எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, November 26, 2007

ஐயப்பனைக் காண வாருங்கள் - 2



மஹிஷியின் தவத்தால் மகிழ்ந்தான்,பிரம்மா. அவள் கேட்ட வரமோ கிறுகிறுக்க வைத்தது. அவள் அப்படி என்ன கேட்டாள்? "ஹரியும், ஹரனும் இணைந்து உருவாக்கிய குழந்தையால் மட்டுமே எனக்கு அழிவு வரவேண்டும். அதுவும் அந்தக் குழந்தை பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும். பூமியில் 12 ஆண்டுகளாவது வாழ்ந்திருக்க வேண்டும். நான் இறந்த பிறகு என் உடல் மீது சூரிய வெளிச்சம் பட்டால் என் உடல் வளர வேண்டும்." இவையே அவள் கேட்டது. அவள் நினைத்தது என்னவென்றால் எப்படி ஒரு ஆணும், ஆணும் இணைந்து குழந்தை பெற முடியும்? அப்படியே பிறந்தாலும் அந்தக் குழந்தை பூவுலகுக்கு எவ்வாறு வரும்? வந்தாலும் 12 வயதுப் பாலகனால் இத்தனை பலம் வாய்ந்த நம்மை என்ன செய்ய முடியும்?" என்பதே!ஆட்டுக்குக் கூட வாலை அளந்தே வைக்கும் அந்த சர்வேசன் மஹிஷிக்கு மட்டும் முடிவை வைக்காமலா இருப்பான்? என்றாலும் அவள் எத்தனை காலம் இருக்க வேண்டுமோ அத்தனை காலம் இருந்தே ஆகவேண்டும் அல்லவா?

"உன் எண்ணப்படியே ஆகட்டும்!" என்ற வரம் மஹிஷிக்குக் கிடைத்தது. அவள் ஆற்றல் அதிகரித்தது. அனைவருக்கும் தொல்லை கொடுப்பதே அவள் சந்தோஷம் ஆயிற்று. இங்கே ஹரியும், ஹரனும் இணைய வேண்டுமே? பாற்கடல் கடைந்த போது அமிர்தத்தைப் பங்கிட்டுக் கொடுக்கவேண்டி வந்த மோகினியாகத் திருமால் உருமாறினார். சிவனும் ஹரியும் இணைந்தனர். சாஸ்தா பிறந்தார். தர்மத்தை நிலைநாட்டுவான் இவன் எனப் பெற்றவர்களால் அருளப் பெற்றார் சாஸ்தா. பூதகணங்களுக்கெல்லாம் நாதன் என்பதால் "பூத நாதன்" எனப் பெயர் பெற்றவன். இந்திராணியைக் காத்தவன். எப்படித் தெரியுமா? "கந்த புராணம், நம் சொந்த புராணம்" எனக் கூறி வந்த வாரியார் ஸ்வாமிகள் கூறிய தகவல் இது:

"சூரபத்மனால் விரட்டப் பட்ட இந்திரன், சிவனைப் பூஜிக்கக் கைலாயம் செல்ல விரும்பியபோது இந்திராணியைத் தனியே விட்டுச் செல்ல நேர்ந்தது. அப்போது இந்திராணி தனியே இருக்கப் பயந்தாள். அரக்கர்கள் வந்து என்னைத் தூக்கிச் சென்றால்? எனப் பயப்பட்டாள். இந்திரன் சாஸ்தாவின் துணையை நாட, சாஸ்தா அங்கே பிரத்யட்சம் ஆகி இந்திராணியைத் தான் காவல் காப்பதாய்ச் சொன்னார். அதன்படி அவரின் கணநாதன் ஆன "மஹாகாளன்" காவல் இருக்கிறான் இந்திராணிக்கு. சூரனின் தங்கையான அஜமுகி இந்திராணியை வந்து துன்புறுத்த இந்திராணி, சாஸ்தாவைக் கூப்பிட்டு ஓலம் இடுகிறாள்.
"பூரணைக்கு இறைவா ஓலம்!
புஷ்கலை கணவா ஓலம்!
வாரணத்து இறை மேல் கொண்டு
வரும் பிரான் ஓலம்!"
எனக் கூவி அழைக்க, சாஸ்தாவின் கட்டளையின் பேரில் மஹாகாளன் அஜமுகியின் கைகளைத் துண்டித்துத் தண்டிக்கிறார். இந்த மஹாகாள மூர்த்திக்குக் காவிரிப்பூம்பட்டினத்தில் கோயில் இருப்பதாய்க் கூறுகின்றார்கள். (நான் இன்னும் பார்த்தது இல்லை! ) சாஸ்தா இந்திராணியைக் காத்த இடமானது "கைவிடாஞ்சேரி" என்ற பெயரால் அழைக்கப் பட்டு, தற்சமயம் "கைவிளாஞ்சேரி'" என்று மருவியதாகவும், சீர்காழியில் தென்பாதித் தெருவில் சாஸ்தாவிற்கு என ஒரு கோயில் இருப்பதாகவும், கூறுகின்றனர். மேற்கண்ட நிகழ்ச்சி நடந்த இடம் சீர்காழி என்று கந்தபுராணக் குறிப்பு சொல்லுகிறது.

சாஸ்தா பிறந்துவிட்டார். பூதநாதனாகிக் காவல் தெய்வம் ஆகி, தர்மத்தை நிலைநாட்டவும் தொடங்கி விட்டார். அப்போது நேபாள நாட்டு மன்னனான பலிஞன் என்பவன், தனக்கு ஏற்பட்ட முதுமையைப் போக்கிக் கொள்ள வழிதேடிக் கொண்டிருந்தான். காளி உபாசகன் ஆன மன்னன் பலிஞன், மந்திர, தந்திரங்களில் தேர்ச்சி பெற்றவனும் ஆவான். ஆகவே மந்திர, தந்திரங்களைச் செய்யும் சிலர் மன்னனிடம் வந்து , கன்னிகை ஒருத்தியைக் காளிக்கு நரபலி ஆகக் கொடுத்தால் நீ நினைத்தது நடக்கும் என அவன் ஆவலைத் தூண்டினார்கள். கன்னிகை ஒருத்தியைத் தேடிக் கண்டு பிடித்தான் மன்னன் பலிஞன். அவளோ சிவனைச் சிந்தையில் நிறுத்தி, எந்நேரமும் அவனையே ஒருமுகமாய்த் தியானிப்பவள். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், சிவமந்திரத்தை மறக்காமல் கட்டுண்டு கிடந்து, நரபலியை எதிர்நோக்கிக் கொண்டிருந்த நிலையிலும், "நமசிவாய" மந்திரத்தைச் சிந்தையில் நிறுத்தி, தியானித்தவண்ணம் இருந்தாள்.

தன் அடியாளைக் கஷ்டப் படுத்தும் எண்ணம் அந்த ஆதிசிவனுக்கு ஏது? மன்னனுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும், கன்னிகையையும் காக்க வேண்டும் என எண்ணிய ஆதிசிவன், கன்னியைக் காக்குமாறு காவல்தெய்வம் ஆன சாஸ்தாவிடம் பொறுப்பை ஒப்புவிக்க சாஸ்தாவும் விரைந்து வந்து கன்னியைக் கட்டுக்களில் இருந்து விடுவித்து அவளைக் காத்தார். மன்னன் பார்த்தான், கன்னியைக் கட்டி இருந்த கட்டுக்கள் தாமாகவே திடீரென விலகியது மட்டுமே அவனுக்குத் தெரிந்தது, சாஸ்தா கண்ணுக்குத் தெரியவில்லை. என்ன மாயம்? எனப் பிரமித்த மன்னன், தன்னுடைய மந்திர, தந்திர அஸ்திரங்களைப் பிரயோகம் செய்தான். பூதநாதன், இந்தப் பூதங்களுக்குப் பயப்படுபவனா? ஒன்றும் பலிக்கவில்லை, மன்னன் மிரண்டான், என்ன செய்வது எனப் புரியவில்லை!!!!!!!

சாஸ்தா தன் உருவைக் காட்டி அருளினார். "மன்னா! மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ள நீ, இவ்வாறு கன்னியைக் காவு கொடுக்கலாமா? அதுவும் அன்பே வடிவான, அன்பு ஒன்றுக்கு மட்டும் கட்டுப் படக்கூடிய அன்னையைத் திருப்தி செய்வதாய் நினைத்துக் கொண்டு, அன்னைக்குப் பிடித்தமில்லாத ஒரு விஷயத்தில் இறங்கலாமா?" எனக் கேட்டு பலிஞனுக்கு உண்மையை உணர்த்தவே பலிஞன் மனம் மாறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு இல்லாமல், தன் மகள் ஆன புஷ்கலையைத் திருமணம் செய்து கொண்டு அவளுக்கு வாழ்வு தர வேண்டும் எனவும் சாஸ்தாவைக் கேட்டுக் கொள்ள அவரும் அவ்வாறே புஷ்கலையைத் திருமணம் செய்து கொண்டார். யார் இந்தப் புஷ்கலை? ஏன் சாஸ்தாவைத் திருமணம் செய்து கொண்டாள்? சாஸ்தாவிற்குக் கல்யாணம் ஆகி விட்டதா? அப்படி என்றால் ஐயப்பன் யார்? எல்லாம் வரும் நாட்களில்!!!!!!!!!

புலி ஐயப்பன் படங்களைப் புலியின் மேல் இருக்கும் படமும் அனுப்பி வச்சிருக்கு. வரும் நாட்களில் போடுகிறேன். புலி வாகன ஐயப்பன் படங்களைப் புலியே அனுப்பி வச்சிருக்கிறது, என்ன ஒரு ஆச்சரியமான விஷயம் இல்லை???????

7 comments:

  1. :)

    அடுத்த பதிவில் சந்திக்குறேன்.

    ReplyDelete
  2. ம்ம் கதை நல்லா போகுது, மேற்கொண்டு நகரட்டும். :)


    புலி படம் குடுத்தது இருக்கட்டும், அதை ஒழுங்கா அப்லோட் செய்ய போவது யாரு உங்க கொ.ப.செ தானே? :))

    ReplyDelete
  3. // புலி வாகன ஐயப்பன் படங்களைப் புலியே அனுப்பி வச்சிருக்கிறது, என்ன ஒரு ஆச்சரியமான விஷயம் இல்லை???????//

    ஆமா..ஆமா..

    ReplyDelete
  4. நல்லாயிருக்கு மேற்கொண்டு சொல்லுங்க......

    இத படிச்சபோது முன்பு தூர்தர்ஷனில் தாதா-தாதி கஹானியோ அப்படின்னு ஒரு சீரியல் வருமே அது ஞாபகம் வந்தது.... ஹிஹிஹி

    ReplyDelete
  5. கார்த்திகை மாதத்தில் ஐய்யப்பனின் சரிதம் படிக்க வைத்ததற்கு மிகவும் சந்ந்தோஷம்.சீக்கரம் அடுத்த பதிவை போடுங்கள்.இந்த தடவை என்ன ஸ்பெஷல் அப்பாவும் மகனும் "சாமி சரணம்" மலைக்கு விஜயமா?

    ReplyDelete
  6. //தாதா-தாதி கஹானியோ அப்படின்னு ஒரு சீரியல் வருமே அது ஞாபகம் வந்தது.... //

    @M'pathi, ஹஹா! தாதா-தாதினா தாத்தா-பாட்டினு தானே ஹிந்தில. :p

    அடடா! 2 நாள் உங்க வீட்டுக்கு நான் வந்துட்டு போனதுக்கே நீங்க இவ்ளோ தெளிவாயிட்டீங்களே, வெரிகுட், வெரிகுட். :))

    ReplyDelete
  7. இந்திராணியை சூரனிடமிருந்து பாதுகாக்கும் பொறுப்பை சாஸ்தா ஏற்றுக் கொண்டார் என்று படித்தது நினைவிற்கு வருகிறது. கந்த புராணத்தில் தான் படித்தேன் என்று நினைவு. மகாகாளர் வந்து அஜமுகியைத் தண்டிப்பதும் நினைவிற்கு வருகிறது.

    பலிஞனின் கதையைப் படித்ததில்லை. புஷ்கலா தேவியின் கதையும் புதிது. வருடாவருடம் ஆரியங்காவில் புஷ்கலா தேவிக்கும் சாஸ்தாவிற்கும் நடக்கும் திருமணத்தின் போது மதுரையிலிருந்து சௌராஷ்ட்ரர்கள் பெண்வீட்டுக்காரர்களாகச் சென்று திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள். புஷ்கலா தேவி சௌராஷ்ட்ரப் பெண் என்ற நம்பிக்கையும் உண்டு.

    http://www.sourashtra.com/ayyappan.htm

    இந்த வலைப்பக்கத்தில் வலப்பக்கத்தில் இருக்கும் சுட்டிகளைப் பாருங்கள். திருமண அழைப்பிதழ்களும் திருமண வைபவப் படங்களும் இருக்கின்றன.

    ReplyDelete