எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, February 02, 2016

லிங்கராஜா கோயிலில்!

லிங்கராஜா கோயிலின் உள்ளேயும் தோல் பொருட்கள் எடுத்துச் செல்லவும் அலைபேசி, காமிரா போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மிகவும் அருமையான கோயில். படங்கள் எடுக்க முடியவில்லை என்று வருத்தம் அதிகமாக இருந்தது. இந்தக் கோயிலுக்கு வருடா வருடம் மஹாசிவராத்திரி அன்று வட மாநிலங்களில் உள்ள பல ஊர்களில் இருந்து விரதம் எடுத்துக் கொண்டு கால்நடையாகவே வருவார்கள். வரும் வழியெங்கும் பக்தர்கள் உடுக்கைகளை முழக்கிக் கொண்டும், "போல் பம்!" என்று உரக்கக் கோஷமிட்டுக் கொண்டும் விபூதியை உடலெங்கும் பூசிக் கொண்டு ஆடிப்பாடிக் கொண்டு வருவார்கள். பெரும்பாலும் ஆண்களே வந்தாலும் ஆங்காங்கே ஒரு சில பெண்களும் இருப்பார்கள். இனி கோயிலைக் குறித்த சில செய்திகள்!

ஒடிஷாவிலேயே மிகப் பழமையான கோயில் எனப் பெயர் பெற்றது. ஒடிஷாவின் பழைய நகரத்தினுள்ளேயே இது அமைந்துள்ளது. ஒடிஷாவின் வரலாறு எவ்வளவு தொன்மையானதோ அத்தனை தொன்மை இந்தக் கோயிலுக்கும் உண்டு என்கின்றனர். சோழ மன்னன் ராஜராஜ சோழன் இந்தக் கோயிலுக்கு வந்திருந்து தரிசித்துப் பொற்காசுகளை அள்ளிக் கொடுத்துச் சென்றதாக ஒரு தகவல் கூறுகிறது.  ஒடிஷாவிலேயே மிகப் பெரிய கோயில் எனப் பெயர் பெற்ற இந்தக் கோயிலின் முக்கியக் கோபுரம் சுமார் 180 அடியாகும். இந்தக் கோயில் கோபுரத்தைப் பார்த்தே ராஜராஜ சோழன் தஞ்சைப் பெருவுடையார் கோயில் கோபுரத்தைக் கட்டி இருப்பானோ என்னும் எண்ணம் எனக்குள் எழுந்தது.  ராஜராஜனாலேயே இங்கே சேவலுடன் கூடிய கார்த்திகேயன், மூஞ்சுறுடன் கூடிய விநாயகர் ஆகியோர் காணப்படுவதாகவும் சொல்கின்றனர். கலிங்கத்துப் பாணியில் கட்டப்பட்டு இருந்தாலும் ஆங்காங்கே இடைக்கால நாகரிகப் பாணிகளும் தென்படுகின்றன. முழுதும் படம் பிடிப்பது எனில் குறைந்தது ஒரு வாரமாவது ஆகலாம்.

கலிங்கத்தைக் கேசரி மன்னர்கள், கடம்பா மன்னர்கள், கலிங்க மன்னர்கள் எனப் பலர் ஆண்டு வந்திருக்கின்றனர். என்றாலும் இந்தக் கோயிலைக் கட்டியதாகச் சொல்லப்படுபவர் சோமவம்சி வம்சத்தைச் சேர்ந்த மன்னர் ஒருவரால் என்கின்றனர். இந்தக் கோயில் கட்டமைப்பை   நான்கு பகுதிகளாகப் பிரிக்கின்றனர். முதலில் கர்பகிரஹம், அதன் பின்னர் ஜகன்மோகன மண்டபம் எனப்படும் சபா மண்டபம், அதன் பின்னர் நாட்டிய மந்திரம் எனப்படும் விழாக்கள் கொண்டாடப்படும் மண்டபம், அதன் பின்னர் இறைவனுக்குரிய பல பிரார்த்தனைகளும் ஏற்கப்படும் போக மண்டபம் ஆகியன.  சுற்றிலும் மிகப் பெரிய மதில் சுவரைக் கொண்ட இந்தக் கோயில் வளாகம் இந்த முக்கியக் கோயிலைத் தவிர்த்து இன்னமும் 50 சிறு கோயில்களைக் கொண்டது ஆகும். அதில் முக்கியமானது அம்பிகையின் சந்நிதி இருக்கும் கோயிலும் ஒன்று. அம்பிகையின் பெயர் புவனேஸ்வரி.

இந்தக் கோயிலின் வரலாற்றைக் கவனித்தால் காஞ்சிபுரம் போல் இங்கேயும் ஒரு மாமரமே முக்கியத்துவம் பெறுகிறது. அவ்வளவு ஏன்! புவனேஷ்வரின் ஆதிகாலப் பெயரே ஏகாம்ர க்ஷேத்திரம் என்கின்றனர். ஒரே ஒரு மாமரம் மட்டும் இருந்ததாகவும் ஈசன் அதன் அடியில் குடியிருந்ததாகவும் சொல்கின்றனர். பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஏகாம்ர புராணத்தில் இதைக் குறித்த தகவல்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதே போல் இங்கே ஈசன் ஹரிஹரனாகவே வணங்கப்படுகிறான்.  அதாவது சிவனும் விஷ்ணுவும் இணைந்து இங்கே காட்சி அளிப்பதாக ஐதீகம். ஆரம்ப காலத்தில் இங்கே விஷ்ணுவுக்கு எனத் தனி சந்நிதியோ, விஷ்ணுவின் விக்ரஹமோ இல்லை என்றும் பின்னர் கங்கை ஆட்சியாளர்கள் காலத்தில் புரியில் ஜகந்நாதர் கோயில் கட்டப்பட்ட பின்னர் அதன் தாக்கத்தினால் இங்கேயும் விஷ்ணுவுக்கு விக்ரஹமும் சந்நிதியும் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர்.

தொன்மையான இந்தக் கோயில் மத்திய அரசின் தொல்லியல் துறையாலும், கோயிலின் அறங்காவல் துறையாலும் நிர்வகிக்கப்படுகிறது. ஒரு நாளைக்குக் குறைந்த பட்சமாக 6,000 பக்தர்கள் தரிசிக்க வருவதாகச் சொல்கின்றனர். சிவராத்திரி சமயத்தில் கிட்டத்தட்ட இரண்டு லட்சத்துக்கும் மேல் அதிகம் பக்தர்கள் வருவதாகச் சொல்கின்றனர்.  கோயிலின் வரலாற்றைத் தொடர்ந்து பார்ப்போம்.

லிங்கராஜா கோயில் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக தினகரன்

17 comments:

  1. ஒரு தினம் 6,000 பக்தர்கள் வருகை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது தகவல் நன்று

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, மிகப் பழமையான கோயில் அல்லவா! அதனால் இருக்கலாம். இங்கே ஶ்ரீரங்கத்தில் பார்த்தால் ஒரு நாளைக்குப் பத்தாயிரத்துக்கும் மேல் இருப்பாங்க போல! :)

      Delete
  2. சுவாரஸ்யமான வரலாறு. இந்த இடமெல்லாம் பார்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஶ்ரீராம்.

      Delete
  3. அற்புதமா இருக்கு கீதா.அரிய பொக்கிஷங்கள். நீங்கள் அறிமுகப் படுத்துவதால் தெரிகிறது. நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி வல்லி. கோயிலை முழுதும் சுற்றிப்பார்ப்பதாக இருந்தால் ஒரு நாள் போதாது.

      Delete
  4. அழகான கோயிலைப் பற்றி அருமையான விளக்கமான தகவல்களை அறிந்து கொண்டோம். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி துளசிதரன் தில்லையகத்து!

      Delete
  5. இதுவரை அறியாத கேள்விப்படாத கோயிலாகவும் செய்திகளாகவும் உள்ளன. ஆலய வரலாறுகள் பற்றி தாங்கள் இங்கு சொல்லியுள்ளது சுவாரஸ்யமாகவே உள்ளது.

    //ஒரு நாளைக்குக் குறைந்த பட்சமாக 6,000 பக்தர்கள் தரிசிக்க வருவதாகச் சொல்கின்றனர். சிவராத்திரி சமயத்தில் கிட்டத்தட்ட இரண்டு லட்சத்துக்கும் மேல் அதிகம் பக்தர்கள் வருவதாகச் சொல்கின்றனர். கோயிலின் வரலாற்றைத் தொடர்ந்து பார்ப்போம்.//

    வரலாற்றைத் தொடர்ந்து படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. சில வருடங்கள் புவனேஷ்வரில் வசித்த எனக்கு இது எல்லாம் செய்திக்களம். இத்தனைக்கும் அடிக்கடி இந்த கோயிலுக்குப்போவது உண்டு.
    இனிமெல் எல்லாம் கீதா சாம்பசிவம் சொல்லிக்கேட்டுக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, நன்றி "இ" சார்.

      Delete
  7. ஒடிஷா பக்கம் போனதில்லையாதலால் எல்லாமே புதுத்தகவல்கள்

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம், ஒரு முறை போயிட்டு வாங்க. ஆனால் கோடை காலம் போக வேண்டாம். :)

      Delete
  8. ஒடிஷா பக்கமே போகாததால் எல்லாமே புத்துத் தகவல்கள் நன்றி

    ReplyDelete
  9. அருமையான கட்டிடக் கலை என்பது புகைப்படத்திலிருந்து தெரிகிறது. வெளியிலிருந்தும் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. வெளியே இருந்து எடுத்தால் கோபுரங்கள் எல்லாமும் இடம் பெறாது. :( பார்க்க வாயில் சாதாரணமாகத் தான் இருந்தது. ஒரு வேளை நாங்கள் நுழைந்த வாயில் அப்படி இருந்திருக்கலாமோ என்னமோ! முக்கிய வாயில் வழியாக நாங்கள் செல்லவில்லை! :(

      Delete