படத்துக்கு நன்றி தினமணி தினசரி கூகிளார் வாயிலாக!
கீழே உள்ளவை உ.வே.சா.அவர்களின் நினைவு மஞ்சரியில் "மல்லரை வென்ற மாங்குடியார்" என்னும் கட்டுரையின் சில பகுதிகள். இன்று தமிழ்த்தாத்தாவின் பிறந்த நாள்.
அந்தப் பிராமணர் தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள ஐயம்பேட்டைக்கருகில் இருக்கும் மாங்குடியென்னும் ஊரினர். ஸ்மார்த்த பிராமணர்களுள் மழநாட்டுப் பிருகசரண வகுப்பைச் சார்ந்தவர். கைலாசையரென்பது அவர் பெயர். தஞ்சாவூரில் இருந்த ராஜபந்துக்களாகிய மகாராஷ்டிரர்கள் பக்கத்துக்கிராமங்களிலுள்ள தங்கள் நிலங்களைக் குத்தகைக்கு விட்டுவிடுவார்கள். அந்தக் குத்தகைதாரர்கள் வருஷந்தோறும் நெல்லைக் கொணர்ந்து அவர்களிடம் கொடுத்துவிடுவார்கள். சிலர் தாமே சுமந்து வந்து போட்டுவிட்டுச் செல்வார்கள். கைலாசையர் அத்தகைய குத்தகைதாரர்களுள் ஒருவர்.
அவர் இரண்டு கலம் நெல்லை ஒரு கோணியில் மூட்டையாகக் கட்டித் தம் தலையிற் சுமந்து கொண்டு வந்தவர்; அந்த வழியே செல்லுகையில் பெருங்கூட்டமொன்று இருப்பதைக் கண்டு அங்கே வந்தார். வளைவுக்குள்ளே மல்விளையாட்டு நடப்பது தெரிந்து வேடிக்கை பார்க்கும்பொருட்டு நின்றார்.
மிக்க பலமும் கட்டுமுடைய ஆஜானுபாகுவான அவருடைய உடம்பு இரும்பைப் போன்றிருந்தது. நெற்றியில் இருந்த திருநீறும் கழுத்திலிருந்த ருத்திராட்சமும் அவருடைய சிவபக்தியைப் புலப்படுத்தின. அவரும் அவருடைய வகுப்பினரும் சிறந்த சிவபக்தர்கள்; மூன்று காலத்தும் ஏகலிங்கார்ச்சனை செய்பவர்கள். கைலாசையருடைய வன்மை பொருந்திய உடலும் சிவசின்னங்களின் தோற்றமும் பார்ப்பவர்களுக்குப் பீமசேனனின் ஞாபகத்தை உண்டாக்கின. சிவபக்தியும் தேகபலமும் பொருந்தியவர்களிற் சிறந்தவனல்லவா அவன்??
கைலாசையர் தம் தலையிலிருந்த சுமையை ஒரு பொருளாக மதிக்கவே இல்லை. ஆதலால் அதை இறக்கிவைக்காமல் நின்றபடியே மற்போர் விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் தோளில் ஒரு பை தொங்கியது. அதில் ஐந்தாறு கவுளி வெற்றிலையும் கொட்டைப்பாக்கும் ஒரு பெரிய பாக்கு வெட்டியும் தேங்காயளவுக்குச் சுண்ணாம்புக் கரண்டகமும் வைத்திருந்தார். அந்த மல் விளையாட்டைப் பார்த்துக்கொண்டு நின்றபடியே அவர் தாம்பூலம் தரிக்கத் தொடங்கினார்.
அவர் நின்றபடியே பையிலிருந்து பாக்குவெட்டியை எடுத்துப் பாக்கைச் சீவிச் சீவி வாயில் போட்டுக்கொண்டார். பிறகு வெற்றிலையை எடுத்தார். சுண்ணாம்புக் கரண்டகத்தின் சங்கிலியிலுள்ள வளையத்தைச் சுண்டு விரலில் மாட்டிக் கொண்டார். அதிலிருந்து சுண்ணாம்பை எடுத்து வெற்றிலையில் தடவி ஒரே தடவையில் நான்கைந்து வெற்றிலைகளின் நரம்பைக் கிழித்து அப்படியே சுருட்டி வாயிலிட்டு மெல்லத் தொடங்கினார். தலையில் ஒரு சுமை இருப்பதை உணராதவரைப் போல அநாயாசமாக அவர் நின்று கொண்டிருந்தார். அருகில் இருந்தவர்கள் மல்யுத்தத்தைப் பார்ப்பதோடு இடையிடையே அவரையும் பார்த்து வியந்தனர்.
அரசரிடத்திலிருந்து வந்த சேவகன் அவரை அணுகினான்; “மகாராஜா உங்களை அழைக்கிறார்; பார்க்கவேண்டுமாம்.” என்றான்.
“மகாராஜாவா? என்னை ஏன் அழைக்கிறார்? ராஜ சமூகத்திற்கு வெறுங்கையோடு போகலாகாதே; நான் ஒன்றும் கொண்டுவரவில்லையே?” என்றார் அந்தப்பிராமணர்.
“நீங்கள் வாருங்கள். அதெல்லாம் வேண்டாம்.” என்று சேவகன் சொன்னான்.
“அப்படியானால் வருகிறேன்; இந்த மூட்டையை ஓரிடத்தில் இறக்கிவிட்டு வருகிறேன்.” என்று கூட்டத்தை விட்டு ஓரிடத்திற்குச் சென்றார். அரண்மனை வேலைக்காரர்கள் அவர் தலையிலிருந்த மூட்டையை இறக்க முயன்றார்கள். ஒருவராலும் முடியவில்லை. அவ்வந்தணர் சிரித்துக்கொண்டே அவர்களை நகரச் சொல்லிவிட்டுச் சிறிதே தலையை அசைத்தார். அந்த மூட்டை வில்லிலிருந்து வீசிய உண்டையைப் போலத் தரையில் பொத்தென்று விழுந்தது.
“சரி, வாருங்கள்; போகலாம்.” என்று கைலாசையர் அரசரிடம் சென்றார்.
அரசர்: நீர் எந்த ஊர்? எதற்காக இங்கே சுமையைச் சுமந்து கொண்டு நிற்கிறீர்?”
கைலாசையர்: நான் இருப்பது மாங்குடி. இந்த நெல்லை இந்த ஊரில் ஒரு கனவானிடம் கொடுப்பதற்காகச் சுமந்து வந்தேன். இங்கே ஏதோ மல் விளையாட்டு நடக்கிறதென்று சொன்னார்கள். கொஞ்சம் பார்த்து விட்டுப் போகலாமென்று நிற்கிறேன்.”
அரசர்: இந்த விளையாட்டில் உமக்கு அவ்வளவு சிரத்தை என்ன?
அந்தணர்: எங்களுக்கும் மல் விளையாட்டுத் தெரியும். யாரோ வடநாட்டான் வந்திருக்கிறானென்று சொன்னார்கள். அவன் எப்படி விளையாடுகிறானென்று பார்க்கலாமென்றுதான் நின்றேன்.
அரசர்: எப்படி இருக்கிறது விளையாட்டு?
அந்தணர்; என்னவோ நடக்கிறது! இந்த மனுஷ்யனை இவ்வளவு பேர்கள் கூடிக்கொண்டு பிரமாதப்படுத்துகிறார்களேயென்று எனக்கு ஒரு பக்கம் சிரிப்பு வருகிறது.
அரசர்: அந்த வீரன் பல தேசங்களுக்குச் சென்று பலபேரை ஜெயித்தவனென்பது உமக்குத் தெரியாதோ?
அந்தணர்: இவனா! எங்கள் ஊரிலுள்ள ஒரு பொடிப்பையனுக்கு இவன் ஈடு கொடுக்க மாட்டான். என்னவோ அதிர்ஷ்டம் அடித்திருக்கும்; சில இடங்களில் பலஹீனர்கள் அகப்பட்டிருப்பார்கள்; ஜயித்திருக்கலாம்.
அரசர்: அப்படியானால் இவனை ஜயிப்பது சுலபமென்றா எண்ணுகிறீர்?
அந்தணர்: ஜயிப்பதா? ஒரு நிமிஷத்தில் இவனைக் கியாகியாவென்று கத்தும்படி பண்ணிவிடலாமே.
அரசர்: நீர் மல்யுத்தம் செய்வீரா?
அந்தணர்: பேஷாகச் செய்வேன்.
அரசர்: இவனோடு இப்போது செய்ய முடியுமா?
அந்தணர்: மகாராஜா உத்தரவிட்டால் செய்யத் தயார்.
அரசர்: அதற்கு வேண்டிய உடுப்பு ஒன்றும் இல்லையே; சட்டை, சல்லடம், வஜ்ர முஷ்டி முதலியவை வேண்டாமா?
கைலாசையர் சிரித்தார்; “அவைகளெல்லாம் அநாவசியம். வேஷ்டியை வரிந்து கட்டிக்கொண்டு இவனுக்கு முன்னே நின்றால் அடுத்த நிமிஷமே இவன் மண்ணைக் கவ்விக்கொள்வதில் சந்தேகமில்லை.” என்றார்.
அரசர் அவ்வந்தணரோடு பேசிக்கொண்டிருந்தபோதே அவருடைய மனத்துள் ஒரு போராட்டம் நிகழ்ந்தது. வடநாட்டு வீரரை ஜயிப்பவரில்லையே என்று வருந்தியிருந்த அரசருக்குக் கைலாசையருடைய தோற்றமும் பேச்சும் ஒரு புதிய நம்பிக்கையை உண்டாக்கின. தாம் மல்யுத்தம் செய்வதாக அவர் கூறவே அரசருக்கு அந்நம்பிக்கை உறுதி பெற்றது. ஆயினும், ‘இவர் உண்மையில் ஜயிப்பாரா?’ என்ற சந்தேகமும், ‘தோல்வியுற்று ஏதேனும் துன்பத்தை அடைந்தால் சாதுவான ஒரு பிராமணரைக் கஷ்டப் படுத்தின அபவாதமும் வந்தால் என்ன செய்வது!’ என்ற அச்சமும் இடையிடையே அரசருக்கு எழுந்தன.
அரசர்: அவன் நல்ல மாமிச போஜனம் செய்பவன்; பலசாலி; பல நாள் பழக்கமுள்ளவன். அவனை ஜயிப்பதாக நீர் கூறுகின்றீரே; உம்மிடம் என்ன பலம் இருக்கிறது?”
அந்தணர்: நான் சுத்தமான உணவுகளை உட்கொள்ளுபவன். எனக்கும் மல்வித்தையில் அப்பியாசம் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலான பலம் ஒன்று என்னிடம் இருக்கிறது.
“என்ன அது?” என்று அரசர் மிகவும் ஆவலோடு கேட்டார்.
“நாங்களெல்லாம் ஈசுவர ஆராதனம் செய்பவர்கள்; ஈசுவரனுக்கு நிவேதனம் செய்த அன்னத்தையே சாப்பிடுகிறவர்கள். எங்களுடைய உடம்புக்கு அந்தப்பிரசாதம் பலத்தை உண்டாக்குகின்றது. பரமேசுவரனது கிருபையாகிய பலம் எங்களுக்கு உண்டு. அதைக் காட்டிலும் வேறு பலம் என்ன வேண்டும்?”
அரசருக்குக் கண்களில் நீர் துளித்தது. மகாராஷ்டிர அரசர்கள் மிக்க பலசாலிகள்; மிகவும் சிறந்த சிவ பக்தர்கள். ஆதலின் பலசாலிகளிடத்திலும் சிவபக்தர்களிடத்திலும் அவர்களுக்கு அபிமானம் இருந்து வந்தது. இருவகை இயல்பும் ஒருங்கே காணப்படுமானால் அவர்களுடைய அன்பு அங்கே பதிவதற்கும் ஐயமுண்டோ?
“வாஸ்தவம். நீங்கள் அந்தப் பலத்தை உடையவர்களானால் ஜயிப்பீர்கள். அடுத்தபடியாக நீங்கள் அவனோடு போர் புரிந்து இந்த ஸமஸ்தானத்தின் புகழை நிலைநாட்டுங்கள்.” என்று அரசர் சொன்னார். அவ்வந்தணர் பால் அவருக்கு அதிக மதிப்பு உண்டாகிவிட்டது.
கைலாசையருக்கும் வடநாட்டு மல்லருக்கும் போராட்டம் நடைபெறுவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் உடனே செய்யப்பட்டன. கைலாசையர் விளையாட்டு வாடி(வளைவு)க்குள் சென்றார். மல்லரோ பலரை வென்றோமென்ற இறுமாப்பினாலும், வருபவர் ஒரு பிராமணரென்ற அசட்டையினாலும் துள்ளிக் குதித்தார். உடுப்போ, ஆயுதமோ ஒன்றும் இல்லாமல் அவர் வருவதைப் பார்த்தபோது மல்லருக்கு அவரிடம் அலக்ஷிய புத்திதான் ஏற்பட்டது. தம் மீசையை முறுக்கிக் கொண்டார்; தோளைத் தட்டினார்; துடையையும் தட்டினார்.
கைலாசையர் அங்கே சென்று தம் வஸ்திரத்தின் முன் பகுதியை அப்படியே எடுத்து முழங்காலுக்கு மேல் நிற்கும்படி பின்பக்கத்தில் இறுகச் செருகிக் கொண்டார். மேல் வஸ்திரம் கையைத் தடுக்காதவாறு மார்பின் இரண்டுபக்கமும் குறுக்கே செல்லும்படி போர்த்து முதுகில் முடிந்து கொண்டார். இந்தக் கோலத்தில் வடநாட்டு வீரர் முன்பாக அமைதியோடு நின்றார்.
மல்லர் ஆரவாரம் செய்து கொண்டு வேகமாக ஓடி வந்து வஜ்ரமுஷ்டியணிந்த தம் வலைக்கையை அவருடைய இடப்பக்கத்தில் குத்தினார். அந்தக் குத்துத் தம்மேல் படுவதற்கு முன் அக்கையை அப்படியே தம் இடக்கையால் கைலாசையர் பற்றிக்கொண்டார். மல்லர் வலப்பக்க விலாவில் இடக்கையைக் கொடுத்து அவரைத் தள்ள முயன்று கையை நீட்டினார். அந்தக் கையைக் கைலாசையர் தம் கட்கத்தில் இறுகச் சிக்க வைத்துக்கொண்டார். இரண்டு கைகளையும் அவர் பற்றிக்கொள்ளவே மல்லர் தம் வலக்கையை இழுத்து மீட்டும் குத்த எண்ணினார். கை வந்தால் தானே மேலே போராடலாம்?
கைகளை அவரால் இழுக்க முடியவில்லை. கைலாசயர் வரவர அதிகமாக இறுக்கலானார். கைகள் நசுக்குண்டன. மல்லருக்கோ கையை எடுக்க முடியாததோடு வரவர வேதனையும் அதிகமாகிவிட்டது; வலி பொறுக்க முடியவில்லை. தம்மால் ஆனவரையும் திமிறிப் பார்த்தார். ஒன்றும் பலிக்கவில்லை.
“இன்றோடு நம்முடைய அகம்பாவம் ஒழிந்து போம்” என்ற தீர்மானத்துக்கு வந்துவிட்டார்.
அழாக்குறையாக அந்தணருடைய முகத்தைப் பார்த்தார்.
“ஏன், சும்மா நிற்கிறீர்? விளையாடுகிறதுதானே?” என்று கைலாசையர் கேட்டார்.
மல்லர் என்ன சொல்வார்! தாழ்ந்த குரலில், “என்னை விட்டுவிடுங்கள்.” என்றார்.
“ஏன்? விளையாடவில்லையோ?” என்று கைலாசையர் கேட்டார்.
மல்லர்: உங்கள் பெருமை தெரியாமல் அகப்பட்டுக்கொண்டேன். என்னை விட்டுவிடுங்கள்.
அந்தணர்: நீர் தோல்வியுற்றதாக ஒப்புக்கொள்வீரா?
மல்லர்: அதற்கென்ன தடை? அப்படியே ஒப்புக்கொள்வேன்; ஒப்புக்கொண்டு விட்டேன்.; என்னை இப்போது விட்டுவிட்டால் போதும்
அந்தணர்: இப்போது கையை விட்டுவிடுகிறேன். மறுபடியும் விளையாடலாமா?
மல்லர்: முடியவே முடியாது. உங்களோடு விளையாடுவதாக இனிமேல் கனவிலும் நினைக்க மாட்டேன்.
அந்தணர்: மகாராஜாவிடம் உம்முடைய தோல்வியை ஒப்புக்கொள்வீரா?
மல்லர்: அப்படியே ஒப்புக் கொள்ளுகிறேன்.
அவ்வளவு நாட்களாகப் பலரை வென்ற மல்லர் அந்தப் பிராமணரோடு போராடமலே தோற்றுப் போனதைப் பார்த்தபோது ஜனங்கள் பிரமித்து நின்றனர். “என்ன ஆச்சரியம்! இந்தப் பிராமணர் கையை அசைக்கக்கூடவில்லை. அவன் சரணாகதி அடைந்துவிட்டானே!” என்று யாவரும் வியந்தனர்.
அரசருக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவு ஏது? இருவரும் அரசரால் அழைக்கப்பட்டனர். அவரிடம் சென்ற மல்லர் தலை கவிழ்ந்து கொண்டே, “உங்கள் ஸமஸ்தானத்திலேதான் நாந்தோலியுற்றேன்.” என்று கூறினார்.
அவருடைய நெஞ்சத்துள் உண்டான துக்கத்தை அரசர் ஒருவாறு உணர்ந்து, “ தோல்வியும் வெற்றியும் மாறி மாறியே வருகின்றன; எல்லாவற்றிற்கும் மேலே ஈசுவர கடாட்சமொன்று இருக்கிறது. அதுதான் இன்று ஜயித்தது. எங்கள் நாட்டின் பெருமை உமது மூலமாக வெளிப்பட்டது.” என்று ஒருவாறு சமாதானம் கூறி அவருக்கு நல்ல சம்மானங்கள் செய்தார்.
தம்முடைய ஸமஸ்தானத்தின் கெளரவத்தைக் காப்பாற்றிய கைலாசையரை வாயாரப் பாராட்டி, “எல்லாம் பரமேசுவரன் செயலென்பதை இன்று உங்களால் நன்றாக அறிந்து கொண்டேன். நீங்கள் இந்த ராஜாங்கத்திற்கு மிகவும் அவசியமானவர்கள். இன்று முதல் ராஜாங்கத்தைச் சேர்ந்தவர்களாகிவிட்டீர்கள்.” என்று மனமுவந்து சொல்லி அரசர் பலவகையான ப்ரிசுகளை வழங்கினர்.
இந்த கைலாச ஐயருக்கும் தமிழ்த் தாத்தாவுக்கும் என்ன சம்பந்தம்?
ReplyDeleteபுரியல்லே !
அது இருக்கட்டும்.
நாங்களும் ம. பி. தான்.
ஏதோ ஒரு காலத்துலே மாங்குடி சம்பந்தம் இருப்பதாகவும் தெரிந்தது
நான் தஞ்சையில் இருந்த காலத்தில்.
எனது மாத்ரு வர்கத்தில் கைலாச சர்மன் என்று ஒருவர் இருக்கிறார். மாத்ரு பிரபிதாமஹ . அமாவாசை அன்று வருகிறார்.
அவரும் சிவ பக்தராம்.
ஆனால் , அவர் கைலாசத்துக்குப் போய் குறைந்த பட்சம் 240 இருக்கலாம் என்று தோன்றுகிறது.
சுப்பு தாத்தா.
கைலாச ஐயருக்கும் தமிழ்த்தாத்தாவுக்கும் உள்ள சம்பந்தம் தாத்தாவின் நினைவு மஞ்சரியில் இடம்பெற்ற கட்டுரைகளில் இதுவும் ஒன்று என்பதே. கட்டுரை முழுவதும் போடவில்லை. முக்கியமான பாகத்தை மட்டுமே போட்டிருக்கேன்.
Deleteஎப்பப்பார்த்தாலும் நீங்க தான் முந்திக் கொள்கிறீர்கள்.
ReplyDeleteவழக்கம் போல நானும் நம் தாத்தாவுக்கு என் நமஸ்காரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாங்க ஜீவி சார். கடந்த 2 நாட்களாகவே தாத்தாவின் பிறந்த நாள் குறித்துப் பலரும் செய்திகளைத் தந்து கொண்டிருந்தனர். ஆகவே நான் முந்திக்கலை! :)
Deleteதமிழ்த்தாத்தா அவர்களின் வாழ்க்கை வரலாறு + அவரின் தமிழ்த்தொண்டு பற்றிய நிறைய படித்துள்ளேன். அவரின் இந்தக்கதை நான் இதுவரை அறியாத ஒன்று. மிகவும் ரஸித்துப்படித்தேன். மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteவாங்க வைகோ சார், முழுக்கட்டுரையும் போடாமலே ரசித்தமைக்கு நன்றி. முடிஞ்சால் முழுசையும் போடறேன், இரு பகுதிகளாகத் தான் போடணும். :)
Deleteநினைவு மஞ்சரியில் வந்த இந்தக் கட்டுரை யார் எழுதியது. உவேசா அவர்கள் எழுதியதாக யூகிக்கிறேன் நடையும் எழுத்தும் வித்தியாசமாக இருக்கிறது இது கற்பனையா நிகழ்ந்ததா என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் படித்து ரசித்தேன்/ ரசித்துப் படித்தேன்
ReplyDeleteவாங்க ஜிஎம்பி ஐயா. கற்பனை எல்லாம் இல்லை. உ.வே.சா.அவர்களின் நினைவு மஞ்சரி பாகம் ஒன்றில் இருப்பது. விரைவில் முழுக்கட்டுரையையும் பகுதிகளாக வெளியிடுகிறேன். பலருக்கும் பாதிக் கட்டுரை போட்டதிலே வருத்தம் போல! :)
Deleteதமிழ்த்தாத்தாவுக்கு நமஸ்காரங்கள். எதுவெல்லாமோ நினைவுக்கு வருகிறது.
ReplyDeleteஇவரை நினைவுக்குக் கொண்டுவர கீதா வரவேண்டி இருக்கிறது. ஆத்மபலத்துக்கான நல்ல கதை நன்றி கீதா..
ஆமாம், ஆத்மபலம் தான் ரேவதி. புரிதலுக்கு நன்றி.
Deleteரசித்தேன்.. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteமுழுக்கட்டுரையையும் போட்டு இருக்கலாம்....
ம்ம்ம்ம், விரைவில் போடுகிறேன் வெங்கட்! :)
Deleteஎங்கள் நமஸ்காரங்களும்! தப்பாத கடமையாக ஆற்றி விடுகிறீர்கள்.
ReplyDeleteப்ரிசு?!!
ஹிஹிஹிஹி, திருத்தறேன். :)
Deleteதாமதமாக வந்தாலும் தாத்தாவிற்கு எப்போதும் வணக்கங்கள் உண்டு! தமிழ்த்தாத்தா ஆயிற்றே! மிகவும் ரசித்தோம் பகிர்வை. தொடருங்கள் தொடர்கின்றோம் சகோ
ReplyDeleteநன்றி துளசிதரன்.
Deleteதமிழ்த் தாத்தா உவேசு அவர்களின் "என் கதை" தவிர, அவரது மற்ற படைப்புகள் (அவர் ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் அவர்கள் வரலாறு போன்றவை) எங்கு கிடைக்கும்?
ReplyDeletehttp://tinyurl.com/5w32r9j
Deleteமேற்கண்ட சுட்டியில் பாருங்கள் நெல்லைத் தமிழன். உ.வே.சா. என்னும் பகுப்பில் நீங்கள் தேடும் மற்றப் படைப்புகள் கிடைக்கும். :)