இப்போது சங்கடஹர சதுர்த்தியில் முக்கியமான அங்காரக சதுர்த்தி வந்த விதம் பற்றிப் பார்ப்போமா??அங்காரகன் என்றால் செவ்வாய். செவ்வாய் கிரகம் பற்றி அனைவரும் அறிந்திருக்கலாம். பூமிக்கு மிக அருகே இருக்கும் கிரகம் அது என்பதோடு அல்லாமல் சிவந்த நிறத்துடனும் காணப்படும். நம் கண்களால் செவ்வாயைப் பார்க்க முடியும். அந்தச் செவ்வாய் என்னும் அங்காரகன் ஈசன் ஆன பரமேஸ்வரனின் புத்திரன் என்று சொல்லுவார்கள். இன்னும் சிலர் ஸ்கந்தன் என்னும் கார்த்திகேயனின் அம்சமே அங்காரகன் என்றும் சொல்லுவார்கள். அங்காரகன் வழிபாட்டில் ஸ்கந்தன் என்னும் முருகன் மட்டுமல்லாமல் விநாயகருக்கும் சிறப்பான இடம் உண்டு.
வசிஷ்டரின் பரம்பரையில் வந்த பாரத்வாஜ முனிவருக்கும், தேவ மங்கை ஒருத்திக்கும் பிறந்த குழந்தை அங்காரகன். குழந்தை பிறந்ததுமே தேவமங்கை தேவலோகம் திரும்பிச் செல்ல, முனிவரோ தன் தவத்தை விட்டு விட்டு இல்லறத்தில் மூழ்கியதை நினைத்து நொந்துகொண்டு குழந்தையை அப்படியே விட்டு விட்டு தன் தவத்தைத் தொடர நர்மாதைக்கரைக்குச் செல்லுகின்றார். குழந்தையின் மேல் பாசம் கொண்ட பூமித்தாய் அந்தக் குழந்தையைச் சொந்தக் குழந்தை போல் வளர்த்து வர, குழந்தை வளர்ந்து வந்தது. செந்நிறம் உள்ள அந்தக் குழந்தையை அங்காரகன் என்று அழைத்து வந்தாள்.
குழந்தை வளர்ந்து ஏழு வயதில் ஒரு நாள் தன் தாயான பூமித்தாயிடம் தன் தந்தை பற்றிக் கேட்கின்றான் அங்காரகன். தந்தை பாரத்வாஜ ரிஷி என்று தெரிந்ததுமே அவரைக் காண ஆவலாய் இருக்க, அவனை அழைத்துக் கொண்டு பாரத்வாஜ ரிஷியின் ஆசிரமம் சென்ற பூமா தேவி குழந்தையை அவருடையது என்பதைத் தெளிவு படுத்தி விட்டு அவரிடம் ஒப்படைக்கின்றாள். பாரத்வாஜரும் ஏற்றுக் கொண்டு முறைப்படி செய்யவேண்டிய உபநயனம் போன்ற சடங்குகளைச் செய்துவிட்டுப் பிள்ளைக்கு வேதங்களும் கற்றுக் கொடுக்க அங்காரகன் நான்கு வேதங்களிலும் தேர்ந்தவன் ஆகின்றான். பின்னர் தன் நிலை இன்னும் உயரவேண்டும் என்று விரும்பிய அங்காரகன் தந்தையின் ஆசிகளோடு காட்டிற்குச் சென்று தவம் செய்ய ஆரம்பிக்கின்றான்.
விக்னங்களைத் தீர்க்கும் விக்ன விநாயகனை வேண்டி அவன் செய்த தவத்தால் மனம் மகிழ்ந்து விநாயகர் காட்சி அளிக்கின்றார், அது ஒரு மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தி அன்று. அன்று தாமதமாய் சந்திரன் வரும் சந்திர உதய காலத்தில் அங்காரகனுக்கு விநாயகர் தரிசனம் கொடுக்க, அவன் வேண்டுகோள் என்னவெனக் கேட்கின்றார் விநாயகர். அங்காரகனும் தான் தேவலோகம் சென்று தேவர்களோடு சேர்ந்து இருந்து அமிர்தம் அருந்தி அமரன் ஆக ஆசைப் படுவதாய்ச் சொல்லுகின்றான்
மேலும் உங்கள் சர்வ மங்கள சொரூபத்தைத் தரிசித்த என்னை இன்று முதல் உங்கள் பெயராலேயே மங்களன் என அழைக்கவும் வேண்டுகின்றேன். நான் உங்களை வழிபட்டுத் தரிசித்த இந்தச் சதுர்த்தி நன்னாளில் உலகத்து மக்கள் அனைவரும் வழிபட்டுத் தங்கள் துன்பங்கள் நீங்கப் பிரர்த்தித்தால் அவர்களின் இன்னல்களை நீக்கி அருள வேண்டும். மேலும் மங்களங்களை உண்டாக்கும் உங்கள் அருளால் என்னையும் அனைவரும் வழிபடும் கிரகமாய் ஆக்கவேண்டும். என்று அங்காரகன் கேட்க விநாயகரும் அவ்வாறே அருளுகின்றார்.விநாயகரின் தரிசனம் கிடைத்த அந்த இடத்திலேயே அவரின் விக்ரகம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து “மங்கள விநாயகர்” என்று பெயரிட்டு வழிபட்டான் அங்காரகன். பின்னர் விநாயகர் அருளால் தேவலோகம் சென்றடைந்து அமிர்தமும் அருந்தி அமரன் ஆனான். கூடவே நவகிரகங்களில் முக்கியமான கிரகமாகவும் ஆனான். அங்காரகனுக்கு உரிய நாள் செவ்வாய்க் கிழமை. அங்காரகனுக்கு விநாயகர் தரிசனம் கொடுத்த அந்தச் செவ்வாய்க் கிழமையில் தேய்பிறைச் சதுர்த்தி வந்தால் அதை “அங்காரக சதுர்த்தி” என்று சொல்லுவதுண்டு. அன்று விநாயகரை வழிபட்டால் சங்கடங்கள் அனைத்தும் தீரும்.
இன்று விநாயக சதுர்த்தி! அனைவருக்கும் வாழ்த்துகள். வேழமுகத்தோன் அருளால் அனைவரும் மன மகிழ்ச்சியுடன் இருக்கப் பிரார்த்திக்கிறேன்.
ஆஹா, அருமையான விஷயங்கள். நன்ஸ்!
ReplyDeleteஅங்காரக சதுர்த்தி மகிமை பற்றி சொன்னதுக்கு நன்றி கீதாம்மா. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் :)
ReplyDeleteஉள்ளேனம்மா போட்டுக்கறேன்.
ReplyDeleteசெவ்வாயின் சரித்திரத்தை இன்றே அறிந்தேன் கீதாம்மா. நன்றி.
ReplyDelete