எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, December 07, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், குவலயாபீடத்தின் முடிவு!

குவலயாபீடம் தன்னுடைய வழக்கமான கோபத்தை மறந்துவிட்டதா அல்லது அதற்குக் கோபமே வராதா என்னும்படிக்கு மிக மிக சந்தோஷமாய் விளையாடிக் கொண்டிருந்தது. தன்னுடைய நீண்ட துதிக்கையை நீட்டிப் போகிற வருகிறவர்களை எல்லாம் வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்தது. இதோ! இரு இளைஞர்களும் வந்துவிட்டனர். குவலயாபீடம் அவர்களைத் துதிக்கையால் எடுத்துச் சுழற்றி வீசப் போகிறது அல்லது தன் காலடியில் போட்டு எலும்புகள் நொறுங்க நசுக்கப்போகிறது. கம்சனின் காதுகளில் எலும்புகள் நொறுங்கும் சப்தம் விழுந்ததோ என்னும் விதமாய் அவன் மிகவும் ஆவலுடன் அந்தக் காட்சியைக் காணக் காத்திருந்தான். கம்சனின் கண்கள் விரிந்தன. ஆவலுடன் நோக்கினான். தன் கண்களைக் கசக்கிக் கொண்டும் பார்த்தான். இருவரும் வரும்போது அவர்களைத் தடுத்து நிறுத்தும்விதமாய்க் குவலயாபீடம் தன் நீண்ட துதிக்கையை நீட்டியது. தடுக்கப் பார்த்தது. ஆனால் கண்ணன் சொன்ன ஓரிரு வார்த்தைகள் கட்டுப் படுத்திவிட்டனவே. மிருதுவாக, மிக மிக மெதுவாக ஏதோ சொன்னான் கண்ணன் அந்தப் பெரிய யானையைப் பார்த்து. அது உடனேயே தன் தும்பிக்கையை உயர்த்திக் கொண்டு ஒரு சந்தோஷப் பிளிறலிட்டது. மேலும் கண்ணனோடு துதிக்கையை நீட்டிக் கொண்டு விளையாடவே ஆரம்பித்துவிட்டது. கண்ணன் அதனிடமிருந்து நகர்ந்து வேறுபக்கம் சென்றான். அதுவிடாமல் தன் துதிக்கையை நீட்டி அவனைத் தடுக்கப் பார்த்தது. இவ்விதம் கண்ணன் எந்தப் பக்கம் சென்றாலும் குவலயாபீடம் தடுத்தது. அவனைப்போகவிடவில்லை. மக்களில் சிலர் பயந்தனர். கண்ணனை எவ்விதமேனும் அந்த யானையிடமிருந்து காக்கவேண்டும் என்றும் முயன்றனர்.

ஆனால் கண்ணன் சிறிதும் அஞ்சவில்லை. மக்கள் அனைவரையும் நகர்ந்து போகச் சொல்லிவிட்டு யானையின் அருகே சென்று மிருதுவான குரலில் அதற்குப் புரியும் வகையில் அதனோடு பேசினான். குவலயாபீடம் தான் நெடுநாள் பிரிந்திருந்த நண்பன் ஒருவன் திரும்பி வந்துவிட்டானோ என எண்ணும்படியாக அவனை மிக மிகச் சிநேகத்துடன் பார்த்தது. கண்ணனைக் கண்டதும் அதன் சந்தோஷம் கட்டுக்கடங்காமல் போகவே தன் பெரிய உடம்பை வைத்துக் கொண்டு வித விதமாய்க் கோணிக்கொண்டு தன்னை முறுக்கிக் கொண்டு வேடிக்கைகள் செய்து காட்டியது. இவ்விதம் அந்த யானை நடந்து கொள்வது இதுவே முதல்முறை என்பதால் மக்கள் அனைவரும் ஆநந்தக் கூச்சலிட்டதோடு ஆச்சரியத்திலும் ஆழ்ந்தனர். மேலே உப்பரிகையில் இருந்து கம்சன் ஆச்சரியம் அடங்காமல் அதே சமயம் கோபத்துடன் பார்த்துக் கொண்டிருக்கக் குவலயாபீடம் தன் துதிக்கையால் கண்ணனைத் தடவியும் கொடுத்தது. அதன் கண்கள் நட்பின் ஒளியாலும், அன்பின் மொழியாலும் பளபளத்தன. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, கண்ணனை எச்சரித்துக் கொண்டிருக்கையிலேயே விருந்தாவனத்து முரட்டுக்காளைகளை அடக்கிய அதே அன்போடும், விவேகத்தோடும் கண்ணன் அந்தப் பெரிய யானையிடமும் பேசிக் கொண்டும், அவ்வப்போது அதைத் தட்டித் தடவிக் கொடுத்துக் கொண்டும், கொஞ்சம் கொஞ்சமாய் அதன் அருகே முன்னேறினான். யானை தன் துதிக்கையால் கண்ணனை அலாக்காய்த் தூக்கித் தன் மேல் வைத்துக் கொண்டது. மக்கள் பயத்திலும் கவலையிலும் அலறினார்கள். சிலர் அவ்விடத்தை விட்டு ஓடினார்கள். பெண்களுக்கு பயத்தில் மயக்கமே வந்துவிட்டது. ஆனால் இத்தனைக்கும் கண்ணன் அலட்டிக் கொள்ளவே இல்லை.

குவலயாபீடம் கண்ணனைத் தன் முதுகின் மேல் ஏற்றிக் கொண்டு சிறிது தூரம் நடந்துவிட்டுப் பின்னர் திரும்பி அதே இடத்திற்கு வந்து ஒரு பூவைப் பறிப்பது போன்ற மென்மையுடனே கண்ணனைக் கீழே இறக்கிப் பூமியில் விட்டது. சுற்றி இருந்த மக்கள் கூட்டம் கை தட்டி ஆர்ப்பரித்தது. சந்தோஷக் கூச்சலிட்டது. வெற்றி, வெற்றி, கண்ணனுக்கு ஜெயம், எனக் கோஷித்தார்கள். கண்ணனையே பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்த அந்த யானை சற்று நேரத்தில் நிற்கமுடியாமல் மயக்கம் வந்தது போல் கீழே உட்கார யத்தனித்தது. கண்ணன் நின்று கொண்டிருக்க அவனுக்கு எதிரே அந்த யானை தன்னிரு கால்களையும் மடித்துக் கொண்டு மெல்ல மெல்ல உட்கார்ந்து மிக மெதுவாய்த் தன் கண்களை மூடிக் கொண்டது. அதன் துதிக்கை கண்ணன் பாதங்களைத் தொட்டபடி அது படுத்திருந்த காட்சி கண்ணனுக்கு அது தன் வணக்கங்களைத் தெரிவிக்கும் விதமாய் இருப்பதைப் பார்த்த மக்கள் “கண்ணன் ஒரு கடவுள்” எனப் புரிந்துகொண்டு குவலயாபீடம் அவன் காலடியில் வீழ்ந்து கிடக்கிறது என்றும், வேறு சிலர் குவலயாபீடம் கொல்லப் பட்டது என்றும் நினைத்துக் குழம்பினார்கள். ஆனால் கம்சனுக்குச் சந்தேகமே இல்லை. குவலயாபீடத்தைக் கண்ணன் வென்றுவிட்டான். இனி?? கம்சனால் நிற்கக் கூட முடியவில்லை. மாபெரும் கூட்டம் ஒன்று கோட்டை வாயிலிலும், பந்தல் வாயிலிலும் உள்ளே நுழைய முயல்வதையும் கண்ணன் முன்னேறி வருவதையும் கண்டான் கம்சன். அவன் கால்கள் நடுங்கின. அருகிலிருந்த கைப்பிடிச் சுவரைப் பிடித்துக் கொண்டான்.


தன்னைத் தானே சமாளித்துக் கொண்ட கம்சன், அதற்குள்ளாக நந்தகுமாரர்கள் இருவரும் அந்தப்பந்தலினுள் நுழைந்து விட்டதையும், ஜனக்கூட்டம் இருவரையும் சுற்றிச் சூழ்ந்து கொண்டு, "ஜெய ஜெய நந்த, நந்தன" என்று கோஷமிடுவதையும் கவனித்தான். இருவரிலும் கண்ணனை மிக எளிதாய் அடையாளம் கண்டுகொண்டான் கம்சன். தன் அண்ணனைப் பின் தொடர்ந்து வ்ந்து கொண்டிருந்த அந்தச் சிறுவன், கரிய நிறத்தவன், ஆனாலும் என்ன அழகு? என்ன ஒளி? என்ன மரியாதை அண்ணனிடம்?? கம்சனால் இதை நினைக்காமல் இருக்க முடியவில்லை. தன்னைத் தானே உலுக்கிவிட்டுக் கொண்டான். ஆஹா, இந்தச் சிறுவன் தான் எனக்கு எதிரியா? இவன் கையாலேயா நான் சாகப் போகிறேன்? கம்சனின் கோபம் அதிகரித்தது. தன்னை அடக்கிக் கொள்ள மிகப் பிரயாசைப் பட்டான். பற்களைக் கடித்துக் கொண்டான். இல்லை, இல்லை, நான் சாகமாட்டேன் இவன் கைகளால். கடைசி வரையில் ஒரு கை என்ன, இரு கையாலும் பார்த்துவிடுவோமே. என்ன நடக்கிறது என, நானா? அவனா? ம்ம்ஹும், ம்ம்ஹும், இறுதிவரை போராடி முடிந்தால் தேவகியின் அந்தப் பிள்ளையின் கழுத்தை இந்தக் கைகளால் நெரித்துக் கிழிக்கவேண்டும். அது நடக்கவேண்டும். கம்சன் தன் கைகளைத் தட்டி, ஏவலர்களை அழைத்தான்.

3 comments:

  1. அச்சோ. ஏன் அம்மா அவ்ளோ ச்வீட் யானை இறந்து போச்சு? புரியலை :(

    கண்ணனோடு குவலயாபீடம் குலாவுவதை அருமையாய் எழுதி இருக்கீங்க! :)

    ReplyDelete
  2. குவலயாபீடத்தை ஏவி விடுவதாகவும் கண்ணன் அதற்கு மோக்ஷம் தருவதாகவும் படித்திருக்கிறேன்.
    நீங்கள் சொல்லி இருப்பது மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருந்தது கீதா. நன்றி.

    ReplyDelete
  3. இப்படி ஒரு நிகழ்ச்சியை இப்போ தான் படிக்கிறேன்...தலைவி ;)

    ReplyDelete