எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, February 17, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

சாந்தீபனியின் துக்கம்!

கடலையே அதுவரை கண்டிராத கண்ணனுக்கும், அவன் சகோதரர்களுக்கும் இவ்வளவு பெரிய மேலைக்கடலைக் கண்டதும், ஆச்சரியமும், உற்சாகமும் பெருக்கெடுத்தது. கண்ணன் கடலின் நுட்பங்களையும், அதன் அலைகளையும், அவற்றின் வேகத்தையும், சீற்றத்தையும், அமைதியாய் இருப்பதுபோல் தெரிந்தாலும் உள்ளுக்குள் கொந்தளிப்பதையும் கண்டு ஆச்சரியப் பட்டான். மேலும் அந்தக் கடலில் படகை அவனே விட்டுக்கொண்டு போகவும் ஆசைப்பட்டான். ஆசானின் அநுமதியோடு படகைச் செலுத்தியும் பார்த்தான். குரு சாந்தீபனி அடிக்கடி அங்கே வருபவர் ஆதலால் அந்தப் பக்கத்து மக்களுக்கு நன்கு பரிச்சயமானவராக இருந்தார். அனைவரும் மிகவும் மரியாதையுடனும், பக்தியுடனும் அவரை வணங்கினார்கள். சொல்லப் போனால் அவர் வரவை எதிர்பார்த்துக்காத்திருந்ததாகவே தெரிந்தது. சாந்தீபனியின் குருகுலத்து மக்களுக்கு பிரபாஸ க்ஷேத்திரத்தை நெருங்கியதும், அங்கே அப்போது ஆண்டுவந்த மன்னனால் சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது. செளராஷ்டிரம் என அழைக்கப் பட்ட அந்தப் பகுதியிலும் ஆரியர்கள் நெருக்கமாக வாழ்ந்து வந்தனர். ஆகவே அனைவருக்குமே இந்த குருகுலத்தின் வரவு தேவையாகவும், மகிழ்வாகவும் இருந்தது. ஏதோ திருவிழா போல் மக்கள் மனமகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டாடினார்கள்.

அங்கே இறங்கி தாற்காலிகமாய் குருகுலத்தை ஏற்படுத்திக் கொண்ட சாந்தீபனி தனக்கென ஒரு ஆசிரமத்தையும் அமைத்துக்கொண்டார். தன்னுடைய முதன்மையான சீடன் ஆன ஸ்வேதகேதுவின் மூலம் குருகுலத்துக்குக் கற்க வரும் அனைவருக்கும் அவரவருக்கு என்ன தேவையோ அதற்கேற்றாற்போல் கற்பிக்க ஆரம்பித்தார். தேர்ந்தெடுத்த சில திறமை வாய்ந்த சீடர்கள் அக்கம்பக்கம் உள்ள ஊர்களுக்குச் சென்று அங்கே இருந்த மக்களுக்கும் பாடங்களையும், தர்ம சாஸ்திரங்களையும் கற்பிக்க ஆரம்பித்தனர். அரசனாகட்டும், குருவாகட்டும், வருவார்கள், போவார்கள். ஆனால் நிலைத்து நிற்பது என்றென்றும் தர்மம் மட்டுமே. ஆகவே ஆரியர்கள் என்றாலே தர்மத்தைக் காப்பவர்கள் என்றே சொல்லப் பட்டது. அதனால் அவரவர்களுக்குரிய தர்மத்தைப் பாதுகாக்கவே அனைவரும் முயன்று வந்தனர். ஆரியர்களைத் தவிரவும் வேறு ஒரு இனத்து மக்களும் அங்கே வசித்து வந்தனர். அவர்கள் நாகரீகத்தில் முன்னேறியவர்களாக இருந்தனர். தெருக்கள் அழகாகவும், ஒழுங்காகவும், வீடுகள் வரிசையாகவும் இருந்தன. அவர்களுக்கு மஹாதேவன் ஆகிய சிவபெருமானே கடவுளாக இருந்தான். ஆனால் லிங்க வழிபாடு செய்யாமல் சிவனின் உருவத்தை யோகமுறையில் அமைத்து வழிபட்டு வந்தனர். கப்பல் கட்டும் கலையிலும் சிறந்து விளங்கினார்கள். சொந்தமாய்க் கப்பல்கள் வைத்து வாணிபம் செய்தவரும் பலர் இருந்தனர். அவர்களின் மொழி தனியாக, வேறாக இருந்தாலும் ஆரியர்கள் பேசும் பெருவாரியான மொழியையும் பலரும் அறிந்து வைத்திருந்தனர். வேதங்களையும், சாஸ்திரங்களையும் பற்றிய தெளிந்த அறிவும் இருந்தது. சாந்தீபனியின் குருகுலம் கடற்கரையில் சூரியனின் கோயிலுக்கு அருகே அமைந்திருந்தது. வழக்கம்போல் இங்கேயும் தினமும் காலையும், மாலையும் குளித்தல், அன்றாட அநுஷ்டானங்கள் செய்தல், யக்ஞம் செய்தல் எனப் பலவேலைகளையும் செய்து வந்தாலும் இந்தக் கடற்கரைக்கு வந்தது முதலே குரு சாந்தீபனி ஏதோ இனம் தெரியாத தவிப்பில் இருந்து வந்தார். ஒவ்வொரு முறை கடலுக்குக் குளிக்கப் போகும்போதெல்லாம் கடலையே பார்த்துக்கொண்டு பெருமூச்சுக்களை விட்டுக் கொண்டு, கண்களில் வரும் கண்ணீரை மறைக்கப் பிரயத்தனப் பட்டுக்கொண்டு கடலில் அவசரம் அவசரமாக முழுகுவார்.

அவருக்குச் சென்ற வருடம் இங்கே கற்பிக்க வந்ததும், தன் ஒரே மகன் புநர்தத்தனை, பாஞ்சஜனா என்பவனால் அவனுடன் கப்பலில் அந்தக் கடற்கரைக்கு வியாபாரத்திற்கு வந்த புண்யாஜன இனத்தைச் சேர்ந்த பொல்லாத ராக்ஷசர்கள் கடத்திக்கொண்டு சென்றுவிட்டதும், அதன்பிறகு எப்படி எப்படியெல்லாமோ தேடியும் தன் மகன் திரும்பக் கிடைக்காததும் நினைவில் மோதியது. மகனைப் பற்றிய நினைவுகளிலே மூழ்கிப் போய்த் துன்பம் அநுபவித்துக்கொண்டிருந்த அவரால் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது கஷ்டமாய் இருந்தது. திடீர் திடீரென நடு இரவில் கடற்கரைக்குத் தன்னந்தனியே வந்து கடலைப் பார்த்துக்கொண்டே, தூரத்தில் தெரியும் அடிவானத்தில் தன் பிள்ளை இருக்கிறானா எனத் தேடுபவர் போல் பார்த்துக்கொண்டே நிற்பார். கண்களோ மழையாக வர்ஷிக்கும்.

இதை அங்கு வந்ததில் இருந்தே பார்த்துக்கொண்டிருந்த கண்ணன் ஒரு நாள் இரவு அவர் அம்மாதிரிப் போய் நிற்கும்போது கூடவே தானும் சென்றான். மெல்ல மெல்ல குருவின் அருகே போனான். அவன் வந்ததை உனர்ந்தார் சாந்தீபனி. தன் கண்களைத் துடைத்துக்கொண்டார். ஏற்கெனவே மற்ற மாணாக்கர்கள் மூலம் குருவின்மகன் புநர்தத்தன் கடத்திச் செல்லப் பட்டதை அறிந்திருந்தாலும் கண்ணன் அவரிடம் எதுவும் பேசவில்லை. சாந்தீபனி கண்ணனைப் பார்த்து, “குழந்தாய்! மகனே! இந்த வேளையில் இங்கே எதற்கு வந்தாய்?” என வினவினார். “குருவே, வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன். உங்கள் துயரம் என்னவென்று எனக்கு நன்கு புரிகிறது. என்னால் எதுவும் செய்யமுடியுமா என யோசிக்கிறேன். உங்கள் அனைத்து மாணாக்கரிலும் நான் உங்களுக்கு மிக அருமையானவன் எனச் சொல்லி இருக்கின்றீர்கள். நானும் உங்களை என் தந்தையை விட மேலாகவே கருதி வருகிறேன். நான் ஏதானும் செய்து உங்கள் துயரத்தைப் போக்கமுடியுமா? தயவு செய்து கட்டளையிடுங்கள் குருவே!” என்றான் கண்ணன்.

“என் குழந்தாய்?? உன்னால் என்ன செய்யமுடியும்?? ராக்ஷசர்களின் பிடியில் அகப்பட்டுவிட்ட என் மகனை மீட்டுக் கொண்டுவர எவரால் இயலும்? யாராலும் என்னைச் சந்தோஷப் படுத்த முடியாது. உனக்கு இது இப்போது புரியாது கிருஷ்ணா! நீயும் ஒரு மகனுக்குத் தந்தையாகி, அந்த மகனே உலகம் என வாழும்போது இம்மாதிரி ஒரு கொடூர ராக்ஷசர்கள் கையில் அவன் அகப்பட்டு மறைந்து போகும்போது புரிந்துகொள்வாய். ஒரு மகனிடம் தந்தை என்பவன் தன்னையே பார்க்கிறான். வருங்காலம் என்பது அவன் தான் எனத் தெரிகிறது அவனுக்கு. வாழ்க்கையில் ஒரு தந்தைக்கு மகன் என்பவன் பெரும் ஊன்றுகோலாக விளங்குகிறான். இறப்பிலோ “புத்” என்னும் நரகத்திற்குச் செல்வதில் இருந்து காப்பாற்றுகிறான். ஒரு தந்தைக்கு மகனை இழப்பது என்பது அவன் வாழ்க்கையையே இழப்பதற்குச் சமானம். ஒரு மகனின் இடத்தை வேறு எவராலும் பூர்த்தி செய்யவும் முடியாது.”

சாந்தீபனி சொன்னதை எல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டான் கிருஷ்ணன். பின்னர் தான் ஆசாரியர் ஸ்வேதகேதுவிடம் பாஞ்சஜனாவுடன் கப்பலில் வந்த ராக்ஷசர்கள் எப்படிப் புநர்தத்தனைக் கடத்தினார்கள் என்பதைக் கேட்டறிந்ததாகவும், அவனை மீட்க எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லையா என்றும் கேட்டான். சோகத்துடன் இல்லை எனத் தலையாட்டிய குரு, திடீரெனத் தொடுவானத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கே ஒரு சிறு கரும்புள்ளி தென்பட்டது. வர வரப் பெரிதாகிக் கொண்டு வந்தது. அதுதான் அந்தக் கப்பல் என்றும், மீண்டும் இங்கே வருவதாகவும் கூறினார். இந்தப் பாஞ்சஜனா என்பவன் புண்யாஜனா என்னும் ஆதிவாசிகளைச் சேர்ந்தவன் என்றும், சில வருடங்கள் முன்பு அவர்கள் குஷஸ்தலையைப் பிடித்து வைத்திருப்பதாகவும் கூறினார். (குஷஸ்தலை தான் இப்போதைய துவாரகை.) குஷஸ்தலையின் அரசனான குக்குடுமின் என்பவன் நாடோடியாக ஊருக்கு ஊர் அலைந்து திரிந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். இந்தப் புண்யாஜனா ராக்ஷசர்கள் ஒவ்வொரு வருடமும் இம்மாதிரி இந்த மாதங்களிலேயே இங்கே வியாபாரம் என்ற போர்வையில் வருவதாகவும், ஒவ்வொரு வருடமும் வணிகம் முடிந்ததும் எங்கே திரும்பிச் செல்கிறான் என்பது புரியாமல் மர்மமாக இருப்பதாகவும் கூறினார். ஒருவேளை அது படாலாவாக இருக்கலாம் என்றும் கூறினார். (பாகிஸ்தானில் இருக்கும் இப்போதைய ஹைதராபாத், சிந்து பிரதேசங்கள். )

சென்ற வருடமும் அப்படித் தான் அவர்கள் வணிகம் செய்ய இங்கே வந்ததாகவும், அப்போது ஒருநாள் புநர்தத்தன் கடலில் குளிப்பதற்காகக் கடலுக்குச் சென்றான் என்றும் சொன்ன குரு, புநர்தத்தன் கிருஷ்ணனை விட வயதில் பெரியவன், மிகவும் புத்திசாலை, வீரன் என்றெல்லாம் பெருமை பொங்கச் சொன்னார். எனக்குப் பின்னர் என்னுடைய குருகுலத்தை நடத்துவதற்கு அவனே சிறந்தவன் என எண்ணி இருந்தேன் என்றும் கூறிப் பெருமூச்செறிந்தார்.

5 comments:

  1. intha kathai naan kelvi pattadhu illaye

    ReplyDelete
  2. புதிய விஷயங்கள். நல்ல பதிவு. தொடருங்கள்.

    அன்புடன்
    ராம்

    www.hayyram.blogspot.com

    ReplyDelete
  3. வாங்க எல்கே, தெரியாதா??? ஆச்சரியமாத் தான் இருக்கு. படிங்க. :))))))

    ReplyDelete
  4. வாங்க ராம்குமார், முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. உங்க பதிவுகளை எல்லாம் தமிழ் ஹிந்துவிலே படிப்பேன்.

    ReplyDelete
  5. நன்றி கீதா சாம்பசிவம் அவர்களே

    ReplyDelete