எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, January 31, 2010

ஆண்டவன் அருளால் நலமே! நன்றி!

கவலையோடு விசாரித்த அனைவருக்கும் நன்றி. தற்சமயம் பிசியோதெரபி எடுத்துக்கொண்டு வருகிறார். ஓரளவு வலி குறைந்துள்ளது. என்றாலும் இன்னும் குறையவேண்டும். வெயிட் தூக்குவதற்கெல்லாம் யோசிக்க வேண்டி இருக்கிறது. அனைவரின் அன்பும், அக்கறையும் மனம் நெகிழ வைக்கிறது. ஆனாலும் இது பற்றி முதலில் எழுத வேண்டாம்னு நினைச்சுட்டு அப்புறமா எழுதக் காரணம் இருக்கிறது. அந்தக் காரணம் இதோ!
***************************************************************************************

நம் நாட்டின் மன்னர்கள் கோயிலைப் பிரம்மாண்டமாகக் கட்டியதோடு அல்லாமல் அவற்றின் தளங்களைக் கல்லில் அமைத்துள்ளனர். கற்களே கிடைக்காத அதுவும் மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டக் கோயில்கள் கூட கற்றளிகளாகவே மாற்றப் பட்டன பிற்காலச் சோழர் காலத்தில். இந்தக் கல் தரை நம் நாட்டு சீதோஷ்ணத்துக்கு உகந்தது என்பதோடு நடக்கவும் வசதியாக இருக்கும். கோயில் என்றால் பலரும் வருவார்கள். அந்நாட்களில் வெளியே தங்க இடமில்லாதவர்கள், தங்க முடியாதவர்கள் கோயிலில் கிடைக்கும் பிரசாதங்களை உண்டுவிட்டு அங்கேயே மண்டபங்களில் தங்குவார்கள். அதன் பொருட்டே விசாலமான மண்டபங்கள், சுற்றிலும் நடைமேடைகள், பெரிய பெரிய திண்ணைகள் எனக் கட்டப் பட்டது. நாளாவட்டத்தில் பெரிய கோயில்களில் சுற்றிலும் உள்ள மண்டபங்கள் வணிக வளாகங்களாக மாற, சிறிய கோயில்களில் வேறுவிதமான மாற்றங்கள். நல்லவேளையாக உள் பிராஹாரங்களுக்கு எதுவும் வரவில்லை.

ஆனால் திருப்பணி என்ற பெயரில் அந்த அழகான கல்தளங்களைப் பெயரத்து எடுத்துவிட்டு தற்காலங்களில், அதுவும் கடந்த பத்து வருடங்களாக வழவழவென்றிருக்கும் கிரானைட் பதிக்கின்றனர். இது எந்த அளவுக்குப் பாதுகாப்பு என்று தெரியவில்லை, புரியவில்லை. மேலும் அந்தக் கல் தளங்களில் பல புராதனமான கோயில்களிலும் பல்வேறு விதமான கல்வெட்டுக்கள், எழுத்துக்கள் காணப்படும். கோயில் கட்டிய காலத்தைச் சொல்வதோடு, அந்தக் கால மக்களின் திருப்பணிகள் பற்றிய விபரங்கள், பல்வேறு சரித்திரச் சான்றுகள் எனக் கிடைத்து வருகின்றன. மேலும் கோயிலுக்கு வரும் நபர்கள் அங்கே நடக்கும், நடத்தி வைக்கும் அபிஷேஹ ஆராதனைகள் மூலமும், விளக்குகள் போடுவதிலும் எண்ணெய் ஆங்காங்கே சிந்தி இருக்கும். அதில் இருந்தெல்லாம் வழுக்காமல் இருக்கவேண்டுமென்றால் கல் தளமே சரியாக இருக்கும்.

எட்டுக்குடி கோயிலில் உள்ளே மூலவரைப் பார்க்கப் போகும் இடத்திலேயே இரண்டு பக்கமும் கம்பிக்கிராதி கட்டித் தடுப்பு அமைத்துள்ள மேடையில் இரு பக்கங்களும் சறுக்கு மேடை மாதிரி சரிவாக அமைத்திருக்கின்றனர். மேடை ஒரு அடிக்கு மேல் உயரம். அந்த ஒரு அடிக்கும் சறுக்கு மேடை அமைத்திருப்பது, எல்லாருக்கும் சட்டெனத் தெரியறாப்போல் இல்லை. அதிலேயே என் கணவருக்கு முதலில் தடுக்கி விட்டது. என்றாலும் சமாளித்துக்கொண்டார். தரிசனம் முடித்துத் திரும்பி வருகையில் சனைசரருக்கு விளக்குப் போட என்று மேலே ஏறியதில் இந்த மாதிரி ஆகிவிட்டது. விழுந்த இடத்துக்கு எதிரே பீடம் வேறே. என்னை மாதிரி உயரம் குறைந்த ஆட்கள் என்றால் கட்டாயமாய் மண்டை உடைந்திருக்கும். அவர் உயரமாக இருந்தது ஒரு வசதியாகப் போய்விட்டது. சாய்ந்தாற்போல் விழுந்தாரோ பிழைத்தார். இல்லாட்டி கம்பிக்கிராதியில் மண்டை குத்தி இருக்கணும். தேவஸ்தானத்து அலுவலக ஊழியர் ஓடி வந்தார். அவரிடம் இப்படிச் செய்துட்டீங்களேனு சொல்லிட்டேன். அநேகமாய் இப்போது அனைத்துக்கோயில்களிலும் இம்மாதிரியான ஒரு ஏற்பாடு செய்யப் பட்டு வருகிறது. இது சற்றும் பாதுகாப்பானது அல்ல.

இதுவே ஒரு குழந்தையோ அல்லது கர்ப்பிணிப்பெண்ணோ விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? கோயில் பலதரப்பட்டவர்களும் வந்து போகவேண்டிய இடம். அதிலும் நவகிரஹ சந்நிதி, சனைசரர் சந்நிதி அனைவரும் செல்லக் கூடிய இடம். அங்கே இப்படி வழவழவென்ற கிரானைட் போட்டு வைத்திருந்தால் நிச்சயமாய் ஆபத்துத்தான். அறநிலையத் துறை உடனே விரைந்து கவனிக்கவேண்டிய ஒரு விஷயம் இது. கிரானைட் என்றால் பராமரிப்புக்கு வசதி என்ற காரணம் சொல்லப் படுகிறது. கல்தளம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய்ப் பராமரிக்கப் பட்டுத் தானே வருகிறது? அதில் என்ன குறைந்துவிட்டது?? கட்டாயமாய் இது கண்டனத்துக்கு உள்ளாகும் ஒரு விஷயமே ஆகும். குறைந்த பட்சம் இனிமேல் திருப்பணிகள் நடக்கும், நடத்தப் போகும் கோயில்களிலாவது கல் தளங்களை மாற்றாமல் திருப்பணிகளைச் செய்து வரவேண்டும் என்பதே எங்கள் தாழ்மையான வேண்டுகோள். இதே போல் எங்கள் ஊரான கருவிலியிலும் உள்ள சிவன் கோயிலுக்குக் கல்தளத்திலிருந்து கிரானைட் தளம் மாற்றியதில் இந்த வருஷம் நவம்பரில் மழை பெய்யும்போது போய்விட்டு 86 வயதான என் மாமியாரைக் கூட்டிச் செல்ல மிகவும் சிரமப் பட்டுவிட்டோம்.

கிராமங்களின் கோயில்களுக்கு வெளி ஊர், வெளிநாடு என்றெல்லாம் அந்த அந்தக் கிராமத்து மக்கள் பல வயதில் உள்ளவர்களும் வந்து போவார்கள். அனைவருக்கும் கல் தளமே வசதி, பாதுகாப்பும். கோயிலின் பழைய தன்மையும் மாறாமல் இருக்கும். அல்லது பிடிவாதமாய் நாங்கள் கிரானைட் தான் போடுவோம் என்றால் கல் தளம் போன்றே கிரானைட்டிலும் வந்திருக்கிறது. குறைந்த பட்சம் அதுவானும் போடலாம். வழுக்கி விழுந்து ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகாமலாவது இருக்கும். :((((((((((((((

15 comments:

  1. இப்போது தான் படித்தேன்..;(

    கவனமாக இருங்கள் !

    ReplyDelete
  2. நல்ல படி சரியாகணும் நு மனதார வேண்டிக்கறேன். நல்ல வேளை தலையில் அடிபடலை. இந்ததடவை எல்ல கோவிலிலும் மழை வேறா, வழுக்கத்தான் செய்தது. காமாக்ஷி கோவிலில் அபிஷேக தண்ணி எல்லாம் வெளீல ஒரே குங்குமமும் எண்ணை பிசுக்குமா ஒரே வழுக்கு தான். ஸ்டெப்ஸ்லேந்து இறங்கி சன்னிதிக்கு போறதுத்துக்குள ரொம்ப கஷ்டமாதான் இருந்தது

    ReplyDelete
  3. ///கிரானைட் என்றால் பராமரிப்புக்கு வசதி என்ற காரணம் சொல்லப் படுகிறது.//

    பராமரிப்பு அல்ல காரணம். கோவில் கட்டுவதற்கு அரசாங்கத்தில் இருந்து கொடுக்கப்படும் பணம் மிக மிக குறைவு. அதை வாங்க செய்ய வேண்டிய செலவோ மிக அதிகம். இதில் கல் தளம் போடுவது என்பது நடக்காத காரியம். . காரணம் கல் தளம் அமைத்து அதை நடபத்ர்கு ஏற்றவாறு சரி செய்ய செலவு அதிகம் ஆகும். ஆனால் கிரானைட் போடாமல் சிமெண்ட் தளம் போடலாம் . ( சேலம் ஹரிஹர தேவாலயம் கட்டும் பொழுது எனக்கும் என் தகப்பனாற்கும் ஏற்பட்ட அனுபவத்தில் இதை கூறுகிறேன் .

    இப்பொழுது உங்கள் கணவர் நலமாக இருப்பார் என்று எண்ணுகிறேன் ... அவர் நலமடைய என்னுடைய பிரார்த்தனைகள்

    ReplyDelete
  4. கோபி நன்றிப்பா.

    ReplyDelete
  5. ஜெயஸ்ரீ, தொலைபேசி அழைப்புக்கும், விசாரிப்புக்கும் நன்றிம்மா. அனைவரின் பிரார்த்தனைகளே காப்பாற்றி வருகிறது என்பதில் சந்தேகமே இல்லை.

    ReplyDelete
  6. எல்கே, நான் சொல்லுவது பாரம்பரியம் மிக்கப் புராதனக் கோயில்களின் கல் தளங்களை அப்புறப்படுத்துவது பற்றியே. அதே கல் தளங்களை மீண்டும் பதிக்கலாமே என்பதே என்னுடைய கருத்து. கல் தளம் பதிக்கப் பட்ட கோயில்கள் அனைத்துமே ஆயிரம், ஐநூறு வருடங்கள் பழமை வாய்ந்தவை. ஓரளவு சொத்துக்கள் உள்ள கோயில்களே. அறநிலையத் துறை இதைக் கவனிக்க வேண்டும். அல்லது வடநாட்டில் இருப்பது போல் சலவைக்கல் பதித்துக் கீழே விழாமல் இருக்க அதற்கென உள்ள முட்கள் போன்ற குமிழ்கள் பொருத்தவேண்டும்.

    ReplyDelete
  7. உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி எல்கே.

    ReplyDelete
  8. //ஓரளவு சொத்துக்கள் உள்ள கோயில்களே.//
    ஆனாலும் அரசாங்கம் அனுமதி இன்றி செய்ய இயலாது...
    //அதே கல் தளங்களை மீண்டும் பதிக்கலாமே//

    ஒத்து கொள்கிறேன்... இதை பற்றி நன் ஒரு பதிப்பில் எழுதுகிறேன்

    ReplyDelete
  9. நமஸ்தே கீதாம்மா
    தங்கள் கணவரின் உடல் நலம் பூரண குணம் பெற எம்பிரான் சிவனருள் வேண்டுகிறேன்.
    அஷ்வின்ஜி

    ReplyDelete
  10. நலமடைய வேண்டுகிறேன். இடத்திற்கும் புழக்கத்திற்கும் ஏற்றாற்போல தரை போடவேண்டாமா?முந்தின பதிவின் முடிவு கவலைப்படுத்தியது.

    ReplyDelete
  11. நன்றி தமிழ்நதி, முதல் வரவுக்கும், தங்கள் அன்பான விசாரிப்புக்கும் நன்றி. தற்சமயம் கொஞ்சம் பரவாயில்லை. வலி குறைந்து வருகிறது.

    ReplyDelete
  12. இரண்டு இடுகைகளையும் படித்தேன் கீதாம்மா. மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஐயா விரைவில் முழு நலம் பெற வேண்டுகிறேன்.

    ReplyDelete
  13. சாம்பசிவம் சார் விரைவில் பூரண நலம்பெற என் பிரார்த்தனைகளும்.

    கற்தளங்கள் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் விஷயம் அரசும் கோவில் நிர்வாகங்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

    ReplyDelete
  14. வாங்க குமரன், ரொம்ப நாட்களுக்குப் பின் வந்திருக்கீங்க. நன்றிப்பா, அன்பான விசாரணைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி.

    ReplyDelete
  15. ரா.ல. நாம பழசை எல்லாம் ஒதுக்கறது, அதுவும் பழமையான கட்டிடங்களை மாற்றி அமைப்பதன் மூலம் நம் முன்னோர்களின் ஒப்பற்ற கட்டடக் கலையைப் பற்றி வருங்காலம் தெரிந்துகொள்ள முடியாமல் செய்கிறோம்னு நினைச்சால் வருத்தம் அதிகமாகிறது.

    நன்றிம்மா, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளுக்கும்.

    ReplyDelete