முத்தமிழ் அடைவினை முற்படுகிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே
மூன்று தமிழுக்குரிய இலக்கணங்களை, முதலில் இருக்க கூடிய மலையில் முதலில் எழுதிய முதன்மையானவனே!
இயல், இசை, நாடகம் என்பது முத்தமிழ். இவை முறையே அகார, உகார, மகாரங்களை குறிக்கும். ம் என்பது இசையாகவும், உ என்பது வாயினால் அசைக்கப்பட்டு எழும்புவதால் நாடகம் என்றும், அ என்பது இயல்பாக எழுவதால் இயல் என்றும் சொல்லப்படுகிறது. முற்படுகிரி என்பது உடலை கடந்து சிரசுக்கு மேலே பன்னிரண்டு அங்குலத்தில் இருக்கும் மனோவெளியில் முதலில் எண்ணமாக எழுவதால், அது முற்படு கிரி என்பர். அண்ணாந்து பார்த்தால்தான் அது மலை. அப்படி மேல் நோக்கி பார்ப்பதில் மிக உயர்வில் இருப்பது த்வாதசாந்த பெருவெளி. அங்கு இந்த அகார, உகார, மகாரமாகிய பிரணவம் எழுகிறது. அதை அங்கு பதித்தவராக இவர் இருக்கிறார். அவர் பாதையின் தொடக்கத்திலும் முதல்வனாக இருக்கிறார்; அனைத்திற்கும் காரணமான முதல்வனாகவும் இருக்கிறார்.
முப்புரமெரிசெய்த அச்சிவனுறைரதம் அச்சது பொடிசெய்த அதிதீரா
முப்புரத்தை எரித்த அந்த சிவனுடைய இரதத்தின் அச்சாணியை உடைத்தெறிந்த அதிதீரனே!
முப்புரம் என்பது நம்மை பிணைத்திருக்கும் மூன்று முடிச்சுகள். ஆணவம், கன்மம், மாயை என்பனவையே இவை. இவை முறையே ருத்ர க்ரந்தி, விஷ்ணு க்ரந்தி, பிரம்ம க்ரந்தி எனப்படும். தொப்புளுக்கும் , ஜனன குறிக்கும் இடையே பின்புறத்தில் முதுகெலும்பின் உள்ளே சுழுமுனையில் இருப்பது பிரம்ம க்ரந்தி. இது அறும்போது மாயை அழிகிறது. மாயை எனப்படுவது பாலின ஈர்ப்பும், உடலை காத்து ஆன்மாவை போற்றாது விட காரணமாகும் பண ஆசையுமேமாம். அதே போல் இதயத்திற்கும் தொண்டை குழியிற்கும் இடையே பின்புறத்தில் முதுகெலும்பின் உள்ளே சுழுமுனையில் இருப்பது விஷ்ணுக்ரந்தி. அது அறும்போது மன சம்பந்தப்பட்ட அனைத்து உணர்வுகளின் தொந்தரவிலிருந்தும் விடுபடுகிறோம். இதனால் கன்மம் எனும் வினை அரிப்பிலிருந்து விடுதலை கிடைக்கிறது. புருவமத்திக்கும் உச்சிக்கும் இடையே இருப்பது ருத்ர க்ரந்தி. அது அறும்போது ஆணவமும் ஒழிகிறது. அதாவது நான் மனிதன், ஜீவன் எனும் கட்டிலிருந்து விடுதலை கிடைக்கிறது. நம்முடைய சுய நிலை தெரிகிறது.
இப்படிப்பட்ட முப்புரத்தை எரிக்கும் பரமசிவனுடைய இரதமானது எதுவெனில் சுழுமுனையில் பிரவேசிக்கும் பிராணவாயுவே! அந்த வாயுவே மேலே ஏறும் போது கனலோடு சேர்ந்து மூன்று முடிச்சுகளாகிய முப்புரத்தை எரிக்கிறது.மூலாதாரத்தில் அவரது அருளை பெறாதவர்க்கு வாயு அபானனாக குதத்தின் வழியே வெளியே வந்து விடுகிறது. இதுவே இரதத்தின் அச்சை பொடி செய்த செயல். விநாயகர் வழி விடும் போது நினைத்தாலும் வாயு குதத்தின் வழியே வெளியே வராது சுழுமுனையின் உள்ளே பிரவேசிக்கும்.
அப்பணி செஞ்சடை யாதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் நென்பர்கள் மூடர்கள்
முப்புரமாவது மும்மல காரியம்
அப்புர மெய்தமை யாரறிவாரே.... (திருமந்திரம்)
No comments:
Post a Comment