எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, October 29, 2013

அயோத்தியை நோக்கி! சரயு நதிக்கரையில்!

சாலைகள் எல்லாம் நம்ம தமிழ்நாட்டின் பிரபலமான மவுன்ட்ரோடையும், நூறடிச் சாலையையும் விட அகலமானது.  அப்படி இருக்கையிலேயே பராமரிப்பு இல்லாமல் மோசமான நிலைமை.  அதுவும் சுங்கச் சாவடி அருகே மிக மட்டமான சர்வீஸ் ரோடு.  நாங்க அந்த சர்வீஸ் ரோடில் போயிருக்கணும்.  ஆனால் ஓட்டுநர் பாலத்தின் மீது போனார்.  சரி, வடக்கே போய்த் திரும்பணுமோனு நினைச்சோம்.  சற்று நேரத்தில் ஒரு பெரிய ஆற்றுப் பாலம்.  கங்கை என்றார் ஓட்டுநர்.  அங்கே எப்படி கங்கை வந்தது?  பூகோள ரீதியாக வாய்ப்பே இல்லையே எனத் தோன்றினாலும் திக்குத் திசை புரியாமல் என்னத்தை சொல்வது? பாலம் தாண்டியும் அயோத்தி வந்தபாடில்லை.  லக்னோவில் இருந்து இரண்டரை மணி நேரம் என்றார்கள். இப்போ மூன்று மணி நேரம் ஆகிவிட்டது.  ஓட்டுநரை வண்டியை நிறுத்திவிட்டு அக்கம்பக்கம் விசாரிக்கச் சொன்னோம்.  அரை மனதாக அவர் இறங்கிப் போய் விசாரித்து வந்தார்.  பின்னர் சற்றுத் தூரம் சென்று வலப்பக்கமாகத் திரும்பினார். வண்டி தென் கிழக்கே சென்றது.  சரியான பாதையில் செல்லவில்லை என்பதையும் ஓட்டுநர் தவறாகச் சென்று விட்டதையும் புரிந்து கொண்டாலும் அவரிடம் ஒன்றும் சொல்லவில்லை. கடைசியில் அந்த நதி சரயுதான் என்றும், சரயுநதிப்பாலம் எனவும் புரிந்தது.  இருட்டி விட்டதால் பெயர்ப்பலகையும் கண்ணில் படவில்லை.  அரைமணியில் ஊர் வந்துவிட்டது.  ஆனாலும் இருட்டு அப்பி இருந்தது.  எங்கேயும் தெரு விளக்குகளே இல்லை.  இதுவே நம்ம தமிழ்நாடு என்றால் இம்மாதிரி பிரசித்தி பெற்ற ஒரு முக்கியமான இடத்தை இருளில் மூழ்க அடிப்பார்களா என்றும் தோன்றியது. அந்த இருட்டிலும் எங்கள் வண்டியைப் பார்த்த சிலர், "ஜெய் சியாராம்!" என கோஷமிட்டனர்.  நாங்களும் "ஜெய் சீதா ராம்" என பதிலுக்கு கோஷமிட்டோம்.  அங்கிருந்த ஒருவரிடம் நல்ல தங்குமிடம் பற்றி விசாரித்ததில் அவர் தானே வந்து வழிகாட்டுவதாகச் சொல்லித் தன்னுடன் வந்த ஒரு சிறுவரை வண்டியில் ஏற்றினார்.  ஓட்டுநருக்குச் சம்மதமில்லை. அவர் தன் வண்டி முதலாளி மூலம் யாரோ வழிகாட்டியின் பெயரை வாங்கி வைத்திருந்ததால் அவரிடம் தான் செல்வேன் எனப் பிடிவாதம் பிடித்தார். 

எங்கள் வண்டியைத் தொடர்ந்து வந்த அந்த ஆள் கடைத்தெருவுக்கு ஓட்டச் சொல்லி அங்கிருந்த ஒரு ஆளைக் காட்டினார்.  இவர் தான் நீங்கள் தேடி வந்த வழிகாட்டி என்றார்.  ஓட்டுநருக்கு அப்போதும் நம்பிக்கை இல்லை.  ஆனால் அந்த வழிகாட்டி அந்தச் சிறுவனை இறக்கிவிட்டு வண்டியில் ஏறி உட்கார்ந்து வரும் வழியெல்லாம் விளம்பரம் செய்திருந்த ராம்ப்ரஸ்த் என்னும் ஹோட்டலுக்கு ஓட்டும்படி கூறினார்.  வண்டியும் அங்கே சென்றது.  பாதையெல்லாம் குண்டும், குழியும்.  மழை வேறு விட்டு விட்டுப் பெய்ததால் சேறு, சகதி. எங்கெங்கு காணினும் குடிசைகள், மண் குடிசைகள். மேலே தார்பாலின் மட்டும் போடப்பட்ட தாற்காலிக வீடுகள்.  அங்கேயும் ஆடு, மாடுகள். எல்லாவற்றையும் தாண்டி சரயு நதியின் தென் கரையில் அமைந்திருந்த ராம்ப்ரஸ்த் ஓட்டலுக்குச் சென்றது.  சாமான்களை இறக்காமல் உள்ளே சென்று அங்கே ரிசப்ஷனில் இருந்த நபரிடம் பேசினோம்.  முதலில் அறையைக் காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு அறையைக் காட்டினார். அறை வசதியாக இருந்தது.  வாடகை அவர் அதிகம் சொல்ல, நாங்கள் மறுக்க, பேரம் நடந்து கடைசியில் ஏ.சி. வேண்டாம்னு சொன்னதாலே ஏ.சி. இல்லா அறை வாடகைக்கு ஒத்துக் கொண்டார்.  அப்போத் தான் கண்டிப்புக் காட்டினாரே ஒழிய மிகவும் பணிவாகவும், அன்பாகவும், மரியாதையாகவும் கடைசி வரை இருந்தார்.

வட மாநிலங்களில் ஹோட்டலில் அறை எடுத்தால் நாம் மாலை ஆறு மணி, இரவு பத்து மணி, நள்ளிரவு பனிரண்டு மணி, காலை இரண்டு மணி, மூன்று மணி என்று போய் அறை எடுத்தாலே அன்று மதியம் பனிரண்டு மணியோடு ஒரு நாள் கணக்குப் பண்ணி முடிந்து விடும்.  நண்பகல் பனிரண்டுக்குப் பின்னர் மறுநாள் கணக்கு வைத்துக் கொள்வார்கள்.  அதோடு அறை வாடகையை முன்னாலேயே கொடுத்துவிட வேண்டும். தமிழ்நாடு, கர்நாடகம் போல இன்று மதியம் மூன்று மணிக்கு வந்தால் நாளை மதியம் மூன்று மணி வரை என்ற கணக்குக் கிடையாது.  அதோடு இங்கே அட்வான்ஸ் என நூறு ரூபாய் கொடுத்தால் கூட வாங்கிக் கொண்டு கடைசியில் பில் செட்டில் செய்தால் போதும்.  ஆனால் வட மாநிலங்களில் இன்றைய தினம் மதியம் பனிரண்டு மணிக்கு நாம் கொடுத்த அட்வான்ஸ் முடிந்து நாம் ஒரு மணி நேரம் கூடத் தங்கினாலும் அடுத்த ஒரு நாள் கட்டணத்தைக் கொடுக்க வேண்டும். நாம் அந்த நாள் தங்குவதெனில் அந்த நாளுக்குரிய கட்டணத்தையும் அன்றே மாலைக்குள் வாங்கிக் கொண்டு விடுவார்கள்.  ஆகவே நாங்கள் இரண்டு நாட்கள் தங்கப் போவதாக முன் கூட்டியே சொல்லிவிட்டு இரண்டு நாள் வாடகையில் கொஞ்சம் போல் நிறுத்திக் கொண்டு மற்றதை முன்பணமாகச் செலுத்தினோம்.  கீழேயே உணவகம் இருப்பதால் அங்கே போய் ஆர்டர் செய்தால் சூடாக உணவும் கிடைக்கும்.  மற்றபடி பால், காபி, டீ என எல்லாமும் கிடைக்கும்.  ரூம் செர்விசும் உண்டு என்றனர். 




சரயு நதிக்கரையில். இங்கே அவ்வளவு ஆழமோ, வேகமோ இல்லை.  அயோத்தி நகர் இதன் கரையில் அமைந்துள்ளது.

படகில் ஏறும் மக்கள். ஓரளவுக்கு சுத்தமாக இருந்தாலும் ஹரித்வார் கங்கையின் படித்துறையைப் போல் அவ்வளவு சுத்தம் என்று சொல்ல முடியவில்லை.  நம் மக்கள் எங்கே சென்றாலும் துணி, ப்ளாஸ்டிக் பைகள், வளையல்கள், மாலைகள், சாப்பாட்டுப் பொட்டலங்கள் எனப் போட்டுவிடுவார்களே! :(


நாங்கள் டிரைவரை செட்டில் செய்து அனுப்பிவிட்டு அறைக்கு வந்து சாமான்களை வைத்து விட்டுக் கை, கால் கழுவிக் கொண்டு மணி ஏழேகால் ஆகிவிட்டபடியால் கீழே போய் ஒரேயடியாக இரவு உணவை முடித்துக்கொள்ள நினைத்தோம்.  அதுக்குள்ளே வழிகாட்டி நபர் ஒரு ஆட்டோக்காரரையும் அழைத்து வந்து மறுநாள் செல்லவேண்டிய பயணத்திட்டத்தைக் கேட்டார்.  அவரைக் காலை வந்து பார்க்கும்படி சொல்லிவிட்டு நாங்கள் கீழே சென்று உணவருந்தினோம்.  அருமையான உணவு.  தந்தூர் ரொட்டியும் ஆலு மட்டரும் சொல்லி இருந்தோம். தந்தூர் ரொட்டி நல்ல பெரிதாக, மிருதுவாக மிக அருமையாக இருந்தது.  சப்ஜியில் காரமும் அதிகம் இல்லை.  மசாலாப் பொருட்களோ, வெங்காயம், பூண்டோ இல்லாமலேயே அருமையாக இருந்தது.  அதற்குப் பின்னர் பாலோ, லஸ்ஸியோ சாப்பிட்டிருக்கலாம்.  மதியம் முழுவதும் காஃபி, டீ சாப்பிடவில்லையே என காஃபி ஆர்டர் செய்தோம்.  அதுதான் நாங்க செய்த தப்பு.  நம்ம ரங்க்ஸ் மு.ஜா. மு. அண்ணாவாகத் தனக்குக் காஃபி வேண்டாம் என அறிவிப்புச் செய்துவிட்டார்.  கொண்டு வந்த காஃபியில் இருவரும் பாதிப்பாதி என முடிவு செய்து இரண்டு கப் கொண்டு வரச் சொல்லி அவருக்குப் பாதி கொடுத்தேன்.  அதுவே இன்ஸ்டன்ட் காஃபி.  அதையும் சரியாகப் போடவில்லை.  பால் காயவில்லை. அதோடு காபியில் இன்ஸ்டன்ட் போட்டுக் கலந்ததும் மறுபடி மேலே மோரில் சாட் மசாலா தூவுவது போல இன்ஸ்டன்ட் பவுடரைப் போட்டுக் கொடுக்கிறார்கள். நல்ல உணவு சாப்பிட்டதுக்கு திருஷ்டியாக அமைந்தது என நினைத்துக் கொண்டே சாப்பிட்டுவிட்டு பில்லைக்கொடுத்துவிட்டுக் காலை ஆறு மணிக்கு அறைக்குத் தேநீர் கொண்டுவரச் சொல்லிவிட்டு அறைக்குத் திரும்பி வந்து உடனடியாகப் படுத்து விட்டோம்.  உறவினர், பையர், பெண் எல்லாரிடமிருந்தும் அலைபேசி அழைப்புக்கள் வரப் பேசிவிட்டு ஒன்பது மணிக்கு மேல் தூங்கி விட்டோம். மறுநாள் காலை எழுந்து நான் மட்டும் அறையிலேயே குளித்துவிட்டேன்.  அதுக்குள்ளே வழிகாட்டி வந்து பார்த்துவிட்டு நாங்கள் எழுந்திருக்கவில்லை எனச் சென்றுவிட்டதாக ரிசப்ஷனில் சொல்லவே அவரை அலைபேசியில் ஆட்டோவுடன் வரும்படி அழைத்தோம்.  சரயு நதியில் குளித்து அன்று பித்ரு த்ர்ப்பணம் செய்ய நினைத்திருந்தார் ரங்க்ஸ்.  அதற்கேற்றாற்போல் அன்று துலாமாசப் பிறப்பும் கூட.  ஆகவே சரயு நதிக்குச் செல்லத் தயாரானோம்.

17 comments:

  1. காபி புதுசா இருக்கு...!

    தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. //அந்த இருட்டிலும் எங்கள் வண்டியைப் பார்த்த சிலர், "ஜெய் சியாராம்!" என கோஷமிட்டனர். நாங்களும் "ஜெய் சீதா ராம்" என பதிலுக்கு கோஷமிட்டோம். //

    :)))

    இப்படி எல்லாம் வேற செய்யணுமா?

    ReplyDelete
  3. மின்சார நிலைமை, சாலை நிலைமை, அறை வாடகை எல்லாமே தமிழ்நாடு பரவாயில்லை என்று அறியும்போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  4. நம் மக்கள் எங்கே சென்றாலும் துணி, ப்ளாஸ்டிக் பைகள், வளையல்கள், மாலைகள், சாப்பாட்டுப் பொட்டலங்கள் எனப் போட்டுவிடுவார்களே! :(//

    அதுதான் மனதுக்கு வேதனை அளிப்பதாய் உள்ளது. புண்ணிய தலம் என தரிசிக்க செல்கிறோம் அங்கும் அசுத்தம் செய்தால் எப்படி!

    பயண அனுபவங்கள் பயனுள்ளதாய் இருக்கிறது.

    ReplyDelete
  5. உத்திரப் பிரதேசத்தின் மின்சாரப் பிரச்சனை பல காலமாகவே இப்படித்தான். சில இடங்களில் 18 மணி நேரம் மின்வெட்டு கூட உண்டு - அதுவும் தினம்தினம்.....

    இங்கே இன்ஸ்டண்ட் காபியில் மேலே கோகோ பொடி தூவி தருவார்கள்.... - அதனால் காப்பி குடிப்பதே இல்லை!

    நானும் பயணத்தில் தொடர்கிறேன்.

    ReplyDelete
  6. //சரயு நதிக்கரையில். இங்கே அவ்வளவு ஆழமோ, வேகமோ இல்லை. அயோத்தி நகர் இதன் கரையில் அமைந்துள்ளது.//

    இந்தப்படம் அழகாக உள்ளது.

    பயனுள்ள சுவாரஸ்யமான பயணக்கட்டுரைக்குப் பாராட்டுக்கள்.

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. வாங்க டிடி, அது கோகோ பவுடராமே, வெங்கட் சொல்றார். :)

    ReplyDelete
  8. ஶ்ரீராம், திருப்பதி தாண்டிட்டாலே மக்கள் நம்மைப் பார்க்கையில் ஹெலோவோ, கைசா ஹைனோ கேட்க மாட்டாங்க. ஜெய் சீதாராம் தான் சொல்வாங்க. நாமும் திரும்பச் சொல்லணும். வட மாநிலங்கள் வாசம் முடிஞ்சு தமிழ்நாடு வந்த சில மாதங்கள் சொல்லிட்டு இருந்தோம்; சரியான ரெஸ்பான்ஸ் இல்லை. அப்புறமா எங்க வீட்டு அழைப்பு மணியை மட்டும் ஜெய்சீதாராம்னு மாத்திட்டோம். :))) இப்போவும் அதே அழைப்பு மணி தான்.

    ReplyDelete
  9. இதுவே குஜராத், கர்நாடகாவில் உடுப்பி போன்ற இடங்களில் ஜெய்ஶ்ரீகிருஷ்ணா என்பார்கள். அதிலும் குஜராத் முழுதும் ஜெய்ஶ்ரீ கிருஷ்ணா கோஷம் தான் முழங்கும்.

    ReplyDelete
  10. உண்மைதான் ஶ்ரீராம், அதோடு தமிழ்நாட்டை முன்னேறிய மாநிலம் என்று சொல்வதிலும் தப்பு இல்லை. :))) ஆனால் திட்ட மதிப்பீடுகளில் மத்திய அரசின் உதவித் தொகை குறைந்துவிடும். :))))

    ReplyDelete
  11. மிடில்க்ளாஸ் மாதவி, வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  12. வாங்க கோமதி அரசு, ஆமாம், மக்களுக்கு என்னிக்குத் தான் புரியுமோனு இருக்கு! :(

    ReplyDelete
  13. ஆமாம் வெங்கட், ஹோட்டலில் கூட மின்சாரம் போயிட்டுப் போயிட்டுத் தான் வந்தது. ஜெனரேட்டர் போட்டுடறாங்களோ, பிழைச்சோமோ! இல்லைனா கஷ்டம் தான். அதுவும் இப்போ சீக்கிரமா வேறே இருட்டிடறது! :)

    ReplyDelete
  14. வாங்க வைகோ சார், சரயு நதியைக் குறித்த இந்தக் குறிப்புக் காரணம் இருக்கு. பின்னால் வரும் பாருங்க. :)))

    ReplyDelete
  15. இருள் மூடிய இடம் :(

    சரயு நதி கண்டுகொண்டோம்.

    ReplyDelete
  16. வாங்க மாதேவி, ஆமாம், இருட்டுத் தான். :( வருகைக்கு நன்றி.

    ReplyDelete