எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, June 30, 2007

பழகறதுக்காக வந்த தமிழ்ச்செல்வி! :D

ஹிஹிஹி, நந்தா சொன்னாப்பலே சீரியஸ் போஸ்ட் போடறப்போவே "மொக்கை" போடற ஆசை த்விர்க்க முடியலை. அதுவும் இது கட்டாயமாய்ச் சொல்லியே தீரணும். நானும் ஜோதியிலே ஐக்கியமாயிட்டேன். அதான், என்னன்னு கேட்கறீங்களா? "சிவாஜி" பார்த்துட்டேன். நடிகர் திலகம் சிவாஜியை இல்லை. அவரைப் பலமுறை பார்த்தாச்சு. இது லேட்டஸ்ட் சிவாஜி, வாஜி, வாஜி, சிவாஜி! தான்! நேத்துத் திடீரென இங்கு தமிழ் அசோசியேஷனில் (அப்படி ஒண்ணு இருக்கு?) சிவாஜி படம் போடறதாய்த் தகவல் வந்தது. வீட்டிலே ஓட்டெடுப்பு நடந்ததிலே என் கணவரும் நானும் தான் ஜெயித்தோம். மத்தவங்களுக்கு அவ்வளவாய் விருப்பம் இல்லாததால் நாங்கள் இருவரும் மட்டும் போனோம். இரவு(எங்கே இரவு? சூரியன் மறையவே 8-00 மணி ஆயிடும், ராஜஸ்தான் தேவலைன்னு ஆயிடுச்சு!) 7- 15 -க்கு ஷோ ஆரம்பம்னு சொன்னாங்க. வசதியாப் போச்சு. 7 மணிக்கு மேலே நடைப்பயிற்சி தவிர வேறே வேலை ஒண்ணும் இருக்காது. "விஜய்" தொலைக்காட்சியில் வர நிகழ்ச்சிகளும் அவ்வளவா சுவாரசியமா இல்லை. சரின்னு 2 பேரும் போனோம். கூட்டம்னு ஒண்ணும் சொல்ல முடியலைன்னு சொன்னாலும் இத்தனை தமிழ்க் காரங்க இருக்காங்களான்னு நேத்துத் தான் தெரிஞ்சது. எத்தனை பாட்டி, தாத்தாக்கள்? "சிவாஜி" பார்க்க? அது தவிரக் குழந்தைகள் தான் அதிகம்.(நான் உள்பட.) எல்லாரும் ஒரு 5 லிட்டர் பக்கெட்டில் பாப்கார்ன், குளிர்பானம், சூடு பானம் சகிதம் வர நாங்க வெறும் கையோடு போய்ப் பேந்தப் பேந்த விழித்தோம். திரை அரங்கில் படம் பார்த்தேப் பல வருஷங்கள் ஆயிடுச்சு. ரஜினி படத்திலேயே நான் பல முறை பார்ப்பது "ஆறு முதல் அறுபது வரை"யும், "எங்கேயோ கேட்ட குரல்"ம் தான். அதுக்கப்புறம் "புவனா ஒரு கேள்விக் குறி" பார்க்க ஆசை, ஆனால் முடியலை. பின்னர் வந்த படங்கள் தொலைக்காட்சியில் போட்டாலும் சரியாக உட்கார்ந்து பார்த்தது இல்லை. "படையப்பா" நான் பார்த்தது இல்லைன்னு சொன்னதும் என்னைக் கேவலமாய்ப் பார்த்த உறவும், நட்பும் உண்டு! :D இப்போ பெருமை அடிச்சுக்கலாம், அமெரிக்கா போய் "சிவாஜி" பார்த்தேன்னு! இனி விமரிசனம்!
*************************************************************************************வழக்கமான சங்கர் பாணிப் படம். "ஜென்டில்மேன்"னில் ஆரம்பித்தாரோ? சரியாத் தெரியலை. அப்போ குஜராத்தில் இருந்தோம். அதுக்குப் பின்னர் வந்த அவர் படங்கள் எல்லாமே நாட்டின் முக்கியமான ஊழல் பத்தித் தான் வருது! "இந்தியன்" (இன்னும் முழுசாப் பார்த்தது இல்லை), முதல்வன், அந்நியன் - அப்படின்னு எல்லாமே. இதுவும் அப்படியே இருந்தாலும் ரஜினிக்காகச் சில மாற்றங்கள் செய்திருக்கிறார்னு நினைக்கிறேன். என்ன, எல்லாம் வழக்கமான "சின்டரெல்லா"க் கதையாக இருந்தாலும், அதில் வரும் விஷயங்கள் ரஜினி ஒரு கம்ப்யூட்டர் இஞ்சினீர் என்பதும் அந்த வேலையிலேயே கோடி கோடியாகச் சம்பாதிக்கிறார் என்பதும்தான். எனக்குத் தெரிஞ்சு எங்க வீட்டு கம்ப்யூட்டர் எஞ்சினீர் எல்லாம் அவ்வளவு சம்பாதிக்கக் காணோம்! சரி, விடுங்க, போகட்டும், ரஜினிக்காக சமரசம் செய்துக்கணும். அப்புறமாய் பார்த்தால் தமிழ்நாடு பூராவுக்கும் உதவி செய்ய நினைக்கிறார். பணத்தை வைத்துக்கொண்டு. அதுக்கு நிறையத் தடங்கல்கள் வருகின்றன வழக்கம்போல். வில்லன் இருக்கிறார். அரசாங்கம் வழக்கம்போல் வில்லன் பக்கம். கடைசியில் ரஜினி ஜெயிக்கிறார், புதுவிதமாய் வில்லனை ஏமாற்றிவிட்டு.

இதில் நடுவே காதல், ஊடல், சண்டைக் காட்சிகள் உள்ளன. தேவதைக் கதைகளில் வருவது போல் மாயாஜாலக் காட்சிகள் நிறைந்த சண்டைக் காட்சிகளும், காதலனும், காதலியும் பாடும் பாடல் காட்சிகளும் அதிகப் பொருள் செலவில் எடுக்கப் பட்டிருக்கிறது. இதற்கான செலவை யோசிக்கும் அதே வேளையில் இதற்கான வேலையில் எத்தனை தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்திருப்பார்கள், அவர்களுக்கு வாழ்நாள் பூராவுக்குமான பணம் இல்லாவிட்டாலும் ஓரளவு அந்தச் சமயம் வாழ்க்கை நடத்திச் செல்லும்படியான பணமாவது கிடைத்திருக்கும் என்பது ஆறுதலாக இருக்கிறது. வழக்கம்போல் இந்தப் படத்திலும் சாப்பாட்டைப் பற்றிய ஒரு பாடல் காட்சி, முன்னர் ஒரு படத்தில், "உப்புக் கருவாடு, ஊறவச்ச சோறு!" என்ற பாட்டு வரும்.(முதல்வன்?). அதுபோல் இந்தப் படத்திலும், "காவேரித் தண்ணீரும், கைக்குத்தல் அரிசியும்" பாட்டு. கதாநாயகன் எங்கே போனாலும் தாய்நாட்டை மறக்கவில்லை என்பதற்கு அத்தாட்சி. யாரால் முடியும்?

கதநாயகனுக்கு உதவ தேவதைக் கதைகளில் வரும் பாத்திரம் போல் இதில் விவேக். நல்ல காமெடி. படம் பூராவும் அவர் ஆக்கிரமித்துள்ளார். மனம் விட்டுச் சிரிக்க வைக்கும் வசனங்கள். "சுஜாதா" வசனம். பாடல், வாலியில் இருந்து, பழனி பாரதி வரை எழுதி இருக்கிறார்கள். என் வரை பிடிச்சது திருமணத்திற்குப் பின்னர் ரஜினி தன் மனைவியிடம் சிவாஜி, சரோஜா தேவி, எம்.ஜி.ஆர். லதா போலவும், கமல், சில்க் ஸ்மிதா(இந்தப் படமும் பார்க்கிற புண்ணியம் செய்யலை.) போலவும் நடித்துக் காட்டியது தான். பின்னர் கோவிலில் கதாநாயகியை முதல் தடவை பார்த்துவிட்டு வரும் விவேக், ரஜினி, லிவிங்க்ஸ்டன் காமெடி நல்லா இருந்தது. அது போலவே ரஜினி கதாநாயகி வீட்டிற்கு முதன் முதல் போகும்போது கதாநாயகியைத் தனியாக விவேக், ரஜினியோடு நடனம் ஆடவிட்டு விட்டு அவர்கள் அப்பா, அம்மா கதவைப் பூட்டிக் கொண்டு சென்று போலீஸைக் கூப்பிடுவதும், லிவிங்க்ஸ்டன், "லகலகலகலக"வெனச் சொல்லிக் கொண்டே உள்ளே வருவதும் நல்லா எடுத்திருக்காங்க. ஒரு பெண்ணை முன்பின் தெரியாத இரு ஆடவரிடம் தனியாக விட்டுவிட்டு அப்பா, அம்மா வெளியே போயிடுவாங்களா? கொஞ்ச நேரத்துக்குக் கூட என்ற லாஜிக்கையும் மீறிச் சிரிக்க வைக்கிறது.

இப்படிப் படம் பூராவும் சிரிப்புக்குப் பஞ்சம் இல்லை. மணிவண்ணன் ( ஒரு காலத்தில் அருமையான படங்கள் எடுத்திருக்கிறார்.) வடிவுக்கரசி, விவேக், ரஜினி பழகறதுக்காக கதாநாயகி வீட்டுக்கு வந்து கொட்டம் அடிப்பதும், அவங்க வீட்டுக்கு கூப்பிட்டுக் கொட்டம் அடிப்பதும், தீபாவளி அன்று சாலமன் பாப்பையா இவங்களோடு சேர்ந்து அடிக்கும் கூத்தும் நல்லா நினைத்து நினைத்துச் சிரிக்க வைக்கிறது. தேவையில்லாமல் ஜோசியத்தைக் கொண்டுவந்து திருமணத்திற்கு வில்லன் ஆக்கி இருப்பதும் அதற்கேற்ப ரஜினி செத்துப் போவதும் கொஞ்சம் 2 மச் இல்லை, 3,4,5, மச்சாக இருக்கு. முடிவு பார்த்தவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அதனால் சொல்லலை. பாடல் காட்சிகள் நல்லவேளையாகக் கனவாகப் போயிடுச்சு. எல்லாம் ரொம்பச் செலவில் எடுக்கப் பட்டிருக்கு. கிட்டத் தட்ட "ஷாக்" அடிச்சு இறந்து போன ஒருவரை (4 மணி நேரமாவது இருக்கும்) அதற்குப் பின்னர் பிழைக்க வைக்க முடியுமா? அதுவும் "வென்டிலேஷன்" எதுவும் துணை இல்லாமல்? நம்ம டாக்டர் சங்கர் குமாரும், ராமநாதனும் தான் இதுக்குப் பதில் சொல்லணும்.

பின்னணி இசையில் திரை அரங்கு அதிர்கிறது. படம் பார்க்க வந்தவர்களோ ரஜினியின் ஒவ்வொரு செயலுக்கும், சொல்லுக்கும் சிரித்து மகிழ்கிறார்கள். திரை அரங்கில் படங்கள் பார்க்காத காரணத்தால் இதை நேற்றுத் தான் பார்த்தேன். "பச்சைக் கலர் அட்டை, அந்த ஊரு ரேஷன் கார்டு" என்ற மணிவண்ணனின் பேச்சும், காவல் நிலையத்திலேயே கல்யாணம் பேசும் இயல்பும் அவருக்கே கைவந்த ஒன்று. கூடவே ஒத்துப் பாடுவதைத் தவிர வடிவுக்கரசிக்கு வேலை அதிகம் இல்லை. பிரமிட் நடராஜனும் வக்கீலாக ஒரு காட்சியில் வந்து போகிறார். எல்லாரையும் சொல்லிட்டு "சுமன்"பத்திச் சொல்லாட்டி எப்படி? திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த சுமன் மறுபிறவி எடுத்து வந்திருக்கிறார் என்று செய்திகளில் படித்திருந்தேன். அலட்டலே இல்லாத அனாயாசமான நடிப்பால் மனதைக் கவருகிறார். சண்டைக் காட்சியில் கிளைமாக்ஸில் அவ்வளவாய் சோபிக்கவில்லை. ரகுவரனுக்கும் கதாநாயகனைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு மட்டும்தான். ஒரு நல்ல நடிகர் வீணாக்கப் பட்டு விட்டார்.

ஸ்ரேயாவின் இளமைக்கு முன்னால் ரஜினி என்னதான் மேக்கப் போட்டிருந்தாலும் பாடல் காட்சிகளில் நன்றாக வித்தியாசம் தெரியத் தான் செய்கிறது. இவருக்கும் அவ்வளவாய் வேலை இல்லை, சிபிஐயிடம் கணினியை ஒப்படைத்துவிட்டு அழுவதைத் தவிர. ரஜினிக்கு மேக்கப் போட்டவர்களுக்கு ஒரு சபாஷ்! ஸ்ரேயாவின் அப்பாவாக நடித்தவர் யாருனு புரியலை. அம்மா உமா பத்மநாபன். சும்மா வந்து போகிறார். வில்லன் "ரஜினியின் பலகீனம் என்ன"னு கேட்டதும், உடனேயே ஸ்ரேயாவுக்கு ஏதோ ஆகப் போகுதுன்னு நினைச்சேன். ஆனால் கதை வேறே மாதிரிக் கொண்டு போயிட்டாங்க! வில்லன் ஸ்ரேயாவை ஒண்ணுமே செய்யலை. கடத்தக் கூட இல்லை. மாறாக ஸ்ரேயாதான் ரஜினியைக் காப்பாத்தறதுக்காகத் தவறு செய்கிறார். வசனங்கள் தெளிவாகப் புரியும் வண்ணம் டப்பிங் செய்யப் பட்டிருக்கிறது. ஏ.ஆர். ரகுமான் ம்யூசிக்குனு நினைக்கிறேன். பேர் போடும் சமயம் கூட்டமாய்ச் சிலர் தாமதமாய் வந்து உட்காரப் போனதில் சரியாகப் பார்க்க முடியலை. படம் பார்க்க வந்திருந்த சிறுவர்களும், சிறுமிகளும் நன்றாய் ரசித்தார்கள். அவர்களுக்குத் தேவையான எல்லாமே படத்தில் இருக்கிறதே!

மொத்தத்தில் குழந்தைகளுக்கான படம்! நல்லாப் பொழுது போகும்!
ஹிஹி, நானும் குழந்தை தானே! எனக்கும் பொழுது போச்சு!

டிஸ்கி: "துப்பறவங்க, அடிக்கிறவங்க, கல்லெறிகிறவங்க எல்லாருமே இன்னைக்கு இருக்க மாட்டாங்கன்னு தைரியத்தில் தான் எழுதினேன். மெதுவா "லாங் வீக் என்ட்" முடிஞ்சு வந்து சாவகாசமாத் துப்புங்க, கல்லெறிங்க, அடிங்க! கொஞ்சம் பெரிசாப் போச்சோ? சகிச்சுக்குங்க, வழக்கம்போல்.

தமிழ்த்தாத்தாவும் சுப்பிரமணியபாரதியும் - 2

கிருஷ்ணசாமி ஐயர் நம்முடைய நாட்டின் பெருமையை அமைத்து எளிய நடையில் ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் பாடும் வண்ணம் சில பாட்டுக்கள் இயற்ற வேண்டுமென்று விரும்பினார். பலரிடம் தம் கருத்தை எடுத்து உரைத்து வந்தார். அந்தக் காலத்தில் சுப்பிரமணிய பாரதியார் அவருடைய பழக்கத்தைப் பெற்றிருந்தார். கிருஷ்ணசாமி ஐயர் பாரதியாரிடம் தம் கருத்தைத் தெரிவித்தார். பாரதியாருடைய காதில் கிருஷ்ணசாமி ஐயருடைய பழைய பிரசங்கம் ஒலித்துக் கொண்டே இருந்தது. அவர் தமிழ்ப் பாஷையைப் பற்றிச் சொன்னதைத் தழுவி பாரதியார் நாட்டைப் பற்றிப் பாடத் தொடங்கினார்.

"செந்தமிழ்நாடென்னும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!" என்பது ஒரு செய்யுள்.

"கம்பன் ராமாயணம் செய்த பாஷை! திருவள்ளுவர் திருக்குறள் செய்த பாஷை!" என்று அன்று கூறியதைப் பாரதியார் சிறிது மாற்றி,

"கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல
பலவிதமாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசும் தமிழ்நாடு!" என்றும்,

"வள்ளுவன்றன்னை யுலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு -நெஞ்சை
அள்ளுஞ் சிலப்பதிகாரமென்றோர் மணி
யாரம் படைத்த தமிழ் நாடு!" என்றும் பாடினார்.

இந்தப் பாட்டைக் கேட்டு இதில் தம்முடைய கருத்து அமைந்திருப்பதை அறிந்து கிருஷ்ணசாமி ஐயர் பெரு மகிழ்ச்சியை அடைந்தார். பாரதியாரைப் பின்னும் பல பாடல்களைப் பாடச் செய்து அவற்றைச் சேர்த்து ஆயிரக் கணக்கில் அச்சிடுவித்து இலவசமாக வழங்கச் செய்தார். சுப்பிரமணிய பாரதியாரை அக்காலத்திலே அறிந்து அவருடைய கவித்துவத்தைப் பாராட்டி ஆதரித்தவர்களுல் கிருஷ்ணசாமி ஐயர் முக்கியமானவர். பாரதியாருடைய கொள்கைகளில் பலவற்றைக் கிருஷ்ணசாமி ஐயர் விரும்பாவிடினும் அவருடைய கவித்துவத்தில் ஈடுபட்டார்.
******************************************************************************

மேற்குறிப்பிட்ட சம்பவம் நடந்த சரியான தேதிகள் இந்தப் புத்தகத்தில் இல்லை. ஆனால் தமிழ்த் தாத்தா தன் வாழ்நாளின் முடிவு வரை பாரதியாரை ஒரு கவிஞர் என்று ஒப்புக்கொள்ளவே இல்லை என்பதும் உண்மைதான். அது பற்றிப் பின்னர் ஒரு முறை. இந்தப் பாட்டு எழுதிய சமயம் பற்றி வேறு சில கருத்துக்களும் இருக்கின்றன. ஒரு போட்டிக்கு பாரதி இந்தப் பாடலைப் பாடியதாகவும் 2வதோ அல்லது 3வதோ பரிசு பெற்றதாயும் சொல்வார்கள். இந்த நிகழ்ச்சி தமிழ்த் தாத்தா உயிருடன் இருக்கையிலேயே அவரே எழுதிக் "கலைமகள்" பத்திரிகையில் வெளிவந்தது.

Friday, June 29, 2007

தமிழ்த் தாத்தாவும், சுப்பிரமணிய பாரதியும்!

தமிழ்த்தாத்தா உ.வே.ஸ்வாமிநாத ஐயரின் காலத்தவர் பாரதியார் என அனைவருக்கும் தெரிந்திருக்கும். சுப்பிரமணிய பாரதியை தாத்தா மதித்தாலும் அவரை ஒரு கவிஞர் என்று ஒப்புக் கொண்டதில்லை எனவும், தமிழ்ப் பண்டிதன் என்பதாக மட்டும் சொன்னதாகவும் திரு பாஸ்கரத் தொண்டைமானும், அவர் தம்பி திரு சிதம்பர ரகுநாதனும் கூறுவார்கள். அது பத்திப் பின்னர் பார்க்கலாம். இப்போது பாரதியார் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" பாட்டு எழுத நேர்ந்த சந்தர்ப்பம் பத்தி தமிழ்த் தாத்தா தனக்குத் தெரிந்ததைக் கூறுகிறார். இந்தச் சம்பவம் நடந்தபோது பாரதியும் சென்னையில் இருந்திருக்கிறார். இது பற்றிக் கலைமகளில் தான் எழுதியதாகத் தாத்தா குறிப்பிடுகிறார். அவரின் நினைவு மஞ்சரி முதல் பாகம் புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்:
*************************************************************************************
பெரிய உத்தியோகத்தில் இருந்தால் ஆங்கில நூல்களைப் படிப்பது, ஆங்கிலம் கற்றவர்களை வியப்பது, ஆங்கில நூல்களில் உள்ள கருத்து எந்தப் பாஷையிலும் இல்லையென்று சொல்வது முதலியவற்றைப் பெர்ய்மையாகக் கொள்பவர்கள் எந்தக் காலத்திலும் உண்டு. ஆனால் இப்போது அத்தகையவர்களது தொகை குறைந்து வருகிறது. கிருஷ்ணசாமி ஐயர் காலத்தில் ஆங்கில மோகம் உச்ச நிலையை அடைந்திருந்தது. (கிருஷ்ணசாமி ஐயரவர்கள் ஒரு வக்கீலாகத் தொழில் செய்து வந்ததோடு அல்லாமல் அப்போதைய ஆங்கிலேய கவர்னரின் நிர்வாக சபை அங்கத்தினராகவும் பதவி வகித்தவர்.) ஆங்கில அறிவிலும், வடமொழியிலும் சிறந்தவர். என்றாலும் தமிழினிடத்தைல் அவருக்கு இருந்து வந்த அபிமானத்தை நான் அனுபவத்தில் பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன்.

"எந்தப் பாஷையாக இருந்தால் என்ன? மனத்தில் படியும்படியான நல்ல விஷயம் எங்கே இருக்கிறதோ அதைத் தேடி அறிந்து கொள்ளவேண்டும்." என்பது கிருஷ்ணசாமி ஐயரவர்களின் கொள்கையாக இருந்து வந்தது. ஒருநாள் சென்னை ராசதானிக் கலாசாலைத் தமிழ் மாணவர் சங்கக் கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார். காலஞ்சென்ற "திரு ஜி.ஏ. வைதியநாத ஐயர்" அன்று "தமிழின் பெருமை" என்னும் விஷயத்தைப் பற்றிப் பேசினார். சிருஷ்ணசாமி ஐயர் தலைமை வகிப்பது அறிந்து பலர் அன்று கூட்டத்திற்கு வந்திருந்தனர். ஸ்ரீசுப்பிரமணிய பாரதியாரும் வந்திருந்தனர். கிருஷ்ணசாமி ஐயர் என்ன பேசுவாரோ என்று யாவரும் ஆவலோடு எதிர் நோக்கி இருந்தனர். சிலர் "இவர் தமிழைப் பற்றி என்ன பேசுவார்? சம்ஸ்கிருதம் பற்றி வேண்டுமானால் பேசக் கூடும்" என்று நினைத்தார்கள். கிருஷ்ணசாமி ஐயர் பேச ஆரம்பித்தார்.

"தமிழில் எத்தனை நூல்கள் இருக்கின்றன! வள்ளுவர் திருக்குறள் செய்த பாஷை இது! கம்பன் ராமாயணம் இயற்றியது இந்தப் பாஷையில் தான்! நாயன்மார் தேவாரம் பாடிய பாஷை இது! மாணிக்கவாசகர் திருவாசகம் அருளியதும் இந்தப் பாஷையில் தான்! ஆழ்வார்கள் திவ்யப் பிரபந்தம் பாடியதும் இந்தப் பாஷையில் தான். இந்தப் பாஷையின் பெருமைக்கு அளவே இல்லை." என்று தொடங்கிப் பேசிக் கொண்டே போனார். யாவரும் பிரமித்தனர். ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் அன்று அந்தப் பிரசங்கத்தைக் கேட்டுக் குதூகலத்தை அடைந்தார். அந்தப் பேச்சு அவர் உள்ளத்திலே ஒரு கிளர்ச்சியை உண்டாக்கியது. அதிலிருந்து ஒரு பாட்டுக்குரிய பொருளைக் கிரகித்துக் கொண்டார். தமிழ் நாட்டைப் பற்றி அந்த முறையிலே பாடவேண்டுமென்று அவருக்கு அன்று ஒரு கருத்து உண்டாயிற்றென்று தோன்றுகின்றது.

Wednesday, June 27, 2007

பாரதி கேட்ட மன்னிப்பு!

தியாகுவின் கேள்விக்கு பதில் சொல்லலாமா வேணாமான்னு நினைத்தேன். பாரதி சிறையில் இருந்தப்போ ஒரு கடிதம் தன்னை விடுதலை செய்யச் சொல்லி எழுதியதாயும், அதில் அவர் மன்னிப்பு வேண்டி இருப்பதாயும் இப்படிப் பட்டவர் எப்படி அரசியல் நேர்மை உடையவராய் இருக்க முடியும் எனவும் கேட்டிருக்கிறார். முதலில் பாரதி எந்தக் கட்சியையும் சார்ந்திருக்கவே இல்லை.அவர் மதித்த தலைவர்கள் எனக் குறிப்பிட்டால் வ.உ.சி. சுப்புரமணிய சிவா, அரவிந்தர், வ.வே.சு. ஐயர் போன்றவர்கள்.
காந்தியை அவர் மதித்தார். காந்தி சென்னை விஜயத்தின் போது சென்று சந்தித்தார்.
ஆனால் காங்கிரஸைச் சார்ந்த்ருக்கவில்லை. திருமணம் ஆகி இரண்டு பெண்குழந்தை பெற்ற அவர் தன் வயிற்றுப் பிழைப்புக்காக மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் "சுதேசமித்திரன்" பத்திரிகையில் வேலை செய்தார். அவரின் கருத்துக்கள் மக்களைச் சுதந்திரப் போராட்டத்துக்குத் தூண்டி விடுகிறது என்ற கோபத்தின் விளைவாகவே அந்தப் பத்திரிகையும் சரி, பாரதியும் சரி தடை செய்யப் பட்டனர் பலமுறை. பிரிட்டிஷ் இந்தியாவில் அவர் நுழையவும், அங்கே வாழவும் தடுக்கப் பட்டார். உயிர் போகும் வரை வாழ்ந்து தானே ஆகவேண்டும். தற்கொலை கோழைகளின் செயல். ஆகவே வாழ்க்கைக்கு அவர் தேர்ந்தெடுத்தது புதுச்சேரி. அங்கே இருந்து வாழ்க்கை நடத்தினார். இல்வாழ்க்கையிலும் பெரும் இன்னல்கள் சூழ்ந்தன. அன்றாட வாழ்விற்கேப் பணம் இல்லாத சூழ்நிலை.

தன்னை நம்பி வந்த மனைவி, குழந்தையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் தான் எட்டையபுரம் ராஜாவிற்குச் "சீட்டுக்கவி" அனுப்ப நேர்ந்தது. காங்கிரஸ் மகாநாடுகள் சென்னை மெரினா திடலில் நடக்கும்போது பாரதியைச் சுதந்திரப் போராட்டப் பாடல்கள் பாட அழைப்பது உண்டு காங்கிரஸ் தலைவர்கள். பாரதியும் வந்து பாடுவார் மறுப்பேதும் சொல்லாமல். ஆனால் அவர் பாடி முடித்ததும் கூட்டம் கலையும். அதில் தலைவர்கள் அதிருப்தி அடைவர். இந்தக் காட்சி "பாரதி" திரைப்படத்தில் கூடக் காண நேரலாம். அப்படிப் பட்ட காங்கிரஸ் தலைவர்கள் அவர் அன்றாட வாழ்விற்கு உதவி ஏதும் செய்யவில்லை. ரவீந்திர நாத் தாகூர் "நோபல் பரிசு" வென்றதற்கு விழா எடுத்துக் கொண்டிருந்தனர். இதைத் தோழர் "ஜீவானந்தம்" குறிப்பிட்டு வருந்தி உள்ளார். மகாத்மாவாகவே இருந்தாலும் காந்தியும் பலகீனங்கள் நிறைந்த மனிதர் தான். அவரே குறிப்பிட்டுள்ளார். ஆகவே எதற்கும் மறுபக்கம் இருக்கும். அதன் காரணத்தையோ, காரியத்தையோ சரியாகப் புரிந்து கொள்ளாமல் நாம் பேச முடியாது. அன்றைய சூழலில் நாம் வாழவில்லை.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கூட நாடு கடத்தப் பட்டு ஐரோப்பாவில் வசிக்க நேர்ந்த காலத்தில் கல்கத்தாவில் இருந்த அவரின் தகப்பனார் மரணத்திற்குநாட்டுக்கு வர விரும்பினார். அன்றைய ஆங்கில அரசு அவரைப் பல விதமான நிபந்தனைகளுடன் வரவிட்டது. அதறுகுகட்டுப் பட்டுத் தான் அவர் வர நேர்ந்தது. அதற்காக நேதாஜியின் வீரத்தைக் குறைத்து மதிப்பிட முடியுமா? அதுபோல்தான் இதூம் காரணத்துடன் நிகழ்ந்த ஒரு நிகழ்வு. அதற்கான என்னுடைய பதில் பின்னால் வெளிவரும். நன்றி தியாகு இந்த பதில் கொடுக்கும்படி செய்ததுக்கு.கட்டபொம்மன் பற்றி அவர் பாட நேராததற்கும் தனியாகக் காரணங்கள் இருக்கலாம். கட்டபொம்மனும் பாளையக் காரன் தான். அவனுக்கும் மறுபக்கம் என்று இருக்கிறது. அது தெரிந்தும் பாடி இருக்கமாட்டார். நாம் அதற்காகக் கட்டபொம்மனை வீரன் இல்லை என்றோ தியாகம் செய்யவில்லை என்றோ சொல்லவில்லையே! கட்டபொம்மனின் வீரத்தையும் பாராட்டுகிறோம், அதற்குச் சற்றும் குறைந்தது இல்லை எட்டப்பனின் வீரமும். வரலாறு நமக்கு நன்கு தெரியாது. அவரவர் பார்வையில் எழுதி இருப்பதைப் படித்துவிட்டுச் சொல்லுகிறோம். மருது சகோதரர் வீரம் பற்றியும் பாரதி பாடி இருப்பதாய்த் தெரியவில்லை. அதனால் என்ன? இது தனி ஒரு மனிதனின் விருப்பம் என விட்டுவிடலாமே!

சண்டை போடு, அல்லது சரணடை-தொடர்ச்சி

"வளர்சிதைப் பருவம்" என்று தற்காலத்தில் சொல்லப் படும் பருவ வயது இளைஞர்கள் அனைவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கைது செய்யப் பட மாட்டார்கள் எனச் சொல்லப் பட்டது. வேலை போகாது எனவும் விசாரணை நடக்காது எனவும் உறுதி அளிக்கப் பட்டது. ஆனாலும் "பஹாதூர்" என்னும் கப்பல் பணிய மறுத்து விடாமல் போராடியது. ஆங்கிலத் துருப்புக்களுக்குச் சகலவித வசதிகளும் இருந்தன. ஒவ்வொரு கப்பலாகக் கைப்பற்றிய ஆங்கிலப் படை மாலைக்குள் கராச்சியில் புரட்சியை ஒடுக்கியது. பம்பாயிலோ போக்குவரத்து ஸ்தம்பித்து உள்ளூர் காங்கிரஸின் ஆதரவையும், போலீஸின் ஆதரவையும் பெற்ற புரட்சி நீடிக்க ஆரம்பித்தது. ஜின்னாவும் காந்தியும் தனித்தனியாகப் புரட்சியை தாங்கள் ஆதரிக்கவில்லை என அறிவிப்புச் செய்தனர், ஆங்கிலேய அரசின் மறைமுகமான வேண்டுகோளின் பேரில். நேருவிடம் தனக்கு இருந்த செல்வாக்கை அப்போது இருந்த வைஸ்ராய் நன்கு பயன்படுத்திக் கொண்டார் என்றும் சொல்லலாம். எதற்கும் அடங்க மறுத்த வீரர்களைக் கட்டுக்குள் வைக்க வேண்டுமானால் அரசியல் தலைவர் ஒருவர்தான் தேவை என்று அரசால் உணரப் பட்டது. மிதவாதியும் இல்லாமல், தீவிரவாதியும் இல்லாமல் எப்போது நிதானத்தைக் கைப்பிடிக்கும் சர்தார் படேல் அதற்கு எனத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

சமாதானப் பேச்சு வார்த்தைக்குப் படேல் பம்பாய் வந்தார். எம்.எஸ்.கானுடன் பேச்சு வார்த்தை நடந்தது. இங்கும் பல உறுதிமொழிகள் அளிக்கப் பட்டன. யாருக்கும் வேலை போகாது, அவர்கள் கோரிக்கைகள் நிறைவெற்றப் படும், விசாரணை ஏதும் நடக்காது, யாரும் கைது செய்யப் பட மாட்டார்கள் எனப் பல உறுதிமொழிகள். எல்லாவற்றையும் விட முக்கியமான கோரிக்கையான "இந்திய தேசீய ராணுவப் படை வீரர்கள்" கைது பற்றியும் சுபாஷ் பற்றியும் கவனித்து ஆவன செய்வதாகவும் சொல்லப் பட்டது. ஒரு மோசமான அரசியல் சூழ்நிலை உருவாகி பிரிட்டிஷார் தானாகப் போகும் முன்னர் விரட்டி அடிக்கப் படும் சூழ்நிலை உருவாகி வந்தது தடுக்கப் பட்டது, சர்தார் படேலின் சாமர்த்தியமான அணுகுமுறையால்.

ஆங்கில அரசு மிகவும் கவலையும் பயமும் அடைந்தது. இந்தப் புரட்சியின் அடிநாதமான சுபாஷின் வீரதீர சாகசங்களை மக்கள் மறக்கவில்லை என்பதையும், அவரின் இந்திய தேசீய ராணுவத்தின் பால் மக்களுக்கு இருந்து வந்த அனுதாபத்தையும் நன்றாக மனதில் குறித்து வைத்துக் கொண்டது. இதன் விளைவு? இன்று வரை அந்த வீரர்கள் யாரும் சுதந்திரப் போராட்ட வீரர்களாக மதிக்கப் படவில்லை. பம்பாய்ப் புரட்சியில் கலந்து கொண்ட மாலுமிகளுக்கும், சிப்பாய்களுக்கும் வேலை போனதோடல்லாமல், தேசத் துரோகி என்ற பட்டமும் கிடைத்தது. இந்திய தேசீய ராணுவத்தின் பெரும் நிதி போன இடம் தெரியாமல் போனது. இதன் பின்னர் உள்ள அரசியல் என்ன? யோசியுங்கள்!

Friday, June 22, 2007

எட்டுப் போட்டிருக்கேன், பாருங்களேன்!

எட்டுப் போடறது எவ்வளவு கஷ்டம்னு வண்டி லைசென்ஸ் இந்தியாவிலே வாங்கறவங்களுக்குத் தெரியும். இப்போ என்னடான்னா நம்ம இ.கொ. வந்து எட்டு போடுன்னு மிரட்டறதோடு இல்லாமல், எட்டு ஆள் வேறே பிடிக்கச் சொல்றார். எல்லாம் ஹெட் லெட்டர். வேறே என்ன? அதிலும் சாதனையா வேறே இருக்கணுமாமே! நான் ப்ளாக் எழுதறதே ஒரு சாதனைன்னு சொன்னால் அது பப்ளிஷ் ஆகிறது அதைவிட சாதனை. வரவர கணினி கிட்டே வரக் கூட முடியாமல் ஆணிகள் அதிகமா இருக்கு. "சிதம்பர ரகசியம்" ஒரு பக்கம் வா, வான்னு கூப்பிடுது, இன்னொரு பக்கம் "பம்பாய் ராயல் நேவி" புரட்சி என்னை அநாதையா விட்டுட்டியேனு கேட்குது. முதலில் இந்த எட்டைப் போட்டுடறேன்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&படிப்பிலே நல்லாப் படிப்பேன்னாலும், சாதனை எல்லாம் ஒண்ணும் பண்ணினதில்லை. இந்தக் கணக்கு வந்து காலை வாரும். அதிலும் கணக்கு டீச்சருக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம், அம்பிக்கும் எனக்கும் மாதிரி. எனக்குக் கூட ரொம்ப நாளா ஒரு சந்தேகம் என்னோட கணக்கு டீச்சர் தான் அம்பியா மறுபிறவி எடுத்து வந்திருக்காங்களோன்னு. :P

1. கணக்கே வராத நான் பள்ளி நாட்களில் எடுத்துப் படித்தது அக்கவுன்டன்ஸியும், காமர்ஸும். நாளாவட்டத்தில் பாடத்தில் விருப்பம் அதிகரிக்கவே, பின்னால் ஆடிட்டர் ஆகலாம் என்ற ஆசையும் இருந்தது. இத்தனைக்கும் அம்மாவோட விருப்பம் வேறேயா இருக்க அப்பா தன் விருப்பப் படி என்னை அதிலே சேர்த்திருந்தார். ஒரு இ.கொ. மாதிரியோ, ஒரு தி.ரா.ச. மாதிரியோ, ஒரு மணிப்பயல் மாதிரியோ ஆடிட்டராய் வந்திருக்கணும். பாருங்க, உங்க எல்லாருக்கும் போட்டியே இல்லாமப் போச்சு! ஒரே சாதனை பாதிப் படிப்பில் கல்யாணம் செய்து கொண்டது தான். இதுவும் அப்பாவின் விருப்பம்தான். ஆகவே திருமணம் ஆகிப் பத்து வருஷம் கழித்துப் பட்டம் மொழிப்பாடத்தில் வாங்க முடிந்ததே ஒரு சாதனை தான் என்னளவில்.

2.நான் படிச்ச நாட்களில் என் தோழிகள் அனைவரும் "ஷுக்லா" புத்தகம் வைத்துப் படிக்க எனக்குக் கிடைத்ததோ என்னோட அப்பா படிச்சு, மாமாவுக்குக் கொடுத்து, பின்னால் பெரியப்பா பையன், என்னோட அண்ணா அனைவருக்கும் வந்து அதுவரை கிழியாமல் இருந்த "சுப்ரமணியம்" புத்தகம் தான். நான் ரொம்ப அடம் பிடித்ததன் பேரில் அப்பா யார் கிட்டேயோ போய்க் கேட்டு நான் பிறக்கும் முன்னேயே பப்ளிஷ் செய்யப் பட்ட "பாட்லிபாய்" புத்தகம் வாங்கிக் கொடுத்தார். அதை நான் கல்யாணம் செய்து கொள்ளும் வரை விட்டுப் பிரியவே இல்லை. அரை மனத்துடன் "பிரியா வடை" கொடுத்தேன், அதுக்கு.(ஹிஹி, வடைன்னா போதும், ஒரு சின்ன மாலையே போட்டுக்கும் இது) அடைப்புக்குறிக்குள் வழக்கம் போல் ம.சா. தான். நறநறநற. எனக்கு அப்புறம் படிச்ச என் தம்பி "ஷுக்லா" புத்தகம் புத்தம்புதியதாய் வாங்கிக் கொண்டதைப் பார்த்து அப்பா, அம்மாவிடம் சண்டை போட்டதும் ஒரு சாதனை தான்.

3. கொஞ்சமாவது ஆங்கிலம் எனக்கு வருதுன்னா என்னோட ஆசிரியைகள் தான் காரணம். முதலில் ஆரம்பிச்சு வச்ச ரூபி டீச்சர், பின்னர் பள்ளி இறுதி நாட்களில் பாடம் சொல்லிக் கொடுத்த மிஸ்.ஜேகப் இருவரும் ஆங்கிலப் பாடம் நடத்துவதே தனி சுகம். அதுவும் மிஸ் ஜேக்கப் ஆங்கிலக் கவிதைகளுக்கு நடித்தே காட்டுவார், எங்களையும் நடித்துக் காட்டச் சொல்லுவார். ஒரு முறை நாங்கள் அனைவரும் பேசி வைத்துக் கொண்டு ஆசிரியையைத் திகைக்க வைத்தோம். வில்லியம் வொர்ட்ஸ்வொர்த்தின் ஒரு கவிதையில், "Books, 'tis an endless strife, come, hear the woodlands cry என்ற , வாசகங்கள் வரும். அதை என்னை நடித்துக் காட்டச் சொல்லும் போது நான் புத்தகத்தைத் தூக்கிப் போட்டு விட்டு வெளியே சென்று சைகை காட்ட மொத்த வகுப்பும் என்னோடு வெளியேற திகைத்த ஆசிரியை பின்னர் நினைத்து நினைத்துச் சிரித்ததும் ஒரு சாதனை தான்.

4. பரிட்சை நாட்களில் அப்பாவுக்குத் தெரியாமல் பாட புத்தகங்களுக்குள் கதைப் புத்தகமோ, ஆனந்தவிகடனோ, கல்கியோ படிக்கிற சுகம் இனி எப்போ வரும்? சொல்லுங்க? அதுவும் ஒரு சாதனை தான். (என்னடா, அப்பா, அப்பான்னே சொல்றேன்னு பார்க்கிறீங்களா< எங்க வீட்டிலே அப்பா ஆட்சிதான். ரொம்பக் கண்டிப்பான அப்பா.)

5.முதல் முதலில் ராஜஸ்தான் வரை வந்ததே ஒரு சாதனைதான் என்றால் அப்புறம் பல இடங்களுக்கும் ஊர்களுக்கும் போனது மற்றொரு சாதனை. இதில் இதுவரை யாருமே முறியடிக்காத விஷயம் முதல்வகுப்புக்கு டிக்கெட் வாங்கி விட்டு மூன்றாம வகுப்பில் முன்பதிவு செய்யப் படாத பெட்டியில் உட்கார்ந்து போனது தான் அதிகம். இதை இன்றுவரை யாரும் முறியடிக்கவில்லை.

6. அமெரிக்கா எல்லாம் வருவேன்னு நினைச்சே பார்க்கலை. நான் போக ஆசைப் பட்ட இடம்னு பார்த்தால் இங்கிலாந்து ஒன்றுதான். அதுவும் அதிகமான அகதா க்ரிஸ்டி கதைகளின் வர்ணனையைப் படித்ததால் இருக்கலாம். அயர்லாந்தின் வடமுனையைப் பற்றிய அவரின் வர்ணனை ஒரு கதையில் வரும். அவரின் துப்பறியும் நிபுணர் ஆன " Hercule Poirot" அங்கே போயிருப்பார். அந்த இடம் செல்ல ஆசை.

7. இரண்டு முறை அமெரிக்கா வந்தும் எந்த இடமும் சுற்றிப் பார்க்காமல் இருப்பதும் நாங்களாய்த் தான் இருக்கும். அதுவும் ஒரு சாதனைதான். சூழ்நிலையும், சந்தர்ப்பங்களும் அம்மாதிரி அமைகின்றது. ஆகவே போக முடியவில்லை. தவிர, சாப்பாடு வேறே ஒரு பிரச்னை.

8. என்வாழ்நாளில் நிஜமான சாதனை என்றால் "திருக்கைலாய யாத்திரை" சென்றது தான். உண்மையில் நான் போவதாய் இல்லை. என் கணவர் தனியாகப் போக இருந்தார். என்னை அதிலே இழுத்துவிட்டது ட்ராவல்ஸ் ஏஜென்ட் தான். மனதில் எந்த உணர்வுகளும் இல்லாமல் தான் பிரயாணத்தை ஆரம்பித்தேன். வெற்றியாக முடித்து வைத்தது இறைவன். மற்றபடி நான் வலைப்பக்கம் ஆரம்பித்து எழுதுவது ஒரு சாதனை என்றால் அதன் மூலம் இத்தனை நண்பர்கள் கிடைக்கப் பெற்றிருப்பதும், ஒரு சாதனை தான். மெய் சிலிர்க்க வைக்கும் சாதனை! இது ஒன்றுதான். மனம் நெகிழ்ந்து போகிறது.
************************************************************************************
அப்பாடா, இ.கொ. என்னைப் போய் எழுதச் சொன்னீங்க இல்லை? நல்லா வேணும் உங்களுக்கு! நான் மாட்டி விடப் போகும் பலி ஆடுகள் முறையே:

1.தி.ரா.ச. (ரொம்ப நாளா பதிவுப் பக்கமே வரலையா, அதான் தண்டனை)
2.மணிப்பயல் (4 எழுதி இருக்கீங்க இல்லை, எட்டும் எழுதுங்க! ஜோதியிலே ஐக்கியம் ஆகுங்க)
3.நந்தா: (வலை உலகுக்குப் புதுசு இல்லை, எனக்குப் புதிய நண்பர். நான் மொக்கையா எழுதறேன்னு சொல்லாமல் சொன்னவர் (நறநறநற) பாவம், புதுசு,நம்ம கலாய்த்தலுக்கு, விட்டுடறேன்!
4.வல்லி சிம்ஹன்: (கையிலே லாப்-டாப், மனதிலே எண்ண ஓட்டம் வெளுத்துக் கட்டுவாங்க!)
5.டுபுக்கு டிசைப்பிள்:(அம்பிக்கு ஓசிச் சாப்பாடு கொடுத்த காரணத்துக்குத் தண்டனை)
6.நாகை சிவா: (இப்போ என்னோட பதிவுக்கு வரதில்லைங்கறதாலே இவருக்கும் தண்டனை)
7.மணிப்ரகாஷ்: ஆள் எங்கேன்னு தேடிக் கண்டுபிடிக்கணும். முடிஞ்சால் வந்து பார்த்துட்டுப் போய் எழுதுங்க. உங்களுக்கும் தண்டனை தான்! :P
8.ராயல் ராம்: பாவம், ட்யூப்லைட்டுன்னு சொன்னதும் ஒத்துக்கிட்டாரே, தண்டனை கொடுக்கலாமா? வேணாமா? வேணாம், அப்போ வேறே யாரு? ஹையா கண்டுபிடிச்சுட்டேன், சிபி, சிபி, ரொம்ப நாளா மாட்டிக்கவே இல்லை. சிபி தான் அது வேறே யாருமே இல்லை. சிபி, நீங்க எழுதுங்க!

Thursday, June 21, 2007

கும்மி அடிக்க வாரீஹளா?

எல்லாம் நேரம். வேறே என்னத்தைச் சொல்றது? ஏதோ நான் பாட்டுக்கு வலை பதிஞ்சுட்டு வர போற பின்னூட்டங்களைப் பார்த்து மகிழ்ந்துட்டு இருந்தேன். அது பொறுக்கலை ஒரு மனுஷனுக்கு. எட்டு விஷயங்கள் பத்திப் (அதுவும் என் சம்மந்தப்பட்ட குறிப்புக்களாம்) பதிவு போடுன்னு என்னோட பேரையும் போட்டதோடு அல்லாமல், ப்ளாகிற்கு வந்து வேறே மிரட்டி விட்டுப் போயிருக்கார்.. ஒரு விஷயம் எழுதறதுக்கே நான் படும் பாடு எனக்குத் தான் தெரியும், இதிலே எட்டுக்கு எங்கே போகிறது? அதிலேயும் எட்டுப் பேரைக் கூப்பிடணுமாம். யார் வந்து மாட்டிப்பாங்க? பலி ஆடு மாதிரி? ஏற்கெனவே "வேதா(ள்) பிசி,இதிலே அழகு பத்தி எழுதச் சொன்னது வேறே இன்னும் எழுதலை! அதுக்குள்ளே என்ன ப்ளாக்கர் மீட்டிங்க் வேண்டிக் கிடக்கு தெரியலை! சரி, லதாவைச் சொல்லலாம்னா அவங்க தூசி தட்டறாங்க, தட்டறாங்க அப்படித் தட்டறாங்க. இங்கே எனக்கு "வீசிங்" வந்துடுச்சுன்னா பார்த்துக்குங்களேன்.

கைப்புள்ளை ஹிஹிஹி, புதுக் கல்யாண மயக்கமே இன்னும் தெளிஞ்சிருக்காது. அம்பியைக் கேட்போம்னா பூரிக்கட்டை அடி வாங்கியதில் கை வீங்கிப் போச்சுனு தனி மெயில் வந்திருக்கு! கார்த்திக் ஆள் அட்ரஸே இல்லை, அவ்வளவு ஆணிகள், ஆனால் பதிவு மட்டும் வருது! ஒரு வேளை வேதாளம் வேலையோ என்னமோ? மணிப்ரகாஷ் காலண்டர் கவிஞன், என்னோட 200 பதிவுக்கு வந்து கவிஜை, சீச்சீ, கவிதை எல்லாம் எழுதிச் சிறப்பித்த உண்மைத் தொண்டர், யார் கடத்தினாங்கன்னு தெரியலை. (ஹிஹிஹி, மணிப்ரகாஷ், இப்போ கவிதை எல்லாம் கேட்கலை, சும்மாஆஆச் சொன்னேன்). கோபிநாத், பரணி இரண்டு பேரும் வசூலைத் தூக்கிட்டுப் போனது தான், திரும்பியே பார்க்கலை. அபி அப்பா, இப்போத் தான் ஊருக்குப் போயிருக்கார். குழந்தை வேறே, அப்புறம் அபி பாப்பாதான் வந்து எழுதும். அவர் எழுதறதே தாங்கலை, இன்னும் அபிபாப்பா வேறே எழுத ஆரம்பிச்சால் யார் படிக்கிறது?

புலியைச் சொல்லலாம்னா அது என்னமோ முறைச்சுட்டு இருக்கு. ஒண்ணுமே சொல்லலைங்க. புலி ட்யுப்லைட்டுங்கற விஷயத்தைத் தனியாக மெயில் பண்ணினேன். அவ்வளவுதான். கொலைவெறியோடு அலையுது பாருங்க. பார்த்தால் கூட மூஞ்சியைத் திருப்பிக்குது. (அது என்னோட ப்ளாகுக்கு எல்லாம் வந்ததாலே தான் அப்படி ஆயிட்டேன்னு சொன்னதை மட்டும் சொல்லவே மாட்டேனே!) அடுத்தாப்பலே "ராயல் ராம்"ஐப் பாருங்க, சபையிலே வைச்சுச் சொன்னேன், நீங்க ட்யூப்லைட்டுன்னு. மரியாதையா ஒத்துக்கிட்டதோடு இல்லாமல், ஏன் வெளியிலே சொல்லிட்டுத் திரியுறீங்கன்னு மட்டும் கேட்டுது! இதை ஆதரித்து எல்லாரும் கமென்ட்டும் போட்டாங்க. தொண்டர்ன்னா இவரல்லவோ உண்மைத் தொண்டர்! இவரைச் சொல்லலாம்னு நினைக்கிறேன். அப்புறமா வல்லி சிம்ஹன் இருக்காங்க, அவங்களை மாட்டி விடலாம். கையிலே லாப்-டாப் வேறே இருக்கு. ஸ்விட்ஸர்லான்டைச் சுத்திக்கிட்டே எழுதிடலாமே! அடுத்து நம்ம தி.ரா.ச.சார் அவர்கள். அவரைச் சொல்லலாம்னா அவர் வந்து கமென்டுவதே வர வர அம்பியைக் கேட்டுக்க வேண்டி இருக்கு. இதிலே எங்கே இதெல்லாம் எழுதப் போறார்? ரொம்பவே கஷ்டம் தான். "பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும்"ங்கிற மாதிரி அம்பியோட சேர்ந்தால் என்னன்னு நான் சொல்ல வேண்டாமே உங்க எல்லாருக்கும்!

இ.கொ. முதலில் எட்டு ஆளைத் தேத்திக் கொடுங்க, பதிவு போடறேன். அப்புறம் எட்டு விஷயம் எழுதறதுக்கு மண்டையைப் பிச்சுக்கிட்டதிலே தோணினது இது. எட்டு விஷயம் இன்னும் 2 நாளில் எழுத முயற்சி செய்யறேன். கடவுளே காப்பாத்து வலை உலக மக்களை!

டிஸ்கி: அம்பியின் வேண்டுகோளின்படி இந்தப் பதிவும் மிக நல்ல பதிவாக மதிப்பிடப் படுகிறது. இது 300-வது பதிவு.
"மேளங்கள் முழங்க,'
தாளங்கள் ஓங்க,
பாடல்கள் பாட,
இன்னிசைக் கருவிகள் ஒலிக்க
எல்லாரும் கொண்டாடுவோம்." தலைவியின் சிறப்புப் பதிவு.

Tuesday, June 19, 2007

என்ன ஆச்சு? தலைவிக்கும், தொண்டர்களுக்கும்? பரபரப்புத் தகவல்கள்!

இன்னும் ஒரு போஸ்ட் பாக்கி இருக்கு, 300 போஸ்ட் ஆக. அதுக்குள்ளே ஒரு மொக்கை போட்டுடலாம்னு ஆசை வந்துடுச்சு. அதான் இன்னிக்குக் கிடைத்த கொஞ்ச நேரத்தை அதுக்கு உபயோகிச்சுக்கறேன்.
*************************************************************************************

புதரகம் வந்த தலைவி அதற்குப் பின்னர் அடிக்கடி காணாமல் போவது பற்றித் தொண்டர்கள் கவலை அடைந்திருக்கிறார்கள். தலைவியின் பதிவுகளில் வந்து தவறாமல் பின்னூட்டம் இடும் மு.க. அவர்களையும் சிலநாட்களாய்க் காணவில்லை. மேலும் அவரால் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப் பட்ட முதல் அமைச்சர் ஆன (நறநறநற) திரு பக்கார்டி ச்யாமையும் சில பல தினங்களாய்க் காணாமல் தலைவி கவலையில் ஆழ்ந்திருப்பதாய்ச் செய்திகள் கசிகின்றன. தலைவியை எந்நாளும் கைவிடமாட்டேன் என்று உறுதி அளித்த துணை முதல்வர் வேதா அவர்களும் அவ்வப்போது தலை காட்டுகிறாரே தவிர அவரும் தீவிர அரசியலில்ல் இருந்து ஒதுங்கி இருப்பதாய்த் தெரிகிறது.

தகவல் துறை அமைச்சராய்ப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்ட (நறநறநறநறநறநற) "ஆப்பு அம்பி"யின் திருமணத்தில் வாழ்த்துச் சொன்ன சில நிமிடங்களுக்குப் பின்னரே இவர்கள் காணாமல் போய் விட்டதாயும் நம்பப் படுகிறது. அதிலும் "பில்லு பரணி' என்று நாமக்ரணம் சூட்டப் பட்ட பரணி, துபாயில் துண்டு போட்டுத் தலைவிக்காக நிதி வசூல் செய்த கோபிநாத், தலைவியின் ஒவ்வொரு (அடியையும் வாங்கிக் கொண்டு) அடியையும் பின்பற்றி நடக்கும் மணிப்ரகாஷ் போன்றவர்களைக் காணவில்லை என ஏற்கெனவே செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இப்போது சில நாட்களாய்த் திடீரென தலைவியையும் காணவில்லை! தொண்டர்களுக்குள் குழப்பம். அம்பி&கோவின் வெற்றிக் கூச்சல் கேட்கிறது. இதற்கு அவர்களின் சதிவேலை காரணமோ என ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

பலநாட்களாய்த் தலைவியின் பதிவுக்குத் தலை காட்டாமல் இருந்த திரு தி.ரா.ச. அவர்கள் திடீரென வந்து தலைவியின் பதிவில் பின்னூட்டம் இட்ட மர்மம் என்ன? எங்கே தலைவி? எங்கள் யானைத் தலைவி எங்கே? சீச்சீ தானே தலைவி, இல்லையே, தானைத் தலைவி, (அப்பாடி, இப்போத் தான் சரியா வந்திருக்கு) எங்கேன்னு தொண்டர்கள் கூக்குரல் இட்டுத் தேடுகின்றனர். ஒரு பெரும்படை தலைவியைத் தேடப் போயிருக்கு. (நல்ல ஆயின்மென்ட்டாப் போட்டால் படை எல்லாம் சரியாப் போயிடும்னு யாரோ சொல்லுவது காதில் விழுகிறது.) இதுக்கு நடுவில் ஆப்பு அம்பி அநேகமாய் அனைவரின் பதிவிலும் தலைவியைக் குறிப்பிட்டுப் பின்னூட்டங்கள் இட்ட்டு வருவதும், அதன் காரணம் என்ன என்றும் கேள்வி எழுகிறது. இந்தக் குழப்பமான சூழ்நிலை எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்றும் புரியவில்லை.

Friday, June 15, 2007

சண்டை போடு, அல்லது சரணடை!

சில தேதிகளின் நிச்சயத்துக்கு கூகிளைத் தோண்டியபோது விக்கிபீடியாவில் இந்தப் புரட்சியைப் பற்றிக் கிடைத்த தகவல்கள் இவை. சுருக்கமாய்த் தருகிறேன்.

இங்கிலாந்துப் பிரதமரிடம் இருந்து உத்தரவு பிறந்ததும் அட்மிரல் காட்ஃப்ரே என்பவர் ஃப்ளாக் ஆஃபீஸர், கமான்டிங் தி ராயல் நேவியின் தலைமையில் உத்தரவுகள் பறந்தன மாலுமிகளுக்குச் சரணடையும்படி. ஆனால் அதற்குள் புரட்சி மக்களின் கவனத்தையும் அனுதாபத்தையும் பெற்று நாடு தழுவிய போராட்டமாக மாற ஆரம்பித்துவிட்டது. குழப்பமான் சூழ்நிலை நாடு முழுதும் உருவாக புரட்சிக்காரர்களை அடக்கத் தெரியாத இந்தியாவில் இருந்த ஆங்கிலேய அரசு புரட்சி வீரர்களைப் பயமுறுத்தி அடக்க நினைத்தது. வதந்தியை உருவாக்கியது. கனடா, ஆஸ்ட்ரேலியா, சிலோன், போன்ற இடங்களில் இருந்த படை கப்பல்களிலும், விமானத்திலும் கிளம்பி புரட்சியை ஒடுக்க வருவதாய் வதந்தி கிளப்பி விடப் பட்டது. புரட்சி ஆரம்பித்த மூன்றாவது நாள் நிபந்தனை அற்ற சரண் அடையும்படி புரட்சிக் காரர்கள் வற்புறுத்தப் பட்டார்கள். முதலில் அவர்கள் நிபந்தனை ஏற்றுக் கொள்வதாய்ச் சொல்லி வந்த அரசு இப்படித் திடீரென மாறி விட்டது.
காங்கிரஸ் மேலிடத்தில் இருந்தோ அல்லது ஜின்னாவிடம் இருந்தோ ஆதரவு கிட்டவில்லை. இதற்குள் கராச்சித் துறைமுகத்துக்குப் பக்கத்தில் இருந்த "மனோரா" தீவில் இருந்த "ஹிந்துஸ்தான் என்ற கப்பலைப் புரட்சிக்காரர்கள் பிடித்து வைத்திருந்தனர். கப்பலுடன் அவர்களைப் பிடிக்க ப்ளாக் வாட்சின் வீரர்கள் அனுப்பப்பட்டனர் மிக ரகசியமாய். வீரர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டப் பட்டனர். புரட்சிக்காரர்கள் மெளனம்சாதித்தனர். அடங்கவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை. துப்பாக்கிச் சூடு ஆரம்பித்தது ஆங்கில அரசின் படை. தற்காப்புக்காகப் போர் நடத்தினர் புரட்சிக் காரர்கள் மிக கவனத்துடன். ஆகவே எதிர்த் தரப்பில் சேதம் இல்லை. ஆனால் புரட்சிக் காரர்கள் தரப்பிலோ சேதம் ஏராளம். புரட்சிக்காரர்களின் மென்மையான அணுகுமுறையைச் சாதகாமாய்ப் பயன்படுத்திக் கொண்டது ஆங்கில அரசு. பெரும்பாலான காயமடைந்த வீரர்கள் இளைஞர்கள். சிலர் மிகக் குறைந்த பருவ வயது இளைஞர்கள். கப்பலில் வெள்ளைக் கொடி கட்டாயமாய்ப் பறக்கவிடப் பட்டது. மற்றக் கப்பல்கள்? நாளை பார்ப்போம்.

Wednesday, June 13, 2007

புரட்சி வீரர்களுக்கு நேர்ந்த கதி! :(

முதல்முறையாகவும், ஒருவேளை கடைசிமுறையாகவுமோ தெரியவில்லை, மூன்று கொடிகளும் சேர்ந்து பறந்ததோடல்லாமல் மூன்று கட்சித் தலைவர்களின் ஆதரவையும் சிப்பாய்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். பம்பாயில் வி.டி. ஸ்டேஷனுக்கு அருகே இருந்த அப்போதைய ஹார்ன்பை ரோடு ஸ்தம்பித்தது. தற்சமயம் அது டி.என்.ரோடு(சி.எஸ்.டி.) அழைக்கப் படுகிறது. அப்போது பழக்கத்தில் இருந்த கம்பியில்லாத் தந்தி முறையில் அனைத்துக் கப்பல்கள், மற்றும் புனே நகரில் இருந்த தரைப்படைத் தலைமை, சென்னைத் துறைமுகம், மற்றும் சென்னையில் இருந்த ராணுவம், கல்கத்தத் துறைமுகம், ராணுவம் போன்றவற்றின் முக்கியமானவர்களுக்குத் தகவல்கள் பறந்தன. அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற ஆரம்பித்தனர். பிரிட்டிஷ் அரசு விழித்துக் கொண்டது.

உள்ளூர் போலீஸின் உதவியையும் நாடமுடியவில்லை. உள்ளூர் போலீஸும் புரட்சிக்கு ஆதரவு தெரிவித்து வீரர்களைக் கைது செய்ய மறுத்தது. வழியோடு போன ஆங்கிலேய மக்களும், அவர்களின் குடும்பங்களும் வண்டியில் இருந்து இறக்கி விடப்பட்டனர். தபால்கள் போகும் வண்டிகள் கூட நிறுத்தப்பட்டுக் கிட்டத் தட்ட 2 மணி நெரத்துக்கு மேல் போக்குவரத்து ஸ்தம்பிக்க ஆரம்பித்தது. ஆங்கிலேய அரசு முக்கியமான இடங்களில் ஆயுதப் படை வீரர்களைப் பாதுகாப்புக்கு நியமித்தனர். அப்போது இருந்த "கோர்க்கா ரெஜிமென்ட்" வீரர்களைப் புரட்சிக்காரர்களைச் சுட உத்தரவு பிறப்பித்தும் அவர்கள் சுட மறுத்தனர். சிப்பாய்களின் முக்கியமான கோஷம், "இந்திய தேசீய ராணுவ வீரர்களை விடுதலை செய்! ஜெய்ஹிந்த்! பம்பாய் நமதே! இந்தியா நமதே!" என்பது தான். அவர்கள் உணவு, உடையில் ஏற்றத் தாழ்வு என்பது எல்லாம் ஒரு சாக்கு என்றும் உண்மையான எதிர்பார்ப்பு என்ன என்பதும் அவர்களுக்கு இதுதான் என்பதும் புரிய ஆரம்பித்தது அரசுக்கு. அவமானம் ஏற்பட்டு விட்டதாய்க் கருதினார் அப்போதைய வைஸ்ராய் அவர்கள். லண்டனில் உள்ளவர்களுடன் கலந்து ஆலோசித்தார். 18-ம் தேதி ஆரம்பித்த புரட்சியில் 19-ம் தேதி பெப்ரவரி மாதம் கொடி ஏற்றப்பட்டது. 20-ம் தேதி அன்று அப்போதைய பிரதமர் ஆன "க்ளமென்ட் அட்லி" ஆங்கிலேய அதிகாரிகளுக்கு "ராயல் நேவி"யின் புரட்சியை ஒடுக்க ஆணை இட்டார். பிறகு?

Tuesday, June 12, 2007

பறந்தன மூன்றுவிதக் கொடிகள்!

முதலில் "நாகை சிவா" நம் ராணுவம் ஆங்கிலேயர் வசம் இருந்தபோது அந்தச் சிப்பாய்கள் ஆங்கிலேயருக்காக உழைத்தார்கள் என்று சொல்வதை நான் வன்மையாக, (நிஜமான வன்மையுடன்) கண்டிக்கிறேன். ஏனெனில் ஆங்கிலேயர் நம் நாட்டை ஆள வந்தபோது முதலில் அவர்கள் தான் படை வீரர்களையும் கொண்டு வந்தனர். ஆங்கிலேயச் சிப்பாய்கள்தான் முதலில் இருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக நாட்டை ஆக்கிரமித்த அவர்கள், நம் நாட்டு அரசர்களிடம் இருந்த உண்மையான படை வீரர்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அந்த அந்த அரசுக்குத் தனி திவானும், படையும் இருப்பதாய்ப் பேர். ஆனால் மேலதிகாரிகளாய் ஆங்கிலேயர் ஒருவர் இருப்பார். அரசர் பேருக்குத் தான்,. வெளியே தெரியாது. சிப்பாய்கள் தங்கள் அரசரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த நாட்டுக்கு உழைப்பதாயும், அவசர காலங்களில் ஆங்கிலேயருக்கு உதவி செய்வதாயும் பேர். ஆனால் அதிகாரிகளாய் இந்தியர்களும் இருந்தனர். சிப்பாய்கள் என்ன செய்ய முடியும்? எந்த அரசரின் கீழ் அவர்கள் வீரர்களாய் இருந்தனரோ அந்த அரசரே அவர்களை இவ்விதம் கட்டளை இட்டு ஆங்கிலேய அரசின் கீழ் உழைக்கும்படி சொன்னதுக்கு வீரர்கள் எவ்விதத்தில் பொறுப்பு? பொதுவாய்ப் படை வீரர்கள் தங்கள் மேலதிகாரிகளின் கட்டளையை மட்டும் ஏற்றுச் செயல்படும்படி அவர்களைத் தயார்படுத்தி வைப்பது உண்டு. கட்டளைக்குக் கீழ்ப்படிதல் ஒன்றே அவர்களின் முக்கிய வேலையாக இருக்கும். ராணுவத்திடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு இது புரியும். அப்படி இருக்கையில் அவர்கள் தங்கள் மேலதிகாரிகளின் கட்டளையைத் தான் ஏற்க முடியும். இதில் அவர்கள் தவறு ஏதும் இல்லை. அப்படியும் சிலர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிராய்ச் செயல்பட மறுத்தவர்களும் உண்டு. ஆயுதத்தைத் திருப்பியவர்களும் உண்டு. சிவா சொல்வது எல்லாம் சும்மா ஏதேனும் சொல்லவேண்டுமே என்பதற்குத் தான். உண்மையில் அவர்கள் தங்கள் நாட்டிடம் தேசபக்தியுடன் இருந்து வந்ததே ஆங்கிலேய அதிகாரிகள் விரும்பவில்லை. இப்படி ஆரம்பித்தது தான் இவ்வாறு ஒரு போராட்டமாய் வெடிக்க நேர்ந்தது. சிவா நினைத்தாற்போல் காந்தியும் நினைத்த காரணத்தால் தான் அவர் இதை ஆதரிக்க வில்லை! :P

ஆங்கிலேய அரசு எத்தனை முயன்றாலும் அவர்களால் இந்திய தேசீய ராணுவம் அடைந்த வெற்றிகளையோ, போஸின் சாகஸங்களையோ, இம்பால், பர்மா, அந்தமான் தீவுகள் ஆகியவற்றை முற்றுகை இட்டு இந்திய தேசீய ராணுவம் பிடித்து முன்னேறியதையோ மறைக்க முடியவில்லை. அவர்களால் முடிந்தது ஜப்பான் போஸுக்கு உதவி செய்வது அறிந்து ஜப்பானை மிரட்டிப் பணிய வைத்ததும், ஜப்பானின் உதவி போஸுக்குக் கிடைக்காமல் செய்ததும் தான். வட கிழக்கு இந்தியாவில் மழைக்காலம் வேறே ஆரம்பித்த காரணத்தால் அவ்வளவு மழையை வீரர்களால் சரியான பாதுகாப்பின்றி எதிர்கொள்ள முடியவில்லை. இந்த விஷயங்களும், போஸின் திடீர் மறைவும் வீரர்களைக் கிளர்ச்சியுறச் செய்து இருந்தது. அவர்கள் நினைத்தது:போஸ் எங்கேயோ மறைந்திருக்கிறார். நாம் கிளர்ச்சியை ஆரம்பித்தால் அவருடன் சேர்ந்து கொள்ளலாம். :என்பது தான்.

ஆகவே வீரர்கள் திரு எம்.எஸ்.கான் என்பவர் தலைமையில் முதலில் "ராயல் நேவி"யில் கிளர்ச்சி ஆரம்பித்ததனர். எல்லா வீரர்களும் ஒன்று சேர்ந்தனர். அதில் காங்கிரஸை ஆதரித்தவர்களும் இருந்தனர். முஸ்லீம் லீகை ஆதரித்தவரும் இருந்தனர். கம்யூனிஸ்டை ஆதரித்தவரும் இருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியோ வெளிப்படையாகவே கிளர்ச்சியை ஆதரித்தது. பல மாலுமிகள், கப்பல் பணியாளர்கள், கப்பலில் போரிடும் வீரர்கள், சமையல்காரர்கள் என்று அனைவரும் ஒன்றுபட்டனர். அந்தச் சமயம் "ராயல் நேவி"க்குச் சொந்தமாய் 78 கப்பல்கள், 20 கரை சார்ந்த நிறுவனங்கள் இருந்தனர். மொத்தமாய் 20,000 மாலுமிகள் இருந்திருக்கலாம் என்று சொல்லப் படுகிறது.

மேலும் அப்போது இந்திய தேசீய ராணுவத்துக்காக உழைத்தவர்கள் பலரும் போர்க்கைதிகள். அனைவரும் ஜெர்மனியாலும், ஜப்பானாலும் சிறைப்பிடிக்கப் பட்டவர்கள். போஸின் வேண்டுகோளால் விடுவிக்கப் பட்டு, போஸ் ராணுவம் திரட்டிய சமயம் இந்தப் போர்க்கைதிகள் தங்களின் தேசபக்தியை வெளிக்காட்டவும், ஆங்கிலேய அரசுக்கு எதிராகவும் போஸின் ராணுவத்தில் சேர்ந்து நாட்டு விடுதலைக்குப் போராடியவர்கள். அவர்கள் துரோகம் செய்தார்கள் எனச் சொல்லி ஆங்கிலேய அரசு அவர்களை போஸின் மறைவுக்கு முன்னரும், பின்னரும் கைது செய்து வந்தது. அவர்களை விடுதலை செய்யச் சொல்லிக் கோஷம் எழுப்பிக் கொண்டும், போஸின் உருவப் படத்தைக் கையில் ஏந்திக் கொண்டும் அனைவரும் கராச்சி துறைமுகத்தில் இருந்து பம்பாய் நோக்கிப் புறப்பட்டனர். ஆங்கிலேய அரசுக்குக் கட்டுப் பட்ட இந்திய அதிகாரிகளால் முதலில் அவர்களைத் தடுக்கச் சொல்லி உத்தரவு வந்தது. அதிகாரிகளால் அடக்க முடியவில்லை,. சில அதிகாரிகள் மனம் மாறிப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்குள் விஷயம் வெளியே பரவி கொச்சி, விசாகப்பட்டினம், சென்னை, கல்கத்தா போன்ற துறைமுகங்களில் இருந்தவரும் ஆதரவுக் குரல் எழுப்பினர். கப்பல்களில் மூன்றுவிதமான கொடிகள் ஏற்றப் பட்டன. ஒன்று காங்கிரஸின் மூவர்ணக் கொடி, 2-வது முஸ்லீம் லீகின் பச்சைக் கொடி, மூன்றாவது கம்யூனிஸ்டின் செங்கொடி. பிரிட்டிஷ் யூனியனின் "யூனியன் ஜாக்" கொடி கீழே இறக்கப் பட்டது. அதிர்ந்தனர் ஆங்கிலேயர். காங்கிரஸ் மேலிடத்துக்குத் தகவல் போனது. பம்பாயிலோ? என்ன நடந்தது? நாளை பார்க்கலாம்.

Sunday, June 10, 2007

நம்பினால் நம்புங்க! உங்க இஷ்டம்!

முதலில் கொஞ்சம் மொக்கை போடலாமான்னு தான் இருந்தேன். ஆனால் ரொம்ப நாளாக வெயிட்டிங்கில் இருக்கும் "பம்பாய் புரட்சி"யை முடிச்சுடலாம்னு திடீர்னு ஒரு நல்ல எண்ணம் வந்துடுச்சு. அதான் கிறுக்குத் தனம் பண்ணாமல் ஆரம்பிக்கலாம்னு ஆரம்பிச்சுட்டேன்,. முதலில் நாகை சிவா சொன்ன புகார்களுக்கு மறுப்பில் ஆரம்பிக்கலாம். பம்பாயில் இருந்த "ராயல் நேவி"யில் வீரர்கள் புரட்சிக்கு ஆரம்பித்ததும் அது மெதுவாக மூன்று படைகளுக்கும் பரவ ஆரம்பித்துப் பெரிய புரட்சியாக மாறவேண்டியதைத் தடுத்தவர் காந்தி தான். அவருக்கு பிரிட்டிஷாரிடம் இருந்த செல்வாக்கை அவர் முடிந்தால் அப்போதே பிரயோகித்து நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கி இருக்க முடியும். பாகிஸ்தான் பிரிவினையை ஓரளவு தடுத்திருக்கலாமோ என்னமோ! அதற்குப் பின்னர் வருகிறேன். ஆனால் காந்தி பலமுறை சிறைவாசம் செய்திருந்தாலும் நாடு கடத்தப் படவில்லை.

மாறாக உண்மையாக உழைத்த பலர் நாடு கடத்தப் பட்டனர். காந்தி அவர்களுக்காகக் கூட வாதாடியது இல்லை. இதுவும் ஒரு கசப்பான உண்மைதான். சுபாஷ் பலமுறை நாடு கடத்தப் பட்டார். அவர் காங்கிரஸில் தானே இருந்தார்! பர்மாவில் மாண்டலே சிறையில் பலமுறையும், நாடு விட்டு நாடும் கடத்தப் பட்டார். அம்மாதிரியான ஒரு சமயம் தானே காங்கிரஸ் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்போதும் காந்தி அவரின் விடுதலைக்காக ஒரு வார்த்தை கூட பிரிட்டிஷாரிடம் பேசவே இல்லை. இதுவும் ஒரு கசப்பான உண்மைதான். அப்படிப் பட்டவர் இந்த வீரர்களுக்காக ஏன் பேசுவார்? இது எதிர்பார்க்கக கூடியது தான். இந்த வீரர்களுக்கு ஆதரவு திரட்ட முயன்ற காங்கிரஸ் தலைவியான "அருணா அசஃப் அலி" காந்தியால் விமரிசனம் செய்யப் பட்டார். "இந்த வெட்டி வேலையை விட்டு விட்டு "இந்து, முஸ்லீம்" ஒற்றுமைக்குப் பாடுபடலாம்" எனக் கடுமையாக அவரிடம் காந்தி சொன்னார்.

"நாகைசிவா சொல்கிறார்: இந்த சிப்பாய்கள், சிப்பாய்கள் என்று சொல்கிறீர்களே, இவர்கள் எல்லாம் ஆங்கிலேயருக்குச் சேவகம் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் தானே! ஏதோ ஒரு கால கட்டத்தில் தான் அவர்களுக்குச் சுய மரியாதை ஏற்பட்டு இந்தப் போராட்டம் நடந்திருக்கு!"

ஆம், உண்மைதான், அந்த சிப்பாய்கள் ஆங்கிலேயரிடம் வேலை பார்த்தார்களே தவிர, ஆங்கிலேய நாட்டிற்காக அல்ல! நம் நாட்டிற்காகத் தான் உழைத்தார்கள். நம் நாட்டு வீரர்கள் அவர்கள். சுபாஷ் அவர்களைத் திரட்டிச் சேர்த்து நம் பக்கம் திருப்பிப் போரடலாம் என்ற போது தான் காந்தி நடுவிலே குறுக்கிட்டார். சிப்பாய்கள் நம் பக்கம் இருந்தால் நமக்கு வெற்றி நிச்சயம் என்று சொன்னார் அவர். அதற்காகவும் பாடுபட்டார். ஆனால் காந்தியோ "அஹிம்சை" என்ற பெயரிலே தான் சுதந்திரம் வர வேண்டும் என விரும்பிபார். ஆனால் சுதந்திரம் அப்படியா வந்தது? அதனால் இம்சைப்பட்டவர்கள் எத்தனை பேர்? பொதுமக்கள் மட்டுமில்லாமல் தலைவர்களும் உயிர்த்தியாகம் செய்ய வேண்டி இருந்திருக்கிறது. தன்னுடைய "உண்ணாவிரதம்" என்னும் "எமோஷனல் ப்ளாக் மெயில்"னால் காந்தி அனைவரையும் கட்டிப் போட்டார். அது அவரின் சாமர்த்தியம் தானே தவிர அஹிம்சை வழி என்று சொல்ல முடியவில்லை. அவர்கள் தங்களை வழிநடத்த வேண்டிய ஒரு தலைமைக்குக் காத்திருந்தனர். அந்தத் தலைமை போஸ்தான் என்ற கசப்பான உண்மையைக் காந்தி புரிந்து வைத்திருந்து அதைத் தடுத்தார் என்றே சொல்ல வேண்டும்.

"சிவா சொல்கிறார்: அவர்கள் மனதில் நேதாஜி இருந்திருந்தால் (கண்டிப்பாக இருந்திருப்பார், ஆனால் காந்திக்கு அடுத்தபடி தான்) வேலையை விட்டு விலகி அவர் பின் சேர்ந்திருக்கலாம்."

வீரர்கள் தயாராக இல்லைனு சொல்லவே முடியாது. நேதாஜி எதிர்பார்த்ததும் அதுதான். ஆனால் அதற்குள் தான் அவரின் முடிவு என்று சொல்லப்படும் நிகழ்ச்சி நேர்ந்து விட்டது. அவரின் அடுத்த முயற்சி அதுவாகவே இருந்திருக்கலாம், ரஷ்யாவின் உதவியுடன் செய்ய நினைத்திருக்கலாம். ஜப்பான் உதவும் என நினைத்திருக்கலாம். ஆனால் பிரிட்டிஷாரின் ராஜ தந்திரம், அதுவும் காந்தியை அவர்கள் உபயோகித்த விதம் அலாதியானது. அவருக்கு மிகப் பெரிய மரியாதை கொடுத்து வந்ததின் மூலம் அவர் சொல்லுவதை மற்றத் தலைவர்கள் கட்டாயம் கேட்டே ஆக வேண்டும் என்ற நிலையை மிகச் சாமர்த்தியமாக உருவாக்கினார்கள். அவர்கள் நியாயமானவர்கள் என்றால் ஏன் ஒவ்வொரு முறையும் தலை மறைவாக இருந்த போஸைக் கொல்ல முயல வேண்டும்? போஸ் நாடு கடத்தப் பட்டு ஐரோப்பாவில் சுற்றிக் கொண்டிருந்த சமயம் கூட ப்ரிட்டிஷாரின் உளவாளிகள் அவரைக் கொல்ல முயன்றதும் ஹிட்லரின் உதவியுடன் அவர் தப்பியதும் சரித்திரம் மறைத்த உண்மை! இப்போது சமீபத்தில் நடந்த முகர்ஜி கமிஷனிடம் கூட அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவே! போஸின் அரசியல் வாழ்வை அவர்கள் விரும்பவில்லை. அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இந்தியா இருக்கவேண்டும் என்றே நினைத்தார்கள். போஸ் இருந்தால், இந்தியா காமன்வெல்த்தில் கூடச் சேர்ந்திருக்காது என்று என் கருத்து!

Saturday, June 09, 2007

சொன்னால் நம்பவா போறீங்க?

இத்தனை நாள் 300 போஸ்ட் போட்டு இருந்திருக்கணும், எல்லாம் இந்த தி.ரா.ச. சார். கண்ணு வச்சாலும் வச்சார் :P கொஞ்ச நாளா என்ன கிட்டத்தட்ட 15 நாளா ஆச்சு? எழுதவே முடியலை! நான் எவ்வளவு கஷ்டப்பட்டு போஸ்ட் போடறேன்னு எனக்குத் தான் தெரியும். சொன்னால் நம்ப மாட்டீங்க. இந்தியா எவ்வளவோ பரவாயில்லை, அதிலும் என்னோட டாடா இன்டிகாம் கனெக்க்ஷன் இருக்கே, அது மாதிரி வரவே வராது. இங்கேயும் இருக்கே என்னமோ வித விதமான பேரிலே. சில நாள் காலங்கார்த்தாலே கம்ப்யூட்டர் ஃப்ரீயா இருக்கேனு உட்கார்ந்து ஏதாவது எழுதலாம்னோ அல்லது கமென்டுக்குப் பதில் கொடுக்கலாம்னோ பார்த்தால் அன்னிக்குன்னு பார்த்து வரவே வராது. சில சமயம் எனக்கே ஆச்சரியமா இருக்கும், நாம் யு.எஸ்ஸில் தான் இருக்கோமான்னு! அப்புறமா அது வந்து நான் எழுத ஆரம்பிக்கிறதுக்குள்ளே வேலை ஏதாவது வந்துடும். அன்னிக்குப் பொழுது அப்படியே போயிடும்.

நான் ப்ளாக் போடறதே பெரிய வித்தை தெரியுமா? சொன்னால் நம்ப மாட்டீங்க! எல்லாரும் இணைய இணைப்பு வந்ததும், நேராய் ப்ளாக்கருக்கோ அல்லது வொர்ட் ப்ரஸ்ஸிற்கோ போய் புது போஸ்ட் செலெக்ட் பண்ணி எழுதுவாங்க, அல்லது வந்திருக்கும் கமென்டுக்கு பதில் கொடுப்பாங்க. அவங்க யு.ஆர்.எல்லும், பாஸ்
வொர்டும் கொடுத்தா தானா அவங்க வலைப்பக்கம் திறக்கும். எனக்கு அதெல்லாம் இந்தியாவில் இருந்தவரைதான் அப்படி எல்லாம் நடந்தது. இங்கே வந்தப்போ முதலில் எல்லாம் எனக்கு எக்ஸ்ப்ளோரர் மூலமாய் ப்ளாக்கரே திறக்க முடியலை. சரின்னு நெருப்பு நரியை இன்ஸ்டால் செய்தேன். எழுத்து உடைந்து தெரிந்தாலும் ஏதோ எழுதினேன்னு பேர் பண்ணிட்டு இருந்தேன். அப்போத் தான் இந்த ப்ளாக் யூனியனுக்கு வந்த அழைப்பை நான் நெருப்பு நரி மூலமா ஒத்துக்கிட்டா அது எனக்கு சரியாவே வரலை. திரும்பத் திரும்ப எர்ரர் வந்துட்டே இருந்தது. என்னடா பண்ணறதுன்னு யோசிச்சு யோசிச்சு அம்பியோடயும், டிடியோடயும் சண்டை போட்டு திரும்ப அழைப்பு வாங்கிட்டு எக்ஸ்ப்ளோரர் மூலமாக் கொடுத்தா என்ன ஆச்சரியம்? என்னோட ப்ளாகின் டாஷ்போர்ட் வந்தே விட்டது! எனக்கு ஒரு நிமிஷம் ஒண்ணுமே புரியலை.

அங்கே இருந்தே புது போஸ்ட் கொடுத்துட்டு பப்ளிஷ் பண்ணிட்டு அசட்டுத் தனமாய் அதைக் க்ளோஸ் பண்ணிட்டு (ஹிஹிஹி, மனசாட்சி இப்போ எல்லாம் வெளியே வந்து வேலை செய்யுது!) ஜிமெயிலுக்குப் போயிட்டு மறுபடி வந்து ப்ளாகைத் திறக்கப் போனால் திறக்கவே இல்லை. திரும்பவும் குழப்பமோ குழப்பம். சரின்னு போய் வந்திருக்கிற கமென்டுக்கு பதிலாவது கமென்டுவோம்னு போய்க் கமென்டிட்டுத் திரும்பவும் மறுபடி ஒரு முயற்சி கொடுத்தால் என்ன ஆச்சரியம்? சொன்னால் நம்பவே மாட்டீங்க! இம்முறையும் என்னோட வலைப்பக்கத்தின் டாஷ்போர்ட் திறந்தது. அப்போத் தான் மூளையில் ஒரு சின்ன வெளிச்சம்! (யாருங்க அங்கே அதெல்லாம் இருக்கான்னு கேட்கிறது? அதனாலே தானே இவ்வளவு முயற்சி எல்லாம் செய்யறேன்!) அப்போத் தான் புரிஞ்சது, ஆஹா, ஆஹா, நம்ம ப்ளாக் திறக்கணும்னா நாம ஏதாவது கமென்டுக்கு பதில் கொடுத்துட்டுத் திறக்கணும் அல்லது நமக்கு நாமே திட்டத்தின் படி நமக்கு நாமே கமென்ட் கொடுத்துக்கணும்னு புரிஞ்சது. அப்பாடா! ஒரு வழியா அன்னியிலே இருந்து அப்படித் தாங்க ப்ளாக்கைத் திறக்கிறேன். சொன்னால் நம்பவா போறீங்க?

இப்போப் பாருங்க, வீடு மாத்திட்டு ஒரு வாரமா இணைய இணைப்புக்கு முயன்றால் இந்தியாவே பரவாயில்லைனு ஆயிடுச்சு இங்கே அவ்வளவு வேகம். இந்த டி.எஸ்.எல் கனெக்க்ஷன் வாங்கி அவங்க இணைப்பு கொடுத்து இணையம் வர இத்தனை நாள் ஆகிப் போச்சுங்க! அதான் கொஞ்ச நாளா வர முடியலை. அதெல்லாம் யாரையும் சும்மா விடறதா இல்லை. வந்துட்டேனே! தினமும் முடியாட்டாலும் 2 நாளைக்கு ஒருமுறையாவது வந்து உங்களை எல்லாம் ஒரு வழி பண்ணாமல் விடறதில்லை. இன்னும் யார் விட்டுக்கும் போகலை. நாளைக்குத் தான் போகணும் எல்லார் வீட்டுக்கும். அம்பி வேறே வந்தாச்சுப் போலிருக்கே! இந்த வீட்டிலே கணினி மாடியிலே இருக்கு. நேரம் கிடைக்கும்போது தான் நான் மாடிக்கு வந்து கணினியைப் பார்க்கணும். கீழே யாரும் இல்லைனா மாடிக்கே வர முடியாது. என்ன செய்யப் போறேனோ? ஒரே கவலையா இருக்கு! சொன்னால் நம்பவா போறீங்க?