எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, March 19, 2016

ஒரு வழியாக் கல்கத்தா எங்களை விட்டது! சொர்க்கம் திரும்பினோம்!

ஹிஹிஹி, நம்ம சாம்பாரைச் சாப்பிட ஆரம்பிச்சதும் ரங்க்ஸ் சாம்பார்னாலே காத தூரம் ஓடறார்! தெனாலிராமன் பூனையாட்டம் ஆயிட்டார் போல! போகட்டும் விடுங்க! எனக்கும் சாம்பார் பிடிக்காது! அதனாலே  சாம்பாரே பண்ணலைனா நல்லது தான்!  இன்னிக்குக் கூட சாம்பார் பண்ணலை. எள்ளுப் பொடி சாதம் தான்! :)  ஓகே, ஓகே, கல்கத்தாப் பயணத்தை முடிச்சுடுவோம்.

ஓட்டுநரின்  தயவால் சீக்கிரமே ஹோட்டலுக்கு வந்த நாங்க அதுக்கப்புறமா எங்கேயும் போகலை. இன்னிக்கு ராத்திரிக்குக் கோமள விலாஸிலே போய்ச் சாப்பிடலாம்னு முடிவெடுத்தோம். இந்த ஓட்டலில் தமிழ்ச் சானல்கள் நன்றாகத் தெரிந்தன. ஒரு சில ஓட்டல்களில் நமக்கு வேண்டிய சானல்களைப் பணம் கட்டித் தான் பார்க்க முடியும். ஓட்டல் பில்லோடு சேர்த்து இதுவும் எகிறும். ஆனால் இங்கே அப்படி இல்லை. ஆகவே விரைவில் சென்று சாப்பிட்டுவிட்டு வந்துத் தொலைக்காட்சி பார்த்துட்டுப் படுத்துக்க முடிவு செய்தோம். அதன்படி கோமள விலாஸ் போய்ச் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து அங்கே நடைமேடைகளை ஆக்கிரமித்திருந்த கடைகளை ஒரு பார்வை பார்த்தோம். அந்தக் கடைகளின் ஆக்கிரமிப்பானது அங்கே அமைந்திருந்த எந்தப் பெரிய கடைகளுக்கும் அல்லது அலுவலகங்கள், வீடுகள், வணிக வளாகங்கள் போன்றவற்றிற்குச் செல்லும் வழியை மறைத்தே அமைந்திருந்தது. ஆனாலும் அங்கே இருப்பவர் எவரும் இதை ஆக்ஷேபிக்கவில்லை என்பதோடு மக்கள் சாதாரணமாக அங்கே எல்லாப் பொருட்களையும் வாங்கிக் கொண்டிருந்தனர்.
கல்கத்தா க்கான பட முடிவு
இவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்துவிட்டு அங்கே இருந்த ஒரு தேயிலை விற்பனை செய்யும் கடையில் அஸ்ஸாம் தேயிலை 100 கிராம் வாங்கிக் கொண்டோம். இங்கே எல்லாம் விற்கும் டஸ்ட் எனப்படும் தேயிலையோ க்ரானுல்ஸ் எனப்படும் தேயிலையோ இல்லை அது. நிஜம்மாகவே இலைகள் நிரம்பியது. இப்போ அதான் தேநீர் போடறேன். கொஞ்சம் நீர்க்க டிகாக்‌ஷன் வந்தாலும் உண்மையான தேநீர் வாசனை வருது. ஆனால் எல்லோருக்கும் பிடிக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. மற்றபடி வேறே எதுவும் வாங்கவில்லை. மறுநாள் பயணத்துக்கென கொஞ்சம் பிஸ்கோத்துகள் வாங்கிக் கொண்டோம். அறைக்குப் போய்த் தொலைக்காட்சி பார்த்துவிட்டுப் படுத்தோம். மறுநாள் காலை! அன்று ஞாயிறு! ஆகையால் தாமதமாக எல்லாம் வரும் என்று தெரிந்தாலும் ஆறரை மணி வரை காஃபிக்கு பதிலே இல்லை. சரி, நாம எங்கேயும் போகப் போறதில்லையேனு பேசாமல் இருந்தோம். ஆறரைக்குத் தான் சமையலறை திறந்து காஃபி தயார் ஆனது.
கல்கத்தா க்கான பட முடிவு

படங்களுக்கு நன்றி விக்கிபீடியா!

காஃபி எடுத்து வந்தவரிடம் கீசர் போடச் சொல்லிவிட்டுக் குளித்துத் தயார் ஆனோம்.  அதிசயமாகக் காலை உணவு ஏழரைக்கெல்லாம் தயார் ஆகிவிட்டது. எட்டு மணி அளவில் போய்க் காலை உணவை அருந்தினோம். பின்னர் கொஞ்ச நேரம் கடைத்தெருவில் (அதான் ஓட்டலுக்குப் பக்கம் நடைமேடைக்கடைகள்) திறந்திருந்த கடைகளைப் பார்வையிட்டுவிட்டுப் பத்து மணி போல் ஒரு டாக்சியைப் பேசிக் கொண்டோம். அன்று பனிரண்டு மணி வரை ஹோட்டலில் இருக்கலாம். ஆனால் பனிரண்டிலிருந்து ஒன்றரை வரை எமகண்டம். பலமுறை வேறு வழியில்லாமல் எமகண்டத்தில் கிளம்பிட்டு ரயில் தடம் புரண்டதிலிருந்து எஞ்சின் எரிந்தவரை எல்லாம் அனுபவித்தாயிற்று. ஆகவே முன்னால் கிளம்பலாம். அதோடு கல்கத்தாப் போக்குவரத்தையும் நினைச்சுப் பார்த்தால் முன்னால் போவதே நல்லது என்று கிளம்பினோம். டாக்சிக்காரர் மீட்டர் படி கொடுத்தால் போதும் என்று சொன்னதை நம்பினோம்.

பதினொன்றரை வரை ஓட்டலில் ஓய்வு எடுத்துக் கொண்டு பின்னர் வெளியே வந்தோம். டாக்சியும் தயாராக வந்துவிட்டது. ஓட்டல் ஆட்கள் இரண்டு பேர் சாமான்களை ஏற்றினார்கள். அவர்களுக்குத் தாராளமாக "டிப்"பிவிட்டு டாக்சியில் ஏறி அமர்ந்தோம். ராஷ்பிஹாரி அவென்யூ வழியாகச் சென்ற டாக்சி ஒரு சிக்னலில் நின்றது. அப்போது தான் ஓட்டுநர் அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் மீட்டர் போட முடியாது என்றும் 250 ரூபாய் கொடுத்துவிடவேண்டும் என்றும் பேரம் பேசினார். மீட்டர் போட்டால் 200 ரூக்கும் கீழே தான் வரும். ஆனால் வண்டியில் ஏறிக் கொஞ்ச தூரம் வந்ததும் இப்படிச் சொல்கிறார். இல்லைனா இறங்கி வேறே டாக்சி பிடிச்சுக்கலாம் என்றும் சொல்கிறார். என்ன செய்வது எனப் புரியவில்லை. நடு வழியில் இறங்கி எப்படி வேறே டாக்சி பிடிக்கிறது?  எந்தப்பக்கம் போகணும்னு எதுவுமே தெரியாது. டாக்சி ஓட்டுநரிடம் சொல்லிக்கலாம் என்றாலும் இப்படி நடுவழியில் நிற்பதற்கு என்ன காரணம் சொல்வது? ஆகவே வேறு வழியின்றிச் சம்மதித்தோம். ஆனால் மனதில் வேதனை!

ரயில் நிலையம் நெருங்குகையில் ஓட்டுநர் சென்னை வண்டிகள் எல்லாம் பழைய ரயில் நிலையத்துக்குத் தான் வரும் என்று சொல்லி அங்கே இறக்கிவிட்டுப் போய்விட்டார். அங்கே உள்ளே செல்லவே முடியாமல் கூட்டமோ கூட்டம்! கல்கத்தாவின் மொத்த ஜனத்தொகையும் அன்று அங்கே தான் இருந்ததோ என்பது போல் இருந்தது. இதிலே ஒரு போர்ட்டர் வேறே சாமான்களைத் தான் தூக்கி வருவதாகத் தொந்திரவு. அவர் எங்கே போகிறார் என்பதை அந்தக் கூட்டத்தில் எப்படிக் கண்டு பிடிப்பது? சாமான்களை நாங்களே தூக்கிக் கொண்டும் உருட்டிக் கொண்டும் உள்ளே சென்றோம். உள்ளே விசாரணைப் பகுதியைக் கண்டு பிடிக்கவே அரை மணி ஆகிவிட்டது. அதற்குள்ளாக நம்ம ரங்க்ஸ் என்னைப் பயணிகள் ஓய்வறையில் அமரும்படியும் தான் போய் விசாரித்து வருவதாகவும் சொன்னார். ஆனால் பயணிகள் ஓய்வறை மேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏல் மாடியில் இருந்தது. ஆகவே அந்த எண்ணத்தைக் கைவிட்டோம். விசாரணையில் நானே போய் விசாரித்தேன். அதோடு அங்கே அறிவிப்புப் பலகையும் காணப்பட்டது. அதில் சென்னை வழியே திருச்சி செல்லும் ஹவுரா வண்டி 23 ஆம் நடைமேடையில் இருந்து கிளம்பும் எனப் போட்டிருந்தது. 23 ஆம் நடைமேடை எங்கே என விசாரணையில் இருந்த பெண்ணிடம் கேட்டபோது அது புது ரயில் நிலையம் என்றும் இங்கிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதாகவும் முடியலைனால் ஆட்டோவில் செல்லலாம் என்றும் கூறினார். மயக்கமே வந்துவிட்டது.

வெளியே வந்து ரங்க்ஸிடம் சொல்ல அவர் உடனே அங்கேயே ஒரு சுமை தூக்குபவரைப்பிடித்து அழைத்து விபரங்களைச் சொல்ல, அவர் தான் சாமான்களைத் தூக்கி வருவதாகவும் நடந்தே செல்லலாம் என்றும் கூறினார். நூற்றைம்பது ரூபாய் கேட்டார்.  போயாகணுமே, சம்மதித்தோம். உடனே அவர் சாமான்களைத் தூக்க அவருடன் ரங்க்ஸ் சென்றார். பின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னால் நான் மெதுவாகச் சென்றேன். வழி தப்பி விட்டேனோ என்று எண்ணும்போதெல்லாம் முன்னால் பார்ப்பேன். அந்தக் கூட்டத்தின் நடுவே உயரமான ரங்க்ஸின் தலை தெரியும்.  அதையே குறி வைத்துக் கொண்டு மேலும் நடப்பேன். இப்படி எவ்வளவு தூரம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடந்ததும் அந்தப் புதிய ரயில் நிலையமும் வந்தது. அங்கே நடைமேடைக்குப் போக மேலும் ஒரு கிலோ மீட்டர் நடக்கணும். அதில் பாதி தூரத்தில் ஒரு இடத்தில் சுமை தூக்குபவர் சாமான்களை வைத்துவிட்டு ஏசி பெட்டி இங்கே தான் வரும் என்றும் சொல்லிவிட்டுக் கூலியை வாங்கிக் கொண்டு போய்விட்டார். ரங்க்ஸும் நான் வருகிறவரை காத்திருந்து விட்டுப் பின்னர் சாப்பாடு வாங்கி வரச் செல்வதாய்க் கூற மீண்டும் இவ்வளவு தூரமா என நினைத்து எனக்குக் காய்ச்சலே வந்துவிட்டது. ஆனால் ரங்க்ஸ் சாப்பிட்டே ஆகணும். மாத்திரைகள் எடுத்துக்கணுமே. ஆகவே அவர் கிளம்பினார்.

போயிட்டுச் சாப்பாடு வாங்கி வர அரை மணி நேரம் ஆச்சு! எனக்குப் பழங்கள் வாங்கி வந்திருந்தார். பூரியும் உருளைக்கிழங்கு சப்ஜியும் தான் கிடைச்சதாம். ஏதோ ஒண்ணு!  சாப்பிட்டதும் தான் அவருக்குக் கண்ணிலே ஒளியே வந்தது! :(  வண்டிக்காகக் காத்திருந்தோம். வண்டி மாலை சுமார் 4-20 க்குக் கிளம்பும் என்று போட்டிருந்தது. எதிர் நடைமேடையில் ஹவுரா--சென்னை வண்டி வந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நின்றுப் பயணிகள் ஏறியதும் குறிப்பிட்ட நேரம் கிளம்பியது. அதைப் பார்த்ததும் நம்ம வண்டி மூணு மணிக்கே வந்துடும்னு நினைச்சோம். ஆனால்!!!! நாலு மணி வரை வண்டி வரவே இல்லை. அறிவிப்பும் செய்யலை! ஒரு வழியாக நாலு பத்துக்கு வண்டி வந்தது. ஆனால் துரதிர்ஷ்டம் என்னவெனில் ஏசி பெட்டிகள் இஞ்சினுக்குப் பக்கமாக இருந்தது. தூக்கு மூட்டையை! நட! நடப்பதற்குள்ளாக ஆயிரம் தடங்கல்கள்! முன் பதிவு செய்யாத பெட்டிகளுக்கான வரிசை நீளமாக இருந்தது. நடைமேடை முழுவதும் அவங்க ஆக்கிரமிப்பு! இதற்கு நடுவே சென்று பெட்டியைத் தேடி ஏறி அமர்வதற்குள்ளாகப் போதும் போதும்னு ஆகி விட்டது. நல்லவேளையாக இருவருக்கும் கீழ்ப்படுக்கை இருக்கை என்று செய்தி மதியம் ஒரு மணிக்கே வந்துவிட்டது. ஆகையால் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. எனினும் எதிரில் வந்த விழுப்புரம் தம்பதியருக்கு நானோ அவரோ கீழ்ப் படுக்கை இருக்கையை அவங்களுக்கு விட்டுக் கொடுக்கணும்னு ஆசை! ஆனால் எங்களால் முடியலை!  அவங்களுக்கு உட்கார இடம் கொடுத்துட்டுக் களைப்புத் தாங்காமல் படுத்துட்டோம். பின்னர் மறு நாள் திங்கள் முழுவதும் பயணம் செய்து திங்கள் இரவு, செவ்வாய் காலை சுமார் மூன்று மணி அளவில் வண்டி ஶ்ரீரங்கத்தை அடைந்தது. அப்பாடா சொர்க்கத்துக்குத் திரும்பியாச்சுனு ஆட்டோக்காரர் கேட்ட தொகையைக் கொடுத்து வீட்டுக்கு வந்து கிளம்பிக் கொண்டிருந்த பால்காரரிடம் அரை லிட்டர் பாலைக் கேட்டு வாங்கிக் காஃபி குடித்துவிட்டுப் படுத்தோம். ஆறரை மணிக்குப் பையர் எழுப்பும் வரை ஓய்வு தான்.

ரயிலில் நடந்த சம்பவங்கள், பேசிய பேச்சுகள், எல்லாம் எழுதறதுனா அதுக்குனு இரண்டு பதிவு கூடப் போடணும்! ஆகையால் அவற்றை எல்லாம் விட்டு விட்டேன். :))))

12 comments:

  1. யப்பா... என்னவொரு சிரமம்...

    நம்மூர் என்றால் தான் சொர்க்கம் ...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், டிடி அவங்கவங்க இருக்கிற இடமே சொர்க்கம் தான்! :)

      Delete
  2. கொல்கத்தா..... பல சமயங்களில் கொன்று விடுகிறார்கள்! :) நானும் அனுபவித்து இருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. எல்லோரையும் போட்டு வாங்கும் போல!

      Delete
  3. பயங்கர சிரமம் ப்ளஸ் செலவு!

    ReplyDelete
    Replies
    1. மன உளைச்சலை விட்டுட்டீங்களே! :) செலவு எக்கச்சக்கம், அநாவசியச் செலவும் கூட! :(

      Delete
  4. கொல்கத்தா நல்ல ஊர்தான் என்றாலும், பயணம் சுற்றிப்பார்த்தல் என்றால் கொஞ்சம் சிரமம்தான். அதனாலேயே அந்த ஊர் ஏனோ பிடிக்காமல் போய்விட்டது. ஏமாற்றலும் அதுவும் வெளியூர் மதராசி என்றால் அதிகம். ஊர் விவரங்கள் நன்றாகத் தெரிந்து சாமர்த்தியமும் இருந்தால் மட்டுமே முடியும். மகனின் நண்பன் அங்குதான் முதுகலைப் படிப்பு படித்தான். நொந்து போனான். இத்தனைக்கும் இளம் வயது. ஆனால் பழகித்தானே ஆகவேண்டும் என்று சமாளித்தான்...

    நம்ம ஊர் சொர்கம்தான்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா, கொஞ்சம் இல்லை ரொம்பவே சிரமம். அங்கே யாரானும் இருந்தால் தவிர போகக் கூடாது என்பதைப் புரிந்து கொண்டேன். சென்னையை ஏமாற்று ஊர் என்பவர்கள் இதை ஏன் சொல்றதில்லை?

      Delete
  5. உங்கள் பயணச் சிரமங்களே / அனுபவங்களே அலாதிதான் கொல்கத்தா சென்றதில்லை

    ReplyDelete
    Replies
    1. தக்க முன்னேற்பாடுகள் செய்து கொண்டு போங்க ஐயா!

      Delete
  6. அது பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம். சொர்க்கத்தை விட வைகுண்டம் சிறந்தது.

    ஜெயகுமார்

    ReplyDelete