எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, December 09, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - மல்யுத்தப் போட்டியில்!

கம்சன் தன்னிரு கைகளையும் தட்டினான். அவனுடைய அந்தரங்கப் பணியாள் வந்ததும், நம்பிக்கைக்குரிய ஆகா என்னும் மெய்க்காப்பாளனை அழைத்துவரச் சொன்னான். ஆகா வந்து சேர்ந்தான். ஆஜானுபாகுவான ஆகாவைப் பார்த்தாலே பயமாக இருந்தது. வருடக்கணக்காகக் கம்சன் இட்ட கட்டளைகளை மறுபேச்சுப் பேசாமல் நிறைவேற்றி வந்த ஆகாவுக்கு அவன் செய்து வந்த முரட்டுத் தனமான வேலைகளின் காரணமாக உடலும், மனமும் கடினமாகி இருந்ததோ என்னும் வண்ணம் தோற்றமளித்தான். அவனிடம் கம்சன், குவலயாபீடத்துக்கு என்ன நேர்ந்தது என விசாரித்தான். நந்தனின் மகனை இந்தப் பந்தலினுள் நுழைய விடமாட்டீர்கள் என நினைத்தேன், நுழைந்துவிட்டானே எனப்பதறினான். ஆகா குவலயாபீடம் கண்ணனால் கொல்லப் பட்டது எனச் சிலரும் அவனால் மயக்கப் பட்டது எனச் சிலரும் சொல்லுவதாகவும், தனக்கும் அது பற்றிய சரியான தகவல்கள் இல்லை என்றும், விசாரிக்கச் சொல்லி இருப்பதாகவும் கூறினான். அங்காரகனையும் விசாரிக்கச் சொல்லுவதாக மேலும் கூறினான் ஆகா. கம்சன் “அங்காரகனை விசாரித்து என்ன ஆகப் போகிறது? அவனைப் பற்றி நினைக்க இது நேரமில்லை. மல் யுத்தம் ஆரம்பிக்கப்போகிறது. மல்லர்கள் திரண்டு வரப் போகின்றனர். இன்னும் சில நிமிடங்களில் நானும் அந்த இடத்திற்கு என் விருந்தாளிகளுடன் மல் யுத்தத்தைக் கண்டு களிக்கச் செல்லவேண்டும்.” என்று சொல்லி நிறுத்தினான் கம்சன்.

கம்சனின் கட்டளையை எதிர்பார்த்து ஆகா காத்திருந்தான். “ஆகா, இந்த மல்யுத்தம் ஆரம்பிக்கும் முன்னே சாணுரனுக்குத் தகவல் அனுப்பிவிடு. நந்தனின் மகன்கள் இருவரும், முக்கியமாய் அந்தக் கண்ணன் உயிரோடு இருக்கக் கூடாது.” என்றான் கம்சன். ஆகா திகைத்தான். “ எப்படி முடியும்? கண்ணனோ பதினாறு வயதுச் சிறுவன். சாணுரன் போன்ற பெரும் மல்லன் ஒருவன் அவனைப்போட்டிக்கு எங்கனம் அழைப்பான்?” என்று திரும்பிக் கேட்டான் ஆகா. “சாஸ்திரத்துக்கு மட்டுமின்றி தர்மத்திற்கும் விரோதமாயிற்றே, இதை எவரும் அநுமதிக்க மாட்டார்களே?” என்றான் மேலும். அப்போது பலர் சேர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டும், ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டும் நடந்து வரும் காலடி ஓசை கேட்டது. தனது அரச விருந்தினர்கள் தன்னைக் கண்டு தன்னுடன் பந்தலுக்குப் போக வருகின்றனர் என்பதைப் புரிந்து கொண்ட கம்சன் சட்டென எழுந்தான். வேகமாயும், கோபமாயும் தன் கால்களை பூமியில் ஓங்கி உதைத்தான். ஆகாவைப் பார்த்த வண்ணம் கோபம் அடங்காமல், “சாணுரன் என்ன செய்வானோ எனக்கு அது பற்றிய கவலை எதுவும் இல்லை. ஆனால் என் கட்டளை என்னவெனச் சொல்லிவிட்டேன் அல்லவா? அதை நிறைவேற்றவேண்டும். என் கட்டளையை மதிக்கவேண்டும், சொல் அவனிடம்.” வெறுப்போடு தன் கைகளை அசைத்து ஆகாவை வெளியே போகச் சொன்னான் கம்சன். அனைவரும் உள்ளே வருவதற்கு முன்னால் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு சிரித்த முகத்துடன் இருக்கப்பிரயாசைப் பட்டான் கம்சன்.

அரை வட்டமான அந்தப் பெரிய மைதானம் பல வகைத் தோரணங்களாலும், மலர்மாலைகளாலும், வண்ண வண்ணப் பூக்கள் நிறைந்த தொட்டிகளாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது. வெண்மணல் பரப்பி நடுவே ஒரு பெரிய மேடையில் மல்லர்கள் விளையாட ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அரண்மனைப் பெண்கள், மற்றும் அவர்களுடன் வந்த தோழியர், விருந்தினர்கள் அமருவதற்கெனத் தனி உப்பரிகை ஏற்படுத்தப் பட்டிருந்தது. கம்சனும், அவனுடைய விருந்தாளிகளும் அமரவென ஒரு பெரிய மேடையில் அவரவர் தகுதிக்கும், அரசப் பதவிக்கும் ஏற்ப ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தது. அங்கே மகத நாட்டுக் காவலர்களின் பலத்த காவலும் இருந்தது. இன்னொரு பக்கம் வேதம் ஓதும் பிராமணர்கள் ,மற்றக் குடிமக்கள், மல் யுத்தம் பார்க்கவென வந்த வெளிநாட்டுப் பிரயாணிகள் என அனைவருக்கும் என இடம் ஒதுக்கப் பட்டிருந்தது. இன்னொரு பக்கம் அக்கம்பக்கத்துக் கிராமங்களிலிருந்து வண்ண, விசித்திரமான வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடை, ஆபரணங்களுடன் கிராம மக்கள் அமர்ந்திருந்தனர். அந்தக் கிராம மக்கள் அமர்ந்திருந்த பகுதியையே அனைவரும் திரும்பித் திரும்பிப் பார்ப்பதில் இருந்து அங்கே ஏதோ முக்கியத்துவம் எனப் புரிகிறது. என்ன அது??? ஆஹா, அதோ கண்ணன்! கிராம மக்களோடு ஒருவனாக அல்லவோ அமர்ந்திருக்கிறான்?? என்ன ஆச்சரியம்??? விருந்தாவனத்து கோபர்களோடு அவர்களுக்குத் தலைமை தாங்கி வந்த நந்தனுக்கு ஒரு பக்கம் கண்ணனும், இன்னொரு பக்கம் பலராமனும். மக்கள் கூட்டம் கண்ணன் மேல் வைத்த கண்ணை எடுக்கவில்லை. சாதாரண மனிதனைப் போல் சாதாரண உடை அணிந்து தலையில் உள்ள மயில் பீலி மட்டுமே தன்னைத் தனித்துக் காட்டும் விதமாய் இருந்தாலும், கண்ணன் கண்ணன் தான். அவனுக்கு நிகர் எவருமில்லை என்னும்படிக்குத் தனித்துத் தெரிந்தான். அருகிலுள்ள மக்கள் அவனைத் தொட்டுப் பார்ப்பதிலும், அவனோடு ஒரு வார்த்தை பேசுவதிலும், அவன் திரும்பத் தங்களைக் கண்டு சிரிப்பதிலும் அந்தச் சிரிப்பில் உள்ள அமைதியையும், ஆநந்த்ததையும், அது தங்கள் உள்ளங்களுக்கு அளிக்கும் சாந்தியையும் கண்டு வியந்தவண்ணம் இருந்தனர். பலாப்பழத்தை மொய்க்கும் ஈக்கூட்டம் போல் கண்ணன் இருக்கும் இடத்தையே மக்கள் கூட்டமும் மொய்த்தது.


அப்போது கம்சன் உள்ளே நுழைவதைக் குறிக்கும் வகையில் பேரிகைகள் சப்தித்தன. எக்காளங்கள் முழக்கமிட்டன. சங்குகள் ஊதப்பட்டன. தன்னுடைய பரிவாரங்களுடனும், மற்ற அரச விருந்தினர்களோடும் கம்சன் உள்ளே நுழைந்தான். கம்சனின் மாமனாரான ஜராசந்தனின் மகத வீரர்கள், யாதவ குலத்தினரில் ஒரு சில தலைவர்கள், விருந்தாவனத்து இடையர்கள் எனச் சிலரைத் தவிர மற்றவர்கள் யாருமே கம்சனின் இந்த தநுர்யாகத்தின் உண்மையான நோக்கத்தை அறியமாட்டார்கள். மக்களுக்குக் கம்சன் கண்ணனை அங்கே வரவழைத்ததும், அவன் யசோதையின் மகன் அல்ல, தேவகி பெற்ற பிள்ளை என்பதும் மகிழ்வையே தந்தது. ஆகையால் அனைவருமே விழாவின் மயக்கத்திலே இருந்தனர் என்று சொல்லலாம். மல்யுத்த மேடையில் சாணுரன், முஷ்திகன், தோஷாலா என்னும் மற்றொரு மல்லன் மூவரும் கம்சனின் வரவைக் கண்டதும் இரு கை கூப்பி வணங்கினார்கள். ஒவ்வொருவருக்கும் பின்னால் அவர்களின் சீடர்களில் பொறுக்கி எடுத்த பனிரண்டு பேர் நின்றனர். அனைவருமே மல்யுத்த உடையில் இருந்தாலும், அரசவையின் முக்கிய மல்லர்களான சாணுரனும், முஷ்திகனும் பட்டுச் சால்வைகளைப் போர்த்திக் கொண்டதில் தனித்துத் தெரிந்தனர்.

சாணுரன் பஹு யுத்தம் என்னும் கைகளை மட்டுமே பயன்படுத்திப் போடும் மல் யுத்தத்தில் தேர்ந்தவனும் கூட. ஆயுதங்களைப் பயன்படுத்திப் போர் செய்யும் வித்தையும் இடம் பெற்றிருந்தது. சாதாரண மனிதர்கள் தடி, கம்பு, அரிவாள், சிலம்பம் போன்றவற்றாலும், கொஞ்சம் அதிக அந்தஸ்து பெற்ற வீரர்கள் அவரவரின் தகுதிக்கு ஏற்ற ஆயுதங்களையும் பயன்படுத்திப் போர் செய்யவேண்டும் என்பது பொதுவான விதியாக இருந்தது. வீர விளையாட்டு ஆரம்பித்தது. கோடலி கொண்டு தாக்குவதும், வில் வித்தையும் மிகவும் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்றும் அதில் தேர்ந்த வீரர் மட்டுமே பங்கெடுக்கவேண்டும் என்றும் அறிவிக்கப் பட்டது. வீரர்கள் வரிசையாக நின்றனர். எதிர்பக்கங்களில் அவர்களை எதிர்ப்பவர்கள் எந்த எந்தப் போட்டிக்கு எனத் தேர்ந்தெடுக்கப் பட்டனரோ அந்தப் போட்டிகளுக்கு உரிய தங்கள் போட்டியாளருக்கு முன் நின்றனர். சங்குகள் முழங்கியவை நிறுத்தப்பட்டன், பேரிகைகள் நின்றன. எக்காளங்கள் அமைதியாயின. சட்டென்று சூழ்நிலையே அமைதியாக மாறியது.

அப்போது ஒரு குரல், “ம்ம்ம்ம் ஆரம்பிக்கட்டும், “ என்று சொல்ல வீரர்கள் ஒரு பெரிய கூச்சலுடன் “ஜெய விஜயீ பவ” எனக் கூவிக் கொண்டு தங்கள் தங்கள் போட்டியாளரிடம் பாய்ந்தனர். சற்று நேரம் யாருக்கும் எதுவும் புரியவில்லை. சில நிமிடங்களில் போட்டியாளர்களில் சிலர் போட்டியில் இருந்து விலகிக் கொள்ள, மற்றவர்களுடன் போட்டியிடச் சிலர் முன் வந்தனர். மல்யுத்தக்காரர்கள் தங்கள் திறமையை எல்லாம் காட்டி மல்யுத்தம் செய்தனர். அந்த அரங்கிலேயே அதிகக் கூட்டமும் இருந்தது. மக்கள் கூட்டம் ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு வீரரைப் பாராட்டி அவர்கள் பக்கம் கூவிக் கொண்டு மற்றவரைத் தூண்டி விட்டது. சாணுரன், முஷ்திகன், தோஷாலா ஆகியவர்களின் சீடர்களால் பல மல்யுத்த வீரர்கள் தோற்கடிக்கப் பட்டனர். வென்றவர்கள் ஒரு பக்கமும், தோற்றவர்கள் மறுபக்கமும் நின்றனர். சாணுரனும், முஷ்திகனும், தோஷாலாவும் தங்கள் சீடர்கள் இருவர் பின் தொடர அந்த மாபெரும் அரங்கைச் சுற்றி வந்தனர். பெருமை முகத்தில் பொங்க, கர்வம் கொப்பளிக்கச் சாணுரன் ஒவ்வொருவராய்ப் பார்த்து வந்தான். சிலரை விளையாட்டாய் வம்புக்கு இழுத்து மல்யுத்தம் செய்ய வருகிறீர்களா எனக் கேட்டான். இப்படியே விளையாட்டாய்க் கேட்பது போல் அரங்கைச் சுற்றிய சாணுரன், கிராம மக்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு வந்ததும், அங்கேயும் கேட்க எண்ணியவன் போல் நின்றான். அவன் பார்வை தற்செயலாய்ப் படுவது போலவே கண்ணன் மேலும், பலராமன் மேலும் பட்டது. அன்று காலையில் தான் அரண்மனைச் சாயத் தொழிலாளியின் கடையில் இருந்து வாங்கப் பட்ட விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு அமர்ந்திருந்தனர் கிருஷ்ணனும், பலராமனும். அவர்களைப் பார்த்துக் கொண்டே எதுவுமே தெரியாத மாதிரி நந்தன் பக்கம் திரும்பி, “நந்தராஜரே, இந்தப் பையன்கள் யார்? உம்முடைய பையன்களா?” என்று கேட்டான். மேலும் தொடர்ந்து, “இவர்களைப் பார்த்தால் அரசிளங்குமரர்கள் போல் இருக்கின்றனரே? இவர்களை ஏன் என்னுடனோ அல்லது மற்ற வீர விளையாட்டுகள் எதிலோ பங்கெடுக்க வைக்கக் கூடாது?” என்றும் கேட்டான்

நந்தனுக்கு உடல் நடுங்கியது.

2 comments:

  1. ஆகா..ஆட்டம் ஆரம்பிச்சிடுச்சி ;)

    ReplyDelete
  2. அதெல்லாம் சரி... குவலயாபீடத்துக்கு பதில் சொல்லுங்க!

    ReplyDelete