கங்கையின் கிளை நதியான ஹூக்ளி நதியின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள தக்ஷிணேஸ்வரத்தில் தான் காளி கோயில் உள்ளது. இந்தியாவின் கிழக்குப் பகுதி முழுவதுமே கலாசார ஒற்றுமை ஓரளவு இருக்கிறது. ஆகவே இங்கும் கோயில்கள் மதியம் பனிரண்டு, பனிரண்டரைக்கு மூடிப் பின்னர் மாலை நாலு, நாலரைக்குத் தான் திறக்கிறார்கள். ஆகவே அதற்குள்ளாகக் கோயிலுக்குப் போய்ப் பார்க்க வேண்டும்! தக்ஷிணேஸ்வரம் என்பது நாங்கள் தங்கி இருந்த கல்கத்தா பழைய நகரத்திலிருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் பயண நேரம் ஆங்காங்கே காத்திருத்தலையும் சேர்த்துச் சுமார் இரண்டு, இரண்டரை மணி ஆகிவிடுகிறது. அதிலும் எங்கள் ஓட்டுநர் எப்போதுமே கோபமாக இருந்து கொண்டிருப்பதால் தெரியாத விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் இயலவில்லை. எங்கே முன்னால் போனால் சௌகரியமாக இருக்கும் என்பதை அவரால் சொல்ல முடியவில்லை. ஓட்டலில் கோயில்கள் செல்வதைப் பனிரண்டு மணிக்கு முன்னர் வைத்துக் கொள்ளச் சொல்லி இருந்தார்கள்.
தக்ஷிணேஸ்வரத்திலிருந்து சிறிது தூரத்தில் சின்னமஸ்தா தேவியின் ஆலயமும் இருந்ததை நான் ஏற்கெனவே கேள்விப் பட்டிருந்தபடியால் அங்கேயும் போக விரும்பினேன். ஆனால் இப்போதோ, தக்ஷிணேஸ்வரமே குறிப்பிட்ட நேரத்துக்குள் போக முடியுமானு சந்தேகம். முதலில் தக்ஷிணேஸ்வரம் கோயிலின் பின்னணி குறித்துப் பார்த்துடுவோம்.
ராணி ரசோமணி என்பவரால் கட்டப்பட்டது இந்தக் கோயில். வங்காளியில் ரஷ்மோனி என்கிறார்கள். இவர் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு பல சேவைகள், திருப்பணிகள் செய்திருப்பதாகச் சொல்கின்றனர். 1847 ஆம் ஆண்டில் ராணி ரசோமணி காசிக்குச் செல்லத் தீர்மானித்தார். அங்கே அன்னபூரணிக்கும், காசி விசாலாட்சிக்கும் சேவை செய்யத் தீர்மானித்தார். அந்தக் கால கட்டத்தில் சாலைப்போக்குவரத்தை விடவும் நீர் வழிப் போக்குவரத்தே பிரதானமாகவும் பிரபலமாகவும் இருந்து வந்தது. ஆகவே ராணி காசி யாத்திரை செய்ய வேண்டி சுமார் 24 படகுகள் தயார் செய்யப்பட்டன. அவருடன் கூடப் பயணம் செய்பவர்களாக உறவினர்களில் சிலர், வேலை ஆட்கள், சமையல்காரர்கள், சமையல் பண்டங்கள், பாத்திரங்கள் போன்ற அனைத்தும் தயார் செய்யப்பட்டன. ஆயிற்று! நாளை ராணி கிளம்ப வேண்டும். முதல்நாள் இரவு படுத்தார் ராணி. திடீர் என அவர் முன்னே ஓர் பேரொளி தோன்றியது! அந்த ஒளியில் ஆஹா! இது என்ன! அன்னை பராசக்தி! காளி ரூபமாகக் காட்சி அளிக்கிறாள்! இது கனவா! இல்லை நனவா? ராணி ஆச்சரியத்தில் மூழ்கினார்.
அதோடு மட்டுமா? அன்னை ஏதோ சொல்கிறாளே! அது என்ன? கவனித்துக் கேட்டார் ரசோமணி!
"ரசோமணி! நீ காசிக்கெல்லாம் செல்லவேண்டாம்! இந்த கங்கைக்கரையிலேயே என்னைப் போன்றதொரு விக்ரஹத்தை ஸ்தாபிதம் செய்து கோயில் கட்டி வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்! நான் என்னை அங்கே வெளிப்படுத்திக் கொண்டு குடி இருந்து வருவேன். அங்கு நீ ஏற்பாடு செய்யும் வழிபாடுகளையும் ஏற்றுக் கொள்வேன்!"
இதைக் கேட்ட ரசோமணிக்கு ஆச்சரியம் அதிகம் ஆனது! தான் கண்ட கனவை நனவாக்க முயன்ற ராணி தக்ஷிணேஸ்வரம் கிராமத்தில் ஹூக்ளி நதிக்கரையில் 20 ஏக்கர் நிலத்தை வாங்கினாள். கோயில் கட்ட ஆரம்பித்தாள். 1847 இல் ஆரம்பித்த வேலைகள் 1855 ஆம் ஆண்டில் முடிவடைந்தது. அந்த இடம் ஒரு ஆங்கிலேயரிடம் இருந்தது. அதற்கு முன்னால் அதன் ஒரு பகுதி முஸ்லிம்களின் இடுகாடாக இருந்து வந்திருக்கிறது. அதன் அமைப்பு ஒரு ஆமையைப் போல் காணப்படவே இது சக்தி வழிபாடு செய்ய ஏற்ற இடம் என முடிவு செய்யப்பட்டது. எட்டு வருடங்களும் 90,000 ரூபாய்களும் செலவிடப்பட்டன. முடிவில் 1855 ஆம் வருடம் மே மாதம் 31 ஆம் தேதியன்று காளியின் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அம்பிகையின் திருநாமம் ஜகதீச்வரி மஹாகாளி எனச் சூட்டப்பட்டது. ராம்குமார் சட்டோபாத்யாயா என்பவர் இதன் தலைமைப் பூசாரியாகப் பொறுப்பேற்றார். இவருடைய இளைய சகோதரரே கதாதரர் என அழைக்கப்பட்டுப் பின்னாட்களில் பரமஹம்சர் எனப் பெயர் பெற்ற பகவான் ஶ்ரீ ராமகிருஷ்ணர் ஆவார்.
மஹாப் பிரதிஷ்டை செய்த நாளில் இந்தியா முழுவதும் இருந்து ஒரு லக்ஷத்துக்கும் மேல் அந்தணர்கள் அழைக்கப்பட்டுக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மறு வருடமே ராம்குமார் சட்டோபாத்யாயா இறந்து போக கதாதரர் பொறுப்பேற்றார். அவர் மனைவி சாரதையும் கோயிலின் தென்பாகத்தில் உள்ள சங்கீத அறையில் தங்கிச் சேவைகள் செய்தார். அங்கே இப்போது சாரதைக்கு எனத் தனி சந்நிதி உருவாக்கப்பட்டுள்ளது. அப்போதில் இருந்து சுமார் 30 வருடங்கள் கதாதரர் என்னும் ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் இந்தக் கோயிலின் காளிக்கு வழிபாடுகள் செய்து வந்ததோடு கோயிலையும் பிரபலம் அடையச் செய்தார். 1861 ஆம் ஆண்டில் மிகவும் மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட ராணி ரசோமணி தினாஜ்புத் என்னும் ஊரில் தான் வாங்கிய சொத்துக்கள் எல்லாவற்றையும் இந்தக் கோயிலின் நிர்வாகத்திற்கென ஓர் அறக்கட்டளை ஏற்படுத்தி வைத்தாள். தன்னுடைய இந்த வேலைகளை முடிக்க அவளுக்கு ஃபெப்ரவரி மாதம் 18 தேதி ஆனது. இதற்கெனக் காத்திருந்தாற்போல் மறுநாளே ராணி மரணம் அடைந்தாள். தினாஜ்புத் என்னும் ஊர் தற்சமயம் வங்காள தேசத்தில் உள்ளது.
படங்களுக்கு நன்றி கூகிளார்--விக்கிபீடியா!