எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, May 13, 2013

உப்பு வாங்கலையோ உப்பு!



அக்ஷய த்ரிதியை அன்னிக்கு வாங்க வேண்டிய முக்கியமான பொருள் உப்புத் தான். தங்கமோ, வெள்ளியோ, வைரமோ, பிளாட்டினமோ, பட்டுப் புடவைகளோ அல்ல. ஆனால் நம்ம மக்களுக்கு இதை எல்லாம் யாரு புரிய வைக்கிறது? போறாததுக்கு எல்லாப் பத்திரிகைகள், தினசரிகள், தொலைக்காட்சிகளில் எல்லாம் அக்ஷய த்ரிதியை விற்பனைச் சலுகைகள் வேறே அறிவிச்சிருக்காங்க. இதுக்காக உண்மை விலையில் எவ்வளவு கூட்டி இருப்பாங்கனு தெரியலை. ஆனாலும் ஜனங்க போய்க் குவிஞ்சு கும்பலில் மாட்டிக்கொண்டு எதையோ வாங்கிட்டு வரதிலே ஒரு சந்தோஷம். நமக்கு நல்ல நாளிலேயே கூட்டம் அலர்ஜி. இப்போ இந்தக் கடுமையான கோடையிலே ம்ஹும், துளிக்கூட ஒத்துவராது. ஆனால் என்ன என்ன பண்ணணும்னு மட்டும் பார்ப்போமா?

அக்ஷய த்ரிதியை என்பது உண்மையில் பூமித்தாய்க்கு நாம் செய்யும் வழிபாடு என்றே கொள்ளலாம். பிரளயம் முடிந்து உலகம் பிறந்த நாள் என்றும் சொல்வார்கள். முன்பெல்லாம் பல கிராமங்களிலும் பொன்னேர் பூட்டுதல் என்ற ஒன்று சிறப்பாக நடக்கும். அந்தப் பொன்னேர் பூட்டுவதை அக்ஷய த்ரிதியை அன்று செய்பவர்களும் உண்டு. இந்தக் கோடை முடிந்து மழை ஆரம்பிக்கும். அதற்கு முன்னர் நிலத்தை உழுது போடவேண்டும். உழுது போட ஏரை எடுக்கும் முன்னர் இப்படி ஒரு வழிபாடு ஏருக்கும், நுகத்தடிக்கும் நடத்துவார்கள். இன்னிக்குப் பொன்னேர் பூட்டுவதுனால் என்னனு கிராமத்துக்காரங்களுக்கே தெரியுமா சந்தேகமே!

மேலும் முக்கியமாய்ச் செய்யவேண்டியது பல்வகைப்பட்ட தானங்கள். கோடைக்குப் பயனாகும் விசிறி தானம், குடை தானம், செருப்பு தானம், நீர்மோர் பானகம், தண்ணீர்ப்பந்தல் வைத்தல், அன்னதானம் போன்றவை மிகுந்த சிறப்புடன் செய்யப் பட்டு வந்தன. மதுரையிலே தெருவுக்குத் தெரு தண்ணீர்ப் பந்தல் இருக்கும் முன்பெல்லாம். அங்கே கொடுக்கப் படும் தயிர்சாதத்தை அதன் சுவைக்காகவே திரும்பத் திரும்பப் போய் வாங்கிச் சாப்பிட்டது ஒரு காலம். ஆனால் அப்போ அக்ஷயத்ரிதியை என்றோ, அதுக்காகச் செய்யறாங்கன்னோ தெரியாது. புரிஞ்சுக்கவும் முயற்சி செய்யலை. மிகச் சில வீடுகளிலேயே அன்னதானம் சிறப்பாகச் செய்து வந்தார்கள். தயிர்சாதம் கொடுப்பது மிகவும் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. அன்னப் பஞ்சம் வராமல் தடுக்கவே ஏற்பட்ட நாள் என்று சொன்னாலும் மிகையில்லை.

அன்னதானம் செய்யும் சத்திரங்கள், மடங்கள் போன்றவற்றில் அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்வார்கள். இந்த அன்னக்கொடியில் அன்னபூரணி சித்திரமாக வரையப் பட்டிருப்பாள் என்று எனக்கு நினைவு. வேறு மாதிரி இருந்தால் பெரியவங்க யாரேனும் சொல்லி அருளணும். எனக்கு நினைவு தெரிந்து இளையாத்தங்குடி வித்வத் சதஸ் நடந்தப்போ பரமாசாரியாள் அவர்கள் அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்ததாகவும் நினைவு. அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்ய ஆரம்பிச்சா நேரம், காலம் இல்லாமல் பசி என்று வருபவர்களுக்கு உணவு அளிக்கப் படும். ஜாதியோ, மதமோ பார்த்ததாகவும் தெரியவில்லை. அப்படி ஒரு தானம் இந்தக் காலங்களில் அளிக்கப் படுகிறதானும் தெரியலை. ஆனால் பழங்காலத்தில் சோழர் காலம் தொட்டே இந்தப் பழக்கம் இருந்ததாகத் தெரிய வருகிறது. பார்க்க!அன்னக்கொடி விழா என்ற தலைப்பிலே காணலாம். மேலும் நம்ம தமிழ்த் தாத்தாவும் அவர் பங்குக்கு இந்த அன்னக்கொடி விழா பத்தி எழுதி இருக்கார் தமது என் சரித்திரத்திலே. அதிலிருந்து சில பகுதிகள் தாத்தாவின் நடையிலேயே கீழே! அவர் தமிழ் படித்த மடத்தின் குருபூஜையின் நிகழ்வுகளின் போது நடைபெற்ற அன்னதானம் பற்றி எழுதி உள்ளார். ஆகவே அக்ஷய த்ரிதியை என்றால் அதை தானம் செய்யும் ஒரு நாளாகவே கொண்டாடுங்கள்.

அன்ன தானம்
எங்கே பார்த்தாலும் பெருங்கூட்டம். தமிழ் நாட்டிலுள்ள ஜனங்களில்
ஒவ்வொரு வகையாரையும் அங்கே கண்டேன். நால்வகை வருணத்தினரும்,
பாண்டி நாட்டார், சோழ தேசத்தினர் முதலிய வெவ்வேறு நாட்டினரும்
வந்திருந்தனர். 

குரு பூஜா காலங்களில் அன்னதானம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
யார்வரினும் அன்னம் அளிக்கப்படுமென்பதற்கு அறிகுறியாக மடத்தில்
உத்ஸவத்தின் முதல் நாள் அன்னக்கொடி ஏற்றுவார்கள். பல வகையான
பரதேசிகளும் ஏழை ஜனங்களும் அங்கே வந்து நெடு நாட்களாகக் காய்ந்து
கொண்டிருந்த தங்கள் வயிறார உண்டு உள்ளமும் உடலும் குளிர்ந்து
வாழ்த்துவார்கள். பிராமண போஜனமும் குறைவற நடைபெறும்.

பல இடங்களிலிருந்து தம்பிரான்கள் வந்திருந்தனர். மடத்து முக்கிய
சிஷ்யர்களாகிய தக்க கனவான்கள் பலர் காணிக்கைகளுடன் வந்திருந்தனர்.
மற்றச் சந்தர்ப்பங்களில் தங்கள் ஞானாசிரியரைத் தரிசிக்க இயலாவிட்டாலும்
வருஷத்துக்கு ஒரு முறை குருபூஜா தினத்தன்று தரிசித்துப் பிரசாதம் பெற்றுச்
செல்வதில் அவர்களுக்கு ஒரு திருப்தி இருந்தது. ஸ்ரீ சுப்பிரமணிய
தேசிகருடைய அன்பு நிரம்பிய சொற்கள் அவர்கள் உள்ளத்தைப் பிணித்து
இழுத்தன. தமிழ்நாட்டில் தென்கோடியில் இருந்தவர்களும் இக்குருபூஜையில்
வந்து தரிசிப்பதை ஒரு விரதமாக எண்ணினர். அவரவர்கள் வந்த வண்டிகள்
அங்கங்கே நிறுத்தப் பட்டிருந்தன. குடும்ப சகிதமாகவே பலர் வந்திருந்தார்கள்.


எல்லா தானங்களும் செய்த கர்ணன் அன்னதானமே செய்யாததால் சுவர்க்கம் சென்றும் கூடப் பசியால் துடித்த கதையும், கட்டை விரலைச் சூப்பச் சொல்லி பகவான் சொன்னதன் பேரில் அவன் பசி அடங்கியதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் தானே? ஆகவே இயன்ற அளவு ஒரு ஏழைக்கானும் அன்னமிடுங்கள். அன்னதானம் செய்ய முடியவில்லையா? ஏழை மாணவ, மாணவிகளுக்குக் கல்விக்கு உதவுங்கள். நீத்தோர் கடன்களை முக்கியமாய்ச் செய்யுங்கள். ஏழைகளுக்கு உங்களால் இயன்ற ஆடை தானம் செய்யுங்கள். இன்றைய நாள் கொடுப்பதற்கு உரிய நாளே தவிர, கடைகளுக்குக் கூட்டத்தில் இடிபட்டுச் சென்று பொருட்களை வாங்கிக்குவிக்கும் நாளல்ல. எதுவுமே முடியலையா, இறைவனை மனமாரப் பிரார்த்தியுங்கள். அருகில் இருக்கும் கோயிலுக்குச் செல்ல முடிந்தால் செல்லுங்கள். முடியலையா வீட்டில் இருந்த வண்ணமே வழிபடுங்கள் போதும்.

2010 ஆம் ஆண்டு அக்ஷய த்ரிதியைக்குப் போட்ட பதிவின் மீள் பதிவு. 

28 comments:

  1. சொல்லப்பட்ட அனைத்தும் அருமை...

    விளக்கத்திற்கும் மிக்க நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அட்சயத் திருதியைக்கு பவுனுக்கு 16 ரூபாய் குறைந்திருக்காம். மக்களுக்கும் விவரங்கள் எல்லாம் பெரும்பாலும் தெரிந்திருக்கு! ஆனாலும் முன்பதிவு எல்லாம் செஞ்சு, ஆபீசுக்கு லீவு போட்டுட்டு அங்கு போய் லைன்ல நிக்கறாங்க... நல்ல விவரமான பதிவு.

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. உப்பு வாங்கலையோ உப்பு!"
    உள்ளவும் பகிர்ந்த அருமையான பகிர்வுகள்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. உப்பு வாங்கினேன், தயிர் சாதம் செய்து, அவல் பாயசம் செய்து இறைவனுக்கு வைத்து வழிபட்டு(கனகாதாரா கேஸட்டில் ஓடவிட்டு (கூடவே பாடிக் கொண்டு) காக்கைக்கு உணவு வைத்து நிம்மதியாய் வீட்டில் இருக்கிறேன், நீங்கள் சொன்னது போல்.
    ஒருவருக்கு பழங்கள் இனிப்புகள் வழங்கினேன்.

    ReplyDelete
  6. அட்சய திருதியைக்கு உப்பு வாங்கினால் போதுமா? அடுத்த வருடத்திலிருந்து அமல் படுத்திவிடுகிறேன்.
    தமிழ் தாத்தாவின் 'அன்னக்கொடி விழா'
    பற்றிய தகவல்கள் அருமை!

    ReplyDelete
  7. நீங்கள் கொடுத்திருக்கும் 'அன்னக்கொடி விழா' இணைப்பில் போய் பல திருவிழாக்கள் பற்றி தெரிந்து கொண்டேன்.
    பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  8. கர்ணன் கதை தெரியாமப் போச்சே.. (சுவர்க்கத்துல பசி தூக்கம் பிணி எதுவும் கிடையாதுனு சொல்வாங்களே?)

    ReplyDelete
  9. அனிச்சையாய் வீட்டில் உப்பு வாங்கும்படியான சூழல். உங்க பதிவு மகிழ்வளித்தது. அக்ஷய வருடத்திலிருந்து தொடங்கிய இந்த வியாபார தந்திரத்தில் மயங்குவதில்லை.இறைவழிபாடு, தானம் இரண்டுமே சிலாக்கியம்.மக்களை வெகுவாக மூட நம்பிக்கைகளுக்கு ஆட்படுத்தி விடுகிறார்கள்:((

    ReplyDelete
  10. //எல்லா தானங்களும் செய்த கர்ணன் அன்னதானமே செய்யாததால் சுவர்க்கம் சென்றும் கூடப் பசியால் துடித்த கதையும், கட்டை விரலைச் சூப்பச் சொல்லி பகவான் சொன்னதன் பேரில் அவன் பசி அடங்கியதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் தானே? //
    ஆம் தெரியும், தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொல்வதற்காக இந்த.கர்ணன் கதை உதாரணமாக சொல்லப்படும். இந்த கதையை சொல்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்வார்கள்.

    சொர்க்கத்தில் மற்ற யாருக்கும் பசிக்கவில்லையாம், கர்ணனுக்கு மட்டும் பசித்ததாம் , காரணம் கேட்ட போது நீ எல்லா தானமும் செய்தாய் அன்னதானம் மட்டும் செய்யவில்லைஎன்றும் ஆள் காட்டி விரலை வாயில் வைத்தால் பசிக்காது என்று சொன்னதாகவும் சொல்வார்கள் காரணம்
    ஒரு யாசகனுக்கு பொன் பொருள் கொடுத்தாராம் கர்ணன். சாப்பாடு சாப்பிட வேண்டும் அன்னசத்திரம் ஏதாவது இருக்கா என்று யாசகர் கேட்டதாகவும் கர்ணன் ஆள்காட்டி விரலால் அன்னசத்திரம் இருக்கும் இடத்தை காட்டியதாகவும் சொல்வார்கள்.
    அதனால் அந்த ஆள் காட்டி விரல் பசித் துன்பத்தை போக்கியதாகவும் அதை வாயில் வைத்தால் கர்ணன் பசி மறையும் என்று சொர்க்கத்தில் சொன்னதாக கதை கேட்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  11. எங்க அம்மம்மா கண்டிப்பா உப்பு வாங்குவாங்க. நானும் நேற்று உப்பு வாங்கி அதையும் பூஜையில் வெச்சு, கிடைத்த நெல்லிக்கனியையும் வெச்சு பூஜை செய்தேன். பால் பாயசம் நைவேத்தியம்.

    முடிஞ்சதை தானம் கொடுத்து அட்சய திருதியையை ஆனந்தமா முடித்தேன்.

    ReplyDelete
  12. வாங்க டிடி, நன்றிக்கு நன்றி.

    ReplyDelete
  13. வாங்க ஸ்ரீராம், தேவை இல்லாமல் அக்ஷயத்ருதியை என்பதற்காகத் தங்கம் வாங்கணுமா என்ன? அதிலும் அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு! நிஜம்மாவே மக்கள் இப்படி மூட நம்பிக்கையோடு இருப்பது அதிர்ச்சியாத் தான் இருக்கு.

    ReplyDelete
  14. வாங்க வைகோ சார், நன்றிங்க.

    ReplyDelete
  15. வாங்க ராஜராஜேஸ்வரி, நன்றிங்க.

    ReplyDelete
  16. வாங்க கோமதி அரசு, நேத்து எனக்குப் பழங்கள் ஒருத்தர் வழங்கினார். :))))

    ReplyDelete
  17. வாங்க ரஞ்சனி, இந்த அன்னக்கொடி பத்தி ரொம்பப் பேருக்குத் தெரியலை! :))) நான் மதுரையிலே சங்கராச்சாரியார் வரச்சே எல்லாம் அன்னக்கொடி போட்டுப் பார்த்திருக்கேன். தானப்ப முதலி அக்ரஹாரத்தில் கண் ஆஸ்பத்திரி எனவும் மங்கள நிவாஸ் எனவும் அழைக்கப்படும் கட்டிடத்தில் தான் அன்னக்கொடி போடுவாங்க. :))) கூட்டம் நெரியும்!

    ReplyDelete
  18. அப்பாதுரை, சுவர்க்கத்திலே எதுவும் இல்லாமல் இருந்தும் கர்ணனுக்குப் பசித்தது. அதன் காரணம் கீழே கோமதி அரசு சொல்லிட்டாங்க.

    ReplyDelete
  19. நிலாமகள், வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க.

    ReplyDelete
  20. கோமதி அரசு, இந்தக் கதையே தான். :))))

    ReplyDelete
  21. வாங்க புதுகை, ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  22. கஷ்டப்பட்டு அருகாமையில் இருக்கும் கோவிலுக்குப் போவதை விட்டு அருகில் இருக்கும் கோவிலுக்குப் போகலாமே!! :)

    ReplyDelete
  23. @இ.கொ. திருத்தியாச்சு சீத்தலைச் சாத்தனாரே! :P :P :P :P

    ReplyDelete
  24. கர்ணபரம்பரைக் கதைகள் மூலம் கர்ணனின் கதையும் தெரிகிறது. தங்கம் வாங்க கதை கட்டும் உத்தியால் வியாபாரம் செவ்வனே நடக்கிறது நிஜம்தானே.

    ReplyDelete
  25. வாங்க ஜிஎம்பி சார், யாரும் தங்கம் வாங்கச் சொல்லி மக்களைத் தூண்டலை. தொலைக்காட்சி, தினசரி விளம்பரங்கள் மூலமா மக்களை மூளைச் சலவை செய்து வாங்க வைக்கின்றனர். இது ஒரு வியாபார தந்திரம். இது மாதிரியே இன்னும் ஒரு மாசத்தில் வரும் பாருங்க, ஆடித் தள்ளுபடினு! இதிலெல்லாம் மயங்காமல் இருக்கணும்.

    ReplyDelete
  26. கதைக்கு நன்றிங்க கோமதி அரசு.

    ReplyDelete
  27. நமக்கு வீட்டு வழிபாடுதான்.

    ReplyDelete
  28. அப்பாதுரை,
    மாதேவி,

    நன்றி.

    ReplyDelete