எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, July 18, 2017

சில எண்ணங்கள், சில பகிர்வுகள்!

மோகமுள் விமரிசனம் பலரையும் கவர்ந்திருக்கிறது. புத்தகங்கள் நிறையப் படித்தாலும் எல்லாவற்றுக்கும் விமரிசனம் என்றோ அல்லது என் பார்வை என்றோ எழுத முடிவதில்லை! அதோடு இப்போதெல்லாம் கொஞ்சம் அலுப்பு, அயர்ச்சி, இயலாமை தோன்றி உள்ளது. அதை முறியடிக்க வேண்டியே குறைந்த பட்சமாக 2 மணி நேரமாவது இணையத்தில் உட்காருகிறேன். அந்த நேரமும் வந்திருக்கும் மடல்களைப் பார்ப்பதிலும், பதில் அளிப்பதிலும், தங்கள் வலைப்பக்கத்துக்கு அழைக்கும் நண்பர்களின் வலைப்பதிவைப் பார்ப்பதிலும் சென்று விடும். அதன் பின்னர் தொடர்ந்து உட்காரக் கூடாது என்று கண்களை மூடிக்கொண்டு படுத்து விடுவேன். ஆகவே கொஞ்சம் சுரத்துக் குறைந்துள்ளது என்பதே உண்மை. ஆனாலும் ஒரு சில சமயம் எழுத விஷயம் இருந்தாலும் பகிராமல் இருக்கும்போது மனம் கொஞ்சம் குத்திக்காட்டத் தான் செய்கிறது. நமக்குத் தான் ம.சா. ரொம்பவே வந்து படுத்துமே! :)
*********************************************************************************


இந்தியத்தபால் துறையின் சேவை போற்றுதலுக்கு உரியது. இன்னமும் தபால் அட்டை, உறை போன்றவற்றின் விலை சாமானிய மக்கள் வாங்கும்படியாக மலிவாகவே இருந்து வருகிறது. ஒரு சில தபால் அலுவலகங்கள் மூடி விட்டாலும் பெரும்பாலானவை முக்கியமான கிராமங்களில் இருந்து வருகின்றன. ஆனால் மக்கள் பெரும்பாலும் கூரியர் சேவையையே நம்புகின்றனர். கூரியர் இத்தனைக்கும் பணம் அதிகம் வாங்கும் சேவை ஆகும். ஆனாலும் எல்லாக் கூரியர்களும் எல்லாவிதமான தபால்களையும் வாங்குவதில்லை! ஒரு சில கூரியர்களால் ஏற்கப் படுவதில்லை. இரண்டு நாட்கள் முன்னர் ஒரு பார்சலைச் சென்னைக்கு அனுப்ப வேண்டிக் கூரியரை நாடினோம். அவங்க ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். இன்னும் சில கூரியர்கள் ஒரு கிலோ எடைக்குக் குறைந்த பட்சத் தொகையாக 350 ரூ வரை கேட்டார்கள். அப்படியும் பார்சலைத் திறந்து பார்ப்போம். ஸ்கான் செய்து பார்ப்போம். உள்ளே இருப்பதை எடுக்க வாய்ப்பு உண்டு என்றெல்லாம் சொல்லிவிட்டார்கள்.

நாங்க ராஜஸ்தானில் இருந்தப்போ கும்பகோணம் அருகே கருவிலி கிராமத்தில் இருந்த என் மாமனார் வீட்டவருக்கு தீபாவளித் துணிகள் வாங்கித் தபால் மூலம் பார்சலில் அனுப்புவோம். காப்பீடு செய்யப்பட்ட பார்சல். ஆனால் ஒரு மாதம் முன்னரே அனுப்ப வேண்டும். பார்சலே மெதுவாகப் போகும் என்றால் காப்பீடு செய்யப்பட்டது இன்னும் கொஞ்சம் தாமதம் ஆகும். என்றாலும் பார்சல் செய்து அதை மேலே ஒரு துணிப்பையைப் போட்டுத்தைத்து அரக்கு சீல் வைத்து அனுப்புவோம். ஜாக்கிரதையாகப் போய்ச் சேர்ந்து விடும். ஆகவே இப்போதும் நம்ம ரங்க்ஸ் கூரியருக்குப் போயிட்டு மனம் நொந்து வந்தவரிடம் தபால் மூலம் அனுப்பலாம் என்று சொன்னேன். அவரும் நம்பிக்கையே இல்லாமல் தான் போனார். காப்பீடு செய்து அனுப்பவேண்டி எல்லாம் தயார் செய்து வைத்திருந்தாலும் அரக்கு சீல் வைக்கவில்லை. ஆகவே தபால் அலுவலகத்தாரே காப்பீடு செய்தால் உடனே போகாது. பத்து நாட்களாவது ஆகும் என்று சொல்லி விரைவுத் தபாலில் அனுப்புமாறு சிபாரிசு செய்திருக்கிறார்கள்.

இம்முறையில் மறுநாளே சென்னைக்குப் போய்ச் சேர்ந்து விடும். ஆனால் மறுநாள் ஞாயிறு என்பதால் திங்களன்று போய்விடும் என்றார்கள். அவரும் சம்மதித்துப் பார்சலை விரைவுத் தபாலில் அனுப்ப வேண்டி ஏற்பாடுகள் செய்து விட்டு வந்தார். 106 ரூபாய் தான் செலவு. அதோடு பதிவு எண்ணைக் கொடுத்துத் தபால் எங்கே இருக்கிறது என்பதை இணையம் மூலம் தேடிக் கண்டு பிடித்துக் கொள்ளலாம் என்றும் கொடுத்திருந்தார்கள். திங்களன்று இந்தியத் தபால்துறையின் அந்தத் தளம் சென்று பதிவு எண்ணைக் கொடுத்துத் தேடினேன். சென்னையில் குறிப்பிட்ட தபால் அலுவலகம் போய்ச் சேர்ந்து விட்டது என்ற தகவல் கிடைத்தது. ஆனால் நபருக்குப் போய்ச் சேர்ந்த விபரம் இல்லை. அது அந்தக் குறிப்பிட்ட தபால்காரர் திரும்பி வந்து விபரங்கள் கொடுத்ததும் தான் அங்கே வரும். ஆகவே எப்படியும்சென்னை போய் விட்டதால் இன்று நாள் முடிவதற்குள்ளாகக் கொடுத்து விடுவார்கள் என்று நம்பினோம்.

அதே போல் அன்று மாலை ஆறுமணி சுமாருக்குக் குறிப்பிட்ட நபரிடமிருந்து பார்சல் வந்து சேர்ந்தது என்ற தகவல் கிடைத்தது. அன்றிரவு சுமார் 11 மணிக்குப் பார்சல் குறிப்பிட்ட நபரிடம் போய்ச் சேர்ப்பிக்கப்பட்டது என்ற தகவலையும் தபால்துறையின் தானியங்கிச் சேவை மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.  தபால்துறை இன்னமும் முன்னேற வேண்டும். என்றாலும் எனக்குத் தெரிந்து தபால் துறையில் மட்டுமே புகார் கொடுத்தால் உடனடியாகத் தீர்வு கொடுத்து வருகிறார்கள்.  இதில் சொந்த அனுபவங்கள் பல உண்டு. இப்போது ரயில்வேயிலும் இம்மாதிரிப் புகார்களுக்கு உடனடித் தீர்வு கிடைத்து வருவதாக முகநூல் மூலமும் மற்றப் பதிவுகள் மூலமும் அறிய நேரிட்டது.

"நீட்" தேர்வு வேண்டாம் என மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பல கட்சித் தலைவர்களும் சொல்கின்றனர். அவர்கள் யாரும் ஒன்றை நினைத்துப் பார்க்கவே இல்லை. இந்தத் தீர்ப்பைச் சொன்னது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மாநிலமோ, மத்திய அரசோ என்ன செய்ய முடியும்? கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்குத் தடை என்கிறார்கள். கிராமப்புற மாணவர்கள் இன்னும் எத்தனை வருஷங்களுக்குத் தரமற்ற பொதுவெளியில் போட்டி போட முடியாத கல்வியையே கற்றுக் கொண்டிருக்கப் போகிறார்கள்? அவர்களின் கல்வியின் தரத்தை மேம்படுத்தினாலே போதுமே! "நீட்" என்ன, ஜிஆர் ஈ, டோஃபெல் போன்ற தேர்வுகளில் கூட அவர்கள் நல்ல முறையில் தேர்ச்சி பெற முடியும். 

21 comments:

  1. அலசல் நன்று கதம்பம் போல் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி. ஆமாம், கதம்பம் தான்.

      Delete
  2. முகநூல் உதவுகிறது குறித்து சந்தோசம்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி டிடி. முகநூலில் பயனுள்ள செய்திகளை மட்டுமே தேடிப் பிடித்துப் படிக்கணும். :)

      Delete
  3. இன்னும் தபால்லாம் அனுப்பறாங்களா என்ன? 'தபால்'னதும் எனக்கு 87-94 கள்ல சென்னைல எங்க ஊர்ல தபால் பட்டுவாடா செய்யும் ஊழியர் ஞாபகம் வந்தது. அவரை மாதிரி சின்சியரான, நல்ல (அதேசமயம் மிகவும் ஏழ்மையான) தபால் ஊழியரை (அரசு ஊழியரை) நான் கண்டதேயில்லை. இப்படிப்பட்ட சின்சியர் ஆட்களை தபால் தந்தித்துறை எப்படி மோடிவேட் பண்ணுகிறது, அப்படி மோட்டிவேட் பண்ண அரசுத் துறைகள்ல வாய்ப்பு இருக்கான்னும் தெரியலை.

    'நீட்' தேர்வுக்குப் போராடுபவர்கள் சொல்கிற முக்கியக் காரணம், இது 1 வருடத்துக்கு முன்பே சொல்லவில்லை என்பதுதான். மற்றபடி இந்தியா முழுமைக்கும் ஒரே தேர்வு என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். அப்படிப் பார்த்தால், கிராமத்துப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கும், சென்னை போன்ற நகரங்களில் படிப்பவர்களுக்கும் (ஸ்டேட் போர்டு) ஒரே மாதிரி மதிப்பெண்களும் தேர்வும்தானே நடைபெறுகிறது. பல கிலோமீட்டர்கள் நடந்து படிப்பவர்களும், நகரத்தில் அருகாமைப் பள்ளிகளில் படிப்பவர்களும் எப்படி ஒரே சிஸ்டத்தில் தரம் பிரிக்கப்பட முடியும்?

    ReplyDelete
    Replies
    1. எங்களுக்கு நிறைய ஸ்பீட் போஸ்ட் தபால்கள் வரும். :) எங்களுக்கும் தபால் துறையிலிருந்து ட்ராக்கிங் நம்பர் கொடுத்து எஸ் எம் எஸ் அனுப்புவாங்க. டெலிவரி செய்ததும் உங்களுக்குப் பார்சல் சேர்க்கப்பட்டது என்னும் தகவல் வரும். இதை எல்லாம் பார்த்துத் தான் நான் தபால்துறையை நாடலாம் என்றே சொன்னேன். ஏனெனில் ஸ்பீட் போஸ்டில் பார்சல்கள் அனுமதி உண்டானு சந்தேகம். மற்றபடி பல தபால்கள் இன்னமும் தபால் துறை மூலம் வந்து கொண்டு தான் இருக்கின்றன. இப்போது தபால்காரர் மட்டுமில்லாமல் தபால்காரிகளும் வருகின்றனர். இது கடந்த 20 வருஷத்தில் அதிகரித்துள்ளது.

      Delete
    2. கற்பிப்பதில் வேறுபாடு இருக்கலாமோ என்னமோ! பொதுவாக நகரத்தில் படித்தாலும் சரி, கிராமங்களில் படித்தாலும் சரி மாணவர்களின் கல்வியின் தரம் அவ்வளவு உயர்வாக இல்லை. அதனால் தான் தமிழ்நாட்டில் "நீட்" போன்ற பொதுத் தேர்வுகளுக்கு எதிர்ப்பு. எட்டாம் வகுப்பு வரை எல்லோரும் பாஸ்! அதன் பின்னர் ஒன்பதாம் வகுப்பில் என்னத்தை வடிகட்டறது? எட்டாம் வகுப்பு வரை பாஸ் என்பதினாலும் பலரும் சரியாகப் படித்துப் புரிந்து கொள்வதில்லை. திடீர்னு ஒன்பதாம் வகுப்பில் இருந்து தேர்வு முறைனு வரும்போது பலராலும் படிக்க முடிவதில்லை என்பதே உண்மை.

      Delete
    3. என் அம்மா படிக்கையில் ஈ.எஸ்.எல்.சி. என்றதொரு படிப்பு எட்டாம் வகுப்புக்குப்பொதுத் தேர்வாக நடத்தும்படி இருந்திருக்கிறது. இதன் பாடத்திட்டங்கள் இப்போதைய பத்தாம் வகுப்புக்குக் கூட இருக்காது என நினைக்கிறேன். அப்போதெல்லாம் பலரும் இந்த ஈ.எஸ்.எல்.சி. படித்து விட்டுப் பின்னர் ஆசிரியர் பயிற்சி பெற்று ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களாக ஆகி இருக்கின்றனர். எலிமென்டரி ஸ்கூல் லீவிங் சர்டிஃபிகேட் என்பது ஈ.எஸ்.எல்.சி.யின் முழு வடிவம். இப்போதோ? எட்டாம் வகுப்பு வரை எல்லோரும் பாஸ்! படிச்சாலும் சரி, படிக்காட்டியும் சரி! :(

      Delete
  4. இந்த மாதிரியான தேர்வுகள் பற்றிய தகவல்கள் சிபிஎஸ்ஈ மாணவர்களுக்கு தெரிந்த அளவு மற்ற மாணவர்களுக்குத் தெரிவதில்லை. தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முயற்சியும் இல்லை என்பது இன்னொரு ஆச்சரியம்.

    Competition Success Review என்ற பத்திரிகை நினைவுக்கு வருகிறது. இங்கோ தினமலர் பத்திரிகை வழிகாட்டல்களே பெரிய விஷயம். இன்ஜினியர், டாக்டர், சாப்ஃட்வேர், அக்கவுண்டன்ஸி இதை தாண்டி எதுவுமில்லை என்று கிணற்றுத் தவளையாக மாணவர்களை வரிந்து கட்டிக் கொண்டு பழக்குவதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜீவி சார், சிபிஎஸ்ஈ மாணவர்களுக்கு உள்ள பொது அறிவு மாநிலத் திட்டப் பாடங்களில் படிக்கும் மாணவர்களிடம் காண முடியவில்லை. பல்வேறு வினா, விடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் மாணவர்களின் பதில்களைப் பார்த்து விட்டே இதைச் சொல்கிறேன். நீங்க சொல்றாப்போல் தினமலர் பத்திரிகையின் வழிகாட்டலும் இப்போது அதோடு போட்டி போடும் தினகரன் வழிகாட்டலுமே பெரிய விஷயமாக எல்லோரும் நினைக்கின்றனர்.

      Delete
    2. 'Competition Success Review' - காலவண்டி ஜீவி சார்.

      Delete
  5. நல்ல கருத்துகள்! நாங்கள் எப்போதுமே தபால் துறை வழியாகத்தான் ஸ்பீட் போஸ்ட் ரெஜிஸ்டர்ட் பார்சல் எல்லாமே அனுப்புவது. புத்தகங்கள் கூட அதன் வழியாகத்தான் அனுப்புவது. அயல்நாட்டிற்கு அனுப்ப வேண்டியவை, பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டியவை அனைத்துமே போஸ்டல் சர்வீஸ் தான். சரியாகப் போய் சேர்ந்து விடுகிறது. ட்ராக் பண்ண முடியும். (கீதா: அயல் நாட்டிற்கு அனுப்பப்படுபவரை அந்த நாட்டிற்குள் சென்றவுடன் அவர்களது போஸ்டல் சர்வீஸ் வட்டத்திற்குள் போய்விடும். ட்ராக்கிங்கில் அதுவும் சொல்லபப்ட்டுவிடும். என் மகன் அங்கு அனுப்பியவை எல்லாமே போஸ்டல் சர்வீஸ் வழியாகத்தான்.) ஆனால் கிராமங்களில் இப்படி அனுப்புவதற்கு வழியில்லை. (துளசி: நான் குடும்பத்துடன் இருப்பது ரிமோட் இடத்தில். தபால் நிலையத்தில் இன்னும் வசதிகள் மேம்படுத்தவில்லை. அது போன்று பாலக்காட்டிலும் சரி நான் இருப்பது ஒரு கிராமத்தில். எதற்குமே டவுணுக்குப் போக வேண்டும் 15 கிமீட்டர்.) மற்றபடி தபால் செர்வீஸ் மிக மிக பயனுள்ளதாக சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகையில்தான் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

    ReplyDelete
    Replies
    1. வெளிநாட்டுக்கு நானும் பையர் படிக்கையில் புத்தகங்கள் எல்லாம் வாங்கித் தபால் மூலம் அனுப்பி உள்ளேன். பெண்ணின் குழந்தைகளுக்குத் துணிகள் வாங்கி அனுப்பி இருக்கேன். ஆனால் உள்நாட்டில் கிராமங்களுக்கு நாங்க எப்போவோ எழுபதுகளிலேயே அனுப்பி உள்ளோம். நீங்க இப்போ இருக்கும் இடத்தில் அனுப்ப வழியில்லை என்பது ஆச்சரியமாத் தான் இருக்கு! :( நான் கல்யாணம் ஆகி வந்தப்போ என் மாமனார் இருந்த கருவிலி கிராமத்தில் மின் விளக்குகள் கிடையாது. மின் விநியோகம் ஆரம்பிக்கவில்லை. அவங்க நகருக்குள் வந்தால் மின் விளக்கில் வேலை செய்யறதையும் ஃபான் சுத்துவதையும் பார்த்து ரொம்பவே சந்தோஷப்படுவாங்க. அதிசயமாயும் இருக்கும். எழுபதுகளின் கடைசியில் தான் அந்த கிராமத்திற்கு மின்சார வசதி செய்யப்பட்டது. ஆனால் அப்போவோ கிராமத்திற்கெனத் தனி தபால் நிலையம் உண்டு. பார்சல்கள் எல்லாம் பக்கத்து ஊரான எரவாஞ்சேரிக்கு வந்திருக்கும். அங்கிருந்து கொண்டு வந்து தருவார்கள். எரவாஞ்சேரி மூன்று மைலுக்குள் தான்!

      Delete
  6. கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்குத் தடை என்கிறார்கள். கிராமப்புற மாணவர்கள் இன்னும் எத்தனை வருஷங்களுக்குத் தரமற்ற பொதுவெளியில் போட்டி போட முடியாத கல்வியையே கற்றுக் கொண்டிருக்கப் போகிறார்கள்? அவர்களின் கல்வியின் தரத்தை மேம்படுத்தினாலே போதுமே! "நீட்" என்ன, ஜிஆர் ஈ, டோஃபெல் போன்ற தேர்வுகளில் கூட அவர்கள் நல்ல முறையில் தேர்ச்சி பெற முடியும். //

    துளசி: நீட்டிற்கு கேரளத்தில் தமிழ்நாட்டளவு எதிர்ப்பு இல்லை.

    கீதா: இதே உங்கள் கருத்தைத்தான் ஏதொ ஒரு தளத்தில் பின்னூட்டத்தில் நான் கொடுத்திருந்தேன். நம் கிராமத்துக் குழந்தைகளை இன்னும் கீழே தள்ளிக் கொண்டுள்ளார்கள் நம் அரசியல் வியாதிகள். ஆதாயத்திற்காகத்தான். வேறு ஒன்றுமில்லை. தமிழ்நாடு முன்னேறுவதற்கு இல்லை. நல்ல தரமான கல்வி முறையை கடைக்கோடி கிராமத்துக்கும் வழங்குவதை விட்டு இன்னும் தாழ்ந்த நிலைமைக்குத் தள்ளிக் கொண்டிருக்கின்றார்கள் உலகத்தரத்திற்குப் போட்டி போட வைத்து எதிர்நீச்சல் போடக் கற்றுக் கொடுப்பதை விட்டு....என்னமோ போங்க...சரியான பாதையாகத் தெரியவில்லை. ஒரு நாட்டின் முன்னேற்றம் கல்வியின் வளர்ச்சியில்தான் இருக்கிறது. கடைக்கோடி கிராமம் வரை...

    ReplyDelete
    Replies
    1. கேரளத்தில் மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும் "நீட்" தேர்வு உள்ளிட்டபல விஷயங்களுக்கு எதிர்ப்பு இல்லை. முக்கியமாய் ஜிஎஸ்டிக்கும் பல மாநிலங்களும் ஒத்துக் கொண்டே வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மத்திய அரசுத் திட்டம் என்றாலே எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். திட்டத்தின் நிறைகுறைகளைக் குறித்துச் சிந்திக்கக் கூடாது என்னும் மனோபாவமே பெரிதாக இருக்கிறது. கல்வியில் தமிழ்நாடு தரம் தாழ்ந்து போய்விட்டது மனதிற்கு வேதனை அளிக்கிறது.

      Delete
  7. 15 சூலை 2017 அன்றுகோயில் உலா சென்றபோது கருவிலி (திருக்கருவிலிக் கொட்டிட்டை) சென்றுவந்தோம். ஒரே நாளில் 15 தேவாரத்தலங்களுக்குச் சென்றபோது இங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது...
    போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வதற்கு முதலில் வாசிக்கும் பழக்கம் மாணவர்களிடையே இருக்கவேண்டும். குறிப்பாக நாளிதழ் வாசிப்பு.

    ReplyDelete
    Replies
    1. முன்னரே தகவல் தெரிவித்திருந்தால் அங்கே கோயிலின் அலுவலர் திரு கார்த்திக்கிடம் உங்கள் வரவைத் தெரிவித்திருப்போம். பரவாயில்லை.

      நீங்கள் சொல்வது போல் மாணவர்களுக்கு வாசிக்கும் பழக்கமும் இல்லை. வாய் விட்டுப் படிக்கும் பழக்கமும் இல்லை. நான் எஸ் எஸ் எல்சி படித்து முடிக்கும் வரை தினமும் ஆங்கில, தமிழ் வகுப்புக்களில் ஆங்கிலச் செய்யுள்களையும், தமிழ்ச் செய்யுள்களையும் வகுப்பு மாணவிகள் அனைவரும் எழுந்து நின்று சொல்லியாக வேண்டும். புதுசாப் பார்க்கிறவங்க இது என்ன நர்சரி வகுப்புப் போல இருக்கேனு கேலி செய்தாலும் எங்கள் ஆசிரியர்கள் எங்களை அந்தப் பழக்கத்தில் ஈடுபடுத்தினார்கள். உச்சரிப்புத் தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காக. அதே போல் தினமும் கையெழுத்து நோட்டிலும் எழுதிக் கொண்டு வர வேண்டும். நான்கு கோடு போட்டது ஆங்கிலத்துக்கு, இரண்டு கோடு போட்டது தமிழுக்கு.

      Delete
  8. முன்பெல்லாம் அதாவது 1960 களில் தபாலில் கடிதம் அனுப்பினால் மறு நாளே அதே மாநிலத்தில் இருந்தால் கிடைத்து விடும் ஒரு முறை எனது கடிதம் மறு நாள்வந்து சேரவில்லை என்று என் தந்தை வருத்தப்பட்டு எழுதி இருந்தார் திருச்சியில் இருந்து நான் அனுப்பிய ரெஜிஸ்டர் அக்நாலெட்ஜ் போச்ட் பெறுநர் பெறாமலேயே அக்நாலெட்ஜ்மெண்ட் அடுத்த நாளே வந்தது கூரியரில் ஒரு படம் சட்டமிட்டது அனுப்ப ரூ.650 /- வாங்கினார்கள் ஒரு புத்தகம் ஆஸ்திரேலியாவுக்கு பொஆர்சலில் அனுப்பினேன் ஒரு வாரத்துக்குள் போய்ச் சேர்ந்து விட்டது தபால் துறை வெவ்வேறு விதமாகச் செயல் பட்டு வருகிறது ஒரு தனி பதிவே எழுத செய்திகள் இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. முன்னெல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் எக்ஸ்பிரஸ் தபால் என சனிக்கிழமை நாம் அனுப்புவது பத்து பைசா ஸ்டாம்ப் கூட ஒட்டினால் போய்ச் சேர்ந்து விடும். ஞாயிறன்று கூடத் தபால்காரர் வந்து கடிதங்களைக் கொடுத்துச் செல்லுவார். பார்சல்கள் மட்டும் தாமதமாக வந்து சேரும். குறைந்தது பதினைந்து நாட்கள் ஆகிவிடும். இன்ஷ்யூர் செய்த பார்சல் எனில் கொஞ்சம் சீக்கிரம் வந்தாலும் அவையும் சரியாக வந்து சேர்ந்து விடும். கூரியரில் அனுப்பினால் பணம் அதிகம் தான்! எனக்கு என்னமோ கூரியர் சேவை அவ்வளவாகப் பிடிக்கிறதில்லை!

      Delete
    2. கிராமத்தில் இருந்து என் மாமனார் அனுப்பும் கடிதங்கள் எல்லாம் சரியாக நான்காம் நாள் காலை முதல் டெலிவரியில் வந்து சேர்ந்துவிடும். சில சமயம் மூன்றாம் நாளே மாலை டெலிவரியில் வரும். நாங்கள் அனுப்பும் மனி ஆர்டரும் ஒரு வாரத்துக்குள்ளாகப் போய்ச் சேர்ந்து விடும்.

      Delete
  9. கூரியர் விலையும் இப்போது நிறைய ஏறியுள்ளது. அது மட்டுமின்றி பாதுகாப்புச் சோதனைகள் என்கிற பெயரில் அவர்கள் செய்யும் அட்டூழியம்....

    இப்படித்தான் சமீபத்தில் ஒரு புத்தகத்தை கோல்கத்தாவுக்கு அனுப்ப, கூரியரை நாடினால் ஆயிரம் கண்டிஷன் சொன்னார்கள். ஸ்பீட் போஸ்ட்டில் அனுப்பி, ஒரு வாரத்தில் அவர்கள் கைக்குக் கிடைத்துவிட்டது.

    நீட் பற்றி கருத்து கூற எனக்கு விவரம் போதாது.

    ReplyDelete