அவ்வளவில் அந்தச் சந்திப்பு முடிந்து குந்தி தன் ஓய்விடத்திற்குக் குழந்தைகளுடன் செல்ல வசுதேவரும், தேவகியும் வியாசருடன் தனித்து விடப்பட்டனர். வியாசர் அவர்களிடம் அக்ரூரர் வந்து வியாசரைச் சந்தித்ததாகச் சொல்லுகின்றார். இன்னமும் வசுதேவரைச் சந்திக்கக் காத்துக் கொண்டிருப்பதாயும் சொல்கின்றார். உடனே அக்ரூரருக்குச் சொல்லி அனுப்ப அவரும் வந்து வியாசரை நமஸ்கரிக்கின்றார். வசுதேவரைக் கட்டி அணைத்து நலம் விசாரித்து தேவகியையும் நலம் விசாரிக்கின்றார்.
பின்னர் அக்ரூரர் கம்சன் எவ்வாறு ஒவ்வொருமுறையும் கிருஷ்ணனைக் கொல்ல சதித்திட்டம் தீட்டுகின்றான் என்பதையும் எப்படியோ ஒவ்வொரு முறையும் கிருஷ்ணன் தப்புவதையும் சொல்லி விவரிக்கின்றார். மேலும் கிருஷ்ணன் இப்போது நன்கு வளர்ந்து பெரிய பையனாகி இருப்பதையும் அனைவரும் அவன் ஒரு சொல்லுக்குக் கட்டுப் படுவதையும் எவ்வாறு அவனிடம் அனைவரும் அன்போடு இருக்கின்றனர் என்பதையும் விவரிக்கின்றார். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் அடங்கலாய்க் கண்ணனுக்காக உயிர்த்தியாகமே செய்யவும் தயாராக இருப்பதாய்க் கூறுகின்றார். ஆனால் தாம் இங்கே வருவதற்கு முன்னர் கோகுலத்தில் ஒரு பயங்கர சம்பவம் நடந்ததாயும் கம்சனின் ஆணையால் அப்படி நடந்திருக்குமெனத் தாம் சந்தேகிப்பதாயும் கூறினார். வசுதேவர் என்ன நடந்தது என்று அக்ரூரரைக் கேட்க, அக்ரூரர் கோகுலம் பூராவும் ஓநாய்களால் நிரம்பி வழிகின்றது எனவும், ஓநாய்களின் தாக்குதலினால் கோகுலத்து மக்கள் செய்வதறியாது தவிப்பதாயும் கூறுகின்றார். இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாய் வந்து சிறு குழந்தைகளைப் பிடித்து விழுங்கிவிடுவதாயும், நந்தனும், யசோதையும் கண்ணனுக்கு அம்மாதிரி ஏதும் நேரிட்டு விடுமோ என்ற கலக்கத்தில் இருப்பதாகவும், கோகுலத்தை விட்டு விருந்தாவனத்துக்கு மொத்த யாதவர்களையும் மாற்றிவிட எண்ணி இருப்பதாயும் கூறுகின்றார்.
தேவகியின் குரல் தழுதழுத்தது.” என் கிருஷ்ணன், என் கிருஷ்ணன் அவன் பத்திரமாய் இருப்பானா?” என்று கேவுகின்றாள். வியாசர் தன் அன்பு ததும்பும் விழிகளை அவள் பால் திருப்பினார். மிகவும் ஆதுரத்துடனும், அவளைத் தேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடனும், வியாசர் சொல்லுகின்றார்.”தேவகி, உன் தாய் மனம் துடிக்கின்றது. எனக்குப் புரிகின்றது அம்மா. உன் குழந்தைக்கு யார் பாதுகாப்பு என நினைத்து நீ கலங்குகின்றாய். அது தேவையற்ற கலக்கம் தேவகி, நாம் அனைவருமே, ஏன் இந்த உலகே அவனுடைய பாதுகாப்பில் தான் இருக்கின்றது, இயங்குகின்றது, இதைப் புரிந்து கொள்.” என்று சொல்லுகின்றார். அக்ரூரரிடம் திரும்பி, “அக்ரூரா, தேவகிக்குக் கிருஷ்ணனைப் பற்றிய எல்லா விபரங்களையும் ஒன்று விடாமல் சொல்லு. அவள் ஆவலைப் பூர்த்தி செய்.” என்று சொல்லுகின்றார். அப்போது வசுதேவர் குறுக்கிட்டு, “குருதேவா, எல்லாம் சரி. ஆனால் கிருஷ்ணனின் படிப்பு? அது என்னாவது? அவன் ஒரு இடையனாகவே அல்லவோ வளருவான்? எவ்வாறு அவனைப் படிப்பிப்பது?” என்று மிகக் கவலையுடன் கேட்கின்றார்.
வியாசர் சொல்கின்றார்:”வசுதேவா, என் சீடன் ஆன சாந்தீபனியை இதற்காகக் தயார் செய்து கொள்ளச் சொல்லி இருக்கின்றேன். அவனுக்குப் பழங்கால நடைமுறைகளில் இருந்து ஆயுதப் பிரயோகம் வரையும், தற்கால அரசு நடைமுறைகளில் இருந்து தற்போது உள்ள போர்க்கலை வரையும் நன்றாக அறிந்து வைத்துள்ளான். கோகுலத்து மக்கள் அனைவரும் பிருந்தாவனம் போய்ச் சேர்ந்த உடனேயே அக்ரூரன் சாந்தீபனிக்கு அங்கே ஒரு ஆசிரமம் கட்டிக் கொள்ள ஏற்பாடுகள் செய்து தருவான். கிருஷ்ணனின் படிப்பை சாந்தீபனி கவனித்துக் கொள்ளுவான்.” என்று சொல்லுகின்றார். பின்னர் தன் மதிய கால அனுஷ்டானங்களைச் செய்ய வேண்டி வியாசர் எழுந்து கொள்ள அவரின் மெலிந்த அதே சமயம் நேரான உடலையும், கண்களின் தீக்ஷண்யத்தையும் பார்த்த வண்ணம் வசுதேவர் நினைக்கின்றார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயம் வைத்திருக்கின்றார் குருதேவர். அவரவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லுவதோடு அல்லாமல் அனைவரோடும் மனதுக்கு நெருங்கியவராயும் இருக்கின்றார். இவருடைய இந்தக் குணத்தை என்ன என்று சொல்லுவது என வியந்தார். அனைவரின் நலத்தை மட்டுமே விரும்பும் இவர் நம் குடும்பத்துக்கு மூத்தவராயும், குருவாயும் வாய்த்திருப்பது நாம் செய்த அதிர்ஷ்டமே என எண்ணினார் வசுதேவர்.
No comments:
Post a Comment