எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, July 29, 2017

"கடுகு" சிறுத்தாலும் காரம் குறையாது!

மோகன் ஜியின் "பொன் வீதி"க்கும் முன்னாடி, வெங்கட்டின் "பஞ்ச துவாரகா" மின்னூலுக்கும் முன்னாடி எனக்காக வந்து காத்திருந்தது கடுகு சாரின் "கமலாவும் நானும்" புத்தகம்! நான் அம்பேரிக்காவில் இருக்கும்போதே அது இங்கே ஶ்ரீரங்கத்துக்கு வந்தாச்சு. நானும் இங்கே இருக்கும் செக்யூரிடியிடம் சொல்லிப் புத்தகம் வந்ததும் வாசல் கதவு வழியாக உள்ளே போடச் சொல்லி இருந்தேன். போட்டிருந்தாங்க. வந்ததும் படித்தது அந்தப் புத்தகம் தான். ஆனால் விமரிசனம் செய்ய வழக்கம் போல் தயக்கம். கடுகு சார் எவ்வளவு பெரிய மனிதர்! இந்த இணையத்தில் எழுத ஆரம்பித்ததின் நற்பலன்களில் ஒன்று இம்மாதிரிப் பிரபலங்களின் நட்புக் கிடைத்தது தான். ரொம்ப வருஷமாகவே அவரோட வலைப்பக்கம் பத்தித் தெரியும். அடிக்கடி போய் வருவேன். ஆனாலும் கருத்துச் சொல்ல தைரியம் வராது.

அவரோட டில்லி தொடர் கட்டுரைகளைப் படித்தாலே நமக்குள் ஓர் பிரமிப்பு ஏற்படும்.  மனுஷன் எப்படிப்பட்ட பிரபலங்களோடெல்லாம் சர்வ சகஜமாகப் பழகி இருக்கார்! ஆனால் எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கார். வயதும் எண்பதைத் தொட்டு விட்டது என்று அவரே சொல்லி இருக்கார். கடவுள் அருளால் மூட்டு வலி இல்லைனும் சொல்லி இருக்கார். அப்படியே இருக்கப் பிரார்த்தனைகள்.  "கமலாவும் நானும்" புத்தகத்தில்   அவருடைய தீராத தேடல் தாகமும், தொடர்ந்து தகவல்களைத் தேடித் தேடிப் பெற்று அதைப் பகிரும் பொறுமையும் பற்றி எழுதி இருக்கார். இவ்வளவு தகுதியும் அவ்வளவு சுலபமாகக் கிடைப்பதில்லை. இது கடவுள் அவருக்கு அளித்த பரிசு!

ஆரம்பத்தில் தபால் துறையில் வேலையில் இருந்தவர் டெல்லிக்கு டெபுடேஷனில் போக அங்கே இருந்து கொண்டே பிரபலங்களுடன் ஏற்பட்ட பழக்கங்கள், மத்திய மந்திரிகள் முதல்  நம் தமிழ்நாட்டுப் பிரபலங்கள் வரை அனைவருடனும் ஏற்பட்ட பழக்கம், அனைவருக்கும் செய்த உதவிகள் என அனைத்தையும் கட்டுரைகளாகத் தன் "கடுகு தாளிப்பு" வலைப்பக்கத்தில் எழுதி இருக்கிறார். அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த சில கட்டுரைகளைத் தொகுத்து "கமலாவும் நானும்" புத்தகமாக 2011 ஆம் ஆண்டில் முதல் பதிப்புக் கண்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தில் கல்கி, எஸ்.ஏ.பி, சாவி, தேவன், ராஜாஜி, இயக்குநர் ஶ்ரீதர்(கடுகு சாரின் ஊர்க்காரர்) சித்ராலயா கோபு (இவரும்)  மூவரும் பாலிய நண்பர்களும் கூட. அதைத் தவிரவும் கே.பாலசந்தர், விமரிசகர் சுப்புடு, சிவாஜி, எம்.எஸ்.அம்மா, சோ அவர்களின் தந்தை, பாரதிராஜா, சுஜாதா போன்ற அனைவரிடமும் தனக்கு உள்ள நட்பைக் குறித்து எழுதி உள்ளார்.

மேலும் இவர் தபால் துறை வேலையை விட்டு விலகி விளம்பரக் கம்பெனியில் சேர்ந்ததன் பலன் கணினி வல்லுநராகவும் ஆகி இருக்கிறார். கேட்பவர்களுக்கு எழுத்துருக்களைச் செய்து தருகிறார். விளம்பரங்களின் மேல் அளவு கடந்த ஆர்வம். கணினியில் பெற்ற தேர்ச்சியின் மூலம் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தைத் தன் மனைவி கமலாவுடன் சேர்ந்து அழகிய முறையில் பதம் பிரித்து வெளியிட்டிருக்கிறார். இன்னமும் ஆர்வத்துடன் பல ஓவியங்களைக் கணினி உதவியுடன் வரைந்து தன் வலைப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். கிராஃபிக்ஸில் சமீபத்தில் இவர் வரைந்திருப்பது ஹிஹிஹி ஜிவாஜியோட படம்! 

கமலாவும் நானும் என புத்தகத்தின் பெயர் இருப்பதால் இவர் மனைவியுடனான நிகழ்வுகளாக நகைச்சுவையுடன் சில சம்பவங்களை எழுதிக் கலக்கி இருக்கார்.  அதிலே கமலாவும் கத்திரிக்காய்க் கூட்டும் என்ற கதையில் நடப்பது எங்க வீட்டில் அப்படியே தலைகீழாக நடப்பதைச் சித்திரிப்பது போல் இருக்கும். "கமலாவுக்கு ஒரு காதல் கடிதம்" என்னும் கட்டுரையிலோ காப்பியில் சர்க்கரைக்குப் பதிலாக உப்புப் பொடியைப் போட்டதைக் கூட நாசுக்காகச் சுட்டிக் காட்டி இருக்கும் திறமை! இது எங்க வீட்டிலேயே நடந்திருக்கு!  என் மாமியார் ஒரு முறை நிஜம்மாகவே உப்புப் பொடியைப் போட்டுட்டாங்க. அதை முதலில் குடித்த நான் குடிக்காதீங்க, உப்பு இருக்குனு சொல்லியும் கேட்காமல் அவங்களும் வாயில் விட்டுப் பார்த்துட்டே அப்புறமாக் கீழே கொட்டினாங்க! :)

அந்த உப்புப் போட்ட காப்பியைக் குடித்த மனோநிலையிலும் மனைவியை என் மனோரஞ்சித மலரே என வர்ணிக்க இவரைத் தவிர வேறு யாராலும் முடியாது. இந்தக் கட்டுரை வீட்டுப் பரணைக் காலி செய்தப்போ கிடைத்த பழைய ஏட்டுச் சுவடினும் குறிப்பிட்டிருக்கார் கடைசியிலே. இன்னும் எத்தனை பொக்கிஷங்கள் இருக்கின்றனவோ! இப்போதும் தொடர்ந்து

கடுகு தாளிப்பு

இந்தத் தளத்தில் தன் பங்களிப்பைச் செய்து வருகிறார். அகஸ்தியன் என்ற பெயரில் எழுதுபவர்/எழுதியவரும் இவரே! பி.எஸ்.ஆர் என்னும் பி.எஸ்.ரங்கநாதன் என்பவரும் இவரே. கடுகு என்னும் பெயரில் எழுதுபவரும் இவரே! கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அதே போல் இவருக்கு வயதானாலும் இவரின் நகைச்சுவை உணர்வு அதே இளமையுடன் இருக்கிறது. தொடர்ந்து இவ்வாறே இருக்கப் பிரார்த்தனைகள். 

Monday, July 24, 2017

தமிழ்நாட்டின் தேசிய ஒளிபரப்புத் தொடர்! "பிக் பாஸ்!"

தமிழ்நாடு முழுவதும் "பிக் பாஸ்" அலை! எங்கே போனாலும் யார் என்ன பதிவு போட்டாலும் இதைக் குறித்துத் தான் எழுதுகின்றனர். நம் மக்களுக்கு வேறே வேலையே இல்லையோ என எண்ணத் தோன்றினாலும் இதை விட்டால் மக்கள் செய்வது போராட்டம் தான். எதுக்கு எடுத்தாலும் போராட்டம் தான்! கதிராமங்கலத்திலும் சரி, நெடுவாசலிலும் சரி பெட்ரோல் கிணறுகளைத் தோண்ட ஆரம்பித்து இருபது வருடங்களுக்கு மேல் ஆகிறது. அப்போது இதற்கெல்லாம் அனுமதி கொடுத்த கட்சிகள் இன்று எதிர்க்கட்சிகளாக இருப்பதால் எதிர்க்கின்றனர். மக்கள் மனதை மூளைச் சலவை செய்து பொய்யான தகவல்களைப் பரப்பிப் பயமுறுத்துகின்றனர். ஆனால் இது புரியாமல் இளம்  மாணவர்களும் சேர்ந்து கொள்வது தான் கவலை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. அதோடு என்னமோ "கார்ப்பொரேட்" கம்பெனிகளே இந்தியாவில் கடந்த மூன்றாண்டுகளில் தான் கால் ஊன்றிய மாதிரி மத்திய அரசு கார்ப்பொரேட் கம்பெனிகளுக்கு உதவி செய்வதாகச் சொல்கின்றனர்.

ஒரு காலத்தில் இந்தியாவில்  கால்கேட் பாமாலிவ், ஹிந்துஸ்தான் லீவர், ப்ராக்டர் அன்ட் கேம்பிள், ப்ரூக் பாண்ட், லிப்டன், நெஸ்லே, துணி வகைகளில் முக்கியமாய் விமல். விமல் என்னும் ப்ரான்டை ஆரம்பித்த ரிலயன்ஸ் குழுமம் இந்திரா காந்தியின் ஆதரவோடு ஆரம்பிக்கப்பட்டதை அறியாதார் இருப்பாங்களா என்ன? விமல் தலை எடுத்ததுமே, அர்விந்த், கடாவ், பாம்பே டையிங், காலிகோ, கார்டன், மஃபட்லால் எல்லாம் காணாமல் போய்விட்டன! அதிலும் என்னைப் போல் அர்விந்திலும், கடாவிலும் வாயில் புடைவைகள் கட்டியவர் மீண்டும் அந்தத் தரத்தில் புடைவைகளைப் பார்க்க முடிவதில்லை என்பது வருத்தமான விஷயம்!  ஆனால் இதை எல்லாம் யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. இப்போதைய மத்திய அரசு தான் அம்பானிக்கும், அதானிக்கும் ஆதரவு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் என்ன சுதந்திரம் வந்ததிலிருந்து எல்லாப் பொருட்களும் குடிசைத் தொழிலிலா உற்பத்தி ஆகி வந்தன? துணிவகைகள் கைத்தறி நெசவிலும், விசைத்தறி நெசவிலும் மட்டுமா உற்பத்தி ஆகி வந்தன? இல்லையே! அவற்றை எல்லாம் மறந்துவிட்டு இப்போது மட்டும் ஏன் இப்படிக் கூவ வேண்டும்? இப்போத் தான் பாபா ராம்தேவ் அவர்கள் மூலம் இந்தியத் தயாரிப்புப் பொருட்கள் ஓரளவுக்கு அறிமுகம் ஆகி வருகின்றன. அதோடு மட்டுமா?

படிப்பில் கூட அரசியல் புகுத்தப் படுகிறது. "நீட்" தேர்வு முறையை இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஏற்கும்போது இங்கே மட்டும் அதற்கு முழு எதிர்ப்பு. மாநில அரசுப்பாடத்திட்டத்தில் படித்த இரு மாணவிகள் இந்த "நீட்" தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஒருவர் 147 மதிப்பெண்களும் இன்னொருவர் 150 மதிப்பெண்களும் பெற்றிருக்கின்றனர். அவர்களால் உழைத்துத் தரத்தை உயர்த்திக் கொண்டு தேர்வை எதிர்நோக்கும் மனோபலம் இருக்கும்போது மற்றவர்களையும் அப்படித் தயார் செய்ய வேண்டும். தேர்வே கூடாது என்பதா?   மாணவர்களின் படிப்பின் தரத்தைக் குறித்து யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கிராமப்புற மாணவர்களால் எதிர்கொள்ள இயலாது என்றும் அரசுப் பள்ளி மாணவர்களாலும் இந்தத் தேர்வை எதிர்கொள்ள இயலாது என்றும் காரணங்கள் சொல்லப்படுகின்றன. இவை வலுவான காரணங்களாகத் தெரியவில்லை. படிப்பின் தரம் அப்படி இருக்கையில் தரத்தை உயர்த்துவதைத் தான் முதலில் கடமையாகக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்வு பெற்றதாக அறிவித்து வருகின்றனர். ஒன்பதாம் வகுப்பில் இருந்து தான் மாணவர்கள் உண்மையான தேர்வையே சந்திக்கிறார்கள். இந்த முறையே தவறு.

எட்டு வகுப்பு வரை படிப்பில் அலக்ஷியமாக இருக்கும் மாணவர்கள் திடீரென ஒன்பதாம் வகுப்பில் பாடங்களைப் புரிந்து கொண்டு எப்படிப் படிக்க முடியும்? அதிலும் கிராமப்புற மாணவர்கள்! தரமான ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆசிரியர்கள் முதலில் பாடத்தைப் புரிந்து கொண்டு சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள் கிராமப்புறங்களுக்குச் செல்வதில் விருப்பம் காட்டுவதில்லை. ஆங்காங்கே ஓரிரு ஆசிரியர்கள் சேவை மனப்பான்மையில் சொல்லிக் கொடுக்கலாம். ஆனால் அது போதாது. மொத்த சமூகமும், மொத்தமான மக்களும் மனம் மாற வேண்டும். இந்த "நீட்" தேர்வை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றத் தீர்ப்பு இருக்கையிலே எதிர்க்கட்சிகள் மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றன.

நேற்றைய செய்தியில் மத்திய அரசு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு இரண்டு வகுப்புக்களிலும் பொதுத் தேர்வை அறிமுகம் செய்யும் முறையைக் கொண்டு வர யோசிப்பதாகச் சொன்னார்கள்.  இது நல்ல முறை தான். மார்ச் மாதம் நடக்கும் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக மீண்டும் மேமாதம் இன்னொரு தேர்வு நடத்தப்படும் என்றும் சொன்னார்கள். அந்த இரு மாதங்களிலாவது மாணவர்கள் படித்துத் தேர்வு எழுதத் தேவையான தகுதியை மேம்படுத்திக் கொள்ளலாம். எட்டாம் வகுப்பிலும் பொதுத் தேர்வு அவசியம். இது புதிது அல்ல. ஏற்கெனவே ஈஎஸ் எல் சி என்னும் பெயரில் இருந்து வந்ததே! ஒன்பதாம் வகுப்பிலிருந்து பாடங்கள் கடினமாக இருப்பதால் எட்டாம் வகுப்புத் தேர்ச்சி என்பது மிக முக்கியமான ஒன்று. முன்னெல்லாம் எஸ் எஸ் எல் சி. என்னும் பள்ளி இறுதித் தேர்வுக்கும் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் "செலக்‌ஷன்" என்னும் தேர்வு ஒன்று நடத்தி மாணாக்கர்களைப் பொதுத் தேர்வு எழுதத் தேர்ந்தெடுப்பார்கள். இது அறுபதுகளின் ஆரம்பம் வரை இருந்தது. பின்னர் 62-63 ஆம் வருடம் முதல் எடுக்கப்பட்டு விட்டது.

இந்த செலக்‌ஷனில் தேர்ச்சி பெறாதவர்கள் எஸ் எஸ் எல்சி பரிக்ஷையை மீண்டும் எழுதும்போது பள்ளிமூலம் எழுத முடியாது என நினைக்கிறேன். மறுபடி செப்டெம்பர் மாதம் பொதுத் தேர்வு வைப்பார்கள். அப்போது மீண்டும் ஜூன், ஜூலையில் தனியாக செலக்‌ஷன் தேர்வு கொடுத்துத் தேர்ச்சி பெற்றால் தான் எழுதவே முடியும். அப்போதெல்லாம் தமிழில், அறிவியல், சமூகவியல் பாடங்கள் ஆகியவற்றில் இப்போதைப் போல் யாரும் நூற்றுக்கு நூறு சதவீதம் எடுத்ததே இல்லை. இப்போது எதை வைத்து மதிப்பெண்கள் கொடுக்கிறார்கள் என்பதே புரியவில்லை! ஆனால் தேர்ச்சி விகிதம் பார்த்தால் மயக்கமே வருகிறது. இவர்களில் எத்தனை பேர் பின்னால் நல்ல தரமான உயர்கல்வி கற்றுக் கொள்கிறார்கள்! எத்தனை பேரால் கற்க முடியாமல் போனது என்பதெல்லாம் தெரிவதில்லை! :( உதாரணமாக ஒவ்வொரு வருஷமும்  மாநிலத்தில் முதல் மாணவி/மாணவனாகத் தேர்ச்சி பெறுபவர்கள் பேட்டியின் போது தங்கள் கனவைச் சொல்வார்கள். பின்னால் அவர்கள் கனவு நிறைவேறியதா? எத்தனை முதல் மாணவிகள்/மாணவர்கள் தாங்கள் கூறி இருந்தபடி படித்தார்கள்? இதெல்லாம் கேள்விக்குறியே!

ஹிஹிஹி, ஆரம்பிச்சது என்னமோ பிக்பாஸைப் பத்தி! கடைசியில் எங்கேயோ போயிட்டேன்! :))))) வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரேன்! அப்புறமா!


Saturday, July 22, 2017

பொன் வீதியில் நானும் உலா வந்து விட்டேன்! :)



தம்பி மோகன் ஜி அவர்களையும் அவருடைய எழுத்தையும் கடந்த இரண்டு மூன்று வருடங்களாகத் தான் அறிவேன். சமீப காலங்களில் வாராந்தரிகள், மாதாந்தரிகள் எனப் படிக்கும்வழக்கத்தை அடியோடு விட்டொழித்து விட்டதால் அவருடைய எழுத்துக்கள் அமுதசுரபி, தினமணி கதிர் போன்றவற்றில் வந்திருப்பது குறித்து அறிந்ததில்லை. இணையத்திலும் அவர் எழுதத் துவங்கின காலத்தை அறிந்திலேன். தற்செயலாகத் தான் "பாண்டு" கதை மூலம் அவர் வலைப்பக்கம் சென்று பார்க்க நேர்ந்தது. அதற்கு முன்னர் "தத்தி" கதைக்கும் போயிருக்கேன்னு நினைக்கிறேன்.

அவரோ வானவில் மனிதர்! நானோ கீழே இருக்கிறேன். அண்ணாந்து பார்க்க வேண்டும் அவரை! அவர் பார்க்கும் இடத்திலிருந்து அவருக்கு நான் தெரிவது கஷ்டமே! அத்தனை உயரத்தில் இருக்கிறார். ஆனால் எனக்கோ அவர் ஓர் அழகான வண்ணமயமான கூட்டில் இருப்பது தெரிகிறது. என்னால் பார்க்க முடிந்த அளவுக்கு அவரால் என்னைப் பார்க்க முடியுமா? முடியாது! ஆனால் என்னால் அவரைப் பார்க்க முடிந்த அளவுக்கு அவருடைய வானவில் அனுபவங்களை உணர முடியுமா என்றால் அதுவும் முடியாது! ஏதேதோ வண்ணமயமான ஒளிப் பிரவாகத்தை மட்டுமே பார்க்க முடியும். அதை எப்படி நான் எழுதுவது? எப்படி வர்ணிப்பது?   அந்த நிறத்தை எழுதலாம் எனில் குறிப்பிட்ட ஓர் நிறத்தை மட்டும் காணவில்லையே! அவர் இருக்கும் உயரத்துக்கு நானும் செல்வதென்றால் லேசில் நடக்கும் விஷயம் இல்லை! அவர் தான் எனக்காகக் கீழிறங்கி வர வேண்டி இருக்கும்! நான் ஒரு சாமானியப் பெண்மணி! அவருடைய எண்ணங்களின் உயரம் என்னால் எட்ட முடியாத ஒன்று. இந்தக் காரணங்களுக்காகவே நான் அவர் கதைகள் குறித்து ஏதும் விமரிசிக்கவில்லை.  ஆனால் அவருக்கு அது ஓர் குறையாகத் தோன்றுகிறதோ என்னும் எண்ணம் தோன்றவே இந்தப் பதிவு இப்போது!

அதிலே அன்பு, பாசம் (நிழல் யுத்தம்) மகன் நினைப்பதற்கு நேர்மாறான பெற்றோர்! , சமூக நீதிக்குச் சாடல் (வெளயாட்டு), போலி ஆன்மிகத்தை எதிர்த்தல்  (தத்தி), மனைவியைத் தேவையில்லாமல் அநியாயமாய்க் கண்டிக்கும் கணவனுக்குக் கிடைத்த தண்டனை (பச்ச மொழகாய்), மொட்டு விட ஆரம்பிக்கும் காதல் ஆரம்பத்திலேயே பட்டுப் போனது!(பொன் வீதி), சிறுபிள்ளைத் தனமாக அம்மாவிடம் கோவித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் சிறுவனுக்குள் அம்மாவிடம் தோன்றிய கோபம் பாசமாக மாறும் வித்தை!(வீட்டைத் துறந்தேன்.)

"விட்டகுறை, தொட்ட குறை" கதையில்  சின்ன வயதில் காதலித்துக்  காதலியால் நிராகரிக்கப்பட்டுப் பின் அவளையே எதிர்பாரா வண்ணம் ( நம்ம க.க.போ. கருமாதிரி இல்லையோ) பயணத்தில் சந்திக்கையில் அவளால் வாழ்க்கையில் ஏற்றம் பெற்றிருந்தாலும் தனிப்பட்டக் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வி! இப்போது ஏன் அவளுடன் மீண்டும் சந்திப்பு ஏற்பட வேண்டும்? இந்தப் புரியா புதிருக்குக் கிடைக்காத விடை!

"தமிழே, என் தமிழே! கதையில்  தமிழ் பேசத் தவித்த தவிப்பு!  குடும்பம் இருந்திருந்தாலாவதூ தமிழில் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருக்கலாம். யாருமே இல்லாமல் லாரி டிரைவரைக் கூப்பிட்டு விருந்து வைத்துத் தமிழ் பேசிக் கொண்டாடிய கொண்டாட்டம்! (தமிழே, என் தமிழே) இத்தனைக்கும்  மோகன் ஜியின் தாய் மொழி தெலுங்குனு நினைக்கிறேன். :)

மைத்துனன் சிரமப்பட்டுக் கொண்டு வரும் குடும்பப் பாரம்பரிய விக்ரஹங்களை முதலில் ஒதுக்கும் அண்ணி, பின்னர் உரிமை கொண்டாடுவதன் மூலம் அவள் தன்னுடைய நிலையை ஸ்தாபிதம் செய்து கொள்வது (அங்கிங்கெனாதபடி) உடல் வருத்தமும், பொருள் வருத்தமும் கொண்டு பல வருடங்களுக்குப் பின்னர் கொண்டு வந்த குல தெய்வங்கள் அண்ணன் வீட்டிலேயே இனி இருக்கும் என்று தெரிந்த மனோவின் துக்கம் நம்முள்ளும் தொண்டையை அடைக்கும் துக்கமாக மாறிப் போகிறது. அதனால் தானோ என்னமோ அந்த ராமர் குடும்பத்தின் லக்ஷ்மணசாமி முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்.

இந்தக் கதை எனக்கு எங்கள் குடும்பத்தின் ஓர் நிகழ்வை நினைவூட்டியது. என் மாமனாருக்கும் அவருடைய அண்ணாவுக்கும் நடந்த பாகப்பிரிவினையின் போது மாமனாருக்கு ஶ்ரீராம பட்டாபிஷேஹப் படமும் அவர் அண்ணாவுக்கு ஶ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள், ரிஷபவாஹனத்தில் ஈசன், பிள்ளையார், தவழ்ந்த கிருஷ்ணன் கையில் வெண்ணெய் வைத்துக் கொண்டு. ஆகியன கிடைத்தன. மாமனாரிடம் உள்ள படம் அவர் அண்ணாவுக்கும், அண்ணாவிடம் உள்ள விக்ரஹங்கள் மாமனாருக்கும் மனதை ஈர்த்த வண்ணம் இருந்திருக்கிறது. ஊரில் கிராமத்தில் பூர்விக வீட்டில் ஸ்வாமி அலமாரியில் மேல் தட்டில் ஶ்ரீராமரும் கீழ்த்தட்டில் இந்த விக்ரஹங்களும் ஒன்றாக இருந்திருக்கின்றன. பஞ்சாயதன பூஜை செய்து வந்திருக்கின்றனர்.  பின்னர் இவர்களால் முடியாமல் போகவே அவ்வப்போது அபிஷேஹம் செய்து பூக்கள் சார்த்தி நிவேதனம் மட்டுமே! பின்னர் பாகப்பிரிவினையில் ஶ்ரீராமர் கருவிலிக்கும், விக்ரஹங்கள் பரவாக்கரை வீட்டிலேயும் தங்கி விட்டன. பின்னால் பெரிய மாமனாரும் கருவிலிக்கே வந்தாலும் விக்ரஹங்கள் அவரிடமே இருந்தன.

மாமனாரின் அண்ணா இறந்த பின்னர் என் பெரிய மாமியாரிடமே இருந்தன விக்ரஹங்கள்.  கடைசியில் 2010 ஆம் வருஷம் அவங்களுக்கு ரொம்பவே வயசானதால் அந்த விக்ரஹங்கள் எங்களிடம் வந்து சேர்ந்தன. அது கூட அவங்க அவ்வளவு வருஷங்கள் தனியாக இருந்ததால் விக்ரஹங்களைத் தானே வைத்திருந்தார்கள். பின்னர் வயதான காரணத்தால் தனியாக இருக்கக் கூடாது என்று பெண் வீட்டோடு போகும் வாய்ப்பு ஏற்பட்டதால் விக்ரஹங்களை அங்கே கொண்டு செல்ல முடியாமல் எங்களிடம் கொடுத்து விட்டார்கள். இப்போ எங்க வீட்டில் மேல் தட்டில் ஶ்ரீராமரும், கீழ் தட்டில் விக்ரஹங்களும் வைத்திருக்கோம். ராமருக்கு அருகேயே பிள்ளையாரும், இன்னொரு பக்கம் கிருஷ்ணரும் காட்சி அளிப்பார்கள்.

ஶ்ரீராமர் க்கான பட முடிவு





"அங்கிங்கெனாதபடி" கதையைப் படிக்கையில் நாங்க விக்ரஹங்களுக்குத் தவித்த தவிப்பும் அது எங்களுக்கு வந்த விதமும் நினைவில் வந்தது. கண்களில் நீர் முட்டியது. நம்ம கதை இருக்கட்டும். தம்பியோட கதைகளைப் பார்ப்போம்

  "வாக்கிங்" கதையின் எண்ண ஓட்டங்கள்! தன் தாத்தா நினைவில் தன் பேத்திக்குக் கால் பிடித்துவிடும் மகிழ்வான நிகழ்வு! குழந்தைகளைத் தண்டிக்கும் "நாட்டி கார்னர்"! அது தனக்கே வரும்போது அதன் தாக்கம் தெரியவருகிறது.

  "கூளம் "கதையில்  வரும் சபேசனின் கடந்த காலக் கசப்பான நினைவுகள், சிலவற்றை எப்போதும் மறக்கவே முடியாது! அந்தக் கதையில் தான் மகளைப் பிரிந்த தகப்பனாக உருகுவதும்! ஆனால் நானும் இப்படித் தான் எங்கள் குழந்தைகளின் பள்ளி டைரியிலிருந்து ப்ராக்ரஸ் கார்ட் வரை சேர்த்து வைத்திருக்கேன். இன்னமும் தூக்கிப் போட மனம் வரவில்லை! நம்மையே நாம் பார்ப்பது போன்ற அனுபவம் இந்தக் கதை மூலம் கிடைத்தது.  " ஒரு பயணம்" கதையின் அனுபவங்கள் சிலிர்க்க வைத்தவை! வயலூர் முருகன் கொடுத்த அனுபவங்களால் நம் மனமும் நிறைகிறது. "எப்படி   மனம் துணிந்தீரோ" கதையின் தலைப்பே குருவைக் கேட்பது போல் அமைந்து விட்டது. மீண்டும் இங்கே போலியான ஆன்மிகவாதியின் குட்டு வெளிப்படல்!

"வடு" கதை ஏற்படுத்திய தாக்கத்தின் வடு மறையவே மறையாது. ஒரு ஊதாப்பூ நிறம் மாறியதன் கதையில் நண்பன் கூடவே இருந்து செய்த துரோகம், அதைக் கண்டு பிடிக்க முடியாமல் ஊரெல்லாம் சுற்றிவிட்டு அலைந்த அலைச்சல், யார் மீதோ சந்தேகப்பட்டுக் கையில் கிடைத்தவனை நம்பி, :(  "காமச்சேறு", "காட்டிக் கொடுத்த மணி" ஆகிய கதைகளில் கிடைக்கும் பக்திப் பரவசம்!  இவருக்கு எல்லாவிதமான கதைகளும் எழுத வரும் என்பதைக் காட்டுகிறது. பக்தியா உடனே அதற்கேற்ற கதை! காதல் என்றால் கேட்கவே வேண்டாம்! உடனே சிறு பையனாக மாறி அம்மாவிடம் கோவித்துக் கொள்வார்! முதிர்ந்த தேர்ந்த எழுத்தாளர்களின் நடையில் "எப்படி மனம் துணிந்தீரோ!" என்று கேட்பார்!

மொத்தத்தில் அருமையானதொரு தொகுப்பு. ஏற்கெனவே ஓர் சிறுகதைத் தொகுப்பு வந்திருப்பதாக எங்கள் ப்ளாக் ஶ்ரீராம் எழுதி இருந்தார். இது இரண்டாவது என நினைக்கிறேன்.  திரு மோகன் ஜி எனக்குப் புத்தகம் அனுப்பி 2 மாதம் ஆகப் போகிறது. ஆனாலும் நான் ஓர் தயக்கத்தினால் அதைக் குறித்து எழுதவில்லை. அவரோ வானவில் மனிதர்! நானோ தரையில் இருப்பவள்! அண்ணாந்து பார்த்தாலும் ஊர்க்குருவி கருடனாக ஆக முடியாதல்லவா? அதான் காரணம்.

எல்லாக் கதைகளையும் குறித்து இங்கே  எழுதவில்லை. சிலவற்றைத் தான் குறிப்பிட்டிருப்பேன். என்றாலும் எல்லாவற்றையும் ரசித்துப் படித்தேன். அதிலும் "கல்யாணியைக் கடித்த கதை"யையும், (சூடு போட்டதாகப் பொய் சொன்ன சித்தியை ரொம்பவே பிடித்தது)" அங்கிங்கெனாதபடி" கதையையும் "எப்படி மனம் துணிந்தீரோ" கதையையும் மீண்டும் மீண்டும் படித்தேன். இப்போது கூடப் பதிவு எழுதுகையில் அவற்றை ஒரு முறை பார்த்த பின்னரே எழுதுகிறேன். 

Tuesday, July 18, 2017

சில எண்ணங்கள், சில பகிர்வுகள்!

மோகமுள் விமரிசனம் பலரையும் கவர்ந்திருக்கிறது. புத்தகங்கள் நிறையப் படித்தாலும் எல்லாவற்றுக்கும் விமரிசனம் என்றோ அல்லது என் பார்வை என்றோ எழுத முடிவதில்லை! அதோடு இப்போதெல்லாம் கொஞ்சம் அலுப்பு, அயர்ச்சி, இயலாமை தோன்றி உள்ளது. அதை முறியடிக்க வேண்டியே குறைந்த பட்சமாக 2 மணி நேரமாவது இணையத்தில் உட்காருகிறேன். அந்த நேரமும் வந்திருக்கும் மடல்களைப் பார்ப்பதிலும், பதில் அளிப்பதிலும், தங்கள் வலைப்பக்கத்துக்கு அழைக்கும் நண்பர்களின் வலைப்பதிவைப் பார்ப்பதிலும் சென்று விடும். அதன் பின்னர் தொடர்ந்து உட்காரக் கூடாது என்று கண்களை மூடிக்கொண்டு படுத்து விடுவேன். ஆகவே கொஞ்சம் சுரத்துக் குறைந்துள்ளது என்பதே உண்மை. ஆனாலும் ஒரு சில சமயம் எழுத விஷயம் இருந்தாலும் பகிராமல் இருக்கும்போது மனம் கொஞ்சம் குத்திக்காட்டத் தான் செய்கிறது. நமக்குத் தான் ம.சா. ரொம்பவே வந்து படுத்துமே! :)
*********************************************************************************


இந்தியத்தபால் துறையின் சேவை போற்றுதலுக்கு உரியது. இன்னமும் தபால் அட்டை, உறை போன்றவற்றின் விலை சாமானிய மக்கள் வாங்கும்படியாக மலிவாகவே இருந்து வருகிறது. ஒரு சில தபால் அலுவலகங்கள் மூடி விட்டாலும் பெரும்பாலானவை முக்கியமான கிராமங்களில் இருந்து வருகின்றன. ஆனால் மக்கள் பெரும்பாலும் கூரியர் சேவையையே நம்புகின்றனர். கூரியர் இத்தனைக்கும் பணம் அதிகம் வாங்கும் சேவை ஆகும். ஆனாலும் எல்லாக் கூரியர்களும் எல்லாவிதமான தபால்களையும் வாங்குவதில்லை! ஒரு சில கூரியர்களால் ஏற்கப் படுவதில்லை. இரண்டு நாட்கள் முன்னர் ஒரு பார்சலைச் சென்னைக்கு அனுப்ப வேண்டிக் கூரியரை நாடினோம். அவங்க ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். இன்னும் சில கூரியர்கள் ஒரு கிலோ எடைக்குக் குறைந்த பட்சத் தொகையாக 350 ரூ வரை கேட்டார்கள். அப்படியும் பார்சலைத் திறந்து பார்ப்போம். ஸ்கான் செய்து பார்ப்போம். உள்ளே இருப்பதை எடுக்க வாய்ப்பு உண்டு என்றெல்லாம் சொல்லிவிட்டார்கள்.

நாங்க ராஜஸ்தானில் இருந்தப்போ கும்பகோணம் அருகே கருவிலி கிராமத்தில் இருந்த என் மாமனார் வீட்டவருக்கு தீபாவளித் துணிகள் வாங்கித் தபால் மூலம் பார்சலில் அனுப்புவோம். காப்பீடு செய்யப்பட்ட பார்சல். ஆனால் ஒரு மாதம் முன்னரே அனுப்ப வேண்டும். பார்சலே மெதுவாகப் போகும் என்றால் காப்பீடு செய்யப்பட்டது இன்னும் கொஞ்சம் தாமதம் ஆகும். என்றாலும் பார்சல் செய்து அதை மேலே ஒரு துணிப்பையைப் போட்டுத்தைத்து அரக்கு சீல் வைத்து அனுப்புவோம். ஜாக்கிரதையாகப் போய்ச் சேர்ந்து விடும். ஆகவே இப்போதும் நம்ம ரங்க்ஸ் கூரியருக்குப் போயிட்டு மனம் நொந்து வந்தவரிடம் தபால் மூலம் அனுப்பலாம் என்று சொன்னேன். அவரும் நம்பிக்கையே இல்லாமல் தான் போனார். காப்பீடு செய்து அனுப்பவேண்டி எல்லாம் தயார் செய்து வைத்திருந்தாலும் அரக்கு சீல் வைக்கவில்லை. ஆகவே தபால் அலுவலகத்தாரே காப்பீடு செய்தால் உடனே போகாது. பத்து நாட்களாவது ஆகும் என்று சொல்லி விரைவுத் தபாலில் அனுப்புமாறு சிபாரிசு செய்திருக்கிறார்கள்.

இம்முறையில் மறுநாளே சென்னைக்குப் போய்ச் சேர்ந்து விடும். ஆனால் மறுநாள் ஞாயிறு என்பதால் திங்களன்று போய்விடும் என்றார்கள். அவரும் சம்மதித்துப் பார்சலை விரைவுத் தபாலில் அனுப்ப வேண்டி ஏற்பாடுகள் செய்து விட்டு வந்தார். 106 ரூபாய் தான் செலவு. அதோடு பதிவு எண்ணைக் கொடுத்துத் தபால் எங்கே இருக்கிறது என்பதை இணையம் மூலம் தேடிக் கண்டு பிடித்துக் கொள்ளலாம் என்றும் கொடுத்திருந்தார்கள். திங்களன்று இந்தியத் தபால்துறையின் அந்தத் தளம் சென்று பதிவு எண்ணைக் கொடுத்துத் தேடினேன். சென்னையில் குறிப்பிட்ட தபால் அலுவலகம் போய்ச் சேர்ந்து விட்டது என்ற தகவல் கிடைத்தது. ஆனால் நபருக்குப் போய்ச் சேர்ந்த விபரம் இல்லை. அது அந்தக் குறிப்பிட்ட தபால்காரர் திரும்பி வந்து விபரங்கள் கொடுத்ததும் தான் அங்கே வரும். ஆகவே எப்படியும்சென்னை போய் விட்டதால் இன்று நாள் முடிவதற்குள்ளாகக் கொடுத்து விடுவார்கள் என்று நம்பினோம்.

அதே போல் அன்று மாலை ஆறுமணி சுமாருக்குக் குறிப்பிட்ட நபரிடமிருந்து பார்சல் வந்து சேர்ந்தது என்ற தகவல் கிடைத்தது. அன்றிரவு சுமார் 11 மணிக்குப் பார்சல் குறிப்பிட்ட நபரிடம் போய்ச் சேர்ப்பிக்கப்பட்டது என்ற தகவலையும் தபால்துறையின் தானியங்கிச் சேவை மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.  தபால்துறை இன்னமும் முன்னேற வேண்டும். என்றாலும் எனக்குத் தெரிந்து தபால் துறையில் மட்டுமே புகார் கொடுத்தால் உடனடியாகத் தீர்வு கொடுத்து வருகிறார்கள்.  இதில் சொந்த அனுபவங்கள் பல உண்டு. இப்போது ரயில்வேயிலும் இம்மாதிரிப் புகார்களுக்கு உடனடித் தீர்வு கிடைத்து வருவதாக முகநூல் மூலமும் மற்றப் பதிவுகள் மூலமும் அறிய நேரிட்டது.

"நீட்" தேர்வு வேண்டாம் என மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பல கட்சித் தலைவர்களும் சொல்கின்றனர். அவர்கள் யாரும் ஒன்றை நினைத்துப் பார்க்கவே இல்லை. இந்தத் தீர்ப்பைச் சொன்னது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மாநிலமோ, மத்திய அரசோ என்ன செய்ய முடியும்? கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்குத் தடை என்கிறார்கள். கிராமப்புற மாணவர்கள் இன்னும் எத்தனை வருஷங்களுக்குத் தரமற்ற பொதுவெளியில் போட்டி போட முடியாத கல்வியையே கற்றுக் கொண்டிருக்கப் போகிறார்கள்? அவர்களின் கல்வியின் தரத்தை மேம்படுத்தினாலே போதுமே! "நீட்" என்ன, ஜிஆர் ஈ, டோஃபெல் போன்ற தேர்வுகளில் கூட அவர்கள் நல்ல முறையில் தேர்ச்சி பெற முடியும். 

Sunday, July 16, 2017

மோகமுள்!

"சாப்பிடலாம் வாங்க!" பக்கத்தில் அடுத்தடுத்துப் பதிவுகள் போடுவதில்லை என நண்பர் நெ.த. வருத்தப்படுகிறார். போடணும்னு தான் நினைச்சுப்பேன். ஆனால் என்னவோ சொல்லத் தெரியாத காரணம்! அந்த ஐடிக்கே போக மாட்டேன். இப்படியே விட்டுப் போயிடும். வீட்டிலும் விருந்தினர் வருகை, நாங்க கொஞ்சம் வேலைகளில் மும்முரம் எனப் பொழுது விரைவில் சென்று விடும். மாலை ஆறுமணிக்கப்புறமா அதிகமாக் கணினியில் உட்காருவதில்லை. கண் பிரச்னை கொடுக்குமோ என்று பயம் தான். சென்ற வாரம் தான் கண் மருத்துவரிடம் சென்று முழுப் பரிசோதனை செய்து கொண்டு வந்திருக்கேன். கொஞ்சம் பவர் தான் மாறி இருக்கு. ஆனாலும் இந்தக் கண்ணாடியே போதும்னு சொல்லிட்டாங்க.  என்றாலும் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் கணினியில் உட்காருவதில் தயக்கம்.

ஜூன் மாதம் சென்னை சென்றபோது கிடைத்த "மோகமுள்" புத்தகத்தை ஆயிரமாவது முறையாகப் படித்து முடித்தேன். சித்தப்பாவின் ஒரு சிறுகதைத் தொகுப்பும் சித்தி கொடுத்தது! அதில் பல கதைகள் அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பான, "வாழ்விலே ஒரு முறை" யில் வந்தவையே! அதையும் படித்தேன். 55--56 ஆம் வருடங்களில் இந்த நாவல் ஏதோ புத்தகத்தில் தொடராக வந்திருக்கிறது. அப்போதைய காலத்துக்கு இதன் கரு புதுமை மட்டுமல்ல புரட்சிகரமானதும் கூட. என்றாலும் இதை எழுதியதால் தி.ஜா பாராட்டுக்குரியவர் ஆகிறார். மனித மனத்தின் ஆழத்தை எவராலும் அறிய முடியாது. அப்படி ஓர் ஆழமான எண்ணங்கள் கொண்ட பாபு என்னும் இளைஞன் மனதில் தோன்றும் காதல் உணர்வே இந்த மோகமுள் நாவலாக உருவாகி உள்ளது. பொருந்தாக் காதல் என்று தோன்றினாலும் சற்றும் விரசமில்லாமல் நம்மைத் தொடர்ந்து படிக்க வைப்பது கதாசிரியரின் வெற்றியைக் காட்டுகிறது. எந்த இடத்திலும் இந்தக் காதல் மேல் நமக்குக் கோபமோ, வருத்தமோ வரவே இல்லை! மாறாக யமுனாவுடன் பாபு சேர்ந்து விடுவானா என்னும் எதிர்பார்ப்பே தோன்றுகிறது.  மோகமுள் புத்தகத்தை முதலில் படிக்க நேர்ந்தது அறுபதுகளில் தான். அப்போத் தான் எஸ் எஸ் எல்சி, படிப்பு முடித்திருந்தேன். பெரியப்பா பெண்ணிற்கு வளைகாப்புக்காக அங்கே சென்றிருந்தபோது அக்கா படித்துக் கொண்டிருந்த புத்தகம். வீட்டில் இந்தப் புத்தகம் படித்ததுக்காகத் திட்டுக் கிடைத்தது. அறுபதுகளில்  படித்திருந்தாலும் அப்போது இந்தக் கதை எனக்குப் புரியவில்லை என்றே சொல்லணும். அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து அம்பத்தூரில் நூலகத்தில் வாங்கிப் படித்தேன்.  கதை நடக்கும் காலகட்டம் நாற்பதுகளின் ஆரம்பத்தில். 2 ஆம் உலக யுத்தம் நடக்கும் சமயம். அந்தக் கால கட்டத்தைக் குறிப்பிடும் கதையில் இப்படி ஓர் உறவு குறித்துச் சொல்லி இருப்பது உண்மையிலேயே ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.

முதலில் படித்தபோது புரியாத பல விஷயங்கள் பின்னர் புரிந்தன. இப்போது படிக்கையில் இன்னமும் புதிய கோணத்தில் பார்க்க முடிந்தது.  என்றாலும் கதைக்கருவை நினைத்தால் இன்றளவும் ஆச்சரியமாகத் தான் இருக்கும். காதல் தான் கதையின் முக்கியக் களம். அதுவும் ஓர் ஆணின் வளர்சிதைப் பருவத்திலிருந்து இளைஞனாக மாறும் ஓர் ஆணின் மனதில் தோன்றும் முதல் காதல்! நாம் நட்டு வைத்த மல்லிகையின் முதல் மொக்கு மலர ஆரம்பிக்கையில் நமக்குள் தோன்றும் உற்சாக ஊற்று! இந்தக் கதையின் நாயகன் பாபுவுக்கும் யமுனாவைப் பார்க்கும்போதெல்லாம் வருகிறது. என்றாலும் ஆரம்பத்தில் அவனால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த வயதிற்கே உரிய வெட்கம் கலந்த நாணம்! கூச்சம்! அவனைத் தடை போடுகிறது. யமுனாவைப் பார்க்கும்போதெல்லாம் அவள் நல்ல இடத்தில் உயர்வான ஒரு இடத்தில் இருக்க வேண்டியவள் என நினைக்கும் பாபுவுக்கு அதைச் செய்யக் கூடிய திறமையும் தன்னிடம் தான் இருக்கிறது என்பது புலப்பட ஓர் இளம்பெண்ணோடு அவன் உறவு கொள்ளும்போது தான் தெரிய வருகிறது.

55 வயதான ஒருவருக்கு ஏழ்மையின் காரணமாக வாழ்க்கைப்பட நேர்ந்த தங்கம்மாவுடன்  அவனுக்கு நேர்ந்த ஓர் தகாத உறவால் மனம் பாதிக்கப்பட அன்றிரவே அவனுக்குத் தன் மனம் என்னவென்று தெரிய வருகிறது. ஆனால் பாபுவின் நண்பன் ராஜமோ எனில் ஆரம்பம் முதலே பாபுவைப் புரிந்து கொண்டிருக்கிறான். ராஜத்துடன் பாபுவின் நட்பு மிகவும் அற்புதமாகச் சித்திரிக்கப்படுகிறது. பாபுவை ராஜம் புரிந்து கொண்ட அளவுக்கு பாபுவை அவன் தந்தையோ அல்லது பாபுவே தன்னைத் தானோ புரிந்து கொள்ளவில்லை.   இளம்பிள்ளையாக யமுனாவால் தூக்கிக் கொஞ்சப்பட்ட காலத்திலிருந்து அவள் மேல் தோன்றிய ஈர்ப்பு, பின்னர் இளமையில் மோகமாக மாறுகிறது. அந்த மோகம் அவளை அடையும்வரை தவிக்கும் தவிப்பே கதையின் மையக்கரு.

என்றாலும் இங்கே கதையின் அடித்தளமாக விளங்குவது நான் அறிந்தவரை தேர்ந்த சங்கீதமே! அந்த சங்கீதத்தைத் தன் வசமாக்க பாபு செய்யும் முயற்சிகள்!  ஈடு இணையற்ற மராத்தி வித்வான்களில் விஸ்வரூபம் எடுக்கும் சங்கீதம்! ஆயாசமோ சிரமமோ இல்லாமல் நாத உலகில் சஞ்சரிக்கும் அந்தக் குரல், பாபுவுக்கு சங்கீதம் கற்றுக் கொடுக்கும் ரங்கண்ணாவுக்கும் பாபுவுக்குமான உறவு குரு, சிஷ்ய உறவுக்கு அப்பால் ஏற்பட்டதொரு இணையற்ற பந்தம். தந்தையான வைத்திக்கும் மகனான பாபுவுக்கும் இடையே இருக்கும் உறவு! அதன் தனித்தன்மை! பாபுவிடம் வைத்தி கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பு! என்று எத்தனையோ சொல்லலாம். ஆனால் எல்லாம் அங்கே சுற்றி இங்கே சுற்றிக் கடைசியில் யமுனாவும், பாபுவும் ஒன்று சேருவதில் தான் வந்து முடிகிறது.

ஆனால் தனக்கு நல்லொழுக்கம் தேவை என்பதைக் கட்டாயமாகத் திரும்பத்திரும்பச் சொல்லும் தந்தையிடமும், குரு ரங்கண்ணாவிடமும் பாபு தன் விஷயத்தைச் சொல்ல முடியாமல் தவித்த தவிப்பு! சொல்லி இருந்தான் எனில் கதையின் போக்கே மாறி இருக்கலாம்! ஏனெனில் யமுனாவுக்காக எவ்வளவு தவிக்கிறானோ அவ்வளவுக்கு இந்த சங்கீதத்துக்காகவும் பாபு தவிக்கிறான். ஆனால் அப்போதெல்லாம் யமுனாவுடன் இணைவது குறித்துச் சிந்திக்காமல் இருந்துவிடுகிறான். கடைசியில் சென்னையில் ஓர் கம்பெனியில் வேலைக்குப் போயும் மனம் அலைபாயும் பாபுவுக்கு யமுனாவை அடைந்த பின்னரே தான் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க முடிகிறது.

யமுனாவையும் விட முடியாது. வாழ்வுக்கான ஆதாரமும் வேண்டும். ஆகையால் அந்த மராத்திப் பாடகர் கிட்டே குரலை வளப்படுத்திக் கொள்ளும் வித்தையைக் கற்பதற்காகப் புனே செல்கிறான் பாபு. ஆனாலும் கடைசி வரையில் பெற்றோரிடமோ, தன்னிடம் தனி அன்பு காட்டும் தந்தையிடம் மட்டுமோ யமுனா விஷயத்தைச் சொல்லவே இல்லை. யமுனாவே அதை பாபுவின் அப்பாவுக்கு எழுதி விடுகிறாள். அவரும் அதற்கு மறுப்புச் சொல்லாமல் ஏற்றுக் கொள்கிறார். யமுனாவையும் தன் வீட்டிற்கு வந்து செல்லும்படி அழைக்கிறார்.  கடைசியில் பாபுவின் மனதில் அப்பா வைத்தியே விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார்.

இந்தக் கதையில் வரும் தங்கம்மாவைப் போன்ற தம்பதியரை தி.ஜா. அவர்கள் நேரில் பார்த்திருக்கிறதாகச் சொல்லி இருக்கார். அதே போல் மராத்திப் பாடகர்கள், சங்கீத நிகழ்வுகள்,  மராத்திப்பாடகர்கள் அவர் வீட்டில் வந்து பாடிய நிகழ்வு என ஒவ்வொன்றும் இந்தக் கதைக்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல் தி.ஜா. தன்னைவிட எட்டு வயது அதிகமான ஒரு பெண்ணைப் பார்த்து மோகம் கொண்டதையும் அதைத் தெரிந்து கொண்ட அந்தப் பெண்ணும் அவரைப் பார்த்துச் சிரித்துவிட்டுப்பின்னர் தன் வயதிற்கு ஏற்ற ஓர் இஞ்சினியரைத் திருமணம் செய்து கொண்டதும் தான் இந்தக் கதையில் யமுனா பாத்திரத்துக்கான முக்கியக் காரணம். நிஜ வாழ்க்கையில் தன் மோகம் தீராத ஒன்றாகப் போய்விட்டது என்பதால் நாவலில் வரும் கதாநாயகனாவது தன் மோகத்தைத் தீர்த்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கட்டும் என்று நினைத்தாரோ என்னமோ!

எல்லாவற்றையும் எழுத மிகச் சிரமப்பட்டதாகவும் சொல்கிறார். சிரமம் பட்டிருக்கும்போதே இத்தனை சரளமான எழுத்து எனில் தானாக வரும்போது கேட்கவே வேண்டாம். பத்திரிகாசிரியர்களின் தூண்டுதல் தீயைப் போல் வந்து தூண்டிக் கொடுத்து தன் கதையை/நாவலைச் சமைத்துக் கொடுத்ததாகச் சொல்கிறார். நமக்கெல்லாம் தூண்டினால் கூட எழுத வராது! 

Thursday, July 13, 2017

ஜிஎஸ்டி தொடருமா? முடிஞ்சதா?

நல்லெண்ணெய் 140 ரூ, கடலை எண்ணெய் 80 ரூ இன்றைய விலை நிலவரம். இது நாங்கள் வழக்கமாக வாங்கும் ஆயில் மில்லின் விலை நிலவரம். இதயம், கோல்ட் வின்னர் போன்ற பாக்கெட்டில் அடைக்கப்பட்ட எண்ணெய்களின் விலை கூடி இருக்கலாம். நாங்க வாங்குவது அக்மார்க் எண்ணெய்! மளிகைப் பொருட்கள் விலை சிலது குறைந்தும், சில பொருட்கள் விலை கொஞ்சம் கூடியும் காண முடிகிறது. முக்கியமாய் ப்ரான்டட் பொருட்கள் விலை அதிகம் தான் என நினைக்கிறேன். காய்கறிகளைப் பார்த்தால் வரத்துக் குறைவு. இங்கே திருச்சி, ஶ்ரீரங்கம் வாழைப் பழம், காய், இலை, பூ போன்றவற்றிற்குப் பெயர் போனது. ஆனால் இப்போது வாழை இலையே கிடைப்பதில்லை! வாழைக்காயும் சின்னதாக இரண்டு காய் ஐந்து ரூபாய் சொல்கின்றனர். வாழைப்பூ ஏழு ரூபாயிலிருந்து பத்து ரூபாய் வரை விற்கிறது. மற்றக் காய்களில் பெரிய வெங்காயம் 15 ரூ, 20 ரூபாயிலும் சின்ன வெங்காயம் 60 ரூ, 80ரூபாயிலும் உருளைக்கிழங்கு 20,25 ரூபாய்க்குள்ளும் கிடைக்கிறது. தக்காளி 80 ரூபாய்! ஒரு தக்காளியை இரண்டு நாட்கள் வைச்சுச் சமைக்கிறேன். இது அவ்வப்போது நடப்பது தான் என்றாலும் இதற்கும் ஜிஎஸ்டியைக் காரணம் காட்டுவது தேவையற்றது.

சாலையோரத் தேநீர்க்கடைகள், பஜ்ஜி, போண்டாக்கள் விலையையும் தேநீர் விலையையும் ஏற்றி விட்டார்கள். காரணம் ஜிஎஸ்டி என்கின்றனர். ஆனால் அவர்கள் ஜிஎஸ்டி கட்டியதற்கான சான்று எதுவும் இல்லை! காட்டுவது இல்லை. நாம் வாங்கும் பொருட்களுக்கான ரசீதும் தருவதில்லை. கடலை மிட்டாய் காதி பண்டாரில் வாங்கினால் விலையும் குறைவு. ருசியும் நன்றாக இருக்கிறது. மளிகைக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் கடலை மிட்டாய் விலையும் அதிகம், ருசியும் குறைவு! ப்ரான்டட் சிறுதானியங்கள் விலையும் குறைந்துள்ளன. வரகு கிலோ 80 ரூபாய் தான்! சோளம்(வெள்ளைச் சோளம்)37 ரூபாய். சாமை அரிசி மட்டும் விலை அதிகமாகவே காணப்படுகிறது. கிலோ 93 ரூபாய். தினை அரிசி 56 ரூபாய் தான். எல்லாவற்றையும் விட விலை குறைவானது கம்பு, கிலோ 32 ரூபாய். குதிரை வாலி அரிசியும் விலை அதிகம் 95 ரூபாய். கடலை மிட்டாய் பாக்கெட் இந்த சூப்பர் மார்க்கெட்டில் 48 ரூபாய். ஆனால் காதியில் 42 ரூபாய் மட்டுமே!  பெருங்காயம் அசாத்திய விலை 100  கிராம் டிடி பெருங்காயம் 118 ரூ. ஆனால் இதையே நாங்க வழக்கமா வாங்கற இடத்தில் லூசாக வாங்கினால் கிலோ 70 ரூபாய் தான் ஆகிறது.  பாக்கு லூசாக வாங்கினால் பத்து ரூபாய்க்கு 25 பாக்கு வரைதான் கிடைக்கிறது. அதையே  கடையில் வாங்கினால் 100 கிராம் 43 ரூபாய் தான்.  ஆகச் சில பொருட்கள் லூசாக வாங்கினால் விலை குறைவாகவும் சில பொருட்கள் லூசாக வாங்கினால் விலை அதிகமாயும் இருக்கின்றன.

ஒரு சில மளிகைக் கடைகளிலே மட்டும் பில் தருகின்றனர். பல கடைகளிலும் மளிகைக்கடைகளிலும் பில் தருவதில்லை. ஆனாலும் அவர்களும் பொருட்களின் விலையை ஜிஎஸ்டியைக் காரணம் காட்டி ஏற்றுகின்றனர். அவர்கள் கட்டினதற்கான சான்றைக் காட்ட வேண்டும். அதற்கான க்ரெடிட் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி யாரும் செய்யறதில்லை; அல்லது அது குறித்த விழிப்புணர்வு இல்லை. நேற்று மாலை "பொதிகை" தொலைக்காட்சியில் இதைக் குறித்த ஓர் நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. மக்களின் சந்தேகங்களுக்குத் தெளிவான பதில் கிடைத்தது. ஆனால் எத்தனை பேர் இதை எல்லாம் பார்க்கப் போகிறார்கள். மக்களுக்கு சூப்பர் சிங்கரும், பிக் பாஸும், சன் சிங்கரும் தராத மகிழ்ச்சியையா இவை தந்துவிடும்?  முக்கியமாய் இந்த ஜிஎஸ்டி வியாபாரிகளுக்கானது. அவர்கள் தாங்கள் சம்பாதித்த லாபத்துக்கு மட்டும் வரி கட்ட வேண்டும் என அரசு கூறுகிறது. அந்த லாபத்தை இதுவரை காட்டாதவர்கள் இப்போது காட்டியாக வேண்டும்.

வெண்ணெய் ஆவின் வெண்ணெய் 440 ரூபாய். ஆவின் பால் விலை லிட்டருக்கு 44 ரூபாய். தனியார் வெண்ணெய் 480 இல் இருந்து 500 வரை விற்கின்றனர். பாலும் கூட வைத்து விற்கலாம். நான் விசாரித்த வரை 40 ரூபாய், 45 ரூபாய், 38 ரூபாய் என மூன்று தரங்களில் பால் கொடுப்பதாகச் சொல்கின்றனர். அமெரிக்கா போகும் வரையும் இந்தப்பால்காரரிடம் தான் பால் வாங்கிக் கொண்டிருந்தோம். அப்போ 38 ரூபாய் கொடுத்து வந்தோம். இப்போ 40,45 கொடுத்தும் பால் தரமாக இல்லை! கேட்டால் தண்ணீர் ஊற்றாமலா கொடுக்க முடியும் என்கின்றனர். தன்ணீர் ஊற்றுவதிலும் ஓர் தராதரம் இருக்கணுமே! அது இல்லை. ஆகவே ஆவின் பாலுக்கு மாறி விட்டோம். விலையும் குறைவு. மாசம் 300 ரூபாய் வரை மிச்சமும் ஆகிறது. என்ன! பக்கத்திலே இருக்கும் பூத்துக்கு இரு வேளையும் பால் வருவதால் அவ்வப்போது போய் வாங்கி வரணும்! அதான் ஒரு பிரச்னை! 

Sunday, July 09, 2017

ஜிஎஸ்டி வரி விதிப்பு அக்கிரமம்! :)

GST யை பற்றி சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் தவறான பரப்புரை செய்யப்பட்டு வருவதற்கும் மற்றும் சாமானியனின் மனதில் எழுந்த சில வினாக்களுக்கும் நான் அறிந்த வகையில் சில விளக்கங்கள்.

1. GST யால் டீ விலை ரூ.8 லிருந்து ரூ.10 ஆகவும் காபி ரூ.10 லிருந்து ரூ.12 ஆகவும் விலையேற்றப்பட்டுள்ளதே?
பால் - வரி விலக்கு
சர்க்கரை - 5% வரி. முன் 6%.
டீ, காபி தூள் - 5% வரி. முன் 6%.
ஆகையால் டீ, காபி விலையேற்றம் விற்பனையாளர்களின் தன்னிச்சையான முடிவு.

2. தங்க பிஸ்கட்டுக்கு 3% நாங்க திங்கிற பிஸ்கட்டுக்கு 18%?
GST யில் பிஸ்கட் 32 சதவீதத்திலுருந்து 18 ஆக குறைந்துள்ளது. இதை மறைத்துவிட்டு தங்கத்தோடு ஒப்பிடுவது முறையாகாது.


3.கடலை மிட்டாய்க்கு 18% , பீட்சாவுக்கு 5% இது என்ன நியாயம்?
கடலை மிட்டாய் குடிசை தொழிலாகவும், சிறு குறு நிறுவனங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. GST பொறுத்த வகையில் 20 லட்சம் வரை turnover செய்பவர்கள் வரிகட்ட தேவையில்லை. அதற்கும் மேல் அதாவது 20-70 லட்சம் வரை turnover செய்பவர்கள் 2% வரி கட்டினால் போதும். ஆக பெரும்பான்மையான அனைத்து சிறு குறு தொழில்களும் 20இலட்சத்திற்கு உள்ளே தான் இருக்கும் ஆக இவர்கள் GST யில் வரி செலுத்த தேவையில்லை ஒரு வேலை அவர்களின் turnover 20-70 இலட்சம் இருந்தால் அவர்கள் 2% வரி செலுத்தினால் மட்டும் போதுமானது.


4. பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களுக்கு
18% வரி போடுவதா?
பெரும்பாலும் சுய உதவி குழுக்கள்தான் இந்த உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் சிறு குறு தொழிலாகவும் செய்யப்படுகிறது. ஆக நான் மேற்க்குறிப்பிட்டதுபோல் 20 இலட்சம் வரை இதற்கு வரிவிலக்கு. 20-70 இலட்சம் வரை turnover இருந்தால் 2% வரி. ஒரு வேலை இதற்கு வரிவிலக்கு அளித்தால் இதை ப்ராண்டாக(brand) விற்பனை செய்யும் பெரு நிறுவனங்களிடம்(MNC) போட்டிபோட முடியாமல் இந்த சிறு குறு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவர்.

5. ஹோட்டல்களில் அதிக வரி வசூலிக்கப்படுகிறதே?
GST க்கு முன்னால் உணவகங்களில் 14.5% VAT, 5.6% service tax, swach bharath ,krish kalyan tax என 20.5% வரை வரி செலுத்தினோம். அனால் தற்போது 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

6. 28% வரி போடுவதா?
GST யில் 81 சதவீத பொருட்கள் 18% வரிக்குள் வந்துவிடும். அத்தியாவசியத்தை தாண்டி சொகுசு என்ற வரையறையின் எல்லையை நெருங்கும் போதுதான் 28% வரி வசூலிக்கப்படும். அதாவது நட்சித்திர விடுதியில் தங்க ஒரு நாளைக்கு ரூ.7500 மேல் முன்பதிவு செய்வது, make up idems ,வாசனை திரவியம், face creams, fridge போன்ற பொருட்கள் இந்த வரிக்குள் அடங்கும்.


7. எத தாண்டா வரி இல்லாம கொடுப்பிங்க?
அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, தானியங்கள், பழங்கள்,காய்கறிகள், பால் போன்றவைகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வன் படத்தில் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராக நடவடிக்கை எடுத்து வரி கட்ட சொன்ன போது எழுந்து நின்று கைதட்டி ஆதரித்த ஆரவாரம் செய்து இப்படி ஒரு ஆள் நிஜமாகவே ஆட்சி செய்தால் தான் இந்தியா உருப்படும் என்று ஆதங்கப்பட்டவர்களின் வாக்கை பெற்று தான் மோடி பிரதமர் ஆகி இந்தியாவை வல்லரசாக மாற்றி ஒரே வரி என்று சீர்திருத்தம் செய்கிறார்.
இந்த நேரத்தில் மோடியை மக்கள் புகழ்ந்து அவர் செல்வாக்கு மேலும் உயர்ந்து விடும் என்ற அச்சத்தில்   அவரை வெறுக்கும் கூட்டம் மக்களை குழப்பி பொய் பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள்.

இந்த குழம்பிய குட்டையில் மீன் பிடித்திட வியாபாரிகள் விலையேற்றம் செய்கிறார்கள். இந்த உண்மை தெரிந்தும் இந்த நேரத்தில் அரசியல் லாபம் அடைய அரசியல்வாதிகள் காய் நகர்த்தி வருகிறார்கள். பாஜக பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் மற்றும் தேசத்தின் வளர்ச்சியை விரும்பும் அனைவரும் இது போன்ற வதந்தியை முறியடிக்க கைகோர்த்து பாடுபட அழைக்கிறோம். வாருங்கள். உண்மையை உரக்கச் சொல்வோம்.

இந்த அநியாயத்தைப் பார்த்தீர்களா?

வீட்டுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்பவர் நேற்று காலை வந்தார். நாளை முதல் ஒரு கேனுக்கு 5 ரூபாய் அதிகம் இனிமேல் ஒரு கேன் 40 ரூபாய் என்றார் என் மனைவியிடம். பேப்பர் படித்துக்கொண்டிருந்த நான் தலையைக்கூட நிமிர்த்தவில்லை. அவர் சமாதானமாகவோ என்னவோ ’எல்லாம் இந்த மோடி பண்றது’ என்றார். நான் எதுவுமே சொல்லவில்லை. இந்த மனிதர் சுமார் பத்து வருடங்களாக இந்தத் தொழில் செய்துவருகிறார். என் வீட்டுக்குக் கடந்த 3 வருடங்களாக இவர்தான் தண்ணீர் சப்ளை. ஒருமுறைகூட தண்ணீருக்கு பில்லோ எதுவுமோ தந்ததில்லை. இது ஒரு முறைசாரா தொழில். முறையான பதிவு இப்போதுவரை இல்லை. ஒருவேளை இருந்தாலும் விற்கும் எல்லா கேனுக்கும் வரி கட்ட மாட்டார்கள். ஒரு பத்து சதவீத கேனுக்குத்தான் வரி கட்டுவார்கள். அப்புறம் ஏன் எல்லோருக்கும் விலை ஏற்றுகிறார்கள். ஜி.எஸ்.டியின் பெயர் சொல்லி பொருட்களின் விலையை ஏற்றி இருக்கும் வணிகர்களில் பெரும்பகுதி இப்படிப்பட்டவர்கள்தான்.

இந்த நல்லபிள்ளைகள்தான் அறச்சீற்றம் கொண்டு அரசுகளை சாடிக்கொண்டிருக்கிறார்கள். ஊழல் ஒழிய வேண்டும் என்கிறார்கள்.
மோடி அவர்கள் எது செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கும் நபர்கள் மிகவும் அறிவாளிகள் போல் கேட்கும் கேள்வி பெட்ரோல்_டீசலுக்கு GST வரி ஏன் போடவில்லை? என்பது தான்....

இந்தியாவில் உள்ள மாநில அரசு நிதி அமைச்சர் அனைவரும் GST மசோதா தயாரிப்பு உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக வற்புறுத்திய ஒரு  விசயம் இது தான். பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டியில் வரி கூடாது என்பதே! ஏன் தெரியுமா?

#பெட்ரோல்_டீசல் ஆகியவை ஏன் #GST ல் வரவில்லை ,
இதுதான் பல மாநிலங்களின் முக்கியமான + முதன்மை வருமானம்.
பெட்ரோல், டீசல், மது போன்ற பொருள்களுக்கு பல மாநிலங்களும் குறைந்தது  30% முதல் 80% வரை வரிவிதித்து வருகின்றன.
இதனால் பெட்ரோல் டீசல் மது இவற்றை GST வரி வரம்புக்குள் கொண்டு வந்ததால் மாநில அரசு வருமானம் படு மோசமாக ஆகிவிடும் என்று தான் மாநில அரசுகள் கடுமையாக எதிர்த்தனர். ஏனெனில்  காரணம் GSTல் உச்சகட்ட வரி என்பது 28% தான். இதனால் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கையெழுத்துப் போட மாநில நிதி அமைச்சர்கள் மறுத்து விட்டார்கள். இதன் பிறகு GSTல் பட்டியலில் இருந்து பெட்ரோல் டீசல் மது போன்ற பொருட்களை நீக்கிட மத்திய அரசு சம்பாதித்த பிறகே GST க்கு கையெழுத்து அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் போட்டு இப்ப GST அமலுக்கு வந்து உள்ளது.

பெட்ரோல் டீசலுக்கு மத்திய அரசு 9% மட்டுமே வரிவிதித்து உள்ளது. ஆனால்
தமிழ்நாடு அரசு பெட்ரோலுக்கு 38%, மதுவிற்கு சுமார் 60% வரிவிதிப்பில் இருந்து வருகிறது....

பெட்ரோல், மது போன்ற பொருள்களை GST ல் கொண்டு வந்தால், அதிகபட்சமாக 28% தான் வரிவிதிக்க முடியும். மாநிலங்களுக்கு நட்டம் ஏற்படும். அதனால் பெட்ரோல் மற்றும் மது போன்ற பொருள்களை #ஜிஎஸ்டி வரிவிதிப்பில் கொண்டு வரக்கூடாது என்று பெரும்பான்மையான மாநிலங்கள் ஜிஎஸ்டி கவுன்சிலில் வாதிட்டன....அதனால் தான் பெட்ரோலிய பொருள்கள் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இல்லை... மத்தியில் மோடி அவர்களின் அரசு விரும்பியபடி GST அமலுக்கு வந்து இருந்து இருந்தால் ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்குள் கொண்டு வரப்பட்டு இருக்கும் அப்போது , #பெட்ரோலிய பொருள்களின் விலை லிட்டருக்கு சுமார் ரூ 25ரூபாய் வரை குறைந்து இருக்கும்.


மேற்கண்ட செய்திகள் முகநூல் நண்பர் வேலுதாஸ் என்பவரால் எழுதப்பட்டு திரு ஓகை நடராஜன் அவர்களால் பகிரப்பட்டது!


பி.கு. எழுத்துப் பிழைகள் இருந்தால் அதன் காரணம் இது காப்பி, பேஸ்ட் செய்யப்பட்டது என அறியவும். நான் எழுதவில்லை. கூடியவரை திருத்தி இருக்கேன். :)

Wednesday, July 05, 2017

கொட்டிட்டைக்கருவிலி கும்பாபிஷேஹம்! நிறைவு!


ராஜகோபுரம் எடுத்த பின்னர் அதன் காட்சி!




கும்பகோணத்திற்குக் கிழக்கே அரிசிலாற்றின் தென்கரையில் கூந்தலூர் என்ற கிராமம் உள்ளது. அங்கிருந்து அரிசிலாற்றுப் பாலத்தைக் கடந்து சற்று வடக்கே போனால் "கருவிலி" என்ற பெயர் கொண்ட ஊர் வரும். இதற்குக் கும்பகோணத்திலிருந்து வடமட்டம் என்ற ஊர் வந்து அங்கிருந்து "பரவாக்கரை" என்ற ஊர் ஒரு கி.மீட்டரில் உள்ளது. அந்த ஊரில் இருந்தும் முட்டையாற்றுப் பாலத்தைக் கடந்து சுமார் ஒரு மைல் வந்தும் வரலாம். இந்த இரண்டு ஆறுகளுக்கு நடுவில் அமைந்த ஊர் தான் "கருவிலி". நான் கல்யாணம் ஆகி முதல் முதல் வந்த ஊர். உண்மையில் பூர்வீகம் "பரவாக்கரை" தான் என்றாலும் என் மாமனாரின் பங்கு நிலங்கள் இந்த ஊரைச் சுற்றி அமைந்த காரணத்தாலும், அந்த நாளில், மழை பெய்யும்போது முட்டையாற்றில் வெள்ளம் வந்து உடைப்பு ஏற்பட்டு இங்கே வந்து சரிவரக் கவனிக்க முடியவில்லை என்பதாலும் இங்கேயும் ஒரு வீடு இருந்ததாலும் இங்கே வந்தனர் என்று சொல்வார்கள். ஆனால் இன்னும் நாங்கள் குலதெய்வம் என்று பரவாக்கரை மாரி அம்மனைத் தான் வழிபடுகிறோம். இப்போது சற்று கருவிலியைப் பற்றி.

முன்பு எல்லாம் நாங்கள் மூங்கில் பாலத்தில் தான் ஆற்றைக் கடக்க வேண்டும். அதுவும் மழை நாளிலும்,ஆற்றில் தண்ணீர் வந்து விட்டாலும் மாட்டு வண்டியை அவிழ்த்து மாட்டை விரட்டி விடுவார்கள். மாடு நீந்திப் போய்விடும். வண்டியை ஆட்கள் ஆற்றில் தள்ளிக் கொண்டு போய் கரையில் ஏற்றி விடுவார்கள். இப்போ கல்பாலம் வந்து விட்டது. கொஞ்சமும் சிரமம் இல்லாமல் கார் முதல் லாரி வரை போகலாம். போகும் வழி எல்லாம் மூங்கில் தோப்புக்களும், தென்னந்தோப்புக்களும் சூழ்ந்து நின்று வயல்களைப் பாதுகாக்கும். ஆற்றில் தண்ணீர் வந்ததும் ஊர்ப்பக்கம் போனால் வாய்க்காலில் நாற்று மாலைகள் மிதந்து வரும் காட்சியைப் பார்க்கலாம். இப்போது டீக்கடையில் இருந்து பாட்டுச் சத்தமும், அங்கங்கே டீ.விக்களின் சத்தமும் கேட்க ஆரம்பித்துள்ளது. இது முன்னேற்றத்திற்கான பாதை என்றாலும் ஊரின் ஜீவன் எங்கோ போய் விட்டதாக எனக்குத் தோன்றுகிறது.

எல்லாவற்றையும் கடந்து போனால் ஊருக்குள் போகும்போதே அக்ரஹாரம் வரும். சில வீடுகளே உள்ள அக்ரஹாரம். நாங்கள் இருந்த போதே 4 வீடுகளில் தான் எங்கள் சொந்தக்காரர் இருந்தனர். தற்போது கோவில் குருக்களைத் தவிர யாரும் இல்லை. அக்ரஹாரத்தில் நுழையும் போதே நமக்கு வலப்பக்கமாக ஆஞ்சனேயர் கோயில். ஆஞ்சனேயரைத் தரிசித்துவிட்டு உள்ளே போனால் அக்ரஹாரத்தின் முடிவில் சிவ ஆலயம்.

சோழ நாட்டுப் பாணியில் கருவறையில் விமானம் பெரிதாக உள்ள மாதிரிக் கட்டப்பட்ட கோயில். மிகப் பழைமை வாய்ந்த கோவில். நான் திருமணம் ஆன புதிதில் கோவிலுக்குப் போனால் குருக்கள் மாமாவைத் தவிர யாருமே இருக்க மாட்டார்கள். அவர் கோவில் திறக்கும் சமயம் கேட்டுக் கொண்டு போய் விட்டு வருவோம். ஸ்வாமிக்கு விளக்கேற்றி சாதம் நைவேத்தியம் செய்தாலே பெரிது. சுற்றுச் சுவர் எல்லாம் இடிந்து ஸ்வாமி சன்னதிக்கு வடக்கே அம்மன் சன்னதிக்குப் போகும் பாதை எல்லாம் புதர் மண்டிக் கிடக்கும். திரு பரணீதரன் அவர்கள் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன் திருப்பணி தொடங்கப்பட்டு பாதியில் நின்று விட்டதாக ஆனந்தவிகடனில் எழுதி இருக்கிறார். அதற்குப் பல வருடங்களுக்குப் பிறகு 97 ஏப்ரலில் கும்பாபிஷேஹம் நடைபெற்றது. காரணகர்த்தாக்கள் கல்கி திரு வைத்தியநாதனும், அவர் தம்பி திரு கிருஷ்ணமூர்த்தியும் ஆவார்கள். இருவருக்கும் பூர்வீகம் இந்த ஊர்தான். ஆனால் அவர்கள் பல வருடங்களுக்கு முன்னே சென்னை சென்று பின் திரு கிருஷ்ணமூர்த்தி டெல்லியும் சென்று "மாருதி உத்யோக்" பொறுப்பையும் ஏற்றதும், பின் Steel Authority பொறுப்பும் சேர்ந்து கொள்ள ஊரைப் பற்றி மறந்தே போனார்.

திடீரென இந்த ஊர் ஆஞ்சனேயர் கனவில் வந்து கோவில் திருப்பணியைப் பற்றி நினைவு படுத்தினதாய்ச் சொல்கிறார்கள். சிலர் ஊர்க்காரர் ஒருத்தருக்கு ஆஞ்சனேயர் வந்ததாயும் சொல்கிறார்கள். எப்படியோ கோவிலுக்கு வந்தது புது வாழ்வு. பரம்பரை தர்மகர்த்தாக்களான இவர்கள் குடும்பம் பொறுப்பை ஏற்றதும் ஐயன் புதுப் பொலிவினையும், அன்னை அலங்காரத்தையும் பெற்றனர்.

தேவாரப்பாடல் பெற்ற தலம் இது.அப்பர் தன் பதிகங்களிலே இந்தத் தலத்தைக் "கருவிலிக் கொட்டிட்டை" என்றே அழைக்கிறார். திரிபுரம் எரித்த எம்பெருமான் ஆடிய பல்வேறு வகை நடனங்களிலே "கொட்டிட்டை" ஒருவகை என்பதாகவும், அதனையே ஈசன் இங்கு தாண்டவமாக ஆடினார் என்பதும் செவிவழிச் செய்தி. கோயிலின் பெயர் "கொட்டிட்டை" என்பது. அப்பர் தன் பாடலிலே,
"உய்யுமாறிது கேண்மினுலகத்தீர்
பைகொள் பரம்பரையான் படையார் மழுக்
கையினானுரை கின்ற கருவிலிக்
கொய்கொள் பூம்பொழிற் கொட்ட்டிட்டை சேர்மினே!" என்றும்,

"நில்லா வாழ்வு நிலைபெறுமென்றெண்ணிப்
பொல்லாவாறு செயப் புரியாது நீர்
கல்லாரும் மதிள் சூழ்தண் கருவிலிக்
கொலேறூர்பவன் கொட்டிட்டை சேர்மினே! " என்றும் இத்தலத்தைச் சிறப்பித்துப் பாடி உள்ளார்.  இத்தலத்தின் வரலாறு கீழ்க்கண்டவாறு சொல்லப்படுகிறது!

சற்குணன் என்ற சோழ அரசன் மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்து இத்தலத்து ஈசனைத் துதித்து மோட்சம் பெற்றான். "கருவிலி" என்ற பெயரே "இனி ஒரு தாயின் கருவிலே உதிக்க வேண்டாம்," என்னும் மோட்சத்தைக் கொடுக்கும்படியான நிலையைக் குறிக்கும். தாட்சாயணியை இழந்த ஈசன் கடைசியாக இங்கே வந்து அமர்ந்ததாகவும், அம்பிகை அருகிலுள்ள அம்பாச்சிபுரம் என்னும் ஊரில் அழகே உருவாகத் தோன்றியதாகவும், ஈசனோடு இணைய வேண்டி இங்கே வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அன்னை வந்த ஆனந்தக்களிப்பில் ஈசன் கொடு கொட்டி என்னும் ஆட்டத்தை இங்கே நிகழ்த்தியதாகவும் அதனால் இந்த ஊர் "கொட்டிட்டைக் கருவிலி" என அழைக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.  இந்த ஊர்க் கோயிலுக்குச் சொந்தமான நடராஜர் இப்போது எந்த வெளிநாட்டில் குடியிருக்கார் என்பது தெரியவில்லை.


 இந்தக் கோவில் சற்குணேஸ்வரரும், சர்வாங்க சுந்தரியையும் தரிசித்தால் கருவிலே உதிக்காதிருக்கும் அந்தப் பேறு கிடைக்கும் என்கின்றனர் . லிங்கம் மிகப் பெரிய லிங்கம். கோவில் மிகப் பழைய கோவில். ஆயிரம் வருடங்களுக்கு மேல் இருக்கும். மிகப் பெரிய அம்பாள். பார்த்தால் நிச்சயம் திகைப்பாக இருக்கும். அப்படி அம்மன் உங்கள் எதிரில் நின்று பேசுவாள்,. நாம் கூப்பிட்டால் "என்ன, இதோ வந்துட்டேன்," என்பது போன்ற சிரித்த முகத்துடன் நிற்பதைப் பார்த்தால் இவள் சர்வாங்க சுந்தரி என்பதற்கு வேறு அடையாளமே வேண்டாம் என்று தோன்றும். அண்ணலின் கவனத்தைத் தன் பக்கம் இழுப்பதற்கு அன்னை உலகத்து அழகை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு வந்தாளாம் இங்கே, பக்கத்தில் ஓர் ஊரில் சில காலம் இருந்த அம்பிகை பின் இங்கு வந்து சர்வாங்க சுந்தரியாக இறைவனின் முன் நின்றாளாம். இவளைத் தரிசித்த இளம்பெண்களின் கல்யாணம் உடனே ஆகிவிடுகிறது என்றும், குழந்தை இல்லாதவர்க்குக் குழந்தை பிறக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

கோயிலின் எதிரே யமதீர்த்தம். நன்றாகச் செப்பனிடப்பட்டு வட இந்தியப் பாணியில் "கங்கையைச் சடையில் கொண்ட ஈசனின்" சிற்பம் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது.  நான் எடுத்த படம் கிடைக்கவில்லை. வேறே படத்தைப் போடலாம் என்றால் ப்ளாகர் அனுமதிக்கலை!  பாதுகாப்புக் குறைவு என்று படத்தை நீக்கச் சொல்லி விட்டது.  தற்போது இந்தக் கோயிலுக்கு விஜயம் செய்த ஶ்ரீவித்யா உபாசகர் ஒருவர் இது அன்னையின் அருளை வேண்டி வட்டவடிவமாக தாந்திரிக முறைப்படி ஆதியில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார். பார்க்க சுட்டி!

கருவிலி
 
கோவிலில் முன்னர்  ராஜகோபுரம் கிடையாது. உள்ளே நுழைந்ததுமே ராஜகோபுர அமைப்புக்கு முன்னேயே நந்தி எம்பெருமான் வீற்றிருக்கிறார். தற்சமயம் ராஜகோபுரம் அமைக்கப் பட்டுக்கும்பாபிஷேஹமும் 2008 ஆம் வருடம் ஆகிவிட்டது . "கொடு கொட்டி"த் தாளம் போட்டு ஆடும் நடராஜர் சிலை பல வருடங்களுக்கு முன்னாலேயே களவாடப்பட்டு இப்போது வெளிநாட்டில் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னால் தான் புதிய நடராஜர் சிலை ஸ்வாமி சன்னதியிலேயே பிரதிஷ்டை செய்து இருக்கிறார்கள். முன்னால் இருந்த சிலை அம்மன் சன்னதியில் இருந்தது என்று என் கணவர் சொல்லித் தெரிந்து கொண்டேன். ஸ்வாமி சன்னதி தூய்மையுடன் இருக்கிறது. ஆடிக் களைப்படைந்த ஈசன் "சிவனே" என்று உட்கார்ந்து கொண்டு விட்டதாலோ என்னவோ தெரியவில்லை. மனதிலும் இனம் புரியாத அமைதி. சான்னித்தியம் பரிபூர்ணம். நன்றாய் உணர முடியும்.

வடக்கே தனியாய் அம்மன் சன்னதி. அம்மனைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். குறைந்தது 51/2 அடி உயரத்தில் இருக்கும் அம்மன் உலகத்து அழகை எல்லாம் உள்ளடக்கி நிற்கிறாள்.

"உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்குமதோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழுத்துணையே!" என அம்பாள் எல்லாம் சிவப்பாக மலர்மாலை கூடச் சிவப்புச் செம்பருத்தி மாலையுடன், சிவப்புப் புடவை, சிவப்பு மூக்குத்தியுடன் நாங்கள் சென்றபோது காட்சி அளித்தாள்.

கோவிலில் நவக்ரஹத்திற்குத் தனிச் சன்னதி இல்லை. யாருக்கும் காரணம் தெரியவில்லை. நவகிரஹம் கோயில்களில் அமைக்கப்பட்டு இருந்தால் அவை பழமையான கோயில் இல்லை எனவும் ஆரம்பத்தில் கோயில் வழிபாடுகளில் நவகிரஹங்களுக்கான வழிபாடு இல்லை என்றும் இந்த நவகிரஹ சந்நிதி கோயில்களில் அதுவும் சிவன் கோயில்களில் அமைக்கப்பட்டிருந்தால் அவை ஆயிரம் வருஷத்துப் பழைய கோயிலாக இருக்காது என்றும் சொல்கின்றனர். சப்தமாதர், ஜேஷ்டா தேவி போன்றோரே பழைய கோயில்களில் இடம் பெற்றிருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆகவே மிகப் பழைய இந்தக் கோயில் சோழ மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்ததை இங்குள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.முதலாம் ராஜேந்திர சோழன் காலத்துக் கல்வெட்டுக்கள் நிறைய இருக்கின்றன. யாராவது ஆராய்ச்சி செய்தால் கண்டு பிடிக்கலாம். ஆனால் உண்மையில் இந்தக் கோவிலைக் கட்டியவர் யார் என ஆராய்ச்சி நடக்கவில்லை. தருமபுர ஆதீனத்தின் நூல்களில் இங்கே இந்திரன் உள்ளிட்ட ருத்ர கணங்கள் வழிபட்டு வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. கோயிலின் பல ஏக்கர் விஸ்தீரண நிலங்களில் தற்சமயம் மிகுந்த முயற்சிக்குப் பின் பாமாயில் சாகுபடி நடைபெற்று வருகிறது. காஞ்சி பரமாச்சார்யாள் இந்த ஊருக்கு வருகை தந்த சமயம் இங்கே அம்மன் சன்னதியில் கேட்பாரற்றுக் கிடந்த ஐம்பொன் மேருவைக் கண்டுபிடித்துக் காஞ்சியில் காமாட்சி அம்மன் சன்னதியில் பத்திரப்படுத்தி உள்ளதாகச் சொல்கிறார்கள். பிரஹாரங்களில் உள்ள சிற்பங்களைக் கண்டால் அந்தக் காலத்தில் இருந்த உன்னதமான நிலைக்குச் சான்று. சில சிற்பங்கள் கை உடைந்தும் காட்சி அளிக்கின்றன. எல்லாம் செப்பனிடுகிறார்கள்.




கோஷ்டத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி! அர்த்தநாரீசுவரும் அழகாக இருப்பார். அவர் படம் கிடைக்கவில்லை! :(



இனி சென்ற வெள்ளியன்று 30--6--2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேஹத்தின் ஓரிரு காட்சிகள்!







                                                           யாகசாலை!


Tuesday, July 04, 2017

கொட்டிட்டைக் கருவிலி கும்பாபிஷேஹம்!

மட்டிட் டகுழ லார்சுழ லில்வலைப்
பட்டிட் டுமயங் கிப்பரி யாதுநீர்
கட்டிட் டவினை போகக் கருவிலிக்
கொட்டிட் டையுறை வான்கழல் கூடுமே.

5.69.1
692
ஞால மல்கு மனிதர்காள் நாடொறும்
ஏல மாமல ரோடிலை கொண்டுநீர்
கால னார்வரு தன்முன் கருவிலிக்
கோல வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே

மேலே காண்பது அப்பர் பெருமானால் பாடல் பெறப்பெற்ற கருவிலி என்னும் சற்குணேஸ்வரபுரத்தைக் குறிக்கும் பாடல். ஐந்தாம் திருமுறையில் இந்தப் பதிகங்களைக் காணலாம். நான் திருமணம் ஆகிப் புக்ககம் என வந்தது இந்தக் கருவிலிக்குத் தான்.  என் மாமனார் அங்கே தான் இருந்தார். நிலங்கள் எல்லாம் கருவிலியைச் சுற்றி இருந்ததால் அவற்றை நிர்வாகம் செய்ய வசதியாக இருக்கும் என இங்கே வந்திருக்கிறார். பூர்விகம் என்று சொல்லப் போனால் பரவாக்கரை என்னும் ஊர் தான். அது கருவிலியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தான் இருக்கிறது.

கருவிலியில் உள்ள சிவன் கோயிலைக் குறித்துத் தான் அப்பர் பெருமான் பாடல் பாடியுள்ளார். ஆனால் அவர் காலத்தில் இருந்த செல்வாக்கெல்லாம் மங்கிப் போய்க் கவனிப்பாரின்றி இருந்தது இந்தக் கோயில். நான் திருமணம் ஆகி வந்த சமயம் கோயிலுக்குச் செல்பவர்களே யாரும் இல்லை! தினம் தினம் குருக்கள் மட்டும் தன் கடமையைத் தவறாது காலை, மாலை இருவேளைகளும் செய்து கொண்டு வந்தார். நான் கோயிலில் தரிசனத்துக்கெனச் சென்றது மிகக் குறைவு. ஆனால் அங்கே உள்ள கிணற்றிலிருந்து குடிநீர் கொண்டு வரச் செல்வேன். அப்போதெல்லாம் கோயிலில் சப்தமே இல்லாமல் அமைதியாக இருப்பது கொஞ்சம் அச்சத்தைத் தரும்.

என் கணவர் இங்கே இருந்தவரைக்கும் கோயிலுக்குத் தினமும் சென்று வருவாராம். அங்கே உள்ள ஒரு தூணில் உள்ள குட்டிப் பிள்ளையார் அவருக்கு இஷ்ட தெய்வம். அந்தப் பிள்ளையாரை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள் என்றாலும் மீண்டும் இங்கே தருகிறேன்.



இது கொஞ்சம் அருகே வைத்து எடுக்கப்பட்ட படம். இன்னொரு கோணத்தில் தூணோடு சேர்த்து எடுத்தது கீழே!




இந்தப் பிள்ளையார் தலையில் பூச்சூடி இருக்கார் இல்லையா? அங்கே சிற்பத்தில் கல்லால் ஒரு ஓட்டை இருக்கிறது. பூவை அதில் செருகி விடலாம். இவருக்கு தினமும் எண்ணெய் முழுக்காட்டி அபிஷேஹ ஆராதனைகள் செய்து இந்தக் கோயிலையும் நான் பெரியவனாகி சம்பாதிக்க ஆரம்பித்ததும் கும்பாபிஷேஹம் செய்து தரவேண்டும் என்றெல்லாம் நினைப்பாராம் என் கணவர். ஆனால்  குடும்பக் கடமைகள் அப்படி எல்லாம் செய்ய விடவில்லை. :( என்றாலும் ஒவ்வொரு முறை கருவிலி வரும்போதெல்லாம் கோயிலின் நிலைமையைப் பார்த்து மனம் வருந்துவோம்.  திரு பரணீதரன் அவர்கள் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன் திருப்பணி தொடங்கப்பட்டு பாதியில் நின்று விட்டதாக ஆனந்தவிகடனில் எழுதி இருக்கிறார்.

கோயிலுக்கு விடிமோட்சமே இல்லையா என நினைத்துக் கொண்டிருந்த சமயம் திடீர்னு ஓர் தகவல் எங்களுக்கு வந்தது. அது தான் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேஹமும் நடக்கப் போகிறது என்னும் தகவல்! அதற்குக் காரணகர்த்தாக்கள் கல்கி திரு வைத்தியநாதனும் அவர் தம்பியும் மாருதி உத்யோக் பின்னர் ஸ்டீல் அதாரிடி போன்றவற்றில் பொறுப்பில் இருந்த திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களுமே ஆவார்கள். இவர்கள் ஒரு வகையில் என் மாமனாருக்கு உறவினர்கள் ஆவார்கள். இவர்களின் பாட்டியும் என் மாமனாரின் பாட்டியும் உடன் பிறந்த சகோதரிகள்.  நாச்சியார் கோயிலைச் சேர்ந்த இவர்கள் தங்கள் மூத்தமகள் ஆன என் மாமனாரின் பாட்டியைப் பரவாக்கரையிலும் ஒரு மைல் தள்ளி இருந்த கருவிலியில் தங்கையையும் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

அவர்கள் இருந்தவரை கோயிலில் எல்லாம் சிறப்பாக நடைபெற்று வந்ததாகவும் கோயிலுக்கு எதிரே உள்ள குளத்தில் சாப்பிட்டுக் கை அலம்புவர்களின் கையில் உள்ள நெய் எல்லாம் சேர்ந்து நெய்க்குளமாகக் காட்சி அளிக்கும் என்றும் சொல்வார்கள். ஆனால் அவர்கள் குடும்பத்தில் அனைவரும் ஊரை விட்டு வெளியே சென்று வடநாடு, சென்னை என்று வசிக்க ஆரம்பித்ததும் ஊர்ப்பக்கம் வருவது குறைந்து போய் இருந்திருக்கிறது. அதன் பின்னர் அவர்களில் யாருக்கோ கனவில் இறைவனே வந்து என்னை மறந்துவிட்டாயே என அழைத்ததாகச் சொல்கின்றனர். எப்படியோ ஆயிரம் வருஷத்துக் கோயிலுக்குத் திருப்பணி ஆரம்பித்தது.

முதல் கும்பாபிஷேஹம் 27-3-1997 ஆம் ஆண்டில் நடந்தது. ஆனால் அப்போது எங்கள் பெண்ணிற்கு மும்முரமாக வரன் பார்த்துக் கொண்டிருந்தபடியாலும் என் கணவர் அப்போது வேலைக்குச் சென்று கொண்டிருந்ததாலும் விடுமுறை கிடைக்காமல் யாருக்கும் போக முடியவில்லை. என்றாலும் அதற்குப் பின்னர் போய்ப் பார்த்துவிட்டு வந்தோம். அப்போது ராஜகோபுரம் எல்லாம் கிடையாது.  உள்ளே நுழையும்போது நந்தியெம்பெருமானைத் தாண்டிக் கொண்டு செல்ல வேண்டும். ராஜகோபுரம் பின்னர் அமைக்கப்பட்டு 2008 ஆம் ஆண்டில் 14--7--2008 ஆம் ஆண்டில் கும்பாபிஷேஹம் நடந்தது, அப்போது என் கணவர் சென்றிருந்தார்.  இப்போது அதன் பின்னர் இன்னும் சில வருடங்கள் சென்று விட்டதால் மீண்டும் கும்பாபிஷேஹம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஜூன் 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கும்பாபிஷேஹம் நடைபெற்றது.

எங்களால் செல்ல முடியவில்லை. மாமியாருக்குக் காரியங்கள் செல்வதால் ஒரு வருஷத்துக்கு ஆகமரீதியான கோயில்கள், கொடிமரம் இருக்கும் கோயில்கள் போன்றவற்றுக்கும் மற்றும்   கும்பாபிஷேஹம் போன்றவற்றில் கலந்து கொள்ள முடியாது என்பதால் செல்லவில்லை. ஆனாலும்  எங்க பையர் மூலம் சில படங்கள் கிடைத்தன. அவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன். கோயில் பற்றிய மற்றத் தகவல்களும் அதில் இடம் பெறும். அன்றைய தினம் கும்பாபிஷேஹத்தையே நினைத்துக் கொண்டு இருந்தோம்.




கருவிலி க்கான பட முடிவு

தொடரும்!

Sunday, July 02, 2017

எங்களுக்கு தினம் தினம் "திங்க"ற கிழமை!

இந்தப் படங்கள் எடுத்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் உட்கார்ந்து போட நேரம் வாய்க்கலை! என்ன பிசியா? அதெல்லாம் இல்லை!  வெட்டி வேலை தான்! ஒரு சில புத்தகங்கள் படித்தேன்! மதிய நேரம் கணினியில் உட்காரவில்லை! ஐபாடில் சில புத்தகங்கள் படிக்க முடிந்தது! என்றாலும் இன்னும் படிக்க நிறையக் காத்திருக்கின்றன.  சரி, லேட்டானது ஆயாச்சு! நாளைக்கு ஶ்ரீராம் "திங்க"கிழமை பதிவு போடறதுக்குள்ளே போட்டுடலாம்னு இன்னிக்குப் போட்டுட்டேன். அந்த அளவுக்குக் கூட்டம் என்னமோ வரப் போறதில்லை என்றாலும் ஒரு திருப்தி! ஶ்ரீராமுக்கு முன்னாடியே நாம போட்டாச்சுனு! :)

புதன்கிழமை சப்பாத்தி செய்கையில் அதுக்குத் தொட்டுக்கக் கத்திரிக்காய் ஸ்டஃப் கறி செய்தேன். குஜராத்தி டைப்பாம்! அம்பேரிக்கா போயிருக்கிறச்சே மகள் செய்திருந்தாள்! அதிலிருந்து நம்ம ரங்க்ஸுக்கு இது விருப்ப உணவாகி விட்டது. மகள் கொஞ்சம் காரம் அதிகம் போட்டிருந்தாள். நான் அவ்வளவு காரம் போடவில்லை! என்றாலும் இந்தியா வந்தப்புறமா இரண்டாம் முறையாக இதைச் செய்கிறேன். முதல் முறை செய்யறச்சே படம் எடுத்துப் போடும்படியான சூழ்நிலையில் இல்லை! இந்த முறை நிதானமாகப் படம் எடுத்துப் போட்டிருக்கேன். முதலில் தேவையான பொருட்களைப் பார்ப்போம்.

நான்கு பேருக்கான அளவு! கத்திரிக்காய்ப் பிரியர் எனில் முக்கால் கிலோ வேண்டும். எல்லாக் கத்திரிக்காயும் ஒரே சீராக ஒரே அளவில் இருந்தால் நல்லது. ரொம்பச் சின்னதாயும் வேண்டாம்!

நான் எங்க ரெண்டு பேருக்குத் தான் என்பதால் ஆளுக்கு ஐந்து கத்திரிக்காய் என்ற வீதாசாரப்படி பத்துக் கத்திரிக்காய் எடுத்துக் கொண்டேன்.

கத்திரிக்காய்க்குள் அடைக்கத் தேவையான பொருட்கள்

மிளகாய்ப் பொடி  இரண்டு டீஸ்பூன்

தனியா ஒன்றரை அல்லது இரண்டு டீஸ்பூன்(அவரவர் காரத்திற்கு ஏற்பக் கூட்டியோ குறைத்தோ எடுத்துக்கலாம்.)

மஞ்சள் பொடி   அரை டீஸ்பூன்

பெருங்காயப் பொடி அரை டீஸ்பூன்

அம்சூர் பொடி(காய வைத்த மாங்காய்ப் பவுடர்) அரை டீஸ்பூன்(இது கட்டாயம் அல்ல)

கரம் மசாலாப் பொடி அரை டீஸ்பூன்

வறுத்த ஜீரகப் பொடி ஒரு டீஸ்பூன்

சோம்பு இரண்டு டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு

மேலே சொல்லி இருப்பனவற்றை ஒரு பேசினில் போட்டு நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.

கலந்த பொடி மேலே பேசினில் காணலாம். 



கத்திரிக்காய்களை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்.



கழுவிய கத்திரிக்காய்களை நான்காகப் பிளந்து கொண்டு உள்ளே கலந்து வைத்திருக்கும் பொடியை வைத்து எல்லாவற்றையும் நிரப்பவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றவும். அதில் கத்திரிக்காய்களை மெதுவாக ஒவ்வொன்றாகப் போடவும்.



தேவையானால் அடைத்தது போக மீதம் இருக்கும் பொடியை மேலே தூவலாம்.


சிறிது நேரம் ஒரு தட்டைப் போட்டு மூடி வைத்து குறைந்த வெப்பத்தில் கத்திரிக்காய்களை வதக்கவும். திருப்பி விடும்போது கத்திரிக்காய் உடையாமல் கவனமாகத் திருப்பி விடவும்.



நல்ல கத்திரிக்காயாக இருந்தால் நன்கு குழைந்துவிடும். அரை மணி நேரத்துக்குள்ளாகத் தயார் செய்து விடலாம். இப்போது ஃபுல்கா, நான், சப்பாத்தி போன்றவற்றுடன் சூடாகப் பரிமாறவும். 


நம்ம ஊர்ப்பக்கம் கத்திரிக்காய்ப் பொடி அடைத்த கறி எனில் மி.வத்தல், தனியா, கடலைப்பருப்பு, உபருப்பு மிளகு, தேங்காய்த் துருவல் வறுத்து மிக்சியில் அல்லது அம்மியில் பொடி செய்து அதை அடைத்துச் செய்வோம். அது சாப்பாட்டுக்கு நன்றாக இருக்கும். இது சப்பாத்தியோடு நன்றாக இருக்கும்.