எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, July 16, 2017

மோகமுள்!

"சாப்பிடலாம் வாங்க!" பக்கத்தில் அடுத்தடுத்துப் பதிவுகள் போடுவதில்லை என நண்பர் நெ.த. வருத்தப்படுகிறார். போடணும்னு தான் நினைச்சுப்பேன். ஆனால் என்னவோ சொல்லத் தெரியாத காரணம்! அந்த ஐடிக்கே போக மாட்டேன். இப்படியே விட்டுப் போயிடும். வீட்டிலும் விருந்தினர் வருகை, நாங்க கொஞ்சம் வேலைகளில் மும்முரம் எனப் பொழுது விரைவில் சென்று விடும். மாலை ஆறுமணிக்கப்புறமா அதிகமாக் கணினியில் உட்காருவதில்லை. கண் பிரச்னை கொடுக்குமோ என்று பயம் தான். சென்ற வாரம் தான் கண் மருத்துவரிடம் சென்று முழுப் பரிசோதனை செய்து கொண்டு வந்திருக்கேன். கொஞ்சம் பவர் தான் மாறி இருக்கு. ஆனாலும் இந்தக் கண்ணாடியே போதும்னு சொல்லிட்டாங்க.  என்றாலும் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் கணினியில் உட்காருவதில் தயக்கம்.

ஜூன் மாதம் சென்னை சென்றபோது கிடைத்த "மோகமுள்" புத்தகத்தை ஆயிரமாவது முறையாகப் படித்து முடித்தேன். சித்தப்பாவின் ஒரு சிறுகதைத் தொகுப்பும் சித்தி கொடுத்தது! அதில் பல கதைகள் அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பான, "வாழ்விலே ஒரு முறை" யில் வந்தவையே! அதையும் படித்தேன். 55--56 ஆம் வருடங்களில் இந்த நாவல் ஏதோ புத்தகத்தில் தொடராக வந்திருக்கிறது. அப்போதைய காலத்துக்கு இதன் கரு புதுமை மட்டுமல்ல புரட்சிகரமானதும் கூட. என்றாலும் இதை எழுதியதால் தி.ஜா பாராட்டுக்குரியவர் ஆகிறார். மனித மனத்தின் ஆழத்தை எவராலும் அறிய முடியாது. அப்படி ஓர் ஆழமான எண்ணங்கள் கொண்ட பாபு என்னும் இளைஞன் மனதில் தோன்றும் காதல் உணர்வே இந்த மோகமுள் நாவலாக உருவாகி உள்ளது. பொருந்தாக் காதல் என்று தோன்றினாலும் சற்றும் விரசமில்லாமல் நம்மைத் தொடர்ந்து படிக்க வைப்பது கதாசிரியரின் வெற்றியைக் காட்டுகிறது. எந்த இடத்திலும் இந்தக் காதல் மேல் நமக்குக் கோபமோ, வருத்தமோ வரவே இல்லை! மாறாக யமுனாவுடன் பாபு சேர்ந்து விடுவானா என்னும் எதிர்பார்ப்பே தோன்றுகிறது.  மோகமுள் புத்தகத்தை முதலில் படிக்க நேர்ந்தது அறுபதுகளில் தான். அப்போத் தான் எஸ் எஸ் எல்சி, படிப்பு முடித்திருந்தேன். பெரியப்பா பெண்ணிற்கு வளைகாப்புக்காக அங்கே சென்றிருந்தபோது அக்கா படித்துக் கொண்டிருந்த புத்தகம். வீட்டில் இந்தப் புத்தகம் படித்ததுக்காகத் திட்டுக் கிடைத்தது. அறுபதுகளில்  படித்திருந்தாலும் அப்போது இந்தக் கதை எனக்குப் புரியவில்லை என்றே சொல்லணும். அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து அம்பத்தூரில் நூலகத்தில் வாங்கிப் படித்தேன்.  கதை நடக்கும் காலகட்டம் நாற்பதுகளின் ஆரம்பத்தில். 2 ஆம் உலக யுத்தம் நடக்கும் சமயம். அந்தக் கால கட்டத்தைக் குறிப்பிடும் கதையில் இப்படி ஓர் உறவு குறித்துச் சொல்லி இருப்பது உண்மையிலேயே ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.

முதலில் படித்தபோது புரியாத பல விஷயங்கள் பின்னர் புரிந்தன. இப்போது படிக்கையில் இன்னமும் புதிய கோணத்தில் பார்க்க முடிந்தது.  என்றாலும் கதைக்கருவை நினைத்தால் இன்றளவும் ஆச்சரியமாகத் தான் இருக்கும். காதல் தான் கதையின் முக்கியக் களம். அதுவும் ஓர் ஆணின் வளர்சிதைப் பருவத்திலிருந்து இளைஞனாக மாறும் ஓர் ஆணின் மனதில் தோன்றும் முதல் காதல்! நாம் நட்டு வைத்த மல்லிகையின் முதல் மொக்கு மலர ஆரம்பிக்கையில் நமக்குள் தோன்றும் உற்சாக ஊற்று! இந்தக் கதையின் நாயகன் பாபுவுக்கும் யமுனாவைப் பார்க்கும்போதெல்லாம் வருகிறது. என்றாலும் ஆரம்பத்தில் அவனால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த வயதிற்கே உரிய வெட்கம் கலந்த நாணம்! கூச்சம்! அவனைத் தடை போடுகிறது. யமுனாவைப் பார்க்கும்போதெல்லாம் அவள் நல்ல இடத்தில் உயர்வான ஒரு இடத்தில் இருக்க வேண்டியவள் என நினைக்கும் பாபுவுக்கு அதைச் செய்யக் கூடிய திறமையும் தன்னிடம் தான் இருக்கிறது என்பது புலப்பட ஓர் இளம்பெண்ணோடு அவன் உறவு கொள்ளும்போது தான் தெரிய வருகிறது.

55 வயதான ஒருவருக்கு ஏழ்மையின் காரணமாக வாழ்க்கைப்பட நேர்ந்த தங்கம்மாவுடன்  அவனுக்கு நேர்ந்த ஓர் தகாத உறவால் மனம் பாதிக்கப்பட அன்றிரவே அவனுக்குத் தன் மனம் என்னவென்று தெரிய வருகிறது. ஆனால் பாபுவின் நண்பன் ராஜமோ எனில் ஆரம்பம் முதலே பாபுவைப் புரிந்து கொண்டிருக்கிறான். ராஜத்துடன் பாபுவின் நட்பு மிகவும் அற்புதமாகச் சித்திரிக்கப்படுகிறது. பாபுவை ராஜம் புரிந்து கொண்ட அளவுக்கு பாபுவை அவன் தந்தையோ அல்லது பாபுவே தன்னைத் தானோ புரிந்து கொள்ளவில்லை.   இளம்பிள்ளையாக யமுனாவால் தூக்கிக் கொஞ்சப்பட்ட காலத்திலிருந்து அவள் மேல் தோன்றிய ஈர்ப்பு, பின்னர் இளமையில் மோகமாக மாறுகிறது. அந்த மோகம் அவளை அடையும்வரை தவிக்கும் தவிப்பே கதையின் மையக்கரு.

என்றாலும் இங்கே கதையின் அடித்தளமாக விளங்குவது நான் அறிந்தவரை தேர்ந்த சங்கீதமே! அந்த சங்கீதத்தைத் தன் வசமாக்க பாபு செய்யும் முயற்சிகள்!  ஈடு இணையற்ற மராத்தி வித்வான்களில் விஸ்வரூபம் எடுக்கும் சங்கீதம்! ஆயாசமோ சிரமமோ இல்லாமல் நாத உலகில் சஞ்சரிக்கும் அந்தக் குரல், பாபுவுக்கு சங்கீதம் கற்றுக் கொடுக்கும் ரங்கண்ணாவுக்கும் பாபுவுக்குமான உறவு குரு, சிஷ்ய உறவுக்கு அப்பால் ஏற்பட்டதொரு இணையற்ற பந்தம். தந்தையான வைத்திக்கும் மகனான பாபுவுக்கும் இடையே இருக்கும் உறவு! அதன் தனித்தன்மை! பாபுவிடம் வைத்தி கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பு! என்று எத்தனையோ சொல்லலாம். ஆனால் எல்லாம் அங்கே சுற்றி இங்கே சுற்றிக் கடைசியில் யமுனாவும், பாபுவும் ஒன்று சேருவதில் தான் வந்து முடிகிறது.

ஆனால் தனக்கு நல்லொழுக்கம் தேவை என்பதைக் கட்டாயமாகத் திரும்பத்திரும்பச் சொல்லும் தந்தையிடமும், குரு ரங்கண்ணாவிடமும் பாபு தன் விஷயத்தைச் சொல்ல முடியாமல் தவித்த தவிப்பு! சொல்லி இருந்தான் எனில் கதையின் போக்கே மாறி இருக்கலாம்! ஏனெனில் யமுனாவுக்காக எவ்வளவு தவிக்கிறானோ அவ்வளவுக்கு இந்த சங்கீதத்துக்காகவும் பாபு தவிக்கிறான். ஆனால் அப்போதெல்லாம் யமுனாவுடன் இணைவது குறித்துச் சிந்திக்காமல் இருந்துவிடுகிறான். கடைசியில் சென்னையில் ஓர் கம்பெனியில் வேலைக்குப் போயும் மனம் அலைபாயும் பாபுவுக்கு யமுனாவை அடைந்த பின்னரே தான் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க முடிகிறது.

யமுனாவையும் விட முடியாது. வாழ்வுக்கான ஆதாரமும் வேண்டும். ஆகையால் அந்த மராத்திப் பாடகர் கிட்டே குரலை வளப்படுத்திக் கொள்ளும் வித்தையைக் கற்பதற்காகப் புனே செல்கிறான் பாபு. ஆனாலும் கடைசி வரையில் பெற்றோரிடமோ, தன்னிடம் தனி அன்பு காட்டும் தந்தையிடம் மட்டுமோ யமுனா விஷயத்தைச் சொல்லவே இல்லை. யமுனாவே அதை பாபுவின் அப்பாவுக்கு எழுதி விடுகிறாள். அவரும் அதற்கு மறுப்புச் சொல்லாமல் ஏற்றுக் கொள்கிறார். யமுனாவையும் தன் வீட்டிற்கு வந்து செல்லும்படி அழைக்கிறார்.  கடைசியில் பாபுவின் மனதில் அப்பா வைத்தியே விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார்.

இந்தக் கதையில் வரும் தங்கம்மாவைப் போன்ற தம்பதியரை தி.ஜா. அவர்கள் நேரில் பார்த்திருக்கிறதாகச் சொல்லி இருக்கார். அதே போல் மராத்திப் பாடகர்கள், சங்கீத நிகழ்வுகள்,  மராத்திப்பாடகர்கள் அவர் வீட்டில் வந்து பாடிய நிகழ்வு என ஒவ்வொன்றும் இந்தக் கதைக்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல் தி.ஜா. தன்னைவிட எட்டு வயது அதிகமான ஒரு பெண்ணைப் பார்த்து மோகம் கொண்டதையும் அதைத் தெரிந்து கொண்ட அந்தப் பெண்ணும் அவரைப் பார்த்துச் சிரித்துவிட்டுப்பின்னர் தன் வயதிற்கு ஏற்ற ஓர் இஞ்சினியரைத் திருமணம் செய்து கொண்டதும் தான் இந்தக் கதையில் யமுனா பாத்திரத்துக்கான முக்கியக் காரணம். நிஜ வாழ்க்கையில் தன் மோகம் தீராத ஒன்றாகப் போய்விட்டது என்பதால் நாவலில் வரும் கதாநாயகனாவது தன் மோகத்தைத் தீர்த்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கட்டும் என்று நினைத்தாரோ என்னமோ!

எல்லாவற்றையும் எழுத மிகச் சிரமப்பட்டதாகவும் சொல்கிறார். சிரமம் பட்டிருக்கும்போதே இத்தனை சரளமான எழுத்து எனில் தானாக வரும்போது கேட்கவே வேண்டாம். பத்திரிகாசிரியர்களின் தூண்டுதல் தீயைப் போல் வந்து தூண்டிக் கொடுத்து தன் கதையை/நாவலைச் சமைத்துக் கொடுத்ததாகச் சொல்கிறார். நமக்கெல்லாம் தூண்டினால் கூட எழுத வராது! 

29 comments:

 1. தி.ஜா அவர்களின் இந்நாவலைப்பற்றி தெரியாத தமிழர்களே இருக்க முடியாது நானும் பல வருடங்களாக இந்நாவலை சந்திக்க முடியாமல் தவிக்கிறேன் பார்ப்போம் விரைவில் வாங்குவேன்.

  1985-ல் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் இந்நூலை படித்து விட்டு பட்டுக்கோட்டை வீதிகளில் பித்துப்பிடித்து அலைந்தேன் என்று சொன்னார் அன்றிலிருந்து இதைப்படித்தே தீரவேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி, இந்த நாவல் வெளிவந்த புதுசிலும் பலரும் கும்பகோணம் துக்காம்பாளையத் தெருவில் யமுனா வீட்டைத் தேடி அலைந்ததாகச் சொல்வார்கள். முன்னுரையிலும் வந்திருக்கு. படித்துப் பாருங்கள்.

   Delete
 2. தி.ஜா அவர்களின் இந்நாவலைப்பற்றி தெரியாத தமிழர்களே இருக்க முடியாது நானும் பல வருடங்களாக இந்நாவலை சந்திக்க முடியாமல் தவிக்கிறேன் பார்ப்போம் விரைவில் வாங்குவேன்.

  1985-ல் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் இந்நூலை படித்து விட்டு பட்டுக்கோட்டை வீதிகளில் பித்துப்பிடித்து அலைந்தேன் என்று சொன்னார் அன்றிலிருந்து இதைப்படித்தே தீரவேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டு.

  ReplyDelete
 3. மீண்டும் படிக்கத் தூண்டுகிறது உங்கள் பதிவு. படிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. படிக்கலாம். ரசிக்கலாம். நல்வரவு வெங்கட்.

   Delete
 4. உறவு என்பதே சங்கீதம்தானே? தாம்பத்யம் ஒரு சங்கீதம் என்று தெரியாமலா சொன்னார்கள்! இதைத் திரைப்படமாகவும் எடுத்திருக்கிறார்கள். என்னுடைய மோகமுள் புத்தகம் இப்போது என்னிடம் இல்லை. இந்த விமர்சனம் படித்ததும். அது நாளுக்காய்க் காத்திருக்கிறேன்! அழகாய் எழுதி இருக்கிறீர்கள். பாலகுமாரன் கொஞ்சம் இவர் பாணியில் எழுத ஆரம்பித்தார். ஆனால் இது போன்ற அடல்டரி விஷயங்களை திஜா கையாண்ட நாசூக்கு அவருக்கு வசப்படவில்லை!

  ReplyDelete
  Replies
  1. பாலகுமாரன் எழுதியது தி.ஜா. பாணி? வாய்ப்பே இல்லை! பாலகுமாரன் முழுக்க முழுக்கக் காமம் கலந்து எழுதுவார். ஒரு கட்டத்தில் அலுத்துப் போய்விடும்! :( நான் படிக்கிறதை விட்டு எத்தனையோ வருஷம் ஆச்சு! "உடையார்" படிக்கும் ஆவலில் இருந்தேன். சில நண்பர்கள் விஷப்பரிட்சை வேண்டாம் என்றார்கள். :)

   Delete
  2. முழுக்க முழுக்க தி.ஜா. பாணியில் எழுதியவர், சுஜாதா மட்டுமே! எழுத்து நடையில் சுஜாதாவின் குரு அவரே! - இராய செல்லப்பா சென்னை

   Delete
  3. பாக்கறதுக்கும் பழகறதுக்கும் இயல்பா இருப்பாங்க.. ஆனா பாலகுமாரனை படிக்கிறாங்களேனு ஆச்சரியமா இருக்கும்.. (உதைபடப் போறேன்)

   ஆமா.. மிச்ச பின்னூட்டமெல்லாம் என்னாச்சு? இந்தப் பதிவுல கூட இன்னொரு பின்னூட்டம் போட்டனே?

   Delete
  4. சுஜாதா> தி.ஜா. பாணி???? வாய்ப்பே இல்லை செல்லப்பா சார். சுஜாதா முழுக்க முழுக்க ஜனரஞ்சகமாகவே எழுதுவார். எனினும் நாவல்கள், சிறுகதைகள், குறுநாவல்கள் உள்ளிட்ட எல்லாவற்றிலும் ஓர் உள்ளார்ந்த சோகம் காணப்படும். அது தான் அவரைத் தனித்துக் காட்டியதாக நான் நினைப்பேன்.

   Delete
  5. ஹிஹிஹி, அப்பாதுரை, பாலகுமாரனுக்கு என ஒரு பெரிய வாசகர் வட்டமே இருக்காக்கும்! :)

   Delete
 5. தி.ஜ அவர்களின் இந்த நாவல் (காலச்சுவடு பதிப்பகம்) என்னிடம் மின்னூலாக இருக்கிறது. இன்னும் படிக்க சந்தர்ப்பம் வரவில்லை. உங்கள் இடுகைக்குப் பின், அதைப் படிக்க ஆரம்பித்துவிடவேண்டியதுதான் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

  @ஸ்ரீராம் - உறவு சங்கீதம்தான் - என்ன.. எல்லோரும் தேர்ந்த வாத்தியக்காரர்களாக இல்லாததனால் பெரும்பாலும் அபஸ்வரம்தான் ஒலிக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. படியுங்கள் நெ.த. ரசிக்கலாம். இன்னொரு பெரிய நாவலும் இதைப் போல் உண்டு. ஆனால் அது இப்போது என்னிடம் இல்லை. இதுவே ஓ.சி. மலர்மஞ்சம் என்று இன்னொரு நாவல்! பாலா என்னும் இளம்பெண்ணைப் பற்றி வரும். அதுவும் நிறைவேறாக் காதல் பற்றியதே!

   Delete
 6. //இதைத் திரைப்படமாகவும் எடுத்திருக்கிறார்கள்.

  இதே பெயரிலா? யார் நடித்த படம்?

  ReplyDelete
  Replies
  1. Welcome Appadurai, after a looooooong time! :) NFDC எடுத்து இதே பெயரில் வந்தது. தொலைக்காட்சியில் பார்த்திருக்கேன். அபிஷேக் என்னும் நடிகர் பாபுவாக நடித்திருப்பார். அர்ச்சனா என்னும் நாட்டியத் தாரகை, கொங்கணைச் சேர்ந்தவர், (வாஹ் தாஜ்! தேநீர் விளம்பரங்களில் எல்லாம் வந்திருக்கார்) அவர் தான் யமுனாவாக நடித்திருந்தார். படம் அவ்வளவு சுகம் இல்லை. கதையின் ஜீவன் படத்தில் காட்ட முடியவில்லை. :(

   Delete
  2. என்.எஃப்.டி.சி. இல்லைனு விக்கி சொல்கிறது. ஞானராஜசேகரன் படத்தை எடுத்ததாகத் தெரிகிறது. இந்தப் படம் சிறந்த தமிழ்த் திரைப்பட விருது பெற்றிருப்பதாகவும் சொல்கிறது. 1995 ஆம் ஆண்டில் வந்திருக்கிறது. கிட்டத்தட்ட 97 க்குள் தான் நானும் படத்தைப் பார்த்தேன் என்பது நினைவில் இருக்கிறது.

   Delete
 7. 1965-வாக்கில் , நான் B .Com படித்துமுடித்தகையோடு (எனக்கு சரியாக 20 வயது ! )நானும் மோகமுள்ளை படித்துவிட்டு , என்னுடைய பைத்தியம் தெளிய இரண்டு-மூன்று மாதங்கள் ஆயின! நானும் பலமுறை கும்போணம் கடலங்குடி தெருவிலும் ,துக்காப்பள யத்தெருவிலும் 'பாபுவும் /யமுனாவும் நடந்த தெருவாயிர்றே என்கிற 'பக்தியோடு சும்மாவானும் நடந்துபோயிருக்கிறேன்!

  தஞ்சாவூர் காரனுக்கு துளிரும்போதே இருக்கும் சங்கீதக் கிறுக்கு (பெரிய மனிதர்களின் வீட்டுக்கல்யாணங்களிலும் ,கோவில் திருவிழாக்களிலும் --கேட்ட கச்சேரிகள் ) எனக்கும் ஸித்திக்க துவங்கியதும் ,தி. ஜா.வை ஊன்றிப்படித்ததினால் என்றுகூறினால் மிகையாகாது!

  என்னுடைய நண்பர்களில் தி.ஜா.வின் ரசிகர்கள் குழாமும், மதுரை மணி ஐயர் ரசிகர்கள் குழாமும் அடங்கும்...

  தங்களுடைய மோகமுள் அலசல் ,இரண்டுமாதங்களாக (உடல் நலக்குறைவால் NET CUM ரேடியோ பக்கமே வராமலிருந்த என்னை
  இந்த பின்னூட்டத்தை எழுதவைத்துவிட்டது ...

  மாலி

  ReplyDelete
  Replies
  1. வாங்க மாலி சார், அப்படி நான் பித்துப் பிடிச்சுத் திரிஞ்சதுனா பொன்னியின் செல்வன் நாவலுக்காகவும், அமரதாரா நாவலுக்காகவும் தான். கல்யாணம் ஆகறதுக்கு முந்தி மாப்பிள்ளை வீட்டைப் போய்ப் பார்க்கவென்று என் அப்பா மதுரையிலிருந்து கிளம்பிக் கருவிலி போனப்போ முழுக்க முழுக்கப் பொன்னியின் செல்வனைத் தான் நினைத்துக் கொண்டு போனதாகச் சொல்லி இருக்கார். வந்தியத் தேவன் போன வழியில் போனேன் என்பார். என் மாமா கல்யாணம் திருவலஞ்சுழியில் நடந்தப்போ நாங்கல்லாம் குடந்தை ஜோதிடர் வீட்டைப் போய்ப் பார்க்கணும்னு நினைச்சது, பேசிக் கொண்டது எல்லாம் விளையாட்டாய் நினைவில் வருது. அமரதாரா நாவலைப் படித்து விட்டு குங்குமப் பூந்துறைக்குப் போகணும்னு நினைச்சதும் உண்டு.

   Delete
 8. 1965-வாக்கில் , நான் B .Com படித்துமுடித்தகையோடு (எனக்கு சரியாக 20 வயது ! )நானும் மோகமுள்ளை படித்துவிட்டு , என்னுடைய பைத்தியம் தெளிய இரண்டு-மூன்று மாதங்கள் ஆயின! நானும் பலமுறை கும்போணம் கடலங்குடி தெருவிலும் ,துக்காப்பள யத்தெருவிலும் 'பாபுவும் /யமுனாவும் நடந்த தெருவாயிர்றே என்கிற 'பக்தியோடு சும்மாவானும் நடந்துபோயிருக்கிறேன்!

  தஞ்சாவூர் காரனுக்கு துளிரும்போதே இருக்கும் சங்கீதக் கிறுக்கு (பெரிய மனிதர்களின் வீட்டுக்கல்யாணங்களிலும் ,கோவில் திருவிழாக்களிலும் --கேட்ட கச்சேரிகள் ) எனக்கும் ஸித்திக்க துவங்கியதும் ,தி. ஜா.வை ஊன்றிப்படித்ததினால் என்றுகூறினால் மிகையாகாது!

  என்னுடைய நண்பர்களில் தி.ஜா.வின் ரசிகர்கள் குழாமும், மதுரை மணி ஐயர் ரசிகர்கள் குழாமும் அடங்கும்...

  தங்களுடைய மோகமுள் அலசல் ,இரண்டுமாதங்களாக (உடல் நலக்குறைவால் NET CUM ரேடியோ பக்கமே வராமலிருந்த என்னை
  இந்த பின்னூட்டத்தை எழுதவைத்துவிட்டது ...
  இந்தியாவிற்கு வந்தால் ,இந்தியாவைப் பற்றிய தன்னுடைய 'கனவு' கலைந்துவிடும் என்ற எண்ணத்திலேயே MAXMULLAR இந்தியா வருகையை தவிர்த்தார் என்று கூறுவார்கள் ..அதுபோலவே என்னுடைய 'மோகமுள் -பைத்தியம் ' பற்றி நன்கு அறிந்த மாதங்கியும் என்னை மோகமுள் படத்தை பார்க்கவேண்டாம் என்றுகூறி விட்டாள் !

  மாலி

  மாலி

  ReplyDelete
 9. உங்கள் பதிவு என்னை என் பழைய ஞாபகங்களுக்குக் கொண்டு சென்றது! மோக முள் சினிமாவை டிவியில் பார்த்த பின்பே நான் கதையைத் தேடிப் படித்தேன்! நீங்கள் சொல்வது போல் கதையின் ஜீவனை சினிமாவில் முழுமையாகக் கொணர இயலவில்லை!
  'அம்மா வந்தாள்' படித்திருப்பீர்கள். அதிலும் இதே சாயல் தெரியுதோ என்று என் எண்ணம்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மிகிமா. நான் முன்னாடியே இரண்டு, மூன்று முறை படித்து விட்டேன். பின்னரே தொலைக்காட்சியில் படமாகப் பார்த்தேன். "அம்மா வந்தாள்" நாவல் என் சித்தப்பாவால் இல்லஸ்ட்ரேடட் வீக்லிக்காக "அப்புஸ் மதர்" என்னும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டபோது ஆங்கிலத்தில் கையெழுத்துப் பிரதியாகப் படித்தேன். அதன் பின்னரே தமிழ் மூலம் படிக்க நேர்ந்தது. அது முழுக்க முழுக்க வேறு! இது வேறு! அம்மா வந்தாளில் "அப்பு"வைப் பற்றியது மட்டுமே! நடுவில் "இந்து" வந்து போவாள்!

   Delete
  2. அலங்காரத்தம்மாளின் கம்பீரம் உங்களுக்கு யமுனாவை நினைவூட்டுகிறதோ? மோகமுள், சுதேசமித்திரனில் தொடராக வந்ததாம். நண்பர் ஒருவர் முகநூலில் சொல்லி இருக்கார்.

   Delete
 10. படித்து தி ஜா வைக் கொண்டாடின நாவல் அதுவும் அதில் வரும் சங்கீதம் மற்றும் வித்தியாசமானக் கருவைக் கையாண்டவிதத்திற்காகவும். நூலகத்தில் எடுத்து வாசித்திருக்கிறேன் கல்லூரி காலத்தில் அதன் பின் வாசிக்க நேரவில்லை...30 வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது..மீண்டும் வாசிக்க வேண்டும். உங்கள் விமர்சனம் அட்டகாசம். இப்போது வாசிக்க நேர்ந்தால் நீங்கள் சொல்லியிருப்பது போல் வேறொரு கோணத்தில் புரிதல் ஏற்படலாம்...

  இது படமாக வந்தது ஞானசேகரன் என்பவரால் இயக்கப்பட்டது. பாரதியார்படத்தையும் இயக்கியவர் இவரே, இரு படங்களிலுமே பாடல்கள் நன்றாக இருக்கும். மோகமுள் படத்திலும் பாடல்கள் மிக அருமையாக இருக்கும். அந்த அபிஷேக் அப்புறம் சீரியலில் நடிகர் ஆகிவிட்டார். திரைப்படத்தில் குருவாக வருபவர் மலையாள நடிகர் நெடுமுடி வேணு என்ற நினைவு. நல்ல பதிவு கீதாக்கா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க, தில்லையகத்து/கீதா, ஞானராஜசேகரனின் பாரதி படமும் பார்த்திருக்கேன். மோகமுள் படப் பாடல்கள் ஏதும் நினைவில் இல்லை. குருவாக வருபவர் நெடுமுடி வேணு என்று தான் விக்கியும் சொல்கிறது. அபிஷேக் ஆரம்பத்தில் ஒரு சில நெடுந்தொடர்களில் வந்தார். இப்போதெல்லாம் காண முடிவதில்லை.

   Delete
 11. திரைப்படத்தில் புத்தகத்தின் முழு உணர்வும் இருக்காது....எந்தக் கதை திரைப்படமானாலும் அப்படித்தானே...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அப்படிச் சொல்ல முடியாது! மலையாளம், கன்னடத்தில் பிரபல எழுத்தாளர்களின் கதையைத் திரைப்படமாக்கும்போது ஓரளவுக்கானும் கதையம்சம், கதையின் உட்கருத்து கெடாதபடியே எடுக்கின்றனர். உதாரணம் செம்மீன்! கதையும் படிச்சிருக்கேன், திரைப்படமும் பார்த்திருக்கேன். கன்னடத்திலும் இப்படி ஒரு சில படங்கள் உண்டு. இப்போது பெயர் நினைவில் வரவில்லை. மணிச்சித்திரத் தாழு படம் தமிழாக்கம் செய்யப்பட்டபோது மக்களின் ரசனைக்காக எவ்வளவு மாற்றப்பட்டது என்பதைப் பார்த்திருப்பீர்கள்! நான் மணிச்சித்திரத் தாழு படத்தை ரசித்த அளவுக்கு அதன் தமிழ் நகலை ரசிக்கவில்லை! காக்கை, குயில் என்னும் படமும் மோகன்லால் நடித்தது தமிழில் மாற்றப்பட்டது. அதுவும் ரசிக்கும்படி இல்லை! ஶ்ரீவித்யாவும், விஜயகுமாரும் தாத்தா, பாட்டியாக நடித்திருந்த நினைவு. மலையாளத்தில் யார்னு நினைவில் இல்லை. பார்த்துப் பல வருடங்கள் ஆகின்றன. இப்போது தமிழ்ப்படங்கள் எடுக்கும் இளைஞர்கள் ஓரளவுக்கு சினிமா என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டே எடுக்கிறார்கள் என்பதை சமீபத்திய படங்கள் உணர்த்துகின்றன.

   Delete
 12. மோக முள். கும்பகோணத்தில் பிறந்தவன் என்ற நிலையில் இதன்மீதான என் ஈர்ப்பு அதிகமே.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா. கும்பகோணத்துக்காரர்கள் பலரும் இதை எதிர்க்கவும் செய்திருக்கின்றனர். :)

   Delete
 13. முன்பு படித்த நாவல் உங்கள் எழுத்து படிக்க தூண்டுகிறது.புத்தகம் ஊரில். செல்லும்போது படிப்போம்

  ReplyDelete