எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, July 24, 2017

தமிழ்நாட்டின் தேசிய ஒளிபரப்புத் தொடர்! "பிக் பாஸ்!"

தமிழ்நாடு முழுவதும் "பிக் பாஸ்" அலை! எங்கே போனாலும் யார் என்ன பதிவு போட்டாலும் இதைக் குறித்துத் தான் எழுதுகின்றனர். நம் மக்களுக்கு வேறே வேலையே இல்லையோ என எண்ணத் தோன்றினாலும் இதை விட்டால் மக்கள் செய்வது போராட்டம் தான். எதுக்கு எடுத்தாலும் போராட்டம் தான்! கதிராமங்கலத்திலும் சரி, நெடுவாசலிலும் சரி பெட்ரோல் கிணறுகளைத் தோண்ட ஆரம்பித்து இருபது வருடங்களுக்கு மேல் ஆகிறது. அப்போது இதற்கெல்லாம் அனுமதி கொடுத்த கட்சிகள் இன்று எதிர்க்கட்சிகளாக இருப்பதால் எதிர்க்கின்றனர். மக்கள் மனதை மூளைச் சலவை செய்து பொய்யான தகவல்களைப் பரப்பிப் பயமுறுத்துகின்றனர். ஆனால் இது புரியாமல் இளம்  மாணவர்களும் சேர்ந்து கொள்வது தான் கவலை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. அதோடு என்னமோ "கார்ப்பொரேட்" கம்பெனிகளே இந்தியாவில் கடந்த மூன்றாண்டுகளில் தான் கால் ஊன்றிய மாதிரி மத்திய அரசு கார்ப்பொரேட் கம்பெனிகளுக்கு உதவி செய்வதாகச் சொல்கின்றனர்.

ஒரு காலத்தில் இந்தியாவில்  கால்கேட் பாமாலிவ், ஹிந்துஸ்தான் லீவர், ப்ராக்டர் அன்ட் கேம்பிள், ப்ரூக் பாண்ட், லிப்டன், நெஸ்லே, துணி வகைகளில் முக்கியமாய் விமல். விமல் என்னும் ப்ரான்டை ஆரம்பித்த ரிலயன்ஸ் குழுமம் இந்திரா காந்தியின் ஆதரவோடு ஆரம்பிக்கப்பட்டதை அறியாதார் இருப்பாங்களா என்ன? விமல் தலை எடுத்ததுமே, அர்விந்த், கடாவ், பாம்பே டையிங், காலிகோ, கார்டன், மஃபட்லால் எல்லாம் காணாமல் போய்விட்டன! அதிலும் என்னைப் போல் அர்விந்திலும், கடாவிலும் வாயில் புடைவைகள் கட்டியவர் மீண்டும் அந்தத் தரத்தில் புடைவைகளைப் பார்க்க முடிவதில்லை என்பது வருத்தமான விஷயம்!  ஆனால் இதை எல்லாம் யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. இப்போதைய மத்திய அரசு தான் அம்பானிக்கும், அதானிக்கும் ஆதரவு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் என்ன சுதந்திரம் வந்ததிலிருந்து எல்லாப் பொருட்களும் குடிசைத் தொழிலிலா உற்பத்தி ஆகி வந்தன? துணிவகைகள் கைத்தறி நெசவிலும், விசைத்தறி நெசவிலும் மட்டுமா உற்பத்தி ஆகி வந்தன? இல்லையே! அவற்றை எல்லாம் மறந்துவிட்டு இப்போது மட்டும் ஏன் இப்படிக் கூவ வேண்டும்? இப்போத் தான் பாபா ராம்தேவ் அவர்கள் மூலம் இந்தியத் தயாரிப்புப் பொருட்கள் ஓரளவுக்கு அறிமுகம் ஆகி வருகின்றன. அதோடு மட்டுமா?

படிப்பில் கூட அரசியல் புகுத்தப் படுகிறது. "நீட்" தேர்வு முறையை இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஏற்கும்போது இங்கே மட்டும் அதற்கு முழு எதிர்ப்பு. மாநில அரசுப்பாடத்திட்டத்தில் படித்த இரு மாணவிகள் இந்த "நீட்" தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஒருவர் 147 மதிப்பெண்களும் இன்னொருவர் 150 மதிப்பெண்களும் பெற்றிருக்கின்றனர். அவர்களால் உழைத்துத் தரத்தை உயர்த்திக் கொண்டு தேர்வை எதிர்நோக்கும் மனோபலம் இருக்கும்போது மற்றவர்களையும் அப்படித் தயார் செய்ய வேண்டும். தேர்வே கூடாது என்பதா?   மாணவர்களின் படிப்பின் தரத்தைக் குறித்து யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கிராமப்புற மாணவர்களால் எதிர்கொள்ள இயலாது என்றும் அரசுப் பள்ளி மாணவர்களாலும் இந்தத் தேர்வை எதிர்கொள்ள இயலாது என்றும் காரணங்கள் சொல்லப்படுகின்றன. இவை வலுவான காரணங்களாகத் தெரியவில்லை. படிப்பின் தரம் அப்படி இருக்கையில் தரத்தை உயர்த்துவதைத் தான் முதலில் கடமையாகக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்வு பெற்றதாக அறிவித்து வருகின்றனர். ஒன்பதாம் வகுப்பில் இருந்து தான் மாணவர்கள் உண்மையான தேர்வையே சந்திக்கிறார்கள். இந்த முறையே தவறு.

எட்டு வகுப்பு வரை படிப்பில் அலக்ஷியமாக இருக்கும் மாணவர்கள் திடீரென ஒன்பதாம் வகுப்பில் பாடங்களைப் புரிந்து கொண்டு எப்படிப் படிக்க முடியும்? அதிலும் கிராமப்புற மாணவர்கள்! தரமான ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆசிரியர்கள் முதலில் பாடத்தைப் புரிந்து கொண்டு சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள் கிராமப்புறங்களுக்குச் செல்வதில் விருப்பம் காட்டுவதில்லை. ஆங்காங்கே ஓரிரு ஆசிரியர்கள் சேவை மனப்பான்மையில் சொல்லிக் கொடுக்கலாம். ஆனால் அது போதாது. மொத்த சமூகமும், மொத்தமான மக்களும் மனம் மாற வேண்டும். இந்த "நீட்" தேர்வை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றத் தீர்ப்பு இருக்கையிலே எதிர்க்கட்சிகள் மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றன.

நேற்றைய செய்தியில் மத்திய அரசு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு இரண்டு வகுப்புக்களிலும் பொதுத் தேர்வை அறிமுகம் செய்யும் முறையைக் கொண்டு வர யோசிப்பதாகச் சொன்னார்கள்.  இது நல்ல முறை தான். மார்ச் மாதம் நடக்கும் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக மீண்டும் மேமாதம் இன்னொரு தேர்வு நடத்தப்படும் என்றும் சொன்னார்கள். அந்த இரு மாதங்களிலாவது மாணவர்கள் படித்துத் தேர்வு எழுதத் தேவையான தகுதியை மேம்படுத்திக் கொள்ளலாம். எட்டாம் வகுப்பிலும் பொதுத் தேர்வு அவசியம். இது புதிது அல்ல. ஏற்கெனவே ஈஎஸ் எல் சி என்னும் பெயரில் இருந்து வந்ததே! ஒன்பதாம் வகுப்பிலிருந்து பாடங்கள் கடினமாக இருப்பதால் எட்டாம் வகுப்புத் தேர்ச்சி என்பது மிக முக்கியமான ஒன்று. முன்னெல்லாம் எஸ் எஸ் எல் சி. என்னும் பள்ளி இறுதித் தேர்வுக்கும் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் "செலக்‌ஷன்" என்னும் தேர்வு ஒன்று நடத்தி மாணாக்கர்களைப் பொதுத் தேர்வு எழுதத் தேர்ந்தெடுப்பார்கள். இது அறுபதுகளின் ஆரம்பம் வரை இருந்தது. பின்னர் 62-63 ஆம் வருடம் முதல் எடுக்கப்பட்டு விட்டது.

இந்த செலக்‌ஷனில் தேர்ச்சி பெறாதவர்கள் எஸ் எஸ் எல்சி பரிக்ஷையை மீண்டும் எழுதும்போது பள்ளிமூலம் எழுத முடியாது என நினைக்கிறேன். மறுபடி செப்டெம்பர் மாதம் பொதுத் தேர்வு வைப்பார்கள். அப்போது மீண்டும் ஜூன், ஜூலையில் தனியாக செலக்‌ஷன் தேர்வு கொடுத்துத் தேர்ச்சி பெற்றால் தான் எழுதவே முடியும். அப்போதெல்லாம் தமிழில், அறிவியல், சமூகவியல் பாடங்கள் ஆகியவற்றில் இப்போதைப் போல் யாரும் நூற்றுக்கு நூறு சதவீதம் எடுத்ததே இல்லை. இப்போது எதை வைத்து மதிப்பெண்கள் கொடுக்கிறார்கள் என்பதே புரியவில்லை! ஆனால் தேர்ச்சி விகிதம் பார்த்தால் மயக்கமே வருகிறது. இவர்களில் எத்தனை பேர் பின்னால் நல்ல தரமான உயர்கல்வி கற்றுக் கொள்கிறார்கள்! எத்தனை பேரால் கற்க முடியாமல் போனது என்பதெல்லாம் தெரிவதில்லை! :( உதாரணமாக ஒவ்வொரு வருஷமும்  மாநிலத்தில் முதல் மாணவி/மாணவனாகத் தேர்ச்சி பெறுபவர்கள் பேட்டியின் போது தங்கள் கனவைச் சொல்வார்கள். பின்னால் அவர்கள் கனவு நிறைவேறியதா? எத்தனை முதல் மாணவிகள்/மாணவர்கள் தாங்கள் கூறி இருந்தபடி படித்தார்கள்? இதெல்லாம் கேள்விக்குறியே!

ஹிஹிஹி, ஆரம்பிச்சது என்னமோ பிக்பாஸைப் பத்தி! கடைசியில் எங்கேயோ போயிட்டேன்! :))))) வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரேன்! அப்புறமா!


31 comments:

 1. அலசல் விபரங்கள் நன்று
  எல்லாம் சரிதான் நான் கேட்க வந்ததை முடிவில் நீங்களே சொல்லி தப்பி விட்டீர்கள்...

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, உண்மையில் பிக் பாஸ் பத்தித் தான் சொல்ல ஆரம்பித்தேன். ஆனால் அதிலே என்ன நடக்கிறது என்பதே சரியாப் புரியலை!

   Delete
 2. தலைப்புகூட டெக்னிக்கல்தானோ.... இதெல்லாம் எனக்கு தெரியவில்லையே...

  ReplyDelete
  Replies
  1. பொதுவா மத்தவங்களைக் கவரும் தலைப்பு வைக்கும் வழக்கம் உண்டு தான்! ஆனால் இன்னிக்கு பிக் பாஸ் பத்தித் தான் சொல்ல நினைச்சேன். பின்னால் பொருளே வழக்கம்போல் மாறி விட்டது! :)

   Delete
 3. "வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரேன்! அப்புறமா!" - வாங்க. ஏதோ பிக் பாஸைப்பத்தி எழுதியிருப்பீங்க. நானும்தான் பார்க்கிறேனே. அதன் நல்லது கெட்டது எழுதலாம்னு பார்த்தா, 'சொஜ்ஜி அப்பம்' பண்ணறேன்னு அடுக்களைல புகுந்து வெளில வரும்போது திதிப்புச் சீடை செய்துகொண்டுவந்ததுபோல், இடுகையை ஏதோ தலைப்பு வைத்து எங்கயோ சஞ்சாரித்து எங்கயோ கொண்டுபோய் நிப்பாட்டிட்டீங்க.

  இந்த %லாம் வெறும் மன சந்தோஷத்துக்காகத்தான். அந்தக் காலத்திலும் சரி, இப்போதும் சரி, நல்ல ப்ரைட் மாணவ/மாணவிகள்தான் நல்ல வேலைக்கும் நல்ல எதிர்காலத்தை நோக்கியும் செல்கிறார்கள். சும்மா கட்-ஆஃப்லயே ஏகப்பட்டபேர் இருப்பதில் என்ன பிரயோசனம்? (என் பெரியப்பா, பி.ஏ. கணக்குப் பரீட்சை பேப்பரைத் திருத்தும்போது, முதல் மதிப்பெண்ணாக 63 1/4 மார்க் பார்த்த ஞாபகம் - 77ல். போற போக்கைப் பார்த்தால், +2வில், விரைவில் 200க்கு 240 மதிப்பெண்கள்லாம் சர்வ சாதாரணமாகிவிடும்-ஏற்கனவே டீச்சர்களுக்கு கூட்டல் கழித்தல் தெரியாது, அப்புறம் இந்த மார்க் வருவதற்குக் கேட்பானேன்)

  ReplyDelete
  Replies
  1. நீங்க வேறே இப்போல்லாம் அதிரசம் பண்ணினாத் தான் வெல்லச் சீடை மாதிரி ஆயிடுது! நம்ம ரங்க்ஸ் வெல்லத்தைக் குறை, குறைனு சொல்லிட்டே இருப்பார். குறைச்சதிலே சொஜ்ஜி அப்பத்திலே வெல்லம் பத்தலை! :) 77 ஆம் ஆண்டு நீங்க முதல் மதிப்பெண் என்பதைச் சொல்றீங்க! கீழே பாருங்க ஜிஎம்பி சார் எல்லாப் பாடங்களிலும் 100/100 எடுத்ததாகச் சொல்றார். அதுவும் அறுபது வருடங்கள் முன்னாடி! நான் படிக்கையிலும் கணக்கில் மட்டுமே 100/100 எடுத்துப் பார்த்திருக்கேன்.

   Delete
  2. நான் அவ்வளவு மார்க் எடுக்கலை. எங்க பெரியப்பா 'காலேஜ் ஆஃப் எஜுகேஷன்ல' மேத்ஸ் ப்ரொஃபசர். அவருடைய ஸ்டூடண்ட்ஸ் பேப்பரை வீட்டில் திருத்தும்போது நான் எட்டிப்பார்த்தது. அப்போ நான் 8-9வது.

   Delete
  3. என் அப்பாவுக்கும் எஸ் எஸ் எல்.சி. பரிக்ஷை விடைத்தாள்கள் திருத்த வரும். கிட்டேவே உட்கார்ந்து பார்ப்போம்.

   Delete
 4. எல்லாவற்றிலும் திசை திருப்பல்தான் நடக்கிறது. தாங்கள் கையெழுத்திட்ட திட்டத்தை (ஆ. ராசா) தாங்களே எதிர்க்கிறார்கள் தி மு க காரர்கள். அப்போதைய அமைச்சர் சிதம்பரம் - காங்கிரஸ். தொகுதி எம் எல் ஏ கம்யூனிஸ்ட்காரர். இப்போ இவர்கள் எல்லாம் கூட்டமாகக்கூடிதான் எதிர்க்கிறார்கள். எதுவாக இருந்தாலும் எதிர்க்கவேண்டும். இல்லாவிட்டால் பெரும்பான்மையை அடிபட்டுப் போவோம் என்கிற பயம். நியாயத்தை யார் பேசுகிறார்கள்! ஆமாம்... பிக் பாஸ் என்றால் என்ன?

  ReplyDelete
  Replies
  1. பிக் பாஸ் என்றால் மோடி. இது கூடத் தெரியவில்லையா ஸ்ரீ எங்கள் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பில் நானே மிக அதிகம் மதிப்பெண் பெற்றவை 1953 -54 கணக்கு தவிர மீதி பாடங்களில் நூறு மார்க் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று நூறு மார்க் என்றால் அதைவிட நல்லப்படி எழுத முடியாது என்று தானே அர்த்தம் பெர்ஃபெக்ட்.
   இப்போதெல்லாம் ஒவ்வொரு ட்ரைமெஸ்டரில் படித்தது அடுத்த ட்ரைமெஸ்டரில் வராதாமே

   Delete
  2. ஆமாம், ஶ்ரீராம், கதிராமங்கலம் திட்டமும் சரி, நெடுவாசல் திட்டமும் சரி, கடந்த இருபதாண்டுகளில் கொண்டுவரப் பட்டவையே! திடீரென இப்போது பாஜக அரசு தான் அந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தது போல் புரட்சி செய்கிறார்கள். எதிர்ப்பில்லாத திட்டங்கள் எனில் அது எங்களோட திட்டம், பாஜக அரசு சுவீகரித்துக் கொண்டது என்கிறார்கள். இங்கே இவர்களே எதிர்ப்பை உருவாக்கி மக்களைக் குழப்புகின்றனர்.

   Delete
  3. உங்கள் கருத்துக்கு நன்றி ஜிஎம்பி ஐயா! அந்தக் காலத்திலேயே நீங்க 100/100 என்றால் ஆச்சரியம் தான். 53-54 வருஷங்களில் எனக்கு மூன்று வயதுக்குள் தான்! :)

   Delete
  4. ஜி.எம்.பி. சார்... கணக்கு தவிர நூத்துக்கு நூறு என்பது இப்போதான் கடந்த 20 வருடங்களாக கேள்விப்படறேன். உங்கள் திறனைப் பாராட்டுவதைவிட, வியக்கிறேன் என்பதுதான் சரி.

   "53-54 வருஷங்களில் எனக்கு மூன்று வயதுக்குள் தான்! :)" - அப்போதான், எந்த வீட்டில் இன்னும் பத்து வருடங்கள் கழித்துப் பிறக்க ஆசை என்று 'ஆவியுலக பெரியவர்' என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

   Delete
  5. ஹாஹாஹா, உங்கள் ஆன்மாவிடம்? :))))

   Delete
 5. பிக்பாஸ்னுட்டு அங்கே இங்கே போயிருக்கீங்க்ளேனு நானும் நினைச்சேன்.. :-)

  என் அனுபவத்தில் 90% என்பதெல்லாம் என் செல் போன் சார்ஜ் ஆகும் போது பார்த்திருக்கிறேன்.. அவ்ளோ தான்.

  என் வழி தனி வழின்னு தமிழ்நாடு போயிட்டிருக்குற வரைக்கும் கெடுதலே மிஞ்சும்.

  (பின்னூட்டமெல்லாம் எங்கே போவுது?)

  ReplyDelete
 6. பிக் பாஸ் யார்? நீங்க தான். BIG ஆ இருக்கீங்க. வீட்டில் நீங்கதான் பாஸ்.

  --
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. நீங்க வேறே! நம்ம வீட்டிலே சர்வாதிகாரமாக்கும்! எனக்குப் போராட்டம் மட்டுமே தெரியும். அதுக்கெல்லாம் அசைஞ்சு கொடுக்கிற ஆள் இல்லையாக்கும்! :)

   Delete
  2. நான் "பிக்" ஆக இருக்கேனா? ஹிஹிஹி, எங்க பையர் பக்கத்திலே என்னைப் பார்த்தால் துளிப்போல இருப்பேன். அவரும் நம்ம ரங்க்ஸும் குனிஞ்சு தான் என்னைப் பார்க்கணும்! இப்போக் கொஞ்சம் குறுக்கே வளர்ந்துட்டதாலே பெரிசாத் தெரியறேனோ? அது கூட இளைச்சிருக்கிறதாச் சொல்றாங்களே! :))))

   Delete
 7. பிக் பாஸ்-ல ஆரம்பிச்சு எங்கெங்கோ போயிட்டீங்க போல! :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், பிக் பாஸ் கான்செப்டே புரியலை! அப்புறம் அதை வைச்சு என்ன எழுதறது? மனசுக்குத் தோணினதைச் சொல்லிட்டேன். :)

   Delete
 8. அதானே பார்த்தோம்....என்னடா இது கீதா சகோவுமா/அக்காவுமா பிக் பாஸை விட்டு வைக்கலை...ஆச்சரியா இருக்கேனு வந்தா உள்ளே வேற..ஹஹஹஹ்ஹ். நம்ம மாணவர் செல்லங்கள் சில முதல் லைன் மட்டும் கேள்விக்குச் சற்றுப் பொருந்தும் படி எழுதிட்டு அப்புறம் உள்ளே கதை எல்லாம் அடிச்சுட்டு கடைசி லைன் மீண்டும் கேள்விக்குப் பக்கத்துல சும்மா ஒரு லைன் எழுதிட்டு முடிக்கற மாதிரி ஹஹஹஹஹ்

  ReplyDelete
  Replies
  1. சரியாகச் சொன்னீர்கள். தென்னைமரம் பற்றி கேள்வி வரும் என்று படித்திருந்த மாணவன் மாட்டைப்பற்றிய கட்டுரை எழுதிய கதையாக இருக்கிறது. ஆனால் ஒன்று. கோடு போட்டால் ரோடு போடுறவங்க கீதாம்மா.
   --
   Jayakumar

   Delete
  2. அது என்னமோ இரண்டு கருத்துகளுக்குப் பதில் சொன்னா மூணாவதுக்கு பதில் கொடுத்தால் போக மாட்டேன்னு அடம். மறுபடி பதிவை மூடித் திறக்க வேண்டி இருக்கு. இதுவே சொன்னதைக் கேட்கிறதில்லை. நம்ம மாணவச் செல்லங்களா? நானெல்லாம் ஒழுங்காக் கட்டுரைப் பயிற்சி செய்திருக்கேனாக்கும்!

   Delete
  3. ஜேகே அண்ணா, எனக்குக் கோடே தெரியறதில்லை. இதிலே எங்கேருந்து ரோடு போடறது? :(

   Delete
 9. Big boss என்றால் நிறைய பேர் எட்டிப்பார்க்கிறார்கள் (16)! தமிழ் நாட்டின் மேனியா!

  விஸ்வநாதன்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், ஒரு கவர்ச்சிக்காக வைத்த தலைப்பு! நன்றி விஸ்வா! நான் இன்று வரை அந்த பிக் பாஸெல்லாம் பார்த்ததில்லை.

   Delete
 10. கல்வி முறை சீராக இல்லாததாலேயே நீட்டை எதிர்ப்போம் எனக் குரல் கொடுக்கின்றனர். முதலில் கல்வி முறை சீராக அமைக்கப்படவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. இப்போத் தான் மத்திய அரசு பாடத்திட்டத்தையே எங்களுக்கும் கொடுங்கனு கேட்க ஆரம்பிச்சிருக்காங்க. அப்படி மட்டும் வந்தால் உண்மையிலேயே தமிழ்நாட்டு மாணவர்கள் நல்ல முதல் தரத்துக்கு வருவாங்க!

   Delete
 11. இங்கும் தனியார் மருத்துவ கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு எதிராக போராட்டம் என தொடர்கிறது.

  கல்வி முறை :(

  ReplyDelete
  Replies
  1. வாங்க மாதேவி, ரொம்ப மாசங்கள் கழிச்சு வரீங்க! வருகைக்கு நன்றி. இங்கே தனியார் பள்ளி மாணவர்கள் "நீட்" தேர்வை எடுக்கக் கூடாதுனு போராட்டம்! ஆனால் அரசியல்வாதிகள் "நீட்" தேர்வே தமிழ்நாட்டில் தேவையில்லை என்கிறார்கள். தேர்வு இல்லாமல் சலுகைகள் மூலம் இடம் பெற்றுப் படிக்கும் மாணவர்களால் மருத்துவப் படிப்பின் தரத்தை எட்டிப் பிடிக்க முடியுமா? அவர்களால் புரிந்து கொள்ள இயலுமா? இந்தத் தேர்வையே புரிஞ்சுண்டு எழுத முடியலைங்கறவங்க எப்படி மருத்துவப் படிப்பின் பாரத்தைக் கிட்டத்தட்ட ஆறு வருஷம் சுமக்கப் போகிறார்கள்? இது அவர்களுக்கு நல்லதா?

   Delete