ஒரு சரித்திர நாவலின் தாக்கம் சிலரை அதைத் திரும்பத் திரும்பப் படிக்கச் சொல்லும். சிலரை சரித்திர ஆராய்ச்சியில் கொண்டு விடும். நான் முதல் ரகம். திரும்பத் திரும்பப் படிக்கிறதோட நிறுத்திடுவேன். :D ஆனால் திவாகருக்குப் பொன்னியின் செல்வன் நாவல் படித்தது சரித்திர ஆய்வில் மட்டும் கொண்டு விடவில்லை. சரித்திரக் கதைகள் எழுதும் ஆர்வத்திலும் கொண்டு விட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன் குழுமத்திலும் கலந்து கொண்டு மேலும் மேலும் தமிழகச் சரித்திரங்கள் பற்றித் தெரிந்து கொண்டதோடு நிற்கவில்லை. அதைக் கதைகள் வடிவிலும் கொண்டு வந்திருக்கிறார். அதுவும் பிற்காலச் சோழர்கள் தான் அனைவராலும் பெரிதும் பாராட்டப் படுகின்றனர். எல்லாக் கதாசிரியர்களும் சோழர்கள் பற்றி எழுதிய அளவுக்குப் பாண்டியர்கள் பற்றி அத்தனை கதைகள் வரவில்லை என்பதில் எனக்குக் கொஞ்சம் இல்லை நிறையவே வருத்தம். நா.பா. வும் அகிலன் அவர்களும் ஓரளவு முயன்றனர். என்றாலும் கல்கி அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றே சொல்லணும்.
கல்கியை முன் மாதிரியாகக் கொண்டு அதே சாகசம், வீரம், காதல், பக்தி இவற்றையும் கலந்த ஓர் அற்புதக் கலவை திவாகரின் எஸ்.எம்.எஸ். எம்டன் நாவல். இவருக்குச் சரித்திர நாவல் எழுதத் தூண்டுகோலாக இருந்த பொன்னியின் செல்வனே இந்தக் கதையில் வருகின்றான். சிவபாத சேகரனாக. இவருக்குக் கிடைத்த சில விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு அதை விரிவாக்கி எழுதி இருக்கின்றார். இந்திய சரித்திரத்தில் ஆங்கிலேய ஆட்சியும் அப்போது நடந்த எம்டன் கப்பலின் குண்டு வீச்சும் மிகவும் பேசப் படுகின்ற ஒன்று. அந்த விஷயத்தைக் கதையோடு மிக நேர்த்தியாகப் பின்னிக் கதாநாயகனையும் அதற்கேற்றாற்போல் படைத்து, அவனின் சாகசத்தையும், வீரத்தையும், நிதானத்தையும் எடுத்துக் காட்டி இருக்கிறார். தனி ஒரு மனிதனாக இருந்து தன் புத்தியால் தப்பி வந்த கதாநாயகனை ஒரு தமிழனாகப் படைத்துத் தமிழ்நாட்டின் வீரத்தின் அளவுகோலுக்கு எல்லை என்பதே இல்லை என்பதையும் சொல்லி இருக்கிறார். கதையின் ஊடே தேசபக்தியும், தமிழர்களின் வீரம், சாகசம் பற்றிய கதாசிரியரின் பெருமிதமான கணிப்பும் வியக்க வைக்கிறது. காதல் இல்லாமலா? காதலும் இருக்கின்றது, கதையோடு பிணைந்து, இயல்பாக நீரோட்டம் போலச் செல்கின்றது.
இது எல்லாவற்றையும் விட மேலாக மகுடாகமம் பற்றியும் அதில் வரும் கிரியா-காரியா பாதங்கள் பற்றியும் தெளிவாய்த் தெரிந்து கொண்டு லகுளீசர்களின் பாசுபத சம்பிரதாயத்தை ஒட்டி அவை இருப்பதையும் ஆதாரங்களோடு சொல்லி இருக்கின்றார். யோகக் கலையின் உன்னதத்திற்கே சென்று குண்டலினி யோகம் பயின்று தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ளக் கூடிய ஒருவன் செய்யக் கூடிய சாகசச் செயலையும் அநாயாசமாய் சொல்லி இருக்கிறார். கதாநாயகனும், அவன் சிநேகிதியும் நடத்தும் யோக முறையில் ஆன சாகஸச் செயலை முறைப்படி யோகம் பயின்ற எவர் வேண்டுமானாலும் நிகழ்த்த முடியும் என்பதும் உண்மை. ஒரு நாவலுக்குத் தேவையான அனைத்தையுமே சரியான விகிதத்தில் கலந்து கொடுக்கிறார். இங்கிலாந்து அரசியலை விமரிசிப்பதிலும், இங்கிலாந்து நாட்டு ஆட்சியாளர்களில் ஒரு சிலராவது இந்திய மக்களிடம் அன்போடும், பாசத்தோடும் பழகினார்கள் என்பதையும் கூறி உள்ளார். எம்டன் கப்பல் பிரதான பாத்திரம் வகிக்கிறது. கப்பல் பற்றிய விபரங்களையும், அவற்றிற்கு ஏற்படக் கூடிய ஆபத்துகள், எச்சரிக்கைகள், வான் நிலை மாற்றங்கள் என அனைத்தையும் பற்றி நன்கு தெரிந்து கொண்டு அவற்றைப் பற்றி விபரங்கள் கொடுக்கிறார். கதை முழுதும் கதாநாயகனாய் வரும் எம்டன் சென்னைக்கு வந்தது ஒரு சரித்திரம் என்றால், அது உடனே திரும்பிச் சென்றது அதைவிடப் பெரிய சரித்திரம்.
காரணமே தெரியாத இந்தப் பின்வாங்கலையும், அந்தக் கப்பலில் ஒருவேளை செண்பகராமன்பிள்ளை இருந்திருக்கலாம் என்ற சாத்தியக் கூறுமே இவருக்குக் கதைக் கரு. அதை வைத்து அருமையான நாவலைக் கொடுத்துள்ளார். சிதம்பரம் யார் என்பதைக் கடைசிவரையிலும் சஸ்பென்ஸாகவே வைத்து விட்டுக் கடைசியில் தெரியும்போது, அடடா, எப்படிப் பட்ட ஒரு வம்சம் இன்று இப்படி? என்ற எண்ணம் மனதில் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஏற்கெனவெ வம்சதாரா, திருமலைத் திருடன், விசித்திர சித்தன் என்ற சரித்திர நாவல்களை திவாகர் எழுதி இருந்தாலும், நான் அவர் நாவலைப் படிப்பது இதே முதல் முறை. எடுத்ததில் இருந்து கீழே வைக்க முடியாமல் மனசெல்லாம் கதையிலேயே இருக்க நேற்று இரவு தொடரமுடியவில்லை. இன்றுதான் மாலைக்கு மேல் முழுமையாக முடிக்க முடிந்தது. எஸ்.எம்.எஸ்.எம்டன் கப்பல் சென்னைவாசிகளுக்கு எல்லாம் மறக்க முடியாத ஒரு பெயர். நமக்கும் திவாகர் அவர்களின் எஸ்.எம்.எஸ். மறக்கவே முடியாத ஒன்று.
நானும் உங்க ரகம் தான் அம்மா! கல்கியின் நாவல்களில், ஏன் எல்லா நாவல்களிலுமே, எனக்கு ரொம்ப பிடித்தது. உங்க எழுத்து திவாகர் அவர்களின் நாவலையும் படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்டு விட்டது!
ReplyDeleteநிஜம்.. முதன்முதலாக பொ.செ. படிக்கும்போது, எனக்கு ஒரு சரித்திர நாவலாவது எழுதும் லட்சியம் தோன்றியது.. எப்படி எழுதினாலும், கல்கியின் சாயல் வந்துகொண்டேயிருந்து, அதை கைவிடவேண்டியிருந்தது..
ReplyDeleteஇருப்பினும், நண்பருக்கு என் வாழ்த்துக்கள்..
கல்கியின் பொ.செ பற்றிய என் முந்தைய பதிவினை இங்கே கொஞ்சம் பாருங்க..
http://tamilpoo.blogspot.com/2006/01/blog-post_23.html
நன்றிங்க...
காரணம் ஆயிரம்™
அருமையான விமர்சனப் பார்வை. படிக்கும் ஆவல் தூண்டுகிறது. பகிர்விற்கு நன்றி கீதாம்மா.
ReplyDeleteபெங்களூர்ல எங்க கிடைக்குமுன்னு தெரியல்ல...தேடிப் படிச்சுட வேண்டியதுதான்.
ReplyDeleteவாங்க கவிநயா, அங்கே கிடைக்குமா தெரியலை! :)))))))
ReplyDeleteவாங்க டாட்டா,
ReplyDeleteகந்தசாமியெல்லாம் பார்க்கிறதில்லைங்க. சினிமான்னா என்னோட ரசனை வேறே. அதனாலே பாரிஸ் வேண்டாம் எனக்கு, ஓகே??
வாங்க வாரணம், சே காரணம் ஆயிரம், உங்க பதிவைக் கட்டாயமாய்ப் பார்த்துடறேன். நன்றிங்க.
ReplyDeleteவாங்க சென்ஷி, கட்டாயமாய்ப் படிங்க. பழநியப்பா ப்ரதர்ஸ் வெளியீடு.
ReplyDeleteவாங்க மெளலி, புத்தகம் புத்தகக் கடையிலே தான் கிடைக்கும், ஹிஹிஹி, பதில் திருப்தியா இருக்கா??? :P :P :P
ReplyDeleteஎல்லாம் இந்த மாதிரிப் பதிவுக்குத் தான் ஆதரவா? அப்போ நான் திண்டாடின பதிவு ஒண்ணு போட்டிருக்கேன், என் பயணங்களில் பக்கத்தில், அங்கே போய் உங்க ஆதரவைக் கூட்டுங்க, சீச்சீ, காட்டுங்க! :))))))))
ReplyDeleteவழக்கமா ஒரே மூச்சிலே படிச்சுடுவேன். இதை படிக்க 4 நாள் ஆச்சு. மூச்சு வாங்குது இப்பல்லாம்ன்னு இல்லை, நேரம் கிடைக்க மாட்டேங்குது...
ReplyDeleteஇது வரைக்கும் எம்டன் சென்னை மேலே குண்டு போட்டது மட்டுமே தெரியும். மேலே அதைப்பத்தி சுவையோட கொண்டு போயிருக்கார் திவாகர்.
அறிமுகத்திற்கு நன்றி.
ReplyDeleteகப்பலைப் பற்றி மேலும் இணையத்தில் படிக்க விரும்புபவர்களுக்கான சுட்டி:
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%281906%29