எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, July 04, 2017

கொட்டிட்டைக் கருவிலி கும்பாபிஷேஹம்!

மட்டிட் டகுழ லார்சுழ லில்வலைப்
பட்டிட் டுமயங் கிப்பரி யாதுநீர்
கட்டிட் டவினை போகக் கருவிலிக்
கொட்டிட் டையுறை வான்கழல் கூடுமே.

5.69.1
692
ஞால மல்கு மனிதர்காள் நாடொறும்
ஏல மாமல ரோடிலை கொண்டுநீர்
கால னார்வரு தன்முன் கருவிலிக்
கோல வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே

மேலே காண்பது அப்பர் பெருமானால் பாடல் பெறப்பெற்ற கருவிலி என்னும் சற்குணேஸ்வரபுரத்தைக் குறிக்கும் பாடல். ஐந்தாம் திருமுறையில் இந்தப் பதிகங்களைக் காணலாம். நான் திருமணம் ஆகிப் புக்ககம் என வந்தது இந்தக் கருவிலிக்குத் தான்.  என் மாமனார் அங்கே தான் இருந்தார். நிலங்கள் எல்லாம் கருவிலியைச் சுற்றி இருந்ததால் அவற்றை நிர்வாகம் செய்ய வசதியாக இருக்கும் என இங்கே வந்திருக்கிறார். பூர்விகம் என்று சொல்லப் போனால் பரவாக்கரை என்னும் ஊர் தான். அது கருவிலியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தான் இருக்கிறது.

கருவிலியில் உள்ள சிவன் கோயிலைக் குறித்துத் தான் அப்பர் பெருமான் பாடல் பாடியுள்ளார். ஆனால் அவர் காலத்தில் இருந்த செல்வாக்கெல்லாம் மங்கிப் போய்க் கவனிப்பாரின்றி இருந்தது இந்தக் கோயில். நான் திருமணம் ஆகி வந்த சமயம் கோயிலுக்குச் செல்பவர்களே யாரும் இல்லை! தினம் தினம் குருக்கள் மட்டும் தன் கடமையைத் தவறாது காலை, மாலை இருவேளைகளும் செய்து கொண்டு வந்தார். நான் கோயிலில் தரிசனத்துக்கெனச் சென்றது மிகக் குறைவு. ஆனால் அங்கே உள்ள கிணற்றிலிருந்து குடிநீர் கொண்டு வரச் செல்வேன். அப்போதெல்லாம் கோயிலில் சப்தமே இல்லாமல் அமைதியாக இருப்பது கொஞ்சம் அச்சத்தைத் தரும்.

என் கணவர் இங்கே இருந்தவரைக்கும் கோயிலுக்குத் தினமும் சென்று வருவாராம். அங்கே உள்ள ஒரு தூணில் உள்ள குட்டிப் பிள்ளையார் அவருக்கு இஷ்ட தெய்வம். அந்தப் பிள்ளையாரை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள் என்றாலும் மீண்டும் இங்கே தருகிறேன்.



இது கொஞ்சம் அருகே வைத்து எடுக்கப்பட்ட படம். இன்னொரு கோணத்தில் தூணோடு சேர்த்து எடுத்தது கீழே!




இந்தப் பிள்ளையார் தலையில் பூச்சூடி இருக்கார் இல்லையா? அங்கே சிற்பத்தில் கல்லால் ஒரு ஓட்டை இருக்கிறது. பூவை அதில் செருகி விடலாம். இவருக்கு தினமும் எண்ணெய் முழுக்காட்டி அபிஷேஹ ஆராதனைகள் செய்து இந்தக் கோயிலையும் நான் பெரியவனாகி சம்பாதிக்க ஆரம்பித்ததும் கும்பாபிஷேஹம் செய்து தரவேண்டும் என்றெல்லாம் நினைப்பாராம் என் கணவர். ஆனால்  குடும்பக் கடமைகள் அப்படி எல்லாம் செய்ய விடவில்லை. :( என்றாலும் ஒவ்வொரு முறை கருவிலி வரும்போதெல்லாம் கோயிலின் நிலைமையைப் பார்த்து மனம் வருந்துவோம்.  திரு பரணீதரன் அவர்கள் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன் திருப்பணி தொடங்கப்பட்டு பாதியில் நின்று விட்டதாக ஆனந்தவிகடனில் எழுதி இருக்கிறார்.

கோயிலுக்கு விடிமோட்சமே இல்லையா என நினைத்துக் கொண்டிருந்த சமயம் திடீர்னு ஓர் தகவல் எங்களுக்கு வந்தது. அது தான் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேஹமும் நடக்கப் போகிறது என்னும் தகவல்! அதற்குக் காரணகர்த்தாக்கள் கல்கி திரு வைத்தியநாதனும் அவர் தம்பியும் மாருதி உத்யோக் பின்னர் ஸ்டீல் அதாரிடி போன்றவற்றில் பொறுப்பில் இருந்த திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களுமே ஆவார்கள். இவர்கள் ஒரு வகையில் என் மாமனாருக்கு உறவினர்கள் ஆவார்கள். இவர்களின் பாட்டியும் என் மாமனாரின் பாட்டியும் உடன் பிறந்த சகோதரிகள்.  நாச்சியார் கோயிலைச் சேர்ந்த இவர்கள் தங்கள் மூத்தமகள் ஆன என் மாமனாரின் பாட்டியைப் பரவாக்கரையிலும் ஒரு மைல் தள்ளி இருந்த கருவிலியில் தங்கையையும் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

அவர்கள் இருந்தவரை கோயிலில் எல்லாம் சிறப்பாக நடைபெற்று வந்ததாகவும் கோயிலுக்கு எதிரே உள்ள குளத்தில் சாப்பிட்டுக் கை அலம்புவர்களின் கையில் உள்ள நெய் எல்லாம் சேர்ந்து நெய்க்குளமாகக் காட்சி அளிக்கும் என்றும் சொல்வார்கள். ஆனால் அவர்கள் குடும்பத்தில் அனைவரும் ஊரை விட்டு வெளியே சென்று வடநாடு, சென்னை என்று வசிக்க ஆரம்பித்ததும் ஊர்ப்பக்கம் வருவது குறைந்து போய் இருந்திருக்கிறது. அதன் பின்னர் அவர்களில் யாருக்கோ கனவில் இறைவனே வந்து என்னை மறந்துவிட்டாயே என அழைத்ததாகச் சொல்கின்றனர். எப்படியோ ஆயிரம் வருஷத்துக் கோயிலுக்குத் திருப்பணி ஆரம்பித்தது.

முதல் கும்பாபிஷேஹம் 27-3-1997 ஆம் ஆண்டில் நடந்தது. ஆனால் அப்போது எங்கள் பெண்ணிற்கு மும்முரமாக வரன் பார்த்துக் கொண்டிருந்தபடியாலும் என் கணவர் அப்போது வேலைக்குச் சென்று கொண்டிருந்ததாலும் விடுமுறை கிடைக்காமல் யாருக்கும் போக முடியவில்லை. என்றாலும் அதற்குப் பின்னர் போய்ப் பார்த்துவிட்டு வந்தோம். அப்போது ராஜகோபுரம் எல்லாம் கிடையாது.  உள்ளே நுழையும்போது நந்தியெம்பெருமானைத் தாண்டிக் கொண்டு செல்ல வேண்டும். ராஜகோபுரம் பின்னர் அமைக்கப்பட்டு 2008 ஆம் ஆண்டில் 14--7--2008 ஆம் ஆண்டில் கும்பாபிஷேஹம் நடந்தது, அப்போது என் கணவர் சென்றிருந்தார்.  இப்போது அதன் பின்னர் இன்னும் சில வருடங்கள் சென்று விட்டதால் மீண்டும் கும்பாபிஷேஹம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஜூன் 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கும்பாபிஷேஹம் நடைபெற்றது.

எங்களால் செல்ல முடியவில்லை. மாமியாருக்குக் காரியங்கள் செல்வதால் ஒரு வருஷத்துக்கு ஆகமரீதியான கோயில்கள், கொடிமரம் இருக்கும் கோயில்கள் போன்றவற்றுக்கும் மற்றும்   கும்பாபிஷேஹம் போன்றவற்றில் கலந்து கொள்ள முடியாது என்பதால் செல்லவில்லை. ஆனாலும்  எங்க பையர் மூலம் சில படங்கள் கிடைத்தன. அவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன். கோயில் பற்றிய மற்றத் தகவல்களும் அதில் இடம் பெறும். அன்றைய தினம் கும்பாபிஷேஹத்தையே நினைத்துக் கொண்டு இருந்தோம்.




கருவிலி க்கான பட முடிவு

தொடரும்!

13 comments:

  1. எல்லா மனிதர்களுக்குமே தங்களது ஊர் கோவில், குலதெய்வ கோவில் என்றால் தனிப்பட்ட ஈடுபாடு வந்து விடும்.

    கோவில் வரலாறு அறிய தொடர்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கோயில் வரலாறு இன்னிக்குப் போடறேன். ஜெயா தொலைக்காட்சியில் காலை வேளையில் அடிக்கடி இந்தக் கோயிலைப் பற்றிக் காட்டுவாங்க!

      Delete
  2. உங்கள் மனா உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் குடும்ப புரோகிதர் அனுமதித்திருந்தால் போயிருப்போம்! :) அவர் அனுமதி கொடுக்கவில்லை! :)))

      Delete
  3. 'கருவிலி' இதை எங்கேயோ படித்திருக்கிறேனே என்று தோன்றியது. ஒருவேளை கல்கி அவர்களின் ஏதாவது எழுத்தில் படித்திருக்கலாம்.

    உங்கள் தளத்திலேயே இந்தப் பிள்ளையார் சிலையைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது.

    பொதுவா ஊரைவிட்டு வந்தப்பறம், திரும்ப நாம் வாழ்ந்த ஊருக்குப் போனால், அது முற்றிலும் அன்னியப்பட்டு இருப்பது (ஊரைவிட்டு அன்றிருந்த பலர் காலிசெய்திருப்பர், அந்தச் சூழ்னிலையே முழுவதுமாக மாறியிருக்கும்) நமக்குத் தெரியும்.

    தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நான் தான் இதோட மூணு,நாலு தரம் எழுதி இருக்கேன் நெ.த. அங்கே படிச்சிருப்பீங்க! ஊர் அன்னியப்பட்டு இருந்தாலும் சூழ்நிலை அவ்வளவெல்லாம் மாறலை! எனக்குத் தெரிந்து மதுரை முற்றிலும் அன்னியமாக மாறி இருக்கிறது. என் சித்தி, சித்தப்பா ஊரான சின்னமனூரும் பெருமளவில் மாற்றம்! மரங்களெல்லாம் வெட்டப்பட்டு அந்த ஊரின் அழகே பாழ்பட்டுப் போய் விட்டது! பிள்ளையார் அநேகமாக அனைவரும் அறிந்தவரே! அடிக்கடி வருவார்.

      Delete
  4. சொந்த ஊர் கோவில் செல்வது எப்போதுமே பிடித்தமான விஷயம் தான். கருவிலி பிள்ளையார் படம் உங்கள் பதிவில் பார்த்தது நினைவில் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், வெங்கட், ஊர்ப்பக்கம் போனால் ஒவ்வொரு முறையும் பிள்ளையாரைப் படம் எடுப்பேன். :)

      Delete
  5. நாங்கள் போன போது நந்தவனம் மிக அழகாய் இருந்தது.
    என் கணவர் மிக மோசமாய் கவனிப்பு இருந்த போதும் பார்த்து இருக்கிறேன் என்றார்கள்.

    அடிக்கடி ஜெயா தொலைக்காட்சியில் காட்டுவார்கள் கோவில் உலாவில்.

    படங்கள் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு, நந்தவனம் இப்போக் கடந்த பதினைந்து வருடங்களில் ஏற்படுத்தப் பட்டது. எப்போப் போனீங்கனு தெரியலை! கவனிப்பு மோசமாக இருந்ததா? நீங்க வேறே! கவனிப்பே இல்லாமல் இருந்தது! 95 ஆம் வருஷத்திற்குப் பின்னர் தான் கவனிப்பு ஏற்பட்டது. இதற்காகச் சாலையெல்லாம் போட்டு கூந்தலூரில் இருந்து ஊருக்குள் நுழையும் நுழைவாயிலில் கோயில் பெயருடன் கூடிய அலங்கார வளைவு கட்டி எல்லாம் செய்தாங்க! எல்லாச் செலவுகளும் திரு கிருஷ்ணமூர்த்தி தன் பொறுப்பில் எடுத்துச் செய்தார்!

      Delete
  6. அருமை.... தொடர்கிறேன் அம்மா....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டிடி.

      Delete
  7. ஓ சொந்த ஊர்க் கோயிலா!! அப்போ நிறைய நினைவுகள் இருக்குமே!..நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. அருமை...இதோ அடுத்ததுக்குப் போறொம்...

    ReplyDelete