நம்பிக்கையோடு எழுந்தான் கம்சன். அவனுடைய நம்பிக்கைக்கு உகந்த யானைப்படைத் தலைவன் ஆன அங்காரகன் இன்று காலை சூரியோதயம் ஆன சில நிமிடங்களில் கம்சன் சொன்னதைச் செய்து முடிப்பான். குவலயாபீடம், அந்தக் கோபக்கார யானையின் கால்களின் கீழே அந்தக் கண்ணன், மாயக்காரன், கடவுளாம் கடவுள் அவன் அந்த யானையின் காலடிகளில் மிதிபட்டு எலும்பு நொறுங்கிச் சாகப் போகின்றான். கம்சனின் காதுகளில் கண்ணனின் எலும்புகள் நொறுங்கும் சப்தம் கேட்டதோ என்னும் அளவுக்கு அவன் அதை உறுதியாக எதிர்பார்த்தான். தன்னுடைய பரமவைரியானவன் ஒரேயடியாக அழிந்து போவதை, அதுவும் யாருக்கும் எந்தவிதச் சந்தேகமும் இல்லாமல் மடிவதைக் கம்சன் எதிர்பார்த்துக் காத்திருந்தான். அவனுடைய நம்பிக்கைக்கு உரிய பணியாளர்கள் வந்ததும் தன் காலைக்கடன்களை முடித்துக்கொண்டான். எந்நேரமும் தன் யானைப்படைத் தலைவன் கொண்டுவரப் போகும் இனிய செய்திக்காகக் காத்திருந்தான். அதைக் கேட்டதும் மல்யுத்தம் நடக்கும் இடத்திற்குச் சென்று பார்வையிட அவன் அரண்மனை உப்பரிகைக்குச் செல்லவேண்டும். யாதவத் தலைவர்கள் அனைவரும் கண்ணன் இறந்து போனதை நினைத்துச் செய்வதறியாது தவிப்பதை அங்கிருந்து பார்த்து மகிழவேண்டும். அவர்களின் ஒப்பற்ற கடவுள் யானையின் காலடியில் நாசமானதை எண்ணியும், நாரதரின் தீர்க்கதரிசனம் பொய்த்துப்போனதை எண்ணியும் அவர்கள் வருந்துவதைக் கண்டு மகிழவேண்டும்.
அப்போது அவன் கனவுகளை அழிக்கும்விதமாக ஒன்று நடந்தது. திரிவக்கரை வந்தாள் தன் வழக்கமான நேரத்தில், வழக்கமான வாசனைத்திரவியங்களோடு. நேற்று அவளுக்கு நேர்ந்ததைப் பற்றிக் கம்சன் கேள்விப்பட்டானே தவிர அவளை நேரிடையாகப் பார்க்கவில்லை. இது யார்? யாரிந்த அழகி? ஆஹா, நம் அரண்மனையில் நமக்கும் தெரியாமல் இப்படி ஓர் பெண்ணரசி இருந்திருக்கிறாளா? இது என்ன ஆச்சரியம்? கம்சனுக்கு வாசனைத் திரவியங்களை நீட்டிய திரிவக்கரை, வழக்கம்போல் அவனை வாழ்த்தினாள். அவள் குரலைக் கேட்டு அசந்து போன கம்சன், “திரிவக்கரை, நீயா? இது நீயா? என்னால் நம்பமுடியவில்லையே? என்ன ஆயிற்று உனக்கு?” என்று கேட்டான். “ஆம், இளவரசே, நானே தான். எனக்கு உடல் நேராகிவிட்டது. அனைவரையும் போல் நன்றாக ஆகிவிட்டேன்.” தன்னைத் தானே பெருமையுடன் நோக்கியவள், கம்சனுக்கு வாசனைத் திரவியங்களை அளித்தாள். கம்சன் பேசாமல் யோசித்த வண்ணம் அவள் நீட்டிய வாசனைத் திரவியங்களை எடுத்துக் கொண்டான்.
அவனுக்கு உடனேயே யானைக்கொட்டாரத்திற்குச் சென்று குவலயாபீடம் கொட்டாரத்தில் இருந்து விளையாட்டுகள் நடக்கும் மைதானத்தில் நுழையும்போது அதன் காலடிகளில் கண்ணன் நசுங்கிச் சாவதைக் கண்டு மகிழும் ஆசை தோன்றியது. ஆனால் நேரே அவன் அந்த இடத்திற்குச் செல்வது அவ்வளவு உசிதம் இல்லை என்பதையும் அவன் உணர்ந்திருந்தான். ஆகவே அனைத்துப் பணியாளர்களையும் வெளியே போகச் சொல்லிவிட்டுச் சற்று யோசித்தான். அறைக்கதவை நன்கு சார்த்தித் தாளிட்டுவிட்டு, தன் தலைக்கிரீடத்தையும், உடைவாளையும் எடுத்து அணிந்துகொண்டான். அறையின் ஒரு பக்கச் சாளரத்தில் இருந்து பார்த்தால் குவலயாபீடம் அந்தப் பெரியமஹாசபைக்கெனப் போட்டிருக்கும் பந்தலினுள் நுழையும் காட்சி நன்கு தெரியும். அந்தச் சாளரத்திற்குப் போய் நின்றுகொண்டான். மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய்க் கூட ஆரம்பித்திருந்தனர். கம்சனுக்கு நெஞ்சம் திக் திக்கென அடித்துக் கொண்டாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. ஒவ்வொரு நிமிஷமும் நகருவது பிரம்மப் பிரயத்தனமாக இருந்தது. பொறுமையை வரவழைத்துக்கொண்டு வெளியே பார்த்தவண்ணமிருந்தான். மக்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே வந்தது. அனைத்துத் தரப்பினரும் வந்து அவரவருக்குரிய இருக்கைகளில் அமர்ந்துகொண்டனர். சாமானிய மக்கள் தங்களுக்கென ஒதுக்கப் பட்டிருந்த பார்வையாளர் இடத்திற்குச் சென்று அவரவர் விருப்பம் போல் வசதியான இடம் பிடித்துக் கொண்டனர். பெண்களுக்கென ஒதுக்கப் பட்டிருந்த இடமும் நெருக்கடி தாளாமல் பிதுங்கிக் கொண்டிருந்தது. விதம் விதமாய்த் தங்களை அலங்கரித்துக்கொண்டு பெண்கள் வந்திருந்தனர். யாதவத் தலைவர்கள் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றிலும் மகதநாட்டு வீரர்கள் முற்றுகையிட்டது போல் சூழ்ந்திருந்ததையும் கம்சன் கவனித்துக் கொண்டான். வ்ருதிர்கனன் தன் வாக்கை அருமையாக நிறைவேற்றுகிறான் என்பதில் மனம் மகிழ்ச்சி கொண்டான்.
சங்கங்கள் முழங்கின. பேரிகைகள் ஆர்ப்பரித்தன. மக்கள் கூட்டம் அமைதியாக அமர்ந்தது. அப்போது கம்சனின் அரண்மனையைச் சேர்ந்த மல்யுத்த வீரர்களும் தங்கள் கைகளைத் தட்டிக் கொண்டும், தொடையில் தட்டி மற்றவர்களை அழைத்துக் கொண்டும் தங்கள் வீரத்தைத் தங்களுள் ஒருவரோடொருவர் விளையாட்டாய் மல்யுத்தம் செய்து காட்டியும் அரங்கைச் சுற்றி வந்தனர். கம்சனுக்கு உள்ளூரப் பெருமையும், கர்வமும் மிகுந்தது. அவனுடைய மல்யுத்த வீரர்களில் முக்கியமானவர்கள் ஆன சாணுரனையும், முஷ்திகனையும் தோற்கடிக்கக் கூடிய மல்லன் இனிமேல்தான் பிறக்கவேண்டும். சாணுரன் பார்க்க ஒரு மாமிசமலைபோல் இருந்தாலும் அவன் மல்யுத்த நிபுணன். முஷ்திகனோ உயரமும், பருமனும் அளவோடு அமையப் பார்க்க ஒல்லியாகக்காணப்பட்டானே தவிர அவனுடைய ஒரு மல்யுத்தக் குத்தை எவராலும் தாங்கமுடியாது. சிந்தனையில் ஆழ்ந்திருந்த கம்சனுக்கு ஆரவாரசப்தங்கள் காதில் விழ, அட, என்ன ஆயிற்று?? இதோ! குவலயாபீடம் உள்ளே நுழையப் போகிறது. அங்காரகன் தான் அதன் மேல் அமர்ந்து வருகிறான். சொன்னால் சொன்னபடி செய்கிறானே. பட்டத்து யானையான இந்தக் குவலயாபீடம் இம்மாதிரி முக்கியமான நிகழ்ச்சிகளிலேயே அனைவரின் பார்வைக்காக அழைத்துவரப்படும். யானைகளே பெரியவை என்றாலும் இந்தக் குவலயாபீடம் மிக மிகப் பெரியது. அதன் தந்தங்களோ மூன்றடிக்கும் மேல் நீண்டு காணப்பட்டன. துதிக்கை மட்டுமே ஆறடிக்கு நீண்டிருக்கும்போல் இருந்தது. மிக அழகாக இந்த நிகழ்ச்சிக்கென அலங்கரிக்கப் பட்டு உள்ளே வந்து எப்போது வழக்கம்போல் அது நிற்கும் இடத்திற்கு வந்து, தன் துதிக்கையை உயர்த்தி சத்தமாகப் பிளிறியது. அங்கிருந்த அனைவருக்கும் அது வணக்கம் சொல்வதைப் போல் அமைந்தது அது.
ஆனால்…….ஆனால்…….ஆனால்……. என்ன இது? குவலயாபீடத்தின் கோபம் எங்கே போயிற்று? யாரைப் பார்த்தாலும் கோபம், எவரையும் அருகே நெருங்கவிடாது. அதைப் பழக்கும் அங்காரகனே சமயத்தில் மிகவும் கஷ்டப் படுவானே? இன்று என்ன அனைவரையும் பார்த்து துதிக்கையை ஆட்டி விளையாடி அழைக்கிறதே? இதற்கு முன் எப்போதும் காணாவகையில் அனைவரிடமும் நட்பாய்ப் பழகுகிறதே? இது என்ன அதிசயம்? அல்லது இது என் கற்பனையோ? கம்சன் தன் கண்களைத் துடைத்துவிட்டுக் கொண்டு மீண்டும் கவனித்தான். இல்லை இல்லை. இது உண்மையே தான். குவலயாபீடம் தான் அப்படி எல்லாம் அன்பாய் நடந்து கொள்கிறது. குவலயாபீடம் இப்போது அந்தப் பந்தலின் தலைவாயிலில் போய் நின்றுகொண்டு நாட்டியம் ஆடுவதைப்போல் ஒரு காலை முன் வைத்து மற்றக் கால்களைப் பின் வைத்துக்கொண்டு எதற்கோ தயாராய் இருப்பதைப்போல் நிற்கின்றதே? கம்சன் கூட்டத்தைக் கவனித்தான். கூட்டம் மேலும் மேலும் வந்துகொண்டிருக்கக் கூட்டத்தின் ஒரு பக்கம் கடல் அலை போல் மக்கள் போய் மோதுவதும், பின்னர் திரும்பி வருவதுமாய் இருந்தனர். என்னவெனக் கூர்ந்து கவனித்தால், அங்கே இரு இளைஞர்கள் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. கூட்டத்தினர் அவர்களில் கால்களில் விழுவதற்குச் செல்வதும், விழுந்தவர் அவர்கள் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்வதையும், மேலும் சிலர் கிட்டே போய்த் தொட முயல்வதையும், பெண்கள் அருகே நெருங்க முடியாமல் அவர்கள் நடந்து சென்ற இடத்தின் மண்ணை எடுத்துத் தலையில் போட்டுக் கொள்வதையும் கண்டான்.
ஆஹா, இவர்கள் யாரெனச் சொல்லாமலே புரிந்துவிட்டதே! தேவகியின் மைந்தர்களன்றோ? ஒருவன் நீலநிறத்துக்கண்ணன், மஞ்சள் நிற ஆடை தரித்துத் தலையில் மயில் பீலியை வைத்துக் கொண்டு அலங்கரித்துக் கொண்டுள்ளான்.மற்றொருவன் சிவந்த நிறத்தில் பார்க்க மல்லன் போல் காண்கின்றான். நீல நிற ஆடை தரித்துள்ளான். ஆஹா, இவர்களுக்கென இந்த ஆடைகள் பொருத்தமாய் அமைந்துவிட்டிருக்கிறதே. மக்கள் மயங்கிப் போவதில் என்ன ஆச்சரியம்? எதுவுமில்லை, முட்டாள் மக்கள். கண்ணன் நடந்து முன்னேறி வர வர, கம்சனின் கோபமும் மேலோங்கிக் கொண்டு வந்தது. அவன் ரத்தம் கொதித்தது. கடைசியில் அவன் எதிரி, பரம வைரி வந்தேவிட்டான். அவனைக் கொல்லவெனப்பிறந்திருப்பதாய் நாரத முனியில் இருந்து வியாசரிஷி வரை அனைவரும் சொல்லிக்கொண்டிருப்பவன் இவனே. ஹா, ஹாஹா, அவன் என்னை அழிக்கும் முன் இதோ இந்தக் குவலயாபீடம் அவனை அழிக்கப் போகிறதே! கம்சன் காத்திருந்தான். அந்த நிகழ்ச்சியைக் காணவேண்டி மிக ஆவலோடு காத்திருந்தான். கண்ணனும், பலராமனும் குவலயாபீடம் இருக்குமிடம் நெருங்கிவிட்டனர். இன்னும் சில நொடிகள் தான். இதோ குவலயாபீடம் இருவரையும் தன் கால்களில் போட்டு மிதிக்கப் போகிறது. மூச்சை அடக்கிக் கொண்டு கம்சன் பார்த்துக் கொண்டு இருந்தான்.
ஆஹா! எவ்வளவு அழகாக கதை சொல்கிறீர்கள்?..
ReplyDeleteதெரிந்த கதைதான் என்றாலும், அங்கங்கே தெரியாத செய்திகளைப் படிக்கும் பொழுது அது கொடுக்கும் சுவாரஸ்யமே அலாதி தான்!
ர.ம.க.கொ & சம்பா சாதமே ஒரு அமர்களமான concept. அது சாப்பிட்ட கையோட கதையும் படிச்சு காமிச்சேனா !! நம்ப 50% ஒரே புகழாரம் சிவாணிக்கு !!:)))" நல்லா கண்ணை சுழட்டிண்டு வரது.அம்மா ஒரு டெக்னிக் வெச்சிருக்காங்கனு" comment வேற! என்ன காம்பினேஷன் எம் மதுரை மன்னியே!!
ReplyDeleteவாங்க ஜீவி அவர்களே, பலநாட்கள் கழிச்சு வந்ததுக்கும்கருத்துக்கும் நன்றி. நீங்க படிக்கிறீங்கனு தெரிஞ்சதிலே ரொம்ப சந்தோஷமா இருக்கு. பலரும் தெரிந்த கதைதானே என்று சொல்கின்றனர். ஆனாலும் விடாமல் எழுதுகிறேன். :))))))))))
ReplyDeleteவாங்க ஜெயஸ்ரீ, ரங்ஸ் மசிச்ச கத்தரிக்காய் கொத்சிலே போடவேண்டிய பின்னூட்டம் மாறி கண்ணன் பதிவிலே வ்ந்திருக்கு. நானும் படிக்காமல் வெளியிட்டுவிட்டேன். காம்பினேஷன் நல்லா இருந்ததா?? நன்னிங்கோ!
ReplyDeleteபடிச்சுசொன்னது இந்த கதையதான்:))
ReplyDeleteதங்களின் விவரிப்பு நேரில் பார்த்தது போல உள்ளது . அருமையான நடை. காத்துருக்கின்றேம். நன்றி.
ReplyDeleteதங்களின் மிகவும் அழகான கண்ணனின் சரித்திரத்திற்க்காக நான் 2009 அப்பிரிசேசன் பிளாக்கர் விருதினை வழங்கியுள்ளேன். இந்த சிறியவனின் விருதினை ஏற்று என்னைச் சிறப்பிக்கவும். நன்றி.
ReplyDeleteஎல்லாருக்கும் பிடிக்குது கண்ணனை. ஏன் இந்த கம்சனுக்கு மட்டும் பிடிக்கலை அம்மா?
ReplyDeleteசூப்பரா எழுதறீங்க!
(ஒரு வழியா உங்களை பிடிச்சிட்டேன். அப்பாடி. மூச்சு வாங்குது! :)
ஆகா...தலைவி நல்ல வேகம்..!!
ReplyDeleteஅருமை கீதா!!
ReplyDeleteஒரு சம்பவமும் அலுக்காமல் அழகாகச் சொல்லிக் கொண்டு வருகிறீர்கள்.
இந்தப் புண்ணியத்தைக் கொடுப்பதற்கு மிகவும் நன்றி.