எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, April 09, 2014

காக்கைக்கூட்டில் குயிலா, கழுகா? --2

 அந்தப் பெண் அங்கே இல்லை; சென்றுவிட்டாள் என்பதைக் கேட்டதும் ரவிக்கு முதலில் நிம்மதியே வந்தது என்று சொல்லலாம்.  ஆனாலும் அவன் மனத்தில் ஏதோ முள் போலக் குத்திக் கொண்டிருந்தது. அதற்கேற்றாற்போல் இப்போது குழந்தை அழும் குரல் கேட்கவே திகைத்தே போனான் என்றால் மிகையில்லை. இருவரும் உடனேயே வாசலில் சென்று பார்த்தனர்.  கம்பளியில் சுற்றி இருந்த குழந்தையைத் தூக்குவதற்காகக் குனிந்த சாந்தியைத் தடுத்தான் ரவி.  "குழந்தையை விட்டுவிட்டு எங்கேயும் போயிருக்க மாட்டாள். சற்றுப் பொறு, வந்துவிடுவாள்." என்றான்.  மேலும் தொடர்ந்து, "அவளைப் பார்த்தாலே ஏதோ ஜிப்சிக் கும்பல் போலத் தெரிந்தது.  நீ என்னமோ அவளை எல்லாம் உள்ளே கூப்பிட்டு உபசாரம் பண்ணி......." என்று இழுத்தான். இதற்குள்ளாகத் தோட்டத்தை ஒரு பார்வை பார்த்த சாந்தி, வெளியே செல்லும் கதவு திறந்திருந்ததைப் பார்த்தாள். இரவு பூட்டியது நினைவில் இருந்தது.  உடனே அருகில் சென்று பார்த்தால், ஒரு கல்லை வைத்துப் பூட்டு தகர்க்கப் பட்டிருந்தது.  மழை "சோ"வென்று கொட்டியதால் அவர்களுக்குச் சத்தம் கேட்கவில்லை போலும். ரவிக்குப் பூட்டை உடைக்கும்போது சப்தம் எப்படிக் கேட்காமல் இருந்தது என்பது விளங்கிக் கொள்ளவில்லை. மழைச் சத்தம் இருந்தாலும் பூட்டு உடைக்கப்படும் சப்தமும் கேட்டிருக்கணுமே என வாதித்தான்.

இருவரும் வராந்தாவுக்குத் திரும்பி வந்தனர்.  ஆக அந்தப் பெண் இரவுக்கிரவே குழந்தை பெற்றிருக்கிறாள்.  எங்கே பிறந்திருக்கும்?  அடையாளமே தெரியவில்லையே? மீண்டும் தேடினார்கள் இருவரும்.  அதற்குள்ளாகக் குழந்தை இன்னும் பலமாகக் கத்த ஆரம்பிக்க வேறு வழியின்றி சாந்தி அதைத் தூக்கிக் கொண்டாள்.  சற்றுத் தள்ளி ஒரு மரத்தடியில் என்னவோ குவியலாகத் தென்பட அங்கே சென்று பார்த்தால் குழந்தை பெற்றதற்கான அடையாளங்கள் மணலைப் போட்டு மறைக்கப்பட்டிருந்தன். அதற்குள்ளாக அந்தப் பெண் நடந்து சென்றுவிட்டாளா?  எப்போது குழந்தை பிறந்திருக்கும்?  இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.  ரவி சொன்னான்: "இரு, வேலைக்காரி வந்துவிட்டாளா?  அவளிடம் குழந்தைகளை விட்டு விட்டு வா.  உடனே இந்தக் குழந்தையைப் போலீசில் ஒப்படைப்போம். "என்றான்.  சாந்தி அரை மனதாகக் குழந்தையைப் பார்த்தாள். பெண் குழந்தை என்பது தெரிந்தது.  அவள் பார்ப்பதைப் புரிந்து கொண்ட மாதிரியோ என்னவோ மோகனமாகச் சிரித்தது.  உடனே ரவியை அழைத்து, :"சிரிக்கிறாள், பாருங்க ரவி.  நேற்றுத் தானே நம்ம பாலுவுக்கு ஒரு தங்கை வேணும்னு சொன்னீங்க.  இறைவனாப் பார்த்துக் கொடுத்திருக்கான்.  இந்தக் குழந்தையைப் போய்ப் போலீசில் கொடுக்கச் சொல்றீங்களே!" என்றாள்.

அவளருகே வந்து குழந்தையைப் பார்த்தான் ரவி.  அப்போது அந்தக் குழந்தை அவனைப் பார்த்த பார்வை!  அவன் ஆயுளில் மறக்க முடியாது.  அந்தக் கண்கள் காட்டிய வெறுப்பும், கொடூரமும் இன்றுவரை அவன் யாரிடமும் பார்த்தது இல்லை. ஒரு சின்னக் குழந்தை; நேற்றிரவோ அல்லது இன்று அதிகாலையோ பிறந்திருக்கும்.  அதற்கு இவ்வளவு தெரியுமா என்னும் எண்ணம் உள்ளூர ஓட, மீண்டும் அந்தக் குழந்தையைப் பார்த்த ரவி அதன் கண்களின் கொடூரத்தில் உறைந்தே போனான்.  திக்கித் திணறி சாந்தியிடம், "சாந்தி, இது எப்படிப் பார்க்கிறது பாரேன். " என்றான்.  அதுவரை ரவியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சாந்தி குனிந்து குழந்தையைப் பார்க்க அது மீண்டும் மோகனமாய்ச் சிரித்தது. "என் பட்டு ரோஜாவுக்கு அதுக்குள்ளே என்னை யாருனு தெரிஞ்சு போச்சு!" என்ற சாந்தி அந்தக் குழந்தையை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

"சாந்தி, சாந்தி," என்றான் ரவி. "என்ன ரவி, மறுபடியும் என்ன?" என்று கேட்டவாறு குழந்தையைப் பார்த்துச் சிரித்தாள் சாந்தி.  பின்னர் உள்ளே சென்றாள்.  "இந்தக் குழந்தைக்குப் பால்...." என்று தயங்கின ரவியிடம், "இது ஒரு பெரிய விஷயமா?  நான் தான் பாலுவுக்குப் பாலூட்டுகிறேனே.  அவனுக்கும் ஊட்டி விட்டு இவளுக்கும் ஊட்டுவேன்." என்றாள். குழந்தையை பாலுவின் அருகிலேயே தொட்டிலில் போட்டுவிட்டு உள்ளே சென்றாள் சாந்தி. அங்கேயே நின்றுகொண்டு அந்தக் குழந்தையைப் பார்த்த ரவிக்கு மீண்டும் தூக்கிவாரிப் போட்டது.  குழந்தை அவனைக் கரைகாணா வெறுப்போடும், மிகக் கோபத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த ரவிக்கு முதுகுத் தண்டில் சில்லிட்டது.  தன் குழந்தையைப் பார்த்தான்.  அதுவரை தொட்டிலின் நட்ட நடுவே கிடந்த அவன் குழந்தை இப்போது தொட்டிலின் ஓரமாகப் போய்ப் படுத்திருந்தது.  இது எப்படி சாத்தியம்?? நாலு மாதம் கூட ஆகாத குழந்தையை எவரானும் தூக்கி எடுத்து அங்கே போட்டால் தான் உண்டு.  இவன் எப்படி அங்கே போனான்?  சரி உருள ஆரம்பித்திருப்பான் போல என எண்ணிய ரவி மீண்டும் குழந்தையைத் தொட்டிலில் வழக்கமான இடத்தில் கிடத்தினான். திரும்பித் தன் வேலையைப் பார்க்கச் சென்றான்.

அப்போது ஒரு அமாநுஷ்யமான சப்தம்.  ரவி திகைப்போடு மீண்டும் தொட்டிலருகே வரப் புதுக்குழந்தை அவனை வெறுப்புடன் பார்த்தது.  அவன் குழந்தை மறுபடி தொட்டிலின் கோடியில் ஒண்டிக் கொண்டு படுத்திருந்தது. ரவிக்கு அவனையும் அறியாமல் குயிலின் நினைவு வந்தது.  காக்கைகளின் கூட்டில் அதன் முட்டைகளோடு தன்னுடைய முட்டையையும் வைக்கவேண்டிக் குயில் காக்கையின் முட்டையைக் கீழே தள்ளிவிடுமாம். அதுபோல் இந்தக் குழந்தையும்....ச்சேச்சே, அப்படி எல்லாம் நடைபெறாது. மறுபடி குழந்தையைத் தூக்கித் தொட்டிலில் கிடத்தினவன் சாந்தியை அழைத்து பாலு தொட்டிலின் ஓரத்துககு நகர்ந்து செல்வதாகக் கூறி பத்திரமாய்ப் பார்த்துக் கொள்ளச் சொன்னான்.  அன்றைக்கும் வேலைக்குச் செல்லாமல் இருக்க முடியாது என்பதால் ரவி வேலைக்குச் செல்ல ஆயத்தமானான்.

செல்லும் முன் சாந்தியிடம் மறுபடி அந்தக் குழந்தையைப் போலீசில் ஒப்படைக்க வேண்டியதைக் குறித்துப் பேசினான்.  சாந்திக்குக் கோபம் வந்தது. அல்லது ஏதேனும் அநாதை ஆசிரமத்தில் விட்டுவிடலாம் என்கிறான்.  இந்தக் குழந்தையால் நமக்குள் பிரிவினை ஏற்படுமோ எனத் தான் அஞ்சுவதாகவும் தெரிவிக்கிறான். எல்லாவற்றையும் கேட்ட சாந்தி, கிண்டலாக அவனுடைய கற்பனை வளத்தைக் குறித்துப் பாராட்டிவிட்டு இந்தக் குழந்தைக்காகச் செலவு செய்ய அவனுக்கு இஷ்டமில்லை எனில் வேண்டாம் என்றும் தான் தன் சம்பாத்தியத்திலேயே பார்த்துக் கொள்வதாகவும் கூறுகிறாள்.  உடனேயே ரவி, "பார்,பார், இப்போதே நமக்குள்ளாக இந்தப் பிரிவினைப் பேச்சு ஆரம்பமாகிவிட்டது." என்று வருந்த, " அது உங்களுடைய கற்பனா சக்தியால் ஏற்பட்டது.  ஒரு சின்னக்குழந்தை நம்மைப் பிரிக்குமா? நீங்கள் எடுக்கும் கற்பனைத் தொடர்களுக்காகக் கற்பனை செய்வதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்." என்று கேலி செய்கிறாள்.

அதோடு விட்டு விட்டு அலுவலகம் சென்ற ரவிக்கு அங்கே இருப்பே கொள்ளவில்லை. தன் சம்பந்தப்பட்ட வேலைகளைச் சீக்கிரமாய் முடித்துக் கொண்டு வீடு வந்து பாலுவுக்கு ஏதும் ஆகிவிடவில்லையே என்று பார்த்தான்.


(தொடருவேன்)  விடமாட்டோமுல்ல! :)

17 comments:

  1. பேய்க்கதையா? விவகாரமாகச் செல்கிறதே...பிறந்து சிலமணி நேரங்களே ஆன குழந்தை முகத்தில் வெறுப்பும் கொடூரமுமா? சாமி... போகப் போக கதை பயங்கரமா போகும் போலேருக்கே...

    ReplyDelete
  2. ரொம்ப திகிலாக இருக்கிறதே... மர்மத் தொடரரோ அம்மா...? ("தொடரும்" போடவில்லை....?)

    ReplyDelete
  3. கதையின் முன்னுரை சரியாக நினைவில் இல்லை ஶ்ரீராம். பேய்க்கதையா என்று கேட்டால்! ம்ஹூம், ஆனால் அமாநுஷ்யமான நிகழ்வுகள் நடக்கும். :))))

    ReplyDelete
  4. மர்மக் கதைதான் டிடி, தொடரும் போட்டுவிட்டேன். :)

    ReplyDelete
  5. குழந்தையின் மர்மம் என்ன? அறிய ஆவலுடன் உள்ளேன்! தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete

  6. இது யாருடைய எழுத்தின் பாதிப்பு. ?

    ReplyDelete
  7. வாங்க தளிர் சுரேஷ், குழந்தையின் மர்மம் என்னனு தான் புரியலை! :(

    ReplyDelete
  8. வாங்க ஜிஎம்பி சார், நான் இந்தக் கதையைப் படிச்சது கிட்டத்தட்ட தொண்ணூறுகளின் ஆரம்பத்தில். அப்புறமா வலை உலகில் இதன் சுருக்கத்தைக் கொடுத்தப்போ வேறொரு நண்பர் சொன்ன ஒரு தகவலை அடிப்படையாக வைத்தே கொடுத்தேன். அப்போல்லாம் நீங்க யாரைச் சொல்றீங்களோ அவர் வலை உலகுக்கு வந்துட்டாரானே எனக்குத் தெரியாது. அப்படி வந்திருந்தாலும் அவர் எனக்கு அறிமுகம் ஆனதும் இல்லை. 2011 ஆம் ஆண்டில் நான் யு.எஸ். போயிருந்தப்போ தான் அவர் நல்ல அறிமுகம். இது அதற்கும் முன்னாலே எழுதப் பட்டது. ஆனால் நான் சொல்லி அவர் இதன் சுருக்கத்தைப் படிச்சிருக்கார். :)))) மற்றபடி யாருடைய எழுத்தின் பாதிப்பும் எனக்கு வராமல் இருக்கணும்னே மிகவும் எளிமையான நடையில் எழுதணும்னு ஒரு கொள்கையே வைச்சிருக்கேன். ரொம்பவே அறிவுஜீவித்தனமாவும் எழுதக் கூடாதுனும் ஒரு எண்ணம் வைச்சிருக்கேன். :))))) என்னை மாதிரி சராசரி ஆட்களுக்குக் கூடப் புரியணும். அது ஒண்ணுதான் என்னோட ஒரே கொள்கை.

    ReplyDelete
  9. இன்னிக்கு உறவினர் வருகையால் கணினி கிட்டேக் கூட வர முடியலை. இப்போத் தான் மடல்களே பார்க்கிறேன். நாளைக்குத் தான் எழுதணும். தப்பிச்சீங்கப்பா எல்லோரும். :))))

    ReplyDelete
  10. தொடர்கிறேன் கீதா.

    ReplyDelete
  11. அமானுஷ்யம்... பேய்க்கதை....

    முழுதும் ஒரேயடியாக படிக்கும் ஆவல்!

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  12. வாங்க இமா! முதல்வரவா? நன்றிங்க.

    ReplyDelete
  13. வெங்கட், நானும் யோசிச்சு யோசிச்சுப் பார்க்கிறேன். இந்தக் கதையோட பெயரே நினைவில் வரலை. பையரிடம் கூடக் கேட்டுட்டேன், அவருக்கு இப்படி ஒரு கதை படிச்ச நினைவே இல்லையாம். :(

    ReplyDelete
  14. இதேபோல அப்பாதுரையின் கதை ஒன்று படித்த நினைவு. அது வேறு என்றாலும் அந்தக் குழந்தை இப்படித்தான் அமானுஷ்யமான செயல்களைச் செய்யும்.
    மற்ற பகுதிகளைப் படிக்கிறேன்.

    ReplyDelete
  15. வாங்க ரஞ்சனி, அது கண் பிடுங்கி நீலன். அப்பாதுரையோட சொந்தக் கற்பனை. இன்னமும் பயங்கரமாக இருக்கும். அதை அவர் அப்புறமாத் தொடரவே இல்லை. ஆனால் அவர் அந்தக் கதை எழுதும்போது எனக்கு இது நினைவுக்கு வந்ததும் அவரிடம் நான் ஏற்கெனவே இந்தக் கதைச் சுருக்கம் கொடுத்திருப்பதைச் சொன்னதும், அவரும் படித்ததும் நினைவில் இருக்கு.

    ReplyDelete
  16. அப்பாதுரை அளவுக்கு சுயமாகக் கற்பனை பண்ணி எல்லாம் எழுதும் திறமை இல்லை. இது படிச்ச கதையை மூலக்கருவை மாத்தாமல் என் இஷ்டத்துக்கு ஓட்டறேன் ரஞ்சனி. :))))

    ReplyDelete
  17. தன்னுடைய முட்டையையும் வைக்கவேண்டிக் குயில் காக்கையின் முட்டையைக் கீழே தள்ளிவிடுமாம்.//

    கதை தலைப்பை பார்த்ததால் புதுவரவு குழந்தை கழுகு போல அல்லவா இருக்கிறது குயில் போல் இல்லை.
    அதன் பார்வைவை வைத்து சொல்கிறேன்.

    ReplyDelete