எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, January 19, 2007

187. நானும் தமிழ் எழுதறேன்.

முதலில் அம்பிக்காக ஒரு ஜோக்: என்னடா அம்பி வரதே இல்லை, ஜோக் எழுதறேன்னு நினைக்கிறவங்களுக்கு. நேத்து அம்பி (நேத்தா? தெரியலை,நான் பார்த்தது நேத்துத் தான்) மெயில், மயில் எல்லாம் அனுப்பி வச்சிருந்தார். என்னடா இது, இந்த மதுரைக்கு வந்த சோதனை, இம்மாதிரி அவரா மெயில் எல்லாம் அனுப்பமாட்டாரே? ஒருவேளை திருமண அழைப்பைத் தான் மெயிலில் மயில் கிட்டக் கொடுத்திருப்பார் போல் இருக்குன்னு, மெயிலைத் திறந்தால் ஒரே புகழ்மாலை. ஹிஹிஹி,எனக்குத் தான். என்னோட போஸ்ட் எல்லாம் படிக்கிறாராம். ஆனால் பின்னூட்டம் கொடுக்க முடியலையாம். தங்கமணியோட போஸ்ட்டுக்கு மட்டும் பின்னூட்டம் கொடுக்கிறதுக்கும், அப்புறம் தொலைபேசற நேரம் போக மிச்ச நேரம் ஏதோ ஆஃபீஸாமே, அதிலே வேலை எல்லாம் செய்யணுமாமே, அதுக்கே நேரம் பத்தலையாம். மொக்கைப் போஸ்ட்டுனு சும்மாத் தான் சொல்றேன். உங்களை எரிச்சல் படுத்தலாம்னு பார்க்கிறேன். வேறே ஒண்ணும் தப்பா நினைக்காதீங்கன்னு சொல்லிட்டு நல்லா எழுதறீங்கன்னு ஒரே புகழ் மாலை போங்க! ஒரே ஆச்சரியமாப் போச்சு எனக்கு. அப்பவும் எப்போ கல்யாணம்னு எல்லாம் சொல்லவே இல்லை. சரி, போகட்டும், பலாப் பழம் பழுத்தால் தானே வெடிக்கும்னு விட்டுட்டேன். எங்கே கல்யாணத்துக்கு வந்துடுவேனோன்னு ஒரே பயம். பின்னே? நான் எங்கே தங்கமணிக்கும் "ஆப்பு" வைக்கச் சொல்லிக் கொடுத்துடுவேனோன்னு பயத்திலே தானே தங்கமணி ஒரு ப்ளாக்கர்னு என் கிட்டே சொல்லலை. அப்படியும் நான் கண்டு பிடிக்கலையா? அது மாதிரி இதுவும் கண்டு பிடிச்சாச்சுன்னு வைங்க. இருந்தாலும் சொல்ல மாட்டேன்.
*************************************************************************************
ஒரு தோழி மற்றவளை பார்த்து: என்னடி இது, நீ ஒரு மவுஸ்-வைஃப்னு சொல்லறே? அப்படின்னா என்ன அர்த்தம்.

மற்றவள் தோழியிடம்: பின்னே என் கணவர் தான் வீட்டிலே எலி ஆச்சே? அதான் சொன்னேன்.!!!!!!
*************************************************************************************

எல்லாரும் தமிழ் எழுதறதைப் பார்த்துட்டுத் தான் நானும் எழுத ஆசைப் பட்டேன். ஆனால் அப்படி ஒண்ணும் இலக்கியம் படைக்கலைன்னு நல்லாத் தெரியும் இருந்தாலும் என்னோட தமிழ் நடையையும் ரசிக்கிற சிலர் இருக்கிறாங்க என்பது எனக்குக் கைப்பிள்ள மூலமாத் தெரிஞ்சது. அவர் என்னமோ ஆரம்பத்திலே இருந்தே என்னை ஒரு தமிழ்ப் புலவர்னு நினைச்சிட்டிருப்பார்னு நினைக்கிறேன். அதனாலோ என்னமோ நான் என்னை ஒரு "ஒளவை"னு எல்லாம் சொல்லிக் கொண்டாலும் நான் எழுதறது என்னமோ சுமார் ரகம் தான். வேதா மாதிரிக் கவிதையோ, கார்த்திக் மாதிரிக் கதைகளையோ, அனுபவச் சிதறல்களையோ எழுதறது இல்லை. இந்த அளவு எனக்குத் தமிழ் வந்ததுக்கே என்னைச் சுத்தி இருந்த சூழ்நிலை தான் காரணம். என்னோட அப்பா ஒரு ஹிந்தி ஆசிரியராக இருந்தாலும் அவர் படித்த கல்கி, தேவன், அகிலன், ஜெகசிற்பியன், நா.பார்த்தசாரதி, அரு.ராமநாதன், துமிலன், எஸ்.வி.வி., போன்ற எழுத்தாளர்கள் எழுதின கதைகளையும், முக்கியமாக சரித்திரத்தில் எனக்கு ஈடுபாடு ஏற்படுத்தியதும் அவரால் தான். அப்புறம் என்னோட அம்மா படிச்சது ராஜம் கிருஷ்ணன், அநுத்தமா, சரோஜா ராமமூர்த்தி, ஆர்வி, ஜோதிர்லதா கிரிஜா. பி.எஸ்.ராமையா, புதுமைப் பித்தன், கு.ப.ராஜகோபாலன், லக்ஷ்மி போன்ற எழுத்தாளர்கள் அறிமுகம் ஆனார்கள்.

நாங்கள் லீவுக்குத் தாத்தா வீட்டுக்குப் (அம்மா வழி) போகையிலே எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கும். ஏனெனில் அங்கே படிக்கக் கட்டுப்பாடு கிடையாது. எதை வேணுமானாலும், எத்தனை நேரம் வேணுமானாலும் (இரவில் கூட) படிக்கலாம். தாத்தாவோ என்றால் அவரின் சேமிப்பான விநோத ரஸ மஞ்சரி, ஆனந்த போதினி, பிரசண்ட விகடன், வை.மூ. கோதை நாயகி அம்மாள், வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார் போன்றவர்களின் புத்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் சொல்லுவார். என்னுடைய மாமாக்களுடன் போட்டி போட்டுக் கொண்டு அகிலன், மு.வ., தமிழ்வாணன், டபிள்யூ.ஆர்.ஸ்வர்ணலதா, கொத்தமங்கலம் சுப்பு போன்றவர்களுடன் குமுதத்தில் எழுதி வந்த சாண்டில்யன், ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், அவரே பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் எழுதும் அப்புசாமிக் கதைகள்,ராஜேந்திர குமார், எஸ்.ஏ.பி. போன்றவர்களின் கதைகளைப் படிக்க முடிந்தது.

நானாகத் தேர்ந்தெடுத்துப் படிக்கத் தெரிந்ததும் மணியன், சாவி, கெளதம நீலாம்பரன், பி.வி.ஆர்., கல்கி ராஜேந்திரன்,சேவற்கொடியோன், ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன், சா.கந்தசாமி, தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன், சுஜாதா, (ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்ற பேரில் எழுதி வந்தப்போவில் இருந்தேபடிக்க ஆரம்பித்து விட்டேன்.), அசோகமித்திரன், கஸ்தூரி ரங்கன், ஆதவன், நீல.பத்மநாபன், (இவருடைய "தலைமுறைகள்" நாவல் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பை வைத்து ஒரு மூன்று பதிவு எழுதலாம்.)சிவசங்கரி, இந்துமதி, திலகவதி, கீதா பென்னெட், சுஜாதா விஜயராகவன், நாஞ்சில் நாடன் இப்போ சமீப காலங்களில் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், ஞானியின் சில எழுத்துக்கள், பிரபஞ்சனின் சில எழுத்துக்கள், முதல் எல்லாவற்றையும் படிக்கிறேன். இதில் பட்டுக் கோட்டை பிரபாகர் முதல் ராஜேஷ் குமார் வரையும், சுபா முதல் அனுராதா ரமணன் வரையும் இருக்கிறது. விட்டுப் போனதில் நிறையப் பேர்கள் இருந்தாலும் என்னளவில் பாதிப்பை ஏற்படுத்திய எழுத்தாளர்கள் பெயர் மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன். இதில் எனக்கு இன்றும் பாதிப்பை ஏற்படுத்திய கதைகள் என்றால் அவை கல்கியின் "அமரதாரா" நாவலும், நீல. பத்மநாபனின் "தலைமுறைகள்" நாவலும் தான். எனக்குக் கொஞ்சமாவது கதை சொல்லும் திறமையும், தமிழில் எழுதும் திறமையும் இருந்தால் அது எல்லாம் இந்த எழுத்தாளர்களைச் சேருமே அல்லாது எனக்கு ஒரு பெருமையும் இல்லை. இதைச் சொல்ல எனக்கு வெட்கமும் இல்லை. ஏனெனில் சொந்தச் சரக்கு ஏதும் இல்லைனு எனக்கு நல்லாத் தெரியும். இந்தக் கதைகளில் இருந்து நான் தெரிந்து கொண்டவை அப்போ அப்போ முடிஞ்சப்போ எழுதறேன்.

இதைத் தவிரப் பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம், கந்த புராணம், ராஜாஜியின் சக்கரவர்த்தித் திருமகன், வியாசர் விருந்து என்றும் நிறையப் படித்திருக்கிறேன். ஆனால் இப்போ அம்மாதிரிப் புத்தகங்களில் தனியாக வெளியிடுவது இல்லை. கதைகளே, முக்கியமாகச் சிறுகதைகளே அழிய ஆரம்பித்து விட்டது. எல்லாம் ஒரு நிமிடக் கதைகள், கவிதைகள் போய் ஹைக்கூ வந்து விட்டது. இன்னும் சில கவிதைகள் வருவதில் இருந்து கவிதை இன்னும் இருக்கிறது என்று தெரிந்து கொண்டாலும் சிறுகதை என்ற பெயரே போய் விடும் கூடிய சீக்கிரம். முன்னால் எல்லாம் தீபாவளி மலர் என்றால் நிறையச் சிறுகதைகள், ஒரு பெரிய கதை இருக்கும். சில சமயம் அந்தப் பெரிய கதை 2 வாரத்துக்காவது வரும். இப்போ ஒரு பத்து வருஷமாகக் கதைகள் மெல்ல அழிந்து வருகிறது. கதை சொல்லும் யுக்தியும் குறைந்து வருகிறது. இது நல்லதா? கெட்டதா? தெரியவில்லை! ஆனாலும் புத்தகங்கள், முக்கியமாக வாரப் புத்தகங்கள் சினிமா, அரசியல் வம்பு, கிசுகிசுவை விட்டால் வேறு ஒண்ணும் எழுதுவது இல்லை. கலாச்சாரம் சீரழிந்து வருவது இதனாலா? அல்லது மெகா சீரியல்களினாலா? நிச்சயமாய் விவாதத்துக்கு உரிய கேள்வி. அப்படியே கதைகள் வந்தாலும் படிக்கிறாப் போல் இருப்பதில்லை. தமிழில் கற்பனாசக்தி வறண்டு விட்டதா? இல்லை என்கின்றன மெகா சீரியல்கள். ஆனால் அவையும் வன்முறையையும், முறைகெட்ட உறவையும் தவிர வேறு எதுவும் காட்டுவது இல்லை. இதற்கு முடிவு என்ன?

7 comments:

  1. கீதா நம் காலம் பொற்காலம் தான். உங்கள் எழுத்தாளர்கள் பட்டியல் என்னையே மீண்டும் பார்ப்பது போல் இருக்கிறது.

    பாமா கோபலன்,கோமகள்,உமா
    சத்தியப்பிரியன்,தமயந்தி,மும்தாஜ் யாசீன்,ஆர்.சூடாமணி
    எல்லார்வி இவர்கள் சிறுகதை மன்னர்,அரசியராச்சே.

    ReplyDelete
  2. /நான் என்னை ஒரு "ஒளவை"னு எல்லாம் சொல்லிக் கொண்டாலும் நான் எழுதறது என்னமோ சுமார் ரகம் தான்.//
    ஒளவையா புதுசா இருக்கே மேட்டரு..

    // வேதா மாதிரிக் கவிதையோ, கார்த்திக் மாதிரிக் கதைகளையோ, அனுபவச் சிதறல்களையோ எழுதறது இல்லை.//

    அப்படி போடுங்க.. உங்களை மாதிரி புராணக் கதை யாரால சொல்லமுடியும்ங்க மேடம்..

    ReplyDelete
  3. மேடம், நான் பொங்கலுக்கு பிறகு இரண்டு மூன்று பதிவுகள் போட்டாச்சு.. உங்களால படிக்க முடியவில்லையா என்ன

    ReplyDelete
  4. //ஆனால் அவையும் வன்முறையையும், முறைகெட்ட உறவையும் தவிர வேறு எதுவும் காட்டுவது இல்லை//


    கரெக்டா சொன்னீங்க மேடம்.. இந்த விஷயங்களை தவிர, எத்தனையோ பெரிய கதை கருவெல்லாம் தொடப்படாமல் இருக்கிறது

    ReplyDelete
  5. வல்லி, பொற்காலம் சரி, அது என்ன நம்ம காலம்னு சொல்றீங்க? :D ஹிஹிஹி, சும்மாத் தான் கேட்டேன். (நீங்க வேறே வந்து மானத்தை வாங்காதீங்க.)

    @கார்த்திக், இங்கே எழுத வேண்டிய பதிலை முன்னாலே போஸ்ட்டில் போட்டுட்டேன், ஹிஹிஹி, அங்கேயும் போய்ப் படிச்சுட்டுப் பின்னூட்டம் ரேட்டை ஏத்திடுங்க. :D
    ம்ம்ம்ம், இந்த சீரியல் பத்தி எத்தனை பதிவு போட்டாலும் திருந்தப் போறதில்லை. சும்மா ஒரு புலம்பல் வேறே என்ன?

    ReplyDelete
  6. தங்களின் 14 வயதில் வி.எஸ்.காண்டேகர் (கா.ஸ்ரீ.ஸ்ரீ. ?), ர.சு.நல்லபெருமாள், புஷ்பா தங்கதுரை (ஸ்ரீ வேணுகோபாலன்) , மெரினா (பரணிதரன்), கோவி.மணிசேகரன், இரமணி சந்திரன், வாசந்தி, இந்திரா பார்த்தசாரதி, எண்டமூரி வீரேந்திரநாத் (சுசிலா கனகதுர்கா) ராஜேந்திரகுமார் (ங் + ஏ), பாலகுமாரன் இன்னும் பல எழுத்தாளர்களின் எழுத்துகளையும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். :-)))

    grrrrrrrr ! ( gr8 ! )

    ReplyDelete
  7. ஹிஹிஹி, லதா, ரொம்பவே சரியாச் சொன்னீங்க. இவங்களை எல்லாம் விட்டுட்டேன் இல்லை, நினைவு வச்சுச் சொன்னதுக்கு நன்றி. அப்புறம், அதிலே பாருங்க, படிக்கிறதுக்கும், வயசுக்கும் ஒரு சம்மந்தமே இல்லை. அவனவன், இல்லாட்டி அவளவள், 5, வயசிலேயும், 6 வயசிலேயும் படிக்க ஆரம்பிக்கிறப்போ 14 வயசிலே இத்தனையும் படிக்கிறது ஒண்ணும் ஆச்சரியம் இல்லையே? ஹிஹிஹி, ரொம்ப டாங்ஸு.

    ReplyDelete