எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, January 23, 2007

நானும் தமிழ் எழுதறேன் - 3

இந்தப்பதிவோட இரண்டாம் தொடரில் சில ஆசிரியர்கள் பேர் விட்டுப் போயிருந்தது. ஹிஹிஹி, லதா அதைச் சேர்த்துட்டாங்க, இருந்தாலும் இன்னும் சில பேரை விட்டிருப்பேன்.எத்தனை இருந்தாலும் வெறும் புத்தகப் படிப்போடு இல்லாமல் என்னோட பள்ளி ஆசிரியர்களையும் குறிப்பிட்டால் தான் இந்தப் பகுதி நிறைவு பெறும். என்னோட ஆரம்பப் பள்ளியில் ஆசிரியர்கள் எல்லாருமே பாரதி பக்தர்களாய் இருந்தார்கள். அவர்கள் சொல்லிக் கொடுத்த "கணபதி ராயன்" பாட்டில் இருந்து பக்தி உணர்வு வந்தது என்று சொன்னால், "அச்சமில்லை, அச்சமில்லை" பாட்டினால் மனதில் தைரியம் மிகுந்தது. அதுவும் ஈஸ்வர வாத்தியார் என்பவர் மிகவும் உரத்த குரலில் இந்தப் பாட்டை எங்களுக்கு வீராவேசம் குரலில் தொனிக்கப் பாடிக் காட்டிப் பாடச் சொல்லுவார். "ஆடுவோம், பள்ளு பாடுவோம்" பாடல் போதோ நிஜமாவே ஆடலும், பாடலுமாகச் செய்து காட்டுவார். இன்றளவும் மனதில் இவை நிற்பதற்கு அவர்களின் இந்தக் கற்றுக் கொடுக்கும் திறனும் காரணம். இன்று ஓரளவாவது தமிழ் எனக்கு எழுத வருகிறது என்றால் அதுக்கு இந்த மாதிரியான அடிப்படைதான் காரணம்.

நான் இலக்கியம் படைக்கவில்லை. நான் எழுதுவது எல்லாம் கற்பனையும் இல்லை. ஏன் என்றால் எனக்குக் கற்பனை வறட்சி இருக்கோ என்று எனக்கே சந்தேகம் உண்டு. என்னோட சொந்த அனுபவங்கள் தான் அதிகம் எழுதறேன். நான் கண்டு, கேட்டு, உணர்ந்தவற்றை அல்லாமல் வேறு எழுதுவது இல்லை. கவிதை எழுதும் முயற்சி எல்லாம் பள்ளி நாட்களோடு முடிந்து விட்டது. அப்புறம் கவிதைப் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. இலக்கண, இலக்கியங்களோடு கவிதைகள் படைப்போரைக் கண்டால் நமக்கு எழுத முடியவில்லையே என்ற வருத்தம் உண்டு. என்றாலும் படித்த சில பழைய நூல்கள் பற்றி ஓரளவாவது தெரிகிறது என்றால் அதற்கு உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியை தான் காரணம். நான் படித்தது முழுக்க கிறித்துவப் பள்ளியில் தான். ஆசிரியைகளும் கிறித்துவர்கள் தான். ஆனாலும் அவர்கள் தமிழ் சொல்லிக் கொடுக்கும் போதும், மற்ற மொழிப்பாடங்கள் சொல்லிக் கொடுக்கும் போதும் ஒரே மாதிரியான சீரான மனநிலையில் கற்பித்தார்கள். அது ராமாயணமாக இருந்தாலும் சரி, பெரிய புராணமாக இருந்தாலும் சரி, சீறாப் புராணமாக இருந்தாலும் சரி, பெத்லகேம் குறவஞ்சியாக இருந்தாலும் சரி, ஒரே மாதிரியாக நாங்கள் நன்கு கற்றுத் தேற வேண்டும் என்ற எண்ணத்துடனேயே கற்பித்தார்கள். அதுவும் எல்லாம் எங்களுக்கு நடிப்பு முறையிலும் கற்பிக்கப் பட்டது. ஆங்கில ஆசிரியை ஆங்கிலக் கவிதைகளையும், பாடங்களையும் அப்படியே நடித்துக் காட்டுவார். ஓரளவாவது ஆங்கில அறிவும் எனக்கு இருக்கிறதென்றால் அதற்கு இம்மாதிரியான ஆசிரியைகள் தான் காரணம்.

மேலும் நான் வலைப்பதிவுகளில் எழுதுவதோ, முத்தமிழ்க் குழுமத்தில் எழுதுவதோ எங்க சொந்தக்காரர்களில் மிகச் சிலருக்குத் தான் தெரியும். என்னோட எழுத்தாளச் சித்தப்பாவுக்கு(அசோக மித்திரன்) நான் நேரடியாகச் சொன்னதில்லை என்றாலும் ஏதோ கிறுக்குகிறேன் என்ற அளவில் தெரியும். அவர் என்னிடம் எல்லா விதமான விமரிசனங்களுக்கும் மனதைத் தயார் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று மட்டும் சொன்னார். மற்றபடி அவர் படிக்கிறாரா என்பது கூட எனக்குத் தெரியாது. இருந்தாலும் உறவினரிலும் சிலர் படிக்கிறார்கள் என்பது எனக்கு வரும் பின்னூட்டங்களில் இருந்து தெரிகிறது. நம் எழுத்தையும் படித்துப் பாராட்டவும் சிலர் இருக்கிறார்கள் என்பது மனதுக்கு உற்சாகம் அளிப்பதாகவே உள்ளது. இதில் எழுதுவதற்காகவே நிறையப் புத்தகங்கள் படிக்கிறேன். நிறையத் தெரிந்து கொள்ள முயலுகிறேன். உண்மையில் சொல்லப் போனால் இப்போது தான் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். தெரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். எழுத ஆரம்பித்த போது இருந்ததை விட இப்போது எழுத்தில் மெருகு ஏறி இருக்கிறது என்று மஞ்சூர் ராஜா கூறுகிறார். எனக்குத் தெரியாது. படிக்கிறவர்களுக்குத் தான் தெரியும். தவிர, அப்போது சற்று பயமும், தயக்கமும் இருந்தது. நாம் எழுதுவதை ஏற்றுக் கொள்ளுவார்களா என்ற சந்தேகமும் இருந்தது. இப்போது சிலராவது ஏற்றுக் கொள்வதால் உற்சாகம் வருகிறது. உண்மையில் என்னோட எழுத்தையும் இவ்வாறு பாராட்டுவதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. இப்படியாக ஒருவாறு நானும் தமிழ் எழுத ஆரம்பித்து இருக்கிறேன்.

7 comments:

  1. எவ்வளவு அருமையான ஆசிரியர்கள்.இந்த காலக் கட்டத்தில் இப்படி ஆசியர்களைப் பார்ப்பதரிது.ஒரு பாடத்தில் ஆர்வம் வளர அதில் ஆசிரியர் பங்கு மிக அவசியம்.நீங்கள் சொந்த அனுபவங்களை எழுதினாலும் மிக சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள்.மிக பயனுள்ள அனுபவங்கள் .வாழ்க்கைப் பாடங்கள்.நன்றி மாமி.--SKM

    ReplyDelete
  2. மேடம்,

    எல்லோரும் சொல்வதை போல தங்கள் எழுத்து மெருகேறி, தரமும் நன்றாகவே உயர்ந்திருக்கிறது.. இன்னமும் நீங்கள் எழுதுங்கள்.. நாங்கள் எப்போதும் துணையிருப்போம்.

    ReplyDelete
  3. உண்மையிலேயே எஸ்.கே.எம். ஆசிரியர்கள் தான் மனதைப் பண்படுத்துவது, அந்த வகையில் நான் ரொம்பவே அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன்னு தான் சொல்லணும்

    @கார்த்திக், நீங்களும் எஸ்.கே.எம்.மும் மட்டும் வந்து நிச்சயமாய்ப்படிக்கிறீங்க அது போதும், உங்கள் இருவருக்குமாக நான் நிச்சயம் எழுதுவேன்.

    ReplyDelete
  4. இப்ப எல்லாம் நானும் படிக்கிறேன் தலைவி அவர்களே,, என்ன என்னால் படித்த உடனே கமெண்ட் போடுவதற்கு முடிவதில்லை... வேலை கொஞ்சம் அதிகம்..

    நீங்கள் அதிர்ஷ்டசாலி நல்ல ஆசிரியர்கள் கிடைத்துள்ளார்கள். எனக்கு கிடைத்த ஆசிரியர்கள் அனைவரும் பாடத்தினை தவிர வேறொன்றும் சொல்லி தந்த்து இல்லை..
    ஆனாலும் ஒரு சில ஆசிரியர்கள் என் வாழ்வின் மறக்க முடியாத பக்கங்களுக்கு சொந்த காரர்கள்...
    எனது ஆரம்ப பள்ளியில் 5-ஆம் வகுப்பு ஆசிரியரும் உயர்நிலையில் 10ஆம் வகுப்பு ஆசிரியரும் ,பிறகு இளநிலை கல்லூரி பேராசிரியர்களும் பாடம் அல்லாது வேறுசில வழிகளிலும் எனை பாதித்தவர்கள்...

    //அசோக மித்திரன் அவர்களின் உறவா நீங்கள்.. அவரின் புத்தங்களை படித்தது இல்லை..ஆனால் அவரை பற்றிய கட்டுரை ஒன்றை சிஃபி.காம் வலை தளத்தில் படித்திட நேர்திட்ட போது அவரின் புத்தங்களை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது...

    ReplyDelete
  5. உங்களது கற்றுக்கொள்ளுதலிலும் தெரிந்து கொள்ளுதலிலும் எனைப்போன்ற சில ஜீவன்கள் தமிழ் படிக்க ஆரம்பித்துள்ளன என்பதற்கு நானே உ.ம்...

    தமிழில் படைத்திட தலைவி நீங்கள் படித்திட (கட் அவுட்) தொண்டனாய் நான்

    இன்னும் நிறைய வாசிக்க ஆவலாய்

    ReplyDelete
  6. மணிப்ரகாஷ்,
    என்னோட எழுத்தால் சிலர் படிக்க ஆரம்பித்திருக்கிறதும், எழுத ஆரம்பிச்சிருக்கிறதும் பார்த்தால் ரொம்பவே சந்தோஷமாய் இருக்கிறது. நிறையப் படியுங்கள், நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அசோகமித்திரன் என்னுடைய அம்மாவின் உடன் பிறந்த தங்கை கணவர் மணிப்ரகாஷ், நீங்கள் அவரின் எழுத்துக்களைப் படிக்க ஆரம்பித்திருப்பது அறிந்து ரொம்பவே சந்தோஷம், அவரும் தன்னுடைய வாழ்க்கைச் சம்பவங்களைத் தான் கதை ஆக்கிக் கொடுக்கிறார் அநேகமாய்.

    ReplyDelete