படைப்புக் கடவுளான பிரம்மாவுக்குத் தனியான கோயில்களே கிடையாது. இது ஒரு சாபத்தினால் என்பதை நாம் அனைவரும் அறிவோம், என்பதோடு பிரம்மாவுக்கும் நம்மைப் போல் முடிவு உண்டு என்பதும் காரணமாய் இருக்கலாம்.. ஆனாலும் அவருக்கென ஒரு சந்நிதி எல்லா சிவாலயங்களிலும் காணப்படும். சந்நிதி இருந்தாலும் அவருக்கென அர்ச்சனைகளோ, அலங்காரங்களோ, அபிஷேஹமோ நடைபெறாது. வட மாநிலமான ராஜ/ஸ்தானில் உள்ள புஷ்கர் என்னும் க்ஷேத்திரத்தில் மட்டும் பிரம்மாவுக்கெனத் தனிக் கோயில் உண்டு. வடநாட்டுப் பாணியில் காணப்படும். ஆனால் இந்தியாவிலேயே பிரம்மாண்டமான பிரம்மாவும், அவருக்கெனத் தனியான சந்நிதியும் தனி அலங்கார, அபிஷேஹ ஆராதனைகளும் நடைபெறுகின்றன என்பது ஒரு சிலருக்குத் தெரிந்திருக்கலாம். இவரின் உருவமும் பெரிய உருவம் என்பதோடு தனக்கெனத் தனியான கருவறையில் அருள் பாலிக்கிறார். இவரைத் தரிசிப்பதும் எல்லாராலும் இயலாது எனவும் யாருடைய தலை எழுத்தில் மாற்றம் ஏற்படுமோ அவர்களால் மட்டுமே தரிசிக்க இயலும் என்பதும் சொல்லப் படுகிறது. அத்தகையதொரு கோயில் இங்கே திருச்சிக்கு அருகே உள்ள திருப்பட்டூர் என்னும் தலத்தில் உள்ளது.
சமீப காலங்களாக இந்தக் கோயில் பற்றி, "சக்தி விகடன்" மூலமாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆகவே இந்தக் கோயிலும் இப்போது கூட்டம் நிறைந்த கோயிலாக மாறி வருகின்றது. திங்கட்கிழமை அன்று இந்தக் கோயிலில் பிரம்மாவைத் தரிசிப்பது விசேஷம் என்கின்றனர். நாங்கள் சென்றதும் ஒரு திங்கட்கிழமை தான். இது தற்செயலாக நேர்ந்தது. ஒரே நாளில் சுற்றிய ஊர்களில் சமயபுரத்துக்கு அடுத்து நாங்கள் சென்றது திருப்பட்டூர். திருப்பிடவூர் என்னும் பெயர் கொண்ட இது தற்போது திருப்பட்டூர் என அழைக்கப் படுகிறது. இங்கு உறையும் ஈசன் பிரம்மபுரீஸ்வரர் எனவும், அம்பிகை பிரம்மநாயகி எனவும் அழைக்கப்படுகின்றனர். இந்த ஆலயம் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்தக் கோயில் பழமை வாய்ந்த கோயில் எனவும் பல்லவர் காலம் தொட்டு இருப்பதாகவும் கேள்விப் படுகிறோம். ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றோமானால் வேத மண்டபம் எனப்படும் மண்டபம், நாத மண்டபம் எனப்படும் மண்டபம் ஆகியவற்றைத் தாண்டிச் சென்றால் அர்த்த மண்டபம் வருகிறது.
அங்கே கருவறையில் பிரம்மபுரீஸ்வர, மண்டூகநாதர், கைலாச நாதர் என்ற பெயர்களில் அழைக்கப்படும் ஈசன் லிங்க உருவில் அருள்பாலிக்கிறார். அன்னை பிரம்ம நாயகி பராசக்தி, பிரம்ம சம்பத் கெளரி என்னும் பெயர்களில் அருள் பாலிக்கிறாள். பல்லவர்கள் காலம் தொட்டு நாயக்க மன்னர்கள் வரை பல மன்னர்களும் இந்தக் கோயிலுக்குத் திருப்பணி செய்திருக்கின்றனர். கோயில் பழமையான கோயில் என்பது பார்த்தாலே தெரிய வருகிறது. ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 15, 16, 17 தேதிகளில் காலையில் உதிக்கும் சூரியன் முதல் வணக்கத்தை பிரம்மபுரீஸ்வரருக்குச் சமர்ப்பிக்கிறான். அதைக் காணவே அக்கம்பக்கம் உள்ள பக்தர்கள் வருவார்களாம். இவருக்கு வடப்புறத்தில் உட்பிரகாரத்தில் தனிச் சந்நிதியில் ஆறடி உயரத்துக்கு தியானக் கோலத்தில் பத்மாசனமிட்டுத் தாமரை மீது அமர்ந்த வண்ணம் காட்சி அளிக்கிறார் பிரம்மா. மஞ்சள் காப்பிட்டு எந்நேரமும் மஞ்சள் வண்ணத்திலேயே காட்சி கொடுக்கிறார்.
இவரை இந்தியாவிலேயே பிரம்மாண்டமான பிரம்மா என்கின்றனர். புஷ்கரைத் தவிர திருக்கண்டியூரில், உத்தமர் கோயிலில், கொடுமுடியில், திருநெல்வேலி மாவட்ட பிரம்மதேசத்தில் என இன்னும் ஐந்து இடங்களில் தனிச் சந்நிதி கொண்டிருக்கும் பிரம்மா இங்கே எப்படி வந்தார் என்பதற்கான வரலாற்றைப் பார்ப்போமா?
தனிச் சந்நிதியில் ஆறடி உயரத்துக்கு தியானக் கோலத்தில் பத்மாசனமிட்டுத் தாமரை மீது அமர்ந்த வண்ணம் காட்சி அளிக்கிறார் பிரம்மா. மஞ்சள் காப்பிட்டு எந்நேரமும் மஞ்சள் வண்ணத்திலேயே காட்சி கொடுக்கிறார்.
ReplyDeleteசிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
பூனாவில் இருந்தப்போ தத்தாத்ரேயர் கோவில் போனோம் அவரை ப்ரும்மா என்கிரார்களே அது வேரயா?
ReplyDeleteவாங்க ராஜராஜேஸ்வரி, உங்கள் வரவில் மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டுகளுக்கு நன்றிங்க.
ReplyDeleteஇல்லை லக்ஷ்மி, தத்தாத்ரேயர் அத்ரி மஹரிஷியின் புதல்வர். பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரின் அம்சங்களைக் கொண்டவர். வட மாநிலங்களில் தத்தாத்ரேய வழிபாடு அதிகம் உண்டு. குறிப்பாய் குஜராத்தில் தனிக்கோயிலே உள்ளது.
ReplyDeleteதர்சித்தோம்.
ReplyDelete