ராஜகோபுரம் எடுத்த பின்னர் அதன் காட்சி!
கும்பகோணத்திற்குக் கிழக்கே அரிசிலாற்றின் தென்கரையில் கூந்தலூர் என்ற கிராமம் உள்ளது. அங்கிருந்து அரிசிலாற்றுப் பாலத்தைக் கடந்து சற்று வடக்கே போனால் "கருவிலி" என்ற பெயர் கொண்ட ஊர் வரும். இதற்குக் கும்பகோணத்திலிருந்து வடமட்டம் என்ற ஊர் வந்து அங்கிருந்து "பரவாக்கரை" என்ற ஊர் ஒரு கி.மீட்டரில் உள்ளது. அந்த ஊரில் இருந்தும் முட்டையாற்றுப் பாலத்தைக் கடந்து சுமார் ஒரு மைல் வந்தும் வரலாம். இந்த இரண்டு ஆறுகளுக்கு நடுவில் அமைந்த ஊர் தான் "கருவிலி". நான் கல்யாணம் ஆகி முதல் முதல் வந்த ஊர். உண்மையில் பூர்வீகம் "பரவாக்கரை" தான் என்றாலும் என் மாமனாரின் பங்கு நிலங்கள் இந்த ஊரைச் சுற்றி அமைந்த காரணத்தாலும், அந்த நாளில், மழை பெய்யும்போது முட்டையாற்றில் வெள்ளம் வந்து உடைப்பு ஏற்பட்டு இங்கே வந்து சரிவரக் கவனிக்க முடியவில்லை என்பதாலும் இங்கேயும் ஒரு வீடு இருந்ததாலும் இங்கே வந்தனர் என்று சொல்வார்கள். ஆனால் இன்னும் நாங்கள் குலதெய்வம் என்று பரவாக்கரை மாரி அம்மனைத் தான் வழிபடுகிறோம். இப்போது சற்று கருவிலியைப் பற்றி.
முன்பு எல்லாம் நாங்கள் மூங்கில் பாலத்தில் தான் ஆற்றைக் கடக்க வேண்டும். அதுவும் மழை நாளிலும்,ஆற்றில் தண்ணீர் வந்து விட்டாலும் மாட்டு வண்டியை அவிழ்த்து மாட்டை விரட்டி விடுவார்கள். மாடு நீந்திப் போய்விடும். வண்டியை ஆட்கள் ஆற்றில் தள்ளிக் கொண்டு போய் கரையில் ஏற்றி விடுவார்கள். இப்போ கல்பாலம் வந்து விட்டது. கொஞ்சமும் சிரமம் இல்லாமல் கார் முதல் லாரி வரை போகலாம். போகும் வழி எல்லாம் மூங்கில் தோப்புக்களும், தென்னந்தோப்புக்களும் சூழ்ந்து நின்று வயல்களைப் பாதுகாக்கும். ஆற்றில் தண்ணீர் வந்ததும் ஊர்ப்பக்கம் போனால் வாய்க்காலில் நாற்று மாலைகள் மிதந்து வரும் காட்சியைப் பார்க்கலாம். இப்போது டீக்கடையில் இருந்து பாட்டுச் சத்தமும், அங்கங்கே டீ.விக்களின் சத்தமும் கேட்க ஆரம்பித்துள்ளது. இது முன்னேற்றத்திற்கான பாதை என்றாலும் ஊரின் ஜீவன் எங்கோ போய் விட்டதாக எனக்குத் தோன்றுகிறது.
எல்லாவற்றையும் கடந்து போனால் ஊருக்குள் போகும்போதே அக்ரஹாரம் வரும். சில வீடுகளே உள்ள அக்ரஹாரம். நாங்கள் இருந்த போதே 4 வீடுகளில் தான் எங்கள் சொந்தக்காரர் இருந்தனர். தற்போது கோவில் குருக்களைத் தவிர யாரும் இல்லை. அக்ரஹாரத்தில் நுழையும் போதே நமக்கு வலப்பக்கமாக ஆஞ்சனேயர் கோயில். ஆஞ்சனேயரைத் தரிசித்துவிட்டு உள்ளே போனால் அக்ரஹாரத்தின் முடிவில் சிவ ஆலயம்.
சோழ நாட்டுப் பாணியில் கருவறையில் விமானம் பெரிதாக உள்ள மாதிரிக் கட்டப்பட்ட கோயில். மிகப் பழைமை வாய்ந்த கோவில். நான் திருமணம் ஆன புதிதில் கோவிலுக்குப் போனால் குருக்கள் மாமாவைத் தவிர யாருமே இருக்க மாட்டார்கள். அவர் கோவில் திறக்கும் சமயம் கேட்டுக் கொண்டு போய் விட்டு வருவோம். ஸ்வாமிக்கு விளக்கேற்றி சாதம் நைவேத்தியம் செய்தாலே பெரிது. சுற்றுச் சுவர் எல்லாம் இடிந்து ஸ்வாமி சன்னதிக்கு வடக்கே அம்மன் சன்னதிக்குப் போகும் பாதை எல்லாம் புதர் மண்டிக் கிடக்கும். திரு பரணீதரன் அவர்கள் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன் திருப்பணி தொடங்கப்பட்டு பாதியில் நின்று விட்டதாக ஆனந்தவிகடனில் எழுதி இருக்கிறார். அதற்குப் பல வருடங்களுக்குப் பிறகு 97 ஏப்ரலில் கும்பாபிஷேஹம் நடைபெற்றது. காரணகர்த்தாக்கள் கல்கி திரு வைத்தியநாதனும், அவர் தம்பி திரு கிருஷ்ணமூர்த்தியும் ஆவார்கள். இருவருக்கும் பூர்வீகம் இந்த ஊர்தான். ஆனால் அவர்கள் பல வருடங்களுக்கு முன்னே சென்னை சென்று பின் திரு கிருஷ்ணமூர்த்தி டெல்லியும் சென்று "மாருதி உத்யோக்" பொறுப்பையும் ஏற்றதும், பின் Steel Authority பொறுப்பும் சேர்ந்து கொள்ள ஊரைப் பற்றி மறந்தே போனார்.
திடீரென இந்த ஊர் ஆஞ்சனேயர் கனவில் வந்து கோவில் திருப்பணியைப் பற்றி நினைவு படுத்தினதாய்ச் சொல்கிறார்கள். சிலர் ஊர்க்காரர் ஒருத்தருக்கு ஆஞ்சனேயர் வந்ததாயும் சொல்கிறார்கள். எப்படியோ கோவிலுக்கு வந்தது புது வாழ்வு. பரம்பரை தர்மகர்த்தாக்களான இவர்கள் குடும்பம் பொறுப்பை ஏற்றதும் ஐயன் புதுப் பொலிவினையும், அன்னை அலங்காரத்தையும் பெற்றனர்.
தேவாரப்பாடல் பெற்ற தலம் இது.அப்பர் தன் பதிகங்களிலே இந்தத் தலத்தைக் "கருவிலிக் கொட்டிட்டை" என்றே அழைக்கிறார். திரிபுரம் எரித்த எம்பெருமான் ஆடிய பல்வேறு வகை நடனங்களிலே "கொட்டிட்டை" ஒருவகை என்பதாகவும், அதனையே ஈசன் இங்கு தாண்டவமாக ஆடினார் என்பதும் செவிவழிச் செய்தி. கோயிலின் பெயர் "கொட்டிட்டை" என்பது. அப்பர் தன் பாடலிலே,
"உய்யுமாறிது கேண்மினுலகத்தீர்
பைகொள் பரம்பரையான் படையார் மழுக்
கையினானுரை கின்ற கருவிலிக்
கொய்கொள் பூம்பொழிற் கொட்ட்டிட்டை சேர்மினே!" என்றும்,
"நில்லா வாழ்வு நிலைபெறுமென்றெண்ணிப்
பொல்லாவாறு செயப் புரியாது நீர்
கல்லாரும் மதிள் சூழ்தண் கருவிலிக்
கொலேறூர்பவன் கொட்டிட்டை சேர்மினே! " என்றும் இத்தலத்தைச் சிறப்பித்துப் பாடி உள்ளார். இத்தலத்தின் வரலாறு கீழ்க்கண்டவாறு சொல்லப்படுகிறது!
சற்குணன் என்ற சோழ அரசன் மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்து இத்தலத்து ஈசனைத் துதித்து மோட்சம் பெற்றான். "கருவிலி" என்ற பெயரே "இனி ஒரு தாயின் கருவிலே உதிக்க வேண்டாம்," என்னும் மோட்சத்தைக் கொடுக்கும்படியான நிலையைக் குறிக்கும். தாட்சாயணியை இழந்த ஈசன் கடைசியாக இங்கே வந்து அமர்ந்ததாகவும், அம்பிகை அருகிலுள்ள அம்பாச்சிபுரம் என்னும் ஊரில் அழகே உருவாகத் தோன்றியதாகவும், ஈசனோடு இணைய வேண்டி இங்கே வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அன்னை வந்த ஆனந்தக்களிப்பில் ஈசன் கொடு கொட்டி என்னும் ஆட்டத்தை இங்கே நிகழ்த்தியதாகவும் அதனால் இந்த ஊர் "கொட்டிட்டைக் கருவிலி" என அழைக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். இந்த ஊர்க் கோயிலுக்குச் சொந்தமான நடராஜர் இப்போது எந்த வெளிநாட்டில் குடியிருக்கார் என்பது தெரியவில்லை.
இந்தக் கோவில் சற்குணேஸ்வரரும், சர்வாங்க சுந்தரியையும் தரிசித்தால் கருவிலே உதிக்காதிருக்கும் அந்தப் பேறு கிடைக்கும் என்கின்றனர் . லிங்கம் மிகப் பெரிய லிங்கம். கோவில் மிகப் பழைய கோவில். ஆயிரம் வருடங்களுக்கு மேல் இருக்கும். மிகப் பெரிய அம்பாள். பார்த்தால் நிச்சயம் திகைப்பாக இருக்கும். அப்படி அம்மன் உங்கள் எதிரில் நின்று பேசுவாள்,. நாம் கூப்பிட்டால் "என்ன, இதோ வந்துட்டேன்," என்பது போன்ற சிரித்த முகத்துடன் நிற்பதைப் பார்த்தால் இவள் சர்வாங்க சுந்தரி என்பதற்கு வேறு அடையாளமே வேண்டாம் என்று தோன்றும். அண்ணலின் கவனத்தைத் தன் பக்கம் இழுப்பதற்கு அன்னை உலகத்து அழகை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு வந்தாளாம் இங்கே, பக்கத்தில் ஓர் ஊரில் சில காலம் இருந்த அம்பிகை பின் இங்கு வந்து சர்வாங்க சுந்தரியாக இறைவனின் முன் நின்றாளாம். இவளைத் தரிசித்த இளம்பெண்களின் கல்யாணம் உடனே ஆகிவிடுகிறது என்றும், குழந்தை இல்லாதவர்க்குக் குழந்தை பிறக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
கோயிலின் எதிரே யமதீர்த்தம். நன்றாகச் செப்பனிடப்பட்டு வட இந்தியப் பாணியில் "கங்கையைச் சடையில் கொண்ட ஈசனின்" சிற்பம் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. நான் எடுத்த படம் கிடைக்கவில்லை. வேறே படத்தைப் போடலாம் என்றால் ப்ளாகர் அனுமதிக்கலை! பாதுகாப்புக் குறைவு என்று படத்தை நீக்கச் சொல்லி விட்டது. தற்போது இந்தக் கோயிலுக்கு விஜயம் செய்த ஶ்ரீவித்யா உபாசகர் ஒருவர் இது அன்னையின் அருளை வேண்டி வட்டவடிவமாக தாந்திரிக முறைப்படி ஆதியில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார். பார்க்க சுட்டி!
கருவிலி
கோவிலில் முன்னர் ராஜகோபுரம் கிடையாது. உள்ளே நுழைந்ததுமே ராஜகோபுர அமைப்புக்கு முன்னேயே நந்தி எம்பெருமான் வீற்றிருக்கிறார். தற்சமயம் ராஜகோபுரம் அமைக்கப் பட்டுக்கும்பாபிஷேஹமும் 2008 ஆம் வருடம் ஆகிவிட்டது . "கொடு கொட்டி"த் தாளம் போட்டு ஆடும் நடராஜர் சிலை பல வருடங்களுக்கு முன்னாலேயே களவாடப்பட்டு இப்போது வெளிநாட்டில் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னால் தான் புதிய நடராஜர் சிலை ஸ்வாமி சன்னதியிலேயே பிரதிஷ்டை செய்து இருக்கிறார்கள். முன்னால் இருந்த சிலை அம்மன் சன்னதியில் இருந்தது என்று என் கணவர் சொல்லித் தெரிந்து கொண்டேன். ஸ்வாமி சன்னதி தூய்மையுடன் இருக்கிறது. ஆடிக் களைப்படைந்த ஈசன் "சிவனே" என்று உட்கார்ந்து கொண்டு விட்டதாலோ என்னவோ தெரியவில்லை. மனதிலும் இனம் புரியாத அமைதி. சான்னித்தியம் பரிபூர்ணம். நன்றாய் உணர முடியும்.
வடக்கே தனியாய் அம்மன் சன்னதி. அம்மனைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். குறைந்தது 51/2 அடி உயரத்தில் இருக்கும் அம்மன் உலகத்து அழகை எல்லாம் உள்ளடக்கி நிற்கிறாள்.
"உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்குமதோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழுத்துணையே!" என அம்பாள் எல்லாம் சிவப்பாக மலர்மாலை கூடச் சிவப்புச் செம்பருத்தி மாலையுடன், சிவப்புப் புடவை, சிவப்பு மூக்குத்தியுடன் நாங்கள் சென்றபோது காட்சி அளித்தாள்.
கோவிலில் நவக்ரஹத்திற்குத் தனிச் சன்னதி இல்லை. யாருக்கும் காரணம் தெரியவில்லை. நவகிரஹம் கோயில்களில் அமைக்கப்பட்டு இருந்தால் அவை பழமையான கோயில் இல்லை எனவும் ஆரம்பத்தில் கோயில் வழிபாடுகளில் நவகிரஹங்களுக்கான வழிபாடு இல்லை என்றும் இந்த நவகிரஹ சந்நிதி கோயில்களில் அதுவும் சிவன் கோயில்களில் அமைக்கப்பட்டிருந்தால் அவை ஆயிரம் வருஷத்துப் பழைய கோயிலாக இருக்காது என்றும் சொல்கின்றனர். சப்தமாதர், ஜேஷ்டா தேவி போன்றோரே பழைய கோயில்களில் இடம் பெற்றிருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆகவே மிகப் பழைய இந்தக் கோயில் சோழ மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்ததை இங்குள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.முதலாம் ராஜேந்திர சோழன் காலத்துக் கல்வெட்டுக்கள் நிறைய இருக்கின்றன. யாராவது ஆராய்ச்சி செய்தால் கண்டு பிடிக்கலாம். ஆனால் உண்மையில் இந்தக் கோவிலைக் கட்டியவர் யார் என ஆராய்ச்சி நடக்கவில்லை. தருமபுர ஆதீனத்தின் நூல்களில் இங்கே இந்திரன் உள்ளிட்ட ருத்ர கணங்கள் வழிபட்டு வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. கோயிலின் பல ஏக்கர் விஸ்தீரண நிலங்களில் தற்சமயம் மிகுந்த முயற்சிக்குப் பின் பாமாயில் சாகுபடி நடைபெற்று வருகிறது. காஞ்சி பரமாச்சார்யாள் இந்த ஊருக்கு வருகை தந்த சமயம் இங்கே அம்மன் சன்னதியில் கேட்பாரற்றுக் கிடந்த ஐம்பொன் மேருவைக் கண்டுபிடித்துக் காஞ்சியில் காமாட்சி அம்மன் சன்னதியில் பத்திரப்படுத்தி உள்ளதாகச் சொல்கிறார்கள். பிரஹாரங்களில் உள்ள சிற்பங்களைக் கண்டால் அந்தக் காலத்தில் இருந்த உன்னதமான நிலைக்குச் சான்று. சில சிற்பங்கள் கை உடைந்தும் காட்சி அளிக்கின்றன. எல்லாம் செப்பனிடுகிறார்கள்.
கோஷ்டத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி! அர்த்தநாரீசுவரும் அழகாக இருப்பார். அவர் படம் கிடைக்கவில்லை! :(
இனி சென்ற வெள்ளியன்று 30--6--2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேஹத்தின் ஓரிரு காட்சிகள்!
யாகசாலை!
கருவிலி அம்மனை போன பதிவில் தரிசித்தேன்.. கோவில் செய்திகள் அருமை. அதிலும், அபிராமி அந்தாதி போன்று, "உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம்," பாடல் நல்லா இருக்கு.
ReplyDeleteநெ.த. அது அபிராமி அந்தாதியே தான். நாங்கள் போன அந்தச் சமயம் தேவியின் திருக்கோலத்தைக் கண்டதும் மனதில் தோன்றியது! இது ஓர் பழைய பதிவின் மீள் பதிவு சில இடங்களில்! :))) அதைக் குறிப்பிடவில்லை! மன்னிக்கவும்!
Delete"மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
Deleteஅணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.-
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே"
இது மற்றும்,
"ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை," என்ற இரண்டுபாடல்தான் எனக்குத் தெரியும்.
நான் 'சொல்லடி அபிராமி' பாடல் கேட்டு, அபிராமி அந்தாதிக்கு இதுதான் முதல் பாடல் என்று நினைத்திருந்தேன். அதே சந்தத்தில் வந்ததால், 'அபிராமி அந்தாதி'போல் இருக்கிறது என்று எழுதியிருந்தேன். இப்போ கூகிளாண்டவர், நீங்கள் எழுதியுள்ளதுதான் அபிராமி அந்தாதியில் முதல் பாடல் என்று காண்பித்துக்கொடுத்தார்.
ஹிஹிஹி, அபிராமி அந்தாதி 100 பாடல்களும் பொருளோடு பலமுறை படிச்சிருக்கேன். சௌந்தரிய லஹரியோடு ஒப்பிட்டு எழுதவும் ஆரம்பிச்சேன். தொடர முடியலை! பல்வேறு காரணங்கள்! :(
Deleteகருவிலி பற்றிய வரலாறு தந்தமைக்கு நன்றி கிராமங்களின் பழைய அழகு எல்லா ஊர்களிலுமே அழிந்து வருகிறது.
ReplyDeleteவிஞ்ஞான வளர்ச்சியும், மனிதன் பகட்டு வாழ்க்கைக்கு அடிமையாகி விட்டதுமே காரணம் எனக்கு கிராமத்து வாழ்க்கை மீதே நாட்டம் நகர வாழ்க்கை நரக வாழ்க்கையே...
எனது குழந்தைகளுக்கு திருமணம் முடிந்தவுடன் நான் கிராமத்துக்கு போய் விடலாம் என்றே திட்டம்.
பார்ப்போம் நாளை நடப்பதை யாரறிவார் ?
ஊர் அழகு என்னமோ கெட்டுப் போகலை! இன்னமும் பழமை மாறவில்லை! நாங்களும் முதல்லே கிராமத்துக்குப் போகத் தான் நினைச்சோம். அப்புறமாக் குழந்தைகளின் சௌகரியத்தை ஒட்டியும் பல்வேறு இடங்களுக்கும், ஊர்களுக்கும் போக வசதி என்பதாலும் ஶ்ரீரங்கத்தைத் தேர்ந்தெடுத்தோம்! இதுக்கே நிறையப் பேர் கோவிச்சுக்கறாங்க! இங்கே என்ன இருக்குனு போய் உட்கார்ந்திருக்கேன்னு கேட்பவர் உண்டு!
Deleteஇந்தப்பதிவு நாங்கள் இந்தக் கோவிலுக்குப் போய் வந்ததை நினவூட்டுகிறது உண்மையிலேயே அவள் சர்வாங்க சுந்தரிதான் நானும் என்பதிவு ஒன்றில் இக்கோவில் பற்றி எழுதி இருக்கிறேன்
ReplyDeleteஆமாம், சர்வாங்க சுந்தரி தான்! அம்மனைப் பார்க்கையிலேயே பிரமிப்பு வரும்.
Deleteஅருமை... தரிசனத்திற்கு நன்றி...
ReplyDeleteநன்றி டிடி.
Deleteபதிவு அருமை.
ReplyDeleteகருவிலி தலவரலாறு, கும்பாபிஷேகம் காட்சிகள் எல்லாம் அருமை.
நன்றி.
கும்பாபிஷேக தரிசனத்துக்கு நன்றி.
ReplyDeleteநன்றி ஶ்ரீராம்.
Deleteசிறிய இடைவெளிக்குப் பிறகு இனி தொடர்ந்து வருவேன். இடைவெளி விட்டதாலோ என்னவோ தெரியவில்லை, உங்கள் எழுத்தில் நேரேட் பண்ணுகிற விதத்தில் ஒரு நேர்த்தியான ஒரு மாற்றத்தை உணர்கிறேன். வாழ்த்துக்கள்.
ReplyDeleteகும்பகோணத்துப் பக்கத்து ஸ்தலங்களுக்குச் சென்ற காலத்து கருவிலி கோயிலுக்குச் சென்ற மாதிரியும் செல்லாத மாதிரியும் நினைவு மங்கி இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
வாங்க ஜீவி சார், வருகைக்கு நன்றி. கருவிலி கோயிலுக்குப் போயிருக்க மாட்டீங்களோனு நினைக்கிறேன். ஏன்னா நீங்க அப்படி எல்லாம் மறக்கிறவர் இல்லையே! :))))
Deleteமத்தபடி நான் வழக்கம் போல் தான் எழுதுகிறேன். ஆனாலும் உங்களுக்கு மாற்றங்கள் தெரிகிறாப்போல் ஶ்ரீராமும் என்னுடைய பின்னூட்டங்களிலும் மாற்றங்கள் இருப்பதாகச் சொன்னார்! :)))) எனக்குப் புரியலை! :)))
பல்வேறு காரணங்களால் எனக்கும் இப்போதெல்லாம் பதிவுகள் அடிக்கடி போட முடிவதில்லை. முன்னெல்லாம் நீங்க சொல்வீங்க, நான் தினம் ஓர் பதிவு போட்டதைக் குறித்து! இப்போல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடிவதில்லை! :)
படங்களும் தகவல்களும் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்!
Deleteகேள்விப்பட்டேன்.
ReplyDeleteவிவரம் நிறைந்த உங்கள் பதிவு நேரில் காண முடியாதவர்களுக்கு நிறைவைத் தருகிறது.
அம்மன் அழகு!!! படங்களும் அழகு! தகவல்களும்...அறியாத ஊரைப் பற்றித் தெரிந்துகொண்டாயிற்று...
ReplyDelete