எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, March 26, 2010

நடராஜா, நடராஜா, நர்த்தனசுந்தர நடராஜா!


ஆடும் கோலத்தி்ல் நடராஜர் சிலையைப் பார்க்கும் அனுபவமே தனி. அளக்கமுடியாத அண்டங்கள் வளத்துடன் திகழும் அண்டங்களைச் சிவனோடு ஒப்பிட்டுப் பார்த்தால், ஆஹா, முழுமையாக சிவ வடிவை, அதுவும் சிவ நடராஜ வடிவை, ஆநந்த தாண்டவம் ஆடும் வடிவைப் பார்த்தால்!!! அதிகாலையில் வீட்டில் நுழையும் சூரியக் கதிர்களில் காணப்படும் அணுத்துகள் களைப் போல் சிறியவன் என எண்ணமுடியுமா?? சூரியோதயத்தில் மலரும் தாமரை எப்படி முழுமையாக சூரியனைக் கண்டதும் மலருகிறதோ, அந்த மலர்ச்சியைப் போலவும், இவ்வுலகைப் படைத்துக் காத்து, ரட்சித்து, சம்ஹாரம் செய்யும் ஒவ்வொரு செயலையும், இவ்வுலக வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் சூக்ஷ்மமாகவும், தூலமாகவும், புயலில் அகப்பட்ட சிறு துரும்பு போலவும் எவ்வாறு அநுபவித்துச் செயல் படுகிறானோ அவ்வாறு நினைக்கலாமா? நமக்கு அவன் இருப்பு மலைகளில் உற்பத்தி ஆகி, மேடு, பள்ளங்களில் வேகமாய் இறங்கி தடையில்லாமல் ஓடி வரும் நீரோட்டத்தில் தெரிய வருகிறது. இந்தக் கிழக்கு நாடுகளின் அதிலும் நம் திராவிடக் கலையின் சிற்பிகள் வடித்த அதி அற்புத உந்நதக் கலைச் செல்வம் இது என்றே சொல்லலாம்.

மனிதனின் தெய்வீகத் தன்மை எப்போது தெரிய வருகிறது?? நாம் நம்முடைய படைப்பின் ரகசியத்தைப் புரிந்து கொள்வதாலோ, அதன் அருகாமையில் இருப்பதாலோ அல்ல, ஏனெனில் ஒவ்வொரு பிறவியிலும் நம்முடைய உருவ அமைப்பு மாறுவதில்லை, பின் எவ்வாறெனில் இவ்வுயிர்களைக் கட்டும் பாசப் பிணைப்பை அறுத்து அவற்றிலிருந்து விடுபடக் கூடிய வீடுபேறு அடைய வேண்டிய உயர்ந்த பக்குவத்தை உயிர்களிடத்தில் உண்டாக்குகிறான். எல்லையற்றுப் பரந்து விரிந்திருக்கும் ஆகாயத்திலும் அண்டங்களிலும் நம்மைச் சுற்றிச் சுழற்றிக் கடைசியில் நாம் மோட்சம் அடைகிறோம். அத்தகைய ஆநந்தத்தை நாம் நம்மிடையே எப்போதும் வைத்திருக்கிறோமா?? இல்லையெனில் இழந்துவிட்டோமோ? ஆம், இது போன்ற சிற்ப அற்புதங்களைப் பார்ப்பதோடல்லாமல் அதன் உந்நத தத்துவங்களைப் புரிந்து கொள்ளும் உணர்வுகளை இழந்தே விட்டோம்.

இந்த அருமையான சிற்பங்களை இப்போது நாம் ஒவ்வொரு கோணத்திலும், ஒவ்வொரு பார்வையிலும் பார்த்தோமானால், இந்த சிவ வடிவம் ஒரு அழகான பிறைச் சந்திரனை ஒத்திருக்கிறது. என்ன ஒரு பெரும்பேறு? எவ்வளவு பெருமைப்படதக்க வடிவான உடலமைப்பு! இன்று இந்த மறக்கமுடியா அழகுடன் கூடிய இந்த வடிவத்தை உலோகச் சிலையாகப் பார்க்கிறோம். கருமேகத்தில் பளீரென ஒளிவிடும் அழகிய மின்னல் போன்ற ஒளியைக் கொண்டிருக்கிறது. பார்த்தால் சிலைதான், அசைவில்லைதான், ஆனால் ஒளியால் குளிப்பாட்டப் பட்ட அந்தச் சிற்பம், எந்த நேரம் உயிர் பெற்று அசைந்து ஆடத் தொடங்குமோ என எண்ண வைக்கிறது! இதோ இந்த ஒளி சற்று நகர்ந்தாலும் போதும், அசைந்து அசைந்து ஆடத் தொடங்கிவிடுமோ?? நம்மை ஆட்டுவிக்கும் அந்த ஆட்டம் இடைவிடாமல் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது என்பதை உணர்த்துகிறதோ.!

வெகுநாட்களாக, ஏன் பல்லாண்டுகளாக இருந்த இருட்டில் இருந்து விலகி,அந்த இருள் என்ற மந்திரச் சொல்லின் வசியம் நீங்கிப் போய், இன்று ஒளியில் குளிப்பாட்டப் பட்டு, அவ்வாறு ஒளி வரும்போது இந்த அற்புத சிற்பத்தின் மேல் தென்படும் நிழல் அந்த சிவநடராஜாவிற்குக் கொஞ்சம் கொஞ்சமாய் ஆடைபோல் போர்த்திப் போர்த்தி விலகுகிறது. நாம் தாயின் கர்ப்பத்திலிருந்து வெளி வருவதைப் போல! எங்கும் நீக்கமற நிறைந்த இந்த ஒழுங்கான வடிவின் அற்புதம்! மூடுபனி போன்ற மெல்லிய திரை போன்ற உடலமைப்பு! மற்றத் தெய்வங்களான பிரமன், மன்மதன், எமன், சந்திரன் போன்றவர்கள் அடையாளங்கள் மாயாமல் சிரம் அறுத்து, எரித்து, உதைத்து, தேய்ந்து போகவைத்து எனப் பல்வகைப் பட்டவாறு இருந்த போதிலும், இந்த சிவநடராஜ வடிவோ, எது எது எப்படி இருக்கவேண்டுமோ அப்படி வடிவமைக்கப் பட்டுள்ளது.

பெரிய மூங்கிலைப்போன்ற தோள்கள் ஆடும்போது எவ்வாறு வேகமாய்ச் சுழலுகிறது, அந்த வேகத்தையும் அதன் காரண, காரியங்களையும் மட்டும் நாம் புரிந்துகொண்டோமானால்,ஆஹா, நமக்குப் பரம்பொருளின் தத்துவமே பூரணமாய்ப் புரிந்துவிடுமல்லவோ? கைகளின் வளைவு, தோள்களின் வளைவு, புஜங்கள் ஏற்படுத்தும் அற்புதமானதொரு எழுச்சி, யானையின் துதிக்கையை நினைவூட்டும் வண்ணம் உருண்டு திரண்ட அந்தத் தோள்கள், அவை சூரியகிரஹணத்தின்போது சூரியனைச் சுற்றி ஏற்படும் மறைந்திருக்கும் சந்திரனின் சிவந்த ஒளிவட்டம்போன்ற காட்சி, நம்மைப் போன்ற சாதாரண மனிதருக்குக் காட்சி தருவது போல் தெரியும் விலா எலும்புகள், அவை சேர்ந்திருக்கும் விதம், தோள்களை அவை தாங்கிப் பிடிக்கும் அமைப்பு, இவற்றை உற்றுக் கவனித்தால், இது சிலையல்ல, எந்நேரம் வேண்டுமானாலும் ஆடத் தயாராய் இருக்கும் மனிதனோ என்னும் தோற்றத்தைத் தருகிறது.

உடுக்கை போன்ற சிறிய இடையோ உறுதியும் பலமும் கொண்டு விளங்குகிறது. தோள்களுக்கு அருகே விசாலமாய் இருக்கும் உடலானது போகப்போகக் குறுகி, இடைக்கு அருகே மிகக் குறுகி, மீண்டும் அகன்று பலம் பொருந்தியும், உறுதியாகவும் காட்சி அளித்து இரு தொடைகளாகக் கீழே இறங்குகிறது. கணக்குடன் செதுக்கப் பட்ட சிலை என்ற உணர்வே தோன்றுவதில்லை. இடுப்புப் பகுதி அந்தப் பருத்த தொடைகளைத் தாங்கும் வல்லமையுடன் அகன்று காணப்பட்டாலும், அவை காட்டும் அற்புதக் கோணங்கள்! ஆஹா, என்ன அற்புதமான, பரிபூரணமான கோணம்! அந்தக் கால்கள் எவ்வளவு மென்மையாகத் தன் பாதங்களைப் பூமியில் பதிக்கும்போது மாறுகின்றன! ஆச்சரியமாய் உள்ளது. அந்த மென்மையாகப் பதிக்கப்படும் பாதங்களிலிருந்தா இத்தனை வேகமான ஆட்டம் ஆடப்படுகிறது? நினைக்க நினைக்க ஆச்சரியமாக இல்லை??

நடராஜரின் சிற்பப் பகுதியின் தலை பாகத்தை ஒரு பக்கமாய்ப் பார்த்தால், ஆட்டத்தின் வேகத்தில் அந்த விரிந்த குழல்கற்றைகள் அலைவதைப் பாருங்கள். அந்த இரு கைகளும், மார்புப் பகுதிக்கும், வயிற்றுக்கும் உள்ள இடைவெளியைப் பிரித்திருப்பதைக் கண்டால், Venus de’ Medici, சிற்பம் நினைவில் மோதுகிறது. ஏனெனில் தன்னில் ஒரு பாதியாக உமையைக் கொண்டவர் அன்றோ? ஆகவே தன் பெண்மையின் அழகை அவ்விதம் மறைத்துக்கொள்கிறாரோ? அந்தக் கிரேக்கத்தின் காதல் தேவதை தன் எழிலை எவ்வாறு தன்னிரு கரங்களால், ஒரு நளினத்தோடு மறைப்பாளோ அதோடு போட்டி போடும் வண்ணம் இந்த சிவநடராஜா தன்னையும் மறைத்துக்கொள்கின்றாரோ? ஒரு நீண்ட நெடிய நிழல் இந்தச் சிற்பத்தின் உடல்பகுதியை இரண்டாகப் பிரித்தவண்ணம் தொடைகள் வரை செல்கிறதே! உடலின் ஒரு பகுதியை நிழல் மறைக்கிறது, மறுபகுதியில் அரை வெளிச்சம்! அந்த இருட்டே அதை ஆடையாய்ப் போர்த்தியது போல் காண்கின்றோம். மொத்தத்தில் இது புனிதத் தன்மையின் ஆழத்தைக் காட்டுகிறது, ஒவ்வொரு அணுவின் இயக்கத்திலும், இயங்காமையிலும், இன்னும் இடைவிடாத, நிற்கவே நிற்காத பரம்பொருளின் இந்த ஆட்டத்தைப் பற்றி வர்ணிக்க ஆரம்பித்தால் அவை வெறும் அலங்காரச் சொற்களாகவே போய்விடும். அந்த நீண்ட, மெல்லிய கால்கள் வேகத்தைத் தவிர வேறு ஒன்றும் அறியாதவையோ?


ஒரு விதத்தில் இது புனிதத்தின் ஆழம், அண்டப் பேரொளியின் காட்சி, சிவனோடு இணைந்த சக்தியின் தரிசனம், ஆனாலும் இவற்றை எல்லாம் சொல்லுவது, இந்த ஆட்டத்தின் வேகத்தையும், லயத்தையும், தாளம் தப்பாமல் ஆடுவதையும் அதனால் உலகமே இயங்கும் இயக்கதையும் நோக்கும்போது வெறும் வார்த்தைகளாகிவிடுகின்றன. அந்த இரு நீண்ட, மெல்லிய, அதே சமயம் உறுதியான கால்களைப் பார்க்கும் போதே அவை ஆடும் ஆட்டத்தின் வேகம் நமக்குப் புரியவருகிறது.
நேருக்கு நேராகக் காணும்போதோ?? ஒரு கை தேர்ந்த சிற்பி வடித்த சிற்பம் என்று மட்டுமே தோன்றும். ஒவ்வொரு விதமான பார்வைகளிலும் மேலே, கீழே, பக்கவாட்டுப்பார்வை என எப்படிப் பார்த்தாலும், அதில் உள்ள இயற்கையான, இயல்பான தனித் தன்மையின் அமைப்பும் தெரிகிறது. என்றாலும் எல்லாவற்றுக்கும் மேல், அனைவராலும் கவனிக்கப் படாத ஒன்றும் உள்ளது. வாழ்க்கையின் மையம் என்ற நம் போன்ற சாதாரண மனிதர்களின் கண்ணுக்குப் புலப்படாத ஒரு ஆழமான புள்ளி தெரிகிறது. மிக மிக எழிலும், நளினமும் கலந்த படைப்பு, அதைவிட அதன் நேர்த்தி கண்ணைக் கவருகிறது. இன்னும் சொல்லலாம். இதை நாம் பரிசுத்தம், புனிதம் என்னலாமா?? மிகவும் சக்தி வாய்ந்ததொரு புனிதம் எனலாமா?? வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத ஒன்று.. ஆஹா, அந்த நிழல்கள் ஒரு மாலைபோல் தோள்களிலிருந்து இடுப்பு வரை வழிகின்றது, இந்த வலப்பக்கக் கோணத்தில் பார்த்தால், அது மிகவும் அருமையாய்ப் புரிய வருகிறது.

மற்றொரு பக்கவாட்டுக் கோணத்தில் பார்த்தோமானால்,

இரண்டு கால்களிலும் விழும் வித்தியாசமான ஒளிக்கோணத்தில், இந்த ஒரு தொடையின் நீண்ட நிழல் மற்றொரு காலின் மீது விழுந்திருக்கும் கோணத்தைப் பார்த்தால்?? அடடா!!!!!! உள்ளார்ந்ததொரு நேர்த்தி இல்லையெனில் இந்த முழுமையும், வளைந்து கொடுக்கிற மிருதுத் தன்மையும் வந்திருக்க முடியாது. இல்லையெனில் அந்த நீண்ட நிழல் கூர்மையாக, நேராகச் சென்றிருக்கும். இந்தக் கால் இங்கே இத்தனை மென்மையுடனும், அழகான வளைவு, நெளிவுகளோடும் காணப்படுவதற்குக் காரணம் இந்த நடராஜா அன்னையைத் தன் உடலின் சரிபாதியாக ஏற்றதாலோ?? இடக்கால் அன்னையினுடையதாயிற்றே??

சிவநடராஜாவின் இந்தச் சிற்பத்தை ஒரு படிப்பறிவற்ற காட்டுமிராண்டியைப்போல் பார்க்கக் கூடாது. அதன் உள்ளார்ந்த தத்துவத்தைப் புரிந்து கொண்டு, அதன் தாத்பரியம் என்ன என்ற எண்ணத்தோடு ஆய்ந்து நோக்கவேண்டும். அறியாமையில் மூழ்கி இருக்கும் மனிதனுக்கு என்ன புரியும்?? எதுவுமில்லை. வெறும் சிலை என்ற உணர்வோடு ஒரு அழகான சிற்பக்கலையை ரசிப்பதிலிருந்து அவன் விலகிவிடுகிறான். நடராஜ தத்துவத்தை ஒருவன் பரிபூரணமாக அறிந்திருப்பதோடு, பூரணமாய் உணர்ந்திருக்கவும் வேண்டும். இந்த நடராஜாவின் அழகைப் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமும் இல்லை. விரிந்த செஞ்சடை, ஆடும் ஆட்டத்தில் அதுவும் சேர்ந்து சுற்றுகிறது. சடை சுற்றும் வேகத்தில் அங்கே குடிகொண்டிருக்கும் கங்கையும் இங்கேயும், அங்கேயுமாய் அலைகிறாள். நீர்த்திவலைகள் தலை வழியே வழிந்து நேரே இடக்கையின் மூலம் பாதத்தை அடைவது கங்கை சிவனை நமஸ்கரிப்பதை ஒத்திருக்கிறது. சிவனின் இந்தத் தலைப்பாகத்தை ஒரு நீண்ட சிந்தனையுடன் கூடிய கண்ணோட்டத்தில் பார்த்தோமானால், அந்த உப்பிய சற்றே வீங்கினாற்போன்ற தோற்றம் கொடுக்கும் அழகிய வாய் எவ்வளவு அற்புதமாகப் புலன்களைத் தாக்கும் உணர்வுகளைக் காட்டுகின்றது என்பது புரியவரும். அந்த அழகான வாயின் அமைப்பும், கண்களும் ஓர் ஒத்திசைவோடு கூடிய இந்திரிய சம்பந்தமான உணர்வுகளை ஒரே சமயத்தில் பிரதிபலிக்கின்றன. அந்த உதடுகளோ எனில் மெய் சிலிர்க்க வைக்கும் நாசித் துவாரங்களை விளிம்பாய்க் கொண்டு அசத்துகின்றன.

அமுதம் உண்டானோ என்னும்படிக்கு வாயினில் உள்ள ஈரம் அலைபோல் அடிக்கின்றது. ஏனெனில் தலையிலே அந்த விரிந்த செஞ்சடையிலே குடி கொண்டிருக்கும் கங்கையானவள் அங்குமிங்கும் அலைந்து தண்ணீரை அப்படி வர்ஷிப்பதால் அந்த வாயும், அதன் நாவும் எந்நேரமும் நீர் நிரம்பி அமுதம் உண்டவனைப் போல் காண்கின்றது. அதுமட்டுமா?? அந்த நாவிலிருந்து கிளம்பும் ஜதிக்கட்டுகளின் வேகத்தால் பாம்பு வேகமாகப் படமெடுத்து ஆடுகிறாற்போல் அசைகின்றது. கண்ணின் இரு கருவிழிகளுமோ எனில் மூடியுள்ள அந்த இமைகளுக்கிடையிலே இவ்வுலகத்தை எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன் என்பதை நிச்சயம் செய்வது போல சூரிய, சந்திரர் போல் பிரகாசிக்கின்றன. கண்களின் ஒளியோ மனதை மயக்கும் ஒளியாக இல்லாமல் மனதை அமைதிப்படுத்தி சாந்தத்தை ஏற்படுத்தும் ஒளியாக உள்ளது. நம்மை இழந்து, நம்மை மறந்து அந்தக் கண்ணொளியில் நாம் ஆழ்ந்துவிடுகிறோம். கண் இமைகள் ஒரு மென்மையான பட்டு ஆடை போல் அந்தக் கண்களை மூடியுள்ளன. தீர்க்கமான நாசி, அளவெடுத்தாற்போல் செதுக்கப் பட்டுள்ளது. தானே தனது ஆட்டத்தில் மயங்கிவிட்டானோ என்னும்படியான பார்வை!



குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்” என அப்பர் பெருமான் சொன்னாற்போல ஒரு குமிண் சிரிப்பு அந்த உதடுகளில் நெளிகின்றது. உதடுகளின் வளைவுகளும், கன்னக் கதுப்புகளும், முகமும், ஏன் மொத்த உடலுமே அந்தப் புன்னகையால் பூத்திருக்கிறது என்றால் மிகையில்லை. இவ்வுலகத்து மர்மங்களை எல்லாம் நான் அறிவேன் என்னும் சிரிப்போ அது?? ஆடற்கலையின் அற்புதத்தைத் தன் கண்ணசைவால், தன் குமிண் சிரிப்பால், தன் கையசைவால் காட்டும் இந்த அதி அற்புத உந்நத வடிவம் , செழுமையான கன்னங்கள், சிரிப்பினால் கன்னத்தில் விளைந்த குழிவு, இடக்கையால் தன் பாதத்தைச் சுட்டும் அமைப்பு, தலையின் கங்கை சிந்த அந்த ஒவ்வொரு நீர்த்துளியிலும் தெரியும் ஆநந்த நடனம்! இந்த ஆநந்தம் எதற்காக? உலகு உய்யவன்றோ! விஷம் உண்டதால் நீலமான மேனி, திருமாலே கண்டத்தில் மாலையாக அமர்ந்தாற்போன்ற தோற்றத்தைத் தருகின்றது. ஆடும் வேகத்தில் அரையில் கட்டிய புலித்தோலின் அசைவு ஒரு புலியே வேகமாய் ஓடி வருவதைப் போன்ற தோற்றமளிக்கின்றது. நீண்ட மெல்லிய கால்கள், வலக்காலை ஊன்றி, இடக்காலைத் தூக்கி இருப்பது, வலக்கால் அண்டத்தின் மையப்புள்ளியில் பதிந்திருப்பதையும், இடக்காலின் சுழற்சியால் அண்டபகிரண்டங்களும் இயங்குவதையும், அந்த இயக்கத்தின் வேகத்தையும் சுட்டுகிறது அல்லவோ?
*************************************************************************************

நண்பர் விஜய் (poetryinstone)
http://www.poetryinstone.inஅவர்களின் வேண்டுகோளுக்காக எழுதப் பட்டது. முதலில் மொழிபெயர்ப்பு என ஆரம்பித்து நேருக்கு நேர் அர்த்தம் எழுத ஆரம்பிச்சது எங்கேயோ போய் முடிந்தது. பல புத்தகங்கள், பல தேடல்கள், பல விஷயங்கள் புரிந்து கொண்டேன். எழுதுவது கஷ்டமே. இதில் எனக்கு உதவி செய்த நடராஜ தீக்ஷிதருக்கும் www.natarajadeekshidhar.blogspot.com என் மனமார்ந்த நன்றிகள்.

15 comments:

  1. என்ன ஒரு வர்ணனை .. வாய்ப்பே இல்லை. இந்த சிலைக்கு வேறு ஒரு இடத்தில் படித்தது " தூக்கி நிற்கும் காலை நாம் பற்றினால் அவருடைய கை நம்மை மேலே (அறியாமையில் இருந்து) தூக்கி விடும் " என்று .

    மிக அருமை பாட்டி

    ReplyDelete
  2. மிக அழகாக அனுபவித்து,வர்ணித்து எழுதியிருக்கின்றீர்கள். இனி நானும் இதே கண்ணேட்டத்தில் வணங்குகின்றேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  3. The famous physicist fritjof Capra
    in his THE Tao Of Physics

    "In Hinduism, Shiva the Cosmic Dancer, is perhaps the most perfect personification of the dynamic universe. Through his dance, Shiva sustains the manifold phenomena in the world, unifying all things by immersing them in his rhythm and making them participate in the dance- a magnificent image of the dynamic unity of the Universe.


    ''the dancing Shiva is the dancing universe, the ceaseless flow of energy going through an infinite variety of patterns that melt into one another’’

    ReplyDelete
  4. எல்கே, எதுக்கு வாய்ப்பே இல்லை??? இந்த வர்ணனை முழுசும் முடியலை, காதார் குழல் ஆட, பைம்பூண் கனலாடுவதெல்லாம் இன்னும் மிச்சம் இருக்கு அதுக்குள்ளே இன்னும் போனால் என்ன என்னமோ அர்த்தங்களெல்லாம் வரும். அந்தக் குண்டலங்கள் பத்தின கதை தெரியுமா???

    ReplyDelete
  5. வாங்க பித்தனின் வாக்கு, ரொம்ப நன்றிங்க.

    ReplyDelete
  6. வாங்க அலெக்ஸ், Capra
    in his THE Tao Of Physics // அந்த அளவுக்கெல்லாம் படிச்சதில்லை. ஓரளவு சிலரோடது படிச்சிருக்கேன், வந்ததுக்கும், கருத்தைச் சொன்னதுக்கும் நன்றி.

    ReplyDelete
  7. எனக்கு அந்த அளவுக்கு தெரியாது. இது ஒருமுறை கதாகாலஷேபத்தில சொன்னது

    ReplyDelete
  8. ஸ்ரீ, மிக அழகிய வர்ணனை. அதி அற்புத சொல்லாக்கம். ஆதிசங்கரருக்கே அம்பிகையின் அழகை வர்ணிக்க இயலவில்லையாம். (கேனோபனிஷத் - உமாம் ஹைமவதிம் பஹு சோபனாம்). அழகே உருவான அம்பிகைக்குரிய அழகு நாதனை வர்ணிக்க மானுட ஜன்மத்தில் இயலுமா? எனினும், தங்களின் புதிய கோணம் - வர்ணிக்க இயலாததை வர்ணிக்கின்றது.
    நி.த. நடராஜ தீக்ஷிதர்
    www.natarajadeekshidhar.blogspot.com

    ReplyDelete
  9. எல்கே, எந்த அளவுக்கு எது தெரியாது?? குண்டலங்கள் பற்றின கதை?? கொஞ்சம் மெதுவாச் சொல்றேன்! :D

    ReplyDelete
  10. வாங்க தீக்ஷிதரே, உங்கள் உதவிக்கும், இங்கே வந்து பாராட்டியதுக்கும் ரொம்ப நன்றி. இன்னும் உங்க வலைப்பக்கம் வந்து பார்க்கமுடியலை. நாளைக்குள் வரேன். :D

    ReplyDelete
  11. அம்மா, குட்டி குட்டி பதிவா எழுதியிருக்கணும், என் குட்டி மூளைக்கெல்லாம் தகுந்தாற்போல.. கொஞ்சம்தான் படிச்சேன், அதுக்கே அசந்துட்டேன்! திரும்ப வரேன்...

    ReplyDelete
  12. வாங்க கவிநயா, நம்பிக்கையிலேயும் போட்டிருக்கேன், பார்க்கலை போல! :)))))))) எப்படியோ இங்கேயும் வந்ததுக்கு நன்னி.

    முதல்லே பிரிச்சுப் போடறதாய்த் தான் இருந்தேன். ஆனால் வர்ணனையின் அழகு தூக்கலாய்த் தெரியாது. இதுவே சில விஷயங்கள் விட்டுப் போயிருக்கிறது. பரவாயில்லைனு விட்டுட்டேன். :)))))))

    ReplyDelete
  13. verrrrrrrrrrry big post. you can split it into 3 parts. Yellaraalaiyum ivloo periya post yellam padikka mudiyarthu konjam kastam.

    ReplyDelete
  14. @தக்குடு, இதை விடப் பெரிய போஸ்டெல்லாம் எழுதி இருக்காங்க சிலபேர். அதோட காரணம் ஏற்கெனவே கவிநயாவுக்குச் சொன்னது தான். பிரிச்சுப் போட்டால் விஷயத்தின் சாரம் மனதில் போய்த் தாக்காது. முடிஞ்சவங்க படிப்பாங்க இல்லையா???

    ReplyDelete
  15. இவ்வளவு வர்ணனைகளா ? அசந்துவிட்டேன்.

    ReplyDelete