எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, January 15, 2012

பொங்கல் கால நினைவலைகளே!

பொங்கலைப் பத்தி எழுதச் சொல்லி எல்லாரும் கேட்டிருக்காங்க. பொங்கல் சாப்பிடத் தான் தெரியும்னு நினைக்கவேண்டாம். செய்யவும் தெரியும். அதுவும் முழுக்க முழுக்கப் பாலிலேயே வேக வைத்த பருப்பும், அரிசியும், வெல்லமும் நெய்யும் சேர்த்து. நிறைய மு.ப. தி.ப. போட்டு. ஆகவே இப்போ எழுதப் போறது பொங்கல் திருவிழாவின் சில நினைவுகள். ஹிஹிஹி, அதான் கேட்டோம்னு சொல்றீங்களா, தெரியுமே. கொஞ்சம் வம்பு பண்ணிட்டு எழுதலாம்னு தான்! J)))))


எனக்கு நினைவு தெரிஞ்சு நான் நவராத்திரிக்கு உடம்பு வந்து படுத்தால் தீபாவளி கழிச்சுத் தான் எழுந்திருப்பேன். படுக்கையிலேயே கொண்டாடிய பல தீபாவளிகள் உண்டு. ஆகவே பொங்கல் தான் நான் முழுமையாகச் சின்ன வயசிலே கலந்து கொண்ட பண்டிகைனு சொல்லலாம். பொங்கலுக்கு முன்னர் வெள்ளை அடிக்கிறதை அப்பா, அண்ணா, தம்பிகள் செய்வாங்க. வாசல் திண்ணைக்குக் கீழே உள்ள சுவரில் காவிப் பட்டையும் சுண்ணாம்பும் அடிச்சுடுவாங்க. அம்மாவுக்கும், எனக்கும் சாமான்களை எடுத்து வைக்கிறதிலேயே சரியாயிடும். போகி அன்னிக்கு இந்த போகி கொட்டறதுனு ஒண்ணு இருக்கே பறை போன்றதொரு சின்னக் கொட்டுக் கொட்டறாங்க. அதெல்லாம் எனக்குச் சென்னைக்குக் குடித்தனம் வந்தப்போ கூட அவ்வளவா தெரியாது. ஏனென்றால் எங்கேயோ ஒரு சில இடங்களில் மட்டுமே அது இருந்திருக்கு. அதிகமாய் நகரப்பகுதிகளில் இருந்திருக்க வேண்டும். அதே போல் குப்பையை எரிப்பதும் சென்னையில் இப்போது போல் அப்போ இருந்ததில்லை. ஆகவே இந்த வழக்கங்களே சென்னை வர வரைக்கும் தெரியாது. மதுரையிலே அன்னிக்குக் காலம்பரவே எழுந்து அம்மா பெரிய பெரிய கோலங்கள் போட்டிருப்பாங்க. ரொம்பச் சின்னப் பொண்ணா இருந்தப்போ காலம்பர எழுந்து விதவிதமான கோலங்களைப் பார்த்தப்போ, இந்த அம்மாக்களெல்லாம் தூங்கவே மாட்டாங்க போல; நாமளும் பெரியவளா ஆனா இப்படித் தான் இருக்குமோ; பெரிய பெண்ணாகவே ஆகக் கூடாதுனு நினைச்சுப்பேன். கொஞ்சம் ஆச்சரியமா இருக்கும். அம்மா எப்போ எழுந்து, எப்போ கோலம் போடறானு புரியாது. அப்புறமாய்ப் புரிஞ்சது. J


அப்போது மேல ஆவணிமூலவீதியின் இருபக்கங்களிலும் சொந்த வீட்டுக்காரர்களே அதிகம் வசித்ததோடு குடித்தனம் இருந்தவங்களும் சேர்ந்து நடைபாதை முழுதும் கோலங்களால் நிறைத்திருப்பாங்க. ஒவ்வொரு வீட்டிற்கும் சில, பல படிகள் ஏறியே மேலே போகணும். திண்ணைகளெல்லாம் கோலங்கள் காணப்படும். கலர் போட்டெல்லாம் அப்போது அதிகம் காணமுடியாது. அரிசிமாவு அல்லது வெள்ளைக்கல் மாவுக் கோலங்களே. பொங்கல் அன்னிக்கு எல்லாருமே பொங்கல் பானையில் பால் ஊற்றுவோம். தம்பியும், நானும் தொண்டை வலிக்குமளவுக்குப் பொங்கலோ பொங்கல்னு கத்துவோம். வழக்கம்போல் அப்பாவோட திட்டு எனக்கு மட்டும். பொண்ணாப் பிறந்துட்டு அடக்கமில்லாமல் தெருவெல்லாம் கேட்கறாப்போல் கத்தறது பார்;அப்படினு சொல்லுவார். அதையெல்லாம் கண்டுக்கறதே இல்லை. துடைச்சு விட்டுட்டுப் புதுப்பாவாடை, ப்ளவுஸ் போட்டுக்கொண்டு பூஜைக்குத் தயாராவேன். கோலமெல்லாம் நான் தான் போடுவேன். அம்மா சொல்லித் தருவாங்க. கிழக்குத் திசையில் சூரியன் கோலம் போட்டுத் துணைக்கோலங்களும் போடுவேன். இந்த சூரியன் கோலம் போடுகையில் நாம் மேற்கே அமர்ந்து கிழக்கே சூரியனைப் பார்க்கிறாப்போல் போடவேண்டும். சூரியனின் முகம் நம்மைப்பார்த்து இருக்கும்படி போடவேண்டும். கிணற்றடியில் தான் பூஜை. நாங்க குடியிருந்த வீடுதான் என்றாலும் எல்லா வீடுகளிலும் இம்மாதிரிக் கொல்லை ஒன்று கிடைத்துவிடும். ஆகவே பூஜைக்கு வசதி. சில சமயம் அதிசயமா சாஸ்திரிகள் வருவார் பூஜை பண்ணி வைக்க. பலசமயங்களும் அப்பாவே பூஜையைப் பண்ணிவிடுவார். பொங்கலை விட எனக்கு உளுந்து வடை மேலேயே கண் இருக்கும். பொங்கலுக்கு மறுநாள் கனுவன்னிக்கு அக்கம்பக்கம் இருக்கும் எல்லா வீடுகளுக்கும் போய் மஞ்சள் கீறிக்கப் போவேன்.


முதல்லே அம்மா தான் கீறிக் கொண்டு எனக்கும் கீறிவிடுவாங்க. பின்னர் குடித்தனம் இருக்கும் வீட்டுப் பெண்கள், பெரியப்பா வீடுகள், சிலசமயம் தாத்தாவீடு என்றெல்லாம் போவதுண்டு. கூடத் துணைக்கு அண்ணாவும், தம்பியும் வருவாங்க. எல்லா வீட்டிலேயும் மஞ்சள் கீறிவிட்டுட்டு வெற்றிலை, பாக்கோடு நாலணா வைத்துக்கொடுப்பாங்க. கிட்டத்தட்டப் பத்து வீடானும் போவேனா! காசு சேரச் சேர ஒரே உற்சாகம் தான். பின்னே! நாலணா என்ன சின்னத் தொகையா? அண்ணா, தம்பிக்கெல்லாம் கிடைக்காது. சில வீட்டில் ரவிக்கைத் துணி கொடுத்துடுவாங்க. சப்புனு போயிடும். சிலர் வெற்றிலை, பாக்கில் கரும்புத்துண்டுகளோடு நிறுத்துவாங்க. மனசுக்குள் அல்பம்னு நினைச்சுப்போம். எங்க அப்பாவோட சித்தி வீட்டில் ஒரு ரூபாய் வெள்ளிக்காசு கொடுப்பாங்க. நாங்க வரும்போது மூணு பேரும் அப்பாவிடம் சொல்லக் கூடாதுனு பேசிப்போம். ஆனால் உள்ளே நுழைந்ததும் அப்பா கேட்பதற்கு முன்னாலேயே சொல்லிடுவோம். அந்த வெள்ளிக்காசை மட்டும் அப்பா வாங்கி வைச்சுப்பார். மிச்சத்தைப் பங்கு போட்டுப்போம். பின்னே? அண்ணாவும், தம்பியும் துணைக்கு வராங்க இல்லை? அவங்களுக்கும் பங்கு கொடுக்கணுமே. அப்புறமா அந்தக் காசில் எந்தக் கோட்டையைக் கட்டலாம்னு ஒரு டிஸ்கஷன் நடத்திப்போம். இப்படியாக எங்கள் சின்ன வயசுப் பொங்கல் உற்சாகமாகவே கழிந்தது. அம்மாவும் நானுமாக் கனுப்பிடி வைப்போம். கூடவே குடித்தனக்காரர்களும் ஒவ்வொருத்தரா வந்து வைப்பாங்க. மொட்டை மாடியில் ஒரே கூட்டமாகத் தான் வைப்போம். காக்காய்க் கூட்டமெல்லாம் எங்க கூட்டத்தில் வரவே வராது! :)))) இப்போ நான் தன்னந்தனியாகக் கனுப்பிடி வைக்கையில் மதுரையில் வைத்தது, கல்யாணத்துக்கு அப்புறமாப் புக்ககத்தில் எல்லாரும் சேர்ந்து வைத்தது என எல்லாம் நினைவில் வரும். அதோடு மட்டுமா? அப்போ குடித்தனம் இருக்கிறவங்க வீடுகளின் சாப்பாடோடு, பெரியப்பா வீடுகளில் இருந்தும் சாப்பாடு வரும். எங்க வீட்டிலே இருந்தும் அவங்க வீடுகளுக்கெல்லாம் போகும். எல்லாச் சாப்பாட்டையும் விமரிசித்துக்கொண்டே சாப்பிட்டிருக்கோம். கனுவன்று மாலையில் யார் வீட்டில் புதுசாக் குட்டிப் பாப்பா பிறந்திருக்கோ அந்தப் பாப்பாவுக்குக் காசு, இலந்தைப்பழம், கொழுக்கட்டை, கரும்புத்துண்டுகள் நிறைநாழியில் வைத்துக் குழந்தையை அதன் மூத்த இன்னொரு குழந்தையின் மடியில் உட்கார்த்தி வைத்துக் கொட்டுவாங்க. (சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு வைச்சுக் கொடுப்பாங்க. வெற்றிலை,பாக்கு ஒர் மஞ்சள் பெட்டியில் தான் வைச்சுக் கொடுப்பாங்க. இப்போ மாதிரி விதவிதமான ப்ளாஸ்டிக் வகையறாக்கள் இல்லை. ஓலைப்பெட்டி அது. ஆனால் சொல்கையில் மஞ்சள் பெட்டினு சொல்வோம்.) அதோடு காசும் போடுவதால் அந்தக் காசைப் பொறுக்கவும் போவேன். அணாக்கள் வழக்கத்தில் இருந்தப்போ ஓட்டைக்காலணா, ஓட்டை இல்லாத காலணா, மஞ்சள் அரையணா, இரண்டணாக்காசுகள், நாலணாக்காசுகள் எனப் போடுவாங்க. எட்டணா, ஒரு ரூபாயெல்லாம் ரொம்ப அபூர்வம். அநேக ஒரு ரூபாய்க்காசுகள் வெள்ளி என்பதால் யாரும் போடுவதற்கு யோசிப்பாங்க. அப்புறமாப் பைசா வந்தப்புறமா 5 பைசா, 10 பைசா, 25 பைசா தான். 20 பைசா எனக்குத் தெரிஞ்சு என் கல்யாணம் ஆனப்புறமே புழக்கத்தில் வந்தது. நல்ல தங்க மஞ்சள் நிறத்தில் தாமரைப்பூப் போட்டு இருந்தது. யாரோ அதிலே 108 காசுகளால் குத்துவிளக்கு பூஜை, மஹாலக்ஷ்மி பூஜை பண்ணினால் நல்லதுனு சொல்லிவிடவே எல்லாரும் ஒரு வெறி பிடிச்சாற்போல் 20 பைசாக்காசுகளைச் சேர்க்க ஆரம்பிச்சதும் நினைவில் வருது. எங்க கிட்டேக்கூட 80 காசுகளுக்கும் மேல் இருக்குனு நினைக்கிறேன். பாருங்க, பொங்கல் எங்கே எல்லாம் நினைவுகளைக் கொண்டு போய்விட்டது.


அப்போதெல்லாம் ரேடியோவில் குன்றக்குடி அடிகளார் தலைமையில் பட்டிமன்றம் நடக்கும். வீட்டில் ரேடியோ கிடையாது. குடித்தனம் இருக்கிறவங்க யாரானும் வைப்பாங்க. அங்கே போய் உட்கார்ந்து கேட்போம். அப்போதைய வாராந்தரப் புத்தகங்களில் கல்கி, ஆனந்தவிகடன், குமுதம் போட்டி போட்டுக்கொண்டு பொங்கல் மலர் வெளியிட்டிருப்பாங்க. விலை என்னனு நினைக்கறீங்க?? விகடன் நாலு அணா,, கல்கி, குமுதம் நாலு அணாவுக்குக் கீழே தான் இருக்கும். குமுதம் வீட்டில் அப்பா வாங்க மாட்டார். அப்பாவுக்குத் தெரியாமல் தான் குமுதமே படிக்க முடியும். J குமுதம் பண்டிகை மலர்களில் குனேகா சென்ட் போட்டு வரும். பத்திரிகைத் தாளைத் தொட்டாலே கை மணக்கும். அதோடு அதில் வரும் கதைகள் அதைவிட அருமையாக இருக்கும். தினசரிப் பத்திரிகையான தினமணியிலே நிறையக் கட்டுரைகள், கதைகள்னு அதுவும் படிக்கக்கிடைக்கும். பொங்கல் சாப்பிட்டுவிட்டுப் புத்தகங்களை வைத்துக்கொண்டு பொழுதைக் கழித்த சொர்க்கமான நாட்கள் அவை.


பொங்கலுக்கு முன்னாடியே ஊரில் இருக்கும் மாடுகளின் கொம்புகளுக்கெல்லாம் வர்ணம் அடிக்கத் தொடங்குவாங்க. மதுரையிலே நான் அதிகமாய் எருமை மாடுகளைப் பார்த்ததில்லை. பசுமாடுகளே அதிகம் பார்த்திருக்கேன். பின்னால் இந்த வர்ணம் அடிப்பதிலும் கட்சிப் பாகுபாடுகள் வந்துவிட்டன. அவரவர் கட்சிக்கொடியின் நிறத்தில் மாட்டின் கொம்புகளின் வர்ணம் இருக்கும். மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் அடித்ததோடு விட மாட்டாங்க. கொம்புகளைச் சுற்றிச் சலங்கை, கழுத்துக்கு மணி என்றெல்லாம் கட்டுவாங்க. நாங்க பால் வாங்கும் வீட்டில் ஒரு பெரிய மாட்டுத் தொழுவமே இருந்தது. குறைந்தது எட்டுப் பசுமாடுகளும், அதன் கன்றுகளும் இருந்திருக்கும்னு நினைக்கிறேன். மாட்டுப் பொங்கல் அன்று மாலை தொழுவத்தைச் சுத்தம் செய்து மாடுகளை அலங்கரித்துக் கற்பூரம், சாம்பிராணி காட்டுவாங்க. பாலை முன்னாலேயே கறந்திருப்பாங்க. அதனால் பூஜை முடிந்ததும் மாடுகளை அவிழ்த்து விட்டு ஊரில் உள்ள எல்லாமாடுகளும் கலந்து கொள்ளும் ஊர்வலம் போன்ற ஒன்றிற்கு அழைத்துச் செல்வார்கள். ஊரில் உள்ள எல்லா மாடுகளும் நான்கு மாசி வீதிகளும் சுற்றி வரும். அதிலே நிறையக் காளைகளும் இருக்கும். சில காளைகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்காகச் சிறப்பாகத் தயார் செய்யப் பட்டிருக்கும். அவற்றோடு கூடவே பாதுகாப்பிற்காக ஆட்கள் வருவார்கள். ஜல்லிக்கட்டிற்கு அப்படியே ஓட்டிச் செல்வார்கள். அப்போதெல்லாம் ஜல்லிக்கட்டுப் பார்க்க அப்பா தவறாமல் போவார். நான் ஒரு ஜல்லிக்கட்டுக்கூடப் பார்த்ததில்லை. இப்போது தொலைக்காட்சியில் பார்ப்பதோடு சரி.


பெரும்பாலும் அப்போதெல்லாம் விறகு அடுப்பிலேயே சமையல் என்பதால் பொங்கல் வைப்பதும் விறகு அடுப்பு, வெண்கலப்பானை என்றே. அப்புறமாச் சென்னை வந்தப்புறமும் வழக்கத்தை விட முடியாமல் குமுட்டி அடுப்பிலாவது பொங்கல் வைத்துக் கொண்டிருந்தது. இப்போது குமுட்டி அடுப்பு ஒத்துக்கொள்ளாது என்பதால் அதைப் பயன்படுத்த முடியவில்லை. எரிவாயு அடுப்பில் தான் பொங்கல் வைக்கிறேன். ஆனால் வெண்கலப்பானையில் வைக்கும் வழக்கத்தை மாற்றவில்லை. குக்கரில் வைப்பதில்லை. இந்த வருடம் இங்கே யு.எஸ்ஸில் மெம்பிஸில் பொங்கல். இங்கே வெண்கலப்பானை கொண்டு வரவில்லை. குக்கர் பொங்கல் தான்! அதோடு குளிரும் அதிகம் என்பதால் வெளியே பூஜை செய்ய முடியாது. மேலும் இங்கே உள்ள சில கட்டுப்பாடுகள் கருதியும் வெளியே தோட்டம் பெரிதாக இருந்தாலும் அங்கே எதுவும் செய்ய முடியாது. ஆகக் கடந்த நாற்பதாண்டுகளில் மிகப் பெரிய கலாசார மாற்றத்தைக் கண்கூடாய்ப் பார்த்து வருகிறேன் என்பதே இதில் முக்கியச் செய்தி.

அதீதம் வாசகர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். இணைய உலகின் அனைத்து அண்ணாக்கள், தம்பிகள் சார்பாகக் கனுப்பிடி வைக்கிறேன். எல்லாருடைய க்ஷேமத்திற்கும் எங்கள் மனமார்ந்த பிரார்த்தனைகளும் தெரிவித்துக்கொள்கிறேன்.


அதீதம்

25 comments:

  1. //கோலம்-கலர் போட்டெல்லாம் அப்போது காண முடியாது//

    வெண்மையான கோலத்தில் உள்ளும் புறமும் அழகைக் காவி இட்டு மீண்டும் வெண்ணிற அவுட்லைன் தருவதே அழகுதானே...! :))

    கிணற்றடி, கொல்லை இருக்கற வீடுகளை இப்போது எங்கே அதிகம் பார்க்க முடிகிறது?

    //அண்ணா தம்பி பங்கு போட்டுப்போம்...துணைக்கு வர்றாங்க இல்லே...//

    வர்றதே அதுக்குத்தானே...! :)))

    அருமையான நினைவலைகள்....

    ReplyDelete
  2. என்னை யாருமே கேட்கலை :( தற்செயலாதான் எழுதினேன், பொங்கல் நினைவுகள். அப்புறம் பார்த்தா... நீங்களும். ஆனா உங்களோடது நீ....ளமாவும் சுவாரஸ்யமாகவும் இருக்கு அம்மா :)

    இனிய பொங்கல் வாழ்த்துகள் உங்களுக்கும், மற்றும் அனைவருக்கும்!

    ReplyDelete
  3. பொங்கல் நினைவலைகள் அழகு+ அருமை.

    ReplyDelete
  4. அருமையான மலரும் நினைவுகள்.அந்த தாமரை பூப்போட்ட 20 பைசா சேர்த்தது எனக்கும் கொஞ்சம் ஞாபகத்தில் இருக்கு மாமி.

    ReplyDelete
  5. அதீதம் வாசகர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். இணைய உலகின் அனைத்து அண்ணாக்கள், தம்பிகள் சார்பாகக் கனுப்பிடி வைக்கிறேன். எல்லாருடைய க்ஷேமத்திற்கும் எங்கள் மனமார்ந்த பிரார்த்தனைகளும் தெரிவித்துக்கொள்கிறேன்.//

    அருமையான பொங்கல் கால நினைவலைகள்.
    எல்லோர் க்ஷேமத்திற்கும் பிராத்தனை!
    நன்றி.

    அதீதம் இதழில் வந்து இருக்கிறதா?
    அதற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வாங்க ஶ்ரீராம், ஆமாம் அந்தக்கோலங்களின் அழகு வராது தான். அப்போவெல்லாம் கலர்க்கோலம், ரங்கோலி என்ற பெயரில் வெகு சிலரே போடுவாங்க. சாந்தா என்ற ஒரு பெண்மணி சென்னையிலா(?) சரியாத் தெரியலை; ரங்கோலி கற்றுக்கொடுப்பது குறித்துப் பத்திரிகைகளில் செய்தியாக வந்திருக்கிறது.

    ReplyDelete
  7. //அண்ணா தம்பி பங்கு போட்டுப்போம்...துணைக்கு வர்றாங்க இல்லே...//

    வர்றதே அதுக்குத்தானே...! :)))//

    ஹிஹீஹி,முன்கூட்டிய திட்டமிடலா?? சரிதான். :))))))

    ReplyDelete
  8. என்னை யாருமே கேட்கலை :( //

    வாங்க கவிநயா, முன்னேயே தெரிஞ்சால் வாங்கி அதீதத்துக்கு அனுப்பி வைச்சிருப்பேனே!


    ஆனா உங்களோடது நீ....ளமாவும் சுவாரஸ்யமாகவும் இருக்கு அம்மா :) //

    ஹிஹிஹி, வலிக்காத குட்டு!! நீஈஈஈஈஈஈஈஈஈஈளம் கருதியே பலரும் ஓட்டம் பிடிக்கிறாங்களே! :)))) இரண்டாய்ப் போடத் தான் நினைச்சேன். ஆனால் ப்ளாகர் சதி முன்னாலேயே பப்ளிஷ் ஆயிடுது. இதைப் பதினாறாம் தேதிக்கு ஷெட்யூல் பண்ணி இருந்தேன். பதினைந்தாம் தேதி இரவே வந்திருக்கு! :)))))))

    ReplyDelete
  9. வாங்க லக்ஷ்மி, நன்றி.

    ReplyDelete
  10. வாங்க ராம்வி ரொம்ப நன்றி. 20 பைசாக் காசு அதுக்கப்புறமா வரதே இல்லை. :)))

    ReplyDelete
  11. வாங்க கோமதி அரசு, புத்தாண்டிலே இருந்து அதீதத்தில் வந்ததைப் போட்டுத் தானே ஒப்பேத்தறேன். :))))))

    ReplyDelete
  12. வாழ்த்துக்கு நன்றிங்க.

    ReplyDelete
  13. அருணா, நன்றிங்க.

    ReplyDelete
  14. Happy Pongal.Had a wonderful makara shankarathi.Been to Srisailam Bhadrachalam Kanakadurga Panaka Narasimha swami.Got to see temples around Kumbakonam & Pondicheri as well.Now it is Time to rock !:(

    ReplyDelete
  15. வாங்க ஜெயஶ்ரீ, இப்போ எங்கே இருக்கீங்க?? சென்னை? பாண்டிச்சேரி?? நியூசி???:))))

    பொங்கல் வாழ்த்துகள்; உங்களுக்கு மடல் எழுதிட்டு அதை அனுப்பாமல் இருந்திருக்கேன்; உங்க கமென்டைப் பார்த்துட்டுத் தான் அதையே கவனிச்சேன். :)))))) அ.வ.சி.

    போன வருஷக் கனுவன்று நீங்க வந்ததை நாங்க இரண்டு பேரும் நினைவு கூர்ந்தோம்.

    ReplyDelete
  16. அருமையாக எழுதியிருக்கீங்க கீதாம்மா...அப்படியே எனக்கு ஒரு ப்ளாஷ்பேக் போல இருந்தது. இன்னிக்கு எங்கம்மா கனுப்பிடி வைத்துவிட்டு வந்து எனது சின்ன வயதில் இலந்தை-கரும்பு காலணா எல்லாம் நிறைநாழியில் வைத்து என் தலையில் கவிழ்த்ததைச் சொன்னார்கள்...இங்கு நீங்களும் எழுதியிருக்கீங்க....:)

    ReplyDelete
  17. சுவாரசியமா இருக்குங்க.
    உளுந்து வடை வேறோ ஏதோ வடையும் செய்வாங்க (பேரு மறந்து போச்சு - தவளை வடை ஆமை வடை?).
    நிறைய நினைவுகள்.. தெருவோர பவழமல்லி மரத்துலந்து ஆயிரக்கணக்குல உதிர்ந்திருக்குற பூவைப் பொறுக்கிட்டு வரச்சே..காட்டுத்தனமா கோலம் போட்டு வச்சுர்ப்பாங்க தங்கைகளும் அவங்க ப்ரெண்ட்சும்.. இங்க நடக்காதே அங்க நடக்காதேனு கடுப்படிப்பாங்க. பொங்கலுக்கு புது ட்ரெஸ் வாங்கினதே இல்லை. ஜல்லிக்கட்டு நான் கூட பார்த்ததேயில்லை. அடுத்த வருஷங்கள்ள ஒரு தடவையாவது நல்லா தெற்குல ஒரு சுமாரான நகர-கிராமமா பாத்து பொங்கல் அனுபவிச்சுடறதுன்னு ப்ளான் போட்டிருக்கேன், பார்ப்போம்.

    ReplyDelete
  18. பொங்கலைவிட சுவையா இருக்குங்க உங்க நினைவுகள். அணா எல்லாம் அம்மா சொல்லிக் கேள்விப்பட்டுருக்கேன். குழந்தைக்குக் கொழுக்கட்டை கொடுப்பது, மாடுகள் ஒன்றாக வீதி உலா வருவது எல்லாம் புதிதாக இருந்தன. எங்கள் ஊரிலும் மாடுகளை அலங்கரித்துக் கூட்டி வருவார்கள். அப்புறம் மாலையில் சிறுமிகள் கும்மியடித்துக் கொண்டு வருவார்கள். பொங்கல் என்றால் நினைவு வருவது கரும்பும் கோலங்களும்தான்.

    ReplyDelete
  19. வாங்க மெளலி, உங்களுக்கும் காசும் கொழுக்கட்டை கொட்டி இருக்காங்களா? சரிதான்! இது மதுரைப் பக்கத்து ஸ்பெஷல் வழக்கம் இல்லையா??? அதான்! எங்க புக்ககத்தினருக்கு இது பத்தித் தெரியாது. எங்க பையருக்குக்கொட்டும்போது தான் என் மாமியாரே அதை முதல் முதலாகப் பார்த்தாங்க. :))))))

    ReplyDelete
  20. இதுக்குப் பண்ணும் கொழுக்கட்டையும் பூரணம் வைச்சு மூடிச் செய்வதில்லை. அரிசிமாவும் வெல்லம், தேங்காய் போட்டுக் கிளறிச் சின்ன உருண்டைகளாய்ப் பிடிச்சு இட்லித்தட்டில் வேக வைச்சு எடுப்பாங்க. சாப்பிடலாம் வாங்க பதிவிலே விரிவா எழுதறேன். :)))))

    ReplyDelete
  21. வாங்க அப்பாதுரை, மூணு நாளுமே வடை உண்டு. இப்போல்லாம் போகியன்னிக்குச் செய்தாலே பெரிய விஷயம்! சாப்பிடவும் ஆளில்லை! :(
    சங்கராந்திக்கு ஹிஹிஹி, பொங்கலுக்கு உளுந்துவடைதான் செய்வாங்க. போகிக்குத் தவலை வடை எல்லாம் இல்லை; ஆமவடை தான்! :))))

    இந்தத் தவலை வடை பத்தி சாப்பிடலாம் வாங்க பதிவிலே எழுதி இருக்கேன். போய்ப் பாருங்க. எங்க பக்கம் இதுவும் கோதுமை அல்வாவும் மாப்பிள்ளை ஸ்பெஷல்! :))))))

    ReplyDelete
  22. வாங்க கீதா சந்தானம், குழந்தைகளுக்கு நிறைநாழியில் மஞ்சள் குங்குமம் வைச்சு சுவாமிக்கு எதிரே வைத்து அடியில் கொஞ்சம் அரிசி, பருப்பு, மஞ்சள் போட்டு கொழுக்கட்டைகள், இலந்தைப்பழம், கரும்புத்துண்டுகள், காசுகள்(முழுக்காசாய் இருக்கணும்) நாலணா, எட்டணா, ஒரு ரூபாய் இப்படி எல்லாம் போட்டு அதைப் புதுசாய்ப் பிறந்த சின்னக் குழந்தையின் தலையில் வலிக்காமல் மெதுவாய்க்கொட்டுவார்கள். கொட்டும்போதே பொறுக்குவது தான் சுவாரசியம். சிலருக்குக் கொழுக்கட்டை மட்டும் கிடைக்கும். சிலருக்குக்கரும்புத்துண்டுகள். சிலருக்குக் காசுகள்னு! :)))))))

    ReplyDelete
  23. Nostalgic!
    With all the old days celebrations rushing in the mind while reading this page, there is a feeling of having eaten a good sakkarapongal:-)

    ReplyDelete
  24. கீதா இப்படி பழைய நினைவுகளைக் கொட்டிக் கலங்கடிக்கிறீர்களே:)
    பொங்கலன்னிக்கு உளுந்துவடையும்,அவியலும்,சர்க்கரைப் பொங்கலும்தான்.
    போகிக்குக் கண்டிப்பா போளி உண்டு.
    கனுவன்னிக்குக் கதம்ப ,கலந்த சாதங்கள் உண்டு.அருமையான பதிவு.

    ReplyDelete