எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, October 30, 2019

ஒரு மழை நேரத்தில் பார்த்த படம்!

தீபாவளி தினத்தன்று மத்தியானம் 3 மணி அளவில் பொண்ணு வீட்டில் பையர் கொண்டு வந்து விட்டார். அவங்க அங்கிருந்து வீட்டுக்குக் கிளம்பும்போது குஞ்சுலு எங்க இருவர் கையையும் பிடித்துக் கொண்டு பிடித்து இழுத்தது. "கம்" "கம்" என்றும் சொன்னது. நாங்க அதோட வரலைனு தெரிஞ்சதும் முகம் ரொம்பவேச் சின்னதாகப் போய்விட்டது. அவங்களை வழி அனுப்பப் போகும்போது படி இறக்கம் தெரியாமல் காலை வைத்ததில் எனக்குக் காலில் இழுத்துக்கொண்டு வந்துவிட்டதால் நான் உள்ளே வந்து உட்கார்ந்துட்டேன். அவங்க என்னைத் தேடி இருக்காங்க! :(

அப்பு ரொம்ப பிசி. உட்கார நேரமில்லை. பள்ளியிலிருந்து வரச்சேயே ஏதேனும் ஒரு வகுப்புக்கு அவ அம்மா கொண்டு விடப் போக வேண்டி இருக்கு. அதன் பின்னர் ஆறரைக்கு அது வந்து வீட்டுப்பாடங்கள் முடிச்சுட்டுச் சாப்பிட்டுப்படிக்க வேண்டி இருக்கு. சில சமயங்கள் ஒன்பது மணி வரைக்கும் படிக்க வேண்டி இருக்கு. காலையிலும் சீக்கிரம் எழுந்து கொண்டு பள்ளிக்குத் தயார் செய்துக்கணும். ஆக எல்லோரும் ரொம்ப பிசியாக இருக்காங்க இங்கே. அங்கே மருமகள், பையரும் இப்படித் தான். மருமகளுக்கு வீட்டு வேலைகளோடு குழந்தையைப் ப்ளே ஸ்கூலில் கொண்டு விடுவதும் கூட்டி வருவதும் நடுவில் வீட்டுக்குத் தேவையான சாமான்கள் வாங்கக் கடைகள் செல்வதும் சரியாக இருக்கும். பையருக்கு அலுவலக வேலை ஒழிந்து ஆசுவாசமாக உட்கார்ந்தே நாங்க பார்க்கவில்லை. அவரிடம் முன் கூட்டி நேரம் குறித்துக்கொண்டு தான் பேச வேண்டி இருக்கும். அவ்வளவு வேலை! :( நடுவில் எங்கானும் வெளி ஊர்ப்பயணங்கள் அலுவலகம் சார்பாக!

நேற்று இங்கே பெண் ஏதானும் படம் பாருனு ஒரு ஹிந்திப் படம் போட்டுப் பார்க்கச் சொன்னாள். த்ரில்லர் படம் தான். படத்தின் பெயர் "இட்டிஃபாக்"

Theatrical Poster of Ittefaq

2017 ஆம் ஆண்டில் வந்த படம். விநோத் கன்னாவின் பிள்ளை அக்ஷய் கன்னா நடிச்ச படம். படத்தின் கதை ரொம்பவே எளிமை, ஆனால் திக் திக்! ஆரம்பத்தில் "விக்ரம் சேதி" என்னும் இந்தியப் பாரம்பர்யம் கொண்ட ஆனால் இங்கிலாந்து வாழ் ஆங்கில எழுத்தாளர். முதல் நாவல் வெளியீட்டிலேயே பெரும்புகழ் அடைந்தவர். எக்கச்சக்கமானப் பெண் ரசிகைகள். மும்பையின் பிரபலமான காவல்துறை அதிகாரி ஆன "தேவ்" (அக்ஷய் கன்னா) என்பவரின் மனைவி கூட விக்ரம் சேதியின் ரசிகை. கணவருடன் அதைப் பற்றி விவாதிப்பாள். ஆனால் அந்த விக்ரம் சேதியே இப்போது மனைவியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் காவல் துறையால் கைது செய்து அழைத்துச் செல்கையில் தப்பி ஓட, காவல் துறை துரத்திப்  பிடிக்க முயற்சிக்கையில்  காவல்துறை வாகனத்தை ஓர் இளம்பெண் வந்து தடுத்து நிறுத்தித் தன்னுடைய குடியிருப்புக்கு அழைத்துச் செல்ல அங்கே இன்னொரு கொலை. அந்த இளம்பெண்ணின் கணவன் வக்கீலான சேகர் சின் ஹா கொலைசெய்யப்பட்டுக் கிடக்கிறார். விக்ரம் தான் கொன்று விட்டதாக அந்தப் பெண் குற்றம் சாட்ட அங்கே திகைத்து நின்று கொண்டிருந்த விக்ரம் சேதியைக் காவல் துறை இரண்டாம் முறையாக இன்னொரு கொலைக்கும் குற்றம் சுமத்தி அழைத்துச் செல்கிறது.

ittefaq க்கான பட முடிவு

ஆனால் சேகர் சின் ஹாவின் மனைவிக்கு இன்னொருவருடன் தொடர்பு இருந்ததால் அவளே தன் கணவனைக் கொன்றிருக்கலாமோ என அவளும் கைது செய்யப்படுகிறாள். இருவரையும் விசாரணை செய்யும் அதிகாரியான "தேவ்" (அக்ஷய் கன்னா) கடைசியில் விக்ரமின் நாவல் ஒன்றின் மூலமாகவே உண்மையான குற்றவாளி யார் எனக் கண்டு பிடிக்கிறார். இதற்கு நடுவில் "சந்தியா" என்றொரு இளம்பெண்ணும் தற்கொலை செய்து கொள்ள அதற்கான காரணத்தைக் கண்டு பிடிக்க முயலும் காவல் துறை அதிகாரி தேவுக்கு அந்தப் பெண் சில நாட்கள் முன்னர் பலரால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட பெண் என்பதும் அவளை வைத்தே தன்னுடைய மூன்றாவது நாவலை விக்ரம் சேத்தி எழுதி இருப்பதும் அதில் சந்தியாவின் பெயரை வெளியிடவில்லை என அவளுக்கு வாக்குக் கொடுத்துவிட்டுப் பின்னர் அவள் பெயரைப் பத்திரிகைகள், ஊடகங்களுக்கு விக்ரம் சேதி சொல்லிவிட்டதாகவும் அதனால் ஏற்பட்ட அவமானம் தாங்க முடியாமல் அவள் தற்கொலை செய்து கொண்டுவிட்டதாகவும் அவள் தகப்பனார் கூறுகிறார்.இதைக் குறித்து விக்ரமிடம் விசாரித்ததில் அதைச் செய்தது தன் மனைவி எனவும் அவளுக்கும் தனக்கும் இதனால் சண்டை எனவும் சொல்கிறார். தலை சுற்றும் காவல் துறை அதிகாரி கடைசியில் உண்மையைக் கண்டு பிடித்துக் குற்றவாளியைக் கைது செய்யப் போகையில் குற்றவாளி தப்பி விடுகிறான் அதுவும் காவல் அதிகாரி தேவுக்கு விஷயத்தைத் தெளிவாக விளக்கி விட்டு!

ittefaq க்கான பட முடிவு

கடைசிவரை தொய்வில்லாமல் எடுத்திருந்தார்கள். மும்பையின் மழைக்காலம் ஆரம்பித்த மூன்று நாட்களில் கதை நடக்கிறது. மூன்றாம் நாள் முடிந்து விடுகிறது. நடிகர்களோடு மும்பையின் மழையும் சேர்ந்து நடித்துள்ளது. மழைக்காலத்தை மிக அருமையாகக் கண்ணெதிரே கொண்டு வந்துள்ளார்கள். படத்தில் பின்னணி இசை கூட சத்தமாக இல்லாமல் மென்மையாகக் காதுக்குத் தொந்திரவு கொடுக்காமல் அமைத்திருக்கிறார்கள். ஒரு காதல் காட்சியோ, டூயட்டோ, குழுவாக நடனங்களோ எதுவும் இல்லை. முழுக்க முழுக்க எளிமையான செட் அல்லது அந்த அந்த இடங்களிலேயே எடுத்திருக்கிறார்கள். எல்லாம் இயல்பாகச் செய்திருக்கிறார்கள். இதையே தமிழில் எடுத்திருந்தால் வக்கீல் சேகரின் மனைவி மாயாவாக நடிப்பவரை அவரின் காதலனோடு ஒரு டூயட்டாவது பாட வைத்திருப்பார்கள், அதுவும் வெளிநாட்டில்! கடைசியில் மும்பை விமான நிலையக் காட்சி மிக மிகநன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது. கடைசி நிமிடம் வரை திக், திக் கடைசியில் குற்றவாளி தப்புவதில் காவல் துறை அதிகாரிக்கு ஏற்படும் ஏமாற்றம் நமக்கும்.

அதிலும் இங்கேயும் இப்போது 2 நாட்களாக மழை பொழிவதால் மழையை அனுபவித்துக்கொண்டே படத்தையும் பார்த்தேன். ஒரு நல்ல படம் பார்த்த மன நிறைவு! முக்கியமாக மிகை நடிப்பு இல்லாமல் இயல்பாக வந்துவிட்டுப் போகிறார்கள். யாருமே நடிக்கவில்லை. தேவின் மனைவியாக முன்னர் "சாந்தி" ஹிந்தித் தொடரில் சாந்தியாக நடித்த மந்திரா பேடி வருகிறார். ஷாருக்கானும் அவர் மனைவியும் தயாரித்த படமாம் இது. முன்னர் ராஜேஷ் கன்னா, நந்தா நடித்து இதே போல் ஓர் படம் வந்து பார்த்திருக்கேன்.  யாஷ் சோப்ரா எடுத்திருந்தார் அந்தப் படத்தை. அதைப் போலத் தான் இதுவும் கிட்டத்தட்ட என்றாலும் படப்பிடிப்பும் கதையம்சமும் நடிகர்களின் நடிப்பும் பொருந்திப் போகிறது.

Monday, October 28, 2019

அம்பேரிக்காவில் கொண்டாடிய தீபாவளி!



உம்மாச்சி அலமாரியின் ஒரு பகுதி!


மருந்து சின்ன டப்பாவில்


மருந்து இல்லாமல் பக்ஷணங்கள். ஓரத்தில்  ஸ்வாமி நாராயணன் கோயில் இனிப்பும், சூடா எனப்படும் அவல், கடலை, கலவையும்.
நடுவில் காய்ச்சிய எண்ணெய், சீயக்காய்ப் பொட்டலம், மஞ்சள் பொடி கிண்ணங்களில்


இடது ஓரத்தில் பையரின் உடைகள். நடுவில் மேலே குஞ்சுலுவோட பட்டுப்பாவாடை, சட்டை, அடியில் மாட்டுப் பெண்ணின் சல்வார், குர்த்தா, பக்கத்தில் என்னுடைய புடைவை, கோல்ஹாப்பூர்ப் புடைவை, மெஜந்தா கலர், கிளிப்பச்சை பார்டர், ஜரிகைத் தலைப்பு, (ஜேகே அண்ணாவுக்கு என்ன கலராத் தெரியப் போறதுனு தெரியலை!) அடியில் (மாமாவுக்கு) ரங்க்ஸின் ஜீன்ஸ், ஹிஹி, இந்த வருஷம் பையர் உபயம், ஜீன்ஸ் பான்ட், ஷர்ட் ஃபுல்ஹான்ட்!

காலங்கார்த்தாலே எழுந்திருக்காதேனு வேறே 144 தடை உத்திரவு. ஏற்கெனவே இங்கே காலை ஆறுமணி, ஆறரை மணிக்குப் பார்த்தால் நடு ராத்திரி இரண்டு மணி மாதிரி இருக்கும். ஆனாலும் நாம யாரு? சும்மா விடுவோமா? நாலரைக்கு எழுந்துட்டோமுல்ல! எழுந்து அடுப்பை அலம்பித் துடைத்துக் கோலம் போட்டு, வீடு பெருக்கித் துடைத்து, எண்ணெய் காய்ச்சி, சீயக்காய், மஞ்சள் பொடி எல்லாவற்றையும் எடுத்து வைப்பதற்குள்ளாக ஐந்தரை ஆகி விட்டது. பின்னர் காஃபி போட்டுவிட்டு ரங்க்ஸை எழுப்பினேன். காஃபி குடிச்சுட்டு நான் குளிக்கப் போயிட்டேன். குளிச்சுட்டு வரவும் ஒவ்வொருத்தரா வந்தாங்க. குஞ்சுலு மட்டும் ஏழரைக்கு எழுந்து கொண்டது. பின்னர் இன்னிக்கு அமாவாசை என்பதால் நான் சமைச்சுட்டேன். சீக்கிரமாவே எல்லோருமாச் சாப்பிட்டோம்.

அதன் பின்னர் சற்று நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு ஒன்றரை மணிக்கப்புறமாக் கிளம்பிப் பொண்ணு வீட்டுக்கு வந்திருக்கோம். இங்கே அநேகமா ஒரு மாசம் இருந்துட்டுக் கார்த்திகை சமயம் அங்கே போவோம். இப்போதைக்கு அம்புட்டுத் தான் விஷயம்! 

Friday, October 25, 2019

இம்புட்டுத்தான் இந்த வருஷம் தீபாவளிக்கு! :) :(


முள்ளுத்தேங்குழல்

தீபாவளி மருந்து சாமான்கள் வறுத்து வைச்சிருக்கேன்.


இதான் இந்த வருஷத்துக்கு ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்வீட்டு. குலோப்ஜாமூன், கிட்ஸ் பாக்கெட்டில். 20 வரும்னு சொன்னாங்க! கரெக்டா 20 தான் வந்தது. அம்புட்டுத் தான்!

நாளைக்கு ஸ்வாமிநாராயணன் கோயிலில் ஏதோ வாங்கி வருவதாகப் பையர் சொல்லி இருக்கார். சொல்லியாச்சு வேண்டாம் நான் பண்ணறேன்னு. பண்ணக்கூடாதுனு அடம். தீபாவளிக்கு வீட்டில் எண்ணெய் வைக்கணும் என்பதால் இன்னிக்குக் கொஞ்சம் போல் எண்ணெய் வைத்துத் தேங்குழல் மட்டும் பிழிஞ்சேன். அப்புறாம் மாட்டுப்பொண்ணு கிட்ஸ் பாக்கெட் வாங்கிக் கொடுத்தாள். அதிலே குலோப் ஜாமூன் பண்ணியாச்சு. மருந்து சாஅமான்களை வறுத்து வைச்சிருக்கேன். அதை அரைச்சு மருந்து கிளறனும் அல்லது வெல்லம் சேர்த்துப் பொடிச்சு வைக்கணும். தீர்ந்தது தீபாவளி பக்ஷணம் பண்ணும் வேலை! :(

பீப்பாய் க்கான பட முடிவு

நம்பினால் நம்புங்க, இல்லாட்டிப் போங்க, இந்த மாதிரி பீர் பாரல் பீப்பாய்களில் தான் நான் 88 ஆம் ஆண்டு வரை பக்ஷணங்கள் பண்ணி வைச்சிருக்கேன். அதுக்கே மாமியார், மாமனார் இருவருக்கும் துக்கம் தொண்டையை அடைக்கும். கருவிலியில் இருந்தப்போ ஒவ்வொரு பக்ஷணத்துக்கும் இம்மாதிரி ஒரு டின். டின், டின்னாக பக்ஷணம் பண்ணிச் சாப்பிட்டோம். இப்போ? பக்ஷணமே பண்ணறதில்லை. அந்தக்  காலம் எல்லாம் மலை ஏறிப் போச்சு. இப்போ இந்த மாதிரியான நிலைமைக்கு வந்துட்டோமேனு அழுவாங்க! அழுவாங்கன்னா லிடரலி (literally) அழுகை வந்துடும். :)))) எங்க வீட்டிலும் அப்பா நிறையப் பண்ணச் சொல்லுவார் என்றாலும் தீபாவளி கழிந்து சுமார் ஒரு வாரம் வரை பக்ஷணங்கள் வரும். அதிலே மிக்சர் மட்டும் கொஞ்சம் கூட நாட்கள் ஓடும். லாடு வகைகள் கொஞ்சம் கூட நாட்கள் வரும். ஆனால் இங்கேயோ எல்லாமே கல்யாணச் சீர் வைக்கறாப்போல் பண்ணியாகணும். அந்த மாதிரி வரும்போது தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னாடியே எண்ணெய் வைக்க ஆரம்பிக்கணும். சாமான்கள் ஒரு மாசம் முன்னாடியே சேகரிக்கணும். இதுக்கு நாங்க முந்திய ஞாயிறிலிருந்தே எண்ணெய் வைக்கணும். அக்கம்பக்கம் அனைவரிடம் இருந்தும் உள்ள ரேஷன் கார்ட்களில் சர்க்கரையைப் பீராய்ந்து வாங்குவேன். எங்களுக்கு வேண்டாமா என்பவர்கள் உண்டே. ஆகவே 2 மாசம் முன்னாலிருந்தே தலையைப் பிய்த்துக்கொண்டு சாமான் சேகரிப்பேன். எங்க வீட்டில் எனக்கு வைச்சுக்கொடுக்கும் ஒவ்வொரு பைசாவையும் பத்திரமாகச் சேமித்து வைத்து இம்மாதிரி அதீத செலவுகளுக்குப் பணம் தேவைப்படும்போது போட்டுச் சமாளிப்பேன். பல சமயங்களிலும் என் அப்பா தீபாவளிக்கு எங்க நாலு பேருக்கும் துணி வாங்கிக்கக் கொடுக்கும் ஐநூறு ரூபாயையும் கூடப் போடும்படி இருக்கும். சந்தோஷமாப் போட்டுச் சமாளிச்சிருக்கேன். அப்போல்லாம் தீபாவளி என்றால் மனதில் எதிர்பார்ப்பும், சந்தோஷமும் இருக்கும். இத்தனை கஷ்டத்திலும் மன நிறைவோடு கொண்டாடினோம்.

ஆனால் இப்போ! எல்லாம் இருக்கு! ஆனால் ஒண்ணும் இல்லை. எல்லா நாட்களையும் போல அன்றைய நாளும் ஒரு நாள்! அவ்வளவே! ஸ்ரீரங்கம், சென்னை போன்ற ஊர்களிலாவது அக்கம்பக்கம் பழகியவர்கள், சொந்தக்காரர்கள் என வருவாங்க, போவாங்க, பக்ஷணம் வரும், போகும். இங்கே! தீபாவளி மேளாவோடு சரி! :))))))) சென்னையில் இருந்தவரைக்கும் ஓரளவுக்கு பக்ஷணங்கள் ஆவலோடு பண்ணிக் கொண்டிருந்தேன். செலவும் ஆகிக் கொண்டிருந்தது. ஆனால் ஸ்ரீரங்கத்தில் அதுவும் குறைந்து விட்டது. இருந்தாலும்  ஸ்ரீரங்கத்திலாவது ஒரு தேன்குழலும், ஒரு மிக்சரும் பண்ணிடுவேன். ஒரு கேக் மற்றும் ஏதானும் ஒரு லாடு பண்ணுவேன். இங்கே பையர் பிடிவாதமாகப் பண்ணினே என்றால் நான் சாப்பிட மாட்டேன் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விட்டார். இன்னிக்கு அவரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு சாஸ்திரத்துக்கு! சாஸ்திரத்துக்கு எனில் நிஜம்மாவே சாஸ்திரத்துக்குப் பண்ணிய பக்ஷணங்கள் தான் இவை! நாளை ஸ்வாமிநாராயணன் கோயிலிலிருந்து பக்ஷணங்கள் வந்தால் படம் எடுத்துப் போடப் பார்க்கிறேன்.

Monday, October 21, 2019

ஸ்வாமிநாராயணன் கோயிலில் தீபாவளி மேளா!

இங்கே உள்ள ஸ்வாமிநாராயணர் கோயிலில் நேற்று மாலை தீபாவளி மேளா நடந்தது. மீனாக்ஷி கோயிலிலும் நடந்தது. அது கொஞ்சம் தூரக்க இருப்பதால் இதைப்பார்க்க நேற்று மாலை போயிருந்தோம். அங்கே சாப்பாட்டுக்கடைகளும் போட்டிருந்தார்கள். கோயிலுக்கு உள்ளே போகப் பார்த்தபோது சந்நிதி மாலை வழிபாட்டுக்காக மூடி இருந்தார்கள். இனி இரவு எட்டு மணிக்குத் தான் திறப்பார்கள். ஆகவே நாங்கள் அங்கே வந்து கொண்டிருந்த மனிதர்களையும் அங்கே உள்ள கடைகளையும் பார்த்துவிட்டு எது நன்றாக இருக்கிறதோ அந்த உணவைச் சாப்பிடலாம்னு நினைச்சோம்.

மீனாக்ஷி கோயில் தீபாவளி மேளாவை 2011 ஆம் ஆண்டில் பார்த்தோம். துணிக்கடைகள், நகைக்கடைகள், பாத்திரக்கடைகள்னு பார்த்த நினைவு. துணி எல்லாம் விலை அதிகம். இங்கே அம்மாதிரிக் கடைகள் போடவில்லை. உணவுக்கடைகள் மட்டும். தோசையில் சாதா, மசாலா, பனீர் தோசைகளும், பாவ் பாஜி, பிட்சா,பேல்பூரி, மேதி பகோடா போன்றவையும் கிடைத்தன. தோசை வார்ப்பதைப் பார்த்தால் நன்றாக இருக்கும்னு தோன்றியதால் அதுக்கு டோக்கன் வாங்கினோம். நான் சாதா தோசை, அவர் மசால் தோசை, பையர் பனீர் தோசை, மருமகளும், குஞ்சுலுவும் சீஸ் பிட்சா என வாங்கிக் கொண்டோம். உட்கார்ந்து சாப்பிட இடம் இல்லை. பெஞ்சுகள் மட்டும் ஆங்காங்கே போட்டிருந்தார்கள். அதிலே நின்று கொண்டு சாப்பிடலாம். அப்புறமாப் பையரின் நண்பர் ஒருவர் எங்களுக்கு மட்டும் 2 நாற்காலிகள் ஏற்பாடு செய்து கொடுத்தார். கரும்புச் சாறும் விற்றார்கள். நான்கு டாலர்களாம்.



நுழைவாயில்


கார் பார்க்கில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்த மக்களில் ஒரு சிறு பகுதி


கோயில் கோபுரத்தின் விளக்கு அலங்காரம் மாறி மாறி வண்ணங்களைக் காட்டியது. கிட்டேப் போய் எடுக்க முடியலை. கூட்டம்! 




நீலத்தில் இருந்து ஊதாக்கலருக்கு மாறியப்போ எடுக்க நினைச்சு மறுபடி நீலமே வந்து விட்டது.





உணவுக்கடைகளில் நிற்கும் வரிசைகள். தூரத் தெரிவது தான் உணவுக்கடைகள்.

கையில் மேதி பகோடாவுடன் ஒருவர். நாமே வாங்கிக்கொண்டு தூக்கி வந்து எங்கானும் வைத்துச் சாப்பிடணும் என்பதால் படம் எடுக்க முடியவில்லை. தற்செயலாக இவர் மாட்டினார். தொட்டுக்க குஜராத்தி கடி. நன்றாக இருந்தது. தோசை ஒரே சொதப்பல்! தூரக்கப் பார்த்துட்டு நன்றாக இருக்குனு நினைச்சால் ஒரே தடிமன் சாக்கு மாதிரி. ரப்பர் மாதிரி வந்தது. உளுந்தே போடாமல் அரைச்சிருந்தாங்க. சாம்பார்னு மிளகாய்ப்பொடி, தக்காளி, காரட் போட்ட சொம்புப் பொடி போட்ட மிளகாய்த் தண்ணீர். அதையும் வாங்கிக் குடித்தவர்கள் உண்டு. தேங்காய்ச் சட்னி காரல் வாசனை! தக்காளிச் சட்னி பரவாயில்லை.


aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa this is kuttikkunjulu's typing! :D

வீடியோ நன்றாக வேலை செய்கிறது. இன்னும் சில நிமிடங்கள் எடுத்திருக்கலாம். 

இந்த வருஷம் தீபாவளி ஞாயிறன்று வருவதால் இங்குள்ள நம் மக்கள் தீபாவளி அன்றே கொண்டாடலாம் என்னும் ஆவலில் இருக்கின்றனர். அதற்கு முன்னோட்டமாக இந்த மேளா. 2011 ஆம் ஆண்டில் இதே கோயிலில் வெறும் இனிப்புக்களாலேயே எல்லா சந்நிதிகளையும் அலங்கரித்திருந்தனர். சுமார் நூறு வகைக்கும் மேல் இனிப்பு வகைகள். குஜராத்தியர் அதிகம். ஆங்காங்கே சில தமிழ்க்காரர்கள், தெலுங்கு மக்கள் காணப்பட்டனர். கேரள மக்கள் பொதுவாக இம்மாதிரிக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளுவதில்லை. தீபாவளி அவர்கள் கொண்டாடுவதும் இல்லை. அதோடு நேற்று இங்குள்ள குருவாயூர் கோயிலில் ஏதோ கொண்டாட்டம் என்றும் பையர் சொன்னார்.  வாணவேடிக்கை ஆரம்பிக்கவே எட்டு மணிக்கு மேல் ஆனது. கொஞ்சம் படங்கள் எடுத்தேன். ஒரு வீடியோ எடுத்தேன். ஆனால் சரியா வந்திருக்கானு தெரியலை.

ப்ரிவியூவில் பார்த்தேன் வீடியோ வரலை. மக்கள் பார்த்துட்டுச் சொல்லுங்க! வீடியோவுக்குத் தலை முழுகிடலாம். :)))) முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே ஸ்ரீரங்கத்தில் அடிக்கும் காற்றை வீடியோ எடுத்துப் போட்டேன். ஆனால் அது காமிராவில்னு நினைக்கிறேன்.

கார் பார்க்கில் ஆயிரக்கணக்கான கார்கள். படம் எடுக்கலாம்னா ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தத் தன்னார்வலர்கள் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று சொல்லுவார்கள் என்பதால் எடுக்கவில்லை. ஏனெனில் கார் பார்க்கில் இருந்து கோயில் வளாகத்தினுள்ளே செல்ல ஷட்டில்கள் எனப்படும் நீண்ட கார் எட்டு இருக்கை, பத்து இருக்கை கொண்டவை வந்து மக்களை ஏற்றிக்கொண்டு கோயில் வளாகத்துக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தன. அதற்கென 2,3 வாயில்கள் இருந்தன. அடுத்தடுத்து ஷட்டில்கள் வருவதும் போவதுமாக இருந்தது. தன்னார்வலர்களுக்குக்  குடி நீர் விநியோகத்தில் ஒரு வான். ரொம்பவே மும்முரமான போக்குவரத்து. நாங்களும் ஒரு ஷட்டிலில் தான் சென்றோம். ஷட்டிலில் தான் திரும்பியும் வந்தோம். எங்களுக்கு எனத் தனி ஷட்டிலாகவும் கிடைத்தது. மசாலா தோசையை ரங்க்ஸும், சீஸ் தோசையைப் பையரும், சாதா தோசையை நானும் சாப்பிட்டோம். மருமகளும் குழந்தையும் சீஸ் பிட்சா சாப்பிட்டார்கள். குழந்தை ஒரு சின்னத் துண்டு மட்டும் சாப்பிட்டாள். அவளுக்கு இவ்வளவு கூட்டம் இத்தனை மனிதர்கள் என்னும் ஆச்சரியம் விலகவில்லை என்பதோடு அப்பா, அம்மாவை இறுக்கிக் கட்டிக் கொண்டிருந்தாள். அதோடு இல்லாமல் வாணவேடிக்கையைச் சிறிது நேரம் பார்த்தாள். பின்னர் அந்தப் புகையும் வாணங்கள் போடும் சப்தமும் அவளுக்குப் பிடிக்கவில்லை.

கோயிலுக்கு இடப்பக்கம் மேளா நடந்த இடம். பல நாற்காலிகள் போட்டு மக்கள் நிறைந்திருந்தார்கள். எதிரே ஒரு திரைப்படத் திரை வைக்கப்பட்டிருந்தது. அதில் கலாசார நிகழ்ச்சிகள் காட்டுவார்கள் என்று பேசிக்கொண்டனர். அந்தப் பக்கம் கூட்டம் அதிகமாக இருந்ததால் நாங்கள் போகவில்லை. அதைத்தாண்டி இந்தப்பக்கம் தான் உணவுக்கடைகள் இருந்தன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இடத்தில் போய் டோக்கன் வாங்க வேண்டும். நாங்களும் வரிசையில் நின்றாலும் பையர் தானே போய் டோக்கன் வாங்குவதாகச் சொல்லிவிட்டார். அவருக்குத் தான் நேற்று அதிக சிரமம். இதில் குழந்தையை வேறே கூட்டத்தில் கீழே விடமுடியவில்லை. மகனும் மருமகளும் மாற்றி மாற்றித் தூக்கி வைத்துக்கொண்டார்கள். எங்களால் தூக்க முடியாது. எங்களைத் தூக்கிக் கொண்டே நடக்க முடியலை. அதோடு புது இடம் என்பதால்குழந்தையும் பயப்பட்டாள்.



சற்று நேரம் வாணவேடிக்கை பார்த்துட்டு நாங்க கிளம்பிட்டோம். குழந்தைக்குத் தூக்கம் வந்துவிட்டது. ஆனால் வாணவேடிக்கை ஒரு மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர்ந்தது.

Friday, October 18, 2019

உம்மாச்சி எல்லாம் வந்து பாருங்க!

ஜூலை மாதம் 28 ஆம் தேதி குலதெய்வம் கோயிலுக்குப் போனது குறித்துச் சொல்லி இருந்தேன். ஒன்றிரண்டு படங்கள் எடுத்தேன். அரிசிலாறை வண்டி ஓடும்போது எடுக்க முயற்சித்தால் வரலை எனக்கு! :( எடுத்தவரை படங்கள் இங்கே போட்டிருக்கேன்.

இதை இப்போப் போடறதா இல்லை. சமையல் பக்கம் போடச் சில குறிப்புக்களை எழுதிட்டு மேலும் தொடரும்போது என்ன ஆச்சுனே தெரியாமல் எழுதி வைச்சது அத்தனையும் அழிந்து விட்டது. ஆகவே மறுபடி எழுத மனம் இல்லை. அதோடு கணினியில் சார்ஜும் இல்லை. சார்ஜ் முடிவதற்குள் ஏதானும் போடலாம்னு இதைப் போட்டு இருக்கேன்.

முதலில் போனது பெருமாள் கோயிலுக்கு. மாரியம்மன் கோயிலில் மாவிளக்கு, அபிஷேஹம் எல்லாம் இருந்ததால் பெருமாளை தரிசனம் செய்து கொண்டு அங்கே போனோம். கீழே பெருமாள் காட்சி அளிக்கிறார்.




வேணுகோபால ஸ்வாமி. இவர் கர்பகிரஹத்திலே கண்ணுக்கே தெரியாமல் இருந்தார். அவரை எடுத்துக் கும்பாபிஷேஹம் போது பிரதிஷ்டை பண்ணியதெல்லாம் ஏற்கெனவே எழுதி இருக்கேன்.

கீழே ஆஞ்சு, வெளிச்சமே இல்லை. ஆனால் முன்னர் வடைமாலை சார்த்தினப்போப் போட்டிருக்கேன்.


நுழையும்போது பெருமாளுக்கு நேரே காணப்படும் கருடாழ்வார். இன்னமும் விஷ்வக்சேனர், தும்பிக்கை ஆழ்வார் எல்லோரும் இருக்காங்க. விஷ்வக்சேனரும், தும்பிக்கை ஆழ்வாரும் ஒருத்தரே என்றும் சொல்கின்றனர்.

இந்த முறை எப்படியேனும் மாவிளக்கைப் படம் எடுக்கணும்னு நினைச்சேன். பூசாரி எடுக்கக் கூடாதுனு தான் சொன்னார். ஆனால் நான் பிரகாராம் சுற்ற வெளியே வந்தப்போ ஒரு மாதிரிக் கோணத்தில் அவசரமாக ஒரு க்ளிக்..


அபிஷேஹம் முடிந்து அம்மன் அலங்காரத்தில்


கருவிலி சிவன் கோயில்
ராஜகோபுரம் கிட்டப்பார்வையில்

சுவாமியை எடுக்க முடியலை. அம்மனை மட்டும் குருக்கள் வருவதற்குள் ஒரு க்ளிக்



கோயிலுக்கு எதிரே இருக்கும் யமதீர்த்தம்



Tuesday, October 15, 2019

ரொம்ப நாள் கழிச்சுத் "திங்க"ற கிழமைக்கு ஒரு பதிவு!

ரொம்ப நாளாச்சு எ.பியோட திங்கற கிழமைகளிலே போட்டி போட்டு! இன்னிக்குப் போடலாம்னு நினைச்சேன். அங்கே இந்தியாவில் செவ்வாய்க்கிழமை வந்தாச்சு! இன்னும் கிழக்கே இருப்பவர்களுக்குச் செவ்வாய் மதியம், மாலைனு ஆகி இருக்கும். ஆனால் இங்கே இன்னமும் திங்கள் கிழமை தானே! இந்த சமையல் குறிப்பைப் பிரதிலிபி நடத்திய சமையல் போட்டிக்கு அனுப்பி இருந்தேன். பரிசு கிடைக்காதுனு தெரியும். என்றாலும் சமையல் போட்டி என்பதால் இந்தச் சாக்கில் அனைவருக்கும் போய்ச் சேருமே என்று தான். ஃபேஸ்புக்கிலும் போட்டிருந்தேன். ஆனால் கோமதி அரசுவையும் இன்னும் யாரோ ஒருத்தர் பார்த்திருந்தார். ஸ்ரீராம்? ஆமாம்னு நினைக்கிறேன். வேறே யாரும் பார்க்கலை. அப்போவே இது போணி ஆகாதுனு புரிஞ்சு போச்சு. அதான் எ.பிக்கு அனுப்பாமல் இங்கேயே போட்டுட்டேன். இனி உங்க பாடு, பீட்ரூட் பாடு!

பீட்ரூட்டெல்லாம் சாலட் போன்றவற்றில் சேர்த்தோ அல்லது துருவி அல்வா மாதிரி செய்தோ சாப்பிடுவார்கள். ஒரு சிலர் பீட்ரூட்டில் கறி, கூட்டு எல்லாம் பண்ணுகின்றனர். அல்வா, பாயசம், ப்ரெடில் தடவும் ஜாம் போன்றவையும் செய்யலாம். பெரும்பாலும் ஓட்டல்காரர்களும், காடரிங் காரர்களும் வாரம் ஒரு நாளாவது பீட்ரூட் சேர்ப்பார்கள். விலை மலிவு என்பதால் இருக்கலாம். ஆனால் இது மிகுந்த சத்துள்ளது என்றாலும் சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. பொதுவாக இதை அதிகம் யாரும் விரும்புவதில்லை என்றாலும் இம்முறையில் செய்து பாருங்களேன், அனைவரும் விரும்புவார்கள்.

நான்கு நபர்களுக்குத் தேவையான பொருட்கள்: பீட்ரூட் கால் கிலோ, 3,அல்லது 4 வரும். நாம் இதில் வெங்காயம், தேங்காய்த் துருவல் எல்லாம் சேர்க்கப் போவதால் நான்கு பீட்ரூட் இருந்தால் நான்கு நபர்களுக்குப் போதுமானது. உப்பு தேவைக்கு
பெரிய வெங்காயம் பெரிதாக ஒன்று அல்லது நடுத்தரமான அளவில் 2
பச்சை மிளகாய் 2 அல்லது 3 . காரம் வேண்டும் என்பவர்கள் கூடப் போட்டுக்கலாம். பீட்ரூட்டின் இனிப்பில் அது அவ்வளவாகத் தெரியாது. இஞ்சி ஒரு சின்னத் துண்டு
தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன், ஜீரகம் 2 டீ ஸ்பூன், கடுகு ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, ஒரு மிளகாய் வற்றல், கருகப்பிலை, கொத்துமல்லி தாளிக்க சமையல் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன். (வெங்காயம் வதங்கணும்.)


ஒரு சின்னக் குக்கரில் பீட்ரூட்டைத் தோலோடு சேர்த்து வேக வைக்கவும். வெந்த பீட்ரூட்டின் தோலை உருளைக்கிழங்கு உரிப்பது போல் உரிக்கலாம். உரித்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இப்போத் தாளிக்கும் பொருட்களைத் தயார் செய்து கொள்ளவும்.

வெங்காயம் பொடியாக நறுக்க வேண்டும். பச்சை மிளகாய், இஞ்சி, ஜீரகம், தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்சி ஜாரில் போட்டுக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.









கடாயில் சமையல் எண்ணெய் ஊற்றிக்கொண்டு கடுகு, உளுத்தம்பருப்புப் போட்டு மி.வத்தல் தேவையானால் போட்டுக்கொண்டு கருகப்பிலை போட்டு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சீக்கிரம் வதங்க அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கலாம். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் வேக வைத்து நறுக்கிய பீட்ரூட் துண்டங்களைப் போட்டுக் கொண்டு தேவையான உப்பைச் சேர்த்துக் கிளறி விட்டு அரைத்த விழுதையும் சேர்க்கவும். விழுதிலே இருக்கும் தண்ணீரே போதும். என்றாலும் தேவையானால் ஒரு கரண்டி நீரைத் தெளிக்கவும். மூடி வைத்து நன்கு கலந்து விட்டுக் கிளறவும். கீழே இறக்கும் போது கொத்துமல்லி தூவவும். இதே போல் காலிஃப்ளவர், நூல்கோல், காரட், டர்னிப் போன்றவற்றிலும் செய்யலாம்.

Friday, October 11, 2019

பிள்ளையார் சதுர்த்திப் படம் இன்னிக்குச் சிறப்பு!




இந்த வருஷம் பிள்ளையார் சதுர்த்தி அன்று செய்த கொழுக்கட்டை, வடை, அதிரசம், பாயசம், அன்னம், பருப்புப் படம் எடுக்க மறந்து போச்சு! அப்புறமா நினைவு வந்தப்போ பூஜை முடிந்து சாப்பிட்டு முடிச்சுட்டோம். உம்மாச்சி பக்கத்திலே வெற்றிலை, பாக்கு, பழம் வைத்திருந்த தட்டு மட்டும் இருந்தது. அதை அப்படியே ஒரு படம் எடுத்தேன். வெல்லை, பாக்கு, பழம், விளாம்பழம், தேங்காய், கரும்பு, கொய்யாப்பழம், பேரிக்காய், ஆப்பிள் பழம் எல்லாமும் இருக்கு. சென்னையில் பிரப்பம்பழம் கூடக் கொடுப்பாங்க! இங்கே அதெல்லாம் இல்லை.

பிள்ளையார் மண் பிள்ளையார் இப்போல்லாம் வாங்குவதில்லை. வீட்டுப் பிள்ளையார் தேடி வந்தப்புறமா அவரை வைத்துத் தான் பூஜை நடந்து வருகிறது. அது ஆச்சு ஒரு பத்து வருஷம்! ராமருக்கு இடப்பக்கம் உட்கார்ந்திருப்பார் அவர் தான்! இங்கே மாலைகள், பூக்கள் கும்பலில் மறைந்து காணப்படுகிறார். ஆனால் எனக்குக் களிமண் பிள்ளையார் வாங்குவதில்லை என்பதில் வருத்தம் உண்டு.

நம்ம நெல்லைத் தமிழருக்கு ராமர் பட்டாபிஷேஹப் படம் போடுவதில்லைனு ரொம்பக் குறை! அதான் இன்னிக்கு நினைப்பு வந்தது. போட்டுட்டேன். நெ.த. இப்போத் திருப்தியா?

பிரப்பம்பழம் க்கான பட முடிவு

நடுவில் இருப்பது பிரப்பம்பழம். கறுப்பாகச் சின்னதாக நாவல் பழத்தை விடச் சிறியதாக இருக்கும். ஆனால் அவ்வளவு நீர்ச்சத்து இருக்காது.