எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, May 07, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்!

இப்போது கண்ணன் கோகுலத்தில் இருந்து விருந்தாவனம் சென்று ராதையைப் பார்க்கப் போகின்றான். ராசலீலைகள் நடக்கப் போகின்றன. ஆனால் அதுக்கு முன்னாலே நாம ஒரு எட்டுப் போய் ராதையைப் பார்த்துடுவோமா? கண்ணன் தான் மாடு, கன்றுகளை ஓட்டிக் கொண்டும், தன் சிநேகிதர்களோடும், குடும்பத்து மக்களோடும் நடந்து வருகின்றான். நமக்கு என்ன? மனத்தால் ஓடிப் போய்ப் பார்க்கவேண்டியது தானே?? இதோ! கண்ணனை கோகுலத்தில் விட்டுச் செல்லும் ராதை. கண்ணனின் புல்லாங்குழலின் இனிமையான கீதம் அவளைத் தொடர்ந்து வருகின்றது. மாட்டு வண்டியில் அண்ணனோடு விருந்தாவனம் நோக்கி அவள் உடல் தான் சென்று கொண்டிருக்கின்றது. மனமோ?? கோகுலத்திலேயே கண்ணனுடன் தங்கிவிட்டது. தன் உடலில் இருந்து ஏதோ ஒன்று பிரிந்து சென்றுவிட்டது போல அவளுக்கும் தான் ஏதோ சூன்யமாகிவிட்டாற்போன்ற உணர்வு. இந்த உணர்வை என்னவென்று சொல்லுவது? அவளுக்குப் புரியவில்லை. எத்தனை அருமையான பிள்ளை? அற்புதமான நட்பு! மாடுகள் ஒரே சீராகச் சென்று கொண்டிருந்தன. வண்டியில் அமர்ந்து கொண்டு மாடுகளின் கழுத்துச் சதங்கைகளின் ஒலியைக் கேட்டவண்ணம் ராதை அமர்ந்திருந்தாள் தன் சகோதரனுடன். வண்டி முன்னோக்கிச் செல்லும் அதே வேளையில் ராதையின் மனம் பின்னோக்கிச் சென்றது.

ராதை தன் ஆறாம் வயதில் தாயை இழந்தாள். அவள் தந்தைக்கு வேறு மனைவியர் உண்டு. ஆகவே அவர் ராதையின் தாய்வழிப்பாட்டியிடம் ராதையை விட்டுவிட்டு பர்சானாவில் இருந்து விருந்தாவனம் சென்றார். ராதை பர்சானாவில் தன் பாட்டியின் பாதுகாப்பில் வளர்ந்தாள். அந்தக் கிராமத்துக்கே ஒரு ரத்தினம் போல் திகழ்ந்தாள். ராதையை விரும்பாதவர் யாருமே இல்லை. ஆனால் அவள் சகோதரர்களுக்கோ விருந்தாவனம் ஒரு சொர்க்கமாய்த் திகழ்ந்து வந்தது. ராதையின் தந்தை விருஷபானு ராதையை அந்தக் கால வழக்கப்படி ஐயன் என்னும் தன் நண்பரின் மகனுக்குத் திருமணம் செய்து கொடுப்பதாய் நிச்சயம் செய்து கொடுத்திருந்தான். ஐயன் கம்சனின் படை வீரன்.

கம்சன் இப்போது அஸ்வமேத யாகக் குதிரையோடு போயிருப்பதால் ஐயனும் உடன் சென்றிருக்கின்றான். ஐயனுக்கு இந்த விருந்தாவனமோ, கோகுலமோ அல்லது மாடு, கன்றுகளோ, காடுகளோ பிடிக்காது. நகரவாசி அவன். நகரத்தில் இருக்கவே ஆசைப் பட்டான். ராதைக்குத் திருமணம் நிச்சயம் செய்த பின்னரும் அவளைத் தாய்வழிப் பாட்டி வீட்டில் வைத்திருக்க விரும்பாத விருஷபானு தன் பிள்ளைகளில் ஒருத்தனை அனுப்பி ராதையை விருந்தாவனத்துக்கு அழைத்து வரச் செய்தான். அப்போது ராதையின் பாட்டி, அவள் அம்மா ராதை சிறுபெண்ணாக இருந்தபோது கோகுலத்து கோபநாத் மஹாதேவருக்கு ராதைக்காக நேர்ந்து கொண்டதாகவும், தற்சமயம் அவள் தாயும் இல்லாதபடியால் அந்தப் பிரார்த்தனையை ராதையே செய்யவேண்டும் என்று சொன்னாள். ஆகவே ராதையின் சகோதரன் பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டியே அவளை கோகுலத்துக்கு அழைத்து வந்தான். வந்த இடத்தில் இது என்ன?? அதிசயமா? அற்புதமா? ஒவ்வொரு ஜென்மத்திலும் இந்தக் கண்ணனைத் தான் கண்டது போலும், இதே வார்த்தைகளை அவனுடன் பேசிக் கொண்டிருந்தது போலவும் ராதைக்குத் தோன்றியது. கண்ணை மூடினால் கண்ணன் உரல் மேல் அமர்ந்திருக்கும் கோலம், கண்ணைத் திறந்தாலோ அவன் புல்லாங்குழலின் இனிய கீதம் கேட்கின்றது. இதோ! அவன் கண்களின் குறும்புத் தனம்! குறும்பு சொட்டும் கண்களோடு, பரிகாசம் செய்யும் கண்ணன். கண்ணா, கண்ணா! ராதை தனக்குள்ளே மெதுவாய்ச் சொல்லிக் கொண்டாள். “கானா, என் கானா!” இன்னமும் அவன் இசைத்த புல்லாங்குழலின் இனிய கீதம் காதுகளில் எதிரொலிக்கின்றதே.

"எங்கிருந்து வருகுவதோ?-ஒலி
யாவர் செய்குவதோ?- அடி தோழி!

குன்றினின்றும் வருகுவதோ? -மரக்
கொம்பினின்றும் வருகுவதோ? -வெளி
மன்றினின்று வருகுவதோ - எந்தன்
மதி மருண்டிடச் செய்குதடி! -இஃது (எங்கிருந்து)

அலையொலித்திடும் தெய்வ - யமுனை
யாற்றினின்றும் ஒலிப்பதுவோ - அன்றி
இலையொலிக்கும் பொழிலிடை நின்றும்
எழுவதோ இஃதின்ன முதைப் போல்? (எங்கிருந்து)

வண்டிகள் அசைந்து அசைந்து செல்வது, ராதைக்குக் கண்ணன் புல்லாங்குழலோடு அசைந்து அசைந்து ஆடுவது போல் தோன்றியது. மாடுகளின் மணிகள் அசையும் ஒலி கண்ணனின் குரல் ஒலிபோல் கேட்டது அவளுக்கு. மெல்ல மெல்ல விருந்தாவனம் வந்து சேர்ந்தார்கள் அவர்கள். விருந்தாவனம் உண்மையாகவே ஒரு வனம் தான். இன்னமும் மனிதர்கள் நடமாட்டம் படாத அற்புத இடம். முதன் முதல் ராதையின் குடும்பமே அங்கே வசிக்கத் தொடங்கி இருந்தது போலும். மண்ணின் வளமும், மரங்களின் நிழலும், கொடிகள் மரங்களைத் தழுவிப் படர்ந்திருந்த விதமும், ஒவ்வொரு வீட்டு வாசல்களிலும் பூக்கள் சொரிந்து பூக்கோலம் போட்டிருக்கும் அழகும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ராதையின் தாபம் அதிகம் ஆயிற்று. பூமித் தாய் மகிழ்ச்சியால் பொங்கிப் பூரித்து தன் சந்தோஷத்தை இவ்விதம் வெளிக்காட்டி இருப்பதாய் ராதைக்குத் தோன்றியது. ஆஹா, கானா மட்டும் இப்போது இங்கே இருந்தால்???

பூமியும் வானமும் தங்கள் பூரண செளந்தரியத்தைப் பெற்று விளங்கின. மனதிற்கு இசைந்த மணாளனோடு திருமணத்திற்குத் தயாராய் அலங்கரித்துக் கொண்டிருக்கும் இளம்பெண்ணைப் போல் பூமி விளங்கிற்று. அதைக் கண்ட யமுனை கூட சந்தோஷத்துடன் ஆர்ப்பரிப்பது போல் தோன்றியது ராதைக்கு. அவ்வளவு வேகம் அங்கே யமுனையிடம். யமுனை மிக மிக வேகமாயும், சந்தோஷமாயும் அங்கே ஓடிக் கொண்டிருந்தாள். அவள் கரைகளின் இருபக்கமும் நெருங்கி வளர்ந்திருந்த அடர்ந்த பெரிய மரங்களும், அவற்றின் நிழலில் படுத்து அசை போடும் மாடுகளும், இளம்பெண்கள் மரங்களில் கட்டித் தொங்க விட்டிருந்த சிற்றூஞ்சல்களும் அந்த இடத்தையே சொர்க்கபுரியாகச் செய்து கொண்டிருந்தது. வீட்டிற்குச் சென்ற ராதை தன் மாற்றாந்தாய்களின் மூலம் ஐயன் கம்சனுடன் சென்றிருப்பதையும் திருமணம் ஐயன் திரும்பியதும் நடக்கும் எனவும் தெரிந்து கொண்டாள். ஆனால் அவளுக்கு இவற்றில் எல்லாம் மனம் போகவே இல்லை. ஐயனுக்கு அவள் மனதில் இடமே இல்லை. அவள் உலகமே வேறு. அங்கே அவள் “கானா” ஒருவனுக்குத் தான் இடம். வேறு யாருக்கும் இல்லை. கானா, கானா, நீ விருந்தாவனம் வருவேன் என்று எனக்குச் சத்தியம் செய்து கொடுத்தாய் அல்லவா? வருவாயா? கானா, உன்னை ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நாளும், இரவும், பகலும், எதிர்பார்க்கிறேனடா. ராதையின் மனதில் கானா வந்துவிடுவான் என்ற நிச்சயம், நம்பிக்கை. காத்திருந்தாள் கானாவுக்காக.

2 comments:

  1. In general every one knows about lard Krishna story in very well. But very less people knows about Radha and her family situation. And it will help to know about Radha. So it is helps think lard Krishna indirectly compare than normal methods .It is really interesting. Thanks for your efforts.
    -Veerapathran

    ReplyDelete
  2. யப்பா...ஒரே ஆணி...இப்பதான் மூணு பதிவையும் சேர்த்து படித்தேன்...நடையில் நல்ல வேகம் தலைவி ;))

    ReplyDelete