மஹாபலிச் சக்கரவர்த்தி வேள்விகள் செய்ய ஆரம்பித்தான். அவன் வேள்வியில் வரும் அத்தனை பேருக்கும் தான, தருமங்கள் கொடுத்து வந்தான். அப்போது அவன் ஏற்கெனவே தேவர்களால் வெல்ல முடியாமல் இருக்கின்றான். தேவலோகத்தையும் ஆண்டு வருகின்றான். இவன் மேலே மேலே வேள்விகள் செய்து வந்தால் அவன் சக்தி இன்னும் அதிகம் ஆகிவிடுமே என நினைத்த தேவர்கள், இறைவனை வேண்ட, அவரும் ஏற்கெனவே தாம் காச்யபரின் மனைவி வயிற்றில் பிறந்திருப்பதாய்த் தெரிவித்திருந்தார். அந்தப் பிள்ளைக்குத் தக்க சமயம் வந்ததும் உபநயனம் செய்விக்கின்றார் காச்யபர். பிரம்மச்சாரியான அந்தப் பிள்ளை பிட்சை எடுக்கப் போகும் சமயம் மஹாபலியின் வேள்வியில் செய்யப் படும் தானங்கள் பற்றிக் கேள்விப்பட்டு அங்கே வருகின்றான் அந்தப் பிள்ளை.
கையிலே தாழங்குடை, காலிலே பாதரட்சைகள். திருவோட்டை ஏந்திக் கொண்டு, உலகுக்கே அன்னம் அளிப்பவன், உலகுக்கே பிட்சை போடுபவன், மஹாபலியிடம் வந்து பிச்சை கேட்கின்றான். "பவதி பிட்சாம் தேஹி!" என! அடடா, இப்போ தானே தான, தருமங்கள் முடிந்தது! இந்தப் பிள்ளை இப்போ வந்து கேட்கின்றதே! பதறினான் மஹாபலி, சின்னஞ்சிறு பிள்ளை ஏதேனும் கொடுத்தே ஆகவேண்டுமே?? "அப்பா, நீ யார்? உனக்கு என்ன வேண்டும்? தானங்கள் அனைத்தும் கொடுத்து முடிந்துவிட்டதே?" என்று மஹாபலி கேட்க, மாயக் கள்வன், சிரித்துக் கொண்டே, "மஹாபலிச் சக்கரவர்த்தியே, நான் காச்யபரின் மகன். எனக்கு வேறு ஒன்றும் வேண்டாம். என் காலால் அளந்த மூவடி மண்ணே போதும். அதைக் கொடுங்கள்." என்று சொல்ல, மஹாபலியும் அவ்வண்ணமே தந்தேன் எனத் தன் கையில் உள்ள கமண்டலத்தில் நீர் வார்த்துத் தானம் செய்ய எத்தனிக்கின்றான்.
அசுர குருவான சுக்ராசாரியார் பார்க்கின்றார். அவருக்குப் புரிகின்றது உலகாள்பவனே, வாமன வடிவத்தில் வந்திருக்கின்றான், என்றும், இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கின்றது என்றும். உடனேயே குலகுருவான அவர் மஹாபலியிடம் சொல்கின்றார், தானத்துக்கு ஒத்துக் கொள்ளாதே! இது அந்த மஹாவிஷ்ணுவின் தந்திரம், வந்திருப்பது கூட அவன் தான் என்று சந்தேகிக்கின்றேன். என்று சொல்கின்றார். மஹாபலியோ ஆஹா, அந்த சாட்சாத் மஹாவிஷ்ணுவே வந்தான் என்றால் நான் அதை மறுப்பதும் முறையாமோ?? தானம் கொடுத்தே தீருவேன் என்று சொல்லிவிட்டு, தன் கைக் கமண்டலத்தின் நீரால் அர்க்யம் அளித்துத் தானம் கொடுக்க முயல, சுக்ராசாரியார் ஒரு வண்டு உருவில் கமண்டலத்தின் வாயை அடைக்க, அவர் தந்திரம் புரிந்த வாமனன், வண்டை ஒரு சிறு தர்ப்பைப் புல்லால் குத்தித் தள்ள, தானம் வழங்கப் படுகின்றது. சிறுவன் அளக்க ஆரம்பிக்கின்றான். ஆனால்??? இது என்ன??? இவன் வாமனனா??? திரி விக்கிரமனா??? வளர்ந்து கொண்டே போகின்றானே???
ஓங்கி உலகளக்க ஆரம்பிக்கின்றான் திரி விக்கிரமன். ஆயிற்று ஒரு அடியால் இந்த பூமியையும், மறு அடியால் விண்ணையும் அளந்தாயிற்று. மூன்றடிக்கு இன்னொரு அடி குறையுதே?? மஹாபலி, இது என்ன?? மூன்றாவது அடியை எங்கே வைப்பேன்? என்று கேட்க, மஹாபலியோ, "தந்தேன் ஸ்வாமி!" என இரு கையையும் கூப்பிக் கொண்டு பணிவோடு, அவன் தாள் பணிய, அவன் தலையில் மூன்றாவது அடியை வைத்து ஒரு அழுத்து அழுத்திப் பாதாளத்துக்கு மஹாபலியை அனுப்புவதோடு அல்லாமல், அவன் பக்தியை மெச்சி அவனுக்கு முக்தியையும் கொடுக்கின்றார், உலகாள வந்த பரந்தாமன். அப்போது பரந்தாமனிடம் தான் நாட்டு மக்களிடம் பெரும் அன்பு வைத்திருப்பதால் வருடம் ஓர் முறை பாதாளத்தில் இருந்து நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு, மகிழ சந்தர்ப்பம் கொடுக்குமாறு மகாபலி வேண்ட பரந்தாமனும் அப்படியே அருளுகின்றான். மேலும் பரந்தாமனின் திரு நட்சத்திரமும் திருவோணமே ஆகும். "திரு" என்ற அடைமொழியோடு கூடிய இரு நட்சத்திரங்களில் ஒன்று ஆடவல்லானின் திருநட்சத்திரம் ஆன "திரு" ஆதிரை என்றால், பாற்கடலில் பள்ளி கொண்ட எம்பெருமானின் திரு நட்சத்திரம் "திரு" ஓணம் ஆகும். அந்த நாள் இந்த நாள், இனிய நாள்! ஓணம் கொண்டாடும் அனைவருக்கும் இனிய ஓணம் வாழ்த்துகள்.
ஹை! எத்தனை தரம் கேட்டாலும் அலுக்காத, எனக்குப் பிடிச்ச கதை :) நன்றி கீதாம்மா.
ReplyDeleteஓணம் வாழ்த்துக்கள் கீதாம்மா...
ReplyDeleteசில இல்லங்களில் திருவோணத்தன்று உரல்-உலக்கை வைத்து அதில் மஹாவிஷ்ணுவை ஆராதனை செய்வதைப் பார்த்திருக்கிறேன்.
கீதாம்மா - சென்னைல இருக்க பதிவர்களுக்கு:
ReplyDeletehttp://www.sitagita.com/blogcontest/
theres a bloggers competition for woman bloggers.
உங்களுக்கு தெரிஞ்சவங்க இருந்தாலும் அனுப்புங்க.