தம்பி மோகன் ஜி அவர்களையும் அவருடைய எழுத்தையும் கடந்த இரண்டு மூன்று வருடங்களாகத் தான் அறிவேன். சமீப காலங்களில் வாராந்தரிகள், மாதாந்தரிகள் எனப் படிக்கும்வழக்கத்தை அடியோடு விட்டொழித்து விட்டதால் அவருடைய எழுத்துக்கள் அமுதசுரபி, தினமணி கதிர் போன்றவற்றில் வந்திருப்பது குறித்து அறிந்ததில்லை. இணையத்திலும் அவர் எழுதத் துவங்கின காலத்தை அறிந்திலேன். தற்செயலாகத் தான் "பாண்டு" கதை மூலம் அவர் வலைப்பக்கம் சென்று பார்க்க நேர்ந்தது. அதற்கு முன்னர் "தத்தி" கதைக்கும் போயிருக்கேன்னு நினைக்கிறேன்.
அவரோ வானவில் மனிதர்! நானோ கீழே இருக்கிறேன். அண்ணாந்து பார்க்க வேண்டும் அவரை! அவர் பார்க்கும் இடத்திலிருந்து அவருக்கு நான் தெரிவது கஷ்டமே! அத்தனை உயரத்தில் இருக்கிறார். ஆனால் எனக்கோ அவர் ஓர் அழகான வண்ணமயமான கூட்டில் இருப்பது தெரிகிறது. என்னால் பார்க்க முடிந்த அளவுக்கு அவரால் என்னைப் பார்க்க முடியுமா? முடியாது! ஆனால் என்னால் அவரைப் பார்க்க முடிந்த அளவுக்கு அவருடைய வானவில் அனுபவங்களை உணர முடியுமா என்றால் அதுவும் முடியாது! ஏதேதோ வண்ணமயமான ஒளிப் பிரவாகத்தை மட்டுமே பார்க்க முடியும். அதை எப்படி நான் எழுதுவது? எப்படி வர்ணிப்பது? அந்த நிறத்தை எழுதலாம் எனில் குறிப்பிட்ட ஓர் நிறத்தை மட்டும் காணவில்லையே! அவர் இருக்கும் உயரத்துக்கு நானும் செல்வதென்றால் லேசில் நடக்கும் விஷயம் இல்லை! அவர் தான் எனக்காகக் கீழிறங்கி வர வேண்டி இருக்கும்! நான் ஒரு சாமானியப் பெண்மணி! அவருடைய எண்ணங்களின் உயரம் என்னால் எட்ட முடியாத ஒன்று. இந்தக் காரணங்களுக்காகவே நான் அவர் கதைகள் குறித்து ஏதும் விமரிசிக்கவில்லை. ஆனால் அவருக்கு அது ஓர் குறையாகத் தோன்றுகிறதோ என்னும் எண்ணம் தோன்றவே இந்தப் பதிவு இப்போது!
அதிலே அன்பு, பாசம் (நிழல் யுத்தம்) மகன் நினைப்பதற்கு நேர்மாறான பெற்றோர்! , சமூக நீதிக்குச் சாடல் (வெளயாட்டு), போலி ஆன்மிகத்தை எதிர்த்தல் (தத்தி), மனைவியைத் தேவையில்லாமல் அநியாயமாய்க் கண்டிக்கும் கணவனுக்குக் கிடைத்த தண்டனை (பச்ச மொழகாய்), மொட்டு விட ஆரம்பிக்கும் காதல் ஆரம்பத்திலேயே பட்டுப் போனது!(பொன் வீதி), சிறுபிள்ளைத் தனமாக அம்மாவிடம் கோவித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் சிறுவனுக்குள் அம்மாவிடம் தோன்றிய கோபம் பாசமாக மாறும் வித்தை!(வீட்டைத் துறந்தேன்.)
"விட்டகுறை, தொட்ட குறை" கதையில் சின்ன வயதில் காதலித்துக் காதலியால் நிராகரிக்கப்பட்டுப் பின் அவளையே எதிர்பாரா வண்ணம் ( நம்ம க.க.போ. கருமாதிரி இல்லையோ) பயணத்தில் சந்திக்கையில் அவளால் வாழ்க்கையில் ஏற்றம் பெற்றிருந்தாலும் தனிப்பட்டக் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வி! இப்போது ஏன் அவளுடன் மீண்டும் சந்திப்பு ஏற்பட வேண்டும்? இந்தப் புரியா புதிருக்குக் கிடைக்காத விடை!
"தமிழே, என் தமிழே! கதையில் தமிழ் பேசத் தவித்த தவிப்பு! குடும்பம் இருந்திருந்தாலாவதூ தமிழில் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருக்கலாம். யாருமே இல்லாமல் லாரி டிரைவரைக் கூப்பிட்டு விருந்து வைத்துத் தமிழ் பேசிக் கொண்டாடிய கொண்டாட்டம்! (தமிழே, என் தமிழே) இத்தனைக்கும் மோகன் ஜியின் தாய் மொழி தெலுங்குனு நினைக்கிறேன். :)
மைத்துனன் சிரமப்பட்டுக் கொண்டு வரும் குடும்பப் பாரம்பரிய விக்ரஹங்களை முதலில் ஒதுக்கும் அண்ணி, பின்னர் உரிமை கொண்டாடுவதன் மூலம் அவள் தன்னுடைய நிலையை ஸ்தாபிதம் செய்து கொள்வது (அங்கிங்கெனாதபடி) உடல் வருத்தமும், பொருள் வருத்தமும் கொண்டு பல வருடங்களுக்குப் பின்னர் கொண்டு வந்த குல தெய்வங்கள் அண்ணன் வீட்டிலேயே இனி இருக்கும் என்று தெரிந்த மனோவின் துக்கம் நம்முள்ளும் தொண்டையை அடைக்கும் துக்கமாக மாறிப் போகிறது. அதனால் தானோ என்னமோ அந்த ராமர் குடும்பத்தின் லக்ஷ்மணசாமி முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்.
இந்தக் கதை எனக்கு எங்கள் குடும்பத்தின் ஓர் நிகழ்வை நினைவூட்டியது. என் மாமனாருக்கும் அவருடைய அண்ணாவுக்கும் நடந்த பாகப்பிரிவினையின் போது மாமனாருக்கு ஶ்ரீராம பட்டாபிஷேஹப் படமும் அவர் அண்ணாவுக்கு ஶ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள், ரிஷபவாஹனத்தில் ஈசன், பிள்ளையார், தவழ்ந்த கிருஷ்ணன் கையில் வெண்ணெய் வைத்துக் கொண்டு. ஆகியன கிடைத்தன. மாமனாரிடம் உள்ள படம் அவர் அண்ணாவுக்கும், அண்ணாவிடம் உள்ள விக்ரஹங்கள் மாமனாருக்கும் மனதை ஈர்த்த வண்ணம் இருந்திருக்கிறது. ஊரில் கிராமத்தில் பூர்விக வீட்டில் ஸ்வாமி அலமாரியில் மேல் தட்டில் ஶ்ரீராமரும் கீழ்த்தட்டில் இந்த விக்ரஹங்களும் ஒன்றாக இருந்திருக்கின்றன. பஞ்சாயதன பூஜை செய்து வந்திருக்கின்றனர். பின்னர் இவர்களால் முடியாமல் போகவே அவ்வப்போது அபிஷேஹம் செய்து பூக்கள் சார்த்தி நிவேதனம் மட்டுமே! பின்னர் பாகப்பிரிவினையில் ஶ்ரீராமர் கருவிலிக்கும், விக்ரஹங்கள் பரவாக்கரை வீட்டிலேயும் தங்கி விட்டன. பின்னால் பெரிய மாமனாரும் கருவிலிக்கே வந்தாலும் விக்ரஹங்கள் அவரிடமே இருந்தன.
மாமனாரின் அண்ணா இறந்த பின்னர் என் பெரிய மாமியாரிடமே இருந்தன விக்ரஹங்கள். கடைசியில் 2010 ஆம் வருஷம் அவங்களுக்கு ரொம்பவே வயசானதால் அந்த விக்ரஹங்கள் எங்களிடம் வந்து சேர்ந்தன. அது கூட அவங்க அவ்வளவு வருஷங்கள் தனியாக இருந்ததால் விக்ரஹங்களைத் தானே வைத்திருந்தார்கள். பின்னர் வயதான காரணத்தால் தனியாக இருக்கக் கூடாது என்று பெண் வீட்டோடு போகும் வாய்ப்பு ஏற்பட்டதால் விக்ரஹங்களை அங்கே கொண்டு செல்ல முடியாமல் எங்களிடம் கொடுத்து விட்டார்கள். இப்போ எங்க வீட்டில் மேல் தட்டில் ஶ்ரீராமரும், கீழ் தட்டில் விக்ரஹங்களும் வைத்திருக்கோம். ராமருக்கு அருகேயே பிள்ளையாரும், இன்னொரு பக்கம் கிருஷ்ணரும் காட்சி அளிப்பார்கள்.
"அங்கிங்கெனாதபடி" கதையைப் படிக்கையில் நாங்க விக்ரஹங்களுக்குத் தவித்த தவிப்பும் அது எங்களுக்கு வந்த விதமும் நினைவில் வந்தது. கண்களில் நீர் முட்டியது. நம்ம கதை இருக்கட்டும். தம்பியோட கதைகளைப் பார்ப்போம்
"வாக்கிங்" கதையின் எண்ண ஓட்டங்கள்! தன் தாத்தா நினைவில் தன் பேத்திக்குக் கால் பிடித்துவிடும் மகிழ்வான நிகழ்வு! குழந்தைகளைத் தண்டிக்கும் "நாட்டி கார்னர்"! அது தனக்கே வரும்போது அதன் தாக்கம் தெரியவருகிறது.
"கூளம் "கதையில் வரும் சபேசனின் கடந்த காலக் கசப்பான நினைவுகள், சிலவற்றை எப்போதும் மறக்கவே முடியாது! அந்தக் கதையில் தான் மகளைப் பிரிந்த தகப்பனாக உருகுவதும்! ஆனால் நானும் இப்படித் தான் எங்கள் குழந்தைகளின் பள்ளி டைரியிலிருந்து ப்ராக்ரஸ் கார்ட் வரை சேர்த்து வைத்திருக்கேன். இன்னமும் தூக்கிப் போட மனம் வரவில்லை! நம்மையே நாம் பார்ப்பது போன்ற அனுபவம் இந்தக் கதை மூலம் கிடைத்தது. " ஒரு பயணம்" கதையின் அனுபவங்கள் சிலிர்க்க வைத்தவை! வயலூர் முருகன் கொடுத்த அனுபவங்களால் நம் மனமும் நிறைகிறது. "எப்படி மனம் துணிந்தீரோ" கதையின் தலைப்பே குருவைக் கேட்பது போல் அமைந்து விட்டது. மீண்டும் இங்கே போலியான ஆன்மிகவாதியின் குட்டு வெளிப்படல்!
"வடு" கதை ஏற்படுத்திய தாக்கத்தின் வடு மறையவே மறையாது. ஒரு ஊதாப்பூ நிறம் மாறியதன் கதையில் நண்பன் கூடவே இருந்து செய்த துரோகம், அதைக் கண்டு பிடிக்க முடியாமல் ஊரெல்லாம் சுற்றிவிட்டு அலைந்த அலைச்சல், யார் மீதோ சந்தேகப்பட்டுக் கையில் கிடைத்தவனை நம்பி, :( "காமச்சேறு", "காட்டிக் கொடுத்த மணி" ஆகிய கதைகளில் கிடைக்கும் பக்திப் பரவசம்! இவருக்கு எல்லாவிதமான கதைகளும் எழுத வரும் என்பதைக் காட்டுகிறது. பக்தியா உடனே அதற்கேற்ற கதை! காதல் என்றால் கேட்கவே வேண்டாம்! உடனே சிறு பையனாக மாறி அம்மாவிடம் கோவித்துக் கொள்வார்! முதிர்ந்த தேர்ந்த எழுத்தாளர்களின் நடையில் "எப்படி மனம் துணிந்தீரோ!" என்று கேட்பார்!
மொத்தத்தில் அருமையானதொரு தொகுப்பு. ஏற்கெனவே ஓர் சிறுகதைத் தொகுப்பு வந்திருப்பதாக எங்கள் ப்ளாக் ஶ்ரீராம் எழுதி இருந்தார். இது இரண்டாவது என நினைக்கிறேன். திரு மோகன் ஜி எனக்குப் புத்தகம் அனுப்பி 2 மாதம் ஆகப் போகிறது. ஆனாலும் நான் ஓர் தயக்கத்தினால் அதைக் குறித்து எழுதவில்லை. அவரோ வானவில் மனிதர்! நானோ தரையில் இருப்பவள்! அண்ணாந்து பார்த்தாலும் ஊர்க்குருவி கருடனாக ஆக முடியாதல்லவா? அதான் காரணம்.
எல்லாக் கதைகளையும் குறித்து இங்கே எழுதவில்லை. சிலவற்றைத் தான் குறிப்பிட்டிருப்பேன். என்றாலும் எல்லாவற்றையும் ரசித்துப் படித்தேன். அதிலும் "கல்யாணியைக் கடித்த கதை"யையும், (சூடு போட்டதாகப் பொய் சொன்ன சித்தியை ரொம்பவே பிடித்தது)" அங்கிங்கெனாதபடி" கதையையும் "எப்படி மனம் துணிந்தீரோ" கதையையும் மீண்டும் மீண்டும் படித்தேன். இப்போது கூடப் பதிவு எழுதுகையில் அவற்றை ஒரு முறை பார்த்த பின்னரே எழுதுகிறேன்.
அடடே.... பொன்வீதியில் நீங்களும் வலம் வந்து விட்டீர்கள். அழகாய் எழுதி இருக்கிறீர்கள். கதைகளைப் பற்றி ஓரிரு வரி அபிப்பிராயங்கள் அருமை. மோகன் அண்ணாவே முன்னுரையில் சொல்லியிருப்பது போல கதைகளின் சம்பவங்கள் வாசகனின் 'நானை' ஸ்பரிசிக்கும்போது படைப்பின் வெற்றி புலப்பட்டு விடுகிறது.
ReplyDeleteஉங்கள் விமரிசனத்தையும், வைகோ விமரிசனத்தையும் பார்த்துக் கொண்டேன். எப்படி எழுதி இருக்கீங்கனு! அப்புறமாப் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு கதையா மறுபடி பார்த்துக் கொண்டேன். அதிகம் பெரிதாய்ப் போகக் கூடாதுனு முக்கியமான கருத்தாக எனக்குப் பட்டதை மட்டும் குறிப்பிட்டேன். உதாரணமாக "தத்த்தி" கதையின் தத்த்தி சாமியாராக ஆவது. அங்கிங்கெனாதபடி கதையில் விக்ரஹங்களைத் தேடிச் செல்தல்!
Deleteஒன்றும் தெரியாது என்று சொல்லியே எல்லாம் சொல்லி விட்டீர்கள்.
ReplyDeleteமோகன்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.
நன்றி கில்லர்ஜி!
Deleteவிமரிசனம் sum up பண்ணின மாதிரி இருக்கு. ஆனாலும் உங்கள், "விக்ரஹ அனுபவம்" புரிந்துகொள்ளவும் ரசிக்கவும் முடிந்தது. வாழ்த்துக்கள், (விமரிசனம் பண்ணறதுக்கு கதை படிக்கற ஆவலும், நிறைய புத்தகங்கள் படித்த அனுபவம் போதாதா? நாம ஏன் எழுத்தாளர் லெவலுக்கு இருக்கணும் விமர்சனம் செய்ய? அப்படி ஏதேனும் கண்டிஷன் இருந்தால் இப்போ நடக்கறமாதிரி எல்லோரும் எல்லா அதிகாரிகள், அரசு ஆகியவற்றை விமர்சனம் செய்யமுடியுமா?)
ReplyDeleteசம் அப்? தெரியலை நெ.த. ஆனால் எங்களோட பாரம்பரிய விக்ரஹ அனுபவங்களில் சில சம்பவங்களை எழுதிட்டு எடுத்து விட்டேன். அதே போல் விமரிசனமும் ரொம்ப நீளமாய்ப் போனதால் சில இடங்களில் நீக்கினேன். அதனால் அப்படித் தோன்றுகிறதோ என்னமோ! முக்கியமாய் விக்ரஹ அனுபவங்கள்! முக்கியமானவை வேண்டாம்னு எடுத்தேன். :)
Deleteஆஹா... பொன்வீதியில் நீங்களும் வலம் வந்தாச்சா..... நல்லது.
ReplyDeleteவிக்ரஹம் பற்றிய உங்கள் அனுபவங்களும் பகிர்ந்து கொண்டது சிறப்பு.
ஆமாம், நானும் வலம் வந்து விட்டேன். ஆனால் வருகை தான் குறைச்சல்! :)
Deleteவிக்ரஹங்கள் குறித்து "அங்கிங்கெனாதபடி" பதிவிலேயே கருத்துச் சொல்ல நினைத்துப் பின்னர் வேண்டாம்னு விட்டுட்டேன். இங்கேயும் ஆங்காங்கே கொஞ்சம் கூட்டிக் குறைத்து விட்டேன். :)
Deleteஅழகுக்கு அழகு சேர்த்திருக்கிறீர்கள்.
ReplyDeleteஅருமையான விமர்சனம்.
ReplyDeleteதேர்ந்த எழுத்தாளர் விமர்சனம்.
வாழ்த்துக்கள்.
மோகன ஜி மகிழ்வார். அவ்ருக்கும் வாழ்த்துக்கள்.
மோகன் ஜி இன்னமும் பார்க்கலை போல! அதனால் என்ன, பரவாயில்லை! நான் எதுவுமே சொல்லலையேனு அவருக்குக் கொஞ்சம் வருத்தம் இருந்தது! :) அது இப்போச் சரியாயிடும்!
Deleteவிமர்சன வித்தகிக்கு தன்னடக்கம் அதிகம் பாராட்டுகள்
ReplyDeleteஉங்கள் அன்பு திணற அடிக்கிறது ஐயா! உண்மை சொன்னால் தன்னடக்கமா? :)
Deleteஎன்னங்க இது.. நான் பின்னூட்டம் போட்டா காணாம போயிடுது.. பக்கத்து பிளாக்ல போட்டுட்டனா ஒருவேளை..
ReplyDeleteஅக்கா! இப்போது தான் பார்த்தேன். மிக யதார்த்தமான விமரிசனம். உங்கள் விக்கிரக அனுபவங்களை அழகாகவும் சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteஅன்பின் மிகுதியில் என்னை உயர்த்திச் சொல்லியிருக்கிறீர்கள். அதற்குத் தகுதியாக என்னை நான் உயர்த்திக் கொள்ள வேண்டும். இந்தக் கதைகள் வானவில் மனிதனில் வெளியானபோதே சிந்திக்கத் தூண்டும் விமரிசனங்கள் பின்னூட்டத்தில் தந்திருக்கிறீர்கள்.
உங்கள் கருத்தை அறிய ஆவலாக இருந்தேன் அக்கா! மிக்க நன்றி!
இங்கு கருத்தளித்த பதிவர் சொந்தங்களுக்கு என் அன்பும் நன்றியும். அடுத்த புத்தகம் தயாரிக்கத் தொடங்கியிருக்கிறேன். உங்கள் அன்புக்கு மீண்டும் நன்றி!
நன்றி தம்பி. உங்கள் எழுத்தை ரசிக்காதவர்களும் இருப்பார்களா! என்றாலும் என் கருத்தையும் விரும்பிக் கேட்டுக் கொண்டதற்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும்.
Deleteபொன்வீதியில் மிகவும் பிரகாசமாகச் சுற்றி வந்திருக்கிறீர்கள்! என்னவோ எதுவுமே தெரியாது என்பது போல் சாமானியள் என்றெல்லாம் சொல்லிவிட்டு இத்தனை அருமையாக விமர்சித்திருக்கிறீர்கள்! நாங்கள் விமர்சனம் எழுதாமல் நிறைய நம் வலைப்பதிவர்களின் புத்தகங்கள் உள்ளன. இலக்கியங்களை விமர்சிக்கும் அளவிற்கு எங்களுக்கு அத்தனை அறிவு இருக்கிறதா என்ற ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருக்கிறது.
ReplyDeleteஉங்கள் விமர்சனம் மிக மிக அருமை. நாங்களும் வாசிக்க வேண்டும். அவரது வலையில் சில வாசித்ததுண்டு. அருமையாக இருக்கும். உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் மிகவும் சிறப்பாக இருக்கும்...
உங்களுக்கும், மோகன் ஜி அவர்களுக்கும் வாழ்த்துகள்!
எனக்கும் சில புத்தகங்கள் இன்னமும் இருக்கின்றன. சில படிக்காமல், சில படித்தும் சொல்லாமல்! உண்மையில் இலக்கியங்களை விமரிசிக்கும் தகுதி எனக்கு இல்லை தான். நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். நான் என்னமோ தெரிஞ்சாப்போல் எழுதறேன். :)
Delete