எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, May 30, 2007

"அதியமான்" பெயர்க்காரணம் தெரியணுமா?

வல்லி சிம்ஹனுக்குச் சந்தேகம். "கைப்புள்ள"யும், "அதியமானும்" ஒருத்தர்தானான்னு. ஏற்கெனவே அதியமான்ங்கிற பேரிலே ஒருத்தர் பொருளாதாரத்தைப் பத்தி எழுதறாராமே! எனக்குத் தெரிஞ்சு $செல்வன் தான் பொருளாதார மேதை! ஹிஹிஹி, செல்வன், இது வஞ்சப் புகழ்ச்சி எல்லாம் இல்லை. நல்ல புகழ்ச்சிதான். சந்தர்ப்பம் கிடைக்கும்போது யார் மாட்டிக்கிறாங்களோ அவங்களையும் கொஞ்சம் கவனிக்கணும் இல்லை. இன்னிக்கு நீங்க. அப்புறம் இந்த அதியமானைக் கவனிப்போம்.

முதல்லே எல்லாம் நானும் "கைப்புள்ள"னு தான் கூப்பிட்டுட்டு இருந்தேன். எல்லாம் அந்தப் போட்டியில் வந்தது. அப்போத் தான் தெரிஞ்சது, இவர் ஒரு அதியமான்னு. என்ன போட்டியா? எல்லாம் போன வருஷம் என்னோட பிறந்த நாளில் கைப்புள்ள வச்ச போட்டி தான். எனக்கு என்ன வயசுன்னு கண்டுபிடிக்கப் போட்டி. எனக்குத் தான் தெரியுமே என்னோட வயசு! நியாயமாப் பார்த்தால் என் கிட்டே கேட்டுட்டுப் பரிசையும் எனக்குத் தான் கொடுத்திருக்கணும். இவர் பாட்டுக்குப் போட்டி வச்சுப் பரிசை யாருக்கும் கொடுக்காமல் அவரே சாப்பிட்டும் விட்டார். என்ன தான் பல்லி மிட்டாய்னாலும் அதைக் கூட "ஏதடா, நம்ம தலைவி ஆச்சே! இவங்களுக்கும் கொடுப்போம்"னு தோணாமல் அவரே சாப்பிட்டார் இல்லை, அப்போது தான் எனக்கு உறைச்சது. ஆஹா! இவ்வளவு பெரிய மனசு உள்ள இவர் போன ஜென்மத்தில் "கடையெழு வள்ளல்"களில் ஒருத்தர் தான் அப்படின்னு தோணிச்சு.

என்னோட தமிழறிவை(ஹிஹிஹி, சும்மச் சொல்லிக்கக் கூச்சமா இருக்கு)யும் இவர் அடிக்கடி பாராட்டினாரா? அப்போத் தான் தெரிஞ்சது இவர் ஒரு அதியமான் அப்படின்னு. அந்த அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி கொடுத்தார். இந்த அதியமானோ ஒரு பல்லி மிட்டாய் கூடக் கொடுக்கவில்லை இந்த ஒளவைக்கு. அதான் அன்னியிலே இருந்து இந்தப் பேர் வச்சுட்டேன் இவருக்கு. இந்த ரகசியம் இதுவரை யாருக்கும் சொல்லலை. இப்போச் சந்தேகம் தீர்ந்ததா வல்லி? :))))))))))))))))))))))))))) அதான் அதியமானுக்குக் கல்யாணம்னு போஸ்ட் போட்டிருக்கேன். சங்கத்துச் சிங்கங்கள் எல்லாம் நல்லா கவனிச்சுக்குங்க என் சார்பாவும் அதியமானை!

Tuesday, May 29, 2007

அதியமானுக்குக் கல்யாணம்!!!!!!!!

ஜூன் மாதம் 3-ம் தேதி அருமை நண்பர், என் பதிவுகளையும், என் எழுத்தையும் ஆரம்ப நாட்களில் இருந்தே ஆதரித்து வருபவர், அறிமுகம் இல்லாமலேயே முதல்முதலாய் எனக்காக என் பிற்ந்த நாளன்று (போன வருஷம்) பதிவு போட்டவர், இந்த வலை உலகில் என்னைப் பற்றி அனைவருக்கும் ஓரளவு அறிமுகம் ஆகக் காரணமாய் இருந்தவர் "மோகன்ராஜ்" என்ற கைப்புள்ளக்குக் கல்யாணம். கைப்புள்ளயாய் இருந்தவர் இப்போது கல்யாண மாப்பிள்ளை ஆகிவிட்டார். என்னால் திருமணத்தில் கல்ந்து கொள்ள முடியவில்லை. ஆனால் வ.வா.ச. சார்பில் சங்கத்துச் சிங்கங்களில் முடிந்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள் என நம்புகிறேன்.

1-ம் தேதிதான் இதைப் போட்டிருக்கணும். ஆணால் அன்னிக்கு என்னாலே கணினியில் உட்கார முடியுமான்னு தெரியலை. அதான் இன்னிக்கே போட்டுட்டேன். அருமை நண்பர் திரு கைப்புள்ளக்கும் அவர் தம் அருமை மண்மகளுக்கும் எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். திருமணம் சிறப்பாக நடைபெறவும், மணவாழ்க்கை இனிமையாகவும், அருமையாகவும் அமையவும் எங்கள்வாழ்த்துக்களோடு மட்டுமில்லாமல் அந்த இறைவனையும் பிரார்த்திக்கிறேன்.

3-ம் தேதி அன்று இங்கே எனக்கும் ஒரு குடும்ப விழாவில் கலந்து கொள்ளும் வேலை இருக்கிறதால் 1-ம் தேதியே போடலாம்னு இருந்தேன். ஆனால் அதற்கான ஏற்பாடுகள் இப்போவே ஆரம்பிச்சுச் செய்ய வேண்டி இருப்பதால் என்னால் அதிக நேரம் கணினியில் உட்கார முடியலை. அதனால் இன்னிக்கே போட்டிருக்கேன். ஜூன் 3-ம் தேதியன்று கிட்டத் தட்ட நானும் கைப்புள்ளயின் கல்யாணத்தை நினைத்துக் கொண்டே இங்கே விருந்து சாப்பிடுவேன். மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

துரோகம் என்று இதைச் சொல்லலாமா? :(((((((((

சரித்திரத்தில் இடம் பெறாத உண்மைகள் இவை. எனக்குப் பள்ளி நாட்களிலேயே என் ஆசிரியர் மூலமாய் ஓரளவு தெரியவந்தது. அதற்குப் பின் பல புத்தகங்கள் மூலமும், அந்தச் சமயம் பிறந்து சுதந்திரப் போராட்டத்தை நேரில் கண்டு உணர்ந்தவர்கள் மூலமும் தெரிய வந்தது. என்றாலும் நானாக முடிவு எடுத்துக் கொண்டது முதன் முதல் "நரசையா" இதைப் பற்றி எழுதியதைப் படித்ததும் தான். தற்சமயம் "திரு ஸ்டாலின் குணசேகரன்" இம்மாதிரி மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி எழுதிய ஒரு புத்தகத்தில் இந்தப் புரட்சியையும் குறித்து ஒரு அத்தியாயம் எழுதி உள்ளார். இத்தனை விவரங்கள் கொடுத்திருக்காரான்னு தெரியலை. நான் விமரிசனம் மட்டும் தான் படிக்க முடிந்தது. இனி, இந்தப் போராட்டம் பற்றி!
*************************************************************************************

பொது வேலை நிறுத்தமாக ஆரம்பித்த இந்தப் போராட்டம் சீக்கிரமாகவே வலுவடைந்தது. போராட்டம் ஆரம்பித்தவர்கள் இந்தியர்கள், போராட்டம் நடத்துவதோ இந்திய மக்களுக்காக. படையோ இந்தியப் படை. இந்தியக் கப்பல் படை இது எனச் சொல்லி முற்றிலும் திரு நேதாஜிக்கும் அவர் சார்ந்த இயக்கத்துக்கும் ஆதரவு தெரிவிக்கும் சுவரொட்டிகள். நேதாஜியின் படம் அனைவர் கையிலும். அவர் சாகசங்கள் அனைவர் மனதிலும். இந்த விஷயம் மெதுவாக மற்ற நகரங்களுக்கும் பரவ ஆரம்பித்தது. சின்னப் பொறியாக இருந்தது மாபெரும் எரிமலைபோல் வெடிக்கக் காத்திருந்தது. உள்ளூர் காவல் படையும் நேரடியாகவே இதற்கு ஆதரவு தந்தது. மேலதிகாரிகளுக்குக் கீழ்ப்படிய அனைவரும் மறுத்தனர். ஆங்கிலேய மேலதிகாரிகள் திகைத்தனர். செய்வதறியாமல் தலைநகரைத் தொடர்பு கொள்ள விஷயம் லண்டனுக்கும் போனது.

கராச்சி, சென்னை, கல்கத்தா போன்ற துறைமுகங்களுக்கும் விஷயம் பரவி அங்கேயும் இதற்கு ஆதரவு பெருகியது. சென்னையிலும், புனே நகரிலும் இருந்த பெரும்பான்மையான தரைப்படை வீரர்களும் இதற்கு முழு ஆதரவு தந்தனர்.விமானப் படையும் மறைமுகமாக ஆதரித்தது. போஸ் எதிர்பார்த்த ஆதரவு இது தான். ஆனால் அப்போதும் ஆங்கிலேய அரசு இந்த ஆதரவு அவருக்குக் கிடைக்காமல் செய்தது. இப்போதும் இதை அடக்கப் பார்த்தது. உள்ளூரில் இருந்த காங்கிரஸின் தலைவியும், "வெள்ளையனே வெளியேறு" போராட்டத்தை வெற்றிகரமாய் பம்பாய் நகரில் நடத்தி முடித்தவருமான அருணா அசஃப் அலியின் முழு ஆதரவு இதற்குக் கிடைத்ததாய்ச் சொல்லப் படுகிறது. எல்லாக் கப்பல்களிலும் மூன்று கொடிகள் முதல்முறையாகவும், கடைசிமுறையாகவும் சேர்ந்து பறந்தன. அவை காங்கிரஸின் மூவர்ணக் கொடி, முஸ்லீம் லீகின் பச்சை வண்ணக் கொடி, கம்யூனிஸ்டின் செங்கொடி. அதிலும் மூவர்ணக் கொடியும், பச்சைக் கொடியும் சேர்ந்து பறந்தது அதுவே முதல் முறை ஆகும்.இவ்வாறு ஆரம்பித்த போராட்டத்தைக் கண்டு ஆங்கில அரசு கதி கலங்கியது என்றே சொல்ல வேண்டும். லண்டனில் உள்ள அரசு, இந்தியாவில் உள்ள அரசைக் கடிந்து கொள்ள இந்தியாவில் உள்ள அப்போதைய வைஸ்ராய் காங்கிரஸ் மேலிடத்தை நேருவின் மூலம் அணுகினார்.

ஏனெனில் காங்கிரஸ் மேலிடம் இதை முற்றிலும் ஆதரிக்கவில்லை. அரசுக்கு ராணுவ வீரர்கள் செய்யும் துரோகமாக காந்தியால் வர்ணிக்கப் பட்டது. அருணா ஆசஃப் அலியைக் கடிந்தும் கொண்டார். பேச்சு வார்த்தைக்கு நேரம் குறித்தனர். ஆனால் வீரர்களும், அதிகாரிகளும் ஒப்புக் கொள்ள மறுத்தனர். இருந்தாலும் பேச்சு வார்த்தைக்கு ஒருவர் வந்தார். அவர் தான் இரும்பு மனிதர் என்று எல்லாராலும் வர்ணிக்கப் படும் "சர்தார் வல்லபபாய் படேல்"! பின்?

Monday, May 28, 2007

சிப்பாய்க் கலகம்-கப்பல் படையில்?

இந்தியாவை ஆளவந்த ஆங்கிலேயர்கள் அரசை இங்கிலாந்தில் உள்ள ஆங்கில அரசின் நேரடி கண்காணிப்பில் இருந்து வந்த போதிலும் அங்கிருந்து சில ராணுவ அதிகாரிகளும் இந்தியாவில் பணியாற்ற வந்தார்கள். ஏற்கெனவே ஆங்கிலேயர் தாம் கைப்பற்றிய சமஸ்தானங்களின் படைவீரர்களை இங்கிலாந்தில் இருந்த ராணியின் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததோடு அல்லாமல், காலப்போக்கில் தரைப்படையைத் தவிர விமானப்படை, கப்பல்படையையும் அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. அப்படி ஏற்பட்ட கப்பல் படையில் ஆங்கிலேயக் கப்பல்படை அதிகாரிகளைத் தவிர, இந்தியர்களும் அதிகாரிகளாயும், மாலுமிகளாயும் இருந்தார்கள். பணியாற்றும் வீரர்களில் இருவரும் இருந்தபோதிலும் ஒரு ஆங்கிலேய மாலுமி தனக்கு மேல் இந்திய உயர் அதிகாரி இருப்பதை விரும்பியதில்லை. அதுபோல் இந்திய அதிகாரிகளை ஆங்கிலேய அதிகாரிகள் கூடச் சம உரிமை கொடுத்து நட்புப் பாராட்டியதில்லை. முதல் உலக யுத்தத்தில் லேசாகக் கனன்று கொண்டிருந்த இந்த நெருப்பானது 2-ம் உலக மகாயுத்தத்தின் பின் அதிகம் ஆனது.

இந்தச் சமயம் தான் திரு சுபாஷ் சந்திர போஸின் வீரதீரச் சாகசங்களால் மனம்கவரப்பட்ட சிப்பாய்களுக்கும் ஆங்கில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த "ராயல் நேவி"யையும் இது கவர்ந்தது. அவர்கள் தக்க சமயம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஏற்கெனவே "நிறவேற்றுமை" என்னும் கொடுமைக்கு ஆளாகியதோடு அல்லாமல், உணவு, உடை, போண்றவற்றிலும் பாரபட்சம் காட்ட ஆரம்பித்திருந்தது இங்கிலாந்து அரசு. முதலில் சிறு முணுமுணுப்பாக ஆரம்பித்தது இது. சரியான உணவு, உடை வேண்டும், தங்கள் தகுதியைக் குறைக்கக் கூட்டாது என்று மாலுமிகல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் கோரிக்கை வெறும் விழலுக்கு இறைத்த நீராகப் போனது. இது மட்டுமா? இந்தியா எங்கள் நாடு என்று அவர்கள் தங்கள் நாட்டின் மீதுள்ள தேசப் பற்றைக் காட்டிக் கொண்டாலோ உடனே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டது. மொத்தம் 78 கப்பல்கள், 20 கடல் சார்ந்த நிறுவனங்கள், மாலுமிகள் மட்டுமே 20,000 அதைத்தவிர அதிகாரிகள் என ஒரு பெரும்படையே இதை எதிர்த்துப் போரட முடிவு செய்தது. ஆரம்பித்தது வேலை நிறுத்தம். முதலில் பொது வேலை நிறுத்தம் என அறிவித்தனர். மாலுமிகள் தங்களுக்கு மேல் இருந்த ஆங்கிலேய அதிகாரிகளைக் கண்டதும் வணங்க மறுத்தனர். அப்படி வணங்கினாலும் இடது கையால் "சல்யூட்" கொடுத்தனர். ஆங்கிலேய அதிகாரிகளால் அவமானத்தைப் பொறுக்க முடியவில்லை.

Wednesday, May 23, 2007

சிப்பாய்க் கலகம் -இரண்டாம் பகுதி

கொஞ்ச நாளைக்கு போஸை விட்டு வைப்போம். இப்போ நாம் 1946-க்குப் போறோம். இடம் பம்பாய்த் துறைமுகம். மாதம் பெப்ரவரி 18-ம் தேதி. திடீரென துறைமுகத்தில் இருந்த ஆங்கில அரசால் நிர்வாகம் செய்யப் பட்டு வந்த இந்திய அரசின் ராணுவக் கப்பல்களில் வேலை செய்து வந்த சிப்பாய்களும், மாலுமிகளும் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். வேலை நிறுத்தம் மெதுவாய்ப் பரவுகிறது. வெளியில் தெரிய ஆரம்பிக்கிறது. பம்பாயின் மக்கள் மட்டும் இல்லாமல் அங்கே இருந்த தரைப்படை, விமானப் படையும் ஆதரிக்கும் நிலை. பம்பாயில் இருந்து முக்கியக் கேந்திரங்களான சென்னை ராஜதானிக்கும், கல்கத்தாவுக்கும், கராச்சித் துறைமுகத்துக்கும் விஷயம் போகிறது. ஆதரவு பெருகுகிறது இந்தியாவைச் சேர்ந்த மாலுமிகளின் வேலை நிறுத்தத்துக்கு. மூன்று கொடிகள் சேர்ந்து பறக்கின்றன. பிரிட்டிஷ் அரசு செய்வதறியாது திகைக்கிறது. லண்டனில் இருந்த ஆங்கிலேய அரசுக்கு விஷயம் தெரிய வருகிறது. படைகளை அடக்கக் கட்டளை இடுகிறார்கள்.

இந்தியச் சிப்பாய்களோ இந்திய ராணுவ அதிகாரிகளைத் தவிர மற்றவர்களை அதாவது ஆங்கிலேய ராணுவ அதிகாரிகளை வணங்க மறுக்கிறார்கள். ஆங்கிலேய அதிகாரிகள் இடது கையால் "ஸல்யூட்" வைக்கும் இந்தியச் சிப்பாய்களையும், அதிகாரிகளையும் பார்த்துத் திகைக்கிறார்கள். உள்ளூரைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சித்தலைவியான அருணா அசஃப் அலியின் முழு ஒத்துழைப்புக் கிடைக்கிறது. உள்ளூர் போலீஸும் ஆதரவு தருகிறது. மொத்த நிர்வாகமும் ஸ்தம்பிக்கும் நிலை! அடுத்து என்ன? காத்திருங்கள் சில நாள். இன்னொரு சிப்பாய்க் கலகம் என்றழைக்கப் பட்ட இதன் நிலைமையைப் பார்ப்போம்.

Monday, May 21, 2007

தலைப்பு உங்க இஷ்டம்!

இரண்டு பதிவுமாச் சேர்ந்து 370 ஆகி இருக்கிறது. இதிலே ஆன்மீகப் பயணம் பதிவிலே திருப்பி 2-ம் முறையாக வந்தது ஒரு 30 கழிச்சா மொத்தப் பதிவுகள் 340-க்குக் கிட்டத் தட்ட இருக்கும். எண்ணங்கள் பதிவு 287 வந்திருக்கு. இன்னும் 13 இருக்கு 300 தொட. அதுக்குள்ளே குழந்தைக்குப் பிறந்த நாள் வேறே வந்துடுச்சு. ஹிஹிஹி, குழந்தை வேறே யாரும் இல்லை. இந்தப் போர்க்கொடி என்னோட பிறந்த தினத்தைத் தப்புத் தப்பா எல்லார் கிட்டேயும் சொல்லி வச்சிருக்கு. நறநறநற. சும்மா பாலக் பனீர், பனீர் பரோட்டானு ஏதோ 2 ஐடெம் பேரு தெரிஞ்சு வச்சுக்கிட்டு எல்லார் கிட்டேயும் ஒரே ஆட்டம். எல்லாம் தெரிஞ்சாப்பல. அது சும்மானு எனக்கு நல்லாத் தெரியும். ஏமாறவே இல்லையே! பாவம் போர்க்கொடியோட ரங்கமணி.

போன வருஷம் என்னோட பிறந்த நாளுக்கு அதியமான் வ.வா.சங்கத்திலே பதிவு போட்டு அனைவருக்கும் போட்டியும், பரிசும் அறிவித்தார். போட்டி என்னனு நான் சொல்ல வேண்டாமே? ஹிஹி, வழக்கம் போல் எனக்கு என்ன வயசுன்னு தான் போட்டி. யாருமே ஜெயிக்கலையா? பரிசுக்கு வச்சிருந்த பல்லி மிட்டாயை அவரே தின்னுட்டார். என் கண்ணிலே கூடக் காட்டலை. போகுது போனு விட்டுட்டேன். பல்லி மிட்டாய் யாருக்கு வேணும்? இந்த வருஷம் அவர் வலை உலகிலேயே இல்லை. கல்யாணம் நிச்சயம் ஆகிட்ட குஷியிலே தலை எது, கால் எதுனு தெரியாம இருக்கார். பொண்ணு எங்க ஊருங்கிறதாலே அதுக்கும் போனாப் போகுதுனு தான் விடணும். தவிர, ஆரம்ப காலத்திலே இருந்து என்னோட பதிவையும், எனக்குத் தமிழ் அறிவு ஜாஸ்தின்னும் (ஹிஹிஹி, அவர் தான் நம்பிட்டு இருக்கார், நான் என்ன செய்யறது சொல்லுங்க?) என்னைப் புகழ்ந்துட்டு இருக்கிற ஒரே மனிதர். எனக்கு என்னமோ விஷய ஞானம் ரொம்ப இருக்குன்னும் நினைச்சுட்டு இருக்கார். தலை எழுத்து, எனக்கில்லை அவருக்குத் தான். இப்படி அப்பாவியா இருக்கிறாரே! இரண்டு பேரும் இன்னும் சந்திக்கலை. அதனால் அவர் கோப்பெருஞ்சோழன், நான் பிசிராந்தையார். யாரைச் சொல்றேன்னு புரியும்னு நம்பறேன். நம்ம கைப்புள்ளயத் தான். கல்யாணம் நிச்சயம் ஆகும் முன்னேயே வலை உலகத்தில் இருந்து திடீர்னு காணாமல் போயிட்டாரேன்னு நினைச்சா, மாசக்கணக்காத் தேடிப் பொண்ணைக் "கண்டு கொண்டேன்"னு வந்து சொல்றார். நல்லா இருக்கட்டும். கல்யாணம் தான் கலந்துக்கவே முடியாது.

என்ன என்னோட பிறந்த நாளைப் பத்தி எழுதப் போறேன்னு சொல்லிட்டு அதைக் குறிப்பிடலைன்னு பார்க்கறீங்களா? கைப்புள்ள கல்யாணப்பத்திரிகை அனுப்பிச்சதிலே இருந்து எழுத நினைச்சது. இன்னிக்குத் தான் நேரம் கிடைச்சது. அப்புறம் என்னோட பிறந்த நாள் பத்தி: 22-ம் தேதி தான் என்னோட பிறந்த நாள். போர்க்கொடி பேச்சை கேட்டு 24-ம் தேதினு நம்பினவங்க எல்லாம் ஏமாந்து போயிட்டீங்க. அதெல்லாம் ஒரு 2 நாள் கூட வயசைக் குறைச்சுச் சொல்லிக்கிற டைப்பே இல்லை நானுனு இதிலே இருந்து தெரிஞ்சிருக்குமே!

Saturday, May 19, 2007

இவ்வளவு அருமையான போஸ்டா?

என்னுடைய திருமண நாளுக்குத் தனிப்பட்ட முறையில் மெயில் கொடுத்தும், கவிதை எழுதியும், (ஹிஹிஹி புலி தான் வேறே யாரு? வம்பு செய்யறதே அதோட தொழில் :P வேதாவைக் கவிதை எழுதத் தூண்டியும் விட்டுட்டு இருந்தது) பதிவில் வாழ்த்தியும், ப்ளாக் யூனியன் மூலம் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் எங்கள் இருவரின் மனமார்ந்த நன்றிகள்

Wednesday, May 16, 2007

மே மாதம் என்ன விசேஷம்?

போன முறை மே மாதம் 17-ம் தேதி இந்தியாவில் இருந்தோம். இம்முறை மெம்பிஸில்.சிகாகோவில் இருந்து மெம்பிஸ் வரதுக்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் வந்தோம். யு.எஸ்ஸுக்கு 2-ம் முறை என்றாலும் சிகாகோவுக்கு முதல் முறை. அங்கே விமானத்துக்காகக் காத்துக் கொண்டிருந்த நேரம் வெளியே ஒரு கட்டிடத்தின் வாயிலில் எல்லா நாட்டுக் கொடிகளும் பற்ந்து கொண்டிருந்தன. இந்திய தேசீயக் கொடியைப் பார்த்ததும் மனம் பரபரத்தது. இன்னும் கொஞ்ச நாள் இங்கே தான் என்னும் உண்மை அந்தக் குளிர் காற்றைப்போல் முகத்தில் மட்டுமல்லாமல் நெஞ்சிலும் அறைந்தது. போன வருஷம் இந்தியாவில் இருந்தோம். மே 17-ம் தேதி. வழக்கம் போல் பையனும், பெண்ணும் தொலைபேசி வாழ்த்துத் தெரிவித்தார்கள்.

என்னுடைய குணங்களும் சரி, என் கணவருடைய குணங்களும் சரி நேர்மாறானது. திருமணம் ஆகிவந்த புதிதில் என் புகுந்த வீட்டில் மின் விளக்கு வசதி கூடக் கிடையாது. பல வருடங்களுக்குப் பின் தான் வந்தது. மதுரையில் இருந்து அங்கே முதல் முதல் போகும்போது ஆற்றில் தண்ணீர் இல்லை. ஆகவே மாட்டு வண்டி ஆற்றில் இறங்கியது எனக்கு ஒரு அதிசயமாக இருந்தது. எங்கள் மதுரைப் பக்கம் கிராமங்களில் எப்போவில் இருந்து என்று தெரியாது, பல வருஷங்களாக மின்சார வசதியும் உண்டு, ஆற்றில் பாலங்களும் உண்டு, குழாய் வசதி எல்லாம் இருந்தது. என் சித்தி இருந்த கிராமம் ஆன சின்னமனூர் செல்லும்போது இரண்டு பக்கமும் மரங்கள் சூழ்ந்த அடர்ந்த சாலையில் செல்லும்போது மிகுந்த உற்சாகமாய் இருக்கும். கிராமமும் கிராமம் போல் எல்லாம் இல்லை. சினிமா தியேட்டர் எல்லாம் உண்டு. இங்கே வந்து பார்த்தால் வீடுகளே மிகக் குறைச்சல். அதுவும் ரொம்பவே பழைய வீடு. ஆச்சரியம் எல்லாமே. பேச்சு, பழக்கம் என்று ஒவ்வொன்றும். முன்பின் தெரியாத அந்த வீட்டில் என்னை மாமியார், மாமனார், நாத்தனார், மைத்துனர்கள் ஆகியோருடன் இருக்கவிட்டு விட்டு என் கணவர் புனே சென்று விட்டார். அதுக்கு அப்புறம் அவருக்குத் திடீரென சென்னை மாற்றல் ஆனதும் நாங்கள் தனிக் குடித்தனம் வந்ததும் தனிக் கதை!

இத்தனை ஊர்கள் போனாலும் நாங்கள் மாற்றல் வரும்போதெல்லாம் கூடச் சேர்ந்தே தான் போயிருக்கிறோம். அவர் முன்னால் போய் வீடு பார்ப்பது, பின் நாங்கள் போவது என்றெல்லாம் இல்லை. 4 பேரும் சேர்ந்தே போவோம். இப்போது பையன், பெண் யு.எஸ். வந்ததும் ஊட்டி மாற்றல் ஆனபோது மட்டும் அவர் தனியாகப் போகும்படி நேர்ந்தது. அப்பவும் சிலநாட்கள் நான் அங்கேயும், சில நாட்கள் அவர் சென்னையிலுமாக இருந்தோம். என்றாலும் 2 பேரும் எப்போவும் கிழக்கும், மேற்கும் தான். அவர் சொல்வதை நான் ஏற்றுக் கொண்டதில்லை. நான் சொல்வதை அவர் ஏற்றதில்லை. அதனால் பெரிய விஷயங்களில் மட்டும் நான் முடிவு சொல்வேன். அதான் தெரிஞ்சிருக்குமே! இந்த ஐ.நா.விஷயம், ஹிலாரி கிளின்டன் விஷயம், புஷ் நீடிக்கலாமா, கலாம் மறுமுறை வரலாமா? சிதம்பரம் பட்ஜெட் நல்லா இருக்குமா, வேறே யார் போட்டால் நல்லா இருக்கும், இப்போ லேட்டஸ்டா தயாநிதி மாறன் விஷயம் இதில் எல்லாம் என்னோட முடிவு தான். மறு பேச்சே கிடையாது. மற்றச் சின்னச் சின்ன விஷயங்கள், வீட்டு நிர்வாகம், எப்போ யு.எஸ்ஸில் இருந்து கிளம்பலாம்? அவங்க அம்மா, அக்கா, தம்பி, தங்கைகள் விஷயம், பொண்ணு, பையன் பத்தி எல்லாம் அவர்தான் முடிவு எடுப்பார். நான் சும்மா தலை ஆட்டறதோடு சரி. :D

இப்போது நினைத்துப் பார்த்தால் இத்தனை வருடங்களாக எத்தனை ஊர்கள்! எத்தனை மனிதர்கள்! எத்தனை நண்பர்கள்! எத்தனை பழக்கங்கள்! எத்தனை சாப்பாட்டு வகைகள்! அதிலும் கடந்த ஒரு வருஷமாய்க் கணினி மூலம் மட்டும் எத்தனை நண்பர்கள்? நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. எங்கோ பிறந்தோம், வளர்ந்தோம், கணவன், மனைவி ஆனோம், அதன் மூலம் நட்பு வட்டம் பெரிசானது என்றால் இப்போ கணினி மூலம் உலகம் விரிவடைந்து விட்டது. இதற்கு முன்னால் எங்கள் இருவரைத் தவிர பையனும் பெண்ணும் மட்டுமே நினைவு வைத்திருக்கும் ஒரு நாள் இன்று. இப்போ என்னங்கறீங்களா? ஒண்ணும் இல்லை மே மாதம் 17-ம் தேதி திருமணநாள். அதான். வேறே ஒண்ணும் இல்லை.

போஸை விடறதில்லை!

சோவியத் யூனியன் உடைந்து ரஷ்யா ஆகிவிட்டது. வருஷம் 1993-ம் ஆண்டு. இந்தியாவின் பிரதமராக திரு பி.வி.நரசிம்மராவ் இருந்த நேரம். அப்போது திடீரென உடைந்த சோவியத் யூனியனின் தலைமை உளவு அமைப்பாக இருந்து வந்த கேஜிபியின் சில ரகசிய ஆவணக் குறிப்புக்கள் வெளி வருகிறது. அதில் போஸ் பற்றிய செய்திகள் வெளிவருகின்றன. நரசிம்மராவ் அரசு ஆடிப் போனது. செய்தி வெளியில் நன்கு பரவி அனைவரும் கேள்விகள் கேட்கும் முன்னேயே அப்போதைய ரஷ்யத் தூதுவராக இருந்த திரு ரானேன் சென் என்பவர் தன்னுடைய தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தத் தகவல்களை வெளியிட்ட ஓரியன்டல் இன்ஸ்டிட்யூட், மாஸ்கோவை அந்தச் செய்தியை முற்றிலுமாக வெளியிடுவதில் இருந்து தடுக்கிறார். இந்தியன் எம்பஸியின் அலுவலரான அஜய் மல்ஹோத்ரா, ஓரியன்டல் இன்ஸ்டிட்யூடைச் சேர்ந்த பதிப்பகத்தின் துணை ஆசிரியரைச் சந்திக்கிறார். செய்தி பரவாமல் தடுக்கிறார். என்றாலும் முதலில் வெளிவந்த செய்திகளைத் திரும்பப் பெற முடியவில்லை.

மேற்கொண்டு செய்திகள் வராமல் அவரால் தடுக்க முடிந்தது. என்றாலும் ஆசியா-ஆஃப்ரிக்கா -டுடே என்னும் செய்தித்தாளின் 8,9,10 ஆகிய எண்கள் இட்ட செய்தித்தாள்களில் வெளிவந்த செய்திகளில் போஸின் மறைவு பற்றிய உறுதியான உண்மைகள் இருப்பதாய்க் கூறப் பட்டிருக்கிறது. வார்சா பாக்ட்டின் முக்கிய அங்கத்தினராய் இருந்த மேஜர் ஜெனரல் க்லெஷ்னிகோவ் 1946-ல் நேதாஜி சோவியத் யூனியனில் இருந்ததாய்க் கூறுகிறார், நிச்சயமான ஒன்றாக. மறைந்த ஃபார்வார்டு ப்ளாக் அங்கத்தினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு சித்தா போஸ் சோவியத் யூனியன் சென்றபோது அவரிடம் சில ஆவணங்களை போஸே நேரில் கொடுக்க நேர்ந்ததாயும் போஸ் இருந்த நிலையைப் பற்றி அவர் அதிர்ச்சி அடைந்ததாயும் குறிப்பிடுகிறார். ஜோசஃப் ஸ்டாலின், மோலோடோவ், வெஷென்ஸ்கி மூவரும் கூடி போஸ் விஷயத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதித்ததாகவும். அதைக் குறிப்பிடும் ஆவணம் ஒன்றையும் தான் பார்த்ததாகவும் அந்த மேஜர் க்லெஷ்னிகோவ் கூறுகிறார். சமீபத்தில் இந்திய அரசால் நியமிக்கப் பட்ட முகர்ஜி கமிஷனின் விசாரணைக்கு இவர் அழைக்கப் பட்டார். ஆனால் இவர் கமிஷன் முன் ஆஜராகவில்லை. ரஷ்ய அரசு இவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டதோடல்லாமல் தன் தரப்பில் தெளிவான ஆவணங்களையும் கொடுக்கவில்லை. தற்சமயம் இவர் ரஷ்ய அரசின் வெளி உறவு அமைச்சரகத்தின் சார்பில் துருக்கியில் ரஷ்ய தூதரகத்தில் முக்கியமான பதவியில் இருப்பதாக ரஷ்ய அரசின் அதிகார பூர்வச் செய்திக் குறிப்புக் கூறுகிறது.

Monday, May 14, 2007

அம்பியோட கல்யாணம்

மே மாதம் 14-ம் தேதி திங்கள் அம்பிக்குக் கல்யாணம். இந்த வலை உலகுக்கு வந்து பழக்கம் ஆனவர்களில் அம்பியும் ஒருவர் என்றாலும் அவர் என்னைச் சீண்டுவதும், நான் அவருக்குப் பதில் கொடுப்பதும் ஒரு வருஷமாக ஓயவில்லை. அதனாலேயே எல்லாரும் என்ன இது இவங்க இரண்டு பேருக்கும் எப்போ பார்த்தாலும் சண்டைன்னு நினைக்கிறாங்க! இது இன்னும் ஓயவில்லை என்பதும் நிஜம். இத்தனைக்கும் 2 பேரும் ஒரே நட்சத்திரம், ஒரே ராசி. என்றாலும் 7-ம் பொருத்தம் தான். நான் என்ன சொன்னாலும் அதற்கு அவர் எதிராகவும் அவர் என்ன எழுதினாலும், நான் போய் நல்லா இல்லைனு சொல்லுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இத்தனைக்கும் அவரோட தங்கமணி குறிப்பிட்ட மாதிரி அவர்களோட ப்ளாகர் குடும்பத்து அங்கத்தினர் கூட இல்லை நான். இருந்தாலும் இது தொடருகிறது. அம்பி தன்னுடைய கல்யாண விஷயத்தை என்னிடம் தெரிவிக்கும்போதே மே மாதம் நான் இந்தியாவில் இருக்க மாட்டேன் என்று எனக்கு தெரியும். அப்பாடா, மொய் எழுதறதிலே இருந்து தப்பிச்சேனேன்னு ஒரு அல்ப சந்தோஷம்.! :P இது அம்பிக்கு! இதான் கல்யாண மொய்!

இந்த வலை உலகில் நாங்கள் இருவரும் போட்டுக் கொள்ளும் சண்டை ரொம்பப் பிரபலம் ஆகி இருக்கிறது. தினத் தந்தி "சிந்துபாத்" மாதிரி இது ஓயாது என திரு தி.ரா.ச. அவர்கள் கூட ஒருமுறை கூறி உள்ளார். இன்று காலையில் இருந்து அம்பியைத் தொடர்பு கொள்ளப் பல முறை முயன்றும் முடியவில்லை. நேரில் சென்று வாழ்த்த முடியாவிட்டாலும், தொலைபேசியாவது வாழ்த்தலாம்னு நினைச்சேன். மொபைலை நிறுத்தி வச்சிருப்பார் போலிருக்கு. இந்தப் பதிவை அவர் பார்க்கும்போது திருமணம் ஆகிப் பல நாட்கள் ஆகி இருக்கும். அல்லது மாசங்கள் ஆகி இருக்கும். இருந்தாலும் பார்ப்பவர்கள் யாராவது சொல்லுவார்கள் என நம்புகிறேன். மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள் அம்பி அன்ட் அவரோட தங்கமணி இருவருக்கும். அந்த மரியாதா புருஷோத்தமன ஆன ஸ்ரீராமனையும், அன்னை சீதாவையும் போல் ஈருடலும், ஓருயிருமாய் செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் இரண்டும் கலந்து வாழ எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளைப் பிரார்த்திக்கிறேன்.

Sunday, May 13, 2007

வால்மீகி ராமாயணமும், ஆர்ஷியா சத்தாரும்!





இந்த ராமர் படம் மாதிரியே ஒரு ராமர் படம் எங்க வீட்டிலேயும் உண்டு. இது எனக்குக் கண்ணபிரான், ரவிசங்கர் அனுப்பியது. எங்க வீட்டுக்கு அவர் வந்தப்போ எங்க ராமர் படத்தைப் ஃபோட்டோ எடுக்கச் சொன்னோன். அவர் எங்க பூஜை அலமாரியை ஒரு கோயில் மூலஸ்தானம் மாதிரிக் கருதி எடுக்கவில்லை. அப்புறம் நான் கேட்டப்போத் தான் தெரிந்தது அவர் எடுக்கவில்லை என. அதுக்காக இப்போ இந்தப் படத்தை அனுப்பி வச்சார். இந்த ராமர் ஒரிஜினல் தஞ்சைச் சித்திரக் கலையைச் சேர்ந்தது. என் புகுந்த வீட்டில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. எப்போது இருந்து என்று யாருக்கும் தெரியவில்லை. குறைந்தது 300 ஆண்டுகளாவது இருக்கலாம். மேலேயும் இருக்கலாம். ராமர் பட்டாபிஷேஹக் கோலத்தில் உள்ள இந்தப் படத்தில் அவர் தன்னுடைய எல்லாப் பரிவாரங்களுடனும் இருக்கிறார்.

வல்லி அவர்கள் தன்னுடைய வலைப்பக்கத்தில் ராமர் கதையை முடிச்சுப் பட்டாபிஷேகம் நடத்தினப்போ இந்தப் படம் இருந்தால் போட்டிருக்கலாமேன்னு நினைச்சேன். அதற்குப் பின் தான் இந்தப் படம் எனக்கு வந்தது. ராமாயணமோ, மஹா பாரதமோ படிக்கப் படிக்க அலுப்புத் தட்டாத ஒரு புத்தகம். இப்போவும் நான் இங்கே "ஆர்ஷியா சத்தார்" என்பவர் எழுதிய "வால்மீகி ராமாயண"த்தின் ஆங்கில மொழி பெயர்ப்பைத் தான் படித்துக் கொண்டிருக்கிறேன். அவங்களோட உழைப்பு ரொம்பவே பிரமிக்க வைக்கிறது. திரு ராமானுஜம், ஆர்.கே. நாராயாணன், ராஜாஜி, இன்னும் பலரின் புத்தகங்களையும்ம் படித்துப் பார்த்துப் பல ஆண்டுகள் உழைப்பினால் எழுந்த இந்த புத்தகத்தை அவர் வெளியிட்டது 1996-ல் பெங்குவின் வெளியீடாக வெளியிட்டிருக்கிறார். தெற்காசிய மொழியிலும், நாகரீகங்களிலும் ஆராய்ச்சி செய்து "டாக்டர்" பட்டம் வாங்கி உள்ள இவர் இந்தப் புத்த்டகத்தைத் தன் தாய், தந்தைக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறார். தாய் நஜுரா சத்தாரும், தந்தை ஹமீத சத்தாரும் தனக்கு உணவு, உடை, இருப்பிடம் கொடுத்துக் காப்பாற்றி இருக்கவில்லை என்றால் இந்தப் புத்தகத்தைப் பற்றித் தான் கவலை இல்லாமல் ஆராய்ச்சி செய்திருக்க முடியாது என்றும் குறிப்பிடுகிறார். இது வரை நான் படித்ததில் ராமர் ஜனஸ்தானத்துக்குப் போகும் வழியில் ஜடாயுவுடன் ஏற்படும் சந்திப்பைப் பற்றி மட்டும் குறிப்பிடவில்லை. மற்றபடி வால்மீகி ராமாயணத்தை அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இருக்கிறார். மிகவும் எளிமையான ஆங்கிலத்திலும் உள்ளது இந்தப் புத்தகம். நேரமும், விருப்பமும் உள்ளவர்கள் நூலகத்தில் இருந்தாவது வாங்கிப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Friday, May 11, 2007

மீண்டும் போஸ் வந்து விட்டார்!

மறுபடியும் போஸைப் பத்தி எழுதி முடிச்சுடறேன். அப்புறம் ஒரு இரண்டு நாளைக்காவது முக்கியமான சில ஆணிகளை எல்லாம் எடுக்க வேண்டி இருக்கும். அதுக்கும் அப்புறம் தான் மே மாதம் என்ன முக்கியம்னு சொல்லுவேன். அதுவரை மணிப்ரகாஷ் கொஞ்சம் பொறுத்துக்குங்க. சிரிக்க முடியலை. எப்படிச் சிரிக்கிறதுன்னு புரியலை அதான்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
முதன் முதலில் 1972-ல் ரஷ்யா இதைப் பற்றி வெளிப்படையாகப் பேசி இருக்கிறது. நமக்கு மேற்கூறிய ஆதாரபூர்வமான விஷயங்களில் இருந்து உறுதியாகத் தெரியும் போஸ் விமான விபத்தில் இறக்கவில்லை என்றும், அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை எனவும்.கிடைத்திருக்கும் அனைத்துச் செய்திகளுமே இந்தச் செய்தியின் பின்னணியில் ரஷ்ய அரசின் வேலைத்தனம் இருப்பதை உறுதி செய்கிறது. நம் நாடு சுதந்திரம் அடைந்து 50 வருஷங்களுக்கு மேல் ஆகியும் சோவியத் யூனியனும் உடைந்து கம்யூனிஸ்ட் ரஷ்யா உதயம் ஆகியும் இந்த ரகசியம் உடையவில்லை.

இப்போது மறுபடி 40களுக்குச் செல்வோம். ஆரம்பத்தில் இருந்தே ஜோசஃப் ஸ்டாலினுக்கு நேருவைக் கண்டால் பிடிக்காது. அது ஏன்? யோசிக்க வேண்டிய விஷயம் இல்லையா? சுதந்திர இந்தியாவின் சார்பில் முதன் முதல் சோவியத் ரஷ்யாவுக்கு தூதராகச் சென்றது நேருவின் சகோதரியான திருமதி விஜயலட்சுமி பண்டிட் ஆவார். அவர் ஸ்டாலினைச் சந்தித்து அரசு முறையில் வணக்கம் தெரிவிக்க விருப்பம் தெரிவித்தும் ஸ்டாலின் அவரைச் சந்திக்க மறுத்து விட்டார். ஏன்? கடைசி வரை அவருக்கு ஸ்டாலின் அனுமதி கொடுக்கவே இல்லை! பல உலக நாடுகள் நேரடியாகவும், மறைமுகமாயும் நேருவை சோவியத் யூனியனுக்கு அழைக்க வற்புறுத்தியும் ஸ்டாலின் நேருவை அழைக்க இணங்கவே இல்லை.

1951-ல் சோவியத் யூனியனுக்கு இந்திய அரசின் சார்பாகச் சென்ற ஒரு குழுவில் திருமதி அருணா அசஃப் அலியும் ஒருவர். இவர் பம்பாயில் நடந்த "வெள்ளையனே வெளியேறு" போராட்டத்தை வெற்றிகரமாய் நடத்திக் காட்டியவர்.இவரிடமும் மற்ற அரசியல் தலைவர்களிடமும், முக்கியமாய் கம்யூனிஸ்ட் தலைவர்களிடமும் நேருவிடம் இருந்து விலகி இருக்கும்படி அறிவுறுத்துகிறார் ஸ்டாலின். என்றாலும் உண்மை வெளி வரவே இல்லை. க்ளாஸ்னாஸ்ட் காலத்தில் தான் இந்த விஷயத்தில் கொஞ்சமாவது வெளிச்சம் தெரிந்தது. க்ளாஸ்னாஸ்ட் உலக நாடுகள் மத்தியில் சோவியத் ரஷ்யாவிற்கு இருந்து வந்த அவப் பெயரைத் துடைக்க முயற்சி செய்தார். சுபாஷ் போஸின் விஷயத்தைப் பற்றி மறு பரிசீலனை செய்யவும் முயற்சிகள் எடுக்கப் பட்டது. 1989-ல் வெளிவந்த ஒரு புத்தகத்தில் ஈ.தேவ்யத்கினா என்பவர் எழுதுகிறார். போஸ் இறந்ததாய்ச் சொல்லப் படுவது சந்தேகத்துக்கு உரியது என்று. அவர் பல மேற்கோள்களைக் காட்டுகிறார்.

ஒரு வருடத்திற்குப் பின் ஏவி.ராய்கோவ் என்பவர் எழுதிய ஒரு புத்தகத்தில் க்ளாஸ்னாஸ்டிற்கு மிகவும் நெருங்கிய லியோனிட் மிட்ரோவின் என்பவர் கூறியதாய் அவரும் மேற்குறிப்பிட்ட விஷயத்தை உறுதி செய்கிறார். ஆனால் இதே மிட்ரோகினை சந்தித்த இந்திய சோவியத் நல்லுறவு பற்றிய பேராசிரியர் புரபிராயிடம் மிட்ரொகின் இந்த விஷயத்தைக் கிளறவேண்டாம் எனச் சொல்கிறார். இதனால் இந்தியஸோவியத் நல்லுறவு பாதிக்கப் படும் என்றும் சொல்லுகிறார். தன்னுடைய ரகசியத்தை வெளியிடாமலேயே 2002-ல் அவர் இறந்து போகிறார்.

உடைந்த ரஷ்யாவின் நிலை என்ன? நாளை பார்ப்போம்!

Thursday, May 10, 2007

இன்று புதிதாய்ப் பிறந்தேன்!

புதிய பிறப்பு!

இந்த முறையில் போஸ்ட் போட உதவிய டாக்டர் சங்கர் குமார் (வீஎஸ்கே) அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். ரொம்ப நாளைக்குப் பின் சந்தோஷமாய் இருக்கிறது, எந்தவிதத் தடங்கலும் இல்லாமல் நான் தமிழ் எழுத முடிவதற்கும், தவறுகள் ஏற்படாமல் எண்ண ஓட்டம் தடங்கல் இல்லாமல் வரும்போது எழுத முடிவதற்கும் புதிய பிறப்பாய்ப் பிறந்தது போல் உணர்கிறேன்.

இன்று புதிதாய்ப் பிறந்தேன். இன்னும் தலைப்பைச் சரியான இடத்தில் பொருத்த வரவில்லை. முயற்சி செய்கிறேன். அது வரை என்னுடைய மோசமான தமிழையும் சகித்துக் கொண்டு வந்து பின்னூட்டம் போட்ட உங்கள் எல்லாருக்கும் நன்றிகள்.

Tuesday, May 08, 2007

ஹிஹிஹி, தலைப்புக் கொடுத்தேன், காணல்லை, கண்டு பிடிங்க!

இந்த மே மாதம் என்னாலே மறக்க முடியாததாக இருந்து வருகிறது. போன வரு்ஷம் மே மாதம் 2-ம் தேதியை என்னால் மறக்கவே முடியாது. வலை உலகுக்கு வந்து தமிழில் எழுத ஆரம்பிச்சு ஒரு மாதம் ஆகி இருந்தது. அப்போ நான் எழுதறதும் சரி, பின்னூட்டம் கொடுக்கிறதும் சரி ரொம்பவே யோசிப்பேன். யோசித்து யோசித்துத் தான் கொடுப்பேன். சில விஷயங்களைப் பின்னூட்டத்திலோ அல்லது பதிவிலோ எழுதணும்னு ஆர்வம் இருந்தாலும் தயக்கமாக இருக்கும். இத்தனைக்கும் என் கணவர் எனக்குச் சில வி்ஷயங்களுக்குப் பதில் கொடுக்கச் சொல்லி அவர் சார்பில் சொன்னதும் உண்டு. பொதுவாய்ப் பள்ளி நாட்களிலும் சரி, மற்ற சமயங்களிலும் சரி, என்னை முதலில் பார்க்கிறவர்கள் அவ்வளவு புத்திசாலியாய் என்னை நினைத்தது இல்லை. சற்றுச் சராசரியான தோற்றத்துடன் இருப்பதாலோ என்னவோ தெரியாது. எங்கள் கணக்கு ஆசிரியைக்குக் கடைசி வரை என்னிடம் ஆச்சரியம் தான், நான் மற்றப் பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் வாங்குகிறேன் என்பது அறிந்து. ஆனால் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் கொஞ்சம் வாயும், கையுமாய்த் தான் இருப்பேன். அது வெளியே தெரியக் கொஞ்சம் நாள் ஆகும்.

இப்படியாக வலைஉலகில் பிரவேசித்த காலத்தில் நான் எழுதி வந்த பின்னூட்டங்கள் சிலரை நான் அவ்வளவாய் ஆழமாய் யோசிப்பது இல்லை என்ற முடிவுக்குக் கொண்டு வந்தது என்பதை அவர்கள் எனக்குத் தந்த பதில்களில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது. என்றாலும் நான் அதற்காக எல்லாம் மனம் தளரவில்லை. எனக்குள் இருக்கும் ஓட்டம் எனக்கு மட்டும் தெரிந்தால் போதும் அல்லவா? உரிய நேரத்தில் தானே வெளியே வரும், அதை அப்போது என்னாலும் தடுக்க முடியாது என்பதை அறிவேன். அது போல் தான் இப்போது பதிவுகள் எழுதுவதும் புதிய பரிமாணம் என்று வல்லி சிம்ஹன் போன்ற ஆரம்பக் காலத் தோழிகள் சிலர் சொல்கின்றனர். அப்படி எல்லாம் எதுவும் இல்லை. எனக்குள் ஊறிப் போன விக்ஷயங்கள் இவை எல்லாம். வெளியே வர பகிர்ந்து கொள்ளச் சரியான தருணத்துக்குக் காத்திருந்த கணங்கள் இத்தனை வருஷங்கள் ஆகி இருக்கின்றது.

போஸைப் பற்றியோ, பாரதியைப் பற்றியோ தெரிந்து கொள்ள அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் இருக்க வேண்டியது இல்லை. சரியான வழிகாட்டல் இருந்தால் போதும். எனக்கு இருந்தது. என் அம்மாவின் சித்தப்பா சுதந்திரப் போராட்ட வீரர். "சுதந்திரச் சங்கு" பத்திரிகைக்காக உழைத்தவர். என் அம்மாவின் அப்பாவும் மறைமுகமாக சுதந்திரப் போராட்டத்தை ஆதரித்தவர். என் அப்பாவும் படிப்பை விட்டவர். இப்படி அனைவரும் இருக்க அந்த நாளையப் பத்திரிகைகளும், செய்தித் தாள்களும் என் தாத்தா சேகரித்து வந்தவைகளை நான் படிக்க நேரிட்டது எனக்கு ஒரு அதிர்்ஷ்டம் என்றால் அதற்குத் தகுந்த ஆசிரியர்களும் அமைந்தார்கள். பள்ளி இறுதி நாட்களில் தான் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உண்மையான வடிவம் கிடைக்கப் பெற்றது. அப்போது தான் முதல் முதலாய் பம்பாய் கப்பல் புரட்சியைப் பற்றி அறிய நேரிட்டது. திரு நரசையா என்ற கடலோடி (அவர் மிகவும் ரசிக்கும் வார்த்தை இது) எழுதிய புத்தகங்களின் அறிமுகமும் கிடைத்தது. போஸையும், அவரின் போராட்டமும், காந்தியின் பங்கும் அறியப் பெற்றேன். அதற்குப் பின் நான் படித்த பல புத்தகங்கள் எனக்கு இந்தியாவை ஒரு புதிய உலகமாய்க் காட்டியது. முக்கியமாய் "மனோஹர் மல்கோங்கர்" எழுதிய இந்திய அரசர்களைப் பற்றிய புத்தகங்கள் மன்னர்களின் வாழ்வு பிரிட்டிக்ஷார் கையில் எவ்வாறு இருந்தது எனச் சித்தரித்தது. பிரிட்டிஷ் ஆட்சி பற்றிய ஒரு கணிப்பும், தலாய்லாமா பற்றியும், லாமா தேர்ந்தெடுக்கப் படும் முறை பற்றியும் படித்தேன். ஓரளவு புரிந்து கொண்டேன். இப்போது மறுபடி படிக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். தெரிந்தது கொஞ்சம் தான். தெரிந்து கொள்ள வேண்டியது அதிகம் என்றும் புரிகிறது. ஹிஹிஹி, நான் எழுத வந்தது மே மாதம் பத்தி இல்லை? அ.வ.சி.

இந்த மே மாதம் ஏன் மறக்க முடியாதுன்ன நீங்க எல்லாரும் ஒரே குரலில் கத்த எல்லாம் வேண்டாம் "அம்பிக்குக் கல்யாணம்"னு. மொய் எதுவும் இல்லைனு சொல்லிட்டேன் அம்பி கிட்டே. அதனால் அது இல்லை. வேறே ஒரு வி்ஷயம் இல்லை 2 இருக்கு. அப்புறம் வந்து சொல்றேன். ஆணி கூப்பிடுது. வரேன் பிடுங்கிட்டு.

Thursday, May 03, 2007

ரஷியாவின் பங்கு என்ன?

இந்திய அரசியலில் ரஷியாவின் பங்கு மகத்தானது. மறைந்திருந்து இயக்கும் நாடு என்றும் சொல்லலாம். சோவியத் யூனியனாய்ப் பிரியாமல் இருந்த நாட்டில் தான் உதவி கேட்க போஸ் போக நினைத்தார். ஆனால் அவரால் செல்ல முடிந்ததா? நேசப் படைகளிடம் ஜப்பான் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சரண் அடைந்து வந்த நேரம் அது. போஸுக்குப் பிரிட்டிஷாரிடம் மாட்டிக் கொள்ள இஷ்டம் இல்லை. ஜப்பானிய ராணுவம் அவர் எதிரே இரண்டே இரண்டு கருத்துக்களை முன் வைக்கிறது. ஒன்று பிரிட்டிஷாரிடம் சரண், மற்றது வேறு யாரு உதவியுடனாவது இந்திய விடுதலைக்கு முயற்சி. போஸ் இரண்டாவதைத் தேர்ந்தெடுக்கிறார். பணமோ, ராணுவ உதவியோ தர முடியவில்லையென்றாலும் ஜப்பானிய ராணுவ அதிகாரிகள் போஸுக்கு உதவி செய்யத் தான் நினைத்தனர். ஜப்பானிய ராணுவத்தில் லெஃப்டினன்ட் ஜெனரலாக இருந்த சுப்ரோ இசுடோ ஒரு ரகசியத் திட்டம் தீட்டுகிறார். அதில் ஐ.என்.ஏ. தலைவர்களும், போஸின் அந்தரங்கக் காரியதரிசி ஈ. பாஸ்கரனும், டாக்டர் ஹபிபுர் ரஹ்மானும் பங்கெடுத்துக் கொள்கின்றனர்.

அதன்படி போஸும் அவருக்கு நெருக்கமான ஐ.என்.ஏ. தலைவர்களும், டாக்டர் ஹபிபுர் ரஹ்மானும், ஜப்பானிய ராணுவத்தின் மற்றொரு படைப்பிரிவான க்வான்டாங்க் பிரிவின் தலைவரான லெஃப்டினன்ட் ஜெனரல் ்ஷிதேய் அவர்களும் சைகோனில் இருந்து செல்லும் ஒரு விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்யப் படுகிறது. விமானத்தில் செல்லுவதாய்ப் போக்குக் காட்டிப் பின் நேசப் படை வீரர்களிடம் இருந்து தப்பித்து மஞ்சூரியா அடைவதே போஸின் நோக்கமாய் இருந்தது. ஆனால் நடுவானில் விமானம் விபத்துக்கு தாய்பேய் விமான நிலையத்துக்கு அருகில் உள்ளானதாய்த் தெரிவிக்கப் பட்டது. விமானத்தில் போஸுடன் சென்ற ஹபிபுர் ரஹ்மான் அடுத்ததாய்த் தாயபேயில் காணப்படுகிறார், போஸ் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது என்றும் விமான ஓட்டிகளுடன் சேர்ந்து போஸும், அவரின் ஐ.என்.ஏ. தலைவர்களும், ஜெனரல் ஷிதேயும் மரணமடைந்ததாயும், எல்லார் உடலும் ஜப்பானிய ராணுவத்தால் எரியூட்டப் பட்டதாயும் சொல்கிறார்.

இது பற்றி பொலிட் பீரோ உறுப்பினர்களில் ஒருவரான ராஜ் சிங் சொல்வது: விமான விபத்து என்பதே ஒரு பொய் என்றும் அது நடக்கவில்லை என்றும் தாயபேய் அரசு உறுதி செய்து விட்டது. விமானத்தில் பயணம் செய்த நேதாஜி சோவியத் யூனியனின் எல்லையில் சோவியத்-மஞ்சூரியன் எல்லைக்கு அருகில் சோவியத் எல்லையைக் கடக்கும்போது சோவியத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களால் சிறை பிடிக்கப் பட்டார். இந்தத் தகவலை உறுதி செய்ததாய் திரு ராஜ் சிங் கூறுவது யார் என்றால் சோவியத் நாட்டின் பொலிட் பீரோவால் அங்கீகரிக்கப்பட்ட மிக உயர்ந்த பதவி வகிக்கும் மற்றும் வெளிநாட்டு அரசியல் விவகாரங்களில் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரமும் பெற்ற, "பாபாஜன் கஃப்ரவ்" என்பவரால் சொல்லப் பட்டு உறுதியும் செய்யப் பட்டது. இவர் உஸ்பெகிஸ்தானின் அரசியல் தலைவர்களில் மிக முக்கியமானவரும் ஆவார். இந்தியாவிற்குப் பலமுறை விஜயம் செய்தவரும் இந்திய அரசியல் நன்கு அறிந்தவரும் ஆவார். இவரின் நெருங்கிய நண்பர் ஆன புது தில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆன ராம் ராகுலிடம் இந்தத் தகவலை அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் அப்போதைய சோவியத் தூதுவர் ஆன சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு போஸைப் பார்க்க அனுமதி அளிக்கப் பட்டது. ஆனால் அவருடன் பேச முடியவில்லை. போஸ் இருந்த நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் எப்படியாவது அவரைத் தொடர்பு கொள்ள நினைத்தும் முடியவில்லை. இதை அவர் அப்போதைய பிரதமர் ஆன திரு நேருவிடம் தெரிவித்து எப்படியாவது போஸை உயிருடன் சிறையில் இருந்து மீட்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார். எதிர்க்கட்சியினர் சிலரும் செய்தி அறிந்து வற்புறுத்தியும் கூட இந்திய அரசு எந்த வித முயற்சியும் சோவியத் யூனியனுக்கு எதிராய் எடுக்கவில்லை. மாறாக மெள்னம் சாதித்தது.

இதில் கவனிக்கப் பட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஆகஸ்ட் 18, 1945-ல் போஸ் விமான விபத்தில் இறந்ததாய்ச் சொல்லப் பட்டாலும் அதிகாரபூர்வமாய் ஜப்பானியர் வெளியிட்டது 24 ஆகஸ்ட் 1945-ல் தான். கிட்டத் தட்ட ஒரு வாரம் மெளனமாய் இருந்த ஜப்பான் அரசு பின் திடீரென இந்த முடிவுக்கு வரக் காரணம்? இந்த 24-ம் தேதிக்கு முதல் நாள் தான் ஜப்பானிய ராணுவத்தின் க்வான்டாங் படை செம்படையிடம் மஞ்சூரியாவில் சரண் அடைந்தது. நேதாஜியுடன் இறந்த லெஃபிடினன்ட் ஜெனரல் ்ஷிதேய் கவான்டாங்க் படைக்குத் தலைமை வகித்து வந்தார்.

இனி, ஸ்டாலின் சொன்னது என்ன? நேருவை மதித்தாரா? இந்தியத் தலைவர்களை மதித்தாரா? 1946-ல் பம்பாயில் நடந்த ராயல் நேவியின் புரட்சிக்கும் நேதாஜிக்கும் சம்மந்தம் இருந்ததால் தான் காங்கிரஸ் அந்தப் புரட்சியை 1857-ம் ஆண்டி சிப்பாய்க் கலகத்துக்கு ஈடாகப் பேசப் பட்ட புரட்சியை இன்று வரை அரசியல் வரலாற்றில் மறைக்கிறதா? மெதுவாயத் தான் வரும். ஆணிகள் ரொம்பவே அதிகமாய் இருக்கிறது. கையில், காலில் குத்தாமல் பிடுங்கணுமே அதான். :D

Wednesday, May 02, 2007

உலக நாடுகள் சொல்வது என்ன?

போஸ் தாய்பேய் விமான விபத்தில் இறந்து விட்டதாய்ச் சொல்லப் பட்டதை இங்கிலாந்தில் உள்ள ஆங்கில அரசும் சரி, இந்தியாவை ஆண்ட ஆங்கில அரசும் துளிக்கூட நம்பவில்லை. 1945-ல் இருந்து பலமுறைகள் கிட்டத் தட்ட ஒரு வருடம் போல் பல விசாரணைகள் செய்தது. ஆங்கிலேய உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள் கொடுத்த தகவலோ பலவிதமாய் இருந்தது. விமான விபத்து நடந்தது, இறந்து விட்டார் எனச் சிலர். விபத்தே நடக்கவில்லை, மறைந்து விட்டார் எனச் சிலர், ரஷ்யாவில் இருக்கிறார் எனச் சிலர், சைபீரியாவில் மறைந்துள்ளார் எனச் சிலர். கண்ணால் பார்த்தோம் விபத்தை என்றும் சிலர். என்னதான் போஸின் நடவடிக்கைகள் ஆங்கில அரசுக்கும் சரி, இந்திய ஆங்கில அரசுக்கும் சரி பிடிக்கவில்லை என்றாலும் அவர் இறந்துவிட்டார் என்பதை நம்பவும் இல்லை, உறுதியும் செய்யவில்லை.

அமெரிக்காவும் இந்த விஷயத்தை மிக நன்காவே அறிந்திருந்தது. அந்தச் சமயம் மிக மிக நட்புடன் இருந்து வந்த மவுன்ட்பேட்டன் பிரபு அவர்களும், அமெரிக்காவின் மாக் ஆர்தரும் சரி ஒரு உடன்பாட்டுக்கு வந்திருந்தது போல் வேலைகள் நடந்தது. போஸ் விமான விபத்தில் இறந்ததாய்ச் சொல்லப் பட்ட ஆகஸ்ட் 18-ம் தேதிக்கு அப்புறம் செப்டெம்பரில் அமெரிக்க ராணுவம் தாய்பேய்க்குச் சென்றது. இது பிரிட்டனும், அமெரிக்காவும் சேர்ந்து செய்த ஒரு ஏற்பாடு எனத் தெள்ளத் தெளிவாய் விளங்கியது. அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த மிகத் திறமையான உளவுப்படை அதிகாரிகளால் லெப்டினன்ட் கர்னல் ஹபிபுர் ரஹ்மான் குறுக்கு விசாரணை செய்யப் பட்டார். கிட்டத் தட்ட ஒரு வரு்ஷத்துக்கு மேல் முயன்றும் எந்த முடிவுக்கும் எட்ட முடியவில்லை. விமானம் விபத்துக்குள்ளானதும் நிரூபிக்கப் பட முடியவில்லை. போஸ் இறந்ததற்கான உறுதியான சான்றுகளும் கிடைக்கவில்லை. இது இவ்வாறிருக்க அமெரிக்க ராணுவத்திற்கான செய்தியாளர் ஒருவர் போஸ் இறந்ததாய்ச் சொல்லப் பட்ட சில மாதங்களுக்குப் பின் அவரைப் பார்த்ததாய்ச் சத்தியமே செய்தார் என்பது தான். இதற்குப் பல வருடங்களுக்குப் பின் இந்திய அரசால் நியமிக்கப்பட்ட ஷா நவாஸ் கமிட்டி அறிக்கைக்குப் பின்னர் அமெரிக்காவின் "நியூயார்க் டைம்ஸ்" பத்திரிகை தன்னுடைய காலமானார் என்று இரங்கல் செய்தி குறிக்கும் பக்கத்தில் போஸ் இறந்து விட்டதாய்க் குறிப்பிட்டிருந்தது.

சுதந்திரம் பெறும் வரை இந்த வி்ஷயத்தில் அவ்வளவாய் ஈடுப்பாடு நேரடியாகக் காட்டாத காங்கிரஸ் தலைவர்கள், சுதந்திரத்துக்குப் பின் பல கட்சிகளின் தலைவர்களுக்குப் பதில் சொல்ல நேர்ந்தது. போஸ் விஷயத்தில் ஒரு முடிவுக்கு எட்ட முடியாத நிலையில் தவித்த நேரு அவர்கள் 'ஷா நவாஸ் கமிட்டி" அமைத்தது. 1956-ல் அந்தக் கமிட்டிப் பல விசாரணைகளுக்குப் பின் விமான விபத்தில் போஸ் இறந்துவிட்டார் என அறிக்கை சமர்ப்பித்தது. இருந்தாலும் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் தீரவில்லை. திரும்பத் திரும்ப அது கொடுத்த வற்புறுத்தல் தாங்காமல் 1974-ல் "ஜி.டி.கோஸ்லா" தலைமையில் திரும்பவும் ஒரு கமி்ஷன் ஏற்படுத்தி அதே முடிவைத் திரும்ப வாங்கியது அரசு. ஆனால் அரசுக்கு நன்கு தெரியும் போஸ் இறந்ததாய்ச் சொல்லப்படுவது உண்மை இல்லை என. அதனிடம் விமான விபத்து நடந்ததை உறுதி செய்யும் அதிகாரபூர்வச் சான்றுகள் ஏதும் இல்லை. விபத்து நடக்கவில்லை என அரசாங்கக் குறிப்புக்கள் தெரிவித்தன. நேரில் பார்த்ததாய்ச் சொல்லப் படுவதும் உண்மை இல்லை எனவும் அரசு அறிந்திருந்தது. ஆகவே மீண்டும் எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தல் பேரில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கக் கல்கத்தா உயர் நீதி மன்றம் முன்னர் வந்த விசாரணக் கமிஷன் அறிக்கைகளைத் தள்ளுபடி செய்து விட்டு முற்றிலும் புதிய விசாரணைக் கமி்ஷன் அமைக்க மத்திய அரசுக்கு உத்திரவிட்டது. அது தான் முகர்ஜி கமிஷன். இந்தக் கமி்ஷனால் விசாரிக்கப் பட்ட காங்கிரஸ் தலைவர்களான பிரனாப் முகர்ஜியும், நட்வர்சிங்கும் கமி்ஷனின் கேள்விக்கணைகளால் துளைக்கப் பட்டு, முந்தைய இரண்டு கமி்ஷன்களின் அறிக்கையின் பேரில் தான் போஸ் இறந்ததாய் அறிவிக்கப் பட்டார் என ஒத்துக் கொள்ளும்படி நேர்ந்தது.

தாய்வான்: சைனக் குடியரசு மட்டும் ஆரம்பத்தில் இருந்தே இவ்வி்ஷயத்தில் மிகத் தெளிவாய் இருந்து வந்தது. இந்திய அரசு ஒரு பெரிய தேசத் தலைவரின் மறைவை மிகச் சாதாரணமாயும் துச்சமாயும் கருதியது. அதிக அக்கறை காட்டவில்லை. அது போல் இல்லாமல் சைனா சொன்னது இது தான்: ஆகஸ்ட் 18, 1945-ம் ஆண்டில் தாய்பேயில் எந்த விமான விபத்தும் நடக்கவே இல்லை. உறுதியான சான்றுகள் இருக்கின்றன.

இனி இதில் ரஷ்யாவின் பங்கு? ஆணிகள் இல்லையெனில் நாளை!

Tuesday, May 01, 2007

போஸின் இந்திய தேசீய அரசின் பொறுப்பாளர்கள்

போஸார் நிர்மாணிக்கப் பட்ட அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புக்களில் இருந்தவர்கள் வருமாற்:
திரு சுபாஷ் சந்திர போஸ் -பிரதம அமைச்சர் மற்றும் படைத் தலைவர்

2.காப்டன் டாக்டர் ல்ஷ்மி அவர்கள்- பெண்கள் படைப்பிரிவின் தலைவர். (இவர் உத்திரப் பிரதேசத்துக்காரர் ஒருவரை மணந்து கொண்டதாய் நினைக்கிறேன். இவர் இருந்ததும் உத்திரப் பிரதேசத்தில் தான் என்றும் நம்புகிறேன். சுபா்ஷ் பற்றிய தன் நினைவுகளை இவர் பகிர்ந்து கொண்ட பேட்டிகளைப் படித்துள்ளேன். தமிழ்நாட்டுக்காரர்.)

3.எஸ்.ஏ.ஐயர் அவர்கள்- விளம்பரம் மற்றும் செய்தித் தொடர்பாளர்

4. லெஃடினன்ட் கர்னல் சாட்டர்ஜி- நிதித் துறை

5. லெஃப்டினன்ட் கர்னல்கள் முறையே திரு அஜீஜ் அஹமது, என்.எஸ்.பகத், ஜே.கே. போஸ்லே, குல்ஸாரா சிங், மிர்ஸா கியானி, ஏடி.லோகநாதன், ஏஹ்சன் காதிர், ஷா நாவே போன்றோர் முக்கியப் பிரதிநிதிகளாய் இந்திய தேசீயப் படையில் பதவி வகித்தார்கள்.

6.ஏ.எம். ஸஹாய் - காரியதரிசி

7.ராஷ் பிஹாரி போஸ் - (சுப்ரீம்) பிரதம ஆலோசகர்

8. மற்ற ஆலோசகர்கள்: கரீம் கனி, தேப்நாத் தாஸ், டி.எம். கான், ஏ.எல்லப்பா, ஜே. திவி், சர்தார் இஷார் சிங்,

9. ஏ.என். சர்க்கார் - சட்ட ஆலோசகர்.