எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, November 13, 2009

பெருமாள் கிடைத்துவிட்டார்!

PathivuToolbar ©2009thamizmanam.com

ஒரு அவசரப் பதிவு இது, பெருமாளையே காணோம்!
பிச்சை எடுக்கும் பெருமாள்! :((((((((

எங்க ஊரில் மாரியம்மன் கோவில் தவிர, ஒரு சிவன் கோவிலும், ஒரு பெருமாள் கோவிலும் இருக்கிறது. இது தவிர, ஐயனார் கோவில், பிடாரி கோவில் போன்ற காவல் தெய்வங்களும், பொய்யாப் பிள்ளையார் துணையே இல்லாமல் தனியாகவும் இருக்காங்க. இந்த ஐயனார் கோவில் பக்கம் உள்ள வயலில் உழுவதற்குத் தோண்டியபோது சில சிலைகளும், அஸ்திவாரங்கள் போன்ற அமைப்பும் கிடைத்ததாய்ச் சொல்கின்றனர். அந்த இடத்தில் ஒரு சிவன் கோயில் இருந்ததாயும் திருமூலர் எழுப்பிய முதல் மாடக் கோயில் அது எனவும், அதை லிங்கத்தடி எனவும் சொல்கின்றனர். அது பற்றிய ஆராய்ச்சிகள் எல்லாம் தனியாய் வரும். இப்போப் பெருமாள் கோயில் பத்தி. பரம்பரை தர்மகர்த்தாக்கள் ஆன எங்க குடும்பத்தார் அதை அரசுக்கு மாற்றி 70களின் கடைசியில் கொடுத்தாச்சு. கோவிலுக்கு என்று எங்கள் குடும்ப நிலத்தில் இருந்து அரைவேலியும் எழுதி வைத்திருக்காங்க. அதைத் தவிரவும், கொஞ்சம் நிலத்தில் சில மரங்கள், ஒரு கருகமரத் தோப்பு போன்றவையும் உண்டு. இதில் மரங்கள் இருந்த நிலத்தில் மரங்கள் வெட்டப் பட்டிருக்கின்றன. விற்கப் பட்டிருக்கிறது. கோவில் நிலத்தில் விவசாயமும் நடைபெற்று வருகிறது. கருகத் தோப்பும் இருக்கிறது. ஆனால் பெருமாள் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

நாங்கள் யாராவது ஊருக்குப் போனால் தான் அவருக்குக் குளியல், துணி மாற்றம், சாப்பாடு எல்லாமே. வெளிச்சமே அப்போது தான் பார்க்கிறார். நான் திருமணம் ஆகிவந்து இந்தக் கோயிலில் நல்ல முறையில் எல்லாக் கால பூஜையும் நடந்து பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது ஒரு விளக்குக் கூடப் போடுவது இல்லை. கோவில் தேர்முட்டி, மற்றும் கோவிலின் வெளிச்சுற்றுச் சுவர் இடிந்து விழுந்துவிட்டதால் அந்த இடம் எல்லாம் ஆக்கிரமிக்கப் பட்டு இப்போது பட்டாவே போட்டுக் கொடுத்தாச்சு. கோவிலுக்கு நேர் எதிரே சன்னதிக்கு நேரே ஒரு பெரிய மரம் வெட்டப் பட்டுப் பல நாட்களாய்க் கிடக்கிறது. அதை அப்புறப்படுத்தச் சொல்லி தற்போதைய டிரஸ்டி கிட்டே சொல்லியும் அவர் இதோ, போய்ச் சொல்லறேன், என்று டாடா இண்டிகாம் ஆட்கள் மாதிரியே சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்போப் போனவாரம் போனபோது கூட அப்படியே இருக்கிறது. மாடுகள் கட்டப் பட்டு, ஆடுகள் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கின்றன கோயிலுக்குப் போகும் வழியில். நிலத்தில் விளைந்து வந்த நெல் கோவிலுக்கு அளக்கப் படவே இல்லை. நாங்க ஏதோ எங்களால் முடிஞ்ச பணத்தைக் கொடுத்து ஒருவேளையாவது நைவேத்தியம் வைத்து விளக்கேற்றச் சொல்லி இருக்கோம். அதுக்கும் கொஞ்சம் பணம் கொடுத்தால் தான் அர்ச்சகரோ, குருக்களோ, பட்டரோ வருவாங்க. வேறு ஊரில் இருந்து வந்து இருந்து செய்வதென்றால் நிரந்தரமாய் ஏதேனும் ஒரு வருமானம் வேண்டாமா?

தன்னிடம் இருப்பதைக் கொடுத்துவிட்டுப் பெருமாள் வேண்டுமானால் பட்டினியாய் இருப்பார். அவருக்குப் பரவாயில்லை. ஆனால் வந்து பூஜை செய்யறவங்களுக்குக் குடும்பம், குழந்தைன்னு இருக்குமே? அதுக்கு ஏதாவது கொடுக்கணுமே? கோவில் டிரஸ்டியிடம் கேட்டால் குத்தகைக்காரர் அளக்கவில்லை என்கிறார். குத்தகைக்காரர் கிட்டே கேட்டால் விளையவே இல்லை, சிவன் கோவிலுக்கு என்ன கொடுத்தாங்க? அவங்க கிட்டே கேட்கிறதில்லையே, என் கிட்டே மட்டும் ஏன் கேட்கணும்? என்று சொல்றாங்க. இந்த அழகில் பெருமாளின் இருப்பிடமே இடிந்து விழுந்து விடுமோனு பயமா வேறே இருக்கு. கர்ப்பக் கிரகத்தில் மூலவருக்குக் கீழே வரை வேர் பிடித்து ஒரு அரசமரம் அபாரமாய் வளர்ந்திருக்கு. அங்கங்கே விரிசல்களில் வெளவால்கள் அடைந்துள்ளன. நாங்களும் இந்தக் கோயிலுக்குப் பராமரிப்புச் செய்து கும்பாபிஷேகம் நடத்தப் பிரம்மப் பிரயத்தனம் செய்கிறோம். நேற்று வந்த தகவல் படி ஊரில் யாருமே பொறுப்பு ஏற்றுக் கொள்ளத் தயார் இல்லை. கோவில் நிலத்தை விற்றாவது அதை வைப்பு நிதியில் போட்டு அதில் இருந்து வரும் வட்டியில் கோவிலை நிர்வாகம் செய்யலாமே எனத் தோன்றுகிறது. ஆனால் ஊர் இரண்டு பட்டுக் கிடக்கிறபடியால் எதையும் சொல்லவோ செய்யவோ முடியவில்லை, பெருமாளே தனக்கு ஒரு வழியைத் தேடிக்கணும்.

R.E.A.C.H. Foundation மூலம் ஏதானும் வழி பிறக்கும் என்று ஏற்பாடுகள் செய்து வருகிறோம். இன்றைய பதிவுகள் இரண்டுமே கொஞ்சம் சீரியஸ் பதிவாகி விட்டது. இவங்க மூலமாத் தான் ஏதேனும் செய்ய முடியும்னு ஒரு நம்பிக்கை இருக்கு. இவங்க விலாசம் reach.foundation.india@gmail.com. இதிலே நம்ம சக பதிவாளர் மரபூர் ஜெ.சந்திரசேகரன் ஒரு உறுப்பினர். அவரை ஞாயிறு அன்று போய்ப் பார்த்தோம். உதவிகள் செய்வதாய்ச் சொன்னாலும் எப்படி இருந்தாலும் ஊர்க்காரங்க சம்மதம் தான் முக்கியம்னு அவரும் சொல்றார். (வழக்கம் போல் சந்திரசேகரும், நான் நினைச்சாப்பலே இல்லை, ஹிஹிஹி) பெருமாளைப் பிச்சை எடுக்காமல் வைக்க அவரே தான் மனசு வைக்கணும் போல் இருக்கு. மேலே இருப்பது அவர்தான் குடும்ப சமேதராய், பொதுவாய் மூலஸ்தானத்தில் இருக்கும் திருமேனிகளைப் படம் எடுத்துப் போடுவது இல்லை. இவருக்கு முறையான பூஜைகள் நடந்து 25 வருஷமாவது ஆகி இருக்கும். கோவிலின் வெளிப்புறம் படம் கிடைக்கவில்லை. கிடைத்ததும் போடுகிறேன்.


சில மாதங்கள் முன்னே நான் போட்ட இந்தப் பதிவு இது. இப்போ இந்தப் படத்தில் மூலவருக்கு முன்னே இருக்கும் உற்சவ விக்கிரஹங்கள் கொள்ளை அடிக்கப் பட்டது. பெருமாளுக்கு அரைவேலி நிலம் இருந்தும் சாப்பாட்டுக்கே கஷ்டப் பட்டுட்டு இருந்தார். இப்போ அவரோட உற்சவரையே தூக்கிண்டு போயாச்சு! நிலத்தில் விளைந்ததை எல்லாம் இந்தக் கோயிலின் உள்ளேயே வைத்துக் கொண்டு பெருமாளுக்கு ஒரு பிடி அரிசி கூடக் கொடுக்காமல் சாப்பிட்டிருக்காங்க. எப்படி மனசு வந்தது? இதுக்கெல்லாம் எப்போ விடிவு காலம் பிறக்கும்?? மனசு கொதிச்சுப் போய் எழுதி இருக்கேன். இதுக்கு என்ன நீதி? எப்போ கிடைக்கும்? கண்ணீருடனே எழுதறேன்!
************************************************************************************

ஜூலை பதினான்காம் தேதி என்னுடைய நட்சத்திர வாரத்தில் நான் போட்ட இந்தப் பதிவுக்குப் பின்னர் நானும், என் கணவரும் இந்தச் சிலைக்கொள்ளைகளை விசாரிக்கும் திருமதி திலகவதியை நேரே அவருடைய அலுவலகத்திற்குச் சென்று எங்கள் கோரிக்கையைச் சமர்ப்பித்தோம். அவரும் ஏற்கெனவே இது பற்றி விசாரித்து வருவதாகவும், நடவடிக்கையை துரிதப் படுத்தும்படி ஆணை கொடுப்பதாகவும் சொல்லி, எங்கள் முன்னாலேயே அதற்கான உத்தரவுகளையும் கொடுத்தார்.

நேற்றுச் சிலைகள் கிடைத்துவிட்டதாய்த் தகவல் வந்தது. ஊரின் முக்கியஸ்தர்கள் போய்ப் பார்த்து அடையாளம் காட்டி இருக்கின்றனர். ஆனால் வருத்தத்துக்கு உரிய செய்தி என்னவென்றால் பெருமாளின் கை உடைக்கப் பட்டு இருக்கிறது. நாங்களும் நேரில் திருமதி திலகவதியின் அலுவலகத்துக்குச் சென்று சிலைகளை அடையாளம் காட்ட வேண்டும். அதற்கான அழைப்பு வந்ததும் சென்று பார்த்து உறுதி செய்யவேண்டும். இதன் பின்னராவது பெருமாள் கோயிலுக்குக் கும்பாபிஷேஹம் நடத்தும் ஏற்பாடுகளை முனைந்து செய்ய ஊரார் ஒத்துழைக்கும்படி பெருமாளே அருள் புரியவேண்டும். தமிழகக் காவல்துறையினருக்கு எங்கள் உளமார்ந்த நன்றிகள்.

8 comments:

  1. வாழ்த்துகள்! (இப்ப சரியா சொல்லிட்டேனா;-)

    ReplyDelete
  2. நல்லபடியா நல்ல காரியங்கள் கட்டாயம் நடக்கணும். நடக்கவும் வைப்பார் ஸ்வாமி. வேண்டிக்கிறேன்

    ReplyDelete
  3. இப்ப கடவுளுக்கே இதுதான் நிலைமை. ஆனா கஷ்டம் வந்துட்டாப் போதும் உடனே கடவுளை குறை கூறுவார்கள். கும்பாவிஸேகம் அல்லது புணருத்தரணம் நடந்தால் எனக்குத் தெரியப் படுத்தவும். நிதி வசூலிப்பவிரின் தொடர்பும் தெரிவிக்கவும். எனது இமெய்ல் ஜடி எனது பிளக்கரில் உள்ளது. நன்றி.

    ReplyDelete
  4. //இதன் பின்னராவது பெருமாள் கோயிலுக்குக் கும்பாபிஷேஹம் நடத்தும் ஏற்பாடுகளை முனைந்து செய்ய ஊரார் ஒத்துழைக்கும்படி பெருமாளே அருள் புரியவேண்டும்.//

    அவ்வாறே நிச்சயம் நடக்கும். என் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  5. பெருமாளே நீ உன்னையே காப்பாத்திக்கப்பா! மனுசங்கள நெனெச்சாலே பயமா இருக்கு!

    ReplyDelete
  6. ஹூம்! படிக்கும் போதே கஷ்டமாக இருக்கு.பல ஊர்களில் பல கோவில்கள் இப்படித்தான் சீரழிந்து போகிறது.சிவன் சொத்து குல நாசம் என்று பல முறை சொல்லக்கேட்டிருக்கேன்,ஆனால் கொள்ளை அடித்தவர்கள் எல்லோரும் நன்றாகத்தான் இருக்கிறார்கள்.
    திவா சொன்னது தான் சரி.:-)

    ReplyDelete
  7. பெருமாள் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

    திருமயம் ரங்கநாதர் கோயிலில் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்த கோவில் விவரம்-

    அதன் குடைவரைக் கோயில் வடிவமைப்போ,சிற்பமோ பெருமாளின் அழகோ அல்ல

    கோயிலின் ஆண்டு வருமானம் ரூ 637.00-மட்டும் !!! இது சுமார் 10 வருடங்களுக்கு முன்பு.

    பாப பீதி, தெய்வ ப்ரீதி என்று சொல்வதுண்டு. அது அந்த காலம். இனிமேல் ”அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும்” என்பதில் நம்பிகை வைப்பதைத் தவிர வழியில்லை.

    எல்லாம் அவன் விளையாட்டு :)

    ReplyDelete
  8. நான் இந்த பின்னூட்டம் இட வருந்துகிறேன் இருந்தும் எழுதுகிறேன்.

    ஊர் பெயரே என்னால் அறிய முடிய வில்லை இந்த பதிவில், இதே மாதிரிதான் நவ திருப்பதி பற்றி ஒரு பதிவிலும் நடந்தது.

    நீங்கள் எழுதிய ஊரை நானே அனுமானித்து கொள்கிறேன், திருவல்லிகேணி அல்லது ஸ்ரீ ரங்கம் அல்லது ஸ்ரீ வில்லி புஇத்தூர்.

    ReplyDelete