எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, July 01, 2011

அம்பத்தூருக்கு மாறினோம்! கல்யாணமாம் கல்யாணம்!!

அந்த வீட்டில் கீழே குடி இருந்த ஒரு ஐயங்காரின் பையர் மின் வாரியத்தின் சேர்மனுக்கு உதவியாளர். இது தற்செயலா அல்லது தெய்வாநுகூலமா? தெரியாது. ஆனால் என் அம்மா கீழே துணி துவைக்கப் போனப்போ இதைப் பற்றிஅவங்க கிட்டே பேச, அவங்க பையர் கிட்டே சொல்ல, பையரும் கன சிரத்தையாக அவரோட அலுவலகத்தில் இது பற்றி விசாரித்துவிட்டு மறுநாள் என்னைப் பார்த்து, “ஏம்மா, குழந்தை, உனக்கு வேலைக்கு ஆர்டர் வந்திருக்காமே? நீ போய்ச் சேர்மனை நேரிலே போய்ப் பார்த்துப் பேசு. நாளைக்கு மத்தியானத்துக்கு மேலே அவரோடு பேசறதுக்கு முடியும். போய்ப் பாரு” என்று சொன்னார். மறுநாள் நானும் என் கணவருமாகக் காலம்பரேயே கிளம்பி சென்னை மவுண்ட் ரோடில் இருக்கும் மின்வாரியத் தலைமை அலுவலகம் போனோம். அங்கே மதியம் தான் நேர் காணல். அதற்கு எதிரே இருந்த என் பெரியப்பா வேலை செய்ய ஸ்டேட் பாங்க் கிளைக்குப் போனோம். சற்று நேரம் அங்கே இருந்துவிட்டு அருகிலிருந்த என் கணவரோட பெரியப்பா மாப்பிள்ளை வேலை செய்த எல் ஐசி கட்டடம் சென்றோம். அப்போதெல்லாம் சென்னையில் அதுதான் உயரமான கட்டடம். சென்னையை அடையாளம் காட்ட எல்லா சினிமாக்களிலும் தவறாமல் இடம் பெறும். கடைசி மாடி வரை போய்ப் பார்த்துவிட்டுப்பின்னர் கீழே இறங்கி மின்வாரிய அலுவலகம் சென்றோம்.

நிறையப் பேர் மாற்றலுக்கு விண்ணப்பித்தும், வேறு காரணங்களை ஒட்டியும் வந்திருக்க என் முறை வர நான்கு மணி ஆகிவிட்டது. என்னோட பேசின சேர்மன்,”என்னம்மா புரியாத பொண்ணா இருக்கியே? வேலை கிடைக்கறதே கஷ்டம்; அதிலும் நீ முதல்முறையிலேயே தேர்வாகி இருக்கே. கிடைச்ச இடத்திலே போய்ச் சேர்ந்துடு. அப்புறமா மனுப்போடு; பார்க்கலாம், சின்ன வயசுதானே; கொஞ்ச நாட்கள் இங்கேயும், அங்கேயுமா இருக்கலாம்.” என்று சொல்லிவிட்டார். என் கணவரோட உத்தியோகமும், அதற்குப் பரமக்குடி என்ன?? மதுரையிலேயே அலுவலகம் கிடையாதுனும் அவருக்குப் புரிய வைக்கிறதுக்குள்ளே அவர் அதனால் என்ன? ஆறு மாசம் கழிச்சு இங்கே வந்துக்கலாம்; அப்படினு சொல்லிட்டார். என்னனு தெரியாம வெளியே வந்தோம். பலவிதமான எண்ண ஓட்டங்கள். இரண்டு பேரும் பேசிக்காமலேயே பிரயாணம் செய்தோம். அதுக்குள்ளே இங்கே காலம்பர போனவங்களைக் காணோமேனு என் மாமியார் கிட்டத்தட்ட போலீஸுக்குச் சொல்லாத குறை! அவங்களுக்குச் சென்னை நகரமே புதுசு! அதிலே பிரயாணம் பண்ணிக்கொண்டு சென்று வருவது பற்றி எல்லாம் ஒண்ணும் தெரியாது. கிராமங்களிலே இருந்து அதிக பக்ஷமாய்க் கும்பகோணம் தான் நகரம். இதெல்லாம் அவர்களை கொஞ்சம் கலவரப் படுத்தி இருக்கிறது. என் அம்மாவும், மத்தவங்களும் சொல்லியும் கேட்காமல் சாமிக்கு எல்லாம் வேண்டிக்கொண்டு, இரும்புக் கரண்டியைத் தண்ணீரில் போட்டு(ஏதேனும் பொருட்கள் தொலைந்தாலோ, அல்லது வீட்டுக்கு வெளியே போனவங்க வர நேரம் ஆனாலோ இரும்பைத் தண்ணீரில் போட்டால் வந்துவிடுவார்கள் என்பதை இன்று வரை ஒரு நம்பிக்கையாகக் கடைப்பிடித்து வராங்க; குறிப்பிட்ட நேரத்துக்குள் அந்த மனிதர்களோ பொருளோ கிடைத்தும் விடும்) என்று அவர்களுக்குத் தெரிஞ்சதை எல்லாம் செய்து கொண்டு இருந்தாங்க.

நாங்க போனோமோ இல்லையோ புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க. அப்போதெல்லாம் தொலைபேசி என்பது எல்லார் வீடுகளிலும் இருக்காது. தெருவுக்கு ஒன்று என்று கூடக் கிடையாது. ரொம்ப அதிசயமா யாரேனும் வைத்திருப்பாங்க. அதுக்கே அலையணும். பொதுத் தொலைபேசியும் அங்கொன்றும், இங்கொன்றுமாய்த் தான் இருக்கும். ஆகவே செய்திகளைச் சொல்ல முடியாது. அவங்களைச் சமாதானம் செய்தோம். விஷயத்தைச் சொன்னோம். அதற்குள்ளாக என் அம்மாவை மதுரைக்கு வரச் சொல்லி அப்பா கடிதம் வந்திருந்தது. தம்பிக்குக் காலேஜ் திறந்துவிட்டது; அப்பாவுக்கும் ஸ்கூல் திறந்துவிட்டது. அம்மா மதுரை போக மறு நாளைக்கு டிக்கெட் ரிசர்வ் செய்திருப்பதாக மதியமே நாங்க பெரியப்பா ஆபீஸ் போயிருந்தப்போ அவர் சொல்லி இருந்தார். ஆகவே மறுநாள் அம்மா கிளம்பிப் போக ஒரு வாரத்தில் என் மாமியாரும், மைத்துனனும் மதுரையில் குடி இருந்த நாத்தனாரோடு அங்கே போயிட்டு அங்கிருந்த வாறே கிராமம் செல்ல இங்கே நாங்க ரெண்டு பேரும் மட்டுமே தனிக்குடித்தனம்.

தண்ணீர் பிரச்னை வேறு. மேலே இருந்து தண்ணீர் இழுக்க முடியவில்லை. கீழே தண்ணீர் ஊறும்போது எடுத்துக்கொண்டு மாடிக்கு வரணும். ஆனால் அதற்குள்ளாக கீழே இருப்பவங்க எடுத்துடுவாங்க. அக்கம்பக்கம் உள்ள வீட்டுக்காரங்க பழக்கத்தில் சில நாட்கள் அங்கே போய்த் தண்ணீர் கொண்டு வருவேன். ஆனால் இது தொடர்கதையாகும் போல் இருக்க, என் கணவர் வேறே வீடு பார்க்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொண்டார். ஒரு சனிக்கிழமை அன்று மதியம் அவருக்கு அரை நாள் லீவு என்பதால் என்னை வில்லிவாக்கத்தில் ஏறி அம்பத்தூர் வரச் சொன்னார். அங்கே ஸ்டேஷனில் அவர் காத்திருப்பதாயும் இருவருமாய் அம்பத்தூரில் வீடு பார்ப்பதுமாயும் ஏற்பாடு. அவ்வாறே மதிய வேலைகள் முடிந்து நானும் கிளம்பி அம்பத்தூர் போய்ச் சேர்ந்தேன். ஸ்டேஷனில் காத்திருந்த என் கணவரோடு அவர் நண்பர் ஒருத்தரும் இருந்தார். முதலில் அவங்க வீட்டுக்குக் கூட்டிச் சென்றார். இப்போ அம்பத்தூர் சத்சங்கம் இருக்குமிடத்தில் அப்போ அவங்க வீடு இருந்தது. அங்கே டிபன், காப்பி முடித்துக்கொண்டு இரண்டு மூன்று தெருவில் இருக்கும் வீடுகளைப் பார்த்தோம். ஒரு இடத்தில் பல குடியிருப்புகள் ஆனால் தனித் தனி வீடுகள் ரயில் பெட்டி போல் நீள வாக்கில் வரிசையாக அறைகள் கொண்ட வீடுகள் இருந்தன. அதில் ஒரு வீடு கொஞ்சம் பெரிதாக நான்கு அறைகளோடு இருந்தது. இரண்டு வீடுகளுக்கு ஒரு பாத்ரூம், கழிவறை. அதை முடிக்கலாம் என என் கணவர் நினைக்க எனக்கோ சாமான்களை வைக்க இடம் போதாதே எனக் கவலை. என் தயக்கத்தைப் புரிந்தோ என்னமோ, நாளை வரேன், இப்போ அட்வான்ஸ் கொடுக்கப்பணம் போதலை என்று சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.

வந்தபோது ஒரு வீட்டில் வீடு காலி விளம்பரப் பலகை இருக்க அங்கே நுழைந்தோம். பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய கேட். ஒரு லாரியே நுழையும் அளவுக்கு. வீடும் பெரிய வீடு. வீட்டைச் சுற்றி ஒரு மாந்தோப்பு. குறைந்தது இருபது மாமரங்களாவது இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை என்று பின்னால் சொன்னார்கள். வீட்டைப் பார்த்தாலே இங்கே எல்லாம் வாடகை கொடுத்துக் குடி இருக்க நமக்குக் கட்டுமா என்று தோன்ற வீட்டுக்காரங்க பின்னால் இருப்பதாய்ச் சொல்ல, அங்கே போனோம். முதலில் சாவியைக் கொடுக்க மாட்டேன் என்ற வீட்டுக்காரக் கிழவி பின்னர் என்ன நினைத்தாளோ, வீட்டைப் பாருங்க. பேசுவது எல்லாம் முன் குடித்தனக்காரத் தம்பி தான். அவர் வந்து தான் முடிவு செய்யணும் என்றாள். சரினு வீட்டைப் பார்த்தோம். பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய சமையலறை. பெரிய படுக்கை அறை, பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஹால். ஆனால் ஒரே குறை சமையலறை நுழையும்போதே இருந்தது. என்றாலும் வீடு பிடித்தது. சாமான்கள் வைக்க, அம்மி ஒன்றும் போட்டிருந்தார்கள். குடித்தனம் வந்தால் கல்லுரலும் தருவதாய்க் கிழவி சொன்னாள். கிணற்றடியே நூறு சதுர அடிக்கும் மேலே. பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய கிணறு. நடுவில் இரண்டாகப் பிரிக்கப் பட்டிருந்தது. வீட்டின் அந்தப்பக்கம் இருந்தவங்க அந்தப் பக்கம் இந்தப் பக்கம் இருக்கிறவங்க இந்தப்பக்கமும் தண்ணீர் இழுத்துக்கொள்ளலாம். அவ்வளவு பெரிய கிணறை நான் பார்த்ததே இல்லை. தண்ணீரும் இழுத்துக் குடித்தோம். அப்போதே ஐம்பது அடிக்கும் கீழே தண்ணீர் இருந்தாலும் சுவையாக இருந்தது.

வீடும் பிடிக்க, தண்ணீரின் சுவையும் இழுக்கக் கிழவியிடம் கேட்டால் நாளைக்கு வா என்று சொல்லிவிட்டாள். ஒரு பத்து ரூபாயாவது வைச்சுக்கோங்க, டோக்கன் அட்வான்சா இருக்கட்டும்னா வாங்கிக்கலை. நான் யாருக்கும் விடலை; உனக்கு இல்லைனால் தான் மத்தவங்களுக்கு; நீ நாளைக்கு வா என்று ஒரே பேச்சாகச் சொல்லிவிட்டாள். வேறு வழியில்லாமல் திரும்பினோம். இரவெல்லாம் குழப்பம், வீடு கிடைக்குமா, கிடைக்காதா?

16 comments:

  1. உம்!! அப்புறம்? தந்தாளா ??
    .
    இது வருதானு பாக்கறேன்:))

    ReplyDelete
  2. அட!! போயிடுத்து
    Your comment has been saved and will be visible after blog owner approval.னு வருதே blogger page வராம!!

    ReplyDelete
  3. வாங்க ஜெயஸ்ரீ, அப்பாடா, பார்த்தே எவ்வளவு நாளாச்சு?? நல்வரவு, நான் சொன்ன ஐடியா வேலை செய்யுது போலிருக்கே! ஹிஹிஹி, தொழில் நுட்ப நிபுணி ஆயிட்டோமுல்ல! :)))))))))

    ReplyDelete
  4. அம்பத்தூருக்கு மாறினோம்னு தலைப்பு இருப்பதால்,வீடு கிடைத்திருக்கும்ன்னு நினைக்கிறேன். ... அப்பறம் நீங்க வேலைக்கு போனீங்களா இல்லையா???

    ReplyDelete
  5. தொடர்கதை பதிவு போல் உள்ளதே?

    ReplyDelete
  6. தொடர்கதை பதிவு போல் உள்ளதே?

    ReplyDelete
  7. ஓ...! அடுத்து !?

    ReplyDelete
  8. வாங்க ராம்வி, என்னோட ஆரம்பகாலப் பதிவுகளிலே நான் வேலைக்குப் போனதைப்பற்றி எழுதிட்டேன். அடுத்த பதிவோட கல்யாணமாம் கல்யாணம் முடிஞ்சுடும். :)))))))

    ReplyDelete
  9. ஆமாம் சத்யா, தொடர்கதை இல்லை, சொந்த வாழ்க்கையின் நினைவுத் தொடர்; :D

    ReplyDelete
  10. வாங்க கோபி, வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  11. வீடு கிடைத்ததுதானே...

    ReplyDelete
  12. மாமி
    அப்பொழுது முதல் இன்று வரை அம்பத்தூர் வாசமா?
    ரெண்டு வாரம் வர முடியவில்லை. நீங்கள் சாதம் வடித்த போது செய்தது நல்ல presence of mind. ரெண்டு படி அளவு உண்டு என்பது எனக்கு புது விஷயம்,

    ReplyDelete
  13. வாங்க மாதேவி, இன்னிக்கு அதான் பதிவே. :D

    ReplyDelete
  14. ஸ்ரீநி, எங்க வீட்டிலும் இப்படி அரிசி நிறையப் போய்ப் பொங்கி வந்திருக்கு. அப்போ செய்யச் சொன்னது தான் அன்னிக்கு நினைவில் வந்தது. சரியான நேரத்துக்கு நினைவில் வந்தது தான் குறிப்பிட்டுச் சொல்லணும், மற்றபடி ப்ரசென்ஸ் ஆஃப் மைண்டெல்லாம் ஒண்ணும் இல்லை. இந்தப்படி விஷயம் மட்டும் இல்லை, மரக்கால், குறுணி எல்லாமும் அங்கே நம் சாதாரண அளவை விடவும் பாதி தான் கணக்கு. இப்போவும் அப்படியானு தெரியலை.

    ReplyDelete
  15. // இது தற்செயலா அல்லது தெய்வாநுகூலமா? தெரியாது.//

    வாழ்க்கையில் எதுவும் தற்செயல் கிடையாது ;எல்லா வற்றையும் ஏற்கனவே எழுத பட்டு தான் இருக்கு

    என்று தான் எங்கள் வீட்டு பெரியவர்கள் சொல்வதுண்டு.,



    //பலவிதமான எண்ண ஓட்டங்கள். இரண்டு பேரும் பேசிக்காமலேயே பிரயாணம் செய்தோம்//

    சரி முதல் முதலாய் வேலைக்கு போகிறோம் என்ற படபடப்பு எல்லாம் கொஞ்சமாவது இருந்து இருக்குமே

    வாய் பேசலைன்னா தான் என்ன ;கண்ணும் மனமும் பேசி கொண்டு இருந்து இருக்குமே :))



    //அதுக்குள்ளே இங்கே காலம்பர போனவங்களைக் காணோமேனு என் மாமியார் கிட்டத்தட்ட போலீஸுக்குச் சொல்லாத குறை!//

    செம தமாசா இருக்கே !

    //குடித்தனம் வந்தால் கல்லுரலும் தருவதாய்க் கிழவி சொன்னாள்.//

    சின்னவர்களை கூட மரியாதையுடன் பேசும் தாங்கள் "பாட்டி சொன்னார்" என்று சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்
    கீதாமா !

    தவறாய் நான் ஏதாவது சொல்லி இருந்தால் சாரி மா.........

    ReplyDelete