மதுரா நகருக்கு யாதவத் தலைவர்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். ஏற்கெனவே அங்கேயே இருந்த தலைவர்களும் இவர்களோடு சேர்ந்துகொண்டனர். அனைவருக்கும் அது இளைஞன் ஆகட்டும், அல்லது வயது முதிர்ந்த யாதவகுலத் தலைவனாகட்டும், எல்லார் பேச்சுக்களும் கடந்த இரு நாட்கள் நடந்த நிகழ்வுகள் பற்றியே ஆகும். அதுவும் அனைவரிலும் மிகவும் வயது முதிர்ந்த, அனைவராலும் மிக மிக மதிக்கப் பட்ட அந்தகர்களின் அரசன் எனப்பட்ட பஹூகாவும், அவன் மகனும் திடீரென மறைந்தவிதத்தை எவராலும் ஜீரணிக்கமுடியவில்லை. மகத நாட்டில் இருந்து கம்சன் வரவழைத்துத் தன்னுடைய அரண்மனைப் பாதுகாவலுக்கு என ஏற்பாடு செய்து இருக்கும் மகதநாட்டு இளவரசனின் கண்காணிப்பில் அவர்கள் இருவரும் ஒருவேளை வீட்டுச் சிறை வைக்கப் பட்டிருக்கலாமோ எனப் பேச்சாய் இருந்தது. சிலர் அதை திட்டவட்டமாய் மறுத்தனர். தேவகியின் இரு பிள்ளைகளும் மதுராவிற்கு வந்திருப்பதையும், அந்தக் கண்ணன் என்பவனால் திரிவக்கரையின் கூன் அதிசயமான முறையில் நீங்கியதையும், தநுர்யாகத்துக்கென வைக்கப் பட்டிருந்த வில் முறிக்கப் பட்டதையும், ருக்மியைத் தூக்கி எறிந்ததையும் மதுரா மக்கள் மட்டுமின்றி யாதவகுலத் தலைவர்கள் மத்தியிலும் ஒரே பேச்சாக இருந்தது. தேவகியின் மக்களுக்குக் கம்சன் அளிக்கப்போகும் தண்டனையை எண்ணி அவர்கள் மிகவும் கவலையும், பயமும் அடைந்தார்கள். அது விலகாமலே அன்றிரவு, அவர்கள் அனைவரும் வசுதேவரை அவர் மாளிகையில் சென்று சந்தித்தனர்.
ஒரே சலசலப்பு. மெல்லிய குரல்களில் கேள்விகள், பதில்கள், முடிவுதெரியாத வினாக்களை எழுப்பியவர்கள், அவர்களைச் சமாதானம் செய்தவர்கள், தயக்கத்துடன் இருந்தவர்கள், கம்சனிடம் பயம் நீங்காதவர்கள். பலதரப்பட்டவர்களும் அங்கே கூடிக் கலந்தாலோசித்தனர். சிலர் அங்கிருந்து வெளியேறுவதே உத்தமம் எனச் சொல்ல, வேறு சிலர் கம்சனுக்குப் பயப்படுவதா? நேருக்கு நேர் போர் அறிவித்துப் போராடி ஜெயிப்போம், இல்லை எனில் மரணத்தைத் தழுவுவோம், வெற்றி அல்லது வீர மரணம் எனக் கோஷித்தனர். அக்ரூரரும் அங்கே இருந்தாலும் அவருக்கு இறைவன் மேலும், தாங்கள் அன்றாடம் வணங்கும் பசுபதிநாதர் மேலும், நாரதர் சொல்லிச் சென்ற தீர்க்க தரிசனத்தின் மேலும் நம்பிக்கை வைத்துக் கண்ணன் வருவான், கம்சனைத்தீர்ப்பான் எனச் சொன்னாரே தவிர அவரிடம் வேறு ஒன்றும் பெரிய அளவில் திட்டங்கள் இல்லை. அந்த அளவிற்கு அவரால் யோசிக்கவும் முடியவில்லை. “காத்திருங்கள், கண்ணன் காப்பான்.” இது ஒன்றே அவருடைய பதிலாக இருந்தது.
கூட்டத்தில் ஒருவர் சற்றே கிண்டலாய், “அக்ரூரரே, நாரதர் சொன்னதை நீர் இன்னமும் நம்புகிறீரா?” என்று கேட்க, தான் நம்புவதாகவே அக்ரூரர் சொன்னார். தேவகியின் பிள்ளையைத் தாம் பார்த்துப் பழகி இருப்பதாகவும், அவனால் கட்டாயம் தாம் அனைவரும் நினைக்கும் எண்ணம் ஈடேறும் எனவும் உறுதியாகச் சொன்னார் அக்ரூரர். அப்படி நடக்காவிட்டால் என ஒருவர் எழுப்பிய கேள்விக்குத் தங்கள் கோழைத்தனத்துக்குக் கடவுள் அளிக்கும் தண்டனையாக அது இருக்கும் என்ற அக்ரூரர் ஆனால் தாம் உறுதியாகக் கண்ணனால் காப்பாற்றப் படுவோம் என நம்புவதாய்த் தெரிவித்தார். அவநம்பிக்கையோடு அவரைப் பார்த்தனர் பெரும்பாலான யாதவத் தலைவர்கள்.
“வேறு என்ன செய்யவேண்டும் என்கிறீர்கள் அவனை? அவன் வந்துவிட்டான். நம் ரக்ஷகன் அவன். வந்ததுமே அவன் செய்த முதல் வேலை திரிவக்கரையின் கூனை நிமிர்த்தியது தான். அது ஒன்றே போதாதா அவன் திறமையை நிரூபிக்க. திரிவக்கரையை இப்போது நேரில் பார்த்தால் அசந்து போவீர்கள். அதோடு மட்டுமா? ருக்மியைத் தூக்கி எறிந்திருக்கிறான் அநாயாசமாய். தநுர்யாகத்துக்கென வைத்திருந்த வில்லை உடைத்திருக்கிறான். இன்னும் என்ன வேண்டும்?” என்று கேட்டார் அக்ரூரர். அக்ரூரர் பேசிக்கொண்டிருக்கும்போதே அங்கே இருவர் நுழைந்தனர். அனைவரும் பேச்சில் கவனமாய் இருந்ததால் யார் எனக் கவனிக்கவில்லை. அப்போது கர்காசாரியாரின் குரல் அனைவர் குரல்களுக்கும் மேலே கேட்டது. “ இளவரசர் தேவகனின் அருமைப் பெண்ணான தேவகி இங்கே உங்களிடம் பேச விரும்புகிறாள். அவள் முடிவு ஒன்றைத் தெரிவிக்க விரும்புகிறாள்” என்று சொன்னார் கர்கர். அனைவரும் தூக்கிவாரிப் போட்டுத் திரும்பினார்கள். தேவகியின் மெலிந்த உருவம் கண்ணில் பட்டது. உலகத்துத் துயரங்களையெல்லாம் தாங்கித் தாங்கி அவள் உருவம் மெலிந்ததோ என்னும்படிக்கு அவள் சோகம் அவளின் ஒரு அசைவிலேயே தெரியவந்தது. வெளுத்த, இளைத்த முகத்தில் தெரிந்த கண்கள் மட்டும் பெரியதாய் இருந்தன. அந்தப் பெரிய கண்களால் அனைவரையும் அவள் பார்த்தபோது அந்தக் கண்களின் ஆழத்தில் தெரிந்த இனம்புரியாத சோகக் கடல் அவர்கள் அனைவரையும் அதில் முழுக அடித்துவிட்டது என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர்.
இரு முறை பேச முயற்சி செய்துவிட்டு முடியாமல் பின்னர் ஒருவழியாக சமாளித்துக் கொண்டு கிணற்றின் ஆழத்திலிருந்து வருவது போன்ற மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தாள் தேவகி. “வணக்கத்துக்கு உரிய தலைவர்கள் அனைவருக்கும் என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இப்போது இங்கே இந்த சபையில் உங்கள் மத்தியில் பேச நேர்ந்ததுக்கு என்னை ,மன்னிக்க வேண்டுகிறேன். நான் ஒரு முடிவு எடுத்துவிட்டேன். அது….அது…..அது…… அப்படி ஒருவேளை என் பிள்ளைகளைக் கம்சன் கொன்றுவிட்டானென்றால், நான் அக்னிப்ரவேசம் செய்துவிடுவேன். இதுவே என் முடிவு.” என்றாள் தேவகி.
அறையில் மெளனம் சூழ்ந்தது சில விநாடிகளுக்கு. முதலில் சமாளித்துக் கொண்டவர் அக்ரூரர் தான். “தேவகி, நீ இறப்பதா? அதுவரை நாங்கள் அனைவரும் எங்கள் உயிரை வைத்துக் கொண்டிருப்போமா? உன் குமாரர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் முதலில் உயிரை விடுவது நாங்களாய்த் தான் இருக்கும். நான் உனக்கு வாக்கு அளிக்கிறேன்.” என்றார் அக்ரூரர். தேவகி அவ்வளவில் அறையை விட்டு வெளியே செல்ல அனைவரும் அக்ரூரர் கூறிய வண்ணமே உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கூட்டம் கலைந்தது. அனைவர் மனமும் கனத்துப் போயிருந்தது. அங்கே கம்சனோ? அவன் குதூகலத்தில் ஆழ்ந்திருந்தானா? மனம் அமைதில் இருந்ததா? சந்தோஷமாகத் தன் அரச வாழ்க்கையை அநுபவித்துக் கொண்டிருந்தானா? இல்லை! அதோ கம்சன்! அவன் அந்தரங்க அறையில். அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. மனம் தத்தளிக்கிறது. அவன் நிலைமை அவனுக்கு ஒருவாறு புரிந்தே இருந்தது. யாதவத் தலைவர்கள் யாருக்குமே அவன் நன்மை செய்யவில்லை. அனைவரையும் பகைத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு என உதவ யாருமே இல்லை. இப்போது அதிகாரத்தில் இருப்பதால் பயந்துகொண்டு செய்கின்றனர். ஆனால் அவன் யாரை நம்புவது?
அவன் அஸ்வமேத யாகக்குதிரையோடு செல்லும் முன்னே அனைவரையும் ஒருவழியாக அழித்திருக்கவேண்டுமோ? அந்தச் சிறுவர்களையும் வந்ததுமே அழித்திருக்கவேண்டும், அல்லது அக்ரூரருக்குப் பதிலாக அவன் நம்பிக்கைக்கு உகந்த படைத் தலைவர்கள் யாரையேனும் அனுப்பி இருந்தால் அந்தப்பிள்ளைகளை ஒழித்திருப்பார்களோ? தப்புச் செய்துவிட்டோமோ? இல்லை, இல்லை, இப்போவும் ஒன்றும் மோசம் போய்விடவில்லை. இன்னும் நேரம் இருக்கிறது,இன்று இரவு மட்டும் அனைத்து யாதவத் தலைவர்களையும் ஒரே சமயத்தில் அழிக்க முடிந்தால்???? ம்ஹும்,சாத்தியமில்லை, மற்ற நாட்டுத் தலைவர்களும், அரசர்களும் தநுர்யாகத்திலும், அதை ஒட்டிய வீரப்போட்டிகளிலும் பங்கெடுக்க வந்திருக்கின்றனரே. அந்த நந்தனின் மகன்கள்??அவர்களையாவது ஒழிக்க முடியுமா என்றால்?? அதுவும் நடக்காது போல் இருக்கிறது. அவர்கள் தங்கி இருப்பது கிராமத்து மக்கள் தங்கி இருக்கும் கூடாரங்களில், மக்கள் கூட்டத்திற்கு நடுவில். அதுவும் அனைத்து மக்களும் அந்தக் கிருஷ்ணனை ஏதோ கடவுள் தான் பூமிக்கு வந்துவிட்டார் எனச் சொல்லிக் கொண்டு தரிசனம் செய்யப் போவதும், வருவதுமாய் இருக்கின்றனராமே! அவனை இப்போது இந்த இரவில் கொல்லமுயன்றால் பழி நேரிடையாக நம்மீது வரும். ம்ம்ம்ம்ம்ம் அங்காரகனிடம் சொல்லி இருப்பது ஒன்றுதான் ஒரே வழி. பார்க்கலாம். பொழுது விடியட்டும்.
பொழுதும் விடிந்தது. யாருக்கு????
விரிவான பல கதைகளைத் தெரிந்து கொண்டோம்.நன்றி.
ReplyDeleteநன்று.
ReplyDelete