்தியின் பரிவாரங்களும் கிளம்புகின்றன. குருக்ஷேத்திரம் நண்பகலில் மெல்ல மெல்லத் தெரியலாயிற்று. தூரத்தில் ஒரு பெரிய குடி இருப்பு மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கும் சரஸ்வதி நதிக்கரையின் ஐந்து ஏரிகளின் நடுவே தெரிந்தது. அவற்றிலிருந்து எழும் ஹோமப் புகையைக் கண்டு மிகுந்த ஆச்சரியம் அடைந்தாள் தேவகி. இத்தனை நூறு குடிசைகளும், ஆசிரமங்களையும் ஒருசேரக் கண்டதிலும், அவற்றிலிருந்து எழுந்த வேத கோஷங்களும், தெய்வங்களை வாழ்த்திப் பாடும் ஒலிகளும், மேலெழுந்த வெண்புகையும் சேர்ந்து இந்த பூவுலகை ஒரு அதிசயமாக மாற்ற யத்தனித்துக் கொண்டிருந்தது. ஏரிக்கரைகளில் அமர்ந்திருந்த ரிஷிகளும், அவர்களின் சிஷ்யர்களும், நடு வானில் சுட்டெரித்துக் கொண்டிருந்த சூரிய ஒளியும் சேர்ந்து அந்த இடத்தைப் புனிதமாக்கிக் கொண்டிருந்தது. ரிஷி பத்தினிகள் தங்கள் கணவரின் சீடர்களுக்குச் சாப்பாடு தயார் செய்து கொண்டும், தயார் செய்தவர்கள் அவர்களுக்குச் சாப்பாடு பரிமாறிக் கொண்டும், இன்னும் சிலர் தங்கள் சொந்தக் குழந்தைகளைக் குளிப்பாட்டிக் கொண்டும், அவர்களுக்கும் தங்கள் கணவர்களுக்கும் அமுது ஊட்டிக் கொண்டும் அனைவரும் அவரவர் வேலைகளில் இருந்தனர்.
அத்தகையதொரு சூழ்நிலையில் சென்ற வசுதேவரும், குந்தியும் தங்கள் பரிவாரங்களைப் பின்னே விட்டுவிட்டு, வேத வியாசரின் ஆசிரமம் எங்கே எனக் கேட்டுக் கொண்டு, அந்த இடத்தில் நடுநாயகமாய் இருந்த வியாசரின் குடிலுக்கு வந்து சேர்ந்தனர். ஒரு பெரிய வித்வத் சபையே அங்கே நடந்து கொண்டிருந்தது என்பதற்கு அடையாளமாய் வியாசர் நடுவிலே அமர்ந்திருக்க சுற்றிலும் பல்வேறு ரிஷிகளும், முனிவர்களும் அமர்ந்து தங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும், அவற்றுக்கான பதில்களையும் பெற்றார்கள். சொன்னார்கள், சொல்ல வைத்துக் கொண்டிருந்தார்கள். வசுதேவரும், தேவகியும், குந்தியோடு அங்கே போய்ச் சேர்ந்ததும் வியாசர் உடனே இவர்களைக் கவனித்துவிட்டார். அவர்களைத் தம் அருகே அழைத்துவரச் சொல்ல, அவர்களை வரவேற்ற ரிஷி, முனிவர்களோடு அவர்கள் மூவரும் வியாசரிடம் போய்ப் பணிந்து வணங்கி நின்றனர்.
\\குந்தியின் மூன்று மகன்களை விடச் சிறியவர்களாய் இருந்த மாத்ரியின் இரு மகன்களும் அவர்கள் வயதைக் காட்டிலும் அதிக புத்திசாலிகளாய் இருந்ததையும் தேவகி கண்டாள்\\
ReplyDeleteஅட குந்திக்கு ஐந்து மகன்கள் இல்லையா!!! மாத்ரின்னு வேற ஒருதாங்க இருக்காங்களா!!! எனக்கு இப்பதான் தெரியும்.
http://www.java.com/en/download/manual.jsp
ReplyDeleteஇங்கு போய் ஜாவாவை நிறுவிப் பாருங்கள் - சரியாகலாம். இணையம் மூலம் அப்டேட் செய்வதில் ஏதோ பிரச்சனையாம்.
வாங்க கோபி, பாண்டுவிற்கு இரு மனைவியர். மூத்தவள் குந்தி. இளையவள், பாண்டுவின் அன்புக்குப் பாத்திரமானவள் மாத்ரி. எனினும் குந்திக்கே சகலவிதமான அதிகாரங்களும். பாண்டுவிற்கு மனைவியுடன் சேரமுடியாதபடிக்கு சாபம் இருந்தது. மனைவியைத் தொட்டால் அடுத்த கணமே மரணம் சம்பவிக்கும். ஆகவே அவனால் குழந்தை பெறமுடியாமல் போகவே, குந்தி தனக்குக் கிடைத்த மந்திரங்களின் பலத்தினால் பாண்டுவை மனதில் இறுத்தி மூன்று மகன்களைப் பெறுகின்றாள். மேலும் அவ்வாறு செய்தால் அது தர்மம் இல்லை என தன் இளையாள் ஆன மாத்ரிக்கு அதை உபதேசித்து அவளும் இரு குழந்தைகள் பெற வழி வகுத்துக் கொடுக்கின்றாள். தன் பெரிய மனதால் குந்தி அனைத்துக் குழந்தைகளையும் தன் குழந்தைகளாகவே பார்க்கிறாள். அப்படியே வளர்க்கின்றாள். இது பற்றி சீக்கிரமே விரிவாய் ஒரு பதிவு போட்டுடலாம். :)))))))))))
ReplyDeleteவாங்க குமார், நீங்க சொல்றாப்போல் செய்து பார்க்கிறேன். நன்றி.
ReplyDelete//தம்பி, வசுதேவா, அந்த மஹாதேவரே என்னையும், குழந்தைகளையும் காக்கவேண்டும். //
ReplyDeleteகூப்பிட்டீங்களா?
ஹிஹிஹி! எ.பி ந்னு நினைச்சேன்!
@திவா, :P:P:P:P எ.பி. எல்லாம் ஒண்ணும் இல்லை, குந்தி கூப்பிட்டது வசுதேவரை! வாஆஆஆஆஆசுதேவனை இல்லை! :P
ReplyDelete