முந்தைய பதிவில் சொன்ன விறல்மிண்ட நாயனாரின் சரித்திரம் கீழே காணலாம்.
விறல்மிண்ட நாயனார் திருச்செங்குன்றூரைச் சேர்ந்தவர். இவர் சிவபெருமானிடத்தில் பூண்டிருந்த பக்தி அடியார்களிடமும் பக்தியும் , மதிப்புமாக மாறி இருந்தது. சிவனடியாரை எவரானும் நிந்தித்தாலே அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பார். அவருடைய பக்தி அப்போது வீரமாக மாறிவிடும். இவருடைய இந்த வீரத்தின் காரணமாகவே விறல்மிண்டர் என்ற பெயரும் ஏற்பட்டதாய்ச் சொல்லுவார்கள். விறல் என்றால் வீரம் என அர்த்தம். அஞ்சாநெஞ்சம் கொண்ட இவர் ஆலயங்கள் தோறும் சென்று இறைவனைப் பாடித் தொழுது வழிபாடுகள் செய்துவருவார். ஆனால் ஆலயங்களின் மூல மூர்த்தத்தைத் தரிசிக்கும் முன்பு, முதலில் ஆலயத்திற்கு வருகை புரிந்திருக்கும் சிவனடியார்களைத் தொழுது வழிபட்டுவிட்டுப் பின்னரே ஆலயங்களின் மூல மூர்த்தத்தைத் தரிசிப்பதை வழக்கமாய்க் கொண்டிருந்தார்.
அப்போது ஒருநாள் திருவாரூருக்கு வந்திருந்த இவர், அங்கே இருந்த சிவனடியார்களைக்கண்டு மகிழ்ந்து வணங்கி அவர்களைப் போற்றி நின்றார். அவர் வந்த சமயமே சுந்தரமூர்த்தி நாயனாரும், வன்மீக நாதர் என்னும் புற்றிடங்கொண்ட நாதனைத் தரிசிக்க வந்தார். அடியார்களை மனதால் வணங்கும் பேறு படைத்த சுந்தரர், பக்குவம் மிகுந்திருந்த காரணத்தால் தேவாசிரிய மண்டபத்தில் அடியார்களைக் கண்டும், அவர் வன்மீகநாதரைத் தரிசிக்கவெனச் சென்றார். அடியார்கள் எவரையும் (விறல்மிண்ட நாயனார் உட்பட) வணங்கவில்லை. ஆனால் விறல்மிண்டருக்கு இது மாபெரும் குற்றமாய்ப் பட்டது. சுந்தரருக்கு அகம்பாவம் மிகுந்துவிட்டது எனவும், அதனால் தான் அடியார்களை மதிக்கவில்லை என்றும் நினைத்துக்கொண்டுவிட்டார். ஏற்கெனவே கோபக்காரர் ஆன விறல்மிண்டருக்குக் கோபம் அதிகமாகிவிட்டது.
“முதலில் வணங்கத் தக்க அடியார்கள் தேவாதிதேவர்களுக்கும் மேலானவர்கள். இவர்களை வணங்காமல் இவன் நேரே உள்ளே செல்கின்றானே? இவன் ஒரு வன் தொண்டனோ? அடியார்களுக்குப் புறம்பானவனோ? ஆம், ஆம் இவன் வன் தொண்டனே, அடியார்களுக்குப் புறம்பானவனே. இவன் மட்டுமில்லை, இவனை வலிய வந்து ஆட்கொண்ட அந்த வீதிவிடங்கனுமே அடியார்களுக்குப் புறம்பானவனாகிவிட்டான்.” என்று கோபத்துடனும், கடுமை தொனிக்கவும் சொன்னார். ஆனால் மனப்பக்குவம் பெற்றிருந்த சுந்தரருக்கோ விறல்மிண்டரின் இந்தச் செய்கையினால் கோபம் வரவில்லை. மாறாக அடியார்களிடம் பக்தி பூண்டிருக்கும் விறல்மிண்டரின் பக்தியை உயர்வாகவும், உன்னதமாகவும் எண்ணி மனம் மகிழ்ந்து பெருமையுற்றார். எம்பெருமானின் சரணங்களில் விழுந்து வணங்கினார்.
"இந்த அடியார்களுக்கு எல்லாம் நான் அடியானாக ஆகும் பேற்றை எனக்குத் தந்தருளவேண்டும்.” என்று ஈசனிடம் வேண்டினார். ஈசனும் மகிழ்ந்து, “தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்ற அடியை எடுத்துக் கொடுத்துப்ப் பாடுமாறு சொல்ல அனைவர் மனமும் மகிழுமாறு எழுந்தது திருத்தொண்டத்தொகை. திருத்தொண்டர்களின் பெருமையைப் பாடிப் புகழும் அந்தப் பதிகங்களைக் கேட்டு விறல்மிண்டரின் மனமும் மகிழ்ந்தது. சுந்தரரின் பக்தி பக்குவமடைந்த பக்தி என்பதையும் புரிந்துகொண்டார்.
விறல்மிண்டரைப் பற்றிய வேறு மாதிரிக் கதையில் சுந்தரரின் மீது கோபம் அடங்காநிலையிலேயே விறல்மிண்டர் திருவாரூரை விட்டு வெளியேறிவிட்டார். ஆனால் அதன் பின்னர் திருவாரூரை மிதிக்கவே மாட்டேன். அந்த எல்லைக்கு அருகிலே கூட வரமாட்டேன் என்று திட சங்கல்பம் செய்து கொண்டு இருந்தார். அவர் அடியார்களுக்கு நாள் தோறும் அன்னம் அளித்து வந்தார். தம் இல்லத்திற்கு வரும் அடியார்கள் திருவாரூரைச் சேர்ந்தவர் எனத் தெரிந்தால் அவர்கள் காலைத் துண்டித்துவிடுவாராம். இப்படி ஒரு கொடூரமான காரியத்தைச் சுந்தரர் மேல் கொண்ட கோபத்தினால் செய்து வந்ததாகச் சொல்கின்றனர். இவரைத் தடுத்தாட்கொள்ள விரும்பிய ஈசன் சிவனடியாராக வந்து உணவுண்ண அமர்ந்தார். முன்னரே அவரின் ஊரைக் கேட்டு அறிந்த விறல்மிண்டரின் மனைவியார் சிவனடியாரான ஈசனிடம் திருவாரூர் என்ற பெயரைச் சொல்லவேண்டாம் எனக் கூறி இருந்தார்.
ஆனால் ஈசன் தாம் பார்த்துக்கொள்வதாகவும் விறல்மிண்டரின் கொடுவாளை வலப்பக்கமே அது வரை வைத்திருந்ததை அன்று மட்டும் இடப்பக்கம் வைக்குமாறும் மற்றதைத் தாம் பார்த்துக்கொள்வதாயும் சொல்லிவிடுகிறார். உணவுண்ண அமரும்போது தாம் திருவாரூரைச் சேர்ந்தவன் என சிவனடியாரான ஈசன் கூற, கோபம் கொண்ட விறல்மிண்டர் வலப்பக்கம் கை வாளை எடுக்கச் சென்றது. அங்கே வாள் இல்லாமல் தேட மனைவி இடப்பக்கம் வைத்திருப்பதைக் காட்ட அதை எடுப்பதற்குள் சிவனடியாரான ஈசன் எழுந்து ஓட்டம் பிடித்தார். விடாமல் அவரைத் துரத்தின விறல்மிண்டரைத் திருவாரூர்க்குள்ளேயே இழுத்துவிட்டார் ஈசன். பின்னர் சிரித்துக் கொண்டே ”இது திருவாரூர், நீர் உள்ளே வந்துவிட்டீரே?” என்று வினவ, அதிர்ச்சி அடைந்து சுற்றும் முற்றும் பார்த்த விறல்மிண்டர் தம் காலைத் தாமே துண்டித்துக்கொள்கிறார். அவரைத் தேற்றிய ஈசன் தம் சுய உருவைக் காட்டுகிறார். சுந்தரரின் பக்தியைப் பற்றியும் அவரை உணரச் செய்த ஈசன் அவருக்கு முக்தி கொடுத்து அருளிச் செய்கிறார் கயிலையிலே சிவகணங்களுக்குத் தலைவனாகும் பேறும் பெறுகின்றார்.
********************************************************************************
நடுவில் அந்தப் பதிவுகளில் நாயன்மாரின் சரித்திரமும் இடம் பெற நேர்ந்திருக்கிறது. அதைத் தான் மேலே பார்க்கிறீர்கள். அடுத்துத் திருவாரூரின் விட்ட கதை தொட்ட கதை வரும். இங்கே நான் டிஃபன் சாப்பிட்டதாகப் பெயர் பண்ணிட்டுப் படுத்துக்கவும், அவர் சுமார் ஒன்பதரைக்குக் கோயிலுக்குக் கிளம்பிப் போயிட்டார். அரைகுறை நினைவு எனக்கு. தூக்கமா/மயக்கமானு புரியாத நிலை. திடீரென மருந்துகள் சாப்பிடாதது நினைவில் வரவே எழுந்து மாத்திரைகளைத் தேடி எடுத்துக் கொண்டு ஶ்ரீரங்கத்தில் இருந்து எனக்கெனப் பிரத்யேகமாய்க் கொண்டு போயிருந்த தண்ணீரைக் குடித்து மாத்திரைகள் போட்டுக் கொண்டது தான் தெரியும். அடுத்த அரை மணி நேரத்துக்கு நிலைகொள்ளாமல் வயிற்றுப் போக்கு! என்ன செய்யறதுனு புரியலை. அதற்கென மருந்து கை வசம் இருந்தாலும் அதைப் போட்டுக்கொள்ளலாமா வேண்டாமா என யோசனை. அப்படியே படுத்துக் கிடந்தேன். மணியோ நகரவே இல்லை. நாலைந்து தரம் போனப்புறம் வயிற்றில் உள்ளவை எல்லாம் வெளியே வந்துடுத்து போல. கொஞ்சம் குறைந்தது.
வயிற்றைச் சுற்றித் துண்டைக் கட்டிக் கொண்டு படுத்துக் கொண்டே இருந்தேன். அலைபேசி அழைக்கவே எடுத்துப் பேசினால் குருக்கள் தான். மாமா ரூமுக்கு வந்துட்டாரானு கேட்கவே எனக்குத் திகைப்பு. இல்லையே என்றேன். உடனே அவரே சரி, சாப்பாடு வாங்கப் போயிருப்பார். இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவார். கவலைப்படாதீங்கோ. அபிஷேஹங்கள் எல்லாம் நல்லபடி முடிந்தது என்று சொல்லிவிட்டுத் தான் இன்னும் சற்று நேரத்தில் பிரசாதங்களுடன் அங்கே ரூமுக்கு வருவதாகவும் தெரிவித்தார். சரினு எழுந்து கிளம்புவதற்கான ஆயத்தங்கள் செய்து கொண்டேன். வயிற்றுப் போக்கு குறைந்திருந்தாலும் வலி இருந்து கொண்டே இருந்தது. சிறிது நேரத்தில் நம்ம ரங்க்ஸும் வந்துவிட்டார். ஒரே ஒரு பாக்கெட் தயிர்சாதம் மட்டும் வாங்கி வந்திருந்தார். என்ன ஆச்சுனு நான் கேட்கவே குருக்கள் பிரசாதங்களாகப் புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் தயிர்சாதம் எல்லாம் கொண்டு வருவதால் ஒருவேளை தயிர்சாதம் அதிகம் தேவைப்பட்டால் இருக்கட்டும்னு வாங்கினதாகச் சொன்னார்.
அபிஷேஹம் எல்லாம் நல்லபடி முடிந்ததா எனக் கேட்டதும் அபிஷேஹம் நல்லபடியாக சிரத்தையுடன் குருக்கள் செய்து கொடுத்தார். அம்பத்தூரில் நமக்கு எதிர்சாரி வீட்டில் இருப்பவர்கள்(இப்போவும் இருக்காங்க) அவங்க அப்பாவுடன் வந்திருந்தார். அவரும் அபிஷேஹங்கள் தான் செய்தார். உன்னை ரொம்ப விசாரித்தார் என்று சொல்லிவிட்டு கோயில் அலுவலகத்தில் அபிஷேஹப் பொருட்கள் எதுவும் சரிவரக் கொடுக்கவே இல்லைனு வருந்தினார். அன்று எங்களையும் சேர்த்து 3 பேர் அபிஷேஹம் செய்திருக்காங்க. ஒருத்தருக்கு அபிஷேஹப் பொருட்களுக்கு 1500 ரூபாயோ என்னமோ வாங்கி இருக்காங்க. ஆனால் கொடுத்தது ஒரு சின்னச் சொம்பில் பால் மட்டும். சின்னப் பொட்டலம் சந்தனம். ஒரே ஒரு பொட்டலம் மஞ்சள் பொடி. மற்றபடி தயிர், நெய்யெல்லாம் இல்லை. பஞ்சாமிர்தமோ பஞ்சாமிர்தம் செய்யப் பழங்களோ கொடுக்கலை. மாலை பூவெல்லாம் கூடச் சரியாக் கொடுக்கலையாம். நல்லவேளையாக அம்மனுக்குச் சார்த்தப் புடைவை, ருண விமோசனருக்கு வேஷ்டி எல்லாம் குருக்களே வாங்கி இருக்கார். 3 ஸ்வாமிக்கு அபிஷேஹங்கள் செய்ய மொத்தமாகக் கொடுத்ததே மேலே சொன்னது தானாம். குருக்கள் தனியாகப் பால், தயிர் வாங்கி வைச்சிருந்ததால் ஏதோ ஒப்பேத்தி இருக்கார். அர்ச்சனைக்குதட்டு மாலையுடன், வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம் மூன்று சந்நிதிகளுக்கும் ஒருத்தருக்கு 3 வீதம் 3பேர்களுக்கும் சேர்த்து மொத்தம் ஒன்பது கொடுக்கணும். ஆனால் அவங்க கொடுத்ததோ ஒரு சந்நிதிக்கு ஒன்று தான். நான் மட்டும் கோயிலுக்குப் போயிருந்தால் நிச்சயம் அறமற்ற நிலையத்துறை அலுவலகத்தில் போய்ச் சண்டையே போட்டிருப்பேன். தியாகேசர் வம்பு வேண்டாம்னு என்னை ஓட்டல் அறையிலேயே இருக்கும்படி பண்ணிட்டார். :(