தினமும் காலையில் 6-30ல் இருந்து 6-45 வரையிலும், அதே போல் மாலையிலும் அதே நேரத்தில் திரு வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் கீதைப் பேருரை கேட்பது வழக்கம். பேருரையின் பிரவாகம் மட்டுமின்றி அவர் அழைத்துச் செல்லும் திவ்யதேசங்களின் சரித்திரத்தையும், தல புராணத்தையும் அவர் சொல்லும் அழகும், நேர்த்தியும் மனதைக் கவரும். கூடவே அதற்கான ஒளிபரப்புப் படங்களும் மிக மிக அழகான ஒளி அமைப்பு, ஒலி அமைப்பு, தேவையான இடங்களில் தேவையான இடங்களைச் சுட்டும் வண்ணம் காட்டும் இயக்கம் என்று பொதிகையிலேயே தரத்தில் குறிப்பிடும்படியான முதல் நிகழ்ச்சியாக ஒரு (இரண்டு)வருஷத்துக்கும் மேலாக வருகின்றது. இன்று காலையில் வேளுக்குடி அவர்கள் அழைத்துச் சென்ற இடம் திருச்சித்திர கூடம். அனைவராலும் தில்லை என்றும் ஸ்ரீவைணவர்களால் திருச்சித்திரகூடம் என்றும் அழைக்கப் படும் ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி.
ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த கண்வரிஷியின் வேண்டுகோளையும், புண்டரீகனின் வேண்டுகோளையும், அதற்கிணங்கி பகவான் இங்கே வந்தார் என்பதும் தவிர, ஸ்ரீமுஷ்ணத்தில் வராஹ அவதாரம் கொண்டு அசுரனைக் கொன்றதையும், அப்போது தில்லி, கில்லி என்ற இரு அரக்கிகளின் வதத்துக்குத் தில்லை வந்ததையும் குறிப்பிட்டார். கோவிந்தராஜனின் கிடந்த திருக்கோலத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அவர் கீழ்க்கண்ட பாடல்களால் கோவிந்த ராஜன் துதிக்கப் பட்டதையும் குறிப்பிட்டார்.
"தில்லையில் வந்து போக சயனம் கொண்ட மூர்த்திதான் திருராமனோ
தொல்லையே த்ந்து மண்ணையே உண்டு கட்டுண்ட பிள்ளை கண்ணனோ
இல்லையே யோகம் இல்லையே யாகம் திருவடியே கொள்ளுர் பத்தரோ
சொல்லையே தந்து உள்ளத்தில் கொண்டு பணிந்த கோவிந்தராஜனோ"
அந்த சன்னிதியில் இருக்கும் இரு உற்சவ மூர்த்திகளையும், அந்தத் திருமேனிகளின் இருந்த, நின்ற திருக்கோலத்தையும் விவரித்த அவர் மேற்கொண்டு சொன்னதே மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
//காயோடு நீடு கனியுண்டு
கடுங்கால் நுகர்ந்து நெடுங்கலம், ஐந்து
தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா
திருமார்பனைச் சிந்தையுள் வைத்து என்பீர்
வாயோதும் வேதம் மல்கின்ற தொல்சீர்
மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
தீ ஓங்க ஓங்கப் புகழ் ஓங்குத் தில்லை
திருச்சித்திரகூடம் சென்று சேர்மின்களே//
திருமங்கை மன்னனின் இந்த பாடலையும் குறிப்பிட்டுவிட்டு, இந்த கோவிந்தராஜர் தான் திருப்பதியில் ராமானுஜரால் பிரதிஷ்டை செய்யப் பட்டது என்ற தகவலை மிக லேசாகத் தொட்டுச் சென்றார். திருவேங்கடத்தான் அங்கே ஆட்சி புரிந்த மன்னனுக்கு அருள் புரியும் முன்னர் தன் அண்ணாவான கோவிந்த ராஜனைக் கேட்கவேண்டும் என்று சொன்னதாயும், கூறிய அவர், இந்த மாபெரும் விஷயத்தைக் கோடிகாட்டியது வியப்பில் ஆழ்த்தியது. உண்மையில் நடுநிலைமை என்றால் என்ன என்பதும், மத சார்பின்மை என்றால் என்ன என்பதும் நன்றாகப் புரிய ஆரம்பித்தது. எந்த ஒரு தகவலையும் அதன் தன்மையும் மாறாமல் மனதிலும் படும் வண்ணம் எவ்வாறு கொடுக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார் என்றே சொல்லவேண்டும். ஆற்றோட்டம் போன்ற சொற்பொழிவால் மட்டுமில்லை, இந்தப் பெரிய மனதாலும் திகைக்க வைத்தார் வேளுக்குடி அவர்கள்.
குஜராத்தி மொழியில் "வைஷ்ணவ ஜனதோ" என்று ஆரம்பிக்கும் பாடல் ஒன்று உள்ளது. காந்திக்கு மிகவும் பிடித்த பாடல் என்று சொல்லப் படும் அதை எழுதியது நரசிமேதா அவர்கள். அந்தப் பாடலில் உண்மையான வைஷ்ணவன் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கான லட்சணங்கள் சொல்லப் பட்டிருக்கும். எனக்கு அந்தப் பாடல் தான் நினைவில் வந்தது. பல வருஷங்களுக்கு முன்னர் பள்ளியில் படிக்கும்போது(??) சரியாய் நினைவில்லை, கல்கியில் இந்தப் பாடலுக்கு கனு தேசாய் ஓவியங்களுடன் ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொருத்தரை உதாரணம் காட்டி வெளிவந்த கட்டுரைகள் நினைவில் லேசாக இருக்கு. ஆனால் அந்தப் பாடல் மொத்தத்துக்கும் வேளுக்குடி அவர்கள் வாழும் உதாரணம்!
"வைஷணவ ஜனதோ"--என்கிற பொழுதே எம்.எஸ்.அம்மா தான் என் நினைவுக்கு வராங்க..
ReplyDeleteஇதை நான் படிக்கலை! என்ன செய்யறது நேரமே ல்லை.
ReplyDelete:P